என் மலர்tooltip icon

    கிச்சன் கில்லாடிகள்

    குழந்தைகளுக்கு சீஸ் என்றால் மிகவும் பிடிக்கும். இன்று பத்தே நிமிடத்தில் செய்யக்கூடிய சூப்பரான ரெசியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பிரெட் ஸ்லைஸ் - 2,  
    நறுக்கிய குடைமிளகாய் - 4 டேபிள்ஸ்பூன்,
    பச்சை மிளகாய் – ஒன்று (பொடியாக நறுக்கவும்),
    மிளகுத்தூள் - கால் டீஸ்பூன்,  
    சீஸ்  துருவல் - 2 டேபிள்ஸ்பூன்,
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் சீஸ் துருவல், குடைமிளகாய், பச்சை மிளகாய், உப்பு, மிளகுத்தூள் சேர்த்து நன்கு கலக்கவும்.

    தோசைக்கல்லை சூடாக்கி பிரெட் ஸ்லைஸ் வைத்து அதன் மீது சீஸ் கலவையைப் பரப்பவும்.

    அடுப்பை சிறு தீயில் வைத்து மூடிபோட்டு, சீஸ் உருகிய உடன் இறக்கவும். சூடாகப் பரிமாறவும்.

    சூப்பரான குடைமிளகாய் சில்லி சீஸ் டோஸ்ட் ரெடி

    மாலை நேரத்தில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு 10 நிமிடத்தில் ஏதாவது வித்தியாசமான ஸ்நாக்ஸ் செய்து கொடுக்க விரும்பினால் பிரெட் சில்லி செய்து கொடுக்கலாம்.
    தேவையான பொருள்கள்

    பிரட் துண்டுகள் - 4
    குடைமிளகாய் - பாதி
    பட்டர் - 25 கிராம்
    பூண்டு பற்கள் - 2
    மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
    காஷ்மீரி மிளகாய் தூள் - 1/2 மேஜைக்கரண்டி
    தக்காளி சாஸ் - 1 மேஜைக்கரண்டி
    உப்பு - சிறிது
    கொத்தமல்லித்தழை - சிறிது

    தாளிக்க

    எண்ணெய் - 3 மேஜைக்கரண்டி
    பெரிய வெங்காயம் - 1

    செய்முறை

    வெங்காயத்தை நீள வாக்கிலும், கொத்தமல்லி, குடைமிளகாயை பொடியாகவும் நறுக்கி வைக்கவும்.

    பூண்டுப்பற்களை ஒன்றிரெண்டாக தட்டி வைத்துக்கொள்ளவும்.

    அடுப்பில் தோசைக்கல்லை வைத்து சூடானதும் பிரெட்டை வைத்து சுற்றிலும் பட்டர் போட்டு பிறகு மறுபுறம் திருப்பி போட்டு சுற்றிலும் பட்டரை ஊற்றி பிரெட்டை டோஸ்ட் செய்யவும். எல்லா பிரெட்டையும் இதே போல் டோஸ்ட் செய்து சிறிய துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    அடுப்பில் கடாயை வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கி வைத்துள்ள  வெங்காயத்தை போட்டு அதோடு சிறிது உப்பு சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் பொன்னிறமானதும் தட்டி வைத்துள்ள பூண்டுப்பற்கள், குடைமிளகாய் சேர்த்து வதக்கவும்.

    பிறகு அதனுடன் மிளகாய் தூள், காஷ்மீரி மிளகாய் தூள், தக்காளி சாஸ் சேர்த்து ஒரு நிமிடம் கிளறி அதனுடன் அரை கப் தண்ணீர் சேர்க்கவும்.

    பிறகு அதனுடன் டோஸ்ட் செய்த பிரெட் துண்டுகளை சேர்த்து நன்றாக கிளறி இறுதியில் கொத்தமல்லித்தழை சேர்த்து அடுப்பை அணைக்கவும்.

    சுவையான பிரெட் சில்லி ரெடி.
    முட்டை ஃப்ரைடு ரைஸ் ஹோட்டலில் வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் முட்டை ஃப்ரைடு ரைஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாசுமதி அரிசி - 1 கப்
    வெங்காயம் - 2
    கேரட் - 1
    பீன்ஸ் - 50 கிராம்
    வெங்காயத்தாள் - 1
    குடை மிளகாய் - 1
    இஞ்சி பூண்டு விழுது - 1 மேஜை கரண்டி
    முட்டை - 3
    சில்லி சாஸ் - 1 மேஜை கரண்டி
    சோயா சாஸ் - 1 மேசைக் கரண்டி
    மிளகு தூள் -1 மேஜை கரண்டி
    நெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயத்தை நீள வாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    கேரட், பீன்ஸ், குடை மிளகாய், வெங்காயத்தாளை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    சாதம் உதிரியாக வேக வைத்து ஆற வைத்து கொள்ளவும்.

    ஒரு வாணலியில் சிறிது நெய் ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி சிறிது உப்பு சேர்த்து பொரித்து கொள்ளவும்.

    மற்றொரு வாணலியில் நெய் ஊற்றி சூடானதும் அதில் வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    அடுத்து அதில் பாதி வெங்காயத் தாளை சேர்த்து வதக்கி பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    அதன் பின் கேரட், பீன்ஸ் சேர்த்து கலர் மாறாமல் வதக்கவும்.

    அடுத்து அதில் குடைமிளகாயை போட்டு வதக்கவும்.

    அனைத்தும் வெந்ததும் அதில் உப்பு, சோயா சாஸ், சில்லி சாஸ், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி விட்டு மூடி வைத்து வேக வைக்கவும்.

    காய்கள் நன்றாக வெந்த பின் ஆற வைத்த சாதம், பொரித்த முட்டை சேர்த்து நன்றாக கிளறி வெங்காயத்தாள் தூவி இறக்கவும்.

    சூப்பரான முட்டை ஃப்ரைடு ரைஸ் ரெடி.

    குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பிச் சாப்பிடும் வகையிலான பிரெட் பிரியாணி ரெசிப்பியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பாஸ்மதி அரிசி - 1/2 கிலோ
    பிரெட் - 10
    நெய் - 150 மில்லி அளவு
    வெங்காயம் - 4
    தக்காளி - 3
    இஞ்சி பூண்டு விழுது - 1 டீஸ்பூன்
    பட்டை- 4
    பிரியாணி இலை - 5
    கிராம்பு- 5,
    ஏலக்காய் - 5
    மிளகாய்த் தூள் - 1 1/2 டீஸ்பூன்
    மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
    மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
    பச்சை மிளகாய் - 5
    தயிர் - 1 டம்ளர்
    எலுமிச்சை பழம் - 1
    கொத்தமல்லி தழை- கைப்பிடியளவு
    புதினா - கைப்பிடியளவு
    எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், பச்சை மிளகாயை நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    தக்காளி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி வைக்கவும்.

    பிரெட்டை துண்டுகளாக வெட்டி நெய்யில் வறுத்து வைக்கவும்.

    குக்கரில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும் பட்டை, கிராம்பு, பிரியாணி இலை, ஏலக்காய் போட்டு தாளித்து அத்துடன் வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.

    இஞ்சி பூண்டு பச்சை வாசனை போனவுடன் அதில் தக்காளியை  போட்டு வதக்கவும்.

    தக்காளி நன்றாக குழைய வெந்ததும் கொத்தமல்லி, புதினா இலை, மிளகாய்த் தூள், மஞ்சள் தூள், மல்லித் தூள் போட்டு வதக்கவும்.

    அடுத்து உப்பு, பிரெட், எலுமிச்சை சாறு, தயிர் சேர்த்து எண்ணெய் பிரியும்வரை வேகவிட்டு, அரிசியைப் போட்டு அதனைவிட இரண்டு மடங்கு தண்ணீர்விட்டு குக்கரை மூடி 2 விசில் 10 நிமிடம் மிதமான தீயில் அடுப்பை வைத்து இறக்கவும்.

    இப்போது சுவையான பிரெட் பிரியாணி ரெடி.

    வாழைப்பூவில் கூட்டு, பொரியல், வடை செய்து சாப்பிட்டு இருப்பீங்க. இன்று உளுந்து மாவு சேர்த்து வாழைப்பூ போண்டா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    உளுந்து - கால் கிலோ
    வாழைப்பூ - ஒன்று (நடுத்தரமான அளவு)
    வெங்காயம் - 2
    பச்சை மிளகாய் - காரத்திற்கேற்ப
    கறிவேப்பிலை - ஓரு கொத்து
    தேங்காய்ப்பூ - அரை கப்
    மிளகு - ஒரு தேக்கரண்டி
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - பொரிக்க

    செய்முறை :

    உளுந்தை 1 மணிநேரம் ஊறவைத்து நைசாக அரைக்கவும்.

    தேங்காயுடன், மிளகு சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    வாழைப்பூவை சுத்தம் செய்து பொடியாக நறுக்கி வைக்கவும்.

    வெங்காயம், பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

    உளுந்து மாவுடன் அரைத்த தேங்காய், வாழைப்பூ, வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, மற்றும் உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெயை காயவைத்து, பிசைந்த மாவை போண்டாக்களாக உருட்டி போட்டு பொரித்தெடுக்கவும்.

    சுவையான வாழைப்பூ போண்டா தயார்.

    சட்னி அல்லது சாஸுடன் பரிமாறவும்.
    குழம்பு பொடியை கடைகளில் வாங்கி குழம்புக்கு போட்டு இருப்பீங்க. இதை வீட்டிலேயே செய்வது மிகவும் சுலபம். இன்று இந்த பொடியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள்

    மிளகாய் வத்தல் -20
    கொத்தமல்லி - 50 கிராம்
    மிளகு - 3 மேஜைக்கரண்டி
    சீரகம் - 3 மேஜைக்கரண்டி
    கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு         

    செய்முறை

    அடுப்பில் கடாயை வைத்து சூடானதும் மிதமான சூட்டில் வைத்து மிளகாய் வத்தல், கொத்தமல்லி, மிளகு மூன்றையும் தனித்தனியாக போட்டு வறுக்கவும். நன்கு வறுபட்டவுடன் அடுப்பை அணைத்து விட்டு சீரகம், கறிவேப்பிலை இரண்டையும் சேர்த்து கிளறி சிறிது நேரம் ஆற விடவும்.                                                                                                                           
    நன்றாக ஆறிய பின் மிக்ஸ்சியில் போட்டு திரிக்கவும்.

    திரித்த பொடியை ஒரு பேப்பரில் பரப்பி ஆறவிடவும்.    

    ஆறியபின் ஒரு காற்றுப்புகாத பாட்டிலில் போட்டு மூடி வைக்கவும். குழம்பு பொடி ரெடி.

    குறிப்பு

    இந்த குழம்பு பொடியை மட்டன் குழம்பு, சிக்கன் குழம்பு, முட்டை குழம்பு, கூட்டு வகைகள் அனைத்திலும் உபயோகபடுத்தலாம்.
    ரோட்டோர கடைகளில் முட்டை கலக்கியை வாங்கி சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் முட்டை கலக்கி செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டை - 2
    மிளகாய்த்தூள், மிளகுத்தூள் - சிறிது
    சிக்கன்/மட்டன் குழம்பு அல்லது சால்னா - 2 கரண்டி
    நறுக்கிய கொத்தமல்லித்தழை - சிறிது
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    செய்முறை:

    ஒரு பாத்திரத்தில் முட்டையை உடைத்து ஊற்றி நன்கு கலக்கவும்.

    பின்பு அதில் சிக்கன் / மட்டன் குழம்பு அல்லது சால்னாவை இரண்டு கரண்டி ஊற்றி, அதில் சிறிது மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்கு கலக்கவும்.

    தோசை கல் சூடானதும் சிறிது எண்ணெய் விட்டு, அதில் கலந்து வைத்துள்ள முட்டைக் கலவையை ஊற்றவும். பாதி வெந்ததும் முட்டை கலவையை உள்புறமாக மடித்து விடவும்.

    நான்கு பக்கமும் மடித்து விட்டு மீண்டும் சிறிது மிளகுத்தூள் தூவி, கொத்தமல்லித் தழையைத் தூவி அடுப்பை அணைக்கவும்.

    சூப்பரான முட்டை கலக்கி ரெடி!
    மீன் சமைத்து சாப்பிட்டு இருப்பீங்க. மீன் முட்டை சாப்பிட்டு இருக்கீங்களா. சூப்பராக இருக்கும். இன்று மீன் முட்டை பொடிமாஸ் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மீன் முட்டை – 200 கிராம்
    வெங்காயம் – 1
    ப.மிளகாய் – 2
    கடுகு – அரை டீஸ்பூன்
    சீரகம் – அரை டீஸ்பூன்
    மஞ்சள் தூள் – சிறிதளவு
    மிளகாய் தூள் – 1 டீஸ்பூன்
    மிளகு தூள் – 1 டீஸ்பூன்
    கறிவேப்பிலை – சிறிதளவு
    இஞ்சி – சிறிய துண்டு
    தேங்காய் துருவல் – 5 டீஸ்பூன்
    உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

    செய்முறை :

    வெங்காயம், ப.மிளகாய், இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மீன் முட்டையை சுத்தம் செய்து வைக்கவும்.

    கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், கடுகு, ப.மிளகாய், கறிவேப்பிலை, இஞ்சி போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று வதங்கியதும் மஞ்சள் தூள், மிளகாய் தூள், உப்பு சேர்த்து கிளறவும்.

    அடுத்து அதில் சுத்தம் செய்த மீன் முட்டையை சேர்த்து நன்றாக கிளறவும்.

    மீன் முட்டை நன்றாக வெந்து உதிரி உதிரியாக வரும் வரை கைவிடாமல் கிளறவும்.

    அடுத்து அதில் தேங்காய் துருவல், மிளகு தூள் சேர்த்து நன்றாக கிளறி இறக்கி பரிமாறவும்.

    சூப்பரான மீன் முட்டை பொடிமாஸ் ரெடி.
    ஹோட்டலில் செஸ்வான் பிரான் சாப்பிட்டு இருப்பீங்க. இன்று வீட்டிலேயே எளிய முறையில் செஸ்வான் பிரான் செய்வது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள் :

    இறால் - 250 கிராம்,
    மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
    மைதா - 1 டேபிள் ஸ்பூன்,
    கார்ன் ஃப்ளார் - 1 டேபிள் ஸ்பூன்,
    முட்டை - 1,
    உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

    சாஸ் செய்ய…

    பொடியாக நறுக்கிய வெங்காயம் - 1,
    நசுக்கிய பூண்டு - 5 பல்,
    நசுக்கிய இஞ்சி - 1 துண்டு,
    வெங்காயத்தாள் - 1 கப்,
    மிளகுத்தூள் - 1/4 டீஸ்பூன்,
    செஸ்வான் சாஸ் - 2 டேபிள் ஸ்பூன்,
    உப்பு, எண்ணெய், தண்ணீர் - தேவைக்கு,
    கார்ன்ஃப்ளார் - 1 டீஸ்பூன்,
    சர்க்கரை - 1/4 டீஸ்பூன்,
    வெங்காயத்தாள் - அலங்கரிக்க.

    செய்முறை:

    இறாலை சுத்தம் செய்து கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் இறாலை போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, கார்ன்ஃப்ளார், முட்டை, மைதா சேர்த்து கலந்து அரை மணிநேரம் ஊற வைக்கவும்.

    பின்பு தவாவில் எண்ணெய் சேர்த்து இறாலை இரண்டு பக்கம் நன்கு பொரித்து எடுத்து கொள்ளவும்.

    மற்றொரு கடாயில் எண்ணெயை சேர்த்து சூடானதும் வெங்காயம், இஞ்சி, பூண்டு, வெங்காயத்தாள், உப்பு, மிளகுத்தூள், செஸ்வான் சாஸ், சர்க்கரை சேர்த்து வதக்கி, கார்ன் ஃப்ளாரில் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து அதில் சேர்க்கவும்.

    சிறிது கெட்டியானதும் வறுத்த இறாலை சேர்த்து நன்கு கலந்து, கடைசியாக வெங்காயத்தாள் கொண்டு அலங்கரித்து பரிமாறவும்.

    இப்போது சூப்பரான செஸ்வான் பிரான் ரெடி.
    இது சைனீஸ் உணவுகள் தயாரிப்பிற்கு பயன்படுத்தும் ஒரு வகை சாஸ். கடைகளில் வாங்காமல் வீட்டிலேயே எளிய முறையில் இதை செய்யலாம்.
    தேவையான பொருட்கள்

    வர மிளகாய் - 20
    தக்காளி - 4
    டொமேட்டோ கெட்சப் - 2 மேசைக்கரண்டி
    பூண்டு - 15 பல்
    இஞ்சி - ஒரு அங்குல துண்டு.
    சோயா சாஸ் - 2 மேசைக்கரண்டி
    கொத்தமல்லித் தழை - சிறிது
    எண்ணெய் - 3 மேசைக்கரண்டி
    சர்க்கரை - 2 மேசைக்கரண்டி

    செய்முறை

    வரமிளகாயை விதை நீக்கி சூடான தண்ணீரில் போட்டு அரை மணி நேரம் ஊற வைக்கவும்.

    இஞ்சி, பூண்டு மற்றும் கொத்தமல்லி தண்டினை மிகவும் பொடியாக நறுக்கி (finely chop) வைக்கவும்.

    தக்காளியை தோல் நீக்கி அரைத்து வைக்கவும்.

    ஊறிய வரமிளகாயை விழுதாக அரைத்து வைக்கவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய பூண்டு, இஞ்சி மற்றும் கொத்தமல்லி தண்டு சேர்த்து வதக்கவும்.

    அவை நன்கு வதங்கியதும் அரைத்த தக்காளி விழுதை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வைக்கவும்.

    அதனுடன் அரைத்த மிளகாய் விழுது மற்றும் சோயா சாஸ் சேர்த்து வதக்கி பச்சை வாசனை அடங்கும் வரை வேக விடவும்.

    கடைசியாக தக்காளி சாஸ், சர்க்கரை சேர்த்து மேலும் 2 நிமிடங்கள் வரை அடுப்பில் வைத்திருக்கவும்.

    செஸ்வான் சாஸ் தயார்.

    பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைக்கவும். இதற்கு அதிக எண்ணெய் சேர்த்திருப்பதால் 2 வாரம் வரை வைத்திருந்து உபயோகிக்கலாம்.
    குழந்தைகளுக்கு மக்ரோனி என்றால் மிகவும் பிடிக்கும். இன்று மக்ரோனியை வைத்து அருமையான சூப் தயாரிப்பது எப்படி என்று பார்க்கலாம் வாங்க...
    தேவையான பொருட்கள்

    சுருள் (அ)சங்கு மக்ரோனி – அரை கப்,
    பச்சைப் பட்டாணி – கால் கப்,
    மிளகுத் தூள் – ருசிக்கேற்ப,
    உப்பு – சுவைக்கேற்ப.

    சூப் செய்ய:

    வெள்ளைப் பூசணி – கால் கிலோ,
    உருளைக்கிழங்கு – 1,
    பெரிய வெங்காயம் – 1,
    பால் – அரை கப்,
    உப்பு – சுவைக்கேற்ப,
    வெண்ணெய் – ஒரு டேபிள் ஸ்பூன்.

    செய்முறை

    பட்டாணி, மக்ரோனியை தனித்தனியாக வேக வைத்து கொள்ளவும்.

    உருளைக்கிழங்கு, பூசணிக்காயை தோல் நீக்கி, துண்டுகளாக்குங்கள்.

    வெங்காயத்தையும் தோல் நீக்கி நறுக்குங்கள்.

    கடாயை அடுப்பில் வைத்து சூடானதும் வெண்ணெய் போட்டு உருகியதும் பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு சேர்த்து 5 நிமிடம் வதக்குங்கள். அதில் 3 கப் தண்ணீர் சேர்த்து பிரஷர் குக்கரில் 2 அல்லது 3 விசில் வரும்வரை வேக வையுங்கள்.

    இது நன்கு வெந்ததும் ஆறவிட்டு வடிகட்டி அரைத்துக் கொள்ளுங்கள்.

    அரைத்ததை மீண்டும் முதலில் வேக வைத்த தண்ணீருடன் சேர்த்துக் கொதிக்க விடுங்கள்.

    அத்துடன் பால் சேர்த்து 5 நிமிடம் கொதிக்க விட்டு இறக்குங்கள்.

    இறக்கிய சூப்பில், வேக பட்டாணி, மக்ரோனி கலந்து, மிளகுத் தூள் தூவிப் பரிமாறுங்கள்.
    சப்பாத்தி, நாண், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த பட்டாணி மசாலா. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பட்டாணி - 2 கப்
    சின்னவெங்காயம் - அரை கப்
    நெய் - 4 டீஸ்பூன்
    கருவாப்பட்டை - 1
    சீரகம் - அரை டீஸ்பூன்
    கல் உப்பு - தேவைக்கு
    மஞ்சள்தூள் - அரை டீஸ்பூன்
    தக்காளி - 3 (நறுக்கவும்)
    மிளகாய்தூள் - அரை டீஸ்பூன்
    தனியா தூள் - 1 டீஸ்பூன்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    கொத்தமல்லி தழை - தேவையான அளவு

    செய்முறை:

    வெங்காயம், தக்காளி ஆகியவற்றை தனித்தனியே அரைத்துக்கொள்ளவும்.

    கடாயில் நெய் ஊற்றி அது உருகியதும் சீரகம், பட்டை ஆகியவற்றை சேர்த்து லேசாக வறுக்கவும்.

    அதில் அரைத்த வெங்காயத்தை போட்டு பொன்னிறமாகுவரை வதக்கவும்.

    பின்னர் இஞ்சி, பூண்டு விழுது, மஞ்சள்தூள், மிளகாய்தூள், தனியா தூள் ஆகியவற்றை கொட்டி லேசாக கிளறவும்.

    பின்னர் தக்காளி, பட்டாணியை அடுத்தடுத்து கொட்டி நன்றாக வதக்கவும். வதங்கியவுடன் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி உப்பு சேர்த்து வேகவிடவும்.

    எண்ணெய் பிரிந்து வரும்போது கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.

    ஆரோக்கியபலன்: இதனை தொடர்ந்து சாப்பிட்டு வருவது கண்களுக்கு நல்லது. சரும பொலிவுக்கும் கூந்தல் வலுவுக்கும் துணை புரியும். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை சீராக பராமரிக்கவும் உதவும்.

    குறிப்பு: பாக்கெட்டில் அடைத்து விற்கும் பட்டாணியை பயன்படுத்துவதை தவிர்க்கவும்.
    ×