என் மலர்tooltip icon

    சமையல்

    காலையில் சாலட் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று முட்டைகோஸ், கேரட் வைத்து சாலட் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சிவப்பு முட்டை கோஸ் - 1 கப்
    கேரட் - 2
    பூண்டு - 1 பல்
    ஆலிவ் ஆயில் - 2 டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - 3 டீஸ்பூன்
    மிளகு தூள் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு.

    செய்முறை :

    பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட், சிவப்பு முட்டைகோஸை மெலிதாக நீளவாக்கில் வெட்டிக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் மெலிதாக நறுக்கிய சிவப்பு முட்டைகோஸ், கேரட்டை போட்டு அதனுடன் பூண்டு, ஆலிவ் ஆயில், எலுமிச்சை சாறு, மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து பரிமாறவும்.

    சூப்பரான முட்டைகோஸ் - கேரட் சாலட் ரெடி.

    சாதம் வடித்த கஞ்சி மற்றும் மோர் சேர்த்து செய்யும் இந்த ரெசிபி உடலுக்கு புத்துணர்ச்சியையும், ஆரோக்கியத்தையும் தரும். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    சாதம் வடித்த கஞ்சி - 1 கப்
    புளித்த மோர் - கால் கப்
    இஞ்சி - 1 துண்டு (நறுக்கவும்)
    பச்சை மிளகாய் - 2 (நீள்வாக்கில் நறுக்கவும்)
    கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கு
    எண்ணெய் - சிறிதளவு

    செய்முறை:

    இஞ்சி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் ஊற்றி அது சூடானதும் இஞ்சி, மிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை கொட்டி வதக்கிக்கொள்ளவும்.

    நன்கு வதங்கியதும் சாதம் வடித்த கஞ்சி, உப்பு, சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும்.

    நன்கு கொதித்து வந்ததும் இறக்கி அதனுடன் மோரை சேர்த்து, கொத்தமல்லி தழையை தூவி பரிமாறலாம்.

    சூப்பரான சாதம் கஞ்சி சூப் ரெடி.

    சிவப்பு அரிசி கொண்டு செய்யப்பட்ட கஞ்சி, இட்லி, புட்டு, இடியாப்பம் போன்றவற்றை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ண கொடுப்பதால் அவர்களின் உடல் பலம் பெறும். நோய் எதிர்ப்பு சக்தி அவர்களின் உடலில் அதிகரிக்கும்.
    தேவையான பொருட்கள்:

    சிவப்பரிசி - 250 கிராம்,
    வெங்காயம் - ஒன்று,
    பச்சை மிளகாய் - ஒன்று,
    சீரகம் - ஒரு டீஸ்பூன்,
    கேரட் - ஒன்று,
    தேங்காய்த்துருவல் - 5 டீஸ்பூன்,
    கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
    எண்ணெய், உப்பு - தேவையான அளவு.

    செய்முறை:

    வெங்காயம், கொத்தமல்லி, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    கேரட்டை துருவிக்கொள்ளவும்.

    சிவப்பரிசியை நன்கு கழுவி வெயிலில் உலர்த்தி மிக்ஸியில் போட்டு அரைத்து சிவப்பரிசி மாவு தயார் செய்துகொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் சிவப்பரிசி மாவை போட்டு அதனுடன், நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கேரட் துருவல், தேங்காய்த்துருவல், கறிவேப்பிலை, கொத்தமல்லி அனைத்தையும் ஒன்றாகப் கலந்து அதில் வெந்நீரைச் சிறிது சிறிதாக விட்டு, சப்பாத்தி மாவு போல் பிசைந்து கொள்ளவும்.

    பிசைந்த மாவை அரை மணி நேரம் ஈர துணியால் மூடி வைக்கவும்.

    பின்னர் சிறு சிறு உருண்டையாக்கி வட்டமாகத் தட்டி வைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் விட்டு வெந்ததும் திருப்பி போட்டு எடுத்து பரிமாறவும்.

    இப்போது சத்தான சுவையான சிவப்பரிசி ரொட்டி ரெடி.

    உடலில் நீர்ச்சத்து வற்றாமல் இருக்க தேங்காய் பால் மிகவும் உதவுகிறது. ஒரு டம்ளர் தேங்காய் பால் நாள் முழுவதும் உடலை நீர்ச்சத்து வற்றாமல் வைத்துக் கொள்ள உதவுகிறது.
    தேவையான பொருட்கள்

    கெட்டி தேங்காய் பால் - 1 கப்
    தண்ணீர் கலந்த தேங்காய் பால் - 2 கப்
    காய்ந்த மிளகாய் - 4
    புளி - எலுமிச்சை அளவு
    உப்பு - தேவையான அளவு
    பூண்டு - 7 பற்கள்
    கடுகு - அரை ஸ்பூன்
    எண்ணெய் - 1 ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கொத்தமல்லி - சிறிதளவு
    மஞ்சள் - கால் ஸ்பூன்

    செய்முறை :

    பூண்டை ஒன்றும் பாதியாக நறுக்கி வைத்து கொள்ளவும்.

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை தண்ணீர் கலந்த தேங்காய் பாலில் ஊற வைத்து கரைத்து வைத்துக்கொள்ளுங்கள்.

    பின் அதில் தேவையான அளவு உப்பு சேர்த்துக்கொள்ளுங்கள்.

    அடுப்பில் கடாய் வைத்து எண்ணெய் விட்டு சூடானதும் கடுகு, காய்ந்த மிளகாய், கறிவேப்பிலை போட்டு தாளித்த பின்னர் இடித்த பூண்டுப் பற்களை போட்டு வதக்குங்கள்.

    பின் மஞ்சள் தூளும் சேர்த்துக்கொண்டு வதக்குங்கள்.

    தற்போது கரைத்து வைத்துள்ள புளிக் கரைசலை ஊற்றி கொதிக்க வையுங்கள்.

    நன்கு கொதித்து பச்சை வாசனை போனதும் அடுப்பை அணைத்துவிட்டு கொதிநிலை அடங்கியதும் கெட்டி தேங்காய் பாலை ஊற்றுங்கள்.

    கொதிக்கும் போதே ஊற்றாதீர்கள். இல்லையெனில் தேங்காய் திரிந்து வரும்.

    கடைசியாக கொத்தமல்லி தழை தூவி இறக்குங்கள்.

    அவ்வளவுதான் சுவையான தேங்காய் பால் ரசம் ரெடி.

    இதை சூப் போன்றும் குடிக்கலாம்.

    இதையும் படிக்கலாம்...தித்திக்கும் கோவா ஜாமூன்
    காலையில் இந்த சாலட்டை சாப்பிட்டால் அன்றைய தினம் முழுவதும் புத்துணர்ச்சியுடன் இருக்கலாம். இன்று இதன் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    ஆப்பிள் - 1
    பேரிக்காய் - 1
    கொய்யா - 1
    மாதுளம் பழ முத்துக்கள் - அரை கப்
    கொட்டை இல்லாத திராட்சை - அரை கப்
    காய்ந்த திராட்சை - 1 டீஸ்பூன்
    நட்ஸ் - 2 டீஸ்பூன்
    வெள்ளை கொண்டைக்கடலை - 1 கப்
    உப்பு - சுவைக்கு
    சாட் மசாலா தூள் - கால் டீஸ்பூன்
    எலுமிச்சை சாறு - அரை டீஸ்பூன்

    செய்முறை :

    வெள்ளை கொண்டைக்கடலையை இரவு முழுவதும் ஊறவைத்து காலையில் சிறிது உப்பு சேர்த்து வேகவைத்து கொள்ளவும்.

    ஆப்பிள், பேரிக்காய், கொய்யாவை சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும்.

    திராட்சையை துண்டுகளாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் வேக வைத்த கொண்டைக்கடலை, மாதுளம் பழ முத்துக்கள், நறுக்கிய ஆப்பிள், பேரிக்காய், கொய்யா, திராட்சை, காய்ந்த திராட்சை, நட்ஸ், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலக்கவும்.

    கடைசியாக அதில் சாட் மசாலா தூள் தூவி பரிமாறவும்.

    சூப்பரான கொண்டைக்கடலை மாதுளை சாலட் ரெடி.

    குழந்தைகளுக்கு சத்தான டிபன் கொடுக்க விரும்பினால் கோதுமை, கருப்பட்டி சேர்த்து தோசை செய்து கொடுக்கலாம். இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கோதுமை மாவு - ஒரு கப்,
    அரிசி மாவு - கால் கப்,
    கருப்பட்டி  - அரை கப்,
    தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள் ஸ்பூன்,
    ஏலக்காய்த்தூள் - அரை டீஸ்பூன்,
    நெய் - தேவையான அளவு,
    உப்பு - ஒரு சிட்டிகை.

    செய்முறை :

    ஒரு பாத்திரத்தில் கருப்பட்டி மூழ்கும் வரை தண்ணீர் சேர்த்து சூடாக்கி ஒரு கொதிவிட்டு இறக்கவும். கல், மண் போக வடிகட்டி ஆறவிடவும்.

    அகலமான பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, கருப்பட்டி கரைசல், தேங்காய்த்துருவல், ஏலக்காய்த்தூள், உப்பு சேர்த்து தோசை மாவு பதத்துக்கு கரைக்கவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை ஊற்றி, இருபுறம் நெய் விட்டு வேகவைத்து எடுத்துப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கோதுமை மாவு கருப்பட்டி தோசை ரெடி.

    இதையும் படிக்கலாம்...தித்திப்பான கோதுமை ரவா கேசரி
    கோதுமை மாவில் பல்வேறு சத்தான ரெசிபிகளை செய்யலாம். இன்று கோதுமை மாவில் கேரட், தக்காளி, வெங்காயம் சேர்த்து சத்தான தோசை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    கோதுமை மாவு -  1 கப்
    பெரிய வெங்காயம் - 1
    தக்காளி - 1
    தேங்காய் துருவல் - 2 மேஜைக்கரண்டி
    கறிவேப்பிலை - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எண்ணெய் - தேவையான அளவு
    துருவிய கேரட் - 1\4 கப்
    சீரகம் - 1 டீஸ்பூன்
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    பூண்டு - 2 பல்
    இஞ்சி - 1/2 இன்ச் அளவு
    வரமிளகாய் - 1

    செய்முறை

    தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, இஞ்சி,பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    மிக்ஸியில் பொடியாக நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, வரமிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லித்தழை, தேங்காய்த் துருவலைச் சேர்த்து அரைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை போட்டு அதனுடன் உப்பு சேர்த்து தோசை மாவு பதத்தில் கரைத்து கொள்ளவும்.

    அரைத்த கலவையை கோதுமை மாவுடன் சேர்த்து உப்பு போட்டு கட்டியில்லாமல் கரைத்துகொள்ளவும்.

    அடுத்து அதில் சீரகம், துருவிய கேரட்டை மாவுடன் சேர்த்து கலந்து கொள்ளவும். செய்யவும்.

    தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை தோசைகளாக ஊற்றி சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு வேக வைத்து எடுத்து பரிமாறவும்.

    சூப்பரான கோதுமை கேரட் மசாலா தோசை ரெடி.
    உங்கள் வீட்டில் கத்திரிக்காய் உள்ளதா? அப்படியானால் அதைக் கொண்டு ஒரு சுவையான கத்திரிக்காய் சட்னியை செய்யுங்கள். இந்த கத்திரிக்காய் சட்னி இட்லி, தோசைக்கு மிகவும் அட்டகாசமாக இருக்கும்.
    தேவையான பொருட்கள்:

    பெரிய கத்திரிக்காய் - 1
    புளி - 1 சிறிய அளவு
    எண்ணெய் - 1 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
    வரமிளகாய் - 3
    பூண்டு - 4 பல்
    மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
    உப்பு - சுவைக்கேற்ப

    தாளிப்பதற்கு...

    நல்லெண்ணெய் - 3 டேபிள் ஸ்பூன்
    கடுகு - 1 டீஸ்பூன்
    உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
    பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
    கறிவேப்பிலை - சிறிது

    செய்முறை:


    கத்தரிக்காய், பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், உளுத்தம் பருப்பு, வரமிளகாய், பூண்டு சேர்த்து ஒரு நிமிடம் வதக்கி இறக்கி ஆறவிடவும்.

    பின்னர் அதே வாணலியில் கத்திரிக்காய் சேர்த்து, சிறிது உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து வதக்கி, புளியை சேர்த்து நன்கு வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும்.

    மிக்சர் ஜாரில் ஆறவைத்த பொருட்களை போட்டு, உப்பு, சிறிது தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தாளிப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து தாளிக்க வேண்டும்.

    அடுத்து, அரைத்து வைத்துள்ள சட்னியை சேர்த்து கிளறி இறக்கினால், சுவையான கத்திரிக்காய் சட்னி தயார்.

    உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் அடிக்கடி உணவில் கினுவாவை சேர்த்து கொள்ளலாம். இதில் அதிகளவு நார்ச்சத்து நிறைந்துள்ளது. கினுவா, காய்கறிகள் சேர்த்து சாலட் செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    கினுவா - கால் கப்
    வெங்காயம், வெள்ளரிக்காய், குடைமிளகாய் - தலா ஒன்று
    ப்ராக்கோலி - பாதியளவு
    கெட்டியான தக்காளி - 2
    ஆலிவ் ஆயில் - 2 டேபிள்ஸ்பூன்
    பூண்டு - 2 பல்
    எலுமிச்சைச் சாறு - 2 டேபிள்ஸ்பூன்
    மிளகுத்தூள் - ஒரு டீஸ்பூன்
    வறுத்த பாதாம்பருப்பு - 10
    கொத்தமல்லித்தழை - சிறிதளவு
    உப்பு - தேவைக்கேற்ப

    செய்முறை:

    கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பாதாமை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும்.

    கினுவா நன்றாகக் கழுவி, தண்ணீரில் சிறிது நேரம் ஊறவைக்கவும். பிறகு, அதைக் கொதிக்கும் தண்ணீரில் போட்டு குழையாமல் உதிரியாக வேகவைத்து தண்ணீரை வடித்து ஆற வைக்கவும்.

    குடைமிளகாய்களை விதை நீக்கி நான்கு துண்டுகளாக, பெரியதாக நறுக்கிக்கொள்ளவும்.

    வெங்காயம், வெள்ளரிக்காய், தக்காளி ஆகியவற்றை சிறிய துண்டுகளாக நறுக்கவும்.

    ப்ராக்கோலியை பெரிய பூக்களாக வெட்டிக்கொள்ளவும்.

    ஒரு கடாயில் ஆலிவ் ஆயில் ஊற்றி நறுக்கிய குடைமிளகாய், பூண்டு, ப்ராக்கோலியை போட்டு லேசாக, நிறம் மாறாமல் வதக்கவும்.

    பிறகு, வதக்கிய கடைமிளகாய், பூண்டு ஆகியவற்றைப் பொடியாக நறுக்கிக்கொள்ளவும். ப்ராக்கோலியை நறுக்கத் தேவையில்லை.

    வேகவைத்த கினுவாவை போட்டு அதனுடன் வேக வைத்த காய்கறிகள், உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சைச் சாறு, கொத்தமல்லித்தழை எல்லாவற்றை சேர்த்து நன்றாக கலந்து அதன்மேல் வறுத்து நீளமாக நறுக்கிய பாதாம்பருப்பைத் தூவி அலங்கரித்துப் பரிமாறவும்.

    சூப்பரான சத்தான கினுவா வெஜிடபிள் சாலட் ரெடி.

    கருப்பு உளுந்தில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கருப்பு உளுந்தை கொண்டு செய்யப்படும் உணவுகளை குழந்தைகளுக்கு அடிக்கடி உண்ணக் கொடுப்பதால் ரத்த சோகை நோய் விரைவில் தீரும்.
    தேவையான பொருட்கள் :

    கருப்பு உளுந்து - 1 கப்
    கடலைப்பருப்பு - 1/4 கப்
    கட்டி பெருங்காயம் -  சிறிதளவு
    பட்ட மிளகாய்(வரமிளகாய்) - 10
    கறிவேப்பிலை - 1 கைப்பிடி
    வெள்ளை எள் - 2 டீஸ்பூன்
    பூண்டு - 2 (முழு பூண்டு)
    நல்லெண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு

    செய்முறை :

    கட்டி பெருங்காயத்தை 1 மேஜைகரண்டி எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் மொறு மொறு என்று வறுத்து எடுக்கவும்.

    அதே கடாயில் கருப்பு உளுந்தை எண்ணெய் சேர்க்காமல் குறைவான தீயில் வைத்து மொறு மொறு என்று சிறிது கலர் மாறும் வரை வறுக்கவும். இது நன்றாக வறுபட குறைந்தது 9 யிலிருந்து 10 நிமிடங்களாகும். பிறகு தட்டிற்கு மாற்றவும்.

    கடலைப்பருப்புடன் 2 சொட்டு எண்ணெய் சேர்த்து குறைவான தீயில் வைத்து 4 நிமிடத்திற்கு பின் சிறிது கலர் மாறும் வரை வறுத்து பின்பு மற்றொரு தட்டில் கொட்டி வைக்கவும்.

    மிளகாயை வெறும் வாணலியில் 2 நிமிடம் வறுத்து எடுத்துக் கொள்ளவும். பிறகு வெள்ளை எள்ளையும் எண்ணெய் சேர்க்காமல் பொன்னிறமாக வறுத்து எடுக்கவும்.

    கறிவேப்பிலையுடன் சிறிது எண்ணெய் சேர்த்து வறுத்துக் கொள்ளவும்.

    எல்லா பொருட்களை தனித்தனியாக வறுத்த பின் ஒரு அகலமான ஒரு தட்டில் பரப்பி ஆறவிடவும்.

    ஆறிய பின் மிக்ஸியில் போட்டு சிறிது கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.

    கரகரப்பாக அரைத்த பின் அதில் தோல் உரிக்காத பூண்டு மற்றும் உப்பு சேர்த்து மிக்ஸியை தொடர்ந்து போடாமல் சிறிது நிறுத்தி நிறுத்தி போட்டு அரைத்துக் கொள்ளவும்.

    அரைத்த பின்பு ஒரு காற்று புகாத பாட்டில் அல்லது டப்பாவில் போட்டு வைத்துக் கொண்டால் இது 1 மாதம் வரை நல்ல வாசனையுடன் இருக்கும்.

    சூப்பரான கருப்பு உளுந்து இட்லி பொடி ரெடி.

    முருங்கைக்கீரை 300 வகையான நோய்கள் வராமல் தடுக்கவும், 67 வகையான நோய்களை குணப்படுத்தவும் உதவுவதாக ஆயுர்வேத மருத்துவம் குறிப்பிடுகிறது.
    தேவையான பொருட்கள் :

    பச்சரிசி - ஒரு கப்,
    துவரம்பருப்பு - கால் கப்,
    முருங்கை கீரை - அரை கப்,
    பெரிய வெங்காயம் - 1,
    உப்பு - தேவையான அளவு,
    நெய் - 2 டீஸ்பூன்.

    வறுத்து பொடிக்க:

    உளுத்தம்பருப்பு - 2 டீஸ்பூன்,
    பொட்டுக்கடலை - 2 டீஸ்பூன்,
    பச்சரிசி - 2 டீஸ்பூன்,
    காய்ந்த மிளகாய் - 4,
    கொப்பரை தேங்காய் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    தாளிக்க:


    கடுகு - அரை டீஸ்பூன்,
    உளுத்தம்பருப்பு - ஒரு டீஸ்பூன்,
    பூண்டு - 3 பல்,
    காய்ந்த மிளகாய் - 1,
    எண்ணெய் - ஒரு டேபிள்ஸ்பூன்.

    செய்முறை:

    அரிசி, பருப்பு இரண்டையும் ஒன்றாகக் கழுவுங்கள். உப்பும், மூன்றே முக்கால் கப் தண்ணீரும் சேர்த்து குக்கரில் வைத்து மூடி, 2 விசில் வந்ததும் தீயைக் குறைத்து 5 நிமிடம் கழித்து இறக்குங்கள்.

    வெங்காயத்தைப் பொடியாக வெட்டிக்கொள்ளவும்.

    முருங்கைக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    பூண்டுப்பல்லை நசுக்கி வையுங்கள்.

    வறுக்க கொடுத்துள்ள பொருட்களை வெறும் கடாயில் போட்டு சிவக்க வறுத்து ஆறியதும் மிக்சியில் போட்டு பொடித்துக்கொள்ளுங்கள்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு தாளித்த பின்னர் பூண்டு சேர்த்து வறுத்து, பிறகு வெங்காயம், சிறிது உப்பு சேர்த்து நன்கு வதக்கவும்.

    அடுத்து முருங்கைக்கீரையை சேர்த்து கீரை வேக சிறிது தண்ணீர் தெளித்து மூடி வைத்து வேக விடவும்.

    கீரை நன்றாக வெந்ததும் அதில் சாதத்தில் சேருங்கள்.

    கடைசியாக அதில் வறுத்துப் பொடித்த பொடியையும், நெய்யையும் சேர்த்து நன்கு கலந்து பரிமாறுங்கள்.

    சூப்பரான முருங்கைக்கீரை சாதம் ரெடி.
    அரிசி மாவு, தேங்காய் சேர்த்து செய்யும் இந்த ரொட்டி மிகவும் சுவையானது. ஆரோக்கியம் நிறைந்தது. இன்று இந்த ரெசிபியை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    அரிசி மாவு - 1 கப்
    தேங்காய் துருவல் - 1 கப்
    உப்பு - 1/2 ஸ்பூன்
    எண்ணெய் - 5 ஸ்பூன்
    தண்ணீர் - 1 கப்

    செய்முறை

    ஒரு பாத்திரத்தில் அரிசி மாவுடன் உப்பு, தண்ணீர், தேங்காய் துருவல் சேர்த்து சப்பாத்தி மாவு பதத்தில் கெட்டியாக பிசைந்து கொள்ளவும்

    பிசைந்த மாவை சிறிய வட்டங்களாக தட்டி கொள்ளவும்

    தோசை கல்லை அடுப்பில் வைத்து காய்ந்ததும் தட்டி வைத்துள்ள ரொட்டியை போட்டு சுற்றி சிறிது எண்ணெய் ஊற்றி வெந்ததும் திருப்பி போட்டு இருபுறமும் சுட்டு எடுக்கவும்

    சுவையான எளிதில் செய்ய கூடிய அரிசி மாவு தேங்காய் ரொட்டி தயார்

    ×