என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    விடுமுறையில் வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு வீட்டிலேயே ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் வகைகளை செய்து கொடுக்கலாம். இன்று தட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :
     
    அரிசி மாவு - 2 கப்
    உளுத்தம் பருப்பு மாவு - 2 டேபிள் ஸ்பூன்
    மிளகாய் தூள் - தேவையான அளவு
    கடலைப் பருப்பு - 2 டேபிள் ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிது
    உப்பு - தேவையான அளவு
    பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
    வெண்ணெய் - 2 டீஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)



    செய்முறை :

    முதலில் கடலைப் பருப்பை நீரில் 1 மணிநேரம் ஊற வைத்து, கழுவி காய வைக்க வேண்டும்.

    பின்னர் ஒரு பாத்திரத்தில் அரிசி மாவு, உளுத்தம் பருப்பு மாவு, மிளகாய் தூள், கடலைப் பருப்பு, கறிவேப்பிலை, உப்பு, பெருங்காயத் தூள் மற்றும் வெண்ணெய் போட்டு கலந்து, சிறிது தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக பிசைந்து கொள்ள வேண்டும்.

    ஒரு பிளாஸ்டிக் ஷீட் அல்லது ஒரு துணியில் எண்ணெய் தடவி, ஒரு சிறிய எலுமிச்சை அளவு மாவை எடுத்து, அதில் வைத்து தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும்.

    பிறகு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் தட்டி வைத்துள்ள தட்டையைப் போட்டு பொன்னிறமாக முன்னும் பின்னும் பொரித்து எடுக்க வேண்டும். ( நன்றாக எண்ணெய் அடங்கிய பின்னர் தான் எடுக்க வேண்டும்)

    இதே போன்று அனைத்து மாவையும் தட்டி, பொரித்து எடுக்க வேண்டும்.

    இப்போது சுவையான தட்டை தயார்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்... பதறிப் போய்விடுவோம். இன்று இதற்கான முதலுதவியை பார்க்கலாம்.
    குழந்தைகளுக்கு ஏதாவது உடல்நலக் கோளாறுகள் என்றால் வீடே தலைகீழாக மாறிவிடும்; கண்ணும் கருத்துமாகப் பார்த்துப் பார்த்து நாம் வளர்க்கும் குழந்தைகள் எதையாவது விழுங்கிவிட்டால்... பதறிப் போய்விடுவோம். விழுங்கிய பொருள் வெளியே வரும்வரை நம் உயிர் நம் கையில் இருக்காது. அந்தப் பதற்றமான தருணத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதும் புரியாது.

    குழந்தைகளால் விழுங்கப்படும் பொருள்கள் மூச்சுக்குழாய் அல்லது உணவுக்குழாய்க்குள்தான் செல்லும். சில நேரங்களில் இது இரண்டும் பிரியும் இடமான தொண்டைக்குழிக்குள்ளும் சிக்கிக்கொள்ளலாம். மூச்சுக்குழாய்க்குள் சென்று அடைத்துக்கொண்டால், சுவாசப்பாதை தடைபடும். மூச்சுவிட முடியாது. உணவுக்குழாய்க்குள் என்றால், இரைப்பை வழியாக வயிற்றுக்குள் செல்லும். வயிற்றுக்குள் செல்லும் பொருளின் தன்மையைப் பொறுத்து அதன் பாதிப்பு இருக்கும். சில பொருள்கள் எந்தத பாதிப்புகளையும் ஏற்படுத்தாமல் வெளியேறிவிடுவதும் உண்டு.



    எதையோ அவர்கள் விழுங்கிவிட்டது உறுதியாகிவிட்டால், முதலில் அவர்களை இருமச் சொல்ல வேண்டும். பின்னர், அவர்களைக் குனியவைத்து, முதுகுப் பகுதியில் ஐந்து முறை பலமாகத் தட்ட வேண்டும். அப்படியும் விழுங்கிய பொருள் வெளியே வராவிட்டால், குழந்தையை பின்புறத்திலிருந்து கட்டியணைத்து அவர்களின் நெஞ்சுக்குக் கீழே, தொப்புளுக்கு மேலே நம் ஒருகை முஷ்டி மேல் இன்னுமொரு கை வைத்து ஐந்து முறை மேல் நோக்கித் தள்ள வேண்டும். அப்படியும் பொருள் வரவில்லையென்றால், மருத்துவமனைக்குக் கூட்டிச் சென்றுவிட வேண்டும்.

    சிலர் குழந்தைகளை தலைகீழாக வைத்து உலுக்குவார்கள். அது தவறு; அப்படிச் செய்யக் கூடாது. தண்ணீர் தருவதோ, சாப்பிடக் கொடுப்பதோ வேண்டாம்.

    வாய்வழியாக மட்டுமல்லாமல், மூக்குவழியாகவும் சில பொருள்கள் சென்றுவிடுவதுண்டு. உதாரணமாக பொரி, கடலை, பாசி போன்றவை. இவற்றால் உயிருக்கு ஆபத்தில்லை. ஆனால், குழந்தையின் மூக்கில் சளி வடிந்துகொண்டே இருக்கும். சில நேரங்களில் ரத்தமும் வழியலாம். சமயத்தில், நோய்த்தொற்று ஏற்பட்டு புண்ணாகிவிடும். அதனால் குழந்தையின் மூக்கில் புண் ஏதாவது இருந்தாலும் மருத்துவரிடம் கூட்டிச் சென்றுவிடுவது நல்லது.
    ஒருவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும்போது அவர் சைக்கிள் மிதிக்கத் தொடங்கினால் கால்வலி ஏற்படலாம். தொடர்ந்து சைக்கிள் மிதிக்கும்போது மீண்டும் இயல்பான நிலைக்கு உடல் வந்துவிடும்.
    உடற்பயிற்சியில் நிறைய வகைகள் உள்ளன. இவற்றில் Cycling என்கிற சைக்கிள் மிதிப்பது Cardio flexibility strength வகையைச் சார்ந்தது. சைக்கிள் மிதிப்பதன் மூலம் இதயம், நுரையீரல் போன்ற உள்ளுறுப்புகள் வலுவடையும். மேலும் உடலில் உள்ள தசைகளுக்கு வலு தரும் சிறந்த பயிற்சியாகவும் இருக்கிறது. இதயம் நன்கு பலப்படும். அதனால் இதயத்துக்கு இதமான பயிற்சி, உகந்த பயிற்சி என்று சைக்ளிங்கை சொல்லலாம்.

    நுரையீரல் நன்றாக விரிந்து கொடுக்கும். ரத்த ஓட்டம் சீராக இருக்கும் நுரையீரலுக்கு நல்ல உடற்பயிற்சியாக அமைகிறது. சைக்கிள் மிதிப்பது ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என அனைத்து தரப்பினரின் உடல்நலத்துக்கும் மிகுந்த பயனளிக்கிறது. முக்கியமாக, சிறுவர்கள் முதல் பெரியவர் வரை சைக்கிள் மிதிப்பது என்பது ஒருவருக்குக் கிடைக்கும் அடிப்படையான உடல் உழைப்பைப் போல் ஆகும்.

    முதன்முதலில் சைக்கிளிங் பயிற்சியைத் தொடங்குகிறவர்களுக்கு உங்களது ஆலோசனை என்ன?

    ‘‘ஒருவர் எந்த உடற்பயிற்சியும் செய்யாமல் இருக்கும்போது அவர் சைக்கிள் மிதிக்கத் தொடங்கினால் கால்வலி ஏற்படலாம். சிலருக்கு உடம்பு, கால், மூட்டு வலியும் இருக்கும். ஒரு வாரம் அல்லது பத்து நாட்கள் வரை இந்த பிரச்சனை இருக்கும். தொடர்ந்து சைக்கிள் மிதிக்கும்போது மீண்டும் இயல்பான நிலைக்கு உடல் வந்துவிடும்.

    இந்த சிரமத்தைத் தவிர்க்க முதன்முதலாக சைக்கிளிங் பயிற்சியைத் தொடங்குபவர்கள் 2 கி.மீட்டர் தொலைவில் தொடங்கலாம். அதன்பிறகு மெல்ல மெல்ல நாளடைவில் தூரத்தை அதிகரித்துக் கொள்ளலாம்.

    அதேபோல் சைக்கிள் மிதிப்பதை உடற்பயிற்சியாக தொடர நினைப்பவர்கள் அதிகாலையில் சைக்கிளிங் பயிற்சியாக செய்யலாம். உடல்நலத்துக்கு பயனளிப்பதோடு, தூய்மையான காற்றும் கிடைக்கும். முறையாக சைக்கிள் மிதித்து பழக விருப்பப்படுவர்கள் உடற்பயிற்சி நிபுணர் ஆலோசனை பெற்று மிதிக்கத் தொடங்கலாம். உடற்பயிற்சிக்கு நேரம் இல்லை என கருதுபவர்கள் தினமும் சைக்கிள் மட்டும் மிதித்தால்கூட போதும்.  

    சைக்கிளிங்குக்கு ஏற்ற நேரம் அதிகாலை என்று சொல்லலாம். வளிமண்டலத்தில் சுத்தமான காற்று கிடைக்கும். அதனால், அதிகாலை நேரத்தில் சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்வது சிறப்பானது.’’

    ‘‘சைக்கிள் ஓட்ட வேண்டும் என்ற முடிவெடுத்த பிறகு உடற்பயிற்சிக்கூடத்தில் சைக்கிளிங் பயிற்சியை மேற்கொள்வதைவிட வெட்ட வெளியில் சைக்கிளை மிதித்துகொண்டு சென்று வருவதுதான் நல்லது. இதனால் மனதில் அமைதி கிடைக்கும். உளவியல்ரீதியிலும் ஆரோக்கியத்தைப் பெறலாம். ஓடும்போதோ அல்லது வேறு உடற்பயிற்சியின்போதோ உங்களுக்கு மூச்சு வாங்கும் சிரமம் ஏற்படும். ஆனால், சைக்கிள் மிதிக்கும்போது மிதமான வேகத்தில் செல்வதால் சுவாசமும் சீராக இருக்கும். வெட்டவெளியில் சைக்கிள் மிதிக்க சூழல் இல்லாதவர்கள் உடற்பயிற்சி கூடத்தில் இருக்கிற Static cycle மிதிக்கலாம்.’’

    ‘‘மூட்டுவலி உள்ளவர்கள், இரண்டு எலும்புகள் சேரும் இடத்தில் லிகமெண்ட் பிரச்சனை இருப்பவர்கள் அவற்றை முழுவதுமாக குணப்படுத்திய பிறகுதான் சைக்கிள் பயிற்சியை மேற்கொள்ள வேண்டும்.’’
    தினமும் காய்கறி அல்லது கீரை சூப் குடிப்பது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. அந்த வகையில் இன்று முட்டைக்கோஸ் - கேரட் சூப் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    முட்டைகோஸ் - 1/4 கிலோ
    வெங்காயம் - 1
    இஞ்சி - பூண்டு விழுது - 1/4 டீஸ்பூன்
    மிளகு, சீரகப்பொடி - 1/2 டீஸ்பூன்
    கேரட் - 1
    வெண்ணெய், உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    வெங்காயம், கேரட், முட்டைக்கோஸை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    குக்கரில் வெண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் இஞ்சி பூண்டு விழுது போட்டு நன்றாக வதக்கிய பின்னர் வெங்காயத்தை போட்டு வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கிய பின்னர் முட்டைக்கோஸ், கேரட்டை சேர்த்து நன்கு வதக்கவும்.

    முட்டைக்கோஸ் சிறிது வதங்கிய பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு வேக விடவும்.

    வெந்தவுடன் திறந்து மிளகு, சீரகப் பொடி சேர்த்து பரிமாறவும்.

    சத்து நிறைந்த முட்டைக்கோஸ் சூப் ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    போனஸ், அரியர், ஊக்கத்தொகை போன்ற கூடுதல் வருவாய் வரும்போது, அதை செலவழித்துக் கொண்டாடித் தீர்த்துவிடுவது பலரின் வழக்கம். ஆனால் கூடுதல் வருவாயை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்...
    போனஸ், அரியர், ஊக்கத்தொகை போன்ற கூடுதல் வருவாய் வரும்போது, அதை செலவழித்துக் கொண்டாடித் தீர்த்துவிடுவது பலரின் வழக்கம். ஆனால் அப்படி இருக்காமல், கொஞ்சம் புத்திசாலித்தனத்தோடு செயல்பட்டால், நமது பொருளாதார அஸ்திவாரம் பலம் பெறும். கூடுதல் வருவாயை எப்படிப் பயன்படுத்திக்கொள்ளலாம் என்று பார்ப்போம்...

    அவசரகால நிதி:

    எந்த ஒரு நிதித் திட்டமிடலிலும் அடிப்படையான விஷயம், ஓர் அவசரகால நிதியை உருவாக்குவது. ஆனால் நம்மில் பலர் இதுகுறித்து அலட்டிக்கொள்வதில்லை. அதாவது, அவசர கால நிதியின் அவசியத்தை உணர்ந்து அப்படி ஒரு தொகையைப் பாதுகாப்பதில்லை அல்லது அது போதுமானதாக இருப்பதில்லை. அதனால்தான் நாம் திடீர் செலவுகள் ஏற்படும்போது தடுமாறிப் போய்கிறோம்.

    அந்த மாதிரி சமயங்களில் நாம், நண்பர்கள், உறவினர்களிடம் கடன் பெற்றுச் சமாளிக்க முயல்கிறோம் அல்லது கடன் அட்டையைப் பயன்படுத்த விழைகிறோம். ஆனால், கூடுதல் வருவாயைப் பயன்படுத்தி ஓர் அவசரகால நிதியை உருவாக்கிக்கொண்டோம் என்றால், அவசரச் செலவுகள், எதிர்பாராத செலவுகளைச் சமாளித்துவிடலாம். கிடைத்த கூடுதல் தொகையை சேமிப்புக் கணக்கில் போட்டுவைப்பதைவிட, ‘லிக்விட் பண்ட்’களில் முதலீடு செய்யலாம். அவை, சேமிப்புக் கணக்கை விட அதிக ‘ரிட்டர்ன்’ அளிக்கும். தேவைப்படும்போது அவற்றில் 24 மணி நேரத்துக்குள் பணத்தைத் திரும்பப் பெற முடியும்.

    கடன்களை திரும்பச் செலுத்துங்கள்:

    கூடுதல் தொகை கைக்கு வரும்போது, கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். குறிப்பாக, தனிநபர் கடன், கிரெடிட் கார்டு கடன் போன்றவற்றை முடிப்பதற்குப் பார்க்க வேண்டும். காரணம், அவற்றுக்கான வட்டி அதிகம். இதுபோன்ற கடன்களை வைத்துக்கொண்டு முதலீடு செய்வதில் அர்த்தமில்லை.

    முதலீட்டில் இருந்து பெறும் வருவாயை விட, மேற்கண்ட கடன்களுக்கான வட்டி விகிதம் அதிகம் என்பதை உணருங்கள். நீங்கள் வீட்டுக்கடன் செலுத்திக் கொண்டிருந்தால், கூடுதல் தொகை கிட்டும்போது அதில் ஒரு கணிசமான தொகையை முன்கூட்டிச் செலுத்தலாம். தற்போது பெரும்பாலான வங்கிகள் இப்படி முன்கூட்டி பணம் செலுத்துவதற்கு அபராதம் விதிப்பதில்லை. இவ்வாறு முன்கூட்டி கணிசமான தொகை செலுத்துவதால், நாம் கட்டும் வட்டி விகிதம் குறையும்.



    காப்பீட்டு அளவை அதிகரிக்கலாம்:

    நாம் நமக்கு போதுமான அளவு காப்பீடு பெற்றிருக்கிறோமா என்று அவ்வப்போது ஆராய்வதும், அந்த அளவைக் கூட்டிக்கொள்வதும் முக்கியம். போனஸ் போன்ற கூடுதல் தொகைகள் வரும்போது, நமது ஆயுள் காப்பீடு மற்றும் மருத்துவக் காப்பீட்டு அளவுகளை அதிகரித்துக்கொள்ளலாம். மருத்துவச் செலவுகள் கூடிக்கொண்டே செல்லும் தற்போதைய சூழலில், கூடுதல் பணம் கிடைக்கும்போது அதைப் பயன்படுத்தி நமது மருத்துவக் காப்பீட்டு அளவை அதிகரித்துக்கொள்வதே புத்திசாலித்தனம்.

    திறன்களை வளர்க்கலாம்:

    இன்று எல்லோருமே கூடுதல் வருவாயை விரும்புகின்றனர். ஏதாவது பகுதிநேர வேலை பார்த்துக்கூட குடும்பத்தின் வருவாயைக் கூட்ட எண்ணுகின்றனர். இது நல்ல விஷயம்தான். ஆனால், கூடுதல் வருவாய் வேண்டும் என்றால், கூடுதல் திறன்களை வளர்த்துக்கொள்ள வேண்டும். உதாரணத்துக்கு, கணினி அறிவு. கணினி சார்ந்த, கூடுதல் வேலைவாய்ப்புக்கு உதவும் ஏதாவது கோர்ஸ் போன்றவற்றைப் பயில நமக்குக் கிடைத்த உபரித் தொகையை உபயோகிக்கலாம்.

    அடிப்படைத் தொகைக்கு உபயோகிக்கலாம்:

    நாம் வீட்டுக்கடன், வாகனக் கடன் போன்றவற்றைப் பெற எண்ணியிருந்தால், அதற்கு, டவுன் பேமண்ட் எனப்படும் அடிப் படைத் தொகையைச் செலுத்த வேண்டும் என்பதை அறிந்திருக்க வேண்டும். நமக்கு கூடுதல் வருவாய் வரும்போது, வழக்க மான அடிப்படைத் தொகையைவிட கூடுதலாகச் செலுத்தப் பயன்படுத்தலாம். அதன் மூலம் நமக்கு, ஈ.எம்.ஐ. எனப்படும் மாதாந்திர தவணைத் தொகையின் அளவு குறையும்.

    முதலீடு செய்யலாம்:

    நீங்கள் உங்கள் குழந்தைகளின் கல்வி, திருமணம் மற்றும் உங்களின் ஓய்வுகாலத்தை மனதில் வைத்து முதலீடு மேற்கொண்டு வரக்கூடும். கையில் கணிசமாகப் பணம் கிடைக்கும்போது, அதை உங்கள் முதலீட்டை வலுப்படுத்த உபயோகிக்கலாம். நீங்கள் உங்களின் நீண்டகால இலக்குகளை எட்டுவதை நோக்கி ‘ஈக்விட்டி மியூச்சுவல் பண்ட்’களில் ஒரு கணிசமான தொகையை இடும் அதேவேளையில், ‘லிக்விட் பண்ட்’களிலும் முதலீடு செய்யலாம்.

    நாம் எப்போதும் நமது செலவு விருப்பங்களுக்கும், நமது பொருளாதார பலத்தை வலுவாக்கும் விஷயங்களுக்கும் இடையே ஒரு சமநிலையைப் பராமரிப்பது முக்கியம்.

    இன்று நம்மை மகிழ்விக்கும் செலவுகளைவிட, எதிர்காலத்தைக் கருத்தில்கொண்டு மேற்கொள்ளும் முயற்சிகளே நன்மை பயக்கும் என்பது நிதி ஆலோசகர்களின் கருத்து. 
    மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள்.
    நாம் பொதுவாக, ஆண், பெண் உடலமைப்பில்தான் வித்தியாசம் இருக்கிறது, மற்றபடி இரு பாலருக்கும் மூளை ஒரே மாதிரித்தான் இருக்கும் என்று கருதுகிறோம்.

    ஆனால், உண்மையில் இரு பாலித்தனவருக்கும் உடல் மட்டுமல்ல, மூளையும் வித்தியாசப்படுகிறது என்று ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

    இப்படி மூளை வித்தியாசப்படுவதால்தான் ஆணை பெண்ணாலோ, பெண்ணை ஆணாலோ முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல் தடுமாறுகிறார்கள் என்று உளவியலாளர்கள் கூறுகிறார்கள். ஆணின் மூளையும் பெண்ணின் மூளையும் வெவ்வேறுவிதமாக வேலை செய்கின்றன என்பதே அவர்கள் சொல்லும் காரணம்.

    பெண்களின் மூளை அமைப்பு மூன்று மையங்களைக் கொண்டதாக இருக்கிறது. முதல் மையம், உணர்ச்சிகளை அப்படியே கிரகித்துக் கொள்ளும் தன்மை கொண்டதாக இருக்கிறது.

    இரண்டாவது மையம், மொழி வளத்துக்கானதாக உள்ளது. இது வார்த்தைகளையும் உரையாடல்களையும் கவனிக்கும் தன்மை கொண்டது. மூன்றாவது மையம், முகத்தின் சாயலைக் கொண்டு ஒருவரைத் துல்லியமாக எடை போடும் தன்மை கொண்டது.

    ஆண் மூளையிலும் இந்த மூன்று வகையான மையங்கள் உள்ளன. ஆனால் அவை வேறுவிதமாகச் செயல்படுகின்றன.



    ஒரு விஷயத்தை பெண் பேசுவது போல் ஆணால் விவரித்துக் கூற முடிவதில்லை. ஓர் ஆண் தான் உணரும் அந்த உணர்ச்சியை ஒரு பெண்ணைப் போல மொழியால் விலாவரியாகக் கூற முடிவதில்லை. எதிராளியின் முக அமைப்பு கொண்டு அவர் மனதைப் புரிந்துகொள்ள முடிவதில்லை.

    ஆண்களின் மூளை அமைப்பு, கண்ணில் காணும் காட்சிகளுக்கே முக்கியத்துவம் தருகிறது. பெரும்பாலும் அழகான பெண்களையே ஆண்கள் விரும்புவதற்கு மூளையே காரணம்.

    ஆனால் பெண்ணின் மூளை அப்படியல்ல. பெண்ணுக்கு பார்வை இன்பம் பெரிதாக இல்லை. அதனால் பெண்ணுக்கு பார்ப்பதால் மட்டும் மகிழ்ச்சி கிடைப்பதில்லை.

    பெண்ணுக்கு பேச்சு மூலம்தான் மகிழ்ச்சி கிடைக்கிறது. ஓயாமல் பேசிக்கொண்டே இருக்கும் ஆண்களை பெண்களுக்குப் பிடிக்கிறது. பெண்ணைப் பொறுத்தவரை, ஆண் அதீத அழகாக இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை.

    அது போன்ற அடிப்படையான குண வேறுபாடுகள் ஆண், பெண் இருவருக்கும் உண்டு. இதைப் பற்றிய சரியான புரிதல் இரு பாலருக்கும் இல்லாததாலேயே இரு தரப்புக்கும் இடையே பிரச்சினைகள் ஏற்படுகின்றன என்று ஆய்வாளர்கள் கூறுகிறார்கள். 
    மாங்கனியில் 20 வகையான வைட்டமின்களும், தாது சத்துகளும் உள்ளன. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.
    மாங்கனி முக்கனிகளுள் ஒன்று. தமிழ் இலக்கியத்தில் மாம்பழத்துக்கு தனி சிறப்பு உண்டு. பழனி மலை முருகன் மாங்கனி (ஞானப்பழம்) கிடைக்காததால் தன் பெற்றோரிடம் கோபித்துக்கொண்டு சென்ற கதையை நாம் அறிவோம்.

    இந்தியாவில் மட்டும் கிட்டத்தட்ட 283 மாம்பழ வகைகள் இருக்கின்றன. இவற்றில் 30 வகைகள் பிரசித்திப் பெற்றவை. நமது தேசிய கனி என்ற சிறப்பை பெற்றது மாங்கனி.

    மாமரம் 300 வருடத்துக்கு பிறகும் கூட கனி தரும். இந்திய மாம்பழ வகைகளில் அல்போன்சா, மல்கோவா, சேலம் குண்டு, சேலம் அல்போன்சா, செந்தூரா, பங்கனப்பள்ளி, நீலம், லாங்க்ரா, காலாப்பட், பாதாமி அல்போன்சா, ராஸ்புரி, கோல, பெத்தரசலு, சுவர்ணரேகா, லாங்க்ரா போன்றவை பிரசித்தி பெற்றவை.



    உலகில் இனிப்பான மாங்கனி பிலிப்பைன்ஸ் நாட்டில் விளையும் காரபோவ் தான். இதில் 14 வகைகள் உண்டு. தமிழகத்தில் ஏழைகளின் மாம்பழம் ருமானி. இதன் விலை குறைவு.

    உலகில் மாம்பழம் அதிகம் விளைவது இந்தியாவில் தான். மாங்கனியில் 20 வகையான வைட்டமின்களும், தாது சத்துகளும் உள்ளன. மாங்கனி கொழுப்பைக் குறைக்கும். முகப்பருக்களை அழிக்கும். முகப்பொலிவு தரும். எலும்புகளை வலுவாக்கும். உடலில் உள்ள நச்சுத்தன்மையை முறியடிக்கும். தாம்பத்ய வாழ்க்கைக்கு சிறந்தது.

    சர்க்கரை நோயாளிகள் தங்கள் உடல் நிலைக்கேற்ப மருத்துவ ஆலோசனை பெற்று மாம்பழம் சாப்பிடலாம். கார்பைடு கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிடக் கூடாது. அவை உடல் நலத்துக்கு கேடு விளைவிக்கும். பருவகாலத்துக்கு ஏற்ப கனிகளை உட்கொள்ள வேண்டும்.

    தற்போது மாம்பழ சீசன் நடந்துகொண்டு இருக்கிறது. இயற்கை முறையில் பழுக்க வைக்கப்பட்ட மாம்பழங்களை சாப்பிட்டு உடல் நலத்தை மேம்படுத்துங்கள்.

    வக்கீல் ஏ.எஸ்.பிலால், சென்னை
    தயிர் சாதம், சாம்பார் சாதம், தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள பச்சை மிளகாய் ஊறுகாய் சூப்பராக இருக்கும். இன்று இந்த ஊறுகாயை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    பச்சை மிளகாய் - 200 கிராம்,
    கடுகுத்தூள்  - ஒரு டீஸ்பூன்,
    ஆம்சூர்பொடி  - ஒரு டீஸ்பூன்,
    வெந்தயத்தூள் - கால் டீஸ்பூன்,   
    மஞ்சள்தூள் - கால் டீஸ்பூன்,
    கடுகு எண்ணெய், உப்பு - தேவையான அளவு.



    செய்முறை:

    பச்சை மிளகாயை வட்ட வடிவில் கொஞ்சம் தடிமனாக நறுக்கிக் கொள்ளவும்.

    நறுக்கிய பச்சை மிளகாயுடன் கடுகுத்தூள், மஞ்சள் தூள், வெந்தயப்பொடி, ஆம்சூர் பொடி, உப்பு சேர்த்து நன்றாகக் கலந்து கொள்ளவும்.

    கடைசியாக, கடுகு எண்ணெய் விட்டுக் கலந்து… ஈரமில்லாத பாட்டிலில் போட்டு வைத்து, தினமும் குலுக்கி விட வித்தியாசமான சுவையில் பச்சை மிளகாய் ஊறுகாய் தொட்டுக்கொள்ள தயார்.

    இந்த ஊறுகாய் இரண்டு, மூன்று வாரங்கள் வரை கெடாமல் இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பட்ஸை கொண்டு காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வது என்பது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். இது குறித்து விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    ஊக்கு, ஹேர்- பின், தீக்குச்சி, பென்சில், பட்ஸ், பைக் சாவி என எது கையில் கிடைத்தாலும், அதை காதுக்குள்விட்டுக் குடையும் பழக்கம் நிறைய பேரிடம் இருக்கிறது. காதில் அழுக்கை நீக்குவதுதான் சுகாதாரம் என்று நினைப்பதும், காது குடைவதால் சுகமாக இருப்பதும்தான் இதற்குக் காரணங்கள். இரண்டுமே ஆபத்தான பழக்கங்கள்.

    ஏதாவது கூர்மையான பொருளை வைத்துக் காதைக் குடைவதால், காதிலிருந்து அழுக்கு வெளியேறுவதற்கு பதிலாக அதிகமாக உள்ளேதான் செல்கிறது. அப்போது செவிப்பறை பாதிக்கப்படும். தவறுதலாகச் செவிப்பறையில் அந்தப் பொருள்பட்டு கிழித்துவிட்டால், காதுவலி, காதில் புண், காது கேட்காமல் போவது, காதினுள் வீக்கம் ஏற்பட்டு வாயை அசைக்க முடியாமல் போகும் ஆபத்துகளும் ஏற்பட வாய்ப்புகளிருக்கின்றன.

    அதோடு புண்களால் தொற்றுகள் ஏற்படவும் இது வழிவகுக்கும். மேலும், இயற்கையாக அழுக்கை வெளியேற்றும் திறனைக் காது இழந்துவிடும். அப்போது மீண்டும் மீண்டும் அழுக்கு சேருவதைத் தடுக்க முடியாது.

    காதில் உள்ள மெழுகு போன்ற படலம் நம் காதுகளை தூசு மற்றும் மாசுக்களில் இருந்து பாதுகாக்கவே உருவாகிறது. அதனால் காதில் உள்ள தூசி மற்றும் அழுக்கை எடுக்கவோ, காட்டன் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யவோ கூடாது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.



    காதில் உள்ள அழுக்கை எடுப்பதால் ஏற்படும் பாதிப்பு?

    காதில் உள்ள அழுக்கை எடுக்க காது குழாய் வழியாக பட்ஸை விடும் போது, நாம் கொடுக்கப்படும் அழுத்தம், காதில் நோய் தொற்றுக்களை ஏற்படுத்துவதுடன் கேட்கும் திறனையும் பாதிக்கிறது. எனவே காதில் உள்ள மெழுகு படலம் அதிக அளவு உருவாகி காதின் மேற்புறத்தில் வரும் போது மட்டுமே காதை சுத்தம் செய்ய வேண்டும்.

    காதில் பட்ஸ் கொண்டு சுத்தம் செய்யக் கூடாது ஏன்?

    காதில் பட்ஸ் பயன்படுத்தும் போது அது காதினுள் சிக்கி கொள்ளும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது. அதோடு பட்ஸில் உள்ள காட்டன், ஒரு பிளாஸ்டிக் குச்சியின் இரு முனையிலும் வைக்கப்பட்டுள்ளதால் அது காதினுள் செல்வதற்கும் கூட அதிக வாய்ப்புள்ளது. மேலும் பருத்தியாலான பட்ஸின் பஞ்சுகள் காதுக்குள் அலர்ஜியையும் ஏற்படுத்தும். இதனால்தான் பட்ஸ் வைத்து காது குடைவதை முற்றிலும் தவிர்க்கச் சொல்கிறோம். காதைச் சுத்தம் செய்யவே தேவையில்லை என்பது ஒருபுறமிருக்க, பட்ஸால் சுத்தம் செய்வது கூடவே கூடாது.

    எனவே இந்த பட்ஸை கொண்டு காதில் உள்ள அழுக்கை சுத்தம் செய்வது என்பது மிகவும் ஆபத்தானது என்று மருத்துவ நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
    எண்ணெய்ப் பசை இல்லாத கூந்தல் பகுதியில் மட்டும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் போதும். ஹேர் கண்டிஷனிங்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்று பார்க்கலாம்.
    கண்டிஷனர் என்பது, நம் கூந்தலை எண்ணெய்த்தன்மையுடன் வைத்து வறட்சியிலிருந்து காப்பதற்கே. இயற்கையாகவே நம் ஸ்கால்ப், எண்ணெய்ப் பசையைச் சுரந்துகொண்டிருக்கும். அதனால், ஸ்கால்ப்பில் எப்போதும் எண்ணெய்த்தன்மை இருக்கும். எனவே, எண்ணெய்ப் பசை இல்லாத கூந்தல் பகுதியில் மட்டும் கண்டிஷனரைப் பயன்படுத்தினால் போதும்.

    ஹேர்கலரிங், டையிங், ப்ளீச் போன்ற கெமிக்கல் சிகிச்சைகள் எடுத்துகொண்டவர்கள், இரண்டு அடுக்குகளுக்குப் பயன்படுத்தப்படும் கண்டிஷனர்தான் பயன்படுத்த வேண்டும். அதுதான் அவர்களின் கூந்தலைப் பாதுகாக்கும். இதுபோன்ற சிகிச்சைகள் எடுத்துகொள்ளாதவர்கள், நார்மல் கண்டிஷனரையே உபயோகிக்கலாம்.

    ஷாம்பு பயன்படுத்தி தலையை இரண்டு முறை அலசிய பிறகு, கண்டிஷனர் பயன்படுத்த வேண்டும். ஒரு டீஸ்பூன் கண்டிஷனருடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து, மேலிருந்து கீழ்நோக்கி கண்டிஷனரை அப்ளை செய்து, 3 நிமிடத்துக்கு அப்படியே விட்டுவிடவும். அதன்பின், சுத்தமான நீரால் கூந்தலை அலசினால், வறட்சி நீங்கி பளபளக்கும்.

    கண்டிஷனர் க்ரீம், ஜெல், ஃபோம் எனப் பல வகை தன்மையில் உள்ளது. டிரை ஹேர் உடையவர்கள், க்ரீம் போன்ற கண்டிஷனர்களை தேர்வுசெய்து பயன்படுத்தவும். கர்லி ஹேர் உடையவர்கள், ஜெல் கண்டிஷனரை தேர்வுசெய்யலாம். ஸ்டெர்யிட் ஹேர் உடையவர்களுக்கு, க்ரீம் பேஸ்ட் அல்லது ஃபோம் பேஸ்ட் கண்டிஷனர்கள் பெஸ்ட் சாய்ஸ்.



    அதிக எண்ணெய்ப் பசை கூந்தல் உடையவர்கள், பொடுகுப் பிரச்னைகள் உடையவர்கள், சீகைக்காய் பயன்படுத்துபவர்கள், கண்டிஷனர் பயன்படுத்துவதைத் தவிர்க்கவும்.

    கண்டிஷனர் வாங்கும்போது, உங்களின் கூந்தலின் தன்மையை மனதில்கொண்டு டிபார்ட்மென்ட் ஸ்டோர்களிலோ, காஸ்மெடிக் கடைகளிலோ வாங்குவது நல்லது.

    அவகேடா பழத்தின் சதைப் பகுதியை, ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு, கூந்தலில் மட்டும் தேய்த்து, 5 நிமிடம் கழித்து கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.

    பூந்திக்கொட்டையைச் சுத்தமான தண்ணீரில் ஊறவைக்கவும். 2 மணி நேரத்துக்குப் பிறகு, அந்தத் தண்ணீரை வடிகட்டிக்கொள்ளவும். ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு, இந்தத் தண்ணீரை பயன்படுத்தி ஒருமுறை கூந்தலை அலசவும். இது, இயற்கையான கண்டிஷனராக உங்கள் கூந்தலை காக்கும்.

    வினிகரை ஒரு டீஸ்பூன் எடுத்துக்கொண்டு, கால் கப் தண்ணீடில் கலக்கவும். இதை, ஷாம்பு பயன்பாட்டுக்குப் பிறகு பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.
    சிலருக்கு அதிக காரமான உணவுகளை சாப்பிட மிகவும் பிடிக்கும். இன்று காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு செய்வது எப்படி என்று கீழே பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பச்சை மிளகாய் - 15
    குடை மிளகாய் - 1
    சின்ன வெங்காயம் - 15
    தக்காளி - 1
    உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
    புளி - சிறிய உருண்டை
    வெந்தயம் - 1 ஸ்பூன்
    சீரகம் - 1 ஸ்பூன்
    எண்ணெய் - தேவையான அளவு
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :


    பச்சை மிளகாய் மற்றும் குடை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    புளியை தண்ணீர் ஊற்றி கரைத்து கொள்ளவும்.

    வெங்காயம் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுந்தம் பருப்பு, வெந்தயம், சீரகம் போட்டு தாளித்த பின் வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    வெங்காயம் நன்றாக வதங்கியதும் பச்சை மிளகாய் மற்றும் குட மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும்.

    அடுத்து அதில் தக்காளியை சேர்த்து வதக்கி தேவையான அளவு உப்பை போடவும்.

    பிறகு கரைத்து வைத்துள்ள புளிக்கரைசலை ஊற்றி சிறிது நேரம் கொதிக்க விடவும்.

    மிளகாய் நன்றாக வெந்து எண்ணெய் பிரிந்து வரும் போது இறக்கி பரிமாறவும்.

    காரசாரமான பச்சை மிளகாய் குழம்பு தயார்.

    * இதை அனைத்து விதமான சாதத்தோடும் பரிமாற சுவையாக இருக்கும்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம்.
    இந்தியாவில் குழந்தைகள் இறப்பு விகிதம் (Infant Mortality Rate) 1,000 குழந்தைகளில் 34 பேர்’ என்கிறது ஒரு புள்ளிவிவரம். இதில் 10 சதவிகிதக் குழந்தைகள் `பிறவி இதயக் குறைபாட்டால்' பாதிக்கப்படுவதாகச் சொல்கிறது ஓர் ஆய்வு.

    பிறக்கும் குழந்தைக்கு சுவாசக் கோளாறு இருப்பதை பிரசவம் செய்யும் மருத்துவரோ அல்லது உடனிருக்கும் செவிலியரோ எளிதாகக் கண்டுபிடித்துவிடுவார்கள். ரத்த ஓட்டம் காரணமாகப் பிறந்த குழந்தை சிவப்பாகத்தான் இருக்கும். அப்படி இல்லையென்றால், ஏதோ கோளாறு இருக்கலாம்.

    இந்தக் குறைபாட்டில் இரண்டு வகைகள் இருக்கின்றன. ஒன்று, இதயத்தில் ஓட்டை இருப்பது. இதைக் கண்டுபிடித்துவிட்டால் சிகிச்சைகள் மூலம் குணப்படுத்திவிடலாம். இதனால் குழந்தையின் உயிருக்கு ஆபத்தில்லை. இரண்டாவது, `சினாப்டிக் கான்ஜெனிட்டல் ஹார்ட் டிசீஸ்’ (Synaptic Congenital Heart Disease). இந்தக் குறைபாட்டுடன் பிறக்கும் குழந்தைகள் நீல நிறத்தில் மாறிவிடுவார்கள். இந்தக் குழந்தைகளின் உடலில் ஆக்சிஜன் அளவு மிகக் குறைவாக இருக்கும். இதனால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் உயிர் பிழைப்பது கடினம். தொடர் சிகிச்சைகள் அளித்தாலும், ஆயுளை நீட்டிக்கலாமே தவிர, காப்பாற்றுவது கடினம்.

    பிறவி இதயக் குறைபாடு ஏன் ஏற்படுகிறது?

    * மரபணுக் குறைபாடு
    * பெற்றோர்களுக்குச் சர்க்கரைநோய் இருப்பது
    * கர்ப்பமாக இருக்கும்போது அதிக மாத்திரைகள் சாப்பிடுவது
    * கர்ப்பமாக இருக்கும் பெண்களுக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு இருப்பது
    * கர்ப்ப காலத்தில் வைரஸ் காய்ச்சலால் பாதிப்பு
    * ருபெல்லா தடுப்பூசி (Rubella Vaccine) போடாமல் விடுவது.


    பிறவி இதயக் குறைபாடு வராமல் பாதுகாப்பது எப்படி?

    * சர்க்கரைநோயால் பாதிக்கப்பட்ட கர்ப்பிணிகளுக்கு முறையாகச் சிகிச்சையளிக்க வேண்டும்.
    * ருபெல்லா தடுப்பூசி குறித்துப் பெண்களுக்கு விழிப்புஉணர்வை ஏற்படுத்தலாம்.
    * கருவிலேயே குழந்தையின் இதயக் குறைபாட்டைக் கண்டறிந்து (Fetal Heart Screening) சிகிச்சையளிக்கலாம்.
    * பெற்றோர்களுக்கு மரபணுக் குறைபாடு இருக்கிறதா என்பதை சோதனை செய்து பார்க்கலாம்.

    உலக அளவில், பிறக்கும் 1,000 குழந்தைகளில் 9 குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. அந்த 9 குழந்தைகளில், மூன்று குழந்தைகள் தீவிர பிறவி இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன. இது பொதுவான புள்ளிவிவரம். தமிழ்நாட்டில் இதற்கான கணக்கெடுப்புகள் இதுவரை நடத்தப்படவில்லை. முறையாகக் கணக்கெடுத்தால்தான் எத்தனை குழந்தைகள் இதயக் குறைபாட்டுடன் பிறக்கின்றன என்று உறுதியாகச் சொல்ல முடியும்.

    தீவிர பிறவி இதயக் குறைபாடு இருக்கும் குழந்தைகளைக் குணப்படுத்த சிகிச்சைகள் இருக்கின்றன. ஆனால், அதற்கு ஆகும் செலவு மிக அதிகம். இத்தனை குழந்தைகளுக்கும் அறுவைசிகிச்சை செய்து, சிகிச்சையளிக்க அரசு மருத்துவமனைகளில் வசதிகள் இருக்கிறதா என்றால், பதில் கேள்விக்குறிதான். தனியார் மருத்துவமனைகளிலும் இந்த வசதிகள் இல்லை. தமிழ்நாட்டில் குழந்தைகள் நல மருத்துவமனை (Institute of Child Health and Hospital) சென்னையில் மட்டுமே இருக்கிறது. இதுபோன்ற மருத்துவமனைகளை தமிழ்நாடு முழுவதும் நிறுவி, இதற்கான சிகிச்சைகளைச் செய்தால் குழந்தைகள் இறப்பைத் தடுத்துவிடலாம். 
    ×