என் மலர்tooltip icon

    ஆரோக்கியம் தலைப்புச்செய்திகள்

    தற்போது, `ஸ்பா ட்ரீட்மென்ட்' பல்வேறு பார்லர்களில் பரவலாகச் செய்யப்படுகிறது. ‘ஹேர் ஸ்பாவை வீட்டில் செய்யலாமா? என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
    தற்போது, `ஸ்பா ட்ரீட்மென்ட்' பல்வேறு பார்லர்களில் பரவலாகச் செய்யப்படுகிறது. இந்த ஸ்பாவில், இரண்டு வகை இருக்கிறது.

    1. பாடி ஸ்பா

    2. ஹேர் ஸ்பா

    பாடி ஸ்பாவைவிட, ஹேர் ஸ்பாவையே பலரும் விரும்புகிறார்கள். ஹேர் ஸ்பா என்பது, அவரவரின் ஸ்கால்ப் அல்லது முடிக்கு ஏற்ப செய்யப்படுவது. முதலில் எந்த இடத்தில் பிரச்சனை உள்ளது என்பதைத் தெரிந்துகொள்ள வேண்டும். பின்னரே, ஸ்பா ட்ரீட்மென்டை ஆரம்பிக்க வேண்டும்.

    முடி வளரவே இல்லை எனச் சிலர் சொல்வார்கள். எதனால் முடி வளரவில்லை என்பதைப் பரிசோதித்துப் பார்க்க வேண்டும். ஒருவேளை, பொடுகினால் பிரச்னை ஏற்படலாம். அல்லது ஸ்கால்பில் வேறு ஏதாவது பிரச்னைகள் இருக்கலாம். இன்னும் சிலருக்கு, முடி டிரையாக இருக்கும். ஷைனிங் இல்லாமல் இருக்கலாம். அல்லது முடி பிளவு இருக்கலாம். பிரச்னையைத் தெரிந்துகொண்டு அதற்கேற்ப செய்ய வேண்டும்.

    ஹேர் வாஷ் செய்ய, அவரவர் முடியின் தன்மைக்கு ஏற்ற ஷாம்பு வகைகளைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

    1. பியூரிஃபையிங் ஷாம்பு (Purifying Shampoo)

    2. டீடாக்ஸ் ஷாம்பு (detox shampoo)

    பியூரிஃபையிங் ஷாம்பு என்பது, அதிகம் பொடுகு இருப்பவர்களுக்குப் பயன்படுத்துவது. டீடாக்ஸ் ஷாம்பு என்பது, மற்ற அனைத்து முடிப் பிரச்சனைக்குமானது.

    ஷாம்புவைப் பயன்படுத்தி முடியை அலசியதும், அவர்களுக்குத் தேவையான கிரீம் மற்றும் கான்சென்ட்ரேட் (concentrate) இரண்டையும் கலந்து மசாஜ் செய்ய வேண்டும். கிரீம் தேர்ந்தெடுப்பதிலும் கவனம் அவசியம்.



    நரேஷிங் கிரீம் பாத் (nourishing cream bath), ஹைடிரேட்டிங் கிரீம் பாத்  hydrating cream bath) போன்ற பல கிரீம் பாத்கள் இருக்கின்றன. அவரவர் முடியின் தன்மைக்கு ஏற்ப தேர்ந்தெடுக்க வேண்டும்.

    முடி கடினமா இருக்கிறதா, அதிகமாகச் சிதைவடைந்து இருக்கிறதா, அல்லது ஹேர் டிரையாக இருக்கிறதா, இதையெல்லாம் கவனித்து, கிரீமைத் தேர்ந்தெடுக்க வேண்டும். பின்னர் ஸ்கெல்ப்பில், பொடுகு இருக்கிறதா, ஸ்கெல்ப் காய்ந்து அரிப்பு ஏற்படுதா, அல்லது நீர்ச்சத்து குறைவாக இருக்கிறதா என்பதைப் பார்க்க வேண்டும்.

    ஸ்கேனரைப் பயன்படுத்தியோ அல்லது மேக்னிஃபையிங் மிரர் ( magnifying mirror) பயன்படுத்தியோ ஸ்கால்ப் பிரச்சனைகளைத் தெரிந்துகொள்ளலாம். இவை அனைத்தையும் பரிசோதித்துவிட்டு, பிரச்னைகளுக்கு ஏற்ப ட்ரீட்மென்ட் செய்ய வேண்டும். இது புரொபஷனல் ட்ரீட்மென்ட். இதை வீட்டில் செய்யவே கூடாது. பார்லரில் மட்டுமே செய்துகொள்ள வேண்டும்.

    கடைகளில் ஸ்பா ஷாம்பு, கண்டிஷனர் கிடைக்கும். அவற்றை வீட்டில் பயன்படுத்தலாம். ஆனால், புரொபஷனல் ட்ரீட்மென்ட் செய்தால் தீர்வு கிடைக்கும் எனில், நிச்சயம் புரொபஷனலையே அணுக வேண்டும்.

    ஹேர் ஸ்பா எடுத்த பின்னர், அவர்கள் பரிந்துரைக்கும் ஷாம்பு மற்றும் கண்டிஷனர்களைப் பயன்படுத்தினால், தொடர்ந்து பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம். அவரவர் பிரச்னைக்கு ஏற்ப, இரண்டு வாரத்துக்கு ஒருமுறையோ, நான்கு வாரத்துக்கு ஒருமுறையோ, ஸ்பா ட்ரீட்மென்ட் செய்துகொள்ள வேண்டும். அன்றாட பராமரிப்புக்கு 15 நாள்களுக்கு ஒருமுறை ஸ்பா ட்ரீட்மென்ட் மேற்கொள்ளலாம்.
    அதிகளவு சத்துக்கள் நிறைந்த பச்சைப்பயறை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்வது நல்லது. இன்று பச்சைப்பயறில் சுண்டல் செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருள்கள் :

    பச்சைப் பயறு - கால் கிலோ
    பச்சை மிளகாய் - 2
    இஞ்சி - சிறிய துண்டு
    தேங்காய்த் துருவல் - சிறிதளவு
    உப்பு - தேவையான அளவு
    எலுமிச்சைச் சாறு (விரும்பினால்)
     
    தாளிக்க:


    எண்ணெய், கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை.



    செய்முறை:

    பச்சைப் பயறை வெறும் கடாயில் போட்டு சிறிது நேரம் வறுத்த பின்னர் தண்ணீரில் ஊறவைக்கவும்.

    நீரை வடித்து, புதிதாக அரை கப் தண்ணீர் சேர்த்து குக்கரில் வேகவைத்து மீண்டும் நீரை ஒட்ட வடிக்கவும்.

    தேங்காய், பச்சை மிளகாய், இஞ்சுத் துண்டு, உப்பை தண்ணீர் சேர்க்காமல் மிக்ஸியில் கெட்டியாக அரைக்கவும்.

    அடுப்பில் வாணலியில் 2 டேபிள்ஸ்பூன் எண்ணெயில் கடுகு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பு, பெருங்காயம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.

    வேகவைத்த பயறு, அரைத்த விழுது சேர்த்து நன்றாக வதக்கவும்.

    விரும்பினால் இறக்கியதும் சில துளிகள் மட்டும் எலுமிச்சைச் சாறு பிழியலாம். இது நாம் தவறுதலாக அதிக உப்போ, காரமோ சேர்த்திருந்தால் சரிசெய்யும். மேலும் மேலும் சாப்பிடும் ஆசையைத் தூண்டும்.

    சூப்பரான சத்தான பச்சைப் பயறு சுண்டல் ரெடி. 

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளை எவ்வாறு கண்டறிவது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ளலாம்.
    தினாறு செல்வங்களில் மக்கட்பேறு என்பது பெரும் செல்வம். அத்தகைய மக்கட்பேறு எனும் குழந்தை செல்வம் கிடைக்கப்பெறாதவர்களிடம் கேட்டால் தான் அதன் அருமை தெரியும் என்று பெரியவர்கள் கூறுவார்கள். இத்தகைய சிறப்பு பெற்ற குழந்தை பாக்கியம் கிடைத்தும், அவ்வாறு கிடைத்த குழந்தை ஏதோ ஒருவித பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்தால் அது வாழ்வில் பெரும் சோகத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு பிறவிக்குறைபாடுகளுடன் பிறந்த குழந்தைகளை எவ்வாறு கண்டறிவது? அதற்குரிய சிகிச்சை முறைகள் பற்றி காண்போம். இதுகுறித்து திண்டுக்கல் அரசு மருத்துவமனை குழந்தைகள் நலப்பிரிவு டாக்டர் விக்னேஷ் கூறியதாவது:-

    குழந்தையின் வளர்ச்சி

    குழந்தை பிறந்தநாளில் இருந்து 2 வயதுக்குள் அதன் வளர்ச்சி சரியாக இருக்க வேண்டும். அதாவது குழந்தை பிறந்தநாளில் இருந்து 3 மாதத்தில் தாயின் முகம் பார்த்து சிரிக்கவும், 5 முதல் 6 மாதத்தில் அதன் தலை நிற்கவும் வேண்டும். 7 மாதத்துக்குள் குழந்தை குப்புற விழ வேண்டும். 9-வது மாதத்தில் எதையாவது பிடித்து உட்கார வேண்டும். 1 வயதில் தானாக எழுந்து நிற்க வேண்டும். 1½ வயதில் நடக்க வேண்டும். 2 வயதில் படிக்கட்டுகளில் ஏறி, இறங்க வேண்டும்.

    அதேபோல் குழந்தை பிறந்த 6 மாதத்தில் பேச முயற்சிக்க வேண்டும். அதற்கான அடையாளமாக அது சத்தம் எழுப்ப ஆரம்பிக்கும். 9-வது மாதத்தில் அம்மா, தாத்தா, மாமா என சொல்ல முயற்சிக்கும். 2 வருடத்தில் ஒரு சொல் வார்த்தைகளை பேசும். 3 வருடத்தில் இரண்டு சொல் வார்த்தைகளை பேச வேண்டும்.

    இதுதான் குழந்தையின் சராசரி வளர்ச்சி ஆகும். மேற்குறிப்பிட்ட கால அளவுகளில் ஒன்றிரண்டு மாதங்கள் வித்தியாசப்படலாம். ஆனால் அதன் வளர்ச்சியில் இவை அனைத்தும் நடந்திருக்க வேண்டும். இதுவே குழந்தை ஆரோக்கியமாக உள்ளது என்பதற்கான அடையாளம் ஆகும்.

    இருதய வளர்ச்சி

    பொதுவாக குழந்தை வயிற்றில் உருவாகும் போதே, அதன் பிறவிக்குறைபாடுகளும் உருவாகி விடுகின்றன என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இருதயம் 4 பகுதிகளாக வளர்ந்து அதன்பிறகு ஒன்றாக சேரும். அதன்பிறகுதான் முழு இருதயம் தோன்றும். அவ்வாறு தோன்றும் இருதயத்தில், அது உருவாகும் போதே அதில் ஓட்டை விழ வாய்ப்பு உண்டு.

    அவ்வாறு தானாக விழும் ஓட்டையில் 2 வகை உள்ளது. முதல் வகை ஓட்டை குழந்தை பிறந்த 24 மணி நேரம் முதல் 72 மணி நேரத்துக்குள் தானாகவே அடைத்துவிடும். 2-வது வகை ஓட்டை என்பது, குறை பிரசவத்தில் பிறந்த குழந்தைகளுக்கு தோன்றுவது. இது எவ்வளவு நாள் குறைவாக பிறந்ததோ அவ்வளவு நாட்களோ அல்லது அதற்கு மேலும் சில நாட்களோ இருதயம் வளர்வதற்கு எடுத்துக்கொள்ளும்.

    பிறவிக்குறைபாடு

    பிறவிக்குறைபாட்டால், இருதயத்தில் ஓட்டை விழுதல், உதடுபிளவு ஏற்படுதல், வாய்க்குள் மூக்கின் அடியில் ஓட்டை தோன்றுதல், (அவ்வாறு மூக்கிற்குள் ஓட்டை விழுந்த குழந்தை பால் குடித்தால், பால் மூக்கின் வழியாக வெளியே வந்து விடும்.) காது கேளாமை, கண்புரை, இடுப்பு மூட்டு விலகுதல், கால் நேராக இல்லாமல் வளைந்து இருத்தல், முதுகு தண்டில் ஓட்டை விழுதல் அல்லது முதுகு தண்டில் பிளவு ஏற்படுதல், கட்டி தோன்றுதல் போன்றவை பிறவிக்குறைபாடுகள் ஆகும்.

    இதில் நரம்பு சம்பந்தமான பிரச்சினைகளும் உண்டு. மேற்கூறிய பல பிரச்சினைகளில் பெரும்பாலானவை சரி செய்யக்கூடியது.

    சிகிச்சைகள்


    கண் சம்பந்தமான பிரச்சினைகளை ஆரம்பத்திலேயே கண்டறிந்து விட்டால் 100 சதவீதம் அதனை சரி செய்து பார்வையை பெறலாம். காது கேளாமை பிரச்சினையை 3 மாதத்திலேயே கண்டறிய முடியும். அவ்வாறு கண்டறிந்தால் அதனையும் சரி செய்யலாம். இடுப்பு சம்பந்தப்பட்ட பிரச்சினையை ஒரு வருடம் தொடர்ந்து கட்டு போடுவதன் மூலம் சரி செய்யலாம்.



    அதேபோல் முதுகுதண்டு பிரச்சினை மற்றும் முதுகுதண்டில் கட்டி போன்றவற்றை அறுவை சிகிச்சை செய்து சரி செய்யலாம். இதுபோன்ற முதுகுதண்டுவட பிரச்சினை உள்ள குழந்தைகளுக்கு சிறுநீரை அடக்கும் சக்தி இருக்காது. சொட்டு, சொட்டாக சிறுநீர் விழுந்து கொண்டே இருக்கும். இதுதவிர கால் செயல் இழக்கவும் வாய்ப்பு உண்டு. குழந்தை பிறந்த முதல் 3 மாதத்துக்குள் இந்த பிரச்சினையை கண்டறிந்து விட்டால் முற்றிலும் இதனை சரி செய்யலாம்.

    பேச்சு, மூச்சின்றி...

    சில குழந்தைகள் பிறக்கும்போது அழாமல் இருக்கும். அதற்கு பேச்சு, மூச்சு இருக்காது. அதுபோன்று இருந்தால் அந்த குழந்தைக்கு ஒரு வாரத்தில் மஞ்சள் காமாலை நோய் தாக்க வாய்ப்புண்டு. சில குழந்தைகளுக்கு பிறக்கும் போதே வலிப்பு வந்து விடும். எடை குறைவாக பிறக்கும் குழந்தைகளுக்கு இதுபோன்ற பிரச்சினைகள் வர வாய்ப்புண்டு.

    அதனால் குழந்தை எடை குறை யாமல் இருக்க வேண்டும். பிறக்கும் போதே குழந்தை 2½ கிலோவுக்கு மேல் 3 கிலோ 900 கிராமுக்கும் குறைவாக இருக்க வேண்டும். 4 கிலோவும் அதற்கு மேலும் குழந்தையின் எடை இருப்பது நல்லதல்ல.

    அதிக எடை உள்ள குழந்தை

    அவ்வாறு 4 கிலோவுக்கும் அதிக எடை உள்ள குழந்தைகளை எல்.ஜி.ஏ. குழந்தை என்று மருத்துவம் கூறுகிறது. தாய்க்கு கர்ப்ப காலத்தில் சர்க்கரை நோய் இருந்தாலும் இதுபோன்ற உடல் பருமனுள்ள குழந்தை பிறக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு அதிக எடை கொண்ட குழந்தைகளுக்கு இருதய கோளாறு, முதுகுதண்டில் பிரச்சினைகள் இருக்க வாய்ப்புண்டு.

    அதேபோல் கர்ப்ப காலத்தில் தாய்க்கு தைராய்டு பிரச்சினை இருந்தால் பிறக்கும் குழந்தைக்கும் தைராய்டு கோளாறு வர வாய்ப்புண்டு. அதனால் இதுபோன்ற தைராய்டு பிரச்சினை குழந்தைக்கு உள்ளதா? என கண்டறிந்து அதனை சரி செய்ய வேண்டும்.

    பெற்றோர்களுக்கு...

    பொதுவாக பிறவிக்குறைபாடுகளை கண்டறிய பெற்றோர்களுக்கு அதற்குரிய பக்குவம் அவசியம் வேண்டும். பெற்றோர்களில் பலர் குழந்தையின் வளர்ச்சிநிலை குறைகளை கண்டறியும் பக்குவம் இன்றி உள்ளனர். குழந்தை பிறந்த 3 மாதங்களில் தாயின் முகம் பார்த்து சிரிக்கவில்லையென்றால் அந்த குழந்தைக்கு ஏதோ பிரச்சினை உள்ளது என்று அர்த்தம்.

    அதனால் தாமதிக்காமல் மருத்துவரை அணுக வேண்டும். மேலும் மேற்கூறிய 2 வருடத்துக்குள் குழந்தையின் வளர்ச்சி நிலையில் ஏதேனும் மாறுபாடு தோன்றினாலும் உடனே டாக்டரை அணுகி சிகிச்சை எடுக்க வேண்டும்.

    எதற்கெடுத்தாலும் சிலர் எங்களது பரம்பரையில் பிறந்த குழந்தைகள், தாமதமாகத்தான் குப்புற விழும், எழுந்து நிற்கும், நடக்கும், பேசும் என்று பெருமையாக கூறுவார்கள். அது முற்றிலும் தவறு. குழந்தையின் வளர்ச்சி நிலையில் அந்தந்த மாதத்தில் அது சிறப்பான வளர்ச்சியை பெற வேண்டும்.

    இல்லையெனில் வளர்ச்சி நிலையில் ஏதேனும் பிறவிக்குறைபாடு கூட இருக்கலாம். அதனால் டாக்டரிடம் சென்று குழந்தையை பரிசோதனைக்கு உட்படுத்துவது நல்லது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் இத்தகைய கட்டாயக்கல்வி முறை எந்த வகையிலும் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவோ அல்லது சாதனையாளர்களாகவோ ஆக்காது என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.
    இன்றைய பெற்றோர் அனைவருக்கும் தங்கள் குழந்தைகளை எப்படியாவது பெரிய ஆளாக்கிவிட வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. குழந்தை பிறந்ததும், கலெக்டர், டாக்டர், என்ஜினீயர், ஆசிரியர், வக்கீல் என்று தாமே குழந்தை என்னவாக வேண்டும் என்பதை தீர்மானிக்கத் தொடங்கிவிடுகிறார்கள்.

    இன்னும் சிலர், ‘நான் டாக்டராக ஆசைப்பட்டு முடியாமல் போய்விட்டது. எனவே என் மகனை எப்படியாவது டாக்டர் ஆக்கியே தீருவேன்’ என்று சபதம் ஏற்கிறார்கள். உண்மையிலேயே அந்த குழந்தைக்குள் ஒரு நல்லாசிரியர் உறங்கிக்கொண்டு இருக்கலாம். அதற்கு முரணாக நீங்கள் அவர்களை டாக்டராக்க நினைப்பது தவறு. அதாவது, பிள்ளைகள் என்னவாக வேண்டும் என்பதை பெற்றோர் தீர்மானம் செய்வது சரியான போக்கு அல்ல. இது மேம்பட்ட சமூகம் மலர்வதற்கு தடையாகிப்போகும்.

    குழந்தையின் எதிர்காலத்தை சிறப்பானதாக்க விரும்பி தங்களின் ஆசையை திணிக்கும் பெற்றோருக்கு அதிக ஆர்வம் இருக்கிறதே தவிர தங்களின் விருப்பத்தை குழந்தைகள் உள்வாங்குகிறார்களா? அதில் அவர்களுக்கும் விருப்பம் இருக்கிறதா? என்பதையெல்லாம் சிந்திக்கும் எண்ணம் இல்லை. குழந்தை என்னவாகப் போகிறது என்பதை அந்த குழந்தையையே தீர்மானிக்க விட வேண்டும்.

    கண்டிப்பு கலந்த வளர்ப்பு முறை இன்றைய குழந்தைக்கு அவசியம்தான். ஆனால் எந்த அளவுக்கு குழந்தைக்கு சுதந்திரம் கொடுக்கிறோம் என்பதையும் அளவிட வேண்டும். ஒரு குழந்தை வெற்றிப்பாதையில் பயணிக்க அகச்சுதந்திரம் அவசியம் என்பதை பெற்றோர் மறந்துவிடக்கூடாது.

    பிள்ளைக்கு வரலாற்றுப் பாடம் பிடிக்கிறது. கணக்குப் பாடத்தில் ஆர்வம் இல்லை என்றால், பெற்றோர் அந்த பிள்ளையை தொழில்நுட்ப நிபுணராக ஆக்க விரும்புவது அர்த்தமற்றது. இன்னும் சில பெற்றோர், தங்கள் பணிபுரியும் துறையிலேயே குழந்தையை உருவாக்க வேண்டும் என்று ஆசைப்பட்டு, அந்த பாதையில் குழந்தையை பயணிக்கவைப்பதும் அதிகமாகி வருகிறது. இதுவும் மடமையே.

    குழந்தைகள் மீது பெற்றோர் திணிக்கும் இத்தகைய கட்டாயக்கல்வி முறை எந்த வகையிலும் குழந்தைகளை சிந்தனையாளர்களாகவோ அல்லது சாதனையாளர்களாகவோ ஆக்காது என்பது வரலாறு உணர்த்தும் பாடம்.

    நம் முகக்கண்ணாடியை தன் பிள்ளைகள் முகத்தில் மாட்டி விட்டால் பார்வை சரியாகிவிடுமா? அது மேலும் சிக்கல்களை ஏற்படுத்தி கண் பார்வையை சின்னாபின்னமாக்காதா? இதை சிந்திக்க வேண்டாமா?

    அறிஞர்களில் ஜிப்ரான் சொல்வது போல, ‘நீ குழந்தைகளைப் போலவே இருக்க பாடுபடு. ஆனால் உன்னைப் போல அவர் களை ஆக்க முயலாதே’ என்பார்.



    பள்ளிப் பருவ மாணவனிடத்தில் இலக்கை நிர்ணயிக்கும் திறனோ, அதனைப்பற்றிய திட்டமிடலுக்கான பயிற்சியோ இல்லாதபோது, எப்படி முழு சுதந்திரத்தையும் கொடுப்பது? என பெற்றோர் நினைக்கலாம். அப்படி இருக்கும் சூழலில் பெற்றோர்கள் ஒரு சில வழிமுறைகளைக் கையாளலாம். தங்கள் பிள்ளைகள் எதைக்கற்றுக்கொள்ள வேண்டும் என்று பெற்றோர்கள் விரும்புகிறார்களோ அதையும் அதனால் அவனுக்கு ஏற்படும் எதிர்கால நன்மை, தீமைகளையும் விளக்கிக் கூறலாம்.

    படிக்க முடியவில்லையே என்று கவலையோடு தன் வாழ்க்கையில் போராடியவர் மலாலா. ஆனால் அவளது தந்தை எதைப்பற்றியும் கவலைப்பட வேண்டாம் என்று சொல்லித்தேற்றினார். ‘உன் சுதந்திரத்தை நான் பாதுகாப்பேன். உன் கனவை நிறைவேற்ற முயற்சி செய்’ என்றார் மலாலாவின் தந்தை. இலக்கை திட்டமிட்டு தன் லட்சியப்பாதையை வகுத்தாள்.

    கல்வி என்பது எனக்கு மட்டுமல்ல பெண்ணினத்துக்கே அவசியம் என்று தன் வாழ்வால் உலகறியச் செய்தாள். சுதந்திரம் என்றால் என்னவென்று தெரியாதவர்களுக்குத்தான் அடிமையின் வாழ்க்கை பிடித்துப்போகும் அல்லது பழகிப்போகும் என்று கோஷமிட்டாள். அவளது வீரதீரச் செயல்பாட்டுச் சாதனைக்கும் எழுச்சிமிகு சிந்தனைக்கும் 17-வது வயதிலே அவளுக்கு கிடைத்த பரிசுதான் அமைதிக்கான நோபல் பரிசு. இதில் நாம் பார்க்க வேண்டியது அவளது சுதந்திரம் காக்கப்பட்டது. அவள் ஒரு சாதனையாளர் பட்டியலில் இடம் பெற்றாள்.

    காந்தியடிகளின் கூற்றுப்படி, வாழ்க்கையின் மிகப்பெரிய பாடங்களை அறியாமை நிறைந்தவர்கள் என்று கருதப் பெறும் சிறு குழந்தைகளிடமே கற்றுக் கொள்ள முடியும்.

    இன்றைய பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு அன்பு, பாசம், நேர்மை, உண்மை என்று நல்லதைச் சொல்வது அவசியம்தான். ஆனால் அதோடு குழந்தைகளின் உருவாக்கப்பயிற்சியில் லட்சியத்தை நிர்ணயித்தல், அவற்றுக்காக திட்டமிடல், திட்டமிட்டதை செயல்படுத்துதல் என்பதில் அவர்களின் சுயசுதந்திரம் பறிக்கப்படாமல் பயிற்றுவிக்கப்பட வேண்டும்.

    முக்காலமும் புகழும் பெருந்தலைவரான கர்மவீரர் காமராஜர் தன் சுதந்திரப் பார்வையில் வளர்ந்ததால்தான் முதல்-அமைச்சராக உயர்ந்தார். அகச்சுதந்திரத்தில் வாழ்பவனுக்கு ஏற்றமிக்க எண்ணம்தான் எல்லாமுமாக இருக்கிறது. அவன் எண்ணத்தில் தெளிவுடன் இருப்பதால் அவன் என்னவாக மாற வேண்டும் என்பதில் தெளிவுடன் இருப்பான். சுதந்திரக்காற்றை சுவாசிப்பவனுக்கு அவனது எண்ணம் உயர ஏற உதவும் ஏணியாகும்.

    இன்றைக்கு இருக்கும் சமூக கலாசார நிகழ்வுகள் நம்மை அச்சப்படுத்தினாலும், குழந்தைகள் சுதந்திர காற்றை சுவாசிக்க அனுமதிப்பதும் காலத்தின் தேவை தான். ஆனால், அதை உங்களின் கண்காணிப்பில் மேற்கொள்ளுங்கள். அவர்களின் லட்சியத்தை கேட்டறிந்து, அதை அடைய துணை நில்லுங்கள். குழந்தைகள் நிச்சயம் லட்சியப் பாதையை அடைந்து ஜொலிப்பார்கள்.

    பெ.ஆரோக்கியசாமி, பள்ளி தலைமை ஆசிரியர்
    மன அழுத்தத்திற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் மன அழுத்த பிரச்சினை தலைதூக்குவதற்கு காரணமாகிவிடுகிறது.
    ஆண்களை விட பெண்கள் மன அழுத்த பாதிப்புக்கு அதிகம் ஆளாகிறார்கள். குடும்பத்தை நிர்வகிப்பதில் ஆண்களைவிட பெண்களுக்கு பொறுப்புக்கள் அதிகம். வீட்டு வேலை, குழந்தை வளர்ப்பு, வரவு செலவு, குடும்ப எதிர்காலம் என குடும்ப சுமைகள் அவர்கள் மனதை பாரமாக்கிவிடுகிறது. நாளுக்கு நாள் பொறுப்புகள் அதிகமாவதை உணரும்போது உடல் நலத்தை கவனத்தில் கொள்ளாமல் விட்டுவிடுகிறார்கள்.

    அது நோய் பாதிப்புகளுக்கு வழிவகுத்துவிடும். பெண்கள் உடல் நலனில் சிறிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தினாலும் அது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களையும் பாதிப்புக்குள்ளாக செய்துவிடும். அன்றாட வீட்டு வேலைகளில் தொடங்கி பல விஷயங்களில் பெண்களின் பங்களிப்பு அவசியமானதாக இருக்கிறது. குடும்ப நிர்வாகம் முடங்கி போய்விடும் சூழல் ஏற்படும்போது அது பெண்கள் மனநலத்தையும் பாதிக்கிறது. எளிதில் உணர்ச்சிவசப்படுவதும் மன அழுத்த பிரச்சினை தலைதூக்குவதற்கு காரணமாகிவிடுகிறது.

    மன அழுத்தத்தில் இருந்து விடுபட வழிகள்:

    * மன அழுத்தத்திற்கும், உடலுக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. மனக்கவலை அடையும்போது உடலில் உள்ள தசைகள் இறுக தொடங்கும். சிறிது நேரத்திலேயே உடல் சோர்வு அடைந்து விடும். அதற்கு இடம் கொடுக்காமல் மனதையும், உடலையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

    * மன அழுத்தத்திற்கு ஆளாகும்போது உடலில் ஒருவித பதற்றம் தோன்றக்கூடும். அந்த சமயத்தில் ஐந்து முறை ஆழமாக மூச்சை இழுத்துவிட வேண்டும். அப்படி மூச்சை சீராக இழுத்துக்கொண்டே மனதுக்கு பிடித்தமான வார்த்தைகளை உச்சரித்து வரலாம். அல்லது மனதை சந்தோஷப்படுத்தும் பழைய நினைவுகளை அசைபோடலாம். அது உடலையும், மனதையும் இயல்பு நிலைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.

    * மன அழுத்தம் அதிகமாகும்போது ஆத்திரத்தில் தவறான முடிவுகள் எடுக்கத் தோன்றும். ஆதலால் மனம் நிம்மதி இழந்து தவிக்கும்போது முடிவெடுப்பதை தள்ளிப்போடுங்கள்.

    * மனம் இயல்பு நிலைக்கு திரும்பும் வரை நிதானத்தையும், பொறுமையையும் கடைப்பிடிக்க வேண்டியது அவசியம்.

    * மன அழுத்தம் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமாக வெளிப்படும். சிலருக்கு மனம் படபடக்கும், ஒருசிலருக்கு சீரற்ற தன்மையில் சுவாசம் வெளிப்படும். ஒருசிலருக்கு தலைவலி, தோள்பட்டை வலி ஏற்படக்கூடும். அத்தகைய அறிகுறிகள் தென்படும்போதே மன அழுத்த பாதிப்புக்கு இடம்கொடுக்காமல் அதிலிருந்து மீண்டு வர முயற்சிக்க வேண்டும்.

    * எத்தகைய மன பதற்றத்தையும் போக்கி மனதை சாந்தப்படுத்தும் சக்தி இசைக்கு உண்டு. பிடித்தமான பாடல்களை கேட்கலாம். இனிமையான இசை எகிறும் இதய துடிப்பை இயல்பு நிலைக்கு கொண்டு வர வழிவகுக்கும்.

    * தியானத்திற்கு மன அழுத்தத்தை விரட்டி அடிக்கும் ஆற்றல் உண்டு. மனதை ஒருமுகப்படுத்தும் வண்ணம் இறை வழிபாட்டிலும் கவனம் பதிக்கலாம்.

    * வஜ்ராசனம் போன்ற யோகாசனங்களையும் செய்யலாம். அது மனதையும், உடலையும் ஒரு நிலைப்படுத்தும்.

    * யோகாசனங்களில் கவனம் பதிக்க முடியவில்லை என்றால் நேராக நிமிர்ந்து பின்னர் குனிந்து அமரலாம். அவ்வாறு சிலதடவை செய்யும்போது ரத்த ஓட்டம் சீரடையும். அது மனதையும் இலகுவாக்கும்.

    * மன பாரத்தை இறக்கி வைக்க நடைப்பயிற்சியும் மேற்கொள்ளலாம். கொஞ்ச தூரம் நடைப் பயிற்சி மேற்கொள்ளும்போது கண்கள் கவனத்தை திசைதிருப்பும். பார்க்கும் விஷயங்களில் கவனத்தை பதிய செய்யும்போது மன பாரம் குறையும்.

    * உணவு விஷயத்திலும் கவனம் செலுத்த வேண்டும். மன அழுத்தம் நீடிக்கும் சமயத்தில் காபி பருகுவதை தவிர்க்க வேண்டும். பழச்சாறுகள், தண்ணீர் பருகலாம். நொறுக்கு தீனிகளை தவிர்ப்பதும் நல்லது.

    * போதிய தூக்கம் இல்லாமல் அவதிப்படுவதும் மன அழுத்தம் தோன்ற காரணமாகிவிடும். ஆழ்ந்த தூக்கத்திற்கு மனதை ஆட்படுத்த பழகிக்கொள்ள வேண்டும். 
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று நட்ஸ் பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    மேல் மாவு செய்ய:

    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு - சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய :

    பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 20,
    சர்க்கரை - கால் கப்,
    ஏலக்காய் - 3.



    செய்முறை :

    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.

    ஆறியதும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக பொடித்த கொள்ளவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    நட்ஸ் பூரண கொழுக்கட்டை ரெடி.

    சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் அதே நிற பழங்களை சாப்பிடுவது இதய நோய், புற்றுநோய், ரத்த அழுத்த குறைபாடு, கண் பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும்.
    சிவப்பு நிற காய்கறிகள் மற்றும் அதே நிற பழங்களை சாப்பிடுவது இதயத்திற்கு நல்லது. அதில் லைகோபீன், ஆந்தோ சையானைன், பிளவனாய்டுகள் போன்ற ஆன்டி ஆக்சிடெண்டுகள் நிறைந்திருக்கின்றன. அவை இதய நோய், புற்றுநோய், ரத்த அழுத்த குறைபாடு, கண் பார்வை குறைபாடு போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கும் ஆற்றல் கொண்டவை.

    குறிப்பாக அதிலிருக்கும் லைகோபீன், நுரையீரல் புற்றுநோய், மார்பக புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய், உணவுக்குழாய் புற்றுநோய் போன்ற பாதிப்புகள் ஏற்படாமல் பாதுகாக்கிறது. ஆனால் 95 சதவீதம்பேர் சிவப்பு, ஆரஞ்சு நிற காய்கறிகளை போதுமான அளவு உணவில் சேர்த்துக்கொள்வதில்லை என்பது தேசிய புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

    மாதுளை, சிவப்பு ஆரஞ்சு, ராஸ்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி, தர்பூசணி, ஆப்பிள், சிவப்பு திராட்சை, சிவப்பு பேரிக்காய், சிவப்பு கொய்யா, சிவப்பு குடை மிளகாய், தக்காளி, சிவப்பு பீன்ஸ், பீட்ரூட், சிவப்பு மிளகாய், வெங்காயம், உருளைக்கிழங்கு, சிவப்பு முள்ளங்கி போன்ற சிவப்பு நிற காய்கறிகள், பழங்களை அடிக்கடி சாப்பிட வேண்டும்.



    இந்த சிவப்பு நிற உணவுகளில் குறைந்த அளவே கொழுப்பு, சோடியம் போன்றவை உள்ளன. தக்காளிப்பழங்களில் அதிக அளவில் லைகோபீன் இருப்பதால் உணவுக்குழாய் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோயில் இருந்து தற்காத்துக்கொள்ள உதவும். தக்காளி பழங்களை சூப்புகளாகவோ, சாஸ்களாகவோ தயாரித்து பயன்படுத்தலாம். ஸ்ட்ராபெர்ரி பழங்களில் இருக்கும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும் தன்மை கொண்டது. கெட்ட கொழுப்பையும் நீக்கிவிடும்.

    சிகப்பு நிற செர்ரி பழங்களில் கலந்திருக்கும் ஆந்தோசையானை இறந்த செல்களை நீக்கி சருமத்திற்கு பொலிவு சேர்க்கும் ஆற்றல் கொண்டது. சிவப்பு குடமிளகாய் சாப்பிடுவதும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும். தர்ப்பூசணி பழங்களிலும் லைகோபீன் அதிகம் உள்ளது. அவை இதய நோய், பக்கவாதம் போன்ற அபாயங்களில் இருந்து காக்கும். காலை உணவுடன் ஸ்ட்ராபெர்ரி அல்லது செர்ரி பழங்களை சேர்த்துக்கொள்வது நல்லது. மதிய உணவுடன் தக்காளி சூப் பருகலாம். சிவப்பு குடமிளகாய், சிவப்பு முள்ளங்கி, சிவப்பு வெங்காயம் ஆகியவற்றை சாலட்டுகளாக தயார் செய்து சாப்பிடலாம்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை.
    பெற்றோர்-பிள்ளை உறவுதான் இன்றைக்கு தடம் மாறி செல்லும் முக்கியப் பிரச்சனையாக இருக்கிறது. அதீத கண்டிப்பு, அதீத கண்டிப்பின்மை இரண்டுமே தவறானதுதான்.

    ஒவ்வொரு குழந்தைக்கும் ஆசை, கனவு இருக்கும். அதை கண்டறிந்து மெருகூட்டுவதுதானே பெற்றோர்களின் கடமை. அதைவிடுத்து இதற்கு மாறான பல செயல்பாடுகளை இன்றைக்கு பெற்றோர்களாகிய நாம் செய்துவருகிறோம். குழந்தைகள் கண்ணாடியைப் போன்றவர்கள். நாம் அன்பைக் காட்டினாலும், தவறைக் காட்டினாலும் அதனை அச்சுப்பிசராமல் அப்படியே செய்வார்கள்.

    பிள்ளை என்னவாக ஆகவேண்டும் என்பதை பெற்றோர் முடிவுசெய்வது, அதற்காக பிள்ளைகளுக்கு அதிக நேரம் படிப்பை சுமையாக சுமத்துவது, மற்றொரு பிள்ளையோடு ஒப்பீடு செய்வது, பொருளாதார வசதி இருக்கிறது என்பதற்காக பிள்ளைகளைக் கண்டுக்கொள்ளாமலேயே பணத்தை மட்டும் கொடுத்து நல்வழிப்படுத்தாதது போன்றவற்றில் ஏதேனும் ஒன்றைத்தான் அனைத்து பெற்றோர்களும் செய்துவருகிறோம்.

    இதுவரை தெரிந்தோ, தெரியாமலோ செய்தது போதும். இனியாவது குழந்தைகளின் நலனில் உண்மையான அக்கறையுள்ள பெற்றோராக நடந்துகொள்வோம். 
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று கடலைப் பருப்பு வெல்ல கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    மேல் மாவு செய்ய:

    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு - சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய:

    கடலைப் பருப்பு - அரை கப்,
    வெல்லத்தூள் - முக்கால் கப்,
    தேங்காய்த் துருவல் - கால் கப்,
    ஏலக்காய்த்தூள் - சிட்டிகை,
    நெய் - ஒரு டீஸ்பூன்.



    செய்முறை:


    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    கடலைப் பருப்பை அரை மணி நேரம் ஊற வைத்து தண்ணீரை வடித்து மலர வேக விட்டு எடுக்கவும்.

    ஆறியதும் அதனுடன் தேங்காய்த் துருவல், வெல்லத்தூள் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும்.

    அடி கனமான பாத்திரத்தில் நெய், அரைத்த விழுது சேர்த்து சுருள கிளறி இறக்கவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடவும். இவ்வாறு அனைத்து மாவிலும் செய்யவும்.

    செய்த கொழுக்கட்டைகளை ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    சூப்பரான கடலைப் பருப்பு வெல்ல கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    பெண்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள அறிகுறிகள் தென்பட்டால் சாதாரணமாக எடுத்துக் கொள்ளாமல் விரைவில் மருத்துவரை பார்ப்பது மிகவும் நல்லது.
    நமது வீட்டில் தந்தை, குழந்தைகள், பெரியவர்கள் என யாரிடம் சின்ன உடல்நல சார்ந்த எதிர்மறை அறிகுறி தென்பட்டாலும் உடனே பதறி அடித்துக்கொண்டு மருத்துவம் செய்பவர்கள் பெண்கள் தான்.

    ஆனால் அவர்களுக்கு ஏதாவது நோயின் அறிகுறி தென்பட்டாலும் அதை பற்றி கவலைப்பட மாட்டார்கள். வீட்டில் உள்ள அனைவரை பற்றியும் கவலைப்படும் பெண்கள் தங்கள் உடல் நலன் பற்றி எந்த கவலையும் கொள்வதில்லை.

    பெண்கள் இப்படி சாதாரணமாக எடுத்துக் கொள்ளும் அறிகுறிகள் ஏராளம் இருக்கின்றன. அவற்றில் சில பின்னாட்களில் அபாயமான நோய்களை உண்டாக காரணியாக இருக்கலாம் என்பதை அவர்கள் அறிவதில்லை. அதை பற்றி இப்போது பார்க்கலாம்.

    * சில சமயங்களில் பெண்களுக்கு மாதவிடாய் காலத்தில் அளவுக்கு அதிகமாக இரத்தப்போக்கு வெளிப்படும். அதே போல மாதவிடாய் நிற்கும் காலத்திலும் இவ்வாறு நடக்கலாம். இது போல இன்றி, அவ்வப்போது அதிகளவில் இரத்தப்போக்கு வெளிப்பட்டால் அது கட்டி, 35 வயதுக்கு மேல் புற்றுநோயாக கூட மாறலாம். உடலுறவுக்கு பிறகு இரத்தப்போக்கு ஏற்படுவது ஏதேனும் இன்பெக்ஷன் காரணமாக கூட இருக்கலாம்.

    * மிக வெண்மையாக அல்லது வெள்ளை நிறத்தில் பால் வடிதல் குழந்தை பெற்ற பிறகு இயல்பு. ஆனால், ஒரு மார்பில் மட்டும் பிரவுன் அல்லது இரத்த நிறத்தில் வடிதல் உண்டாவது மிகவும் அபாயமான அறிகுறி. இந்த நிலையை ஆங்கிலத்தில் "Intraductal Papillomas" என்று கூறுகின்றனர். இதை அறுவை சிகிச்சை மூலமாக தான் சரி செய்ய வேண்டும்.



    * மலம் கழிக்கும் போது இரத்தம் வெளிவருவதை கண்டால் சாதாரணமாக இருக்க வேண்டாம். இது இரைப்பை குடலில் இரத்தம் கசிதலின் அறிகுறியாக கூட இருக்கலாம். இதே நேரத்தில் மூச்சு திணறல், உடல் சோர்வு போன்றவற்றை உணர்ந்தால் உடனே மருத்துவரிடம் பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள்.

    * எல்லா மார்பு வலியும் மாரடைப்பு அல்ல. சில சமயங்களில் குமட்டல், அதிக வியர்வை, மூச்சு விட சிரமப்படுவது, கழுத்து வலி உண்டாவது போன்றவற்றுடன் சேர்ந்து மார்பு வலி உண்டானால் அது மாரடைப்பு உண்டாவதன் அறிகுறியாக இருக்கலாம்.

    * மச்சம் திடீரென பெரிதாவது, நிறம் மாறுப்படுவது, அரிப்பது போன்று இருந்தால் சரும மருத்துவ நிபுணரிடம் உடனே பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். இது சருமத்தில் ஏதேனும் அபாயத்தை உண்டாக்கலாம்.

    * மாதவிடாய் நாட்களில் இதுபோன்ற வலி மிகவும் சாதாரணம். ஆனால், கருப்பையில் கட்டி உண்டாகியிருந்தால் கூட இந்த வலி அதிகரிக்கும். உடலின் உள்ளேயே இரத்தம் கசிதல் உண்டாகும். இதனால் காய்ச்சல், உடல்சோர்வு போன்றவை அறிகுறிகளாக வெளிப்படலாம்.

    * சிலருக்கு பெண்ணுறுப்பு பகுதியில் அவ்வப்போது வெள்ளைப் படிதல் உண்டாகும், அது துர்நாற்றத்தை வெளிப்படுத்தும். இது சாதாரணமாக பெண்கள் மத்தியில் வெளிப்படும் ஒன்று தான். ஒருவேளை இது மஞ்சள் - பச்சை நிறத்தில், பெண்ணுறுப்பு பகுதியில் எரிச்சல் / வலியுடன் வெளிப்படுகிறது எனில் அது இன்பெக்ஷன் அல்லது பால்வினை நோய். கர்ப்பப்பை வாய் புற்றுநோயின் அறிகுறியாக கூட இருக்கலாம்.
    வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிவதன் மூலம் வயிற்றிலுள்ள உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. வயிற்றிலுள்ள உறுப்புகள் புத்துயிர் பெறுகிறது.
    நுரையீரலின் கீழ்பாக சுவாசமுறை:

    செய்முறை: வஜ்ராசனத்தில் அமரவும். இருகைகளையும் நீட்டி, முழங்கால் முட்டிகளின் மேல் உள்ளங்கைகளை வைக்கவும். கண்களை மூடவும். முதுகு, கழுத்து, தலை ஒரே நேர்கோட்டில் இருக்கட்டும். உடல் முழுவதையும் தளர்வாக வைத்துக் கொள்ளவும். சில வினாடிகள் சாதாரண மூச்சுடன் இருக்கவும்.

    இரு உள்ளங்கைகளையும், இரு பக்க விலா எலும்புகளின் கீழ், இடுப்புப்பகுதியில் வைக்கவும் மூச்சை முழுவதுமாக இருநாசிகளின் வழியாக வெளியே விடவும்.

    மூச்சை நிதானமாகவும், ஆழமாகவும் இரு நாசிகளின் வழியாக இழுத்து, ஓரிரு வினாடிகள் நிறுத்தி பிறகு நிதானமாக நாசிகளின் வழியே வெளியே விடவும். இப்படி தொடர்ந்து 3 முதல் 6 முறை செய்யவும். இது ஒரு சுற்று பயிற்சியாகும்.

    மூச்சை இழுக்கும்போது அடிவயிற்றுத் தசைகளை விரிவடையச் செய்யவும். மூச்சை வெளியே விடும்போது வயிற்று தசைகளை தளர்த்திக் கொள்ளவும். இந்த பயிற்சியை 3 முதல் 6 சுற்று பயிற்சி செய்யவும். பிறகு சில வினாடிகள் ஓய்வு பெறவும். அதன் பிறகு மத்யம் பிராணாயாமம் செய்யவும்.

    கவனம் செலுத்த வேண்டிய இடம்:
    வயிற்றுத் தசைகளின் இயக்கத்தின் மீதும், சுவாச இயக்கத்தின் மீதும், மணிபூர சக்கரத்தின் மீதும் கவனம் செலுத்தவும்.

    அதம பிராணாயாமம் நுரையீரலின் கீழ்ப்பகுதியிலுள்ள அசுத்த காற்றை வெளியேற்றுகிறது. வயிற்றுத் தசைகள் சுருங்கி விரிவதன் மூலம் வயிற்றிலுள்ள உறுப்புகளுக்கு ரத்த ஓட்டம் அதிகரிக்கிறது. வயிற்றிலுள்ள உறுப்புகள் புத்துயிர் பெறுகிறது. 
    சர்க்கரை நோயாளிகள் தினமும் உணவில் ஓட்ஸை சேர்த்து கொள்வது நல்லது. இன்று ஓட்ஸ், காய்கறிகள் வைத்து உப்புமா செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    ஓட்ஸ் - 1 கப்
    வெங்காயம் - 1
    ப.மிளகாய் - 1
    கேரட் - 1
    பீன்ஸ் - 10
    பட்டாணி - சிறிதளவு
    உப்பு, எண்ணெய் - தேவையான அளவு

    தாளிக்க

    கடுகு - கால் டீஸ்பூன்
    உளுந்தம் பருப்பு - அரை ஸ்பூன்
    கறிவேப்பிலை - சிறிதளவு
    கடலைப்பருப்பு - அரை டீஸ்பூன்



    செய்முறை :

    ஒட்ஸை வெறும் கடாயில் போட்டு வறுத்து கொள்ளவும்

    வெங்காயம், கேரட், பீன்ஸ், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    வறுத்த ஓட்சில் உப்பு கலந்த நீர் தெளித்து புட்டு மாவு பிசைவது போல உதிரியாக பிசைந்து கொள்ளவும்.

    கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், ப.மிளகாய் போட்டு வதக்கவும்.

    வெங்காயம் சற்று காய்கறிகள், பட்டாணியை சேர்த்து காய்கறிகள் வேக சிறிது தண்ணீர் சேர்த்து மூடி போட்டு வேக விடவும்.

    காய்கறிகள் வெந்தவுடன் உதிராக பிசைந்த ஓட்ஸை போட்டு 5 நிமிடம் மூடி போட்டு வேக வைத்து இறக்கி பரிமாறவும்.

    சத்தான ஓட்ஸ் காய்கறி உப்புமா ரெடி.

    விருப்பப்பட்டால் காய்கறிகளையும் சேர்த்து கொள்ளலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×