என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூரண கொழுக்கட்டை"

    • மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு ‘வழங்கக் கூடியது’ என்று பொருள்.
    • விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்து, அவரது அருளை பெற்றவர் அருந்ததி தேவி.

    ஓம்கார வடிவமாகவும், ஞானத்தின் வடிவமாகவும் திகழ்பவர் விநாயகப் பெருமான். விநாயகர் வழிபாட்டில் அவருக்கு படைக்கப்படும் உணவுகள் தனித்த இடத்தை பிடிக்கின்றன. உண்மையான பக்தியுடன் எதை படைத்தாலும் விநாயகப் பெருமான் ஏற்றுக்கொள்வார். இருப்பினும் அவருக்கு பிடித்தமான உணவுகளை படைத்து வழிபட்டால் நற்பலன்கள் கிடைக்கும். அந்த வகையில் விநாயகர் வழிபாட்டில் கொழுக்கட்டை, மோதகம், லட்டு, அப்பம், அவல், பொரி, கடலை, சுண்டல் ஆகியவை தவிர்க்க முடியாத இடத்தை பிடிக்கின்றன.

    பிள்ளையாருக்கு பல விதமான நைவேத்தியங்கள் படைக்கப்பட்டாலும், அதில் முதன்மை இடத்தை பிடிப்பது மோதகம் தான். வீட்டில் பூஜிக்கப்படும் விநாயகர் கையில் மோதகம் இருக்க வேண்டும் என்பார்கள். மோதகம் என்பது தேங்காய், வெல்லப்பாகு, அரிசி மாவு ஆகியவற்றை சேர்த்து செய்யப்படும் பதார்த்தம் ஆகும். விநாயகர் சதுர்த்தி அன்று விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபட்டால் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதீகம். விநாயகருக்கு மோதகம் நைவேத்தியமாக படைப்பதற்கு முக்கியமான காரணம் உண்டு.

    மோதகம் என்றால் மோதக் + அகம் ஆகும். மோதக் என்றால் உற்சாகம், மகிழ்ச்சி என்று பொருள். அகம் என்ற சொல்லுக்கு 'வழங்கக் கூடியது' என்று பொருள். மகிழ்ச்சியையும், ஆனந்தத்தையும் வழங்கக் கூடிய பொருள் என்பதால் மோதகத்தை விநாயகருக்கு படைத்து வழிபடுவது சிறப்பானதாகும்.

    ஒரு சமயம் அத்ரி ரிஷியின் மனைவியான அனுசுயா, சிவன், பார்வதி, விநாயகர் ஆகியோரை விருந்திற்காக அழைத்திருந்தார். எந்த உணவை கொடுத்தாலும் விநாயகரின் பசியை போக்க முடியாது என்பதை புரிந்து கொண்ட அனுசுயா, இனிப்பு கலந்த மோதகத்தை சாப்பிடக் கொடுத்தார். மொத்தமாக 21 மோதகங்களை விநாயகருக்கு அளித்தார். அதை சாப்பிட்டதும் விநாயகப் பெருமானின் பசி முழுவதுமாக நீங்கி, மகிழ்ச்சி அடைந்தார்.

    இதைக் கண்ட பார்வதி தேவி, அனுசுயாவை போல் எவர் ஒருவர் விநாயகருக்கு மோதகம் படைத்து வழிபடுகிறார்களோ அவர்களின் விருப்பங்கள் அனைத்தையும் விநாயகப்பெருமான் நிறைவேற்றி வைப்பார் என வரம் அளித்தார். பார்வதி தேவி அளித்த வரத்தின் படி, பக்தர்கள் தாங்கள் விநாயகரிடம் முன்வைத்த கோரிக்கைகள் நிறைவேறுவதற்காக மோதகத்தை நைவேத்தியமாக படைக்கிறார்கள்.

    விநாயகருக்கு முதன்முதலில் மோதகம் படைத்து, அவரது அருளை பெற்றவர் அருந்ததி தேவி என்று கூறப்படுகிறது. கற்புக்கு இலக்கணமாகத் திகழ்ந்து, வானில் இன்றும் விண்மீனாய் வலம் வருபவர் வசிஷ்டரின் மனைவியான அருந்ததி. புண்ணிய பலன் காரணமாக ஒருமுறை வசிஷ்டரின் ஆசிரமத்துக்கு விஜயம் செய்தார் விநாயகர். அவர் வருவதை அறிந்த அருந்ததி, அவருக்காக புதிய நைவேத்தியம் செய்ய விரும்பினார்.

    விநாயகப் பெருமான், அண்டத்தின் எல்லா இடங்களிலும் நிறைந்து இருப்பவர். இதனால் அண்டத்தை உணர்த்தும் விதமாக வெள்ளை மாவினால் 'செப்பு' எனும் மேல் பகுதியை செய்தார். அண்டத்தின் உள்ளே பூரணமாக நிறைந்திருக்கும் விநாயகரை உணர்த்தும் விதமாக, இனிப்பான பூரணத்தை மாவுக்குள்ளே வைத்து மோதகத்தை தயார் செய்தார். பின்பு வசிஷ்டரிடம் அதைக் கொடுத்து விநாயகருக்கு படைத்தார்.

    அப்படி அவர் அளித்த பிரசாதத்தின் தத்துவச் சிறப்பை உணர்ந்த பிள்ளையார், அதை உலகுக்கு உணர்த்தும் விதமாக, மோதகத்தை எப்போதும் தன் திருக்கரங்களில் ஏந்திக் கொண்டிருக்கிறார். அருந்ததி மூலம் நமக்குக் கிடைத்த அந்த அருள் பிரசாதத்தைப் போன்றே, விநாயகர் சதுர்த்தியான இன்று நம் வாழ்வும் இனிப்பும் தித்திப்புமாகப் பூரணத்துவம் பெற பிள்ளையாரை வழிபட்டு வரம் பெறுவோம்.

    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகள் செய்வதை பார்த்து வருகிறோம். இன்று நட்ஸ் பூரண கொழுக்கட்டை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :  

    மேல் மாவு செய்ய:

    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு - சிட்டிகை,
    எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய :

    பாதாம், முந்திரி, பிஸ்தா - தலா 20,
    சர்க்கரை - கால் கப்,
    ஏலக்காய் - 3.



    செய்முறை :

    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கிளறி இறக்கவும். ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    வெறும் வாணலியில் பாதாம், முந்திரி, பிஸ்தா ஆகியவற்றை தனித்தனியாக வறுத்தெடுக்கவும்.

    ஆறியதும் அதனுடன் சர்க்கரை, ஏலக்காய் சேர்த்து மிக்சியில் கொரகொரப்பாக பொடித்த கொள்ளவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    நட்ஸ் பூரண கொழுக்கட்டை ரெடி.

    சர்க்கரைக்கு பதிலாக வெல்லத்தையும் பயன்படுத்தலாம்.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    இந்த விநாயகர் சதுர்த்திக்கு பல்வேறு வகையான கொழுக்கட்டைகளை செய்வது எப்படி என்று பார்க்கலாம். இன்று எள் பூரண கொழுக்கட்டை செய்முறையை பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மேல் மாவு செய்ய:

    கொழுக்கட்டை மாவு - ஒரு கப்,
    தண்ணீர் - ஒன்றே கால் கப்,
    உப்பு சிட்டிகை, எண்ணெய் - ஒரு டீஸ்பூன்.

    பூரணம் செய்ய :

    கறுப்பு எள் - 50 கிராம்,
    வெல்லம் - 50 கிராம்,
    ஏலக்காய் - 2.



    செய்முறை :

    தண்ணீருடன் உப்பு, எண்ணெய் சேர்த்து கொதிக்க விடவும்.

    அதனுடன் கொழுக்கட்டை மாவை சேர்த்து கைவிடாமல் கிளறி இறக்கவும்.

    ஆறியதும் கைகளால் கட்டியில்லாமல் நன்கு அழுத்தி பிசையவும். இதுவே மேல் மாவு.

    எள்ளை 15 நிமிடம் தண்ணீரில் ஊற வைத்து களையவும். பிறகு தட்டில் பரவலாக கொட்டி வெயிலில் காய விடவும்.

    வெறும் வாணலியில் காய்ந்த எள்ளை சேர்த்து வெடிக்கும் வரை வறுத்தெடுக்கவும்.

    அதனுடன் ஏலக்காய், வெல்லம் சேர்த்து மிக்சியில் அரைத்தெடுக்கவும். இதுவே பூரணம்.

    மேல் மாவை சிறிய கிண்ணங்களாக்கி நடுவே சிறிதளவு பூரணம் வைத்து மூடி ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.

    சூப்பரான எள் பூரண கொழுக்கட்டை ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×