என் மலர்tooltip icon

    பெண்கள் உலகம்

    • சுக்கு செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது.
    • மிளகு உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது.

    வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றில் எது அதிகமானாலும், குறைந்தாலும் நோய் உண்டாகும். இவை முத்தாதுக்கள் அல்லது திரிதோடங்கள் என்று சித்த மருத்துவத்தில் கூறப்பட்டுள்ளது.


    நோய்க்கு தரப்படுகின்ற சித்த மருந்துகள் வாத, பித்த, கப நிலையை சமன் செய்து உடம்பை இயல்பு நிலைக்கு திரும்பக் கொண்டு வருகிறது. முத்தோடங்கள் இயல்பு நிலையை அடைந்ததும், நோய் குணமடைகிறது.

    இந்த திரிதோடத்தை சமன் செய்ய ஏலம், மஞ்சள், சீரகம், மிளகு, சுக்கு, பெருங்காயம், பூண்டு, வெந்தயம் போன்றவை உதவுகின்றன. இவை அனைத்தும் நமது சமையலறை அஞ்சறைப் பெட்டியிலும் தவறாமல் இருக்கும். இவற்றை அன்றாடம் முறையாக பயன்படுத்தும் போது முத்தோடங்களும் உடம்பில் சமச்சீராக இருக்கும்.


    சுக்கு

    இது கார்ப்பு சுவை உடையது. செரிமானம் மற்றும் அழற்சி எதிர்ப்பு பண்புகளுக்கு பெயர் பெற்றது. அஜீரணத்தை நீக்கும். உடலில் 'வாதம்' சமநிலைப்படுத்த உதவுகிறது. கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்கவும். இஞ்சியாகவும் இதை பயன்படுத்தலாம்.


    மஞ்சள்

    இது கசப்பு, கார்ப்பு சுவைகளை உடையது. சக்தி வாய்ந்த அழற்சி எதிர்ப்பு மற்றும் சிறந்த ஆக்ஸிஜனேற்ற பண்புகளை கொண்ட இது, உடலில் வாதம், பித்தம், கபம் ஆகிய மூன்றையும் சமநிலைப்படுத்துகிறது. இதை இனிப்பு பண்டங்களைத் தவிர மற்ற எல்லா உணவிலும் சேர்க்கலாம்.


    மிளகு

    காரத்தன்மை உள்ள இதன் நஞ்சு எதிர்ப்பு ஆற்றல் அலாதியானது. இது செரிமானத்திற்கும் உதவுகிறது, உடலில் கபத்தை சமநிலைப்படுத்துகிறது. மிளகாய்க்கு மாற்றாக இதைப் பயன்படுத்துவது நல்லது.


    பூண்டு

    வைரஸ் எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்த இது வாதம், பித்தம், கபம் மூன்றையும்சமநிலைப்படுத்த உதவுகிறது. பருப்பு மற்றும் கிழங்கு சார்ந்த உணவுகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.


    சீரகம்

    சிறிது கார்ப்பு சுவையுடைய இது, உடலின் உள் உறுப்புகளை சீர்படுத்துகிறது. செரிமானத்திற்கு உதவுகிறது. உடலில் பித்தத்தை சமநிலைப்படுத்துகிறது. வயிற்று உப்புசத்தை குறைக்க சிறந்தது. காரமான உணவு வகைகள் சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.


    ஏலக்காய்

    சிறிது கார்ப்பு, இனிப்பு சுவையுடையது. இது செரிமானத்திற்கு உதவும், உடல் வெப்பத்தை தணிக்கும், வாய் துர்நாற்றத்தை தடுக்கிறது. இனிப்புகள் மற்றும் இறைச்சி சமைக்கும் போது இதை சேர்க்க வேண்டும்.


    பெருங்காயம்

    கார்ப்பு, கசப்பு சுவைகளை உடையது. செரிமானத்திற்கு உதவும் இது, வாயு, வயிற்றுப் பொருமல், வயிறு எரிச்சல் ஆகியவற்றை நீக்கும். கிழங்கு, பருப்பு வகைகள் சமைக்கும் போது இதை பயன்படுத்த வேண்டும்.


    வெந்தயம்

    இரும்பு போன்று உடலை உறுதியாக்கும் இது, கசப்பு சுவையுடையது. உடலில் பித்தத்தை நீக்கும். வெந்தய விதைகளில் நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் நிறைந்துள்ளன. செரிமானத்தை மேம்படுத்தவும், மலச்சிக்கலை போக்கவும் உதவுகிறது. காரமான உணவுகளை சமைக்கும் போது இதை சேர்க்கவும்.

    • சர்க்கரை நோயாளிகள் இதனை பயமின்றி உட்கொள்ளலாம்.
    • இன்சுலின் திறம்பட செயல்பட வழிவகுத்து ,சர்க்கரை அளவை குறைக்கிறது.

    பனங்கிழங்கின் கிளைசெமிக் இன்டெக்ஸ் (சர்க்கரை உயர்தல் குறியீடு) மற்றும் கிளைசெமிக் லோடு குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதனை பயமின்றி உட்கொள்ளலாம்.


    இதில் உள்ள நார்ச்சத்து செரிமானத்தை தாமதப்படுத்தி, சாப்பிட்டவுடன் ஏற்படும் குளுக்கோஸ் ஸ்பைக்ஸ் வராமல் தடுக்க உதவுகிறது. மேலும் இதில் உள்ள மெக்னீசியம் மற்றும் நுண்ணுட்ட சத்துக்கள் கணையத்தில் இன்சுலின் சுரப்பதை அதிகரிக்கச் செய்து ரத்த சர்க்கரை அளவை குறைக்கிறது.

    அதுமட்டுமல்ல, மெக்னீசியம் நீரிழிவு ரெட்டினோபதி மற்றும் நரம்பு பாதிப்பு ஆகியவற்றை தடுக்க உதவுவதாக பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.


    இதிலுள்ள வைட்டமின் சி, இன்சுலின் உணர்திறனை அதிகரிக்கச் செய்து, இன்சுலின் திறம்பட செயல்பட வழிவகுத்து, சர்க்கரை அளவை குறைக்க துணை புரிகிறது. பனங்கிழங்கில் உள்ள அதிகமான இரும்புசத்து, ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கையை அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது.

    இதில் உள்ள பொட்டாசியம் ரத்த அழுத்தத்தை சீர்படுத்த உதவுவதோடு இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்துகிறது. இக்கிழங்கில் இருக்கும் கால்சியம், எலும்பு மற்றும் தசைகளுக்கு வலுசேர்த்து முதுமை மூட்டழற்சி மற்றும் எலும்புப்புரை நோய் வராமல் தடுக்கிறது.


    பனங்கிழங்கில் உள்ள ஓமேகா 3 கொழுப்பு அமிலங்கள் நல்ல கொலஸ்ட்ரால் அளவை அதிகப்படுத்தியும், கெட்ட கொலஸ்ட்ரால் அளவை குறைத்தும் இருதயம் மற்றும் ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படாமல் தடுக்க உதவுகிறது.

    இதில் உள்ள பிளாவனாய்ட்ஸ், சப்போனின், பெனாலிக் ஆசிட் போன்ற ஆன்டி ஆக்சிடென்ட்ஸ், நோய் எதிர்ப்பு திறனை அதிகரித்து, தொற்று ஏற்படாமல் தடுத்தும், செல்களில் பிரீ ரேடிக்கல்கள் போன்ற நிலையற்ற அணுக்களால் உண்டாகும் சேதத்தை குறைத்தும் பல்வேறு நோய்கள்வராமல் தடுக்கிறது. இக்கிழங்கில் இருக்கும் அழற்சி எதிர்ப்பு பண்புகள் சருமத்திற்கு பொலிவை ஏற்படுத்துகிறது.


    பனங்கிழங்கில் உள்ள அதிகமான அளவு நார்ச்சத்து குடல் இயக்கத்தை சீராக்கி, செரிமானத்தை மேம்படுத்தி, மலச்சிக்கல் போன்ற பிரச்சினைகள் வராமல் தடுக்க உதவுகிறது.

    மேலும், வளர்சிதை மாற்றத்தை அதிகரித்தும், சாப்பிடும் ஆர்வத்தை அதிகரிக்கும் கிரெலின் ஹார்மோன் சுரப்பதை தடுத்தும், உடல் எடையை குறைக்க உதவுகிறது. இத்தகைய நன்மைகளைக் கொண்டுள்ள பனங்கிழங்கை சர்க்கரை நோயாளிகள் எந்த தயக்கமும் இல்லாமல் உட்கொள்ளலாம்.

    • ஆற்றலையும் உற்சாகத்தையும் உடல் பெறுகிறது.
    • உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் செயல்முறை.

    பெண்கள் பிரசவத்துக்குப் பிறகு 'மசாஜ்' செய்து கொல்வது நல்லது. இது உடலுக்கு நிவாரணம் அளிக்கிறது. அதிக ஆற்றலையும் உற்சாகத்தையும் உடல் பெறுகிறது.

    மசாஜ் என்பது உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சோர்வடைந்த உடலுக்கு புத்துணர்ச்சியூட்டும் ஒரு செயல்முறையாகும். தினசரி வேலை அழுத்தம் காரணமாக மன அழுத்தத்துக்கு ஆளானவர்கள் ஓய்வெடுக்க மசாஜ் சென்டர்களை நாடுகின்றனர். உடலின் தசைகளைத் தூண்டும் மசாஜ் எல்லா வயதினருக்கும் நல்லது.


    பல வகையான மசாஜ்கள், உடலில் உள்ள பல்வேறு பாதிப்புகளை குணப்படுத்தும் என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர்.

    பிரசவத்துக்குப் பிறகு பெண்களுக்கு தமது உடல்நிலையை கவனித்துக்கொள்ள நேரம் இருப்பதில்லை. இரவும் பகலும் குழந்தையை கவனமாக பார்த்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.

    அதேசமயம் தமக்கு உடல் வலி இருப்பதையும் அவர்கள் உணர்கிறார்கள். மேலும் பிரசவத்துக்குப் பிறகு பெண்களின் எடையும் கொஞ்சம் கூடுகிறது. மகப்பேறுக்கு முந்தைய உடல் வடிவத்தை மீண்டும் பெறுவதே அவர்களின் குறிக்கோளாக இருக்கும். இதற்கெல்லாம் அவர்கள் என்ன செய்ய வேண்டும்?

    பிரசவத்துக்குப் பின், முறைப்படி பயிற்சி பெற்ற பெண்களிடம் இளந்தாய்மார்கள் மசாஜ் செய்து கொள்ளலாம். இது பிரசவத்துக்குப் பிந்தைய மசாஜ் என்று அழைக்கப்படுகிறது. இந்த மசாஜ், அழகை மேம்படுத்துவது, உடல்வலியை போக்குவதுடன் மேலும் பல நன்மைகளை அளிக்கிறது.

    அவை பற்றி பார்க்கலாம்...


    பிரசவத்துக்குப் பிறகு பெண்கள் மனஅழுத்தத்துக்கு ஆளாகிறார்கள். குழந்தைக்காக அதிக நேரம் ஒதுக்குவது ஒரு புதிய தாயை உடலளவிலும் மனதளவிலும் சோர்வடையச் செய்கிறது. எனவே, சோர்வுற்ற உடலுக்கு மசாஜ் தேவை.

    பிரசவத்துக்குப் பின் கால்கள், தொடைகள், கைகள், கழுத்து, முதுகு வலிகள் இருக்கும். மசாஜ் செய்வதால் இவற்றில் இருந்து விடுபடலாம். இரவில் மசாஜ் செய்வது நல்லது. தூங்குவதற்கு முன் சில நிமிடங்கள் மசாஜ் செய்யவும். மசாஜ் செய்யத் தெரிந்த பெண் அல்லது கணவரின் உதவியைப் பெற்று மசாஜ் செய்துகொள்ளுங்கள்.

    மகப்பேறுக்குப் பின் அடிவயிற்றில் ஏற்படும் 'ஸ்ட்ரெட்ச் மார்க்குகளை' மசாஜ் செய்வதன் மூலம் குறைக்கலாம். நல்ல எண்ணெய்களைக் கொண்டு மசாஜ் செய்ய வேண்டும். தோல் மசாஜ் செய்வதன் மூலம் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்படும்.


    பிரசவத்துக்கு முந்தைய உடல் வடிவம் பெற தொப்பையைக் குறைக்க. உடல் கொழுப்பை குறைக்க மசாஜை தவிர வேறு வழியில்லை. மசாஜ் செய்வது, பால் சுரப்பிகள் நன்கு செயல்பட உதவுகிறது. மார்பகங்களுக்கு மசாஜ் செய்வதன் மூலம், பால் சுரப்பு அதிகரிப்பது மட்டுமல்லாமல், மார்பகங்கள் தளர்வடையாமல் இருக்கும்.

    பிரசவத்தின்போது பெண்களின் தசைகள் தளர்ந்து விடும். பிரசவத்துக்குப் பிந்தைய மசாஜ், தசைகள் மீண்டும் தங்கள் திறனைப் பெற உதவுகிறது.

    மசாஜ் செய்வது உடல் முழுவதும் ரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. வலியை நீக்குவது மட்டுமல்லாமல், ஆக்சிஜன் மற்றும் ரத்த ஓட்டத்தையும் அதிகரிக்கிறது. இவை எல்லாம் சேர்ந்து, இளந்தாயின் ஒட்டுமொத்த பொலிவையும் கூட்டும். எனவே, மென்மையான, முறையான மசாஜ், மிகவும் நல்லது.

    • தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.
    • கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

    சமையல் பணியை விரைவாகவும், ருசியாகவும் செய்து முடிப்பதற்கான வழிமுறைகளை பின்பற்றுவதற்கு பலரும் ஆர்வம் காட்டுகிறார்கள். அதேவேளையில் ஒரு சிலரின் தவறான வழிகாட்டுதலை உண்மை என்று நம்பி அதையே வாடிக்கையாக பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

    அவை சமைக்கும் நேரத்தையும், சமைக்கும் பொருட்களையும் விரயமாக்கும் என்பதை அறியாமல் அந்த கட்டுக்கதைகள் மீது நம்பிக்கை வைக்கிறார்கள். அப்படிப்பட்ட கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.


    கட்டுக்கதை:

    மைக்ரோ ஓவனில் சமைப்பது உணவுப்பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகள் இழப்புக்கு வழிவகுக்கும்.

    உண்மை:

    சமைக்கும் பொருட்களில் உள்ள ஊட்டச்சத்துகளை மைக்ரோ ஓவன் அழித்துவிடும் என்பது பொதுவான கட்டுக்கதையாகும். உண்மையில் மைக்ரோ ஓவன் நீரில் கரையக்கூடிய வைட்டமின்களான சி, ஏ உள்ளிட்ட ஊட்டச்சத்துகளை அதன் தன்மை மாறாமல் தக்கவைத்துக்கொள்ள உதவும். அத்துடன் விரைவாக சமைப்பதற்கு உதவிடும். ஊட்டச்சத்துகள் இழப்பையும் குறைக்கும்.


    கட்டுக்கதை:

    சமைக்கும்போது எப்போது வேண்டுமானாலும் மசாலாப்பொருட்களை சேர்க்கலாம்.

    உண்மை:

    இந்த கட்டுக்கதையும் ஏற்புடையதல்ல. அதற்கு மாறாக சமைக்கத் தொடங்கும்போதே மசாலா பொருட்களை சேர்ப்பது சுவையை கூட்டி, சிறந்த பலனை தரும் என்பது சமையல் நிபுணர்களின் பரிந்துரையாக இருக்கிறது.

    அதாவது உப்பு, மஞ்சள், சமையல் பொடி வகைகள் உள்ளிட்ட மசாலா பொருட்களை ஆரம்பத்திலேயே சேர்க்கும்போது அவை சமைக்கும் பொருட்களில் ஆழமாக ஊடுருவும். அதனால் சுவையும், ருசியும் அதிகரிக்கும்.


    கட்டுக்கதை:

    கியாஸ் அடுப்பில் நெருப்பின் அளவை அதிகரிப்பது வேகமாக சமைத்து முடிப்பதற்கு உதவும்.

    உண்மை:

    அடுப்பில் இருந்து நெருப்பு அதிகம் வெளிப்படுவது சீரற்ற சமையலுக்குத்தான் வித்திடும். சமைக்கும் பொருள் தீயில் கருகக்கூடும். பாத்திரமும் கடினமாக மாறக்கூடும்.

    மிதமான தீயில் சமைப்பது உணவுப்பொருட்களை சமமாக வேகவைக்க உதவும். அவை மென்மையாகவும் இருக்கும். பாத்திரங்களில் ஒட்டுவதும் தவிர்க்கப்படும்.


    கட்டுக்கதை:

    வேக வைக்கும் பொருட்களை ஒருமுறை புரட்டிப்போட்டாலே போதுமானது.

    உண்மை:

    இறைச்சி உள்ளிட்ட உணவுப்பொருட்களை அடிக்கடி திருப்பி போடுவது இருபுறமும் சமமாக வேகுவதற்கு உதவும். அவை ஒரே பக்கத்தில் வெந்து கொண்டிருந்தால் அந்த பகுதி கருகிப்போவதற்கு வாய்ப்பிருக்கிறது.

    அடிக்கடி திருப்பி போடுவதுதான் சரியானது. குறிப்பாக ஒவ்வொரு 30 விநாடிகளில் இருந்து ஒரு நிமிடத்திற்குள் திருப்பி போடுவது இறைச்சி மென்மையான பதத்தில் வேகுவதற்கும், சுவையாக இருப்பதற்கும் உதவிடும்.


    கட்டுக்கதை:

    தண்ணீரில் உப்பு சேர்ப்பது வேகமாக நீர் கொதிப்பதற்கு உதவிடும்.

    உண்மை:

    சமைக்கும் பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி சூடுப்படுத்துவதற்கு முன்பு உப்பு சேர்ப்பது விரைவாக நீர் கொதிப்பதற்கு உதவும் என்ற கருத்து நிலவுகிறது. இதுவும் ஒரு கட்டுக்கதைதான்.

    உண்மையில் நீர் கொதிக்கும்போது உப்பு குறைவான தாக்கத்தையே ஏற்படுத்தும். உண்மையில் உப்பு நீரின் கொதிநிலை நன்னீரை விட சற்று அதிகமாக இருக்கும். ஆனால் சமையல் விஷயத்தில் குறிப்பிடத்தக்க வேறுபாடு ஏதும் இருக்காது. அதனால் தண்ணீரில் உப்பு சேர்த்து கொதிக்க வைப்பது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது.

    • உடல் இயங்கத்தேவையான ஆற்றல் தண்ணீர் குடிக்கும் அளவைப் பொறுத்து அமைகிறது.
    • நாளொன்றுக்குப் பொதுவாக 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம்.

    உடலின் உள்ளுறுப்புகள் சரியாக இயங்க தண்ணீர் மிகவும் உதவுகிறது. மனித உடல் 70 முதல் 80 சதவீதம் தண்ணீரால் உருவாகி உள்ளது. உடல் இயங்கத்தேவையான ஆற்றல் கிடைப்பது என்பது ஒருவர் தண்ணீர் குடிக்கும் அளவைப் பொறுத்து அமைகிறது என்கிறது, இயற்கை மருத்துவம்.


    நமது உடலில் மூன்று முக்கிய நீர்நிலைகள் உள்ளன. அவை குடல்கள், நுரையீரல்கள், மூளை ஆகும். இந்த உறுப்புகளில் நீரின் அளவு குறையும்போதுதான் நோய்கள் பல உண்டாகின்றன.

    குடல் பகுதியில் நீர் குறைந்தால் மலச்சிக்கல், மூலம், குடலிறக்கம், குடல்வால் அழற்சி போன்ற நோய்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகம் பாதிக்கப்படும்.


    நுரையீரலில் நீர் வறட்சி ஏற்பட்டால் சளி, இருமல், ஈஸ்னோபிலியா, ஆஸ்துமா, காசநோய் போன்றவை உண்டாகின்றன. மூளைப் பகுதியில் நீர் வறட்சி ஏற்படும்போது தலைவலி, எரிச்சல், படபடப்பு, கோபம், கவலை உண்டாகின்றன.

    இயற்கை மருத்துவத்தில் தண்ணீர் குடிப்பது குறித்து பல தகவல்கள் கூறப்படுகிறது. நாளொன்றுக்குப் பொதுவாக 2 முதல் 3 லிட்டர் வரை தண்ணீர் குடிக்கலாம்.

    குளிர், மழைக்காலத்தில் 2 லிட்டரும், கோடையில் 3 லிட்டர் தண்ணீரும் குடிக்கலாம். உணவு உண்பதற்கு குறைந்தபட்சம் 45 நிமிடங்களுக்கு முன்னர் தண்ணீர் குடிக்க வேண்டும்.


    சாப்பிடும்போது தண்ணீர் குடிப்பது செரிமானத்துக்கு கேடு செய்யும். உண்டபின், குறைந்தபட்சம் ஒன்றரை மணி நேரத்திற்கு பின்னரே தண்ணீர் குடிக்க வேண்டும். 'மடக்' 'மடக்' என்று வேகமாக தண்ணீரை குடிப்பது கூடாது. மிகக் குளிர்ந்த தண்ணீர், அதிகச்சூடான தண்ணீர் செரிமான வேலையை தடை செய்யும் என்று கூறப்படுகிறது.

    • உடற்பயிற்சி மூலமாக நீங்கள் பல்வேறு நலன்களை பெறுவீர்கள்.
    • நாம் உடற்பயிற்சி செய்த பிறகு வியர்வை காரணமாக நமது ஆடைகள் மிகவும் ஈரமாகிவிடுகிறது.

    உடற்பயிற்சி, நல்ல பழக்கம். அனைவரும் தினமும் உடற்பயிற்சி செய்வதை பழக்கமாக்கி கொள்ள வேண்டும். அதிகமான மக்கள் உடற்பயிற்சியின்போது என்ன விஷயங்களை செய்ய வேண்டும், என்ன விஷயங்களை செய்யக்கூடாது என்பதில் தெளிவில்லாமல் இருக்கின்றனர். அந்தவகையில் உடற்பயிற்சிக்கு பிறகு நாம் தவிர்க்க வேண்டிய விஷயங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.

    நீரேற்றமாக இருக்க வேண்டும்

    உலக உயிர்களுக்கு நீர் முக்கிய தேவையாக உள்ளது. பெரும்பாலான மக்கள் அதிகமான நீரிழப்பிற்கு ஆளாகின்றனர். போதுமான அளவில் திரவத்தை எடுத்துக் கொள்ளாததே இதற்கு காரணமாகும். நம்மில் பலர் தினமும் தேவையான அளவில் தண்ணீர் குடிப்பதில்லை. சுமாராக தினமும் ஒரு கிலோ எடைக்கு 30 முதல் 35 மி.லி. தண்ணீர் குடிக்க வேண்டும்.

    அதிக வியர்வை வரும் வேலை செய்பவர்கள் இன்னும் அதிகமாகவே தண்ணீர் குடிக்க வேண்டும். உடற்பயிற்சி செய்யும்போது நமக்கு அதிகமான அளவில் வியர்வை வெளியேறுகிறது. இதனால் உடற்பயிற்சிக்கு பின்பு உடலுக்கு அதிகமாக தண்ணீர் தேவைப்படுகிறது. எனவே, உடற்பயிற்சி முடிந்த பிறகு தண்ணீர் குடிக்க மறக்க வேண்டாம். அதேபோல நீரேற்றமாக இருக்க வெறும் தண்ணீர் மட்டும் தான் குடிக்க வேண்டும் என்றில்லை. எலுமிச்சை நீர், மோர், நீராகாரம் போன்றவற்றையும் சேர்த்தே எடுத்துக் கொள்ளலாம். அப்போது உடலுக்குத் தேவையான ஊட்டச்சத்துக்களும் கிடைக்கும்.

    உடற்பயிற்சிக்கு பிறகு ஓய்வெடுத்தல்



    சிலர் தொடர்ந்து உடற்பயிற்சி செய்கின்றனர். அவர்கள் உடற்பயிற்சிக்கு இடையே அல்லது உடற்பயிற்சி முடிந்து ஓய்வெடுப்பதில்லை. சிலருக்கு உடற்பயிற்சி செய்து முடித்த உடனேயே தலைசுற்றல் அல்லது லேசான மயக்கம் போன்ற உணர்வுகள் ஏற்படலாம். ஏனெனில் உடற்பயிற்சி செய்யும்போது உங்கள் உடலில் வெப்பநிலை அதிகரிக்கிறது, இதனால் ரத்த நாளங்கள் அகலமாக திறக்கின்றன. இந்த ரத்த நாளங்கள் இயல்பு நிலையை அடைவதற்கு உடலுக்கு சிறிது நேரம் தேவைப்படுகிறது. எனவே ஒவ்வொரு பயிற்சிக்கு இடையிலும் சில நிமிடங்கள் ஓய்வெடுக்கவும்.

    உணவில் கவனம்

    உடற்பயிற்சி மூலமாக நீங்கள் பல்வேறு நலன்களை பெறுவீர்கள். ஆனால், உடற்பயிற்சி செய்வதற்கான முக்கிய காரணமே நம் உடலில் உள்ள கலோரிகளை எரித்து ஆற்றலாக மாற்ற வேண்டும் என்பதே ஆகும். ஆனால் உடற்பயிற்சிக்கு பின்பு கலோரி உள்ள உணவுகளை எடுத்துக் கொள்கிறீர்கள் எனில் அது உங்கள் உடற்பயிற்சியை உபயோகமற்றதாக மாற்றிவிடும். எனவே உடற்பயிற்சிக்கு பிறகு அதிக கலோரிகள் கொண்ட உணவுகளை தவிர்க்க வேண்டும். நீங்கள் மிகவும் சோர்வாக உணர்ந்தால் தயிர் போன்ற உணவுகளை எடுத்துக்கொள்ளலாம். எனவே உடற்பயிற்சிக்கு பிறகு நீங்கள் எடுத்துக் கொள்ளக் கூடிய உணவில் கவனமாக இருங்கள்.

    அதிக கொழுப்புள்ள உணவுகளை உட்கொள்ளுதல்

    உடற்பயிற்சியில் மீட்பு பணி என்பது முக்கியமான விஷயமாகும். அதிக கொழுப்புள்ள உணவுகள் மற்றும் சிற்றுண்டிகள் உங்கள் உடலில் செரிமானத்தை குறைத்து உடல் மீட்கும் திறனை தடுக்கிறது. எனவே அதிக கொழுப்புகள் மற்றும் அதிக கார்போஹைட்ரேட் கொண்ட கலவைகளை உடற்பயிற்சிக்கு பின்பாக உண்ண வேண்டாம்.

    உடற்பயிற்சிக்கான நேரம்

    நாம் செய்கிற உடற்பயிற்சிகள் குறித்த அட்டவணையை நாம் வைத்திருக்க வேண்டும். ஒரு நாளைக்கு குறைவாக 15 நிமிடங்கள் மட்டுமே உடற்பயிற்சி செய்கிறோம் என்றாலும் கூட அதை கணக்கிட வேண்டும். அதை வைத்து நாளாக நாளாக நமது உடற்பயிற்சியின் முன்னேற்றத்தை நம்மால் காண முடியும். இது உங்களை ஊக்கப்படுத்தும் விஷயமாக இருக்கும். ஒருவேளை உங்கள் உடற்பயிற்சியில் உங்களுக்கு அலுப்பு ஏற்பட்டால் இந்த நாட்குறிப்பை பார்க்கும்போது அலுப்பு நீங்கும். இதற்கென்று பிரத்யேக செயலிகள் உள்ளன. அவற்றை பயன்படுத்தவும்.

    உடற்பயிற்சி ஆடைகள்

    நாம் உடற்பயிற்சி செய்த பிறகு வியர்வை காரணமாக நமது ஆடைகள் மிகவும் ஈரமாகிவிடுகிறது. எப்போதும் உடற்பயிற்சிக்கு பிறகு அந்த ஆடைகளை மாற்றி விட வேண்டும். ஆனால் சிலர் தங்களது ஆடைகளை மாற்றுவதில்லை. ஈரமான ஆடைகளை அணிவது உங்களுக்கு குளிர்ச்சியாக இருக்கலாம். ஆனால் உடற்பயிற்சிக்கு பின்பாக உங்கள் சருமத்தை உலர வைக்க வேண்டும். எனவே ஆடைகளை மாற்ற வேண்டும்.

    இந்த வழிமுறைகளை எல்லாம் சரியாக பின்பற்றுவதன் மூலம் சரியான முறையில் நாம் உடற்பயிற்சியை செய்து ஆரோக்கியமான உடல் நலனை பெற முடியும்.

    • இளம் தலைமுறையினர் பலரும் இளநரை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.
    • கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான இலை கருவேப்பிலை.

    முடி உதிர்தல் பிரச்சனை எந்த அளவுக்கு கவலையை ஏற்படுத்துமோ அதே அளவுக்கு இள நரை பிரச்சனையும் நிம்மதியை தொலைத்துவிடும். அதற்கேற்ப இளம் தலைமுறையினர் பலரும் இளநரை பிரச்சனையால் அவதிப்படுகிறார்கள்.


    இன்றைய ஐ.டி. யுகத்தில் இளம் தலைமுறையினர் பலரும் இணையதளத்திலேயே கண்ணும், கருத்துமாக மூழ்கி இருப்பதும், நேர மேலாண்மையை கடைப்பிடிக்காமல் விரும்பிய உணவுகளை இஷ்டப்பட்ட நேரத்தில் ருசிப்பதும், முதுமையில் வர வேண்டிய நரை இளமையிலேயே வந்துவிடுவதற்கு ஒரு வகையில் காரணமாக இருக்கிறது.

    திருமணம் செய்ய வேண்டிய வயதில் இப்படி இள நரையுடன் காட்சி அளிப்பது, இல்லற வாழ்க்கைக்குள் அடியெடுத்துவைப்பதற்கு பெருந்தடையாக அமைந்துவிடுகிறது.

    இள நரையை இயற்கையான முறையில் போக்குவது எப்படி? அதனை தடுப்பதற்கான எளிமையான வழிமுறைகள் என்னென்ன? என்பதை அறிந்து கொள்ளும் ஆர்வமும், அது பற்றிய இணையதள தேடலும் அதிகரித்திருக்கிறது.

    இளநரை வந்த பிறகு தடுப்பதற்கு முயற்சிப்பதை விட, இளநரை வராமல் காப்பதுதான் புத்திசாலித்தனம். அதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள்...


    கூந்தலை இளமையாக வைத்துக்கொள்ள, இளநரை இல்லாமல் பாதுகாத்து கொள்ள, நெல்லிக்காய் சிறந்த தேர்வாக அமையும். நெல்லிக்காயை நன்கு அரைத்து சாறு பிழிந்து அதே அளவுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணெய் இவை மூன்றையும் சேர்த்து காய்ச்சி தினமும் தலைமுடியின் வேர்க்கால்களில் தடவினால் இளநரை வராமல் தடுக்கலாம். தலையில் ஆங்காங்கே ஓரிரு இள நரை முடிகள் இருந்தால் அதன் மீதும் தடவி வரலாம்.

    இள நரை பாதிப்புக்குள்ளானவர்களின் அடுத்த கேள்வி, எதையாவது சாப்பிட்டால் இளநரை சரியாகுமா என்பது தான். இவர்கள் கட்டாயம் உணவில் சேர்த்து கொள்ள வேண்டிய முக்கியமான இலை கருவேப்பிலை.


    தம் பெயரிலேயே "கரு" (மை) சேர்ந்த இந்த இலை நம் கூந்தலையும் நிச்சயம் கருமையாக மாற்றும். சிலருக்கு பித்தத்தினால் கூட தலையில் நரை தோன்றும். இவர்கள் காலையில் காபி, டீ அருந்துவதற்கு பதிலாக ஒரு தேக்கரண்டி இஞ்சிச்சாறில் இரண்டு துளி தேன் சேர்த்து பருகி வந்தால் பித்த நரை வந்த சுவடே தெரியாமல் மறைந்து விடும்.

    நிறைய வீடுகளில் இப்பொழுதெல்லாம் மூங்கில் மரத்தை வாஸ்துவுக்காக வளர்க்கிறார்கள். மூங்கில் இலையும் சரி, அது தரும் அழகும் சரி நம்மை என்றுமே இளமையாக வைத்திருக்க உதவும்.


    மூங்கில் இலைகளை தேங்காய் எண்ணெய்யில் இரண்டு வார காலம் வரை ஊற வைத்து, அந்த எண்ணெய்யை தினமும் தலைக்கு தடவி வந்தால், நரை இல்லாத முடி நிச்சயம் கிடைக்கும்.

    வெந்தயம், சீரகம், வால்மிளகு இந்த மூன்று பொருட்களையும் எடுத்து பொடி செய்து அதை தேங்காய் எண்ணெய்யில் கலந்து தடவி வந்தால் இள நரையால் வந்த மனக்குழப்பம் காணாமலேயே போய்விடும்.


    தினமும் பல வகையான கீரை உணவுகளை சாப்பிடணும். கரிசலாங்கண்ணி கீரை நம் கண்ணுக்கு குளுமை தந்து, கூந்தலுக்கு இளமை தரக்கூடிய கீரை.


    இந்த கீரையை நன்றாக அரைத்து, அதிலிருந்து சாறும் எடுத்து அதை அப்படியே தேங்காய் எண்ணெய்யில் கலந்து காயவைத்து தேய்த்து பாருங்கள். பசுமை மாறா இந்த கீரை, கருமை மாறா கூந்தலை பரிசளித்ததை எண்ணி பாராட்டுவீர்கள்.

    முருங்கைகீரையும் முடி வளர்ச்சிக்கும், இளநரைக்கும் தீர்வு தரக்கூடியது.

    • முதுமையில் மூளையைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது.
    • மூளையில் டோபமைன் என்ற ரசாயனத்தின் குறைவால் ஏற்படுகிறது.

    முதுமையில் மூளையைத் தாக்கும் நோய்களில் முக்கியமானது - 'பார்கின்சன்' என்கிற 'மூளை நடுக்குவாதம்'.

    பார்கின்சன் நோய், பார்கின்சன் சிண்ட்ரோம், பார்கின்சன் பிளஸ் சிண்ட்ரோம், பார்கின்சோனிசம் என்று உதறு வாதத்தில் பல பிரிவுகள் இருக்கின்றன. நோயாளிகளும், சில நேரங்களில் மருத்துவர்களும் கூட இதனை தனித்தனியாக பார்க்காமல் ஒரே நோயாக கருதுகின்றனர்.


    இதில் பார்கின்சன் நோய் என்பது மூளையில் டோபமைன் என்ற ரசாயனத்தின் குறைவால் ஏற்படுகிறது. இது மருந்துகளின் மூலம் குணப்படுத்தக்கூடிய நோய்.

    ஆனால், ரத்த குழாய் பிரச்சினைகளாலோ, சில மருந்துகளை உட்கொள்வதாலோ, நரம்பியல் பிரச்சினைகளாலோ பிற நடுக்குவாதங்கள் ஏற்படலாம். இவற்றை, எளிதில் குணப்படுத்த முடியாது. இந்த நோய்க்கான காரணங்களை கண்டுபிடித்து அதற்குரிய மருந்துகள் தரப்பட வேண்டும்.


    உலக அளவில் 70 வயதைக் கடந்தவர்களில் லட்சத்துக்கு 1,700 பேர் இந்த நோயால் பாதிக்கப்படுகிறார்கள். அதாவது ஒரு மணி நேரத்துக்கு ஒருவர் புதிதாக இதனால் பாதிக்கப்படுகிறார் என்கிறது உலக சுகாதார நிறுவனம். அதிலும் பெண்களைக் காட்டிலும் ஆண்கள் ஒன்றரை மடங்கு அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

    நம் நடுமூளையில் சற்றே அடர்ந்த கறுப்பு நிறத்தில் இருக்கும் Substantia nigra (SN) என்கிற பகுதியில் உள்ள மூளை நியூரான்கள் தேவையான அளவு சுரக்க வேண்டிய 'டோபமைன்' (Dopamine) என்கிற வேதியியல் சுரப்பு, முறையாகச் சுரக்காததால் சீரமைக்கவே முடியாத அளவுக்கு உடலில் பாதிப்புகள் ஏற்படுவதே நடுக்குவாதம்.


    நடுக்குவாத அறிகுறிகள்

    * அடிக்கடி கீழே விழுதல், நடையில் தடுமாற்றம், எழுதுவதில், கையெழுத் திடுவதில் தடுமாற்றம்.

    * நினைவாற்றலில், சிந்தனையில், அன்றாட வேலைகளில் திறன் குறைவு, செயற்கையான கற்பனைகள் அதிகரிப்பு.

    * மலச்சிக்கல், உணவை விழுங்குவதில், சிறுநீர் கழிப்பதில் சிரமம்.

    * தொடக்க நிலை அறிகுறிகள் உடலின் ஒரு பக்கம் மட்டுமே தெரியும்.

    உடலின் ஒரு பக்கம் மட்டுமே நடுக்கம் இருக்கும், கூடவே தோள் மூட்டு (அ) இடுப்பு மூட்டுப் பகுதியில் உள்ள தசைகளில் ஒரு பிடிப்பு ஏற்பட்டு நடக்கும்போது சிரமம், தசைகளில் வலி, கைகளை தாராளமாய் வீசி நடக்க முடியாத தன்மை போன்றவை காணப்படும். திடீரென உட்காரவோ நடக்கவோ, இல்லை நடந்துகொண்டிருக்கும் போது திடீரென நிற்கவோ முடியாது. தினசரி அடிப்படைத் தேவைகளுக்கும் உதவியாளர்கள் தேவைப்படுவார்கள்.

    • மங்கலான சிவப்பு ஒளி தரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.
    • பிஸ்தாக்களில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது.

    மூளையில் உள்ள ஒரு சிறிய சுரப்பி பினியல் சுரப்பி. இது மெலடோனின் என்ற ஹார்மோனை சுரக்கிறது. இந்த ஹார்மோன் உடலின் சர்க்காடியன் ரித சுழற்சியை ஒழுங்கு படுத்துகிறது.

    சர்க்காடியன் ரிதம் என்பது நமது மூளையில் உள்ள 24 மணிநேர உடல் இயக்க கடிகாரமாகும். நமது உறக்கம்-விழிப்பு சுழற்சியை இது தீர்மானிக்கிறது. 'தூக்க ஹார்மோன்' என்று குறிப்பிடப்படும் மெலடோனின் இரவில் அதிக அளவிலும், பகலில் குறைந்த அளவிலும் சுரக்கிறது.


    பினியல் சுரப்பி கண்களில் உள்ள விழித்திரையிலிருந்து ஒளி-இருட்டு (பகல்-இரவு) சுழற்சியைப் பற்றிய தகவலைப் பெறுவதால், அதற்கேற்ப மெலடோனினை வெளியிடுகிறது. ஒளியைக் கண்டறிய முடியாத பார்வைத் திறன் அற்றவர்களுக்கு பொதுவாக பழக்கத்தின் வாயிலாக சர்க்காடியன் ரிதம் ஒழுங்குபடுத்தப்படுகிறது.

    மெலடோனின் அளவை அதிகரிக்க என்ன செய்ய வேண்டும்?

    1) இரவில் நீல ஒளியை தவிர்த்து மங்கலான சிவப்பு ஒளி தரும் விளக்குகளைப் பயன்படுத்த வேண்டும்.

    2) படுக்கைக்கு போவதற்கு மூன்று மணி நேரத்திற்கு முன்பு டி.வி., கம்ப்யூட்டர், செல்போன் பார்ப்பதைத் தவிர்க்கவும்.

    3) இரவு ஷிப்டில் பணிபுரிந்தால் அல்லது இரவில் நிறைய எலக்ட்ரானிக் சாதனங்களைப் பயன்படுத்தினால், நீல நிற ஒளியைத்தடுக்கும் கண்ணாடிகளை அணியவும், அல்லது இரவில் நீலம், பச்சை அலை நீளத்தை வடிகட்டக்கூடிய பாதுகாப்பு பட்டையை பயன்படுத்த வேண்டும்.


    மெலடோனின் ஹார்மோனை அதிகரிக்கும் உணவுகள்:

    1) டுனா மற்றும் எண்ணெய் சத்துள்ள மீன்கள், செர்ரி பழங்கள், வாழைப்பழம், முட்டை, பால், காளான் உணவுகள் போன்றவை மெலடோனின் சுரப்பை அதிகரிக்கும்.

    2) பிஸ்தாவில் உள்ள பிஸ்டாசிஸ் இயல்பாக மெலடோனின் அளவை அதிகரிக்கிறது, இதை இரவில் தூக்கத்திற்கு முன்பு சாப்பிட வேண்டும். மற்றும் பிஸ்தாக்களில் வைட்டமின் பி6 அதிகமாக உள்ளது. இது டிரிப்டோபனை மெலடோனினாக மாற்ற உதவுகிறது. ஆனால் வறுத்து சாப்பிடக்கூடாது.

    3) லாவெண்டரின் இனிமையான நறுமணம், சங்குபுஷ்ப மலர்கள் தூக்கத்தை மேம்படுத்தும் என்று ஆய்வுகள் கூறுகின்றன.

    • சைனஸ் குழியில் உள்ள திசுக்களில் ஏற்படும் அழற்சியாகும்.
    • சர்க்கரை நோயாளிகளுக்கு சைனசில் எளிதாக தொற்று ஏற்படுகிறது.

    சைனஸ் என்பது கன்னம், மூக்கின் பின்புறம் மற்றும் நெற்றியில் இருக்கும் எலும்புகளில் உள்ள காற்று நிரப்பப்பட்ட சிறிய துவாரங்களாகும். பிரான்டல், மேக்சிலரி, ஸ்பீனாய்ட், எத்மாய்ட் எனப்படும் நான்கு ஜோடி சைனஸ்கள் தலையில் உள்ளன.

    இதில் உள்ள மீயூகஸ் (சளி) மூக்கின் உட்புறத்தை ஈரமாகவும், சுத்தமாகவும் பராமரித்து, பாக்டீரியா மற்றும் இதர தொற்றுகள் வராமல் தடுக்கிறது. சைனசைட்டிஸ் அல்லது புரை அழற்சி என்பது சைனஸ் குழியில் உள்ள திசுக்களில் ஏற்படும் அழற்சியாகும்.


    பொதுவாக பாக்டீரியா, வைரஸ் அல்லது பூஞ்சை தொற்றுக்களாலும் ஒவ்வாமையாலும் திசுக்களில் அழற்சி உண்டாகிறது. இது சைனஸ்சில் சளியை அதிகரிக்கச் செய்து அடைப்புக்கு வழி வகுத்து வலியை ஏற்படுத்துகிறது.

    அக்யூட் சைனசைட்டிஸ், சப்பகியூட் சைனசைட்டிஸ், நாள்பட்ட சைனசைட்டிஸ், மீள்வரும் சைனசைட்டிஸ் என்று சைனசைட்டிஸ் நான்கு வகைப்படும்.

    சர்க்கரை நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு திறன் குறைவாக உள்ளதால் சைனசில் எளிதாக தொற்று ஏற்படுகிறது.


    மேலும் புகைப்பிடித்தல், மூக்கு தண்டு விலகல், குளிர்கால நிலை, ஈரப்பதம் மாற்றம், காற்று மாசடைதல், மூக்கின் உட்பகுதியில் ஏற்படும் சதை வளர்ச்சி ஆகியவை சைனசைட்டிஸ் ஏற்பட காரணிகள் ஆகும்.

    சர்க்கரை நோயாளிகளில் கிட்டத்தட்ட 54 சதவீதம் பேருக்கு இந்த பிரச்சனை ஏற்பட வாய்ப்புள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. குறிப்பாக ஈஸ்ட் மற்றும் பூஞ்சை தொற்றுக்களால் சர்க்கரை நோயாளிகளுக்கு எளிதில் சைனஸ் பாதிப்பு ஏற்படுகிறது.

    இதனை குணப்படுத்த மூக்கடைப்பு நீக்கி, நுண்ணுயிர் எதிர்ப்பு மருந்துகள், ஒவ்வாமை மருந்துகள் மற்றும் ஸ்டீராய்டு நாசி ஸ்ப்ரேக்கள் பரிந்துரைக்கப்படுகிறது. இவை பலன் தராவிட்டால் எண்டோஸ்கோபி சைனஸ் அறுவை சிகிச்சையின் மூலம் பாதிப்படைந்த திசுக்களை நீக்குவது பலனளிக்கும்.

    • கடவுச்சொல்லுடன் கூடிய டிஜிட்டல் பூட்டை நிறுவலாம்.
    • டோர் பெல் கேமராக்கள், ஸ்மார்ட் சாதனங்கள் கண்காணிப்புக்கு உதவும்.

    இப்போது பணி நிமித்தமாக வெளியூரில் தங்கியிருக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. "அத்தகைய பெண்கள் பெரும்பாலும், பணிபுரியும் மகளிர் விடுதி அல்லது பிற பெண்களுடன் சேர்ந்து வீடு, அறை எடுத்து தங்குவதை விரும்புவார்கள். அதுதான் பாதுகாப்பு என்று கருதுவார்கள்.

    ஆனால் சில பெண்கள், பல்வேறு காரணங்களால், தனியாக வசிக்கும் நிலை இருக்கலாம்.

    இந்த நிலையில், அவர்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு, பின்வரும் குறிப்புகளை மனதில் வைத்து செயல்பட வேண்டும்...


    * தனியாக வசிக்கும் பெண், தாள் இருக்கும் வீடு அல்லது அடுக்குமாடிக் குடியிருப்பின் கதவுகள், ஜன்னல்கள், பூட்டுகள், கிரில்கள் ஆகியவை பாதுகாப்பாக இருக்கிறதா என்பதை உறுதி செய்துகொள்ள வேண்டும். பயோமெட்ரிக் அனுமதியுடன் கூடிய ஸ்மார்ட் கதவு பூட்டு அல்லது கடவுச்சொல்லுடன் கூடிய டிஜிட்டல் பூட்டை நிறுவலாம்.

    * ஒரு புதிய வீட்டுக்குச் செல்லும்போது, பூட்டுகளை மாற்றி, மாற்று சாவிகள் யாருக்கும் எளிதாக கிடைக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். செக்யூரிட்டி கேமராக்கள், டோர் பெல் கேமராக்கள் போன்ற ஸ்மார்ட் சாதனங்கள், கண்காணிப்புக்கு உதவும். நாம் வெளியில் இருந்தாலும் வீட்டை கவனிக்க இதுபோன்ற சாதனங்கள் கைகொடுக்கும்.

    * நாய் வளர்ப்பதை பலரும் சிறந்த பாதுகாப்பு உத்தியாக கருதுகிறார்கள். பராமரிக்க முடிந்தால், செல்லப்பிராணி வளர்ப்பில் ஆர்வம் இருந்தால், நாய் வளர்க்கலாம்.


    * நம்பிக்கைக்குரிய அக்கம்பக்கத்து பெண்களுடன் நட்பை ஏற்படுத்திக்கொள்ளலாம். வெளியாட்களை, அவர்கள் பெண்களாகவே இருந்தாலும் வீட்டுக்கு வரவழைப்பதை தவிர்க்கலாம்.

    * தனியாக வசிக்கும் பெண்கள், தங்களின் முகவரி, தொடர்பு விவரங்களை குடும்பத்தினர். நண்பர்களுடன் மட்டும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.

    * போலீஸ் அவசர அழைப்பு எண் (100), தேசிய மகளிர் ஆணைய (NCW) உதவி எண் (011-23237166), பெண்கள் உதவி எண் (181) போன்ற அவசர தொடர்பு எண்களை நினைவில் வைத்திருக்கவும்.

    * Safetipin, bSafe, Vithu காப்பு செயலிகளை செல்போனில் பதிவிறக்கி வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் பகுதி மகளிர் குழுக்களுடன் இணைய முயற்சிக்கவும், ஆன்லைன் மன்றங்களில் சேரவும் அல்லது சமூக நிகழ்வுகளில் பங்கேற்கவும் ஆர்வம் காட்டலாம்.

    * நீங்கள் வசிக்கும் பகுதி எவ்வளவு பாதுகாப்பாகத் தோன்றினாலும், எப்போதும் சுற்றுப்புறத்தை கவனத்தில் கொள்ள வேண்டும். தனிமையான பகுதிகளில், குறிப்பாக இரவில் நடப்பதைத் தவிர்க்கவும். கூடியவரை, பொதுபோக்குவரத்து அல்லது சரிபார்க்கப்பட்ட ஓட்டுநருடன், சவாரி-பகிர்வு சேவைகளைப் பயன்படுத்தவும்.

    * தனியாக வசிப்பதை, முன்பின் தெரியாதவர்களிடம் தெரிவிக்க வேண்டாம். அவர்கள், நீங்கள் அடிக்கடி பார்ப்பவர்களாக இருந்தாலும் சரி.


    * சமூக ஊடகங்களில் தொடர்ந்து வெளியிடப்படும் பதிவுகள், ஒருவரின் பாதுகாப்புக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம். தனியாக வாழ்வதை சமூக ஊடகங்களிலும் குறிப்பிடாமல். கவனமாக இருக்க வேண்டும். இருப்பிடம் அல்லது முகவரி போன்ற எந்தவொரு தனிப்பட்ட விவரங்களையும் இணையத்தில் எல்லோரும் அறியும் வகையில் தெரிவிக்க வேண்டாம்.

    * எந்த ஒரு சூழ்நிலையிலும், தமது தனிப்பட்ட பாதுகாப்பை மனதில் வைத்து செயல்படுவது. தனியாக வசிக்கும் பெண்களின் பொறுப்பு.

    • வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் அபாயங்கள் உள்ளன
    • உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.

    இந்தியாவில் காய்ச்சல் தலைவலிக்கு பெரும்பாலனோர் பாராசிட்டமால் வலி நிவாரணி மாத்திரைகளை பயன்படுத்துகின்றனர். ஆனால் பாராசிட்டமால் மாத்திரைகள் பல்வேறு ஆய்வுகளில் உட்கொள்ள தகுதி அற்றவையாக வரையறுக்கப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்தும் 65 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களுக்கு இரைப்பை குடல், இருதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான கோளாறுகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது.

     

    இங்கிலாந்தின் நாட்டிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் நடத்தப்பட்ட இந்த ஆய்வில் 180,000 க்கும் மேற்பட்ட நோயாளிகளின் உடல்நலன் குறித்த தரவுகள் ஆராயப்பட்டது.

    பாராசிட்டமால் மாத்திரையை அடிக்கடி பயன்படுத்துபவர்களிடையே வயிற்றுப் புண், இதய செயலிழப்பு, உயர் இரத்த அழுத்தம் மற்றும் நாள்பட்ட சிறுநீரக நோய் ஆகியவற்றின் அபாயங்கள் அதிகரித்துள்ளன என்ற முடிவை இந்த ஆய்வு முன்வைக்கிறது.

    அதன்படி, வயதானவர்கள் நீண்ட காலமாக பாராசிட்டமால் பயன்படுத்தினால் நாள்பட்ட சிறுநீரக நோய்க்கான ஆபத்து 19%, இதய செயலிழப்பு சம்பவங்களில் 9% அதிகரிப்பு மற்றும் உயர் இரத்த அழுத்தம் 7% அதிகரிக்கும் என்று ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.  

    ×