search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "கட்டுக்கதைகள்"

    • ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமானது.
    • கண்மூடித்தனமாக நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள்.

    உடலை கட்டுக்கோப்பாக பராமரிப்பதற்கும், ஆரோக்கியமாக வாழ்வதற்கும் தினமும் உடற்பயிற்சி செய்வது அவசியமானது என்பதை உணர்ந்து பலரும் பல்வேறு பயிற்சிமுறைகளை கையாளுகிறார்கள். உடற்பயிற்சி செய்யும் விஷயத்தில் பல கட்டுக்கதைகள் உலவுகின்றன. அதனை கண்மூடித்தனமாக நம்பி பின்பற்றுபவர்களும் இருக்கிறார்கள். அத்தகைய கட்டுக்கதைகள் பற்றியும், அவற்றின் உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

    கட்டுக்கதை 1:

    வயிற்றுப்பகுதி பருமன் இல்லாமல் 'ஸ்லிம்மாக' காட்சி அளிப்பதற்கு 'கிரெஞ்சஸ்' பயிற்சி செய்தால் போதும்.

    உண்மை:

    தரையில் படுத்தபடி கை, கால்களை வளைத்து செய்யும் 'கிரெஞ்சஸ்' பயிற்சியை மட்டும் மேற்கொள்வது வயிற்றுப்பகுதியை ஸ்லிம்மாக மாற்றாது. சரியான உணவுப்பழக்கத்தையும், முறையான உடற்பயிற்சிகளையும் செய்து வருவது அவசியமானது.

    கட்டுக்கதை 2:

    வியர்வை அதிகம் வெளியேறினால் அதிக கொழுப்பு எரிக்கப்படுகிறது என்று அர்த்தம்.

    உண்மை:

    வியர்வை என்பது கலோரி எரிக்கப்படுவதை குறிக்காது. உடற்பயிற்சி செய்யும்போதோ, வேறு ஏதேனும் உடல் செயல்பாடுகளின்போதோ, சூரியக்கதிர் வீச்சுகள் அதிகம் வெளிப்படும் சமயத்திலோ வியர்வை வெளியேறுவது உடலை குளிர்விக்கும் அங்கமாகவே அமையும். அது கொழுப்பு எரிக்கப்படுவதற்கான அறிகுறி அல்ல.

    கட்டுக்கதை 3:

    உடல் எடையை குறைப்பதற்கு கார்டியோ பயிற்சி செய்வதுதான் சிறந்தது.

    உண்மை:

    பளு தூக்குதல் உள்ளிட்ட வலிமையான பயிற்சிகளை மேற்கொள்வது உடல் எடையை குறைப்பதற்கு முக்கியமானது. அது வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்கச் செய்யும். தசைகளையும் வலிமைப்படுத்தும். அதற்காக கார்டியோ பயிற்சிகளை மட்டுமே மேற்கொள்ள வேண்டும் என்றில்லை.

    கட்டுக்கதை 4:

    நன்கு உடற்பயிற்சி செய்தால் போதும். ஊட்டச்சத்துமிக்க பொருட்களை உண்ணாதது பற்றி கவலைப்பட வேண்டாம்.

    உண்மை:

    உடற்பயிற்சியால் ஊட்டச்சத்து தேவையை ஈடுகட்ட முடியாது. உடல் எடை குறைப்பு மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு ஊட்டச்சத்து முக்கிய பங்கு வகிக்கிறது.

    கட்டுக்கதை 5:

    ஊட்டச்சத்து குறைபாடு இருந்தால் அதனை நிரப்புவதற்கு சத்து மாத்திரை சாப்பிடலாம்.

    உண்மை:

    சத்துமாத்திரைகளால் ஊட்டச்சத்துக்களின் தேவையை முழுமையாக நிரப்ப முடியாது. உட்கொள்ளும் உணவுகள் மூலமே அத்தியாவசிய ஊட்டச்சத்துக்களை பெற முடியும்.

    கட்டுக்கதை 6:

    கார்போஹைட்ரேட்டுகள் அதிகம் கொண்ட உணவுப்பொருட்களை சாப்பிடுவது நல்லதல்ல.

    உண்மை:

    உடலுக்கு தேவையான ஆற்றலை உருவாக்குவதற்கும், ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கும் கார்போஹைட்ரேட்டுகள் அவசியமானவை. அவற்றை அதிகம் சேர்ப்பதுதான் ஆபத்தானதே தவிர சரியான அளவில் உட்கொள்வது முக்கியமானது. ஒட்டுமொத்தமாக கார்போஹைட்ரேட்டை தவிர்ப்பது நல்லதல்ல.

    கட்டுக்கதை 7:

    உடற்பயிற்சி செய்யும்போது வலியை அனுபவிப்பது தவறில்லை. வலி இல்லாமல் பலன் கிடைக்காது.

    உண்மை:

    உடற்பயிற்சியின்போது வலியை அனுபவிப்பது உடல் நலனுக்கு எந்தவொரு நன்மையையும் கொடுக்காது. உடற்பயிற்சி செய்யும்போது ஏற்படும் அசவுகரியத்துக்கும், வலிக்கும் வித்தியாசம் உள்ளது. காயம் ஏற்படும் அளவுக்கு கடும் பயிற்சியோ, காயத்துடன் பயிற்சியோ மேற்கொள்ளக்கூடாது.

    கட்டுக்கதை 8:

    பளுதூக்குதல் போன்ற வலிமையான பயிற்சிகளை செய்யும் பெண்கள் உடல் பருமன் பிரச்சினையை எதிர்கொள்கிறார்கள்.

    உண்மை:

    பெண்களுக்கு ஆண்களைப் போல அதிக அளவில் டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன்கள் சுரப்பதில்லை. வலிமை பயிற்சி செய்வது தசைகளை வலுப்படுத்துவதற்குத்தான் உதவும்.

    கட்டுக்கதை 9:

    ஜிம்மில் அதிக நேரம் பயிற்சி செய்வது நல்ல பலனை தரும்.

    உண்மை:

    உடற்பயிற்சி செய்யும் நேரத்தை விட பயிற்சியின் தரம் முக்கியமானது. அதிக நேரம் பயிற்சி செய்வது உடல் செயல்திறன் குறைவதற்கு வழிவகுக்கும்.

    கட்டுக்கதை 10:

    உடலின் குறிப்பிட்ட உறுப்பை மையப்படுத்தி உடற்பயிற்சி செய்வது கொழுப்பை குறைக்கும்.

    உண்மை:

    குறிப்பிட்ட உடல் உறுப்புகளுக்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்வது அந்த பகுதிகளில் சேரும் கொழுப்பை குறைக்கும் என்று நம்புவது கட்டுக்கதைதான். ஏனெனில் உடற்பயிற்சி மூலம் கொழுப்பு கரையும் செயல்முறை உடல் முழுவதும் ஒரே சீராகவே நடைபெறும். குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சேர்ந்திருக்கும் கொழுப்பு நீங்காது.

    • டெங்கு காய்ச்சல் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உலவுகின்றன.
    • குழந்தைகள்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகக்கூடும்.

    பருவ காலநிலையில் ஏற்பட்டிருக்கும் மாற்றம் கொசுக்கள், உற்பத்திக்கும், கொசுக்களால் பரவும் நோய்களுக்கும் வழிவகுத்துள்ளது. பல பகுதிகளில் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. டெங்கு காய்ச்சல் பற்றி ஏராளமான கட்டுக்கதைகள் உலவுகின்றன. அவை குறித்தும், அதன் உண்மை தன்மை குறித்தும், தற்காப்பு நடவடிக்கைகள் குறித்தும் பார்ப்போம்.

    கட்டுக்கதை 1: பப்பாளி இலைச் சாறு டெங்குவை குணப்படுத்தும். ஆட்டு பால், பப்பாளி இலைகள் மற்றும் கிலோய் சாறு உட்கொள்வதன் மூலம் ரத்த தட்டுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கையை அதிகரிக்கலாம்.

    உண்மை: இவற்றை உட்கொள்வது ரத்த தட்டுக்களின் (பிளேட்லெட்) எண்ணிக்கை சிறிதளவு உயர்வதற்கு வழிவகுக்கும் என்பது உண்மைதான். அதற்காக பப்பாளி இலை சாறு உள்ளிட்ட வீட்டு வைத்தியங்களை மட்டுமே நம்பியிருப்பது சரியான சிகிச்சைமுறை ஆகாது.

    டெங்கு காய்ச்சல் ஆரம்ப நிலையில் இருப்பவர்களுக்கு இவை ஓரளவுக்கு கைகொடுக்கும். ஆனால் டெங்கு நோயாளியின் பிளேட்லெட்டுகள் திடீரென வீழ்ச்சி அடைந்தால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். டெங்கு காய்ச்சல் உறுதிபடுத்தப் பட்டால் மருத்துவர்கள் பரிந்துரைக்கும் சிகிச்சை முறைகளை மேற்கொண்டு வருவதே பலனளிக்கும்.

    கட்டுக்கதை 2: முதியவர்கள், குழந்தைகள், கருமை நிறம் கொண்டவர்கள் மற்றும் பெண்கள் மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாகிறார்கள்.

    உண்மை: இந்தியா முழுவதும் பரவலாக இருக்கும் நம்பிக்கை இது. ஆனால் வயது, பாலினம், தோல் நிறம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒருவருக்கு டெங்கு காய்ச்சல் ஏற்படாது.

    அத்தகைய பாகுபாட்டை டெங்கு கொசு காண்பிக்காது. பலவீனமான நோய் எதிர்ப்பு சக்தி காரணமாக முதியவர்கள், குழந்தைகளுக்கு டெங்கு காய்ச்சல் கடுமையான பாதிப்பை உண்டாக்கலாம்.

    இதை தவிர வேறு காரணம் இல்லை. வயது, பாலினத்தை பொருட்படுத்தாமல் எவரும் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு உள்ளாகலாம். டெங்குவை விரட்ட நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதும், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவசியமானது.

    கட்டுக்கதை 3: டெங்கு கொசுக்கள் கருமையான, அடர் நிறம் கொண்ட ஆடைகளை அணிபவர்களையே கடிக்க விரும்புகின்றன.

    உண்மை: நிறங்களால் கொசுக்கள் ஈர்க்கப்படுவது உண்மைதான். கருப்பு, சியான், ஆரஞ்சு, சிவப்பு போன்ற அடர் நிறங்களை கொண்ட ஆடைகளுடன் சுவாசத்தின்போது வெளியிடப்படும் கார்பன்டை ஆக்ஸைடு வாயு, உடல் வெப்பம் போன்றவை டெங்குவை பரப்பும் கொசுக்களால் எளிதில் ஈர்க்கப்படுகின்றன.

    அதற்காக வெளிர் நிற ஆடை அணிபவர்களை கொசுக்கள் கடிக்காது என்பதல்ல. கொசுக்கள் அதிகம் உள்ள பகுதிகளில் இருப்பதை தவிர்ப்பது, கொசு விரட்டிகளை பயன்படுத்துவது பயனுள்ள தற்காப்பு நடவடிக்கைகளாக அமையும்.

    கட்டுக்கதை 4: ஒருவர் வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு ஆளாவார். அவருக்கு மீண்டும் டெங்கு காய்ச்சல் வராது.

    உண்மை: இதில் துளியும் உண்மை இல்லை. ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் டெங்கு பாதிப்புக்கு ஆளாகலாம்.

    டெங்குவை பரப்பும் ஏ.டி.எஸ். கொசுக்கள் பகல் பொழுதில் சுறுசுறுப்பாக இயங்குவதால் எளிதில் டெங்கு பரவும் அபாயம் இருக்கிறது. எனவே கொசு கடிப்பதை தவிர்க்க தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

    கட்டுக்கதை 5: ஒருவருக்கு ஒரே நேரத்தில் கொரோனா, டெங்கு காய்ச்சல் வராது.

    உண்மை: இவை இரண்டுமே வைரஸ் வகை நோய்கள். அதனால் இரண்டும் ஒரே சமயத்தில் ஒருவரை தாக்காது என்று கூற முடியாது.

    கொரோனா காலகட்டத்தில் இரண்டு நோய்த்தொற்றுகளாலும் நிறைய பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். எனவே டெங்கு, கொரோனா இரண்டையும் தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிக்க வேண்டும்.

    குழந்தைகள்தான் டெங்கு காய்ச்சல் பாதிப்புக்கு அதிகம் ஆளாகக்கூடும். அவர்களின் நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்த வைக்கும் உணவுகளை உட்கொள்ள செய்ய வேண்டும்.

    டெங்கு காய்ச்சலுக்கு தடுப்பூசியோ, லேசான டெங்கு பாதிப்புக்கு குறிப்பிட்ட சிகிச்சை முறையோ இல்லை. லேசான டெங்கு நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மருத்துவரின் வழிகாட்டுதலின்படி வீட்டிலேயே சிகிச்சை அளிக்கலாம்.

    கடுமையான வயிற்று வலி, தொடர் வாந்தி, வேகமாக சுவாசிப்பது, ரத்தப்போக்கு ஏற்படுவது, சோர்வு, சருமம் வெளிர் நிறத்துக்கு மாறுவது, தூக்கமின்மை, வாய், நாக்கு உலர்வடைவது, நீரிழப்பு ஏற்படுவது, சிறுநீர் கழிப்பது குறைவது போன்ற அறிகுறிகள் நிலைமையை மோசமாக்கும். இவற்றுள் ஏதேனும் ஒரு அறிகுறி கடுமையாக வெளிப்பட்டாலே உடனடியாக மருத்துவரை அணுகுவது அவசியமானது.

    • பளு தூக்கும் பயிற்சியை ஆண்கள் தான் பெரும்பாலும் மேற்கொள்வார்கள்.
    • பெண்களும் பளு தூக்கும் பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள்.

    `வெயிட் லிப்டிங்' எனப்படும் பளு தூக்கும் பயிற்சியை ஆண்கள் தான் பெரும்பாலும் மேற்கொள்வார்கள். அதிக எடை கொண்டிருப்பதும், கடினமான பயிற்சியாக கருதப்படுவதும் அதற்கு முக்கிய காரணமாகும். ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் பளு தூக்கும் பயிற்சி செய்வதற்கு ஆர்வம் காட்டுகிறார்கள். அது உடலை வலிமையாக்கும் பயிற்சியாக கருதப்பட்டாலும் பெண்களை பொறுத்தவரை உடல் எடையை அதிகரிக்க செய்துவிடும், ஆண்மைக்கான உடல்கட்டுக்கு வழிவகுத்துவிடும் என்ற கருத்து நிலவுகிறது. அது தொடர்பான கட்டுக்கதைகள் குறித்தும், உண்மைத்தன்மை பற்றியும் பார்ப்போம்.

    கட்டுக்கதை:

    பளு தூக்குவது பெண்களுக்கு காயங்களை ஏற்படுத்திவிடும்.

    உண்மை:

    பளு தூக்குவது மட்டுமல்ல, பொதுவாகவே விளையாட்டில் ஈடுபடும்போது காயங்கள் ஏற்படுவது இயல்பானது. பளு தூக்கும்போது யாருடைய உதவியையும் நாடாமலோ, பயிற்சியாளர் மேற்பார்வையின்றி பயிற்சி செய்ய முயற்சித்தாலோ காயங்கள் ஏற்படலாம். ஒருவர் தன் உடல் ஒத்துழைக்கும் தன்மையை தாண்டி அதிக எடையை தூக்குவதாலும் காயம் உண்டாகலாம். உடல் தகுதிக்கு ஏற்ப சரியான அளவிலும், கவனச்சிதறல் இல்லாமலும் பளு தூக்கினால் காயம் ஏற்படாது. எலும்புகள், மூட்டுகள், தசைகளை வலுவடையச் செய்து உடலை வலிமையாக்குவதற்கு பளு தூக்கும் பயிற்சி உதவும்.

    கட்டுக்கதை:

    பெண்கள் உடல் எடையை குறைக்க கார்டியோ பயிற்சியை தேர்வு செய்ய வேண்டும்.

    உண்மை:

    எந்தவொரு உடற்பயிற்சியும் உடல் எடையை குறைக்கும் முயற்சிக்கு 20 சதவீதம் மட்டுமே உதவும். போதிய ஓய்வு, ஆழ்ந்த தூக்கம், ஊட்டச்சத்துக்களை தேர்ந்தெடுத்து உண்பது, கலோரிகளை கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்ட வாழ்வியல் முறைகள்தான் உடல் எடையை நிர்வகிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும்.

    கட்டுக்கதை:

    கர்ப்பிணி பெண்கள் கடினமான பயிற்சிகளை செய்யக்கூடாது.

    உண்மை:

    பல ஆண்டுகளாக தொடர்ந்து பளுதூக்குதல் போன்ற கடினமான, வலிமை பயிற்சிகளை செய்து வரும் பெண்கள் கர்ப்ப காலத்தில் ஓய்வு எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இருப்பினும் மருத்துவர்கள், உடற்பயிற்சி நிபுணர்களின் அறிவுரையின்படியே செயல்பட வேண்டும்.

    அதற்கேற்ப உடல் தன்மை இருக்கிறதா? எத்தகைய பயிற்சிகளை செய்ய வேண்டும்? என்பதை அவர்கள்தான் முடிவு செய்ய வேண்டும். இத்தகைய பயிற்சிகளுக்கு பதில் இடுப்பு பகுதியை வலிமைப்படுத்தும் பயிற்சிகளை உடற்பயிற்சி நிபுணரிடம் ஆலோசனை பெற்று மேற்கொள்ளலாம்.

     கட்டுக்கதை:

    பளு தூக்குவது போன்ற கடினமான பயிற்சிகள் பெண்மை தன்மையை இழக்கச் செய்யும்.

    உண்மை:

    பளு தூக்கும் ஆணின் தசைகளில் ஏற்படும் மாற்றங்கள் பெண்களின் தசைகளிலும் வெளிப்படும் என்று நீங்கள் நம்பினால், அது நடைமுறையில் சாத்தியமற்றது. ஏனெனில் பருமனான தசைகள் கொண்ட உடல் அமைப்பைக் கட்டியெழுப்பும் அளவுக்கு டெஸ்டோஸ்டிரோனை பெண்ணின் உடல் உருவாக்க முடியாது. எனவே, பளு தூக்குவதால் பெண்மையில் மாற்றம் வெளிப்படும் என்பதில் உண்மை இல்லை.

    கட்டுக்கதை:

    மாதவிடாய் காலத்தில் பெண்கள் பளு தூக்குதல் போன்ற வலிமை பயிற்சிகளை செய்யக்கூடாது.

    உண்மை:

    ஒவ்வொருவரின் உடலும் வித்தியாசமானது. ஹார்மோனின் அளவுகளும், செயல்பாடுகளும் நபருக்கு நபர் மாறுபடும். உடல் ஒத்துழைப்பதற்கு ஏற்பவே பயிற்சிகளை மேற்கொள்வது நல்லது. திட்டமிட்டபடி பயிற்சி செய்ய முடியவில்லை என்றால் ஓய்வு எடுப்பதுதான் சரியானது.

    • பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள்.
    • உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள்.

    ரத்த தானம் செய்வது உன்னத சேவையாக கருதப்படுகிறது. இருப்பினும் பலர் ரத்த தானம் செய்வதற்கு தயங்குகிறார்கள். ரத்த தானம் செய்தால் உடல் பலவீனமடையும், உடல் ஆரோக்கியம் கெட்டுப்போகும் என்று கருதுகிறார்கள். ஆனால் ரத்த தானம் செய்வது ஆரோக்கியத்திற்கு பலம் சேர்க்கும் என்பது சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. ஆனாலும் ரத்த தானம் செய்பவர்களின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. ரத்த தானம் பற்றிய பொதுவான கட்டுக்கதைகளில் சிலவற்றை பார்ப்போம்.

    ரத்த தானம் செய்வது நரம்புகளுக்கு வேதனையை ஏற்படுத்தும்

    உண்மை:

    ரத்தம் எடுப்பதற்காக நரம்புக்குள் செருகப்படும் ஊசி காயத்தை ஏற்படுத்தாது. நரம்புகளுக்கும் எந்த பாதிப்பையும் உண்டாக்காது. ஊசியால் துளையிடப்பட்ட இடம் ஓரிரு நாளிலேயே இயல்பாகிவிடும். ரத்த தானம் செய்த பிறகு சோர்வாக இருப்பதாக உணரலாம். பழம் அல்லது பழச்சாறு பருகுவதன் மூலம் அந்த சோர்வில் இருந்து சட்டென்று மீண்டு விடலாம். நிறைய தண்ணீர் குடிப்பதும் உடலுக்கு பலம் சேர்க்கும்.

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும்

    உண்மை:

    ரத்த தானம் செய்வது நோய் எதிர்ப்பு மண்டலத்தை பாதிக்கும், உடலை பலவீனப்படுத்தும் என்பதில் உண்மை இல்லை. உடலில் உற்பத்தி செய்யப்படும் ரத்தத்தில் 30 சதவீதம் உடல் உறுப்புகளால் பயன்படுத்தப்படாமல்தான் இருக்கிறது. எனவே ரத்த தானம் செய்வதால் எந்த பாதிப்பும் நேராது. ரத்த தானம் செய்த சில மணி நேரங்களிலேயே ரத்த சிவப்பணுக்கள் மீண்டும் உருவாகிவிடும். புதிய ரத்தமும் உற்பத்தியாக தொடங்கிவிடும்.

    ரத்த தானம் செய்பவருக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும்

    உண்மை:

    ரத்த தானம் பெறும் ரத்த வங்கிகளுக்கு உலக சுகாதார நிறுவனமும், செஞ்சிலுவை சங்கமும் கடுமையான வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்திருக்கின்றன. கிருமி நீக்கம் செய்யப்பட்ட ஊசியைத்தான் பயன்படுத்த வேண்டும், பிறருக்கு பயன்படுத்திய ஊசியை பயன்படுத்தக்கூடாது போன்ற பாதுகாப்பு முன்னெச்சரிக்கைகளும் பின்பற்றப்படுகின்றன. அதனால் ரத்த தானம் மூலம் நோய்த்தொற்று பரவுவதற்கு வாய்ப்பு இல்லை.

    நீரிழிவு நோயாளிகள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    தினமும் இன்சுலின் செலுத்திக்கொள்பவர்கள், மருந்து மாத்திரைகளை அதிகம் உட்கொள்பவர்கள் ரத்த தானம் செய்வதை தவிர்க்கலாம். மற்றவர்கள் டாக்டரிடம் ஆலோசனை பெற்று முடிவு எடுக்கலாம்.

    பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு பெண்கள் முற்றிலும் தகுதியானவர்கள். ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறைவாக இருப்பவர்கள், ரத்த சோகை பாதிப்புக்கு ஆளானவர்கள் ரத்த தானம் செய்யக்கூடாது. இது ஆண்களுக்கும் பொருந்தும். ரத்த தானம் செய்வதற்கு ஒரு டெசிலிட்டருக்கு 12.5 கிராம் ஹீமோகுளோபின் (லிட்டருக்கு 125 கிராம்) தேவைப்படுகிறது. அதற்கும் குறைவான இருப்பவர்கள் ரத்த தானம் செய்ய தகுதி இல்லை. அதேபோல் கர்ப்பமாக இருக்கும் பெண்கள் ரத்த தானம் செய்யக்கூடாது.

    வயதில் சிறியவராகவோ, முதுமை அடைந்தவராகவோ இருந்தால் ரத்த தானம் செய்யக்கூடாது

    உண்மை:

    ரத்த தானம் செய்வதற்கு சிறியவர், பெரியவர் என்ற வரைமுறை இல்லை. எனினும் ரத்த தானம் செய்வதற்கான குறைந்த வயது வரம்பு 18 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதிகபட்ச வயது வரம்பு 65. இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் கருத்துப்படி, ரத்த தானம் செய்பவர்களில் பெரும்பாலானோர் 50 மற்றும் 60 வயது உடையவர்களாக இருக்கிறார்கள்.

    • குளிர்காலம் தொடர்பான சரும பிரச்சினைகள் கவலைக்கு காரணமாக இருக்கும்.
    • சருமத்தில் க்ரீம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது.

    குளிர்காலம் நெருங்க நெருங்க, சரும பராமரிப்பு குறித்த கவலைகள் பெண்களை ஆட்கொள்ளும். வறண்ட சருமம், மெல்லிய தோல், உதடு வெடிப்பு உள்பட குளிர்காலம் தொடர்பான பல்வேறு சரும பிரச்சினைகள் அந்த கவலைக்கு காரணமாக இருக்கும். இதற்கிடையே குளிர்கால சரும பராமரிப்பு பற்றி பல கட்டுக்கதைகளும் உலவுகின்றன. அத்தகைய கட்டுக்கதைகள் குறித்தும், உண்மை நிலவரம் பற்றியும் தெரிந்து கொள்வோம்.

    சருமத்தில் அதிக கிரீம் தடவினால் ஈரப்பதம் அதிகமாக இருக்கும்

    உண்மை: உதடோ, சருமமோ எந்த அழகு சாதனப்பொருட்களை பயன்படுத்துவதாக இருந்தாலும் குறைவாகவே பூச வேண்டும். அதிகம் பூசுவதால் ஈரப்பதமான சருமமாக மாறாது. மாறாக தோல் சுவாசிக்க முடியாமல், இறுதியில் சருமம் சேதமடையக்கூடும். குறிப்பாக குளிர்காலத்தில் சருமங்களை பராமரிப்பதற்கு இந்த விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம். அடர் தன்மை கொண்ட கிரீம்களை பயன்படுத்துவதை விட லோஷன்களை பயன்படுத்துவது ஈரப்பதத்தை தக்க வைக்க உதவும்.

     குளிர்காலத்தில் சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எண்ணெய் உதவும், மாய்ஸ்சுரைசர் தேவையில்லை

    உண்மை: வறண்ட மற்றும் எண்ணெய் பசை கொண்ட சருமங்களுக்கு இடையே ஒருசில மாறுபாடுகள்தான் இருக்கிறது. வறண்ட சருமத்தை ஒப்பிடும்போது எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்கவைக்க மென்மையான தன்மை கொண்ட லோஷன் தேவைப்படும். ஒவ்வொரு சரும வகையும் வானிலை மாற்றங்களால் பாதிக்கப்படும். குளிர்ந்த காற்று சருமத்தை வறண்டு போகச் செய்துவிடும். இதற்கு எண்ணெய் சருமமும் விதிவிலக்கல்ல.

    அதனால் குளிர்காலத்தில் எண்ணெய் பசை கொண்ட சருமத்திற்கு ஈரப்பதத்தை தக்க வைக்க எதுவும் பயன்படுத்த வேண்டியதில்லை என்பது தவறானது. சருமத்தின் தன்மைக்கு ஏற்ப சம நிலையை பராமரிக்கும் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்துவது நல்லது. அவை ஈரப்பதத்தை பராமரிப்பதற்கும், புற ஊதாக்கதிர்களிடம் இருந்து சருமத்திற்கு பாதுகாப்பு வழங்குவதற்கும் உதவும்.

     குளிர்காலத்தில் பழங்கள் மற்றும் காய்கறிகளை தவிர்க்கலாம்

    உண்மை: பழங்கள் மற்றும் காய்கறிகள் நிறைந்த சீரான உணவை உண்பது சருமத்தின் ஆரோக்கியத்திற்கு முக்கியமானது. குளிர்காலத்திலும், இந்த உணவுகள் சருமத்தை பாதுகாக்கக்கூடிய அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் ஆன்டி ஆக்சிடென்டுகளை வழங்குகின்றன. எனவே அவற்றை தவிர்க்கக்கூடாது.

    குளிர்காலத்தில் லிப் பாம்களை அதிகமாகப் பயன்படுத்துவது உதடு வெடிப்பு பிரச்சினையை சரி செய்யும். உண்மை: உதட்டுக்கு லிப் பாம்களை அதிகமாக போடுவது பிரச்சினைக்குத்தான் வித்திடும். உதடுகள் வறண்டு போயிருந்தால் அதன் மீது படிந்திருக்கும் இறந்த செல்களை அகற்றாமல் லிம் பாம் உபயோகிப்பது பயனற்றது. எப்போதும் லிப் பாமை ஒரு அடுக்கு மட்டுமே போடுவது போதுமானது. முதலில் இறந்த செல்களை நீக்க உதவும் 'லிப் ஸ்கிரப்'களை பயன்படுத்திவிட்டு அதன் பிறகு லிப் பாமை தடவ வேண்டும்.

    பெரும்பாலான லிப் பாம்களில் சருமத்திற்கு தீங்கையும், நீரிழப்பையும் ஏற்படுத்தும் வண்ணங்கள் அல்லது வாசனை திரவியங்கள் கலந்திருக்கக்கூடும். குளிர்கால உதடு பராமரிப்புக்கு, இயற்கை எண்ணெய் கொண்டு தயார் செய்யப்பட்ட நெய் பயன்படுத்துவது நல்லது. தரமான லிப் பாமும் பயன்படுத்தலாம்.

    குளிர்காலத்தில் வெந்நீரில் குளிப்பது சருமத்தை ஈரப்பதத்துடன் வைத்திருப்பதற்கு சிறந்த வழி

    உண்மை: குளிர் சமயத்தில் சுடு நீர் குளியல் உடலுக்கு ஆறுதல் அளிக்கும். ஆனால் சருமத்தில் படர்ந்துள்ள இயற்கை எண்ணெய் பசைகளை அகற்றி சருமத்தை உலர்வடைய செய்துவிடும். சருமத்திற்கு எரிச்சல் உணர்வையும் உண்டுபண்ணும். அதிக சூட்டை உணரவைக்காத வெதுவெதுப்பான நீரில் குளிப்பது அதிகப்படியான ஈரப்பத இழப்பை தடுக்கும். இருப்பினும் சுடு நீர் குளியல் போடுவதாக இருந்தால் அதிக நேரம் குளிக்கக்கூடாது.

    குளிர்காலத்தில் இறந்த செல்களை அகற்றும் செயல்முறையை தவிர்க்க வேண்டும்

    உண்மை: கோடைகாலம் சரும பராமரிப்புக்கு சிறந்த நடவடிக்கையாக கருதப்படுகிறது. குளிர்காலத்திற்கும் முக்கியமானது. இருப்பினும் அடிக்கடி எக்ஸ்போலியேட் செய்வது சருமத்திற்கு வறட்சி மற்றும் எரிச்சலை உண்டாக்கும். சருமத்தின் இயற்கையான எண்ணெய்களை அகற்றாமல் இறந்த சரும செல்களை அகற்றும் தன்மை கொண்ட மென்மையான எக்ஸ்போலியண்ட்களை தேர்வு செய்யவும்.

    குளிர்காலத்தில் சன்ஸ்கிரீன் அவசியம் இல்லை

    உண்மை: சன்ஸ்கிரீன் புற ஊதா கதிர்வீச்சிலிருந்து சருமத்தை பாதுகாக்கும். இந்த கதிர்கள் சருமத்தின் தோலை நேரடியாக பாதிக்கும். குளிர்காலத்தில் கருமேகங்கள் உலவும் என்றாலும் புற ஊதாக்கதிர்கள் வெளிப்படாமல் இருக்காது. அது மேகங்கள் வழியாக ஊடுருவி சருமத்தை பாதிக்கவே செய்யும். எனவே குளிர்கால சரும பராமரிப்பு வழக்கத்திலும் சன்ஸ்கிரீன் இடம் பெறுவதை உறுதிப் படுத்திக் கொள்ளுங்கள்.

    அடர் தன்மை கொண்ட மாய்ஸ்சுரைசர்கள் எப்போதும் சிறந்தவை

    உண்மை: குளிர்காலத்தில் ஈரப்பதத்தை பராமரிப்பதற்கு உதவும் மாய்ஸ்சுரைசர் அடர் தன்மை கொண்டிருந்தால் சிறந்தது என்பது சரியானது அல்ல. அத்தகைய மாய்ஸ்சுரைசர்கள் சில சமயங்களில் சரும துளைகளை அடைத்துவிடும். வேறு சில சரும பிரச்சினைகளையும் ஏற்படுத்தும். அதற்கு பதிலாக, உங்கள் சரும வகைக்கு ஏற்ற ஈரப்பதமூட்டும் மாய்ஸ்சுரைசரை தேர்ந்தெடுப்பது சரியானது. ஹைலூரோனிக் அமிலம், கிளிசரின் அல்லது செராமைடுகள் போன்ற சேர்மங்கள் கொண்ட மாய்ஸ்சுரைசரை பயன்படுத்தலாம்.

    ×