என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலமும் சென்றனர்.
    திருவண்ணாமலை கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலமும் சென்றனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பஞ்ச பூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகிறது. இக் கோவிலுக்கு தினமும் உள்ளூர் மட்டுமின்றி வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து விட்டு செல்கின்றனர். மேலும் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை விடுமுறை நாளான நேற்று அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இதனால் பக்தர்கள் கோவிலில் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். மேலும் பக்தர்கள் பலர் தனித்தனியாக கிரிவலமும் சென்றனர்.

    மாதம் தோறும் வரும் சிவராத்திரியை விட மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசியன்று வரும் சிவராத்திரி அனைத்து நலன்களையும் ஒரு சேர வழங்குவதால் மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.
    சிவராத்திரியை முன்னிட்டு நாளை (செவ்வாய்க்கிழமை) அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள், அலங்காரங்கள், ஆன்மிக நிகழ்ச்சிகள் மற்றும் பக்தர்களுக்கு வேண்டிய வசதிகளை செய்து தர தமிழக அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு உத்தரவிட்டு உள்ளார். அதனடிப்படையில் அனைத்து சிவாலயங்களிலும் மின்சார விளக்குகளால் அலங்கரிக்கும் பணிகள் நடந்து வருவதாக அறநிலையத்துறை அறிவித்து உள்ளது.

    இந்த நிலையில் சிவராத்திரியன்று சிவாலயங்களில் நடத்தப்படும் வழிபாடுகள் குறித்து மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் தலைமை அர்ச்சகர் ஜெயா குருக்கள் (எ) வெங்கட சுப்பிரமணியம் சிவாச்சாரியார் கூறியதாவது:-

    சிவாலயங்களில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் மகா சிவராத்திரி மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். குறிப்பாக மாதம் தோறும் வரும் சிவராத்திரியை விட மாசி மாதம் கிருஷ்ணபட்சம் சதுர்தசியன்று வரும் சிவராத்திரி அனைத்து நலன்களையும் ஒரு சேர வழங்குவதால் மகா சிவராத்திரி என்று அழைக்கப்படுகிறது.

    அந்தவகையில் நாளை (செவ்வாய்கிழமை) மாலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை முதல் கால பூஜையும், இரவு 9.30 மணி முதல் மறுநாள் அதிகாலை 12.30 மணி வரை 2-ம் கால பூஜையும், நள்ளிரவு 12.30 மணி முதல் அதிகாலை 3.30 மணி வரை 3-ம் கால பூஜையும், அதிகாலை 3.30 மணி முதல் காலை 6 மணி வரை 4-ம் கால பூஜையும் நடக்கிறது.

    விரதமிருந்து மகா சிவராத்திரி அன்று 4 சாமத்திலும் சிவபெருமானை வழிபட்டு வாழ்க்கையில் அனைத்து விதமான நற்பலன்களையும் அடையலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் 21 தலை முறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்.
    மாதந்தோறும் அமாவாசை நாளில் இருந்து வரும் 14வது திதியன்று சிவராத்திரி அல்லது பிரதோஷ நாட்களாகக் வழிபடப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாதமும் கிருஷ்ண பட்ச தினத்தை இந்த தினமாகக் கடைபிடிக்கிறோம். இந்த நாளில் சிவன் கோயில்களுக்குச் சென்று ஈஸ்வரனை வழிபட்டால் மன அமைதி, வாழ்க்கையில் முன்னேற்றம், தீய சக்திகள் வேரோடு அகலுதல் போன்ற நன்மைகள் நமக்கு உண்டாகும்.

    மாசி மாதத்தில் அமாவாசையில் இருந்து 14வது சதுர்த்தசியன்று வருவது மகா சிவராத்திரியாகும். இந்த நாளின் சிறப்புகள் குறித்து கருட புராணம், கந்த புராணம், பத்ம புராணம், அக்னி புராணம் உள்ளிட்ட பல்வேறு நூல்களிலும் குறிப்பிடப்பட்டுள்ளது. மகா சிவ ராத்திரி நாளில் விரதம் இருப்போருக்கு கிடைக்கும் மகத்துவங்கள் என்ன என்பது பற்றியும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மாசிமாதம் தேய்பிறைச் சதுர்த்தசி திதியில் அம்பிகை சிவபெருமானை வணங்கியதாலேயே இந்த நாளில் மகா சிவராத்திரி கொண்டாடப்படுகிறது.
    பிரளய காலத்தின் போது பிரம்மனும், அவரால் சிருஷ்டிக்கப்பட்ட அனைத்து ஜீவராசிகளும் அழிந்து விட்டநிலையில், இரவுப் பொழுதில் அம்பிகை உமாதேவி, பரமேஸ்வரனை நினைத்து பூஜை செய்தாள். நான்கு ஜாமங்களிலும் இரவு முழுவதும் ஆகம விதிப்படி அர்ச்சனை செய்தாள். பூஜையின் முடிவில் அம்பிகை ஈஸ்வரனை வணங்கி, அடியேன் தங்களைப் பூசித்த இந்த இரவை, தேவர்களும் மனிதர்களும் தங்கள் திருநாமத்தாலேயே - அதாவது `சிவராத்திரி‘ என்றே கொண்டாட வேண்டும் என்று வேண்டினாள்.

    சிவராத்திரி அன்று, சூரியன் மறைந்தது முதல் - மறுநாள் காலை சூரியன் உதயமாகும் வரை; தங்களை (சிவனை)ப் பூஜை செய்பவர்கள் யாராக இருந்தாலும், அவர்களுக்கு எல்லாவிதமான பாக்கியங்களையும் தந்து முடிவில் மோட்சத்தையும் அளிக்க வேண்டும். அருள் புரியுங்கள் என்று அன்னையானவள் வேண்டிக் கொண்டாள்..

    சிவபெருமானும், அப்படியே ஆகட்டும் என்று கூறி அருள்புரிந்தார். அந்த இரவே `சிவராத்திரி‘ என வழங்கப்பட்டு, அனைவராலும் கொண்டாடப்படுகிறது. பகல் பொழுது பரமேஸ்வரனுக்கும், இரவுப் பொழுது அம்பிகையான உமாதேவிக்கும் உரியது என்பது நியமம். ஆனால் சிவராத்திரி என்பது அம்பாளின் வேண்டுதலின் படி கொண்டாடப்படுவதால் அது சிவனுக்கு உரியதாயிற்று.

    சிவராத்திரி விரதம் இருப்பதால் தெரியாமல் செய்த பாவங்களுடன், தெரிந்தே பாவங்கள் செய்திருந்தாலும் அவை நம்மை விட்டு நீங்கிப் போகும். இவர்தான் சிவராத்திரி விரதம் இருக்கலாம். இவர் இருக்கக் கூடாது என்ற விதியெல்லாம் கிடையாது. யார் வேண்டுமானாலும் சிவராத்திரி விரதத்தை மேற்கொள்ளலாம்.
    புராணங்களில் சொல்லப்பட்ட மற்றைய பல விரதங்களை நெடுங்காலம் கடை பிடிப்பது, நூறு அசுவமேத யாகம் செய்வது, பலமுறை கங்கா ஸ்நானம் செய்வது ஆகிய அனைத்தையும் மேற்கொண்டாலும், ஒரு சிவராத்திரி விரதத்தை அனுஷ்டிப்பதற்கு ஈடாகாது.

    சிவராத்திரிக்கு முதல் நாள் ஒரு வேளை மட்டுமே உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி அன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து விட்டு, சூரிய உதயத்தின் போது காலையில் வீட்டில் செய்ய வேண்டிய பூஜையை முடிக்க வேண்டும். அதன் பின் சிவன் கோவிலுக்குப் போய் முறைப்படி தரிசனம் செய்ய வேண்டும். பூஜை செய்யும் இடத்தை மலர்களால் அலங்கரித்து நண்பகலில் குளித்து மாலையில் சிவார்ச்சனைக்கு உரிய பொருட்களோடு சிவன் கோவில் சென்று ஏற்பாடுகளைச் செய்யலாம். மாலையில் மீண்டும் குளித்து வீட்டில் சிவபூஜை செய்ய வேண்டும். வீட்டிலேயே இரவின் நான்கு ஜாமங்களிலும் முறைப்படிப் பூஜை செய்தலும் நலம். வில்வ இலைகளால் அர்ச்சனை செய்தல் கூடுதல் உத்தமம்.

    மகா சிவ ராத்திரி விரதம் மேற்கொள்பவர்கள் கோபத்தைக் கட்டுப்படுத்துவதுடன், பிரம்மச்சரியத்தைக் கடைபிடிக்க வேண்டும். சிந்தையில் அமைதியுடன் சிவ புராணத்தை பாடிக் கொண்டிருக்க வேண்டும். பற்றற்று இருப்பதுடன் பேராசைகளைக் கைவிட்டு பிறருக்குத் தீங்கிழைக்காமல் இருத்தல் வேண்டும்.

    மாலையில் குளித்து உலர்ந்த ஆடையணிந்து நெற்றியில் திருவெண்ணீறு அணிந்து, கையில் உத்திராட்ச மாலையுடன் வீடுகளில் சிவ பூஜை செய்தோ அல்லது கோயில்களுக்குச் சென்றோ சிவனை வழிபடுதல் வேண்டும். கோயில்களிலும் சிவபூஜை செய்யலாம். ஐந்தெழுத்து மந்திரமான சிவாய நம என்ற சொல்லை உச்சரித்து பூஜிக்க வேண்டும். கலச பூஜையுடன் லிங்கத்தை வைத்தும் பூஜை செய்யலாம். பூக்கள் மற்றும் அபிஷேகப் பொருட்களை கோயில்களுக்கு வாங்கிக் கொடுத்தல் நலம்.

    பின்னர் சிவபெருமானின் வெவ்வேறு பெயர்களான பவ, சர்வ, ஈசான, பசுபதி, உக்ர, ருத்ர, பீமா மற்றும் மகாதேவா என்று கூறி பூஜிக்க வேண்டும். சிவ பெருமானின் சகஸ்ர நாமத்தை சொல்வதுடன், வில்வ இலைகளைக் கொண்டும் பூஜிக்கலாம். வில்வ இலைகளை கோயில்களுக்கும் வழங்கலாம்.

    பின்னர் நைவேத்யம் படைத்து வழிபட வேண்டும். சிவ, ருத்ர, பசுபதி, நீலகண்டா, மகேஸ்வரா, ஹரிகேசா, விருபாக்ஷா, சாம்பு, சூலினா, உக்ரா,பீமா, மகாதேவா ஆகிய 12 பெயர்களை உச்சரித்து பூக்களால் அர்ச்சிக்க வேண்டும். கோயில்களில் பிரதட்சிணமாக வந்து சிவபெருமானின் மூல மந்திரத்தை 108 முறை பாராயணம் செய்ய வேண்டும்.

    அன்றையதினம் இரவில் நான்கு ஜாமங்களிலும் தூங்காமல் பூஜை செய்து, மறுநாள் விடியற்காலையில் நீராடி, காலை அனுஷ்டானத்துடன் உச்சிக்கால அனுஷ்டானத்தையும் அப்போதே முடிக்க வேண்டும். அதன் பின் தீட்சை தந்த குருவைப் பூஜை செய்து விட்டு, உடைகள் மற்றும் உணவினை அந்தணர்க்கு தானமாக அளித்து விரதத்தை நிறைவு செய்யும் விதமாக உணவு உண்ண வேண்டும். சிவராத்திரி நாளில் முழுவதும் உபவாசம் இருக்க முடியாதோர், ஒவ்வொரு ஜாமப் பூஜை முடித்த பிறகும் தண்ணீர், பால், பழங்களை உண்ணலாம்.

    பூஜை செய்ய முடியாதவர்கள் நான்கு ஜாமத்திலும் சிவபுராணம் கேட்டும், சிவத்துதிகளைச் சொல்லியும், சிவன் கோயிலுக்குச் சென்று அவ்விரவைக் கழித்தும் சிவனை வழிபடலாம். சிவராத்திரிக்கு மறுநாள் சிவபுராணம் படித்தோ அல்லது கேட்டோ, பகல் பொழுதைக் கழிக்க வேண்டும். பிறகு மாலை நெருங்கியதும் மாலை அனுஷ்டானங்களை முடித்து, அன்றிரவும் எதுவும் உண்ணாமல் இருந்து உறங்க வேண்டும்.

    சிவராத்திரி தினத்தன்று முழு உபவாசத்தைக் கடைபிடித்தால் எம்பெருமான் வாழ்நாள் முழுவதும் காப்பாற்றுவதுடன் மகிழ்ச்சியையும், வாழ்வில் முன்னேற்றத்தையும் அளிப்பார் என்பது ஐதீகம். தவிர மகா சிவராத்திரி விரதம் இருப்போருக்கு நற்கதி கிடைப்பதுடன் இப்பூத உடல் மடிந்த பின் சொர்க்கத்தையும் இறைவன் அளிப்பான் என்பதே பின்னணித் தத்துவம்.

    இப்படி இருபத்து நான்கு வருடங்கள் சிவராத்திரி விரதமிருந்தால் அவர்கள் சிவகதி அடைவார்கள். அத்துடன் அவர்களின் 21 தலை முறைகளும் நற்கதி அடைந்து, முக்தியை அடைவது சத்தியம் என்கிறது புராணங்கள்.
    புண்ணியசேனன் என்பவன், ‘சகல செல்வங்களுக்கும் அதிபதியாக வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்’ என்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், திருவாப்புடையார் எனும் இத்தல ஈசனை நோக்கி தவம் புரியச் சொன்னார்.
    மதுரை வைகையாற்றின் வடபுறத்தில் அமைந்துள்ளது திருவாப்புடையார் கோவில். மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தின் உப கோவிலாக திகழும் இந்த ஆலயம் பற்றி, திருஞானசம்பந்தர் தேவாரப்பாடல் பாடியுள்ளார்.

    புண்ணியசேனன் என்பவன், ‘சகல செல்வங்களுக்கும் அதிபதியாக வேண்டும் எனில் என்ன செய்ய வேண்டும்’ என்று அகத்தியரிடம் கேட்டான். அதற்கு அவர், திருவாப்புடையார் எனும் இத்தல ஈசனை நோக்கி தவம் புரியச் சொன்னார். அதன்படியே தவம் செய்த புண்ணியசேனனுக்கு, நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது.

    இதனால் ஆணவம் கொண்ட அவன், ஒருவரையும் மதிக்காமல் நடந்துகொண்டான். இதனால் அவனது ஒரு கண் பார்வையை பறித்தார், ஈசன். இதையடுத்து தவறை நினைத்து வருந்திய அவனுக்கு மீண்டும் நிதியை நிர்வகிக்கும் பொறுப்பு வழங்கப்பட்டது. மேலும் குபேரன் என்ற பெயரையும் சிவபெருமான் சூட்டினார்.
    திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று காலை தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
    திருவல்லிக்கேணி பார்த்த சாரதி கோவிலில் பிரம்மோற்சவ விழா கடந்த 20-ந்தேதி தொடங்கியது. தினமும் காலையும், மாலையும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதி உலா நடைபெற்று வருகிறது.

    கடந்த 22-ந் தேதி கருடசேவை நடந்தது. 23-ந் தேதி சூரியபிரபை, சந்திரபிரபை புறப்பாடு நடந்தது. 24-ந் தேதி பல்லக்கு நாச்சியார் கோலத்தில் சுவாமி வீதி உலா நடைபெற்றது. நேற்று காலை சூர்ணா பிஷேகம் நிகழ்ச்சி நடைபெற்றது. அதனை தொடர்ந்து பார்த்தசாரதி பெருமாள் ஆனந்த விமானத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    பிரம்மோற்சவ விழாவின் 7-ம் நாளான இன்று தேரோட்டம் நடைபெற்றது. இன்று அதிகாலை 2.15 மணி அளவில் சாமி திருத்தேருக்கு எழுந்தருளினார். காலை 7 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம்பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்தது.

    இன்று இரவு 9 மணிக்கு தோட்ட திருமஞ்சனம் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை காலை பல்லக்கில் வெண்ணை தாழி கண்ணன் திருக்கோலத்தில் காட்சி அளிக்கிறார்.

    28-ந்தேதி பகல் 11 மணிக்கு தீர்த்தவாரி உற்சவமும், இரவு கண்ணாடி பல்லக்கு சேவையும் நடக்கிறது. மார்ச் 1-ந்தேதி அவ ரோஹணம், துவாதச ஆராதனம், சப்தா வர்ணம்-சிறிய தேர் நிகழ்ச்சி நடக்கிறது. அத்துடன் விழா நிறைவடைகிறது.

    குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி வரலாற்று சிறப்பு மிக்க சிவாலய ஓட்டம் 28-ந் தேதி தொடங்குகிறது. இதற்காக பக்தர்கள் ஆயத்தமாகி வருகிறார்கள்.
    குமரி மாவட்டத்தில் மகா சிவராத்திரியையொட்டி பக்தர்கள் இங்குள்ள 12 சிவாலயங்களை ஓட்டமும், நடையுமாக சென்று வழிபடும் சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது. பல நூற்றாண்டுகளாக நடைபெறும் இந்த சிவாலய ஓட்டம் ஆன்மிகம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும்.

    இதில் பக்தர்கள் முன்சிறை அருகே உள்ள திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கி, திக்குறிச்சி மகாதேவர் கோவில், திற்பரப்பு வீரபத்திரர் கோவில், திருநந்திக்கரை நந்தீஸ்வரர் கோவில், பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில், திருப்பன்னிப்பாகம் மகாதேவர் கோவில், கல்குளம் நீலகண்டசாமி கோவில், மேலாங்கோடு மகாதேவர் கோவில், திருவிடைக்கோடு மகாதேவர் கோவில், திருவிதாங்கோடு மகாதேவர் கோவில், திருப்பன்றிகோடு மகாதேவர் கோவில், நட்டாலம் சங்கரநாராயணர் கோவில் ஆகிய 12 சிவாலயங்களில் ஓடி சென்று வழிபடுவார்கள். இதில் சுமார் 110 கிலோ மீட்டர் தூரத்தை பக்தர்கள் சுற்றி வருவார்கள்.

    சிவாலய ஓட்டத்தில் பங்கேற்கும் பக்தர்கள் மாசி மாதம் ஏகாதசி நாளில் மாலை அணிந்து விரதத்தை தொடங்குகின்றனர். இவர்கள் காலை, மாலை வேளைகளில் புனித நீராடி சிவன் கோவில்களுக்கு சென்று சிவநாமங்களை உச்சரித்து பிரார்த்தனை செய்து சைவ உணவுகளை மட்டுமே உட்கொள்கின்றனர்.

    பின்னர், சிவராத்திரி தினத்திற்கு முந்தைய நாளில் காவி உடை அணிந்து கையில் விசிறியுடன் ‘கோபாலா... கோவிந்தா...’ என்ற நாம கோஷத்துடன் திருமலை மகாதேவர் கோவிலில் இருந்து தொடங்கி ஒவ்வொரு கோவிலாக சென்று சாமி தரிசனம் செய்கின்றனர்.

    இந்த சிவாலய ஓட்டத்தில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி அண்டை மாநிலமான கேரளாவில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். முன்பு சிவாலய ஓட்டத்தில் கலந்து கொள்ளும் பக்தர்கள் அனைவரும் ஓட்டமாகவே சென்றனர். தற்போது பெரும்பாலானோர் இருசக்கர வாகனங்கள் மற்றும் வேன், பஸ் போன்ற வாகனங்களில் செல்கின்றனர்.

    இந்த ஆண்டு மகா சிவராத்தி வருகிற 1-ந் தேதி வருகிறது. இதையொட்டி சிவால ஓட்டம் 28-ந் தேதி தொடங்குகிறது. அன்று முன்சிறை மகா தேவர் கோவிலில் இருந்து ஓட்டத்தை தொடங்கும் பக்தர்கள் இரவு முழுவதும் ஓட்டமும் நடையுமாக சென்று சிவாலங்களை தரிசனம் செய்துவிட்டு 1-ந் தேதி நட்டாலம் சங்கரநாராயணர் கோவிலில் ஓட்டத்தை முடித்து கொள்வார்கள். அன்று இரவு முழுவதும் கோவிலில் இருந்து வழிபாடு செய்துவிட்டு 2-ந் தேதி காலையில் தங்கள் வீடுகளுக்கு திரும்புவார்கள்.

    சைக்கிள், மோட்டார் சைக்கிள் மற்றும் இதர வாகனங்களில் செல்லும் பக்தர்கள் மார்ச் 1-ந் தேதி காலையில் தொடங்கி 2-ந் தேதி அதிகாலையில் நிறைவு செய்கின்றனர்.

    பக்தர்களுக்கு வழிநெடுகிலும் இளைப்பாறுவதற்கான வசதியும், மோர், சுக்குநீர் மற்றும் கஞ்சி, பாயாசத்துடன் சாதம் உள்ளிட்ட உணவுகளும் பொதுமக்களால் இலவசமாக வழங்கப்படும்.
    கவலைகள், துன்பங்கள் விரைவில் தீர சனிக்கிழமைகளில் செய்ய வேண்டிய பரிகாரம் இது. இதை தொடர்ந்து செய்து வந்தால் உங்கள் கஷ்டங்கள் படிப்படிப்பாக மறையும்.
    ஒரு சனிக்கிழமை அன்று வெள்ளை தாள் ஒன்றில் கருப்பு நிற இங்க் கொண்டு, உங்களுக்கு உள்ள கஷ்டத்தை, குறையை எழுதவும். பின்பு கருப்பசாமியை நன்றாக மனதில் வேண்டி கொண்டு, அந்த பேப்பரை சுருட்டி அதில் கருப்பு நிற நூலால் லேசாக கட்டி வைக்கவும்.

    பின்பு கருப்பு நிற மெழுகுவர்த்தி ஒன்றை ஏற்றி, மனதினுள் குறைகள் அனைத்தும் அகல வேண்டும் என கருப்பசாமியை நினைத்து வேண்டுதல் வைத்து, அதை மெழுகுவர்த்தி நெருப்பில் காட்டி எரிய விடவும். எரிந்து முடிந்த பின் அனைத்தையும் அகற்றி விடலாம்.

    சிறிய அளவில் உள்ள குறைகள் ஒரே வாரத்தில் நீங்குவதை அனுபவத்தில் காணலாம். பெரிய அளவில் உள்ள பிரச்சனைகளுக்கு 8 வாரங்கள் தொடர்ந்து செய்யவும். நேரம், திசை போன்றவை பார்க்க தேவை இல்லை. பலர் செய்து வெற்றி கண்ட சூட்சுமம் நிறைந்த பரிகாரம் இது.
    பல நூற்றாண்டுகளாக நடைபெறும் சிவாலய ஓட்டம் ஆன்மிகம் மற்றும் வரலாற்று சிறப்பு மிக்க ஒரு முக்கிய நிகழ்வாகும். சிவாலய ஓட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பலவிதமாக புராண கதைகள் நிலவி வருகின்றன.
    சிவாலய ஓட்டம் தொடர்பாக மக்கள் மத்தியில் பலவிதமாக புராண கதைகள் நிலவி வருகின்றன. சூண்டோதரன் என்ற அரக்கன் தவம் செய்து சிவபெருமானிடம் வரம் பெற்று பின்னர், அந்த வரத்தை சிவபெருமானிடமே சோதித்து பார்க்க முயலும் போது சிவபெருமான் ‘கோபாலா... கோவிந்தா...’ என்று அழைத்தவாறு ஓடியதாகவும், இறுதியில் விஷ்ணு மோகினி அவதாரமெடுத்து சூண்டோதரனை அழித்ததாக சொல்லப்படுவது உண்டு.

    இதுதவிர திருவட்டாறு ஆதிகேசவ பெருமாள் கோவில் தல புராணம் சிவாலய ஓட்டத்துடன் தொடர்புடையதாக உள்ளது. அரக்கனான கேசனை மகாவிஷ்ணு ஆதிசேடனால் சுற்றி வளைத்து வீழ்த்திய போது கேசன் தனது நெடிய 12 கைகளினால் மனித உயிர்களை வதம் செய்ய முயற்சித்தான். அப்போது அதனைத் தடுக்கும் வகையில் சிவ பக்தனான கேசனின் 12 கைகளிலும் 12 சிவலிங்கங்களைக் கொடுத்தாகவும், அதனால் கேசன் அடங்கியதாகவும் கூறப்படுகிறது.

    புராணத்தின் படியே திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் கோவிலை மையமாகக் கொண்டு 12 சிவாலயத் திருத்தலங்களும் உள்ளதாகவும் நம்பப்படுகிறது.
    குமரியில் உள்ள பிரசித்தி பெற்ற மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் மாசிக்கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    குமரியில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்றாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் மாசிக்கொடை விழா வெகு விமர்சையாக நடைபெறும்.

    அதே போல் இந்த ஆண்டுக்கான மாசிக்கொடை விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.

    நாளை அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 6 மணிக்கு பஞ்சாபிஷேகம், 6.30 மணிக்கு தீபாராதனை, காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் நடைபெறுகிறது. மதியம் 1 மணிக்கு உச்சிகாலபூஜை, மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை நடக்கிறது.

    மார்ச் 1-ந்தேதி முதல் 7-ந்தேதி வரை காலை 9.30 மணி மற்றும் இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி நடைபெறுகிறது. 4-ந்தேதி நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலியபடுக்கை என்னும் மகாபூஜை நடக்கிறது.

    7-ந்தேதி இரவு 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனியாக வரும் போது பெரிய சக்கர தீவெட்டி பவனி நடக்கிறது.

    விழாவின் கடைசி நாளான 8-ந்தேதி அதிகாலை 2 மணிக்கு சாஸ்தா கோவிலில் இருந்து யானை மீது களபம் பவனி, 3.30 மணிக்கு அம்மன் பவனி, 4.30 மணிக்கு அடியந்திரபூஜை, காலை 6 மணிக்கு குத்தியோட்டம், நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் ஒடுக்கு பூஜை நடைபெறுகிறது. அதைத்தொடர்ந்து திருக்கொடி இறக்கப்படுகிறது.

    விழா நடக்கும் 10 நாட்களும் கோவில் தங்கும் விடுதி வளாகத்தில் தனிப்பந்தலில் ராதாகிருஷ்ணபுரம் ஹைந்தவ சேவா சங்கம் சார்பில் 85-வது இந்து சமய மாநாடு நடக்கிறது. 27-ந்தேதி மாநாட்டு பந்தலில் அதிகாலை 4.30 மணிக்கு கணபதி ஹோமம், காலை 8.30 மணிக்கு மாநாடு கொடியேற்றம், அதைத்தொடர்ந்து நடக்கும் சமய மாநாட்டை வெள்ளிமலை விவேகானந்த ஆஸ்ரம தலைவர் சைதன்யானந்த மகராஜ் தொடங்கி வைத்து பேசுகிறார்.

    தெலுங்கானா கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் குத்துவிளக்கேற்றி பேசுகிறார். மதியம் 2 மணிக்கு ஆன்மிக உரை, மாலை 4 மணிக்கு பக்தி இன்னிசை, 6 மணிக்கு திருவிளக்கு பூஜையும், இரவு 8 மணிக்கு பரத நாட்டியமும் நடக்கிறது. இங்கு தினமும் பலவேறு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    8-ந்தேதி மாலை 4 மணிக்கு நடக்கும் நலத்திட்ட உதவி வழங்குதல் மற்றும் சமய மாநாட்டில் மாநில பா.ஜனதா தலைவர் அண்ணாமலை சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசுகிறார். இதற்கான ஏற்பாடுகளை இந்து அறநிலையத்துறை நிர்வாகிகள் மற்றும் ஹைந்தவ சேவா சங்கத்தினர் செய்து வருகின்றனர்.
    ஹரிஹரேஸ்வரர் ஆலயத்தின் மேற்கூரையில் முப்பரிமாண தோற்றத்திலான கிருஷ்ணர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வியப்பை மேலிடச் செய்யும் ஒரு சிலை என்றால் அது மிகையல்ல.
    மகாராஷ்டிரா மாநிலம் சங்கிலி என்ற இடத்திற்கு அருகே அமைந்துள்ளது, குண்டல் என்ற ஊர். இங்கு ‘ஹரிஹரேஸ்வரர் மந்திர்’ என்ற ஆலயம் இருக்கிறது.

    இந்த ஆலயத்தின் மேற்கூரையில் முப்பரிமாண தோற்றத்திலான கிருஷ்ணர் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வியப்பை மேலிடச் செய்யும் ஒரு சிலை என்றால் அது மிகையல்ல.

    ஏனெனில் இந்த சிலை, 5 உடல்கள் கொண்டது. ஆனால் அந்த ஐந்து உடல்களுக்கும் கச்சிதமாக பொருந்தும் வகையில் இரண்டு கரங்களும், ஒற்றை தலையும் கொண்டதாக இந்த சிலையை செதுக்கியிருக்கிறார்கள். இது 11-12-ம் நூற்றாண்டைச் சேர்ந்தது.
    தொடர்ச்சியாக ஐந்து பஞ்சமிகளில் விரதம் இருந்து இந்த மந்திரத் சொல்லி வாராஹியை வழிபாடு செய்து வர கேட்ட வரத்தை அள்ளித் தருவாள் வாராஹி.
    சப்த மாதர்களில் ஐந்தாவதாகத் தோன்றியவள் தான் வாராஹி. இவளே சேனாதிபதி. இவள் விஷ்ணு அம்சம். பாண்டவர்களின் கிருஷ்ண பரமாத்மா போன்று நம்மை துன்பங்களிலிருந்து விடுபடச் செய்யவும், எதிரிகளிடமிருந்து நம்மைக் காக்கவும் வாராஹி வழிபாடு சாலச் சிறந்தது.

    ஓம் ச்யாமளாயை விக்மஹே
    ஹல ஹஸ்தாயை தீமஹி
    தன்னோ வராஹி ப்ரசோதயாத்

    என்ற இந்த வராஹி மந்திரத்தை 108 முறை ஜெபித்து (இந்த மந்திரத்தை ஜெபிப்போருக்கு எதையும் சாதிக்கும் வல்லமை உருவாகும். மனதில் தைரியம் பிறக்கும். கேட்ட வரங்கள் கிடைக்கும்)

    நாயகி, நான்முகி…மாலினி ,வாராஹி, சூலினி மாதங்கி என்றாயகி யாதி உடையாள் சரணம்’ என்றும், ‘பயிரவி, பஞ்சமி…வாராஹி என்றே செயிர் அவி நான்மறை சேர் திருநாமங்கள் செப்புவரே’  என்றும் அபிராமி பட்டர் அபிராமி அந்தாதியில் கொண்டாடிய அன்னையின் வாராஹி வழிபாடு நம்மை அனைத்து இன்னல்களில் இருந்தும் காப்பாற்றுகிறது.
    திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலில் இன்று (சனிக்கிழமை) மாலை தெப்ப உற்சவம் நடக்கிறது. இரவு 7 மணி முதல் 8 மணிவரை தெப்பம் உற்சவம் கண்டருளுகிறார்.
    108 வைணவ திருத்தலங்களில் 2-வது திவ்ய தேசமாக கருதப்படுவது திருச்சி உறையூரில் உள்ள கமலவல்லி நாச்சியார் கோவிலாகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலின் உப கோவிலாக கமலவல்லி நாச்சியார் கோவில் விளங்குகிறது. இங்கு ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், ஸ்ரீ அழகியமணவாள பெருமாள் ஆகியோர் திருமண கோலத்தில் பக்தர்களுக்கு சேவை சாதிக்கின்றனர்.

    இக்கோவில் மங்கையாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசமாகும். மேலும் ஸ்ரீ திருப்பானாழ்வார் அவதரித்த திருத்தலமாகும். ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடைபெறும் அனைத்து உற்சவங்களும் இக்கோவிலில் உள்ள தாயார் கமலவல்லி நாச்சியாருக்கும் நடைபெறுவது வழக்கம். அவற்றில் தெப்ப உற்சவமும் ஒன்றாகும்.

    கமலவல்லி நாச்சியார் கோவிலில் தெப்ப உற்சவம் கடந்த 21-ந் தேதி முதல் தொடங்கி நடந்து வருகிறது. தினமும் மாலை 6.15 மணிக்கு தாயார் கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பட்டு வீதியுலா வந்து இரவு 8.45 மணிக்கு மீண்டும் மூலஸ்தானத்தை அடைந்து வருகிறார். அதன்படி, நேற்று மாலையும் பக்தர்களுக்கு தாயார் அருள் பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்வான தெப்ப உற்சவம் இன்று (சனிக்கிழமை) மாலை நடக்கிறது. முன்னதாக மாலை 5 மணிக்கு கமலவல்லி நாச்சியார் மூலஸ்தானத்தில் இருந்து புறப்பாடு ஆகிறார். இரவு 7 மணி முதல் 8 மணிவரை தெப்பம் உற்சவம் கண்டருளுகிறார். தொடர்ந்து பல்லக்கில் திருவீதி உலா வந்து இரவு 10.15 மணிக்கு மூலஸ்தானம் அடைகிறார்.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 5 மணி முதல் 6.30 மணிக்குள் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார் திருமஞ்சனம் கண்டருளல் நிகழ்ச்சி நடக்கிறது.

    அதைத் தொடர்ந்து இரவு 10 மணிக்கு பல்லக்கில் வீதியுலா வந்து மூலஸ்தானம் அடைகிறார்.
    ×