என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    சமயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் பூத்தட்டுகளை கையில் ஏந்தியும் வாணவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வணங்கினர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 13-ந்தேதி தொடங்கியது. மேலும் அடுத்தடுத்த ஞாயிற்றுக்கிழமைகளில் இரண்டு மற்றும் மூன்றாவது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதைத்தொடர்ந்து நேற்று 4-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலையில் இருந்து திருச்சி மற்றும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் டிராக்டர் உள்ளிட்ட  வாகனங்களில் அலங்கரிக்கப்பட்ட அம்மன் படத்தை வைத்து பூக்களுடனும், சமயபுரத்தை சேர்ந்த பொதுமக்கள் பூத்தட்டுகளை கையில் ஏந்தியும் வாணவேடிக்கைகள் முழங்க ஊர்வலமாக கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி பயபக்தியுடன் வணங்கினர்.

    இதேபோல் உப்பிலியபுரம் பகுதியில் சோபனபுரம், பி.மேட்டூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து நேற்று பூச்சொரிதலுக்காக சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்கள் கொண்டு செல்லப்பட்டன. இதையொட்டி சோபனபுரம் பகுதியில் உப்பிலியபுரம் போலீசார் சப்-இன்ஸ்பெக்டர் பெரியமணி தலைமையில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    பூச்சொரிதல் விழாவிற்கு வரும் பக்தர்கள் கூட்டத்தை பயன்படுத்தி திருட்டு, சங்கிலி பறிப்பு போன்றவை நடைபெறாமல் தடுக்கும் வகையில், லால்குடி போலீஸ் துணை சூப்பிரண்டு சீதாராமன் மேற்பார்வையில், சமயபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பெருமாள் மற்றும் ஏராளமான போலீசார், ஊர்க்காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவில் வலியபடுக்கை பூஜையில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டிருந்தது. கோவில் மலர்களாலும் தீபங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில்களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டி வந்து தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது.

    இங்கு மாசிக்கொடை விழா கடந்த பிப்ரவரி மாதம் 27-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி மார்ச் 8-ந் தேதி வரை 10 நாட்கள் நடந்தது. இதனை தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நேற்று மீன பரணிக்கொடை விழா நடந்தது.

    இதனையொட்டி அதிகாலை 4.30 மணிக்கு திருநடை திறக்கப்பட்டு 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், காலை 6.30 மணிக்கு உஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு வலிய படுக்கை என்னும் மகாபூஜை தொடங்கியது.

    வலிய படுக்கை பூஜை வருடத்திற்கு மூன்று முறை நடைபெறும்.

    அதாவது மாசித் திருவிழாவின் ஆறாம் நாள், கார்த்திகை மாதம் கடைசி வெள்ளிக்கிழமை அன்றும், பரணி கொடைவிழா அன்றும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. வலியபடுக்கை பூஜையில் அம்மனுக்கு பல்வேறு வகையான உணவு பதார்த்தங்கள் படைக்கப்பட்டிருந்தது. கோவில் மலர்களாலும் தீபங்களாலும் அலங்கரிக்கப்பட்டிருந்தது. விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவிலிருந்தும் அதிகமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது.
    கிருத்திகை தினம் பகல் மற்றும் இரவு உறங்காமல் முருக வழிபாடு மற்றும் தியானத்தில் இருந்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடிக்க வேண்டும்.
    கார்த்திகை நட்சத்திரத்தில் பிறந்து கார்த்திகேயன் என்று பெயர் பெற்ற முருகப்பெருமான் அருளை பெறுவதற்கு மேற்கொள்ளும் ஒரு விரத முறை தான் இந்த கார்த்திகை விரதம். கார்த்திகை விரதத்தை கார்த்திகை மாதம் வரும் கார்த்திகை நட்சத்திர தினத்தன்று தொடங்கி வாழ்நாள் முழுவதும் மேற்கொள்வது முருகனின் அருளை உங்களுக்கு பூரணமாக கிடைக்கச் செய்யும். எந்த ஒரு மாதத்திலும் கார்த்திகை நட்சத்திரம் மாலை 5 மணிக்கு மேல் இருக்கும் நாளே கார்த்திகை நட்சத்திர நாளாக கருத வேண்டும். கார்த்திகை விரதம் மேற்கொள்ள இருப்பவர்கள் கார்த்திகைக்கு முந்தைய நாளான பரணி நட்சத்திர தினத்தன்று நண்பகல் வரை உணவு உட்கொண்டு அன்று இரவு உணவு உட்கொள்ளாமல் விரதம் இருக்க தொடங்க வேண்டும்.

    மறுநாள் காலையில் எழுந்து நீராடி முருகன் கோயிலுக்கு சென்று வழிபட வேண்டும். மேலும் அன்றைய நாள் முழுவதும் உணவு ஏதும் உட்கொள்ளாமல் முருகனின் மந்திரங்கள், ஸ்கந்த புராணம், திருப்புகழ், கந்தர் கலிவெண்பா போன்றவற்றை படிப்பதும், பாராயணம் செய்வதும் சிறந்தது. உணவு உட்கொள்ள வேண்டிய உடல்நிலை கொண்டவர்கள் பழம், பால் ஆகியவற்றை உண்ணலாம். கார்த்திகை தினம் பகல் மற்றும் இரவு உறங்காமல் முருக வழிபாடு மற்றும் தியானத்தில் இருந்து, மறுநாள் காலையில் நீராடி முருகனை வழிபட்ட பின்பு விரதத்தை முடிக்க வேண்டும்.

    இந்த கார்த்திகை தினத்தன்று விரதமிருப்பவர்கள் அன்றைய தினத்தில் அன்னதானம் செய்தால் மிகுந்த புண்ணிய பலன்களை செய்பவருக்கு கொடுக்கும். கார்த்திகை நட்சத்திர விரதம் மேற்கொண்டு வருபவர்களுக்கு நீண்ட ஆயுள், நோய்கள் மற்றும் துஷ்ட சக்தி பாதிப்புகள் அணுகாமை, உடல் மற்றும் மன நலம், நன்மக்கட் பேறு, செழிப்பான பொருளாதார நிலை போன்றவை முருகனின் அருளால் ஏற்படும். இந்த விரதத்தை 12 ஆண்டுகள் வரை மேற்கொள்பவர்களுக்கு முருகப்பெருமானின் தரிசனம் கிடைக்க பெற்று, மரணம் குறித்த பயங்கள் நீங்கி இறுதியில் முக்தி நிலை கிடைக்க பெறுவார்கள் என்பது ஆன்றோர்களின் வாக்காகும்.
    முடிகாணிக்கை மண்டபத்தில் பணியில் இருக்கும் பணியாளர்கள் இலவச கட்டணச்சீட்டு வழங்கும் போதே “முடி காணிக்கை செய்ய கட்டணம் இல்லை“ என்று தெரிவிக்க வேண்டும்.
    தமிழக இந்து சமய அறநிலையத்துறை செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, அமைச்சர் பி.கே.சேகர்பாபு அறிவுரையின்படி, தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர், சுப்பிரமணிய சுவாமி கோயில் நிர்வாகம் தொடர்பாக உயர் நீதிமன்றம் மதுரைக்கிளை பிறப்பித்த உத்தரவின்படி திரிசு தந்திரர்களை முறைப்படுத்துதல் மற்றும் தரிசன வரிசைகளை முறைப்படுத்துதல் தொடர்பாக பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ள கடிதங்கள் மூலம் கோயில் இணை ஆணையர், செயல் அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், கோயிலில் 26.03.2022 கூடுதல் ஆணையர் (கல்வி மற்றும் தொண்டு நிறுவனங்கள்) ஆய்வு மேற்கொள்ளப்பட்டு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அளிக்கப்பட்ட அறிக்கை பரிசீலிக்கப்பட்டு, கோவில் நலன் மற்றும் பக்தர்கள் நலன் கருதி ஏற்கனவே செயல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளன.

    கோயிலில் “அன்னைத்தமிழில் அர்ச்சனை செய்யப்படும்” என்ற விளம்பர பலகை “எல்.இ.டி. போர்டு”ல் பக்தர்கள் எளிதில் அறியும் வகையில் வைக்கவும், கோவிலில் உள்ள திரிசுதந்திரர்களை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட உயர்நீதிமன்ற உத்தரவினையும், ஆணையர் உத்தரவினையும் முழுமையாக செயல்படுத்தவும், கோயிலுக்குள் தற்போது பயன்படுத்தப்பட்டு வரும் வரிசைமுறை நீங்கலாக தேவையில்லாத இடங்களில் உள்ள மற்ற எஸ்.எஸ்.வரிசை முறை அமைப்புகள் அனைத்தையும் அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கருவறைக்கு அருகில் உள்ள மகாமண்டபத்தில் தேவையின்றி உள்ள பித்தளை வரிசை முறை அமைப்புகளையும் அகற்ற வேண்டும் என்றும், பொது தரிசனம் மற்றும் ரூ.100 கட்டண தரிசன வரிசையில் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தேவர் குடிலுக்கு அருகிலும் மற்றும் ரூ.100 டிக்கெட் கவுண்டருக்கு அருகிலும் மொபைல் டாய் லெட்கள் அமைக்க ஆகம விதிகளுக்குட்பட்டு சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்த வேண்டும்.

    கோவிலில் மூலவருக்கு மூன்று காலங்களிலும் நடைபெறும் அபிசேகத்தின் போது பக்தர்கள் அமர்ந்து பார்க்கும் முறையினால் கூட்ட நெரிசல் ஏற்படுவதை தவிர்க்க ஆகம விதி மற்றும் கோவில் பழக்க வழக்கங்களின் படி கோயில் விதாயகர்த்தா கருத்துரை பெற்று உற்சவர் விக்கிரகமான குமரவிடங்க பெருமானுக்கு உள்துறையிலுள்ள இரண்டாம் பிரகாரத்தில் 108 மகாதேவர் சன்னதி முன்பு உள்ள மேடையில் பக்தர்கள் காணும் வகையில் அபிசேகம் நடத்துவதற்கு திட்டத்தினை தயாரித்து பக்தர்கள் அனுமதிச்சீட்டு பெற்று அமர்ந்து தரிசனம் செய்யவும் சாத்தியக் கூறுகளை ஆராய்ந்து செயல்படுத்தப்பட வேண்டும்.

    கோவிலில் அபிஷேகத்தின் போது வெளியிலிருந்து பிளாஸ்டிக் கேன் மூலம் பல லிட்டர் பால் தினமும் கட்டணம் ஏதுமின்றி அபிஷேகம் செய்யப்பட்டு வருகிறது.

    பக்தர்களிடம் பால் அபிஷேகம் செய்வதாக திரி சுதந்திரர்கள் தாங்களாகவே பிளாஸ்டிக் கேன்களில் கொள்முதல் செய்து சன்னதிக்குள் கொண்டுவந்து பூஜை செய்யும் போத்தி மூலம் மூலவருக்கு அபிஷேகம் செய்யப்படுகிறது. சுவாமியின் பீடத்தின் அருகிலேயே பால் கேன்களில் பிடித்து அபிஷேக பிரசாதமாக திரிசுதந்திரர்களிடம் திரும்ப வழங்கப்பட்டு வருவது கண்டறியப்பட்டுள்ளதால், இதனை பிற கோவில்களில் உள்ளவாறு பக்தர்கள் பால் அபிஷேகம் செய்ய வேண்டுமெனில் அதற்குரிய கட்டணத்தை நிர்ணயம் செய்து கோவில் திட்டப்படி ஒரு அபிஷேகத்திற்கு 50 லிட்டர் பசும் பாலை கோவில் மூலமே கொள்முதல் செய்து அபிஷேகம் செய்ய உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

    தற்போது ரூ.100 மற்றும் பொதுவரிசை இணைந்து ஒரே வரிசையாக பக்தர்கள் தரிசனம் செய்வதால், மூலவருக்கு எதிர்புறம் வரும் வழியில் மயில் தேவருக்கு பின்புறம் அமைக்கப்பட்டுள்ள ரேம்ப் அமைப்பு மேடும் பள்ளமாக உள்ளதை சரியான முறையில் சரிவு வாக்கில் மரப்பலகைகள் அமைப்பு கொண்டு சரிசெய்யப்பட வேண்டும், மகாமண்டபத்தில் தேங்காய் உடைக்கும் இடத்தை மாற்றி இரண்டாம் பிர காரத்தில் பழைய உள்துறை அலுவலகம் அருகில் இடம் தேர்வு செய்து தேங்காய் உடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மடப்பள்ளி அருகில் வைக்கப்பட்டுள்ள வீல்சேர் மற்றும் தூக்குபடுக்கை வைக்கப்பட்டுள்ள விவரத்தினை பக்தர்களுக்கு நன்கு தெரியும் வகையில் ஆங்காங்கே அறிவிப்பு பலகை வைக்கப்பட வேண்டும், கோயிலுக்குள் அவ்வப்போது குழாய் மூலம் தண்ணீர் பாய்ச்சி சுத்தம் செய்யவும், சிலைகள் பாதுகாப்பு அறையில் தூசு படிவதை தடுக்க கண்ணாடியிலான அமைப்பு ஏற்படுத்திடவும், ஏற்கனவே ஆணையர் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளவாறு சிலைகள் பாதுகாப்பு அறையின் முகப்பும் அமைக்கப்பட வேண்டும்.

    இந்த கோவிலில் நாள் முழுவதும் அன்னதானம் நடைபெறுகிறது, அன்னதான கூடமாக தற்காலிகமாக பயன்படுத்தப்பட்டு வரும் சமையல் செய்யும் இடம் தூய்மையாக பராமரிக்கப்பட வேண்டும், கோவிலில் அன்னதானத்திற்காக தினந்தோறும் தேவைப்படும் சமையல் பொருட்களை அடுக்கி வைப்பதற்காக பலசரக்கு சாமான்கள் பாதுகாப்பு அறை உடனடியாக அமைக்கப்பட வேண்டும்.

    கோவிலில் உள்ள அன்னதான கூடத்தில் பக்தர்கள் உணவருந்துவதற்கு காத்திருக்கும் வேளையில் பக்தர்கள் பக்தி நிகழ்வுகளை கண்டுகளிப்பதற்காக அகன்ற திரை கொண்ட எல்.இ.டி. டி.வி. பொருத்த வேண்டும், கோயிலுள்ள அன்னதான கூடத்தில் பக்தர்கள் உணவருந்துவதற்கு செல்லும் நுழைவு வாயில் அருகிலும் அதிக அளவில் பக்தர்கள் உணவருந்தி விட்டு வெளியேறும் இடத்திலும் அமைக்கப்பட்டுள்ள கை கழுவுவதற்காக பயன்படுத்தப்படும் தண்ணீர் குழாய்கள் கூடுதலாக பொருத்தவும், முடிகாணிக்கை மண்டபத்தில் “முடிகாணிக்கை செய்ய கட்டணம் கிடையாது” என்ற வாசகம் பொருந்திய டிஜிட்டல் போர்டு தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வைக்கப் பட வேண்டும்.

    மேலும் முடிகாணிக்கை மண்டபத்தில் பணியில் இருக்கும் பணியாளர்கள் இலவச கட்டணச்சீட்டு வழங்கும் போதே “முடி காணிக்கை செய்ய கட்டணம் இல்லை“ என்று தெரிவிக்க வேண்டும். ஒலிப்பெருக்கி மூலம் அவ்வப்போது அறிவிக்க வேண்டும்.

    முடிகாணிக்கையின் போது பணியாளர்கள் பக்தர்களிடம் தொகை பெறுவதை கண்காணித்து தொகை பெறும் பணியாளர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், நாழிக்கிணற்றில் புனித நீராட பக்தர்களுக்கு ரூ.1 கட்டணச்சீட்டு தற்போது வழங்கப்பட்டு வருகிறது. கட்டணச் சீட்டை இரத்து செய்து பக்தர்களை இலவசமாக அனுமதிக்க ஆணையர் அனுமதி பெற்று செயல்பட வேண்டும்.

    பக்தர்கள் நீராடி விட்டு விரைந்து செல்வதற்கு பணியாளர் ஒருவர் நியமிக்கப்பட வேண்டும். நீராடி விட்டு வரும் பெண்கள் உடை மாற்றுவதற்காக உள்ள அறையில் கூடுதல் டியூப் லைட்கள் பொருத்த வேண்டும். பெண்கள் உடை மாற்றும் அறையின் முகப்பில் மறைப்பு ஏற்படுத்த வேண்டும்.

    கோவில் வளாகத்தில் வேத பாடசாலைக்கு டிஜிட்டல் பெயர் பலகை வைக்கப்பட வேண்டும், பாடசாலையை தூய்மைப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளவும், புதிய மாணவர் சேர்க்கைக்கு விளம்பரப்படுத்தி மாணவர்களை சேர்த்திட நடவடிக்கை எடுக்கவும், அர்ச்சகர் பயிற்சி பள்ளியில் உள்ள 14 கழிப்பறைகளில் ஒரு பக்கம் உள்ள ஏழு கழிப்பறைகளை நவீனப்படுத்தியும், மறுபுறம் உள்ள ஏழு கழிப்பறைகளையும் குளியல் அறைகளாக மாற்றவும் வேண்டும்.

    பயிற்சி மாணவர்கள் தங்கும் முதல் தளத்தில் கூடுதல் குளியலறைகள் ஏற்படுத்தவும், படுக்கை அறைகளில் கூடுதல் மின்விசிறி அமைக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும், பயிற்சி பள்ளி மாணவர்களுக்கு உணவு சமைக்கும் சமையலறைகளை புதியதாக கட்டிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும், கோவிலில் உள்ள யானை இயற்கை சூழலில் நடந்து செல்வதற்கேற்ப சரவணபொய்கை வளாகத்தில் மண்தரை வசதி ஏற்படுத்தப்பட வேண்டும் என்று கோயில் இணை ஆணையர், செயல் அலுவலருக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் சுபகிருது வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.
    ஸ்ரீவைகுண்டம் கள்ளப்பிரான் சுவாமி கோவிலில் சுபகிருது வருட பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. காலை 7 மணிக்கு விஸ்வரூபம், 8 மணிக்கு திருமஞ்சனம், மூலவர் உற்சவர்களுக்கு புதிய வஸ்திரங்கள் சாத்தப்பட்டது.

    நாலாயிர திவ்யப்பிரபந்தம் நித்யல் கோஷ்டி நடைபெற்றது. மாலை 6.30 மணிக்கு உற்சவர் சுவாமி கள்ளப்பிரான் ஸ்ரீ தேவி, பூதேவி வைகுண்ட நாயகி சோமநாத நாயகி தாயார்களுடன் சயன குறட்டிற்கு எழுந்தருளினார்.

    அதன்பின் தலத்தார் ராஜப்பா வெங்கடாச்சாரி சுபகிருது வருட பஞ்சாங்கம் வாசித்தார். பின் கோஷ்டி நடைபெற்று பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

    இந்நிகழ்ச்சியில் நிர்வாக அதிகாரி கோவல மணிகண்டன், தக்கார் (பொறுப்பு) ராமசுப்பிரமணியன், ஆய்வாளர் நம்பி தலத்தார்கள் சீனிவாசன், திருவேங்கடத்தான், கண்ணன், ஸ்ரீகிருஷ்ணன் உட்பட பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை கோவில் தலத்தார்கள் செய்திருந்தனர்.
    சபரிமலை ஐயப்பன் கோவில் நடை வருகிற 10-ந்தேதி திறக்கப்படுகிறது. இதையடுத்து சித்திரை விஷூ திருநாளில் சபரிமலை செல்ல பக்தர்கள் பலரும் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகிறார்கள்.
    கேரளாவில் உள்ள பிரசித்தி பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவிலில் சித்திரை விஷூ பண்டிகைக்காக வருகிற 10-ந்தேதி கோவில் நடை திறக்கப்படுகிறது.

    10-ந்தேதி மாலையில் கோவில் நடை திறக்கப்பட்டாலும் மறுநாள் 11-ந் தேதி அதிகாலை முதல்தான் கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள்.

    அன்று முதல் தினமும் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைபெறும். 15-ந் தேதி சித்திரை விஷூ வழிபாடுகள் நடைபெறுகிறது. அன்று காலை கனிகாணும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    இதற்கான ஆன்லைன் முன்பதிவு தொடங்கி உள்ளது. கேரளாவில் தற்போது கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளதால் கட்டுப்பாடுகளிலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு உள்ளன.

    இதையடுத்து முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் கோவிலில் தரிசனம் செய்ய அனுமதி கிடைக்கும். இதையடுத்து சித்திரை விஷூ திருநாளில் சபரிமலை செல்ல பக்தர்கள் பலரும் ஆர்வமாக முன்பதிவு செய்து வருகிறார்கள்.

    இதையும் படிக்கலாம்....காஞ்சிபுரத்தில் பிரமாண்ட ஆஞ்சநேயர் ஆலயம்
    தஞ்சை காந்திஜிசாலை ஜூம்மா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் நோன்பை முடித்து கொண்டு நோம்பு கஞ்சியை குடித்தனர்.
    இஸ்லாமியர்களின் ஐம்பெரும் கடமைகளில் ஒன்று புனித ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதாகும். இஸ்லாமியர்களின் புனித மாதமான ரமலான் மாதம் முழுவதும் 30 நாட்களுக்கு நோன்பு கடைபிடிக்கப்படும். இதையடுத்து பிறை தெரிந்ததும் அடுத்தநாள் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான ரம்ஜான் நோன்பு நேற்று அதிகாலை தொடங்கியது.

    முன்னதாக ரமலான் மாத முதல் பிறை 2-ம்தேதி தென்பட்டதை தொடர்ந்து இரவு சிறப்பு தொழுகை அனைத்து பள்ளி வாசல்களிலும் நடைபெற்றது. நேற்றுஅதிகாலை 4 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை உண்ணாமலும், நீர் பருகாமலும் இஸ்லாமியர்கள் நோன்பு இருந்தனர்.

    பின்னர் மாலையில் பள்ளி வாசல்களில் தொழுகை நடைபெற்றது. தஞ்சை காந்திஜிசாலை ஜூம்மா பள்ளிவாசலில் ஏராளமான இஸ்லாமியர்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனர். பின்னர் நோன்பை முடித்து கொண்டு நோம்பு கஞ்சியை குடித்தனர்.

    இதேபோல் தஞ்சை அய்யங்கடைத்தெரு, மேலஅலங்கம், வடக்குவீதி, சேப்பனாவாரி, பாம்பாட்டித்தெரு, மானம்புச்சாவடி, விசிறிகாரத்தெரு, நாஞ்சிக்கோட்டை சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள பள்ளிவாசல்களில் தொழுகை நடைபெற்றது. இதில் திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்றனர்.
    இக்கோவில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்றபோது, மலைத் துண்டுகள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்கிறது தல வரலாறு.
    காஞ்சிபுரம் மாவட்டம் அய்யங்கார்குளம் என்ற இடத்தில் அமைந்துள்ள சஞ்சவீராயர் கோவிலைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

    பழமையும், பெருமையும் வாய்ந்த இந்த ஆலயம், ஆஞ்சநேயருக்காக அமைந்திருக்கும் பிரமாண்ட திருக்கோவில்களில் சிறப்பு வாய்ந்ததாகும். ஆலயம் முழுவதும் கற்களால் கட்டப்பட்டது.

    இக்கோவில் ராமாயண காலத்துடன் தொடர்புடையது. அனுமன் சஞ்சீவி மலையை சுமந்து சென்றபோது, மலைத் துண்டுகள் விழுந்த இடங்களில் இதுவும் ஒன்று என்கிறது தல வரலாறு.

    இந்த ஆலயம் 1456 முதல் 1543 வரை வாழ்ந்த, லட்சுமி குமார தாத்தாச்சாரியார் என்பவரால் கட்டப்பட்டிருக்கிறது. இவர் சிறந்த அறிஞராகவும், விஜயநகரப் பேரரசில் மிகப்பிரபலமாகவும், ஆளுமை கொண்டவராகவும் இருந்திருக்கிறார்.

    வரதராஜப் பெருமாளை தரிசித்து விட்டு செல்லும் வழியில் இவ்விடத்தில், தாத்தாச்சாரியார் தனது குழுவினருடன் தங்கினார். அப்போது அவரிடம் இருந்த செல்வத்தைப் பறிக்க வந்த திருடர் கூட்டத்தை குரங்குகளின் வாயிலாக ஆஞ்சநேயர் காத்தருளினார். அதற்கு நன்றிக்கடனாகவே இந்த ஆலயத்தை அவர் எழுப்பியிருக்கிறார்.

    கோவிலின் நுழைவு வாசல் தெற்கு பக்கம் உள்ளது. கோபுரங்கள் எதுவும் இல்லாமல், நான்கு தூண்களைக் கொண்ட மண்டபம் ஒன்றுதான் நம்மை ஆலயத்திற்குள் வரவேற்கும் வகையில் நிற்கிறது.

    ஆலய கருவறைக்குள் சஞ்சீவிராயர் என்ற பெயரில் ஆஞ்சநேயர் நின்ற திருக்கோலத்தில் காட்சியளிக்கிறார்.

    மூலவரின் கருவறைக்கு எதிரே 24 தூண்கள் கொண்ட கல் மண்டபம் இருக்கிறது. இதில் கிழக்கு நோக்கியபடி மகாலட்சுமி தாயார் தரிசனம் தருகிறார்.

    ராமர், சீதை மற்றும் லட்சுமணன் ஆகியோர், ஆஞ்சநேயரின் கருவறைக்கு வெளியே தெற்கு நோக்கி வீற்றிருந்து அருள்கின்றனர்.

    கிழக்குப் பிரகாரத்தில் கருடாழ்வார் வடக்கு நோக்கி நின்ற கோலத்தில், 5 அடி உயரத்தில் சிரித்த முகத்துடன் காட்சி தருகிறார்.

    காஞ்சிபுரம் நகருக்கு தெற்கே 9 கி.மீ. தொலைவில், அய்யங்கார்குளம் உள்ளது. காஞ்சிபுரத்தில் இருந்து வந்தவாசி செல்லும் வழியில் பாலாறு பாலம் தாண்டியதும் அய்யங்கார் கூட்ரோடு வரும். அதில் இருந்து வலதுபுறம் 5 நிமிடம் சென்றால் ஆலயத்தை அடையலாம்.
    மண்டைக்காடு பகவதி அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான நாளை மீன பரணிக்கொடை விழா நடக்கிறது. நள்ளிரவு வலியபடுக்கை பூஜை நடக்கிறது
    குமரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற கோவில் களில் மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இக்கோவிலில் கேரள பெண் பக்தர்கள் இருமுடி கட்டு கட்டி சரண கோ‌ஷத்துடன் தரிசனம் செய்வதால் பெண்களின் சபரிமலை என போற்றப்படுகிறது. இங்கு கடந்த பிப்ரவரி மாதம் 27-ந்தேதி திருக்கொடி ஏற்றத்துடன் தொடங்கி மார்ச் 8-ந்தேதி வரை பத்து நாட்கள் மாசிக்கொடை விழா நடந்தது.

    விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கேரள மாநிலத்தில் இருந்தும் அதிகமான பக்தர்கள் கடலில் புனித நீராடி, பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். இதனைத் தொடர்ந்து அம்மனின் பிறந்த நாள் என கருதப்படும் பங்குனி மாத பரணி நட்சத்திரமான இன்று மீன பரணிக்கொடை விழா நடக்கிறது.

    இதனையொட்டி காலை 4.30 மணிக்கு திருநடை திறப்பு, 5 மணிக்கு உருள் நேர்ச்சை, 5.30 மணிக்கு உத்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம் நடந்தது.

    6.30 மணிக்கு உ‌ஷபூஜை, 7 மணிக்கு பூமாலை, 8 மணிக்கு வில்லிசை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப் பல்லக்கில் பவனி, பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜை, தொடர்ந்து குத்தியோட்டம், மாலை 6.30 மணிக்கு சாயரட்சை தீபாராதனை, இரவு 8.30 மணிக்கு அத்தாழ பூஜை, 9.30 மணிக்கு அம்மன் வெள்ளிப்பல்லக்கில் பவனி, நள்ளிரவு 12 மணிக்கு மேல் 1 மணிக்குள் வலிய படுக்கை என்னும் மகாபூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவிற்கு மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் கேரளாவிலிருந்தும் பல்லாயிரகணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர். விழாவிற்கு தக்கலை, திங்கள்நகர், குளச்சல், நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.
    தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி சென்னை தியாகராயநகரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.
    தெலுங்கு வருடப்பிறப்பான யுகாதி பண்டிகையையொட்டி திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் சென்னை தியாகராயநகரில் உள்ள வெங்கடேச பெருமாள் கோவிலில், பெருமாளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.

    அதிகாலை 5 மணி முதல் பக்தர்கள் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய கோவிலுக்கு வந்தனர். நேரம் செல்ல செல்ல பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. அவர்களை ஒழுங்குபடுத்தி அனுப்ப போலீசார் தடுப்பு கம்பிகள் அமைத்து பாதுகாப்பு பணிகளை மேற் கொண்டனர்.

    கோவிலில் மலர்கள் அலங்காரம் முழுமையாக செய்யப்பட்டு பெருமாளுக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.

    இசையமைப்பாளர் இளையராஜா உள்பட ஏராளமான முக்கிய பிரமுகர்கள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தனர்

    சொரிமுத்து அய்யனார் கோவிலில் 2 ஆண்டுகளுக்கு பிறகு படையலிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்த அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    நெல்லை மாவட்டத்தில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் சொரிமுத்து அய்யனார் கோவிலும் ஒன்று.

    மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் காரையாரில் உள்ள இந்த கோவிலில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கொரோனா பரவல் காரணமாக பக்தர்கள் செல்ல வனத்துறை தடை விதித்தது.

    மேலும் பக்தர்கள் முடிகாணிக்கை செலுத் தவும், படையலிட்டு நேர்த்திக்கடன் செலுத்தவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

    இந்நிலையில் சமீபகாலமாக தொற்று பரவல் படிப்படியாக குறைந்து வந்ததையடுத்து தமிழக அரசு பல்வேறு தளர்வுகளை அறிவித்தது. அதன்படி சொரிமுத்து அய்யனார் கோவிலுக்கு பக்தர்கள் சென்று வழிபட அனுமதி வழங்கப்பட்டது.

    ஆனால் கோவில் முன்புறம் உள்ள ஆற்றில் புனித நீராடவும், நேர்த்திக்கடன் செலுத்தவும் தடை தொடர்ந்தது. இதனையும் நீக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனைத் தொடர்ந்து கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆற்றில் நீராடவும், தொடர்ந்து முடிகாணிக்கை செலுத்தவும் அனுமதி வழங்கப்பட்டது.

    அதே நேரத்தில் பக்தர்கள் படையலிட்டு தங்களது நேர்த்திக்கடனை செலுத்துவதற்கு மட்டும் அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இதுதொடர்பாக பக்தர்கள் சபாநாயகர் அப்பாவுவிடம் கோரிக்கை வைத்தனர்.

    இந்நிலையில் சொரிமுத்து அய்யனார் கோவிலில் இன்று முதல் பக்தர்கள் நேர்த்திகடன் செலுத்த அனுமதி வழங்கப்பட்டது. இதுதொடர்பாக நேற்று மாலை அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இதைத்தொடர்ந்து இன்று காலை முதலே சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த திரளான பக்தர்கள் வாகனங்களில் ஆடு உள்ளிட்ட நேமிசங்களுடன் கோவிலுக்கு சென்றனர். அங்கு சாமி தரிசனம் செய்து படையலிட்டு வழிபட்டனர்.

    2 ஆண்டுகளுக்கு பிறகு நேர்த்திகடன் செய்ய அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.
    தஞ்சை பெரியகோவிலில் வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு தியாகராஜசாமி-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது.
    தஞ்சை பெரியகோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரை திருவிழா 18 நாட்கள் வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டும் சித்திரை திருவிழாவுக்கான பந்தகால் முகூர்த்தம் கடந்த பிப்ரவரி 7-ந் தேதி நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து சித்திரை திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் காலை, மாலையில் சாமி புறப்பாடு நடக்கிறது. தொடர்ந்து வருகிற 16-ம் தேதி வரை காலையில் பல்லக்கு புறப்பாடும், மாலையில் பல்வேறு வாகனங்களில் சாமி வீதிஉலாவும் நடக்கிறது.

    விழாவின் முக்கிய நிகழ்வாக வருகிற 8-ம்தேதி மாலை முத்துப்பல்லக்கில் சந்திரசேகரசாமி புறப்பாடும், 11-ம் தேதி மாலை ஓலைச்சப்பரத்தில் சாமி-அம்மன் புறப்பாடும் நடைபெற உள்ளது. வருகிற 13-ந் தேதி காலை 6.30 மணிக்கு தியாகராஜசாமி-கமலாம்பாள் தேரில் எழுந்தருளியதும், தேரோட்டம் நடைபெற உள்ளது.

    இந்த தேரோட்டத்தையொட்டி உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

    ×