என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பங்குனி மாத பிறப்பையொட்டி, பழனி முருகன் கோவிலில் சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    பங்குனி மாத பிறப்பையொட்டி, பழனி முருகன் கோவிலில் நேற்று சிறப்பு பூஜை நடைபெற்றது. வெளிப்பிரகாரத்தில் உள்ள ஆனந்தவிநாயகர் சன்னதியில் கலசபூஜை, சிறப்பு யாகம் நடைபெற்று தீபாராதனை, 16 வகை அபிஷேகம் நடந்தது.

    இதைத்தொடர்ந்து சாமிக்கு வெள்ளி கவச அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் நேற்று வாரவிடுமுறை என்பதால், பழனி முருகன் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    குறிப்பாக தரிசன வழிகளில் கூட்டம் அதிகம் இருந்தது. இதேபோல் ரோப்கார் மற்றும் மின்இழுவை ரெயில்நிலையங்களில் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
    சபாபதி திருக்கல்யாண உற்சவத்தை முன்னிட்டு காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் சார்பாக சீர் வரிசை பொருட்கள் சமர்ப்பணம் செய்யப்பட்டது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. அதையொட்டி நேற்று இரவு சபாபதி திருக்கல்யாண உற்சவம் நடந்தது. அதற்காக, காணிப்பாக்கம் வரசித்தி விநாயகர் கோவில் தேவஸ்தானம் சார்பாக நிர்வாக அதிகாரி வெங்கடேஸ்வர்லு நேற்று ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரருக்கும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாருக்கும் மஞ்சள், குங்குமம், பழம், வெற்றிலைப் பாக்கு, லட்டுபிரசாதம், பட்டு வஸ்திரம் உள்ளிட்ட சீர்வரிசை பொருட்களை கோவிலின் கிழக்குக் கோபுரம் அருகில் இருந்து தலையில் சுமந்தபடி மேளதாளம் மற்றும் மங்கல வாத்தியங்கள் முழங்க கோவிலின் அலங்கார மண்டபம் வரை வந்து, பிரதான அர்ச்சகர்களிடம் சமர்ப்பணம் செய்தனர்.

    அப்போது காணிப்பாக்கம் கோவில் நிர்வாக அதிகாரி வெங்கடேஷ்வர்லு மற்றும் அதிகாரிகள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரரையும், ஞானப்பிரசுனாம்பிகை தாயாரையும் வழிபட்டனர். தட்சிணாமூர்த்தி சன்னதி அருகில் அவர்களுக்கு பிரசாதம், சாமி படம் ஆகியவை வழங்கப்பட்டது. பொன்னாடை போர்த்தி கவுரவிக்கப்பட்டனர். அப்போது சிவன் கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு உடனிருந்தார்.
    நாமக்கல் ஆஞ்சநேயர் கோவிலில் எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது.
    நாமக்கல் நகரின் மைய பகுதியில் பிரசித்தி பெற்ற ஆஞ்சநேயர் கோவில் உள்ளது. இங்கு ஒரே கல்லில் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார். இந்த கோவிலில் தினமும் அபிஷேகம் மற்றும் பூஜை நடந்து வருகிறது. நேற்று பங்குனி மாத முதல் ஞாயிற்றுக்கிழமையையொட்டி சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜை நடந்தது.

    இதையொட்டி அதிகாலையில் நடை திறக்கப்பட்டு சாமிக்கு 1,008 வடைமாலை சாத்தப்பட்டது. பின்னர் பட்டாச்சாரியார்கள் குடம், குடமாக பால் ஊற்றி ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்தனர். தொடர்ந்து எண்ணெய், பஞ்சாமிர்தம், மஞ்சள், சீயக்காய் உள்ளிட்ட நறுமண பொருட்களால் ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் மலர் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஏராளமான பக்தர்கள் முக கவசம் அணிந்தும், சமூக இடைவெளியை கடைபிடித்தும் சாமி தரிசனம் செய்தனர்.
    பழனி திருஆவினன்குடி கோவிலில் சாந்தி ஹோம யாக பூஜை தொடங்கியது. முன்னதாக நான்கு திசைகளிலும் கலசங்கள் வைத்து கலசபூஜை நடந்தது.
    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவை முன்னிட்டு, நேற்று திருஆவினன்குடி கோவிலில் சாந்தி ஹோம யாக பூஜை தொடங்கியது.

    முன்னதாக நான்கு திசைகளிலும் கலசங்கள் வைத்து கலசபூஜை நடந்தது. தொடர்ந்து இந்த ஹோமம் இன்றும் (திங்கட்கிழமை) உச்சிக்கால பூஜையில் நடைபெறுகிறது.

    நிகழ்ச்சியில் கோவில் துணை ஆணையர் செந்தில்குமார், கண்காணிப்பாளர் சண்முகவடிவு உள்பட பலர் கலந்து கொண்டனர். பூஜை நிகழ்ச்சிகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணிய குருக்கள் ஆகியோர் செய்தனர்.
    சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் முடி காணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.
    அம்மன் கோவில்களில் மிகவும் பிரசித்திபெற்றது சமயபுரம் மாரியம்மன் கோவில் ஆகும். நேற்று அமாவாசைதினம் என்பதால் அதிக அளவில் பக்தர்கள் கோவிலுக்கு வந்தனர். அவர்கள் கோவில்முன்பும், விளக்கு ஏற்றும் இடத்திலும் தீபம் ஏற்றி வழிபட்டனர்.

    மேலும் தங்கள் வேண்டுதல்களை நிறைவேற்றும் வகையில் முடி காணிக்கை செலுத்தியும், குழந்தையை கரும்புத் தொட்டிலில் சுமந்து கோவிலை வலம் வந்தும் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

    மேலும், அம்மனை தரிசனம் செய்வதற்காக வரிசையில் காத்திருந்து கோவிலுக்குள் சென்று பயபக்தியுடன் வணங்கி சென்றனர். மேலும் பூச்சொரிதல் விழா நடைபெற்று வருவதால் அதிக அளவில் பக்தர்கள் வந்ததைக்காண முடிந்தது.
    பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டது. பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா வருகிற 19-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருவனந்தபுரம் :

    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஒவ்வொரு தமிழ் மாதம் தொடக்கத்தில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் பூஜைகள் நடைபெறும். அதன்படி, மாசி மாத பூஜைக்காக கடந்த மாதம் (பிப்ரவரி) 12-ந் தேதி நடை திறக்கப்பட்டது. 5 நாட்கள் சிறப்பு பூஜைகளுக்கு பின் 17-ந் தேதி நடை அடைக்கப்பட்டது.

    இந்த நிலையில், பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை நேற்று மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மாத பூஜையை முன்னிட்டு 18-ந் தேதி வரை 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

    மாத பூஜையின் தொடர்ச்சியாக 19-ந் தேதி (வெள்ளிக்கிழமை) பங்குனி உத்திர ஆறாட்டு திருவிழா தொடங்குகிறது. அன்று காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு திருவிழா கொடியை ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து வருகிற விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும். 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டை நடக்கிறது.

    விழாவின் இறுதி நாளான 28-ந் தேதி காலை 11 மணிக்கு பம்பையில் ஆறாட்டு நடைபெறும். தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். அத்துடன் இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

    கொரோனா கட்டுப்பாடு காரணமாக கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை. தற்போது மாத பூஜை மற்றும் திருவிழா நாட்களில் தினமும் 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகையை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்படும். 14-ந் தேதி விஷு பண்டிகை சிறப்பு பூஜை வழிபாடு நடைபெறும். மாத பூஜைக்கு பின் ஏப்ரல் 18-ந் தேதி இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.
    ஒவ்வொரு கிழமைகளில் வரும் பிரதோஷத்திற்கும், சில குறிப்பிட்ட பிரச்சினைகளை தீர்க்கும் சக்தி உண்டு. அந்த வகையில் ஞாயிற்றுக்கிழமை வரும் பிரதோஷ விரதம் கடைபிடிப்பதால் கிடைக்கும் நன்மைகளை பார்க்கலாம்.
    சூரியனின் ஆதிக்கம் நிறைந்த நாள், ஞாயிறு. இதனால் ஞாயிற்றுக்கிழமையில் வரும் பிரதோஷமும் மிகவும் உன்னதமானதாக கருதப்படுகிறது. பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையானது, ஞாயிற்றுக்கிழமையன்று ராகுகாலத்தில் வரும். இதனாலும் ஞாயிற்றுக்கிழமை பிரதோஷம் சக்தி வாய்ந்ததாக உள்ளது.

    எனவே, ராகுகாலமும் பிரதோஷ வேளையும் இணைந்திருக்கும் நேரத்தில், நாம் சிவாலயத்துக்குச் சென்று அபிஷேக ஆராதனைகளில் கலந்துகொண்டு, சிவ தரிசனம் செய்வது, கூடுதல் பலன்களைத் தரும். இந்தக்கிழமையில் பிரதோஷ வழிபாடு செய்வதன் மூலம், சிம்ம லக்னம் மற்றும் சிம்ம ராசியினருக்கும், சூரிய தசை - புத்தி நடப்பவர்களுக்கும் ஜனன ஜாதக ரீதியான தோஷம் நீங்கும். சூரிய தோஷம், ராகு-கேது தோஷம், கிரகண தோஷம் அகலும். தந்தை - மகன் உறவில் சுமுகம் ஏற்படும்.

    இருதயம், வலது கண் தொடர்பான பிரச்சினைகள் விலகும். அரசு உத்தியோக முயற்சியில் வெற்றி கிடைக்கும். அரசியல்வாதிகளுக்கு பதவியில் உள்ள பிரச்சினைகள் அகன்று பதவி நிலைக்கும். கூடுதல் பலன் கிடைக்க, சர்க்கரைப் பொங்கல் நைவேத்தியம் படைக்கலாம்.
    பங்குனி உத்திர திருவிழாவையொட்டி பழனி முருகன் கோவிலில் சாமி தரிசனம் செய்ய தினமும் 25 ஆயிரம் பக்தர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் கலெக்டர் விஜயலட்சுமி உத்தரவிட்டார்.
    முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந்தேதி தொடங்கி 31-ந்தேதி வரை நடக்கிறது. இதையொட்டி திருவிழாவுக்கான முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனை கூட்டம் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.

    கூட்டத்துக்கு கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

    பழனியில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவில் 27-ந்தேதி இரவு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

    அடுத்த நாள் 28-ந்தேதி மாலை 4 மணி அளவில் விழாவின் முக்கிய நிகழ்வான பங்குனி உத்திர தேரோட்டம் நடக்கிறது. விழாவையொட்டி பழனிக்கு வரும் பக்தர்கள் அனைவரும் கண்டிப்பாக முக கவசம் அணிந்தும், கிருமி நாசினி மூலம் கைகளை சுத்தப்படுத்திய பின்னர், அவர்களின் உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்த பிறகே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும்.

    அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மேற்கொள்ள வேண்டும். அத்துடன் பக்தர்களுக்கு தேவையான குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும். சிறப்பு தரிசனத்துக்கு இணையதளம் மூலம் முன்பதிவு செய்வதற்காக பஸ் நிலையம், ரெயில் நிலையம், தேவஸ்தான தகவல் மையம் ஆகிய இடங்களில் தேவையான ஏற்பாடுகளை கோவில் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.

    மேலும் திருவிழாவையொட்டி பாதயாத்திரையாக வரும் பக்தர்களின் வசதிக்காக பக்தர்கள் நடைபாதையில் உள்ள புதர்கள் அகற்றப்பட வேண்டும். இரவில் பக்தர்கள் அந்த வழியாக நடந்து செல்லும் வகையில் மின் விளக்குகளை அந்தந்த ஊராட்சி, பேரூராட்சி நிர்வாகத்தினர் அமைக்க வேண்டும். பக்தர்கள் புனித நீராடுவதற்கு வசதியாக இடும்பன்குளம், சண்முகநதியில் 10 நாட்களுக்கு தண்ணீர் திறந்துவிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    மேலும் புனித நீராடும் பக்தர்களின் பாதுகாப்புக்காக தீயணைப்பு படை வீரர்கள் அங்கு தயார் நிலையில் இருக்க வேண்டும். ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளதால் மண்டகப்படிதாரர்கள் 50 பேர் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட வேண்டும். அதேபோல் ஒரு நாளைக்கு 25 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே சாமி தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும். அவர்களையும் குழுவாக பிரித்து சமூக இடைவெளியை பின்பற்றி சாமி தரிசனம் செய்யும் வகையில் கோவில் நிர்வாகம் தகுந்த ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

    வயதானவர்கள், குழந்தைகள், சிறுவர்களை கோவிலுக்கு அழைத்து வருவதை பக்தர்கள் தவிர்க்க வேண்டும். திருவிழாவையொட்டி கொடுமுடி தீர்த்தம் கொண்டுவர பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.

    அதிலும் குழுவாக வரும் பக்தர்கள் அனைவரும் தீர்த்தம் கொண்டு வருவதை தவிர்த்துவிட்டு, குழுவில் உள்ள சிலர் மட்டும் தீர்த்தம் கொண்டு வரலாம். இதனை கோவில் நிர்வாகிகள் கண்காணிக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் 10-வது (நிறைவு) நாளான நேற்று கோவில் உள்ளேயே திரிசூல ஸ்நானம் நடந்தது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வந்தது. விழாவின் 10-வது (நிறைவு) நாளான நேற்று கோவில் உள்ளேயே திரிசூல ஸ்நானம் நடந்தது.

    முன்னதாக கோவிலில் அதிகாலை நடராஜருக்கு ஆஸ்தானமும், பின்னர் கபிலேஸ்வரசாமி, காமாட்சி தாயாருக்கு ஸ்நாபன திருமஞ்சனமும் நடந்தது. அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7.30 மணி வரை பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம் நடந்தது. அத்துடன் பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது. இதையடுத்து இரவு 8 மணியில் இருந்து 9 வரை ராவணாசூர வாகன சேவை நடந்தது. அதில் உற்சவர் கபிலேஸ்வரர் எழுந்தருளி அருள்பாலித்தார்.
    அரவக்குறிச்சி கோடந்தூர் கிராமத்தில் உள்ள மாரியம்மன் ஆலயம் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சினை தீரவும் அம்மனை பக்தர்கள் பிரார்த்தனை செய்கின்றனர்.
    அரவக்குறிச்சி அருகே அமைந்துள்ளது கோடந்தூர் கிராமம். இங்குள்ள நாய்க்கன்வலசு என்ற பகுதியில் மாரியம்மன் திருக்கோவில் ஒன்று இருக்கிறது. 300 ஆண்டுகள் பழமையான இந்த ஆலயத்தில் அருளும் மாரியம்மன், சுயம்புவாகத் தோன்றியவர். தன்னை தேடி வந்து வேண்டிக்கொள்பவர்களுக்கு, வேண்டிய வரத்தை அருளும் ஒப்பற்ற தேவியாக, இந்த அன்னை விளங்குகிறாள்.

    பொருளாதாரத்தில் உயர்வு பெறவும், கணவன்- மனைவி இடையே உள்ள பிரச்சினை தீரவும், சுகப் பிரசவம் நடைபெறவும், குடும்பத்தில் சுபகாரியம் நடைபெறவும், நோய் நொடி நீங்கவும், மன அமைதி கிடைக்கவும் அம்மனை பிரார்த்தனை செய்தால், அந்த பிரார்த்தனை விரைவிலேயே நடந்தேறுவதை பார்க்கலாம்.

    இந்த ஆலயம் திருமணத் தடை நீக்கும் தலமாகவும் விளங்குகிறது. இங்கு வரும் பக்தர்கள், தங்களின் மகள் அல்லது மகனின் ஜாதகத்தை, அம்மனின் திருவடியில் வைத்து வணங்கி வேண்டிச் செல்கிறார்கள். அவர்களின் வேண்டுதல் விரைவிலேயே நிறைவேறுகிறது. இதையடுத்து அவர்கள் மணமக்களை அழைத்து வந்து நேர்த்திக்கடனைச் செலுத்திச் செல்கிறார்கள்.

    திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வட்டம் வெள்ளக்கோவிலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இந்த திருத்தலம் உள்ளது.
    தங்கள் கணவர், சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும்.
    14-3-2021 காரடையான் நோன்பு

    மந்திரதேசத்தை ஆட்சி செய்த அசுவபதி என்ற மன்னனின் மகள், சாவித்திரி. அசுவபதி தன்னுடைய மகளுக்கு, கணவனை அவளே தேர்ந்தெடுக்கும் சுதந்திரத்தை அளித்திருந்தார். பருவ வயதை எட்டிய சாவித்திரி ஒருமுறை வனத்திற்குச் சென்றபோது, அங்கு சத்தியவானைக் கண்டாள். சத்தியவானின் தந்தை சாளுவதேசத்து மன்னன் துயமத்சேனன். அவர் சிறப்பான ஆட்சியை தந்த போதிலும், வயோதிகத்தால் கண்பார்வை குன்றியது. அதை சாதகமாக பயன்படுத்திக்கொண்ட எதிரிகள், அவரிடம் இருந்து நாட்டை பறித்துக் கொண்டு சத்தியவானையும், அவனது பெற்றோரையும் காட்டிற்கு துரத்திவிட்டனர்.

    சத்தியவானுக்கு தந்தை இழந்த நாட்டைத் திரும்பப் பெற்று அரசாளவேண்டும் என்ற ஆசை இருந்தாலும், வயதான பெற்றோர்களை தனித்து விட்டுச் செல்ல விரும்பாததால், அவர்களுக்கு பணிவிடை செய்தவாறு காட்டிலேயே காலத்தைக் கழித்தான். சத்தியவானைப் பற்றி அறிந்ததும், அவன் மீது சாவித்திரிக்கு காதல் உண்டானது. அவனை திருமணம் செய்வது பற்றி தன்னுடைய தந்தையான அசுவபதியிடம் சொன்னாள். அவரும் திருமண ஏற்பாடுகளைச் செய்து, மணம் முடித்து வைத்தார்.

    திருமணத்திற்குப் பின் கணவனுடன் வாழ வேண்டும் என்ற நியமத்திற்கு இணங்க, சத்தியவானுடன் காட்டிலேயே வசிக்கத் தொடங்கினாள், சாவித்திரி. அரண்மனையில் பல பணியாளர்களுக்கு மத்தியில் வாழ்ந்தவள் என்பதால், காட்டில் சில சிரமங்களைச் சந்தித்தாலும், மனதளவில் கணவனோடு மகிழ்ச்சியாகவே இருந்தாள். தன் கணவனின் ஆயுளுக்காகவும், தன் மாங்கல்ய பாக்கியத்திற்காகவும், பல விரதங்களை அவள் கடைப்பிடித்து வந்தாள்.

    இருப்பினும் விதி யாரை விட்டது. ஒரு நாள், விறகு சேகரித்து வருவதற்காக காட்டிற்குச் சென்றான், சத்தியவான். சாவித்திரியும் அவனோடு சென்றிருந்தாள். வேலைக்கு நடுவே நண்பகல் வேளையில் இளைப்பாறுவதற்காக மரத்தடியில் சிறிது நேரம் ஓய்வெடுத்தான், சத்தியவான். அப்போது எமதர்மன் வந்து சத்தியவானின் உயிரைப் பறித்துச் சென்றான். அவனது ஜாதத்தில் குறுகிய காலமே வாழ்வான் என்று விதி இருந்ததால், எமன் தன் வேலையை செய்தான். அப்போது சாவித்திரி, தன்னுடைய கற்புத் திறத்தால், எமதர்மனின் உருவத்தைக் கண்டாள். உடனே கணவனின் உடலைக் கீழே கிடத்திவிட்டு, எமனைப் பின் தொடர்ந்தாள்.

    இதைக்கண்டு அதிர்ந்த எமதர்மன், அவளைத் திரும்பிப் போகும்படி வலியுறுத்தினார். எதிர்பாராதவிதமாக எமனின் காலில் விழுந்தாள் சாவித்திரி. தன் காலில் விழுந்தது ஒரு பெண் என்ற அளவில், அவளை ‘தீர்க்க சுமங்கலி பவ’ என்று வாழ்த்திவிட்டார், எமதர்மன். அப்படி வாழ்த்திய பிறகே அவருக்குப் புரிந்தது, தான் அவளது கணவனின் உயிரைத்தான் பறித்து வந்தோம் என்பது.

    “நீங்கள் வாழ்த்தியது உண்மையானால் அதன்படி நான் வாழ அருள்புரியுங்கள். நான் என் கணவருடன் வாழ விரும்புகிறேன். நான் பதிவிரதை என்பது உண்மையானால், அவரது உயிரைத் திருப்பித்தர வேண்டும்” என்று கேட்டாள்.

    சாவித்திரியின் புத்திசாலித்தனத்தை ரசித்த எமதர்மர், “இறப்புக்குப் பிறகு யாருக்கும் வாழ்வு கிடையாது. எனவே நீ கேட்பதை என்னால் செய்ய இயலாது. அதற்குப் பதிலாக வேறு எந்த வரம் கேட்டாலும் தருகிறேன்” என்றார்.

    சாவித்திரி சமயோசிதமாக, “என் மாமனார், மாமியார் மீண்டும் கண் பார்வை பெறவேண்டும். இழந்த நாட்டை திரும்பப் பெற்று ஆட்சிபுரிய வேண்டும். ஆண் வாரிசு இல்லாத என் தந்தைக்கு ஆண் குழந்தை பிறக்க வேண்டும். எனக்கு நூறு குழந்தைகள் வேண்டும்” என்றாள்.

    சற்றும் யோசிக்காத எமதர்மன் அவள்கேட்ட அனைத்து வரங்களையும் தருவதாக வாக்களித்தார். அதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சாவித்திரி, “எனக்கு நூறு குழந்தைகள் பிறக்க வேண்டுமென்றால், என் கணவன் உயிருடன் இருந்தாக வேண்டுமே. ஆகவே அவரது உயிரை திரும்பக் கொடுங்கள்” என்று யாசித்தாள்.

    சாவித்திரியின் பதிபக்தியை மெச்சிய எமன், “இதுவரை என்னை யாரும் பார்த்தது இல்லை. உன் கற்பின் மகிமையால் நீ, என்னைப் பார்த்தது மட்டுமின்றி, என்னிடமே வாதம் செய்து அதில் வெற்றியும் பெற்றுவிட்டாய். நீ என்னிடம் கேட்டுப் பெற்ற வரங்கள் அனைத்தும் கிடைக்கும். மாசியும் பங்குனியும் சேரும் சமயத்தில், உன் கணவன் பிழைப்பான். உலகம் உள்ளளவும், உன்னை நினைத்து விரதம் இருப்பவர்களுக்கு உன் ஆசி கிடைக்கட்டும். அந்த விரதத்தை கடைப்பிடிப்பவர்கள், மனமொத்த தம்பதியராக வாழ்வார்கள்” என்று அருளாசி கூறி மறைந்தார்.

    சாவித்திரி காட்டில் கணவனை விட்டுச் சென்ற இடத்திற்குத் திரும்பி வந்து, அவன் உடலைத் தன் மடியில் கிடத்தினாள். சிறிது நேரத்தில் தூக்கத்தில் இருந்து விழிப்பதுபோல் சத்தியவான் விழித் தெழுந்தான்.

    அவன் உயிரை எமன் எடுத்துச் சென்றதையும்; எமனுடன் போராடி அவன் உயிரையும், மேலும் பல வரங்களையும் பெற்று வந்த விவரத்தையும் சாவித்திரி கூறினாள். சாவித்திரியும் சத்தியவானும் தங்கள் குடிலுக்குத் திரும்பி வந்தனர். சாவித்திரி எமனிடம் பெற்ற வரத்தின்படி சத்தியவானின் பெற்றோர் கண்பார்வை பெற்றதுடன் இழந்த நாட்டையும் திரும்பப் பெற்றனர்.

    எமனுடன் வாதாடி இறந்த தன் கணவனின் உயிரை மீட்ட சாவித்திரியின் பதிவிரதத்தைப் போற்றவும், தங்கள் கணவர், சத்தியவான் போல எவ்வித குறைவுமின்றி நீடூழி வாழ்ந்து தங்களுக்கு மாங்கல்ய பாக்கியம் அருளவேண்டும் என்பதற்காகவும் பெண்கள் அனுஷ்டிக்கும் விரதமே ‘காரடையான் நோன்பு’ ஆகும்.
    திருப்பதி கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. தினமும் இரவு 7 மணியில் இரவு 8 மணிவரை உற்சவர்கள் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வருகின்றனர்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருடாந்திர தெப்போற்சவம் வருகிற 24-ந்தேதியில் இருந்து 28-ந்தேதி வரை 5 நாட்கள் நடக்கிறது. தினமும் இரவு 7 மணியில் இரவு 8 மணிவரை உற்சவர்கள் தெப்பத்தில் எழுந்தருளி பவனி வருகின்றனர். 24-ந்தேதி சீதா, ராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர்.

    25-ந்தேதி சத்தியபாமா, ருக்மிணி, ஸ்ரீகிருஷ்ணர் ஆகியோர் தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 26-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி தெப்பத்தில் எழுந்தருளி 3 சுற்றுகள் பவனி வருகின்றனர். 27-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 5 சுற்றுகள் பவனி வருகின்றனர். 28-ந்தேதி ஸ்ரீதேவி, பூதேவி, மலையப்பசாமி 7 சுற்றுகள் பவனி வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    இதனால் கோவிலில் 24, 25-தேதிகளில் சகஸ்ர தீபலங்கார சேவை மற்றும் 26, 27 மற்றும் 28-ந்தேதிகளில் ஆர்ஜித பிரம்மோற்சவம், சகஸ்ர தீபலங்கார சேவை ஆகியவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.
    ×