என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் குண்டம் திருவிழாவையொட்டி திருக்கல்யாண உற்சவ நிகழ்ச்சி நடைபெற்றது.
    ஆனைமலையில் பிரசித்தி பெற்ற தர்மராஜா திரவுபதியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் குண்டம் திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படும். இந்த ஆண்டுக்கான குண்டம் திருவிழா கடந்த 12-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இந்த நிலையில் நேற்று திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதையொட்டி மூலவருக்கு அபிஷேகம் மற்றும் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. இதை தொடர்ந்து காலை 11 மணிக்கு மூலவருக்கும், பகல் 12 மணிக்கு உற்சவருக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் மணக்கோலத்தில் தர்மராஜாவும், திரவுபதியம்மனும் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    28-ந் தேதி காலை குண்டம் கட்டுதல் நிகழ்ச்சியும், மாலை திருத்தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும், முக்கிய நிகழ்ச்சியான பக்தர்கள் குண்டம் இறங்கும் நிகழ்ச்சி 29-ந் தேதி காலையில் நடக்கிறது.
    ராமேசுவரம் கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் இந்த ஆண்டின் பங்குனி உத்திர திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    ராமேசுவரம் கோவிலின் மேற்கு வாசல் பகுதியில் உள்ள முருகன் கோவிலில் இந்த ஆண்டின் பங்குனி உத்திர திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. முருகப்பெருமானுக்கு காப்பு கட்டப்பட்டு பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

    அப்போது ராமேசுவரம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டிக்கொண்டனர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந் தேதி காலையில் இருந்தே ராமேசுவரம் நடராஜபுரம், புதுரோடு, ராமகிருஷ்ணாபுரம், சம்பை, மாங்காடு, கந்தமாதனபர்வதம் உள்ளிட்ட நகரின் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பறவைக் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல விதமான காவடிகள் எடுத்து வந்து பால்குடம் சுமந்து வந்து முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பங்குனி உத்திர திருவிழா தொடங்கி உள்ளதை தொடர்ந்து ராமேசுவரம் மேலவாசல் முருகன் கோவிலில் வருகிற 30-ந் தேதி வரையிலும் தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது.
    ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ராமநாதபுரம் பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி பவுர்ணமி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.
    ராமநாதபுரம் சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு பாத்தியப்பட்ட ராமநாதபுரம் பெரிய மாரியம்மன் கோவிலில் பங்குனி பவுர்ணமி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது.

    வருகிற 28-ந் தேதி வரை நடைபெறும் பங்குனி பவுர்ணமி திருவிழாவில் தினமும் இரவு அம்மன் முக்கிய வீதிகளில் வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை ராணி ராஜேஸ்வரி நாச்சியாரின் உத்தரவின்பேரில் திவான் பழனிவேல் பாண்டியன், செயல் அலுவலர் ராமு, ஆலய விசாரணைதாரர் கண்ணன், ஆலய பூஜகர்கள் ராஜா, மணிகண்டன், கார்த்திகேயன், நாகராஜன் ஆகியோர் செய்து வருகின்றனர்.

    அம்பாள் செய்யாறின் தென் கரையில் 7 இடங்களில் சிவ பூஜை செய்தால், அதில் அமைந்த ஆலயங்கள் சப்த கயிலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.
    அண்ணாமலையாரின் உடலில் இடதுபாகத்தைப் பெறுவதற்காக, காஞ்சியில் இருந்தபடி தவம் செய்தாள், காமாட்சி அம்மன். சிவனை பூஜிப்பதற்காக தன் மகன் முருகப்பெருமானிடம் நீர் ஊற்றை உண்டாக்கும்படி கூறினாள். முருகப்பெருமான் வீசிய ஞானவேல் 7 குன்றுகளைக் கொண்ட தென் கயிலாய பர்வதமலையை துளைத்துச் சென்று, செங்கம் மலையின் ஒரு பகுதியில் குத்தி நின்றது. அதில் இருந்து நீர் பெருகி ஆறாக ஓடியது. அதுவே ‘சேயாறு’. இது தற்போது ‘செய்யாறு’ என்று அழைக்கப்படுகிறது.

    முருகப்பெருமான் வீசிய வேல், 7 குன்றுகளைத் துளைத்ததில் அதில் தவம் செய்த 7 அந்தணர்கள் உயிரிழந்தனர். அவர்களுக்கு மோட்சம் கிடைத்தது என்றாலும், அவர்களைக் கொன்றதால் முருகனுக்கு ‘பிரம்மஹத்தி தோஷம்’ உண்டானது. அதனைப் போக்க செய்யாற்றின் வடகரையில் 7 சிவாலயங்களை அமைத்து வழிபட்டார்.

    காஞ்சி, கடலாடி, மாம்பாக்கம், மகாதேவமங்கலம், எலத்தூர், பூண்டி மற்றும் குருவிமலை ஆகிய இந்த 7 இடங்களிலும் சிவபெருமானுக்கு ஆலயங்கள் அமைந்தன. அதே போல் அம்பாளும் செய்யாறின் தென் கரையில் 7 இடங்களில் சிவ பூஜை செய்தால், அதில் அமைந்த ஆலயங்கள் சப்த கயிலாய தலங்கள் என்று அழைக்கப்படுகின்றன. மண்டகொளத்தூர், கரைப்பூண்டி, தென்பள்ளிப்பட்டு, பழங்கோயில், நார்த்தாம்பூண்டி, தாமரைப்பாக்கம், வாசுதேவம்பட்டு ஆகிய இடங்களில் அமைந்த அந்த 7 ஆலயங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்.

    மண்டகொளத்தூர்

    சென்னை- போளூர் நெடுஞ்சாலையில், போளூரில் இருந்து 11 கிலோமீட்டர் தொலைவில், மண்டகொளத்தூர் உள்ளது. முன்காலத்தில் இந்தப் பகுதி வில்வ மரங்கள் அடர்ந்த வனமாக இருந்திருக்கிறது. இங்கு தர்மநாதேஸ்வரர் திருக்கோவில் உள்ளது. இறைவன்- தர்மநாதேஸ்வரர், இறைவி- தர்மசம்வர்த்தினி. மூன்று நிலை ராஜகோபுரம் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கோவிலுக்குள் நான்கு கால் மண்டபம், அதன் அருகில் பிரதோஷ நந்தி வீற்றிருக்கிறார். பக்தர்களின் பாவங்களைப் போக்கி, நிம்மதியை அருளும் இறைவனாக, இத்தல மூலவர் அருள்புரிகிறார்.

    கரைப்பூண்டி

    போளூரில் இருந்து தேவிகாபுரம் செல்லும் சாலையில் 5 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. செய்யாற்றின் தென்கரையில் அமைந்ததால், ‘கரைப்பூண்டி’ என்ற பெயர் வந்தது. இங்கு கரைகண்டேஸ்வரர் திருக்கோவில் அமைந்துள்ளது. இறைவன்- கரைகண்டேஸ்வரர், இறைவி- பாலசுந்தரி. தல விருட்சம்- வில்வ மரம். இங்கு வடதிசை நோக்கி பாயும் செய்யாற்றில், ஐப்பசி மாதத்தில் நீராடும் ‘துலா ஸ்நானம்’ சிறப்பானதாக கருதப்படுகிறது.

    தென்பள்ளிப்பட்டு

    போளூரில் இருந்து திருவண்ணாமலை செல்லும் நெடுஞ்சாலையில் கலசப்பாக்கம் என்ற ஊரில் உள்ள செய்யாற்றின் பாலத்தைக் கடந்து 3 கிலோமீட்டர் சென்றால் இந்த ஊரை சென்றடையலாம். இங்கு கயிலாசநாதர் திருக்கோவில் உள்ளது. இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் மூலவர் பல யுகங்களைக் கடந்தவர் என்று சொலலப்படுகிறது. எனவே யுகத்தின் கணக்குகளுக்கு உட்படாத லிங்க மூர்த்தி என்று இத்தல இறைவனை சிறப்பிக்கிறார்கள். இறைவன்- கயிலாசநாதர், இறைவி- கனகாம்பிகை. இந்த திருத்தலத்திற்குச் செல்வதற்கு பார்வதிக்கு, மகாவிஷ்ணு வழிகாட்டினாராம். இதனால் இங்கு பள்ளிகொண்ட கோலத்தில் பெருமாளுக்கும் சன்னிதி அமைந்துள்ளது. இதன் காரணமாகவும் இந்த ஊருக்கு ‘தென்பள்ளிப்பட்டு’ என்ற பெயர் வந்தது என்கிறார்கள். ஈசனை வணங்கி வந்த, ஸ்ரீமத் சபாபதி ஞானதேசிகர் சுவாமிகளின் சமாதி இங்கு அமைந்துள்ளது.

    பழங்கோயில்

    திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள கலசப்பாக்கத்தில் இருந்து 8 கிலோமீட்டர் தொலைவில் பழங்கோயில் உள்ளது. பார்வதி தேவி பிரதிஷ்டை செய்த சப்த கயிலாயங்களில் இது ‘மத்திய கயிலாசம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இங்கு பாலக்ரிதீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. ராஜகோபுரம் கிழக்கு நோக்கி கம்பீரமாக தோற்றம் அளிக்கிறது. கருவறையில் நான்கு கால் மண்டபத்தின் முன்பாக பெரிய அளவிலான துவாரபாலகர்கள் வீற்றிருக்கின்றனர். இறைவன்- பாலக்ரிதீஸ்வரர், இறைவி- பாலாம்பிகை. இங்குள்ள மூலவர் ‘ஷோடச மூர்த்தி’ ஆவார். மூலவர் சன்னிதிக்கு பின்புறத்தில் ருக்மணி- சத்யபாமா உடனாய வேணுகோபால சுவாமி சன்னிதி உள்ளது.

    நார்த்தாம்பூண்டி

    திருவண்ணாமலையில் இருந்து போளூர் செல்லும் சாலையில் உள்ளது, நாயுடுமங்கலம். இங்கிருந்து 2 கிலோமீட்டர் சென்றால் நார்த்தாம்பூண்டி உள்ளது. தென்பள்ளிப்பட்டு தலத்தில் இருந்து 5 கிலோமீட்டர் தூரம்தான். இங்கு கயலாசநாதர் திருக்கோவில் உள்ளது. முருகப்பெருமானை நினைத்து தொடர்ச்சியாக 12 ஆண்டுகள், கிருத்திகை விரதம் இருந்தாராம் நாரத முனிவர். அவருக்கு முருகப்பெருமான் காட்சியளித்தார். இதனால் இந்த திருத்தலம் ‘நார்த்தாம்பூண்டி’ என்று பெயர் பெற்றதாக சொல்கிறார்கள். மிகவும் தொன்மை வாய்ந்த திருக்கோவிலாக இந்த கயிலாசநாதர் கோவில் திகழ்கிறது. இந்த ஆலயம் பல்லவர்கள், வல்லாள மன்னர்களால் கட்டப்பட்டு, சோழர்கள், விஜயநகர பேசரரசு, சம்புவராயர்கள் ஆகியோரால் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. இங்குள்ள இறைவன்- கயிலாசநாதர், இறைவி- பெரியநாயகி. கோவிலில் உள்ள இலந்தை மரத்தின் அடியில் நாரத முனிவர், ஈசனையும், வள்ளி-தெய்வானை உடனாய முருகரையும் வணங்கும் சிற்பதைக் காணலாம்.

    தாமரைப்பாக்கம்

    திருவண்ணாமலை மாவட்டம் போளூருக்கு தென்மேற்கே 22 கிலோமீட்டர் தொலைவில் இந்த ஊர் உள்ளது. இங்கு அக்னீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. 10-ம் நூற்றாண்டில் சோழர்களால் இந்த ஆலயம் கட்டப்பட்டதாக கல்வெட்டுச் சான்றுகள் எடுத்துரைக்கின்றன. இறைவன்- அக்னீஸ்வரர், இறைவி- திரிபுரசுந்தரி. திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலைப் போல, இங்கும் மூலவரின் திருச்சுற்று சுவரில் லிங்கோத்பவர் வீற்றிருக்கிறார். ஸ்ரீதேவி- பூதேவி உடனாய பெருமாள் சன்னிதியும் காணப்படுகிறது. இத்தல இறைவனை, தாமரை மலர் கொண்டு வழிபாடு செய்து வந்தால், ஈசனை அடையும் வழி பிறக்கும்.

    வாசுதேவம்பட்டு

    திருவண்ணாமலையில் இருந்து 27 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, வாசுதேவம்பட்டு. இந்த திருத்தலம் செய்யாற்றின் கரையிலேயே இருக்கிறது. இங்கு சவுந்திரநாயகி உடனாய பக்தவச்சலேஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கிறது. முன் காலத்தில் ‘ஆட்கொண்டேஸ்வரர்’ என்று இந்த இறைவன் போற்றப்பட்டு உள்ளார். சப்த கயிலாய தலங்களில் 7-வதாக அமைந்த இந்தக் கோவிலை சோழர்கள் கட்டமைத்துள்ளனர். இத்தல ஈசனை, சித்திர, விசித்திரகுப்தர்கள் வழிபட்டு சாப விமோசனம் பெற்றிருக்கிறார்கள். இவர்களுக்கு, ஆலயத்தின் ஈசான்ய மூலையில் தனிச் சன்னிதி எழுப்பப்பட்டுள்ளது. இந்த ஆலயத்திற்கு ராஜகோபுரம் இல்லை. கோவிலுக்குள் நுழையும் போது உள்ள 12 கால் மண்டபத்தில் சப்த கன்னியர்கள், சிலை ரூபமாக வீற்றிருக்கின்றனர்.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27-ந்தேதி கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் செங்கோல் வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா விமரிசையாக நடைபெறும். இந்த ஆண்டு பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. சுவாமி சன்னதியில் காலை 9.30 மணி அளவில் சிறப்பு பூஜையுடன் கொடியேற்றப்பட்டது.

    இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவில் 4-வது நாளான வருகிற 21-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6 மணிக்கு சுவாமி, அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் வீதிஉலா செல்கின்றனர்.

    பங்குனி உத்திர நாளான 27-ந்தேதி (சனிக்கிழமை) கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் இரவு 7 மணிக்கு செங்கோல் வழங்கும் வரலாற்று சிறப்பு மிக்க நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    நாமக்கல், பரமத்திவேலூரில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. அதைத்தொடர்ந்து சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நாமக்கல்லில் இருந்து மோகனூசர் செல்லும் சாலையில் உள்ள காந்தி நகரில் பாலதண்டாயுதபாணி சாமி கோவில் உள்ளது. இங்கு பங்குனி மாத கிருத்திகையையொட்டி நேற்று சாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. முன்னதாக சாமிக்கு பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர், சந்தனம், மஞ்சள் உள்பட பல்வேறு பொருட்களை கொண்டு அபிஷேகங்கள் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சாமி தங்ககவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இதேபோல் நாமக்கல் கடைவீதி சக்தி விநாயகர் கோவிலில் உள்ள பாலதண்டாயுதபாணி சாமிக்கு கிருத்திகையையொட்டி பால், இளநீர், சந்தனம் உள்பட 13 வகையான பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து சிறப்பு பூஜைகளும், மகா தீபாராதனையும் நடந்தது. பின்னர் சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    கிருத்திகையையொட்டி கபிலர்மலை பாலசுப்பிரமணிய சாமி, பொத்தனூர் பச்சைமலை முருகன் கோவில், பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் எழுந்தருளியுள்ள சுப்ரமணியர், அனிச்சம்பாளையத்தில் எழுந்தருளியுள்ள வேல் வடிவம் கொண்ட சுப்ரமணியர், நன்செய் இடையார் திருவேலீஸ்வரர் கோவிலில் எழுந்தருளியுள்ள முருகன், பிலிக்கல்பாளையம் விஜயகிரி வடபழனியாண்டவர், அருணகிரிமலையில் எழுந்தருளியுள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர் உள்ளிட்ட முருகன் கோவில்களில் சிறப்பு அபிஷேகம், சிறப்ப பூஜை நடைபெற்றது. இதில் அந்தந்த சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த திராளன பக்தர்களும், பொதுமக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    கோடை வெயில் தொடங்கும் இந்த பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும்.
    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா வருகிற 22-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளான திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவை 27, 28-ந்தேதிகளில் நடைபெறுகிறது.

    கோடை வெயில் தொடங்கும் இந்த பங்குனி மாதத்தில் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு பக்தர்கள் கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்த காவடி எடுத்து வந்து முருகனுக்கு அபிஷேகம் செய்வது சிறப்பு அம்சமாகும். இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் தீர்த்தக்காவடி எடுத்து பழனிக்கு பாதயாத்திரையாக வர தொடங்கி உள்ளனர். குறிப்பாக காலை, மாலை வேளைகளில் அடிவாரம், கிரிவீதியில் பக்தர்கள் காவடி எடுத்து கிரிவலம் செல்கின்றனர். மேலும் மலைக்கோவில், திருஆவினன்குடி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்கின்றனர். திருவிழாவை முன்னிட்டு பக்தர்களுக்கு தேவையான ஏற்பாடுகள் கோவில் நிர்வாகம் சார்பில் செய்யப்பட்டு வருகிறது.

    இதனிடையே பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு அடிவாரம் சன்னதி வீதி, கிரிவீதிகளில் ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும், வெயில் அதிகமாக உள்ளதால் குடிநீர் வசதி செய்ய வேண்டும், பக்தர்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் கயிற்றால் ஆன விரிப்புகளை விரிக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
    பழனி முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை உற்சவ விழாவில் விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.
    பழனி முருகன் கோவிலில் ஒவ்வொரு மாதமும் கார்த்திகை உற்சவ விழா நடைபெற்று வருகிறது. அதன்படி பங்குனி மாத கார்த்திகை உற்சவ விழா நேற்று நடந்தது. இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தரிசனம் நடந்தது. பின்னர் 4.30 மணிக்கு நடந்த விளாபூஜையில் முருகப்பெருமானுக்கு சன்னியாசி அலங்காரமும், 8 மணிக்கு சிறுகாலசந்தி பூஜையில் வேடர் அலங்காரமும் செய்யப்பட்டது. 9 மணிக்கு காலசந்தி பூஜையில் பாலசுப்பிரமணியர் அலங்காரத்திலும், பகல் 12 மணிக்கு உச்சிகால பூஜையில் வைதீகர் அலங்காரத்திலும் முருகப்பெருமான் அருள்பாலித்தார். பின்னர் மாலை 5.30 மணிக்கு சாயரட்சை பூஜையில் ராஜ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    கோவிலுக்கு அதிகாலை முதலே பக்தர்கள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இதனால் அனைத்து தரிசன வழிகளிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. மாலை 6.40 மணிக்கு தங்கமயில் வாகனத்தில் சின்னக்குமாரர் எழுந்தருளி உட்பிரகாரத்தில் வலம் வந்தார்.

    இதைத்தொடர்ந்து இரவு 7 மணிக்கு சின்னக்குமாரர் தங்கரதத்தில் எழுந்தருளினார். அதையடுத்து தங்கரத புறப்பாடு நடந்தது. இதில் 112 பக்தர்கள் தலா ரூ.2 ஆயிரம் செலுத்தி தங்கரதம் இழுத்து வழிபட்டனர். பின்னர் 9 மணிக்கு ராக்கால பூஜையில் முருகப்பெருமானுக்கு மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் உதவி ஆணையர் செந்தில்குமார் மற்றும் அலுவலர்கள் செய்திருந்தனர்.

    இதேபோல் நத்தம் அருகே திருமலைக்கேணியில் உள்ள சுப்பிரமணியசாமி கோவிலில் பங்குனி மாத கார்த்திகை பூஜை நடந்தது. இதில் நத்தம் மற்றும் சுற்று வட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.

    மேலும் அருகில் உள்ள காமாட்சி மவுனகுருசாமி மடத்திலும் பக்தர்கள் விளக்கேற்றி வழிபாடு செய்தனர்.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவின் ஆறாவது நாளில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 6-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை அனுமன் வாகனச்சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து மாலை 4 மணியில் இருந்து மாலை 5 மணி வரை வசந்த உற்சவம் மற்றும் ஆஸ்தானம், மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணிவரை ஊஞ்சல் சேவை, இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை யானை வாகன சேவை ஆகியவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமசாமி எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் பெரியஜீயர்சுவாமிகள், சின்னஜியர்சுவாமிகள் மற்றும் கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    பங்குனி மாதம் தெய்வங்களுக்கு விரதங்கள் இருப்பதும் வழிபாடுகள் செய்வதற்கும் ஒரு சிறந்த மதமாக இருக்கிறது. ஐப்பசி, கார்த்திகை மாதங்கள் போன்று இந்த பங்குனி மாதம் தமிழ் கடவுளாகிய முருகப்பெருமானுக்கு உகந்த மாதமாக இருக்கிறது.
    பங்குனி மாத சஷ்டி தினத்தன்று அதிகாலையிலேயே எழுந்து குளித்து முடித்து விட்டு உங்கள் வீட்டு பூஜையறையில் வள்ளி, தெய்வானையுடன் இருக்கும் முருகன் படத்திற்கு வாசம் மிக்க மலர்களை சாற்றி, தீபங்கள் ஏற்றி, கேசரி நைவேத்தியம் செய்து முருகனுக்குரிய கந்த சஷ்டி கவசம், சண்முக கவசம் போன்ற மந்திர பாடல்களை துதித்து முருகப் பெருமானை தியானித்து, அவரை வணங்க வேண்டும்.

    இன்றைய தினம் மூன்று வேளையும் உணவு ஏதும் உண்ணாமல் பால், பழங்கள் மட்டும் சாப்பிட்டு விரதம் அனுஷ்டிப்பது சிறப்பாகும். உண்ணாவிரதத்துடன், மௌனவிரதம் சேர்த்து அனுஷ்டிப்பதால் பல நன்மைகள் ஏற்படும். மாலையில் அருகில் உள்ள கோயிலுக்கு சென்று முருகப் பெருமானை வணங்க வேண்டும். நவகிரக சந்நிதியில் இருக்கும் குரு பகவானை மஞ்சள் நிற பூக்கள் சமர்ப்பித்து, தீபங்கள் ஏற்றி வணங்க வேண்டும். பின்பு வீடு திரும்பியதும் பூஜை அறைக்கு சென்று, முருகப்பெருமானை வணங்கி உங்களின் சஷ்டி விரதத்தை முடித்து அவருக்கு வைக்கப்பட்ட நைவேத்திய பிரசாதங்களை சாப்பிட்டு விரதத்தை முடிக்கலாம்.

    இன்று இந்தப் பங்குனி வளர்பிறை சஷ்டி விரதம் மேற்கொள்பவர்களுக்கு நெடுநாட்களாக நீடித்து வந்த எத்தகைய பிரச்சனைகளும் தீரும். குழந்தை பாக்கியம் இல்லாத தம்பதிகளுக்கு கூடியவரையில் அழகான, ஆரோக்கியமான குழந்தை பேறு உண்டாகும். நீண்ட நாட்களாக திருமணம் ஆகாமல் இவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும். உங்களுக்கு இருந்து வந்த பொருளாதார கஷ்டங்கள் விரைவில் தீரும்.
    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்தாண்டுக்கான பெருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13-ந்தேதி மயானக்கொள்ளை விழாவும், 16-ந்தேதி தீ மிதி திருவிழாவும் நடைபெற்று வந்தது. மேலும் தினசரி இரவில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும் உற்சவ அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

    இதையடுத்து மதியம் 3 மணியளவில், மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு பக்தர்கள் இழுத்து வந்தனர். பின்னர் உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, 3.45 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது.

    அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, அங்காளம்மா என்கிற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது சில்லரை நாணயங்கள், வயலில் விளைந்த காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை பக்தர்கள் தேரின் மீது இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சில பக்தர்கள், திருநங்கைகள் அம்மன் வேடம் அணிந்தும், சித்தாங்கு வேடம் அணிந்தும், தீச்சட்டி ஏந்தியும், நாக்கில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தேர் கோவில் வெளிப்பிரகாரத்தை வலம் வந்து மாலை 6.30 மணியளவில் நிலையை அடைந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.
    பங்குனி மாத பூஜையை தொடர்ந்து சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழா நாட்களில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுகிறார்கள்.
    திருவனந்தபுரம் :

    பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14-ந் தேதி மாலை 5 மணிக்கு திறக்கப்பட்டது. தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்தார். தொடர்ந்து மற்ற நாட்களில் சிறப்பு பூஜைகள், படி பூஜை போன்றவை நடந்தன.

    மாத பூஜையின் தொடர்ச்சியாக ஆறாட்டு திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி நேற்று சன்னிதானத்தில் தந்திரி தலைமையில் சுத்திகிரியை பூஜை நடந்தது.

    திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக இன்று காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடி ஏற்றி வைக்கிறார். தொடர்ந்து 28-ந் தேதி வரை 10 நாட்கள் திருவிழா நடைபெறும்.

    விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன் ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும். 27-ந் தேதி இரவு சரம் குத்தியில் பள்ளி வேட்டையும், 28- ந் தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு விழாவும் நடக்கிறது. தொடர்ந்து அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி கோவில் நடை அடைக்கப்படும்.

    விழா நாட்களில் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். மேலும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நடத்தி கொரோனா இல்லை என்ற சான்றிதழுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள் என்று திருவிதங்கூர் தேவஸ்தானம் சார்பில் அறிவிக்கப்பட்டு உள்ளது.
    ×