search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடியபடி வந்ததை படத்தில் காணலாம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன்)
    X
    பக்தர்கள் வெள்ளத்தில் தேர் அசைந்தாடியபடி வந்ததை படத்தில் காணலாம்.(உள்படம்: சிறப்பு அலங்காரத்தில் அங்காளம்மன்)

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம்

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.
    விழுப்புரம் மாவட்டம் மேல்மலையனூரில் பிரசித்திபெற்ற அங்காளம்மன் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் மாசி பெருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.

    அதன்படி இந்தாண்டுக்கான பெருவிழா கடந்த 12-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து 13-ந்தேதி மயானக்கொள்ளை விழாவும், 16-ந்தேதி தீ மிதி திருவிழாவும் நடைபெற்று வந்தது. மேலும் தினசரி இரவில் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சாமி வீதி உலாவும் நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி அதிகாலை கோவில் நடைதிறக்கப்பட்டது. தொடர்ந்து கோவில் கருவறையில் உள்ள அம்மனுக்கும், சிவபெருமானுக்கும் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, தங்க கவச அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மேலும் உற்சவ அம்மனுக்கும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு உட்பிரகாரத்தில் வைக்கப்பட்டிருந்தார்.

    இதையடுத்து மதியம் 3 மணியளவில், மேற்கு வாசலில் இருந்த தேரை வடக்கு வாசலுக்கு பக்தர்கள் இழுத்து வந்தனர். பின்னர் உற்சவ அம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். தொடர்ந்து தீபாராதனை காண்பிக்கப்பட்டு, 3.45 மணியளவில் தேரோட்டம் நடைபெற்றது.

    அப்போது அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா, அங்காளம்மா என்கிற பக்தி கோஷங்களை எழுப்பியவாறு, தேரை வடம் பிடித்து இழுத்தனர். அப்போது சில்லரை நாணயங்கள், வயலில் விளைந்த காய்கறிகள், தானியங்கள் ஆகியவற்றை பக்தர்கள் தேரின் மீது இறைத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் சில பக்தர்கள், திருநங்கைகள் அம்மன் வேடம் அணிந்தும், சித்தாங்கு வேடம் அணிந்தும், தீச்சட்டி ஏந்தியும், நாக்கில் அலகு குத்தியும் நேர்த்திக்கடன் செலுத்தினர்.

    தேர் கோவில் வெளிப்பிரகாரத்தை வலம் வந்து மாலை 6.30 மணியளவில் நிலையை அடைந்தது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் இன்று (வெள்ளிக்கிழமை) குதிரை வாகனத்தில் அம்மன் வீதி உலா நடைபெற உள்ளது.
    Next Story
    ×