என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் தெப்பத்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 27-ந்தேதி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவிலில் இறைவன் சுயம்பு மூர்த்தியாக மேற்கு பார்த்த நிலையில் மிகப் பெரிய சிவலிங்க வடிவில் எழுந்தருளியுள்ளார். இந்த கோவிலில் ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் தாயுமானசுவாமி மீது மாலை நேரத்தில் சூரிய ஒளி பட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்குக் காட்சி அளிப்பதை பார்க்கலாம். இது சூரிய பூஜை ஆகும்.

    தாயுமான சுவாமிக்கு மலைக்கோட்டை மேற்கில் பிரம்ம தீர்த்தம் என்ற சோம ரோகிணி (தெப்பக்குளம்) கி.பி. 1-ம் நூற்றாண்டில் கரிகால் சோழனால் வெட்டப்பட்டது. இந்த தெப்பக்குளத்தில் மட்டுவார் குழலம்மை சமேத தாயுமான சுவாமிக்கு தெப்பத்திருவிழா ஒவ்வொரு வருடமும் பங்குனி மாதம் நடைபெறும். இந்த தெப்பத் திருவிழா நேற்று மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    தொடர்ந்து இரவு 7 மணிக்கு சுவாமி கேடயம் வாகனத்தில் வீதியுலா நிகழ்ச்சி நடைபெற்றது. இதேபோல் ஒவ்வொரு நாளும் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடும் நடைபெறும். இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 27-ந்தேதி மாலை 7 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி, கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.
    வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாவான வேடபரி திருவிழாவில் லட்சக்கணக்கானோர் கலந்து கொண்டு வழிபட்டனர்.
    திருச்சி மாவட்டம், வீரப்பூர் கன்னிமாரம்மன் கோவில் மாசிப் பெருந்திருவிழாவின் முக்கிய திருவிழாவான வேடபரி திருவிழா நேற்று மாலை நடைபெற்றது. பெரியகாண்டியம்மன் கோவிலில் இருந்து அலங்கரிப்பட்ட குதிரை வாகனத்தில் பொன்னர் அமர்ந்து வர குதிரை பூசாரி மாரியப்பன் குடைபிடித்தபடி குதிரை வாகனத்தில் நின்று வர, வாகனத்தை பட்டியூர் கிராமங்களின் ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் கூட்டம் குதிரை வாகனத்தை சுமந்து வந்தனர்.

    அலங்கரிக்கப்பட்ட யானை வாகனத்தில் பெரியகாண்டியம்மன் அமர்ந்து வர பெரிய பூசாரி முத்து யானை வாகனத்தில் நின்று வர யானை வாகனத்தை பட்டியூர் கொடிக்கால்காரர்கள் வகை ஊர் முக்கியஸ்தர்கள் தலைமையில் இளைஞர்கள் கூட்டம் யானை வாகனத்தை சுமந்து சென்றனர்.

    வாகனங்களுக்கு முன்பு முரசு கொட்டும் காளை செல்ல அதைத் தொடர்ந்து கன்னிமாரம்மன் கோவில்களின் பரம்பரை அறங்காவலர்களும், வீரப்பூர் ஜமீன்தார்களுமான ஆர்.பொன்னழகேசன், சவுந்தரபாண்டியன், சுதாகர் என்ற சிவசுப்ரமணிய ரெங்கராஜா ஆகியோர் கோவில் வழக்கப்படி செல்ல அவர்களை தொடர்ந்து குதிரை, யானை வாகனங்கள் சென்றது. வாகனங்களை தொடர்ந்து சின்னபூசாரி கிட்டு என்ற கிருஷ்ணசாமி, வேட்டை பூசாரி வீரமலை தங்காள் கரகத்துடன் சென்றனர்.

    மாலை 6.30 மணிக்கு வேடபரி புறப்பட்டு அணியாப்பூர் குதிரை கோவில் சென்று இளைப்பாத்தி மண்டபம் திரும்பியது. அதிகாலை 4 மணிக்கு இளைப்பாற்றி மண்டபத்தில் இருந்து வாகனங்களில் தெய்வங்கள் வீரப்பூர் பெரியகாண்டியம்மன் கோவிலை வந்தடைந்தது. வேடபரி சென்ற வழி நெடுக சுமார் 5 கிலோ மீட்டர் சுற்றளவில் லட்சக்கணக்கான குடிபாட்டுக்காரர்களும், பக்தர்களும் நின்று பூமாலைகளை வீசி பயபக்தியுடன் வழிபட்டனர்.

    இன்று(சனிக்கிழமை) காலை பெரியகாண்டியம்மன் கோவில் முன்பிருந்து பெரியகாண்டியம்மன் பெரிய தேர்பவனி நடைபெறுகின்றது.
    ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர்.
    ராமநாதபுரம் வழிவிடு முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டு பால் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேக தீபாராதனைகள் நடைபெற்றன. முருகப்பெருமானுக்கும் பால், பன்னீர், இளநீர் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்று வெள்ளி கவசம் சாத்தப்பட்டு சிறப்பு மகா தீபாராதனை பூஜைகள் நடைபெற்றன.

    அப்போது ஏராளமான பக்தர்கள் கையில் காப்பு கட்டி விரதத்தை தொடங்கினர். பங்குனி உத்திர திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வருகிற 28-ந் தேதி காலையில் அனைத்து பகுதிகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் மயில் காவடி, பறவைக் காவடி, வேல் காவடி உள்ளிட்ட பல விதமான காவடிகள் எடுத்து வந்தும் பால்குடம் சுமந்து வந்தும் முருகப் பெருமானுக்கு நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.

    பங்குனி உத்திர திருவிழாவை தொடர்ந்து முருகன் கோவிலில் வருகிற 30-ந் தேதி வரையிலும் தினமும் சிறப்பு பூஜைகள், ஆன்மிக சொற் பொழிவு நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
    திருப்புவனம் புஷ்பவனேஸ்வரர் கோவில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    திருப்புவனத்தில் பிரசித்தி பெற்ற புஷ்பவனேஸ்வரர்- சவுந்திரநாயகி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் நிர்வாகத்தின் கீழ் உள்ளது. மேலும் அப்பர், சுந்தரர், அருணகிரிநாதர், திருஞானசம்பந்தர் போன்றவர்களால் பாடப்பெற்ற சிறப்பு வாய்ந்த தலமாகும்.சிவபெருமானின் 64 திருவிளையாடல்களில் 36-வது திருவிளையாடல் நடைபெற்றது இக்கோவிலின் சிறப்பு.

    இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் பங்குனி திருவிழா 11 நாட்கள் நடைபெறும். இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிறகு கொடிமரத்திற்கு பல்வேறு பூஜைகள் செய்து சிறப்பு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவை முன்னிட்டு தினமும் பல்வேறு வாகனங்களில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி -அம்பாள் காலை, மாலையில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். வருகிற 26-ந்தேதி சுவாமி-அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது. அன்று அலங்கரிப்பட்ட சுவாமி, அம்பாள் தனித்தனி தேர்களில் எழுந்தருளி நகரின் முக்கிய வீதிகளில் உலா வருகிறார்கள்.
    சிவராத்திரியில் ஐந்து வகை இருக்கின்றன. அவை. நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரிகளைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.
    சிவபெருமானை வழிபடும் முக்கியமான விரதங்களில் ஒன்று சிவராத்திரி. மாதந் தோறும் சிவராத்திரி வரும் என்றாலும், மாசி மாத தேய்பிறை சதுர்த்தசியில் வரும் சிவராத்திரியே, ‘மகா சிவராத்திரி’ என்று அழைக்கப்படுகிறது. மாதந்தோறும் வளர்பிறை மற்றும் தேய்பிறை சதுர்த்தசியில் சிவராத்திரி வரும். சதுர்த்தசி திதியானது, சிவபெருமானுக்கு உரியது. சிவராத்திரியில் ஐந்து வகை இருக்கின்றன. அவை. நித்ய சிவராத்திரி, யோக சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, மாத சிவராத்திரி, மகா சிவராத்திரி ஆகும். இந்த சிவராத்திரிகளைப் பற்றி சிறிய குறிப்புகளாக இங்கே பார்ப்போம்.

    நித்திய சிவராத்திரி:- ஒரு வடத்தில் வரும் 24 சிவராத்திரிகளும், அதாவது தேய்பிறை சதுர்த்தியில் 12 சிவராத்திரி, வளர்பிறை சதுர்த்தசியில் 12 சிவராத்திரி ஆகியவை ‘நித்திய சிவராத்திரி’ என்று அழைக்கப்படுகின்றன.

    யோக சிவராத்திரி:- திங்கட்கிழமையில் வரும் சிவராத்திரியை ‘யோக சிவராத்திரி’ என்று அழைப்பார்கள். இதிலும் நான்கு வகை உள்ளன. 1) திங்கட்கிழமை முழுமையில் அதாவது பகல் இரவு முழுமைக்கும் அமாவாசையாக இருக்கும். 2) திங்கட்கிழமை சூரிய அஸ்தமனம் முதல், 4 ஜாமமும் (மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை) தேய்பிறை சதுர்த்தசி திதி இருக்கும். 3) திங்கட்கிழமை இரவின் நான்காம் ஜாமத்தில் (நள்ளிரவு 3 மணி முதல் காலை 6 மணி வரை) அரை நாழிகையாவது அமாவாசை இருப்பது. 4) திங்கட்கிழமை அன்று இரவு நான்காம் ஜாமத்தில் தேய்பிறை சதுர்த்தசி அரை நாழிகையாவது இருப்பது என இவை அனைத்தும் ‘யோக சிவராத்திரி’யில்தான் வரும்.

    பட்ச சிவராத்திரி:- தை மாதத்தில் வரும் தேய்பிறை பிரதமை திதியில் தொடங்கி, 14-வது நாளான சதுர்த்தசி வரை கடைப்பிடிப்பது ‘பட்ச சிவராத்திரி’ ஆகும். பிரதமை முதல் 13 நாட்கள் வரை ஒரு வேளை மட்டும் உணவருந்தியும், 14-வது நாளான சதுர்த்தசியில் முழு வேளையும் உணவருந்தாமலும் உபவாசம் இருப்பது ‘பட்ச சிவராத்திரி’ எனப்படும்.

    மாத சிவராத்திரி:- மாதம் தோறும் அமாவாசை தினத்திற்கு முன்தினம் வரும், சதுர்த்தசி திதியில் வருவது மாத சிவராத்திரி ஆகும்.

    மகா சிவராத்திரி:- மாசி மாத தேய்பிறை சதுர்த்தசி அன்று வருவது ‘மகா சிவராத்திரி’ எனப்படும். அன்றைய தினம் விரதம் இருப்பவர்கள் முக்தியை அடைவார்கள் என்பது இதற்கான பலனாகும்.

    இந்த ஐந்து வகை சிவராத்திரியில் ஏதாவது ஒன்றை கடைப்பிடித்தாலே, பக்தர்களுக்கு அற்புதமான பலன் கிடைக்கும். ஐந்தையும் தவறாது கடைப்பிடித்து வருபவர்கள், சிவயோக பதவியை அடைவார்கள்.
    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் உற்சவர் வித்யாராஜகோபாலன் ருக்மணி, சத்யபாமாவுடன் மாடுமேய்க்கும் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவில் செங்கமலத்தாயார் கோபுரம், மண்டபம், பிரகாரம் முதலியவற்றை மன்னன் ராஜசேகரன் கட்டிக் கொடுத்தார். ராஜசேகர மன்னனின் மகன் சுவர்ணலதாமணியும் இத்தலத்திற்கு வந்து வழிபட்டு குழந்தை பேறு பெற்றதாக வரலாற்றில் கூறப்பட்டுள்ளது. அதன்படி இன்றும் குழந்தை பேறு வேண்டி வருபவர்களுக்கு குழந்தை வடிவில் உள்ள சந்தான கிருஷ்ணனை மடியில் எழுந்தருளச் செய்கின்றனர்.

    மூலவர் சன்னதியில் திருப்பதி வெங்கடாசலபதி பெருமாளை போல மூலவர் பரவாசுதேவ பெருமாள் காட்சி தருகிறார். உற்சவர் வித்யாராஜகோபாலன் ருக்மணி,சத்யபாமாவுடன் மாடுமேய்க்கும் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
    தென்கயிலாயம் என்று போற்றப்படும் திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தெப்பத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    திருச்சி மலைக்கோட்டை தாயுமான சுவாமி கோவில் தென்கயிலாயம் என்று போற்றப்படுகிறது. இங்கு ஆண்டுதோறும் பங்குனி மாதம் 23, 24, 25 ஆகிய நாட்களில் தாயுமானவர் திருமேனி மீது மாலை நேரத்தில் சூரிய ஒளிபட்டு பொன் வண்ணமாக பக்தர்களுக்கு காட்சி அளிப்பதை பார்க்கலாம். இது சூரிய பூஜை ஆகும்.

    அதுபோல் குழலம்மை சமேத தாயுமானசுவாமிக்கு தெப்பத்திருவிழா ஆண்டுதோறும் பங்குனி மாதம் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு தெப்பத்திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மதியம் 12 மணிக்கு மேல் 1.30 மணிக்குள் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இன்று இரவு 7 மணிக்கு சுவாமி கேடயத்தில் எழுந்தருளி வீதிஉலா வருகிறார். இதேபோல் ஒவ்வொரு நாளும் இரவு உபயதாரர்கள் சார்பில் அபிஷேகம் மற்றும் புறப்பாடு நடைபெறும்.

    இதில் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் வருகிற 27-ந்தேதி(சனிக்கிழமை) மாலை 7 மணிக்கு மலைக்கோட்டைக்கு மேற்கில் உள்ள பிரம்ம தீர்த்தம் என்ற சோமரோகிணியில் (தெப்பக்குளம்) நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலைத்துறை திருச்சி மண்டல இணை ஆணையர் சுதர்சன், கோவில் உதவி ஆணையர் விஜயராணி, கோவில் ஊழியர்கள், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

    பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றதையும், தெய்வானையுடன் முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் காட்சி தந்ததையும் படத்தில் காணலாம்.
    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் வெகு விமரிசையாக பங்குனி பெருவிழா நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பங்குனி பெருவிழா ரத்து செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 11 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.

    இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு இளநீர், புனிதநீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் முருகப்பெருமான் அருள் பார்வையில் மேள தாளங்கள் முழங்க 11.25 மணிக்கு தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்திற்கும், கொடிக் கம்ப வளாகத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது. உடனே அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி வருகிற ஏப்ரல் 2-ந்தேதி வரை தினமும் காலை, இரவில் வித, விதமான வாகனங்களில் தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 24-ந்தேதி கைப்பாரமும், 28-ந்தேதி பங்குனி உத்திரமும், 29-ந்தேதி சூரசம்ஹார லீலையும், 30-ந்தேதி பட்டாபிஷேகமும் நடக்கிறது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 31-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளுகின்றனர். இதேசமயம் முருகப்பெருமானின் ஆறாவது படை வீட்டிலிருந்து சீர்வரிசை வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற ஏப்ரல் 1-ந் தேதி கோவில் வாசலில் கிரிவலப்பாதையில் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்யக்கூடிய மகா தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 2-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொதுத் தேர்தலையொட்டி சொற்பொழிவு, பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    திருமால் எடுத்த தசாவதாரங்களில் ஐந்தாவது அவதாரமான வாமன அவதாரத்திற்கு உகந்த தியான ஸ்லோகங்களையும் மூலமந்திரங்களையும் அறிந்து கொள்ளலாம்.
    தியான ஸ்லோகம்

    முக்தாகெளரம் நவமணிலஸத் பூஷணம் சந்த்ரஸம்ஸ்தம்
    ப்ருங்காகாரை ரலகநிகரை சோபிவக்த்ராரவிந்தம்
    ஹஸ்தாப்ஜாப்யாம் கநககலஸம் ஸுத்த்தோயாபி பூர்ணம்
    தத்தயந்நாட்யம் கநகசஷகம் தாரயந்த்ம் ப்ஜாமஹ.

    மூல மந்திரம்

    ஓம் க்லீம் ஹம் வம் நமோ விஷ்ணவே ஸுரபதயே மஹாபலாய ஸ்வாஹா.

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் தேஜஸ் கிட்டும். சகல செயல்களிலும் வெற்றி கிட்டும்.

    அழகர்மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை பூஜைகள் நடந்தன.
    அழகர்மலை உச்சியில் உள்ள பிரசித்தி பெற்ற முருகப் பெருமானின் 6-ம் படைவீடான சோலைமலை முருகன் கோவிலில் பங்குனி மாத கார்த்திகை பூஜைகள் நடந்தன.

    இதில் உற்சவர் வள்ளி தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பழம், பன்னீர், பஞ்சாமிர்தம், விபூதி, சந்தனம், தேன் உள்ளிட்ட 16 வகையான அபிஷேகங்கள், அலங்காரம், சர விளக்கு தீபாராதனைகள், பூஜைகள் நடந்தன. மேள தாளங்கள் முழங்க தீவட்டி பரிவாரங்களுடன் சுவாமி புறப்பாடு நடந்தது.
    மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் இந்து சமய மாநாடு வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    மண்டைக்காடு அருகே நடுவூர்கரை சிவசக்தி கோவிலில் பங்குனி திருவிழா மற்றும் இந்து சமய மாநாடு வருகிற 21-ந் தேதி தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. விழாவின் முதல் நாள் அதிகாலை 4 மணிக்கு நடை திறப்பு, நிர்மால்யம், அபிஷேகம், கணபதிஹோமம், 5 மணிக்கு அம்மச்சியார் பொட்டல் பத்ரகாளியம்மன் கோவிலில் இருந்து யானை மீது கொடி பவனி புறப்படுதல், காலை 6.30 மணிக்கு தீபாராதனை, 7 மணிக்கு உஷ பூஜை, 8.30 மணிக்கு திருவிழா கொடியேற்றம், 9.15 மணிக்கு மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் இருந்து யானை மீது சந்தனகுடம் பவனி, 11 மணிக்கு களபாபிஷேகம், கலசபூஜை, பகல் 12 மணிக்கு சிறப்பு பூஜை, 12.15 மணிக்கு அன்னதானம், மாலை 5 மணிக்கு திருவிளக்கு பூஜை, இரவு 10 மணிக்கு சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை 6.30 மணிக்கு திருப்பள்ளி உணர்த்தல், 9 மணிக்கு பஜனை, 11 மணிக்கு சிறப்பு பூஜை, மாலை 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு சிறப்பு பூஜை ஆகியவை நடக்கிறது.

    விழாவில் 24-ந்தேதி சமய மாநாடு, 28-ந்தேதி காலை 9 மணிக்கு சமய வகுப்பு மாணவ-மாணவிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், 29-ந்தேதி காலை 8.30 மணிக்கு புஷ்பாபிஷேகம், மதியம் 2 மணிக்கு யானை மீது சந்தனகுடம் பவனி வருதல், இரவு 10.30 மணிக்கு அலங்கார சிறப்பு பூஜை நடக்கிறது.

    30-ந்தேதி காலை 8 மணிக்கு கடலில் புனிதநீர் எடுத்து வருதல், இரவு 7 மணிக்கு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்குதல், 10 மணிக்கு கொடைவிழா பூஜை, அதிகாலை 2 மணிக்கு ஒடுக்கு பூஜை தொடர்ந்து வாணவேடிக்கை ஆகியவை நடைபெறுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை நடுவூர்கரை சிவசக்தி கோவில் நிர்வாகிகள் தலைவர் சுந்தரபாலன், செயலாளர் குமாரதாஸ், பொருளாளர் சிவராஜ், அமைப்பாளர் முருகன், நிர்வாககுழு உறுப்பினர்கள் ராஜரெத்தினம், சடையன், குமரேசன், நாகராஜன் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், ஊர் பொதுமக்கள் செய்து வருகிறார்கள்.
    தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
    “கடவுளின் கருணையோ வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.“ இந்த வசனம், நம் கடவுள் கருணை மிகுந்தவர், வாழ்நாள் முழுவதும் அந்த கருணையை நம்மீது பொழிகின்றார் என்ற இறை செய்தியை வெளிக்கொண்டு வருகிறது. அதுமட்டுமின்றி விவிலியம் முழுவதும் இந்த செய்தி முதன்மையாக இடம் பெறுகிறது.

    ஊர் மக்களால் பாவி என்று ஒதுக்கப்பட்டு, தண்டிக்கப்பட்ட சக்கேயுவின் வீட்டிற்கு இயேசு சென்றார். அவரோடு தங்கினார். இந்த கருணைக்கு பரிசு; சக்கேயு மனம் திரும்பி, கடவுளின் மகனாக வாழ்ந்தார். (லூக்கா 19:6-9)

    கல்லால் எரிந்து கொல்லப்படுவதே விபசாரத்தில் ஈடுபட்ட பெண்ணுக்கு உரிய தண்டனை என இழுத்து வரப்பட்ட பெண் இயேசு முன் கூனிகுறுகி நின்றாள். இயேசு அவளை கருணையோடு பார்த்து, அந்த தண்டனையிலிருந்து விடுவித்தார். அந்த கருணையின் விளைவு; விபசாரத்தில் ஈடுபட்ட பெண் மனம் மாறி நல்வாழ்வு வாழ்ந்தாள். (யோவான் 8:10-11)

    நம் கடவுள் கருணையின் கடவுள். பழிவாங்கும் கடவுள் அல்ல. எனவே தான் இயேசுவை உலகிற்கு அனுப்பிய நம் தந்தையாகிய கடவுள், அந்த இறை கருணையையே வலிமையான ஆயுதமாக கொடுத்து அனுப்பினார். இயேசு நம் பாவங்களுக்காக தன்னையே தியாகமாக்கினார். கடவுளின் கருணையை நிலைநாட்டினார்.

    இறை கருணையை நாம் அதிகமாக தியானிக்கிறபொழுது தான் ஆன்மிகத்தில் முதிர்ச்சி அடைய முடியும். நம் பாவங்கள் நம்மை விட்டு அகலும். நல்லதை நோக்கி நம்மால் பயணிக்க முடியும். எனவே தவக்காலத்தில் இயேசுவின் சிலுவைப்பாதை நிலைகளை ஆழமாக தியானிக்கிற நாம், இறைவனின் கருணையை உள்ளத்தில் பதிப்போம். கடவுளின் கருணை நம் வாழ்நாள் முழுவதும் நீடிக்கும்.
    ×