search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்
    X
    திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    திருப்பரங்குன்றம் கோவிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

    பங்குனி பெருவிழா கொடியேற்றம் நடைபெற்றதையும், தெய்வானையுடன் முருகப்பெருமான் சர்வ அலங்காரத்தில் காட்சி தந்ததையும் படத்தில் காணலாம்.
    திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் 15 நாட்கள் வெகு விமரிசையாக பங்குனி பெருவிழா நடைபெறும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக ஊரடங்கு அமலில் இருந்ததால் பங்குனி பெருவிழா ரத்து செய்யப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து இந்த ஆண்டு பங்குனி பெருவிழா கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. திருவிழாவின் முதல் நாளான நேற்று காலை 11 மணிக்கு உற்சவர் சன்னதியில் தெய்வானையுடன் சுப்பிரமணிய சுவாமிக்கு சர்வ அலங்காரம் செய்யப்பட்டது.

    இதனையடுத்து மேள தாளங்கள் முழங்க உற்சவர் சன்னதியில் இருந்து சுவாமி புறப்பட்டு கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருளினார். அங்கு இளநீர், புனிதநீர் ஊற்றி மகா அபிஷேகம் நடந்தது. பின்னர் முருகப்பெருமான் அருள் பார்வையில் மேள தாளங்கள் முழங்க 11.25 மணிக்கு தங்க முலாம் பூசப்பட்ட கம்பத்தில் கொடி ஏற்றப்பட்டது. அதைத் தொடர்ந்து தங்கமுலாம் பூசப்பட்ட கம்பத்திற்கும், கொடிக் கம்ப வளாகத்தில் எழுந்தருளிய சுவாமிக்கும் தீப, தூப ஆராதனை நடந்தது. உடனே அங்கு கூடியிருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா, வீரவேல் முருகனுக்கு அரோகரா என்று பக்தி கோஷங்கள் எழுப்பி பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவையொட்டி வருகிற ஏப்ரல் 2-ந்தேதி வரை தினமும் காலை, இரவில் வித, விதமான வாகனங்களில் தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி நகர் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 24-ந்தேதி கைப்பாரமும், 28-ந்தேதி பங்குனி உத்திரமும், 29-ந்தேதி சூரசம்ஹார லீலையும், 30-ந்தேதி பட்டாபிஷேகமும் நடக்கிறது. திருவிழாவின் சிறப்பு நிகழ்ச்சியாக 31-ந்தேதி முருகப்பெருமான்-தெய்வானை திருக்கல்யாணம் கோலாகலமாக நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர் பிரியாவிடையுடன் எழுந்தருளுகின்றனர். இதேசமயம் முருகப்பெருமானின் ஆறாவது படை வீட்டிலிருந்து சீர்வரிசை வருகிறது.

    திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற ஏப்ரல் 1-ந் தேதி கோவில் வாசலில் கிரிவலப்பாதையில் 3 கிலோ மீட்டர் சுற்றளவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து தரிசனம் செய்யக்கூடிய மகா தேரோட்டம் நடக்கிறது. திருவிழாவின் உச்ச நிகழ்ச்சியாக 2-ந்தேதி தீர்த்த உற்சவம் நடக்கிறது. கொரோனா வைரஸ் பரவல் மற்றும் பொதுத் தேர்தலையொட்டி சொற்பொழிவு, பட்டிமன்றம் மற்றும் கலைநிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
    Next Story
    ×