என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் வெண்ணெய் தாழி உற்சவம் நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் பிரசித்தி பெற்ற ராஜகோபாலசாமி கோவில் உள்ளது. புகழ்பெற்ற வைணவ திருத்தலமான இந்த கோவிலில் பெருமாளுக்கு ஆண்டு முழுவதும் உற்சவம் நடக்கிறது. இதில் பங்குனி மாதம் நடைபெறும் ஒருமாத திருவிழா இந்த கோவிலின் முக்கியமான திருவிழாவாகும். கடந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலில் பங்குனி திருவிழா ரத்து செய்யப்பட்டது.

    இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 2-வது நாள் புன்னைவாகனம், 3-வது நாள் வெள்ளிஹம்சவாகனம், 4-வது நாள் தஙககோவர்த்தனகிரி, 5-வது நாள் பஞ்சமுக அனுமார் வாகனம், 6-ம் நாள் கண்டபேரண்டபட்சி வாகனம், 7-வது நாள் வண்ண புஷ்ப பல்லக்கு ஆகியவற்றில் ராஜகோபாலசாமி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    15-வது நாள் கோரதத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு ராஜகோபாலசாமி காட்சி அளித்தார். விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக வெண்ணெய்தாழி உற்சவம் நேற்று நடைபெற்றது. இதையொட்டி நேற்று காலை நவநீத சேவையில் ராஜகோபாலன் பல்லக்கில் கோவிலிருந்து புறப்பட்டு 4 வீதிகளையும் வலம் வந்து பெரியகடைத்தெரு வழியாக சென்று காந்திரோட்டில் உள்ள வெண்ணெய்தாழி மண்டபத்தில் எழுந்தருளினார். ராஜகோபாலன் வீதியுலா சென்ற வழியெங்கும் பக்தர்கள் வெள்ளமாக திரண்டு நின்று ராஜகோபாலசாமி மீது வெண்ணெய்யை வீசி வழிபட்டனர். மாலை செட்டி அலங்காரத்தில் பக்தர்களுக்கு ராஜகோபாலசாமி அருள்பாலித்தார். இரவு தங்க குதிரை வாகனத்தில் ராஜ அலங்காரத்தில் செட்டிதெருவில் வீதி உலாவந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். விழாவில் மன்னார்குடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கனக்கான பக்தர்கள், கலந்து கொண்டு வீதியின் 2 புறமும் திரண்டு நின்று ராஜகோபாலனை வழிபட்டனர்.

    இன்று(சனிக்கிழமை) தேரோட்டம் நடைபெறுகிறது. பங்குனி உற்சவத்தின் நிறைவு நிகழ்ச்சியாக கோவிலுக்கு அருகில் உள்ள கிருஷ்ண தீர்த்தத்தில் தெப்பத்திருவிழா அடுத்த மாதம்( ஏப்ரல்) 2-ந் தேதி நடைபெறுகிறது. வெண்ணெய்தாழி விழாவையொட்டி மன்னார்குடி மட்டுமின்றி அதன் சுற்றுவட்டார பகுதி மக்கள் மற்றும் வெளியூர்களிலிருந்து வந்த பக்தர்கள் ஆயிரக்கணக்கானோர் மன்னார்குடியில் கூடியதால் மன்னார்குடி நகரம் நேற்று மக்கள் வெள்ளத்தால் நிரம்பி வழிந்தது.
    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஓதிமலை முருகன் கோவில். இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    கோயம்புத்தூர் மாவட்டத்தில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து சுமார் 6 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது, ஓதிமலை முருகன் கோவில். முருகப்பெருமான் கோவில் கொண்டிருக்கும் மலைகளிலேயே மிக உயரமானதாகவும், செங்குத்தானதாகவும் இந்த மலை அறியப்படுகிறது. சுமார் 3 ஆயிரம் அடி உயரம் கொண்ட இருந்த மலையில் வீற்றிருக்கும் இறைவனைக் காண, 1,800 படிகள் எறிச்செல்ல வேண்டும். இத்தல இறைவனின் பெயர், ‘ஓதிமலையாண்டவர்’ என்பதாகும். இந்தக் கோவிலைப் பற்றிய விவரத்தை இங்கே பார்க்கலாம்.

    தல வரலாறு

    படைக்கும் தொழிலை செய்து வந்த பிரம்மதேவனிடம், “உயிர்களின் உருவாக்கத்திற்கு மூல ஆதாரமாக விளங்கும் ‘பிரணவ’த்தின் பொருள் என்ன?” என்று முருகப்பெருமான் கேட்டார். ஆனால் அதற்கான சரியான விளக்கத்தை பிரம்மனால் கூற முடியவில்லை. இதனால் அவரை சிறையில் அடைத்த முருகப்பெருமான், பிரம்மதேவரின் படைப்பு தொழிலை சில காலம் செய்து வந்தார். அதுவும் படைப்புத் தொழிலை இந்த ஆலயம் இருக்கும் மலையில் இருந்தே, முருகப்பெருமான் செய்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த ஆலயத்தில் வீற்றி ருக்கும் இறைவனுக்கு, ஐந்து முகங்கள் உள்ளன. இது வேறு எங்கும் காண முடியாத அற்புதமான கோலம் ஆகும்.

    முருகப்பெருமானால் படைக்கப்பட்ட அனைத்து உயிர்களும், பூமியில் புண்ணிய ஆத்மாக்களாகவே பிறப்பு எடுத்தன. ஆகவே அவர்களுக்கு இறப்பு ஏற்படவில்லை. இதனால் பூமியில் பாரம் உண்டானது. பூமாதேவி தவித்துப் போனாள். பிறப்பும், இறப்பும் சமமாக இருந்தால்தான், உலக இயக்கம் முறையாக இருக்கும் என்பதால், அனைவரும் சிவபெருமானிடம் முறையிட்டனர். அவர் முருகப்பெருமானை சந்தித்து, பிரம்மதேவனை சிறையில் இருந்து விடுவித்து, படைப்பு தொழிலை அவரிடமே ஒப்படைக்கும்படி கேட்டுக்கொண்டார். சுவாமி மலையில் சிவபெருமானுக்கு பிரணவ மந்திரத்தின் விளக்கத்தை சொன்ன முருகப் பெருமான், இத்தலத்தில் வேத, ஆகம விதிகளை சிவபெருமானுக்கு உபதேசம் (ஓதியதால்) செய்ததாக சொல்லப்படுகிறது. எனவே இந்த மலைக்கு ‘ஓதிமலை’ என்று பெயர் வந்தது. மேலும் பிரம்மதேவனை சிறையில் அடைத்த இடம் ‘இரும்பறை’ என்றானது. சிவபெருமானின் வேண்டுகோளுக்கு இணங்கி, பிரம்மனை சிறையில் இருந்து விடுவித்தார் முருகப்பெருமான். பின்னர் அவருக்கும் பிரவணத்தின் பொருளை உணர்த்தி, படைப்புத் தொழிலை மீண்டும் அவரிடமே ஒப்படைத்தார் என்கிறது கோவில் தல வரலாறு.

    ஆலய அமைப்பு

    இத்தல முருகனுக்கு ‘கவுஞாச வேத மூர்த்தி’ என்ற பெயரும் இருக்கிறது. முருகனை தரிசிப்பதற்கு முன்பு, மலையடிவாரத்தில் வீற்றிருக்கும், சுயம்பு விநாயகரை வழிபட வேண்டும். படைப்புத் தொழிலை மீண்டும் பிரம்மனிடமே கொடுக்க வேண்டும் என்று சொல்வதற்காக, கயிலையில் இருந்து தனியாகத்தான் ஓதிமலைக்கு வந்தார், சிவபெருமான். எனவே மலை அடிவாரத்தில் உள்ள சிவன் கோவிலில் சிவனுக்கு மட்டுமே சன்னிதி உள்ளது. அம்பாளுக்கு சன்னிதி அமைக்கப்படவில்லை. ஆனால் மலையின் மேல் உள்ள கோவிலில் காசி விஸ்வநாதர், காசி விசாலாட்சி ஆகியோருக்கு தனித்தனி சன்னிதிகள் அமையப்பெற்றுள்ளன.

    பழனியில் ஆண்டிக்கோலம் பூண்டிருந்த முருகனை தரிசிப்பதற்காக, இந்த வழியாகச் சென்றார், போகர் சித்தர். ஆனால் அவருக்கு வழி தெரியவில்லை. இதனால் இத்தலத்தில் உள்ள முருகப் பெருமானை நினைத்து யாகம் செய்தாராம். அப்போது இந்த ஆலயத்தில் இருந்து ஒரு தலையோடு வெளிப்பட்ட முருகப்பெருமான், போகருக்கு பழனி மலைக்குச் செல்லும் வழியைக் காட்டி அருளினார். அப்படி வழிகாட்டிய அந்த முருகப்பெருமான், ஓதிமலையில் இருந்து சற்று தூரத்தில் உள்ள குமாரபாளையம் நாகநாதேஸ்வரர் கோவிலில் வீற்றிருக்கிறார். ஆதி காலத்தில் ஓதிமலை முருகன், ஆறு முகங்களுடன் காட்சியளித்ததாகவும், போகர் சித்தருக்கு வழிகாட்டு வதற்காக ஒரு முகத்துடன் சென்று குமாரபாளையத்தில் அமர்ந்துவிட்டதால், ஓதிமலையில் ஐந்து முகத்தோடு காட்சியளிப்பதாகவும் ஒரு கதை சொல்லப்படுகிறது.

    எந்த ஒரு தொழிலையும் புதியதாகத் தொடங்குவதற்கு முன்னர், இத்தல முருகனிடம் பூ வைத்து உத்தரவு கேட்டு செய்வது வழக்கமாக இருக்கிறது. தொழில் மட்டுமல்லாமல், வீட்டில் சுபநிகழ்ச்சிகள் செய்வதாக இருந்தாலும் பூ போட்டு கேட்கும் வழக்கம் இந்தப் பகுதி மக்களிடம் இருக்கிறது. கல்வியில் நல்ல முன்னேற்றம் அடையவும் இத்தல முருகப்பெருமானை வேண்டிக்கொள்ளலாம். இந்த ஆலயத்தில் சஷ்டி, கிருத்திகை தினங்களில் சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன. அதே போல் திங்கள், வெள்ளி, அமாவாசை நாட்களிலும் வழிபாடுகள் நடைபெறுகின்றன. இதுபோன்ற விசேஷ தினங்களில் காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை ஆலயம் திறந்திருக்கும். மற்ற நாட்களில் ஆலயத்தை தொடர்பு கொண்டு முன்பதிவு செய்து விட்டுச் செல்வதே நல்லது.

    அமைவிடம்

    கோயம்புத்தூரில் இருந்து சுமார் 48 கிலோமீட்டரில் உள்ளது இரும்பறை. இங்கிருந்து 6 கிலோமீட்டர் சென்றால் ஓதிமலையை அடையலாம். அதேபோல் கோயம்புத்தூரில் இருந்து 48 கிலோமீட்டர் தொலைவில் உள்ள புளியம்பட்டி சென்று, அங்கிருந்தும் 10 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள ஓதிமலை முருகன் கோவிலுக்குச் செல்லலாம்.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவில் சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 7-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணி வரை சூரிய பிரபை வாகனத்தில் உற்சவர் கோதண்டராமர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து மாலை 6 மணியில் இருந்து இரவு 7 மணி வரை ஊஞ்சல் சேவை நடந்தது. பின்னர் இரவு 8 மணியில் இருந்து இரவு 9 மணி வரை சந்திரபிரபை வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    விழாவில் பெரிய ஜீயர்சுவாமிகள், சின்ன ஜீயர்சுவாமிகள், கோவில் அதிகாரிகள், அர்ச்சகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 27-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
    விருத்தாசலம் அடுத்த மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற சித்திவிநாயகர், கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் பக்தர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற வேண்டி கோரிக்கை மனு எழுதி அங்குள்ள முனியப்பர் சன்னதியில் பிராது கட்டினால் 90 நாட்களில் அந்த கோரிக்கை நிறைவேறும் என்பது ஐதீகம். இதனால் இக்கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் வந்து செல்வார்கள். இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா நடைபெறும்.

    அதன்படி இந்தாண்டுக்கான திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக கடந்த 16-ந் தேதி இரவு கிராம தேவதையான செல்லியம்மன் மற்றும் அய்யனாருக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் நேற்று காலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சித்திவிநாயகர் கொளஞ்சியப்பருக்கு பால், தயிர், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பல்வேறு விதமான பொருட்களால் சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடந்தது.

    தொடர்ந்து உற்சவர்கள் சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சிறப்பு அலங்காரத்தில் கொடிமரம் முன்பு எழுந்தருளினர். பின்னர் கொடிமரத்துக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, விழா கொடியேற்றப்பட்டது. இதையடுத்து சாமி வீதிஉலா நடைபெற்றது. இதில் விருத்தாசலம் பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் தினசரி சாமிக்கு சிறப்பு பூஜைகளும், சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் சாமிகள், மயில், ஆட்டுக்கிடா, யானை, குதிரை உள்ளிட்ட வாகனங்களில் வீதிஉலாவும் நடைபெற உள்ளது. வருகிற 27-ந் தேதி அதிகாலை 4.30 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது.

    28-ந் தேதி பங்குனி உத்திர திருவிழாவையொட்டி சித்தி விநாயகர், கொளஞ்சியப்பர் திருமுதுகுன்றத்தில் எழுந்தருள சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் நடைபெறும். பின்னர் மாலையில் கொளஞ்சியப்பருக்கு தீர்த்தவாரி நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்து வருகின்றனர்.
    திருமால் எடுத்த தசாவதாரங்களில் பரசுராம அவதாரத்திற்கு உகந்த மந்திரங்களை பார்க்கலாம். இந்த மந்திரத்தை சொல்வதால் நமக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்கள் அழிவர்.
    தியான ஸ்லோகம்

    க்ஷத்ரிய வம்ஸ வைரிம் ஸதா கோப முக ரூபிணம்
    பரசுராம  க்ஷேத்ர ஸ்தாபினம் பஜே பரசுராம மூர்த்தினம்,

    மூல மந்திரம்

    ஓம் நமோ பகவதே பரசுராமாய மம வைரி நாஸனம் குரு குரு ஸ்வாஹா,

    மந்திர ஜப பலன்

    இம்மந்திர ஜப பலனால் நமக்கு கெடுதல் செய்ய நினைப்பவர்கள் அழிவர்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 6-ந்தேதியில் இருந்து நடந்து வந்த 14 நாள் பிரம்மோற்சவ விழா சாந்தி அபிஷேகத்துடன் நிறைவு பெற்றது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் 6-ந்தேதியில் இருந்து 14 நாட்கள் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, மாலை இரு வேளையும் பல்வேறு வாகனச் சேவை நடந்து வந்தது.

    அதில் 13 நாட்கள் நடந்த கோவில் நிகழ்ச்சிகளில் அதிகாரிகள், ஊழியர்கள், அர்ச்சகர்கள், வேதப் பண்டிதர்கள் மற்றும் பக்தர்கள் அறிந்தும் அறியாமலும், தெரிந்தும் தெரியாமலும் செய்த தவறுகளை நிவர்த்தி ெசய்வதற்காக கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் பிரதான அர்ச்சகர்கள் ‘ஸ்ரீ’ என்னும் சிலந்தி, ‘காள’ என்னும் பாம்பு, ‘ஹஸ்தி’ என்னும் யானை மற்றும் பரத்வாஜ் முனிவர், ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் ஆகிய உற்சவ மூர்த்திகளுக்கு சாந்தி அபிஷேகம் செய்தனர்.

    அப்போது அலங்கார மண்டபத்தில் சிறப்பு கலசம் ஏற்பாடு செய்தும், யாகம் வளர்த்தும் பூஜைகள் செய்தனர். உற்சவ மூர்த்திகளுக்கு பால், தயிர், மஞ்சள், குங்குமம், சந்தனம், இளநீர், தேன் ஆகிய சுகந்த திரவியங்களால் சாந்தி அபிஷேகம் செய்யப்பட்டு, தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இத்துடன் வருடாந்திர மகாசிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவு பெற்றது.

    மேற்கண்ட நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி ெபத்திராஜு மற்றும் பக்தர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி பெருவிழாவையொட்டி வருகிற 25-ந் தேதி தேரோட்டமும், 26-ந் தேதி 63 நாயன்மார்கள் வீதி உலாவும் நடக்கிறது.
    சென்னை மயிலாப்பூர் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர் கோவிலில் பங்குனி பெருவிழா 18-ந்தேதி தொடங்கியது. வரும் 28-ந்தேதி வரை விழா நடைபெற உள்ளது. இதையொட்டி நேற்று காலை கொடியேற்றம் நடந்தது. காலை 8 மணியளவில் சாமி பவளக்கால் விமானத்தில் பஞ்சமூர்த்திகள் வீதி உலா நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் நாளை(ஞாயிற்றுக்கிழமை) காலை அதிகார நந்தி காட்சி, 23-ந்தேதி இரவு வெள்ளி ரிஷப வாகன வீதி உலா நடக்கிறது. 25-ந்தேதி (வியாழக்கிழமை) காலை விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நடக்கிறது.

    26-ந்தேதி மதியம் 63 நாயன்மார்கள் வீதி உலாவும், 28-ந் தேதி இரவு திருக்கல்யாணமும் நடக்க உள்ளது. பங்குனி திருவிழா கொரோனா வைரஸ் தொற்று காரணமாக அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றி நடத்தப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் அரசு வழிகாட்டி நெறிமுறைகளை பின்பற்றிட கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    கோவில் வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு, அவ்வப்போது சுகாதார பணியாளர்களை கொண்டு தூய்மை பணிகள் செய்யப்பட்டு வருகிறது. பக்தர்கள் கண்டிப்பாக முககவசம் அணிந்து வரவும், சமூக இடைவெளியை கடைப்பிடிக்கவும், 10 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், 60 வயதுக்கு மேற்பட்டோர் மற்றும் கர்ப்பிணிகள் கோவிலுக்கு வருவதை தவிர்க்குமாறும் கேட்டுக்கொள்ளப்படுகிறது.

    திருக்கல்யாண உற்சவத்தை காண இரண்டு பெரிய திரை கோவிலுக்கு வெளியே பொருத்தப்பட்டு ஒளிபரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. பங்குனி பெருவிழாவின் முக்கிய திருவிழாவான அதிகார நந்தி காட்சி, வெள்ளி ரிஷப வாகன காட்சி, தேரோட்டம், 63 நாயன்மார்கள் வீதிஉலா மற்றும் திருக்கல்யாண உற்சவம் ஆகியவைகளை ‘யூடியூப்’ மூலம் நேரடி ஒளிப்பரப்பு செய்யப்பட உள்ளதால் பக்தர்கள் வீட்டிலிருந்தபடியே சாமியை தரிசித்து அருள்பெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    மேற்கண்ட தகவல்கள் கபாலீஸ்வரர் கோவில் நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    திருமண தடை, தாமதங்களை போக்கும் ஒரு அற்புத தலமாக இருப்பது திருமணஞ்சேரி அருள்மிகு உத்வாக நாதசுவாமி கோவில். இந்த கோவிலில் செய்ய வேண்டிய பரிகார முறை குறித்து இங்கு தெரிந்து கொள்ளலாம்.
    திருமணஞ்சேரி கோயிலில் திருமணத்திற்கான பரிகாரம் செய்ய விரும்புபவர்கள் ஒரு சுப முகூர்த்த தினத்தில் திருமணஞ்சேரி கோயிலுக்கு செல்ல வேண்டும். அங்கு சென்றதும் முதலில் அக்கோயிலின் சப்தகிரி தீர்த்த குளத்தில் குளித்துவிட்டு, புத்தாடை அணிந்து கொண்டு, 2 மலர் மாலைகள், 2 தேங்காய், கற்பூரம், குங்குமம், மஞ்சள், நெய், சந்தனம், வெற்றிலை, பாக்கு போன்றவற்றை வாங்கி, அர்ச்சகரிடம் கொடுத்து, கோயில் மூலவராக இருக்கும் கல்யாண சுந்தரருக்கு மாலை சாற்றி வேண்டும். பிறகு சுந்தரர் மற்றும் அம்பாளுக்கு அர்ச்சனை செய்து, பூஜைகள் செய்து வழிபட வேண்டும். பிறகு அங்கு உள்ள நெய் தீபம் வைக்கப்படும் மேடையில் எண்ணி ஐந்து நெய் தீபங்களை ஏற்ற வேண்டும்.

    பிறகு அங்கு திருமண மேடையில் கோயில் அர்ச்சகரால் வழங்கப்படும் எலுமிச்சம் பழத்தை உப்பு, சர்க்கரை சேர்க்காமல் தண்ணீரில் கலந்து குடிக்க வேண்டும். தெய்வங்களுக்கு பூஜைகள் செய்யப்பட்ட பிறகு, பிரசாதமாக வழங்கப்படும் மலர் மாலையை பத்திரப்படுத்தி உங்கள் வீட்டிற்கு கொண்டு செல்ல வேண்டும். வீட்டிற்கு சென்றதும் தலைக்கு ஊற்றி குளித்து விட்டு, அந்த மாலையை முறை உங்கள் கழுத்தில் போட்டு, இறைவனை மனதார வணங்கி, அம்மாலையை உங்கள் வீட்டு பூஜையறையிலேயே பத்திரமாக வைக்கவேண்டும்.

    பிறகு கோவிலில் பிரசாதமாக கொடுக்கப்பட்ட விபூதி மற்றும் குங்குமத்தை தினமும் உங்களின் நெற்றியிலிட்டு இறைவனை வணங்கி வர வேண்டும். இவ்வாறு செய்கின்ற 90 நாட்களுக்குள்ளாக திருமணத்திற்கான வரன் அமையும் என்பது இப்பரிகாரம் செய்து பலன் கிடைக்க பெற்ற பக்தர்களின் கருத்தாக உள்ளது. மேலும் இந்த பத்திரப்படுத்தபட்ட மாலையானது திருமணம் ஆன உடனே திருமண தம்பதிகளான கணவன் – மனைவி இருவரும் சேர்ந்து திருமணஞ்சேரி கோயிலுக்கு வந்து கோவிலில் அந்த மாலையை குறிப்பிட்ட இடத்தில் இட்ட பிறகு, அங்கிருக்கும் இறைவனுக்கு அர்ச்சனை செய்து வேண்டுதலை முடித்து, தங்களின் விருப்பம் போன்ற காணிக்கையை கோயிலுக்கு செலுத்துவது நன்மைகளை உண்டாக்கும்.
    சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 27-ந்தேதி சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 28-ந்தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு விழா நடக்கிறது.
    பங்குனி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை கடந்த 14-ந்தேதி திறக்கப்பட்டது. தொடர்ந்து 5 நாட்கள் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

    மாத பூஜையின் தொடர்ச்சியாக நேற்று சபரிமலை ஐயப்பன் கோவிலில் ஆறாட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி காலை 7.15 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு கொடியை ஏற்றி வைத்து விழாவை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக காலை 7 மணிக்கு கொடி பூஜை, தந்திரி தலைமையில் நடைபெற்றது. விழாவானது தொடர்ந்து 28-ந்தேதி வரை 10 நாட்கள் விமரிசையாக நடைபெறும்.

    விழா நாட்களில் வழக்கமான பூஜைகளுடன், ஸ்ரீ பூத பலி, உத்சவ பலி ஆகியவை நடைபெறும்.

    27-ந்தேதி சரம்குத்தியில் பள்ளி வேட்டை நடைபெறும். 28-ந்தேதி காலை 11 மணியளவில் பம்பையில் ஆறாட்டு விழா நடக்கிறது.

    பின்னர், அன்று மாலை கொடி இறக்கப்பட்டு திருவிழா நிறைவு பெறும். அதை தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்கு பின் இரவு 9 மணிக்கு அரிவராசனம் பாடி நடை அடைக்கப்படும்.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக விழா நாட்களில் 28-ந்தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் மட்டுமே ஆன்லைன் முன்பதிவு அடிப்படையில் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். தரிசனத்திற்கு வரும் அனைத்து பக்தர்களுக்கும் கொரோனா ஆர்.டி.பி.சி.ஆர். நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயமாக்கப்பட்டு உள்ளது.

    கடந்த ஆண்டு ஆறாட்டு திருவிழா நடைபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

    மீண்டும் சித்திரை மாத பூஜை மற்றும் விஷு பண்டிகைக்காக சபரிமலை ஐயப்பன் கோவில் நடை ஏப்ரல் மாதம் 10-ந் தேதி திறக்கப்படும்.
    ராமநாதபுரம் மாவட்டம், கமுதி முத்துமாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர்.
    கமுதியில் சத்திரிய நாடார் உறவின்முறைக்கு பாத்தியப்பட்ட முத்து மாரியம்மன் கோவில் பங்குனி பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஏராளமான பக்தர்கள் காப்புக் கட்டி தங்களது விரதத்தை தொடங்கினர். விழாவில் நாடார் உறவின் முறை முறைகாரர் மாயகிருஷ்ணன், அம்பலகாரர் சக்திவேல் மற்றும் நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். 16 நாட்கள் திருவிழா நடைபெறுகிறது.

    வருகிற 30-ந் தேதி கோவிலின் ஏராளமான பொதுமக்கள் பொங்கல் வைத்து, மாவிளக்கு காணிக்கை செலுத்துகிறார்கள். அன்று நள்ளிரவு கோவிலின் உள் மற்றும் வெளி பகுதிகளில் பக்தர்கள் உருண்டு கொடுத்தும், கோவிலை சுற்றி வந்தும் தங்களது நேர்த்திக்கடனை செலுத்துகிறார்கள்.

    31-ந் தேதி ஏராளமானோர் உடல் முழுவதும் சேறுபூசி கோவிலை வலம் வந்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள். மேலும் அக்கினிச்சட்டி, பால்குடம், பூப்பெட்டி, பூக்குழி இறங்குதல், கரும்பாலை தொட்டில், போன்ற நேர்த்திக் கடன்களும், 21, 51, 101 சட்டி எடுத்து பக்தர்கள் நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

    அடுத்த மாதம் 2-ம்தேதி 2001 திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. 3-ந் தேதி முளைப்பாரி திருவிழாவுடன் பங்குனித்திருவிழா நிறைவுபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கமுதி சத்திரிய நாடார் உறவின் முறையார்கள் செய்து வருகின்றனர்.
    நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்
    சில நூறு ஆண்டுகளுக்கு முன்பாக 'அல்போன்சோ' என்ற அரசர்  ஸ்பெயின் நாட்டை ஆண்டுவந்தார்.  நீதி தவறாமல் பொற்கால ஆட்சியை மக்களுக்கு வழங்கியதால்,  இன்றைக்கும் அவர் மக்களால் நினைவுகூரப்படுகிறார்.

    அல்போன்சோ ஆட்சி செய்தபோது ஸ்பெயினின் மீது எதிரி நாட்டுப் படையினர் படையெடுத்து வந்தனர். இதனால் அல்போன்சா படையினருக்கும் எதிரி நாட்டுப் படையினருக்கும் இடையே பயங்கர சண்டை நடந்தது.

    அப்போது, சிலர் மாறுவேடத்தில் ஸ்பெயின் நாட்டுக்குள் புகுந்து, இளவரசரைக் கடத்திக்கொண்டு போய் அவர்களுடைய நாட்டில் வைத்துக்கொண்டனர். இளவரசர் கடத்தப்பட்ட செய்தியைக் கேட்டு மன்னர் மனமுடைந்துபோனார்.

    இந்தச் சம்பவம் நடந்த சில நாள்கள் கழித்து, எதிரி நாட்டு அரசரிடமிருந்து மன்னருக்கு ஓர் ஓலை வந்தது. அந்த ஓலையில், ``உனக்கு உன்னுடைய மகன் வேண்டுமா... இல்லை, உன் தேசத்து மக்கள் வேண்டுமா? மகன் வேண்டுமென்றால், நாங்கள் நாட்டின்மீது படையெடுத்து வந்து, மக்களைக் கொன்றொழிப்போம். உனக்கு மக்கள்தான்வேண்டும் என்றால், உன்னுடைய மகனைக் கொன்றொழிப்போம்'' என்று எழுதி அனுப்பியிருந்தனர்.

    அந்த ஓலையைப் படித்ததும், எதற்குமே அஞ்சாத மன்னர் அதிர்ந்து போனார். மன்னரைச் சுற்றி அரச சபையினர் இருந்தனர். மன்னர் என்ன முடிவெடுக்கப் போகிறாரோ என்று எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர்.
    அப்போது மன்னர் அரச சபையிலிருந்த எழுத்தரை தன் அருகே அழைத்து, அவரிடம் ``என்னுடைய மகனை நீங்கள் என்ன வேண்டுமானாலும் செய்யுங்கள். ஆனால்,  என் நாட்டு மக்களை நீங்கள் ஒன்றும் செய்யாதீர்கள்'' என்று எழுதுமாறு கேட்டுக்கொண்டார்.

    எழுத்தரும் மன்னர் சொன்னபடியே ஓலையை எழுதி, அதனை எதிரி நாட்டு அரசனுக்கு அனுப்பிவைத்தார். மன்னர் எடுத்த இந்த முடிவை அறிந்து, அரச சபையினர் மட்டுமல்லாமல், நாட்டு மக்கள் அனைவருமே திகைத்துப் போனார்கள்.

    மக்களுக்காக தன் மகனையே கையளித்த மன்னர் அல்போன்சோவின் தியாகச் செயல் அனைவரையும் வியக்கவைப்பதாக இருக்கிறது.
    எப்படி மன்னர் அல்போன்சோ மக்களுக்காக தன்னுடைய மகனையே கையளித்தாரோ, அதுபோன்று பிதா என அழைக்கப்படும் கடவுளும் தன் ஒரே மகன் இயேசு கிறிஸ்துவை நமக்காக, நம்முடைய மீட்புக்காகக்  கையளித்து `பேரன்பின் ஊற்று' என்பதை நமக்கு நிரூபித்துக் காட்டுகின்றார்.

    தவக்காலத்தின் நான்காம் ஞாயிறான இன்றைக்கு வாசிக்கப்படும் வாசகங்கள் ‘கடவுளின் பேரன்பை’ எடுத்துக்கூறுவதாக இருக்கின்றன. யோவான் எழுதிய நற்செய்தி நூலில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, ``தம் ஒரே மகன்மீது நம்பிக்கைகொள்ளும் எவரும் அழியாமல் நிலைவாழ்வு பெறும் பொருட்டு, அந்த மகனையே அளிக்கும் அளவுக்குக்  கடவுள் உலகின்மேல் அன்புகூர்ந்தார்'' என்கிறார்.  

    இந்த வார்த்தைகள் கடவுள் எந்தளவுக்குப் பேரன்பு கொண்டவராக இருக்கிறார் என்பதை மிகத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. இந்த இடத்தில், புனித பவுல் ரோமையருக்கு எழுதிய திருமுகத்தில் கூறப்படும் வார்த்தைகளை இணைத்துச் சிந்தித்துப் பார்த்தால், இன்னும் பொருள் நிறைந்ததாக இருக்கும்.

    ``நேர்மையாளருக்காக ஒருவர் தம் உயிரைக் கொடுக்கத் துணியலாம். ஆனால், நாம் பாவிகளாக இருந்தபோதே கிறிஸ்து நமக்காகத் தம் உயிரைக் கொடுத்தார். இவ்வாறு கடவுள் நம்மீது கொண்டுள்ள தம் அன்பை எடுத்துக் காட்டியுள்ளார்'' என்பார் அவர்.

    ஆம், எல்லாரும் வாழ்வு பெறவேண்டும்; அதுதான் கடவுளின்  திருவுளமாக இருக்கிறது, அங்குதான் கடவுளின் பேரன்பும் விளங்குவதாக இருக்கின்றது.
    திருச்சி உறையூர் வெக்காளியம்மன் கோவில் பூச்சொரிதல் விழா நடந்தது. பக்தர்கள் நூற்றுக்கணக்கான பூத்தட்டுகளுடன் வந்து குவிந்தனர்.

    திருச்சி உறையூரில் வானத்தையே கூரையாக கொண்டு காற்று, மழை, வெயில் என அனைத்து இயற்கை இடர்பாடுகளையும் தன்னகத்தே தாங்கிக் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வரும் வெக்காளியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் நடைபெறும் பூச்சொரிதல் விழா மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.

    இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா நேற்று நடைபெற்றது. இதனையொட்டி நேற்று காலை 6.30 மணி அளவில் கோவில் நிர்வாகம் சார்பில் உதவி ஆணையர் ஞானசேகரன் தலைமையில் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கோவில் பிரகாரத்தை சுற்றி வந்து அம்மனுக்கு பூத்தட்டுகளை வைத்து சிறப்பு தீபாராதனை செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்கள் பூ கூடைகளுடன் ஊர்வலமாக வந்து வழிபாடு செய்தனர்.

    திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் நூற்றுக்கணக்கான பூத்தட்டுகளுடன் வந்து குவிந்தனர். காலையில் தொடங்கிய பூச்சொரிதல் விழா நள்ளிரவை தாண்டி விடிய விடிய நீடித்தது.

    பூச்சொரிதல் விழாவையொட்டி கோவில் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பக்தர்களுக்கு அன்னதானம் மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டது பூச்சொரிதல் விழாவையொட்டி வெக்காளியம்மன் கோவில் மூலஸ்தானம் பூக்களால் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்தது.
    ×