என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    தமிழக-கேரள எல்லையில் உள்ள குருசுமலை திருப்பயண திருவிழா நிறைவடைந்தது. விழாவையொட்டி ஏராளமானோர் மலை ஏறி சென்று வழிபட்டனர்.
    தமிழக-கேரள எல்லை பத்துகாணியில் கொண்டகட்டி மலையில் குருசுமலை அமைந்துள்ளது. இங்கு ஆண்டுதோறும் மார்ச் மாதம் திருப்பயண திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருவிழா கடந்த 14-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நெய்யாற்றங்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் கொடி ஏற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றினார்.

    தொடர்ந்து வந்த விழா நாட்களில் தினமும் திருப்பலி, மறையுரை, பாடல் ஆராதனை போன்றவை நடந்தன. காலை 7 மணி முதல் பக்தர்கள் மலை உச்சிக்கு சென்று வழிப்பட்டனர்.

    நிறைவு நாளான நேற்று காலை மலை அடிவாரத்தில் திருப்பலியும், காலை 9 மணிக்கு ஆடம்பர கூட்டு திருப்பலியும் நடந்தது. இதில் நெய்யாற்றின்கரை மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் சாமுவேல் தலைமை தாங்கினார். மாலை 4 மணிக்கு மலை உச்சியில் திருவிழா நிறைவு கூட்டு திருப்பலி நடைபெற்றது. மேலும் மலை அடிவாரத்தில் குருசுமலை அதிபர் வின்சென்ட் பீட்டர் தலைமையில் கூட்டுத் திருப்பலி நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.
    நெல்லையப்பர் கோவிலில் வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் மூங்கிலுக்கு நடுவே சுவாமி எழுந்தருளினார்.
    நெல்லையப்பர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த 10-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சுவாமி, அம்பாளுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடந்து வருகின்றன.

    நேற்று வேணு வனத்தில் சுவாமி தோன்றிய திருவிளையாடல் நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி கோவிலில் மூங்கிலுக்கு நடுவே சுவாமி எழுந்தருளினார். சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் கோவில் செயல் அலுவலர் ராமராஜா, பேஸ்கர் முருகேசன் மற்றும் பக்தர்கள் கலந்து கொண்டனர். இரவு சுவாமி, அம்பாள் பஞ்சமூர்த்திகளுடன் எழுந்தருளினர்.

    தொடர்ந்து வீதி உலா நடந்தது. 10-ம் நாள் திருவிழா வருகிற 27-ந் தேதி (சனிக்கிழமை) இரவு 7 மணிக்கு அம்பாள் கோவில் ஆயிரங்கால் மண்டபத்தில் பங்குனி உத்திர செங்கோல் வழங்கும் விழா நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை நெல்லையப்பர் கோவில் நிர்வாகிகள் செய்துள்ளனர்.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மனுக்கு 3-வது வார பூச்சொரிதல் விழாவையொட்டி திரளான பக்தர்கள் பூக்களை சாற்றி வழிபட்டனர்.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது.

    நேற்று 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி சமயபுரம் அனைத்து கடை வியாபாரிகள் சங்கம் மற்றும் சமயபுரம் பூர்வீக குடிமக்கள் சார்பாக கடைவீதியில் உள்ள ஆண்டவர்கோவிலில் இருக்கும் கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சுவாமிகளுக்கு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டன.

    அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது பூக்கூடைகளை சுமந்தும், புஷ்ப பல்லக்கில் அம்மன் படத்தை வைத்தும், மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் பூத்தட்டுகளை சுமந்து கடைவீதி, தேரடிவீதி வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பூக்களைசாற்றி அவர்கள் வழிபட்டனர்.

    இதேபோல், ச.கண்ணனூர் பேரூராட்சியின் சார்பாக 14-வது ஆண்டாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செயல்அலுவலர் பாலமுருகன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் குடும்பத்தினருடன் நூற்றுக்கணக்கானோர் பூத்தட்டுகளை சுமந்து கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

    இந்த விழாவில் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெகதீசன், கள்ளக்குறிச்சி ஆணையர் குமரன், லப்பைக்குடிகாடு பேரூராட்சி செயல்அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பேரூராட்சியின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பூத்தட்டுக்களை சுமந்து வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.
    சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்ரமணியர் கோவில் பங்குனி தேரோட்ட விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.
    சிவகிரி ஜமீனுக்கு பாத்தியப்பட்ட பாலசுப்ரமணியர் கோவில் பங்குனி தேரோட்ட விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்கார தீபாராதனைகள் நடந்தது.

    கொடியேற்ற நிகழ்ச்சியில் சிவகிரி ஜமீன்தார் விக்னேஷ் வரசின்னத்தம்பியார், ராணிபாலகுமாரி நாச்சியார், கணக்கர் குரு சிவகிரி தேவர் மகாசபை தலைவர் குருசாமி பாண்டியன், துணைத் தலைவர் விக்னேஷ் ராஜா, செயலாளர் சுந்தரராஜன், துணைச் செயலாளர் கற்பக சுந்தரம், பொருளாளர் ராஜேந்திரன் மற்றும் அனைத்து மண்டகபடிதாரர்கள், பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமூகத்தின் சார்பில் விழா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஜமீன்தார் விக்னேஷ் வரசின்ன த்தம்பியார் மற்றும் விழாக்குழுவினர் செய்து வருகிறார்கள் 28-ந் தெப்ப தேரோட்டம் நடைபெறுகிறது.


    கிறிஸ்தவர்கள் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு யாத்திரைகளும் மேற்கொண்டு வருவதுடன், ஆதரவற்றோர், அனாதை இல்லங்களுக்கும் சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.
    ஏசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பு 40 நாட்கள் உபவாசம் இருந்ததாக கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிள் கூறுகிறது. இதனை ஆண்டுதோறும் கிறிஸ்தவர்கள் தவக்காலமாக கடைபிடித்து வருகின்றனர். இந்த தவக்காலம் கடந்த மாதம் 17-ந் தேதி தொடங்கியது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் தினமும் சிறப்பு பிரார்த்தனைகள் நடந்து வருகின்றன. அதுபோன்று கிறிஸ்தவர்கள் பல்வேறு புனித ஸ்தலங்களுக்கு யாத்திரைகளும் மேற்கொண்டு வருவதுடன், ஆதரவற்றோர், அனாதை இல்லங்களுக்கும் சென்று உதவிகள் செய்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வால்பாறை தூய இருதய தேவாலயத்தின் பங்கு மக்கள் இணைந்து கருமலை எஸ்டேட் பகுதியில் உள்ள கருமலை வேளாங்கண்ணி மாதா திருத்தலத்திற்கு தவக்கால பரிகார பவனி மேற்கொண்டனர். இந்த பவனியின்போது ஏசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை தியானிக்கும் 14 நிலைகளை தியானித்து சென்றனர். இந்த பவனியின் முடிவில் கருமலை வேளாங்கண்ணி திருத் தலத்தில் பங்கு குருக்கள் மரியஜோசப், ரஞ்சித் ஆகியோர் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. இதில் வால்பாறை முடீஸ் சோலையார் நகர் ரொட்டிக்கடை பகுதிகளை சேர்ந்த கிறிஸ்தவர்கள் பலர் கலந்து கொண்டனர்.
    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    பூலோக வைகுண்டம் எனப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் கோரதம் எனப்படும் பங்குனி தேர்த்திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. கொடியேற்றத்தையொட்டி நம்பெருமாள் மூலஸ்தானத்திலிருந்து புறப்பட்டு கொடியேற்ற மண்டபத்திற்கு அதிகாலை 3.30 மணிக்கு வந்து சேர்ந்தார்.

    பின்னர் கொடிப்படம் புறப்பாடும், சிறப்பு பூஜைகளுடன் காலை 5.30 மணிக்கு கும்ப லக்னத்தில் கொடியேற்றமும் நடைபெற்றது. பின்னர் அங்கிருந்து நம்பெருமாள் புறப்பட்டு காலை 6 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார்.

    இதைத்தொடர்ந்து மாலை 6.30 மணிக்கு நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திரு சிவிகையில் புறப்பட்டு சித்திரை வீதிகளில் வலம் வந்தார். இரவு 9 மணிக்கு யாகசாலையில் திருமஞ்சனம் கண்டருளினார். இவ்விழா வருகிற 30-ந்தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது.

    திருவிழாவை முன்னிட்டு உற்சவர் நம்பெருமாள் தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருவார். விழாவின் 2-ம் நாளான இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 8 மணிக்கு நம்பெருமாள் கருடமண்டபத்தில் எழுந்தருளுகிறார். பின்னர் இரவு 9 மணியளவில் நம்பெருமாள் புறப்பாடாகி, வழிநடை உபயங்கள் கண்டருளியபடி நாளை (திங்கட்கிழமை) காலை 11 மணிக்கு ஜீயபுரம் ஆஸ்தானமண்டபம் சென்றடைகிறார். அங்கு மாலை வரை பக்தர்களுக்கு காட்சியளிப்பார். பின்னர் அங்கிருந்து மாலை 5.30 மணிக்கு நம்பெருமாள் புறப்பட்டு இரவு 10 மணியளவில் ஸ்ரீரங்கம் கோவில் கண்ணாடி அறையை வந்தடைகிறார்.

    23-ந்தேதி தங்க கருடவாகனத்திலும், 24-ந்தேதி நம்பெருமாள் காலை சேஷவாகனத்திலும், மாலை கற்பவிருட்ச வாகனத்திலும் சித்திரை வீதிகளில் உலா வருகிறார். பங்குனி உற்சவத்தின் சிறப்பு நிகழ்ச்சிகளில் ஒன்றாக வரும் 25-ந்தேதி அதிகாலை 3.30 மணியளவில் நம்பெருமாள் கண்ணாடி அறையிலிருந்து புறப்பட்டு காவிரிக்கரையைக் கடந்து உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலை பகல் 11 மணியளவில் சென்றடைகிறார். அங்கு பகல் 2 மணி முதல் இரவு 12 மணி வரை கமலவல்லி நாச்சியாருடன் சேர்ந்திருந்து பக்தர்களுக்கு பெருமாள்-தாயார் சேர்த்தி சேவையாக காட்சியளிப்பார்.

    26-ந்தேதி நம்பெருமாள் உபயநாச்சியார்களுடன் திரு சிவிகையில் புறப்பட்டு கோவில் திரு ்கொட்டாரத்தில் நெல்லளவு கண்டருளுகிறார். 27-ந்தேதி நம்பெருமாள் குதிரை வாகனத்தில் எழுந்தருளி சித்திரை வீதிகளில் வலம் வந்து கோரதம் (பங்குனிதேர்) அருகே இரவு 8.45 மணியளவில் வையாளி கண்டருளுகிறார். வருகிற 28-ந்தேதி பங்குனி உத்திர தினத்தன்று ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் நம்பெருமாள் ரெங்கநாச்சியார் சேர்த்தி சேவை நடைபெறுகிறது.

    நம்பெருமாள் ரெங்கநாயகி தாயார் சேர்த்திசேவை 28-ந்தேதி மாலை 3 மணிக்கு தொடங்கி மறுநாள் அதிகாலை வரை ரெங்கநாதர் கோவில் தாயார் சன்னதி சேர்த்தி மண்டபத்தில் நடைபெறும். முன்னதாக அன்று மதியம் பெருமாள்-தாயார் ஊடல் நிகழ்ச்சியும், அதனைத் தொடர்ந்து பிரணயகலகம் எனப்படும் மட்டையடி வைபவம் ஆகியவை தாயார் சன்னதி முன்மண்டபத்தில் நடைபெறும். திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் வரும் 29-ந்தேதி நடைபெறுகிறது.

    அன்று அதிகாலை ஏகாந்தசேவை முடிந்த பின்னர் நம்பெருமாள் தாயார் சன்னதியில் இருந்து காலை 5.45 மணிக்கு புறப்பட்டு கோரதத்துக்கு (தேருக்கு) வருகிறார். காலை 7.30 மணிக்கு ரதாரோஹணம் நடைபெறுகிறது. பின்னர் காலை 8 மணிக்கு தேரோட்டம் நடைபெறுகிறது. 30-ந்தேதி ஆளும் பல்லக்கில் நம்பெருமாள் சித்திரை வீதிகளில் வலம் வந்து பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். அன்றுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது. இந்தக் கோவிலானது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் வடபத்ரசாயி பெருமாள் கோவில் உள்ளது. இவருக்குத்தான் ஆண்டாள் தன் மாலையை சூடி கொடுத்தாள், என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றது. இங்கு அமைந்துள்ள கோபுரம் 196 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது.

    தமிழக அரசின் ராஜகோபுரத்தில் இந்த முத்திரை இடம்பெற்றுள்ளது, இதற்கான தனிச்சிறப்பு. கோவிலின் இரண்டாம் பகுதி ஆண்டாள் சந்நிதி. இங்கு உள்ள கல்வெட்டுகளில் ‘சூடிக்கொடுத்த நாச்சியார் கோவில்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலில் உற்சவர் ஆண்டாளுக்கு சுத்தப்படும் மாலையில் கிளி அணிவிக்கப்படுகிறது. இந்தக் கிளியை உருவாக்குவதற்கு ஒரு வம்சாவழியினர் உள்ளனர். மரவள்ளிக்கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் இவற்றைக்கொண்டு தினம்தோறும் ஆண்டாளுக்கு கிளியை செய்துவருகிறார்கள். மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்த்ததாக கூறப்படும் கண்ணாடி கிணறு இன்று உண்டியல் ஆக பயன்படுத்தப்படுகிறது.

    திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது வாரம் சனிக்கிழமை அன்று இங்கு உள்ள ஆண்டாள் சூடிய மாலையை எடுத்து சென்று பெருமாளுக்கு அணிவிக்கின்றனர். அதேபோல் ஆண்டாளின் திருக்கல்யாணத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து பட்டுப்புடவை வருகிறது.

    தல வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியை ராணி மல்லி என்பவர் ஆட்சி செய்து வந்தார். ராணி மல்லிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் காட்டிற்கு வேட்டையாட சென்றார்கள். அந்த சமயம் கண்டன் என்ற மகன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாத ராணி மல்லி தனது மகன் என்ன ஆனார், என்று காட்டில் தேடிக் கொண்டே இருந்தார்.

    வெகுநேரம் தேடி கலைத்த பின்பு சிறிது நேரம் உறங்கி விட்டார். அவரது கனவில் கடவுள் வந்து கண்டனுக்கு என்ன ஆயிற்று என்பதை விளக்கினார். உண்மையை புரிந்து கொண்ட மல்லி அந்த காட்டை சீரமைத்து சுத்தம் செய்ததினால், அந்த காடானது, ஒரு அழகான நகரமாக மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த நகரம் வில்லிபுத்தூர் என்ற பெயர் கொண்டது.

    இந்த வில்லிபுத்தூரில் தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் ஒரு நாள் பெருமாளுக்கு சாப்பிடுவதற்காக வைத்திருந்த பூவை அவள் தன் தலையில் சூடிக்கொண்டு அழகு பார்த்த பின்பு பெருமாளுக்கு அணிவிக்க கொடுத்திருக்கின்றார். இதனை அறியாத பெரிய ஆழ்வார் பெருமாளுக்கு அந்த பூவை சூட்டி விட்டார். ஒரு முறை பூவில் தலைமுடி இருந்ததை அறிந்த பெரியாழ்வார், அந்த பூவினை தவிர்த்துவிட்டு, புதிய பூவை பெருமாளுக்கு சூட்டினார்.

    அந்த சமயத்தில் ஆழ்வார் முன்னே தோன்றிய பெருமாள், கோதையின் கூந்தலில் சூடிய பூவைதான் நான் சூடிக் கொள்வேன் என்று அவரிடம் கூறினார். இன்றும் கூட ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலை, மறுநாள் காலையில் வடபெரும் கோவிலில் உள்ள பெருமாளுக்கு சாத்தப்படுகிறது. இந்த நகரத்தில் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் அவதாரம் எடுத்து பிறந்ததன் காரணமாக இது ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. திரு என்ற அடைமொழியை கொண்டு திருவில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

    திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியறிவு, வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இந்த திருத்தலத்திற்கு வந்து மக்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.

    தரிசன நேரம்:

    காலை 6AM-11 மணி வரை
    மாலை 4PM-8 மணி வரை.

    செல்லும் வழி

    மதுரையிலிருந்து 74 கிலோ மீட்டர் தூரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்.

    முகவரி:


    அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில்,
    ஸ்ரீவில்லிபுத்தூர் 626 125,
    விருதுநகர் மாவட்டம்.
    தொலைபேசி எண் +91-4563-260-254.
    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலுக்கு எதிரே 54 அடி உயரம் கொண்ட கருட ஸ்தம்பம் உள்ளது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.இது காண்பவரின் மனதை கவரும் வண்ணம் கமபீரமாக இருக்கிறது.
    மன்னார்குடி ராஜகோபாலசாமி கோவிலுக்கு எதிரே 54 அடி உயரம் கொண்ட கருட ஸ்தம்பம் உள்ளது. இது ஒரே கல்லில் செதுக்கப்பட்டது.இது காண்பவரின் மனதை கவரும் வண்ணம் கமபீரமாக இருக்கிறது. கம்பத்தின் மேல் தளத்தில் கருடனுக்கு அழகிய கோவில் உள்ளது. ருக்மணி, சத்யபாமாவுடன் உற்சவமூர்த்தியாக காட்சி அளிக்கும் வித்யா ராஜகோபாலனுக்கு ராஜமன்னார்கோபாலன் என்ற திருப்பெயரும் உண்டு.

    ஒரு காதில் குண்டலமும்,ஒரு காதில் தோடும் அணிந்து வித்யா ராஜகோபாலன் என்ற திருப்பெயரோடு ஒரு வஸ்திரத்தில் இடுப்பில் கச்சம், தலையில் சிறு முண்டாசு, வலது கரத்தில் பொன் சாட்டையுடன் மாடு கன்றுகளுடன் இடையர் உருவத்தில் நின்ற திருக்கோலத்துடன் காட்சியளிக்கிறார். இங்கு தாயாருக்கு தனிச்சன்னதி உள்ளது. தாயார் மூலவர் செண்பகலட்சுமி.

    உற்சவர் செங்கமலத்தாயார். இக்கோவிலில் பெருமாள்,தாயார் சன்னதி உள்பட 24 சன்னதிகள் உள்ளன.

    இந்த தகவல்களை மன்னர்குடி கணினிஆசிரியர் என்.ராஜப்பா தெரிவித்தார்.

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் திருக்கல்யாணம் வருகிற 28-ஆம் தேதி நடக்கிறது. மேலும் அன்றைய தினம் ஆண்டாள் கோவில் செப்புத் தேரோட்டம் நடக்க உள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் ரெங்கமன்னார் கோவிலில் பல்வேறு விழாக்கள் விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம்.

    இதில் முக்கியமானது ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண விழா. இந்த ஆண்டு இந்த விழா இன்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரவிச்சந்திரன், செயல் அலுவலர் இளங்கோவன் மற்றும் பணியாளர்கள் செய் திருந்தனர். கொடி யேற்ற விழாவில் பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

    திருக்கல்யாணம் நடை பெறுவதற்காக கோவிலில் நிரந்தரமாக உள்ள ஆடிப்பூர கொட்டகையில் உள் அலங்கார பந்தல் அமைக்கும் பணி நடந்து வருகிறது. ஆண் பெண் பக்தர்கள் தனித்தனியாக அமரும் வகையில் தடுப்பு கட்டைகள் அமைக் கப்படு கின்றன.

    திருக்கல்யாண விழா கொடியேற்றத்துடன் தொடங்கியதை தொடர்ந்து தினமும் ஆண்டாள்- ரெங்கமன்னார் பல்வேறு அலங்காரங்களில் காட்சிய ளிக்கின்றனர்.

    வீதி உலாவின் போது மண்டபங்களில் எழுந்தருளி அருள்பாலிக்கின்றனர். முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் வருகிற 28ஆம் தேதி இரவு நடக்கிறது அன்று இரவு 7 மணியில் இருந்து 8 மணிக்குள் திருக்கல்யாணம் நடைபெற உள்ளது.

    மேலும் அன்றைய தினம் காலை ஆண்டாள் கோவில் செப்புத் தேரோட்டம் நடக்க உள்ளது.
    குமரியின் குருவாயூர் என அழைக்கப்படும் பறக்கை மதுசூதன பெருமாள் கோவிலில் பங்குனி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 28-ந்தேதி தெப்பத் திருவிழா நடக்கிறது.
    குமரியின் குருவாயூர் என பறக்கை மதுசூன பெருமாள் கோவில் அழைக்கப்படுகிறது. இந்த கோவிலில் தங்கத்தாலான கொடிமரம் அமைக்கப்பட்டுள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா 10 நாட்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதேபோல் இந்த ஆண்டுக்கான பங்குனி திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதையொட்டி அதிகாலை 5 மணிக்கு கணபதி ஹோமம், காலை 7.30 மணி அளவில் கொடி பட்டம் மேளதாளத்துடன் நான்கு ரத வீதிகள் வழியே ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வரப்பட்டு கொடியேற்ற நிகழ்ச்சி நடந்தது. 8.50 மணிக்கு மாத்தூர் மடம் தந்திரி சங்கரநாராயணரூ தலைமையில் திருவிழா கொடி ஏற்றப்பட்டு, கொடி பீடத்திற்கு சிறப்பு பூஜை, அலங்கார தீபாராதனை நடந்தது.

    நிகழ்ச்சியில் பறக்கை ஊராட்சி மன்ற தலைவி கோசலை, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சிதம்பரம், கோவில் நிர்வாகிகள், மதுசூதன பெருமாள் சேவா சங்க நிர்வாகிகள் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். தொடர்ந்து தேர்களுக்கு கால்நாட்டு விழா நடந்தது.

    விழா நாட்களில் தினமும் வாகன பவனி, சமய சொற்பொழிவு, பக்தி இன்னிசை, அலங்கார தீபாராதனை, தோல் பாவைக்கூத்து போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவில் 23-ந்தேதி இரவு 7 மணிக்கு கருடனுக்கு கண்திறந்து பெருமாள் காட்சி அருளல் நிகழ்ச்சி, 27-ந்தேதி காலை 8 மணிக்கு மேல் தேரோட்ட நிகழ்ச்சி, பகல் 12 மணிக்கு அன்னதானம், இரவு 9 மணிக்கு சப்த வர்ணம், 9.30 மணிக்கு சாமி வெள்ளி கருட வாகனத்தில் வேட்டைக்கு எழுந்தருளல், 10-ம் திருவிழாவான 28-ந்தேதி பிற்பகல் 3 மணிக்கு வெள்ளி கருட வாகனத்தில் ஆறாட்டு துறைக்கு சாமி எழுந்தருளல், இரவு 11 மணிக்கு தெப்பத் திருவிழா ஆகியவை நடக்கிறது.

    திருவிழா ஏற்பாடுகளை குமரி மாவட்ட கோவில்நிர்வாகம், மதுசூதன பெருமாள் சேவா சங்கத்தினரும் இணைந்து செய்து வருகின்றனர்.
    திருவனந்தபுரம் கரிக்ககம் சாமுண்டி கோவில் பொங்கல் விழா இன்று தொடங்குகிறது. பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு 26-ந்தேதி நடக்கிறது.
    கேரளாவில், 600 ஆண்டுகளுக்கு மேல் பழமையான கோவில்களில் ஒன்றாக திருவனந்தபுரத்தில் உள்ள கரிக்ககம் சாமுண்டி கோவில் விளங்கி வருகிறது. இங்கு வரும் பக்தர்களுக்கு கேட்ட வரம் தரும் புண்ணிய ஸ்தலமாகவும் விளங்குகிறது. மன்னர்கள் ஆண்ட காலம் முதல் இன்று வரையும் சத்தியத்துக்கு சாட்சியாக விளங்கி வருகிறது.

    இந்த கோவிலில் பல வழக்குகள் சத்தியம் செய்வதன் மூலம் உண்மை நிரூபிக்கப்பட்டு வழக்குகள் தீர்த்து வைக்கப்பட்டு வருகிறது. குற்றவாளியும், குற்றம் சாட்டியவரும் கோவில் குளத்தில் நீராடி சாமுண்டி தேவிக்கு காணிக்கை செலுத்தி, விளக்கேற்றி தீபத்தின் மீது சத்தியம் செய்வார்கள். பொய் சத்தியம் செய்பவர்கள் சாமுண்டியால் தண்டிக்கப்படுவார்கள் என்று நம்பப்படுவதால், யாரும் பொய்யான சத்தியத்தை கூற முன்வருவதில்லை.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகளுக்குரிய கரிக்ககம் சாமுண்டி கோவிலின் பொங்கல் திருவிழா இன்று (சனிக்கிழமை) தொடங்குகிறது. இதைெயாட்டி இன்று மாலை 5 மணிக்கு குருபூஜையுடன் விழா தொடங்குகிறது.

    விழா நாட்களில் தினமும் அதிகாலை 4.20 மணிக்கு நடை திறக்கப்பட்டு பள்ளியுணர்த்தல், நிர்மால்ய தரிசனம், சிறப்பு பஞ்சாமிர்த அபிஷேகம், எதிர்த்த பூஜை, பந்தீரடி பூஜை மற்றும் வழக்கமான பூஜைகள், வழிபாடுகள், கலைநிகழ்ச்சிகள், இரவு 11 மணிக்கு நடை அடைக்கப்படும்.

    விழாவில் 25-ந்தேதி மாலை 5 மணிக்கு தங்க ரதத்தில் தேவி ஊர்வலம், 26-ந்தேதி காலை 10.15 மணிக்கு பிரசித்தி பெற்ற பொங்கல் வழிபாடு, பிற்பகல் 2.15 மணிக்கு பொங்கல் நிவேத்யம், இரவு அத்தாள பூஜை, குருசி சமர்ப்பணத்துடன் விழா நிறைவு பெறுகிறது.

    கொரோனா கட்டுப்பாடுகள் காரணமாக கோவில் வளாகம் மற்றும் பொது இடங்களில் பொங்கல் படைத்து வழிபட தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பக்தர்கள் அவரவர் வீடுகளில் பொங்கல் படைத்து வழிபாடு நடத்தலாம் என அறிவிக்கபட்டுள்ளது.

    விழாவையொட்டி கரிக்ககம் சாமுண்டி கோவில் அறக்கட்டளை சார்பில் வழங்கப்படும் கரிக்ககத்தம்மா விருது இந்த ஆண்டு பிரபல மலையாள கவிஞர் வி.மதுசூதனன் நாயருக்கு வழங்கப்படுகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை அறக்கட்டளை நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    காரைக்கால் கைலாசநாதர் கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். 31-ந் தேதி தெப்ப உற்சவம் நடைபெறவுள்ளது.
    காரைக்காலில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள் பிரம்மோற்சவ விழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். கடந்த ஆண்டு கொரோனா பரவலால் இந்த விழா தடைபட்டது.

    இந்த ஆண்டு இவ்விழாவை சிறப்பாக நடத்த வேண்டும் என உபயதாரர்கள் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. அதன்படி இந்த ஆண்டு பிரம்மோற்்சவ விழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    இதனையொட்டி, சாமிகளுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு கொடி கம்பத்தின் அருகே நிலை நிறுத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளுக்கு பின்னர் கொடி கம்பத்தில் சிவாச்சாரியார்கள் ரிஷப கொடியை ஏற்றி வைத்தனர்.

    தொடர்ந்து, பால், தயிர், மஞ்சள், சந்தனம் உள்ளிட்ட வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. பின்னர் பஞ்சமூர்த்திகளான விநாயகர், சுப்பிரமணியர், கைலாசநாதர், சுந்தரம்பாள், சண்டிகேஸ்வரர் வீதியுலா புறப்பாடு நடந்தது.

    விழா முடிவடையும் வரை தினமும் காலை பஞ்சமூர்ர்த்திகள் அபிஷேகமும், மாலை பல்வேறு வாகனங்களில் சுவாமி திருவீதியுலாவும் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்ச்சிகளாக வருகிற 23-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) வெள்ளி ரிஷப வாகனத்தில் சகோபுர வீதியுலா (தெருவடைச்சான் சப்பரப்படல்) நடைபெறவுள்ளது. 25-ந் தேதி(வியாழக்கிழமை)திருக்கல்யாண நிகழ்ச்சியும், 27-ந்தேதி(சனிக்கிழமை) தேரோட்டமும், 30-ந்தேதி(செவ்வாய்க்கிழமை) அம்மையார் ஐக்கிய விழாவும், 31-ந் தேதி(புதன்கிழமை) தெப்ப உற்சவமும் நடைபெறவுள்ளது.
    ×