search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்
    X
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

    1000 ஆண்டுகள் பழமையான ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது.
    ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் 1000 ஆண்டுகள் பழமையானது. பெரியார் மற்றும் ஆண்டாள் அவதரித்த திருத்தலம். 108 திவ்யதேசங்களில் ஒன்றான வைணவ கோவிலுக்கான சிறப்பையும் இது பெற்றுள்ளது. இந்தக் கோவிலானது இரண்டு பகுதிகளைக் கொண்டது. முதல் பகுதியில் வடபத்ரசாயி பெருமாள் கோவில் உள்ளது. இவருக்குத்தான் ஆண்டாள் தன் மாலையை சூடி கொடுத்தாள், என்று குருபரம்பரை நூல்கள் கூறுகின்றது. இங்கு அமைந்துள்ள கோபுரம் 196 அடி உயரமும் 11 அடுக்குகளையும் கொண்டது.

    தமிழக அரசின் ராஜகோபுரத்தில் இந்த முத்திரை இடம்பெற்றுள்ளது, இதற்கான தனிச்சிறப்பு. கோவிலின் இரண்டாம் பகுதி ஆண்டாள் சந்நிதி. இங்கு உள்ள கல்வெட்டுகளில் ‘சூடிக்கொடுத்த நாச்சியார் கோவில்’ என்ற பெயர் இடம்பெற்றுள்ளது. இந்த கோவிலில் உற்சவர் ஆண்டாளுக்கு சுத்தப்படும் மாலையில் கிளி அணிவிக்கப்படுகிறது. இந்தக் கிளியை உருவாக்குவதற்கு ஒரு வம்சாவழியினர் உள்ளனர். மரவள்ளிக்கிழங்கு இலைகள், மாதுளம் பூக்கள் இவற்றைக்கொண்டு தினம்தோறும் ஆண்டாளுக்கு கிளியை செய்துவருகிறார்கள். மாலையை அணிந்து ஆண்டாள் அழகு பார்த்ததாக கூறப்படும் கண்ணாடி கிணறு இன்று உண்டியல் ஆக பயன்படுத்தப்படுகிறது.

    திருப்பதியில் உள்ள வெங்கடேச பெருமாளுக்கு புரட்டாசி மூன்றாவது வாரம் சனிக்கிழமை அன்று இங்கு உள்ள ஆண்டாள் சூடிய மாலையை எடுத்து சென்று பெருமாளுக்கு அணிவிக்கின்றனர். அதேபோல் ஆண்டாளின் திருக்கல்யாணத்திற்கு திருப்பதி வெங்கடாஜலபதி கோவிலில் இருந்து பட்டுப்புடவை வருகிறது.

    தல வரலாறு பல நூற்றாண்டுகளுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ஒரு பகுதியை ராணி மல்லி என்பவர் ஆட்சி செய்து வந்தார். ராணி மல்லிக்கு வில்லி மற்றும் கண்டன் என்ற இரு மகன்கள் இருந்தனர். ஒரு நாள் அவர்கள் காட்டிற்கு வேட்டையாட சென்றார்கள். அந்த சமயம் கண்டன் என்ற மகன் ஒரு புலியால் கொல்லப்பட்டார். இந்த உண்மை தெரியாத ராணி மல்லி தனது மகன் என்ன ஆனார், என்று காட்டில் தேடிக் கொண்டே இருந்தார்.

    வெகுநேரம் தேடி கலைத்த பின்பு சிறிது நேரம் உறங்கி விட்டார். அவரது கனவில் கடவுள் வந்து கண்டனுக்கு என்ன ஆயிற்று என்பதை விளக்கினார். உண்மையை புரிந்து கொண்ட மல்லி அந்த காட்டை சீரமைத்து சுத்தம் செய்ததினால், அந்த காடானது, ஒரு அழகான நகரமாக மாறிவிட்டது. இதன் காரணமாக அந்த நகரம் வில்லிபுத்தூர் என்ற பெயர் கொண்டது.

    இந்த வில்லிபுத்தூரில் தான் ஆண்டாள் பிறந்து வளர்ந்ததாகவும் கூறப்படுகிறது. பெரியாழ்வாரின் மகள் ஆண்டாள் ஒரு நாள் பெருமாளுக்கு சாப்பிடுவதற்காக வைத்திருந்த பூவை அவள் தன் தலையில் சூடிக்கொண்டு அழகு பார்த்த பின்பு பெருமாளுக்கு அணிவிக்க கொடுத்திருக்கின்றார். இதனை அறியாத பெரிய ஆழ்வார் பெருமாளுக்கு அந்த பூவை சூட்டி விட்டார். ஒரு முறை பூவில் தலைமுடி இருந்ததை அறிந்த பெரியாழ்வார், அந்த பூவினை தவிர்த்துவிட்டு, புதிய பூவை பெருமாளுக்கு சூட்டினார்.

    அந்த சமயத்தில் ஆழ்வார் முன்னே தோன்றிய பெருமாள், கோதையின் கூந்தலில் சூடிய பூவைதான் நான் சூடிக் கொள்வேன் என்று அவரிடம் கூறினார். இன்றும் கூட ஆண்டாளுக்கு சாத்தப்படும் மாலை, மறுநாள் காலையில் வடபெரும் கோவிலில் உள்ள பெருமாளுக்கு சாத்தப்படுகிறது. இந்த நகரத்தில் திருமகளே தெய்வீக குழந்தையாக ஆண்டாள் அவதாரம் எடுத்து பிறந்ததன் காரணமாக இது ஸ்ரீவில்லிபுத்தூர் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வருகிறது. திரு என்ற அடைமொழியை கொண்டு திருவில்லிபுத்தூர் என்றும் அழைக்கப்பட்டு வருகிறது.

    திருமண வரம், குழந்தை பாக்கியம், கல்வியறிவு, வியாபாரத்தில் முன்னேற்றம், குடும்பத்தில் ஐஸ்வர்யம் கிடைக்க, விவசாயம் செழிக்க இந்த திருத்தலத்திற்கு வந்து மக்கள் வேண்டிக் கொள்கிறார்கள்.

    தரிசன நேரம்:

    காலை 6AM-11 மணி வரை
    மாலை 4PM-8 மணி வரை.

    செல்லும் வழி

    மதுரையிலிருந்து 74 கிலோ மீட்டர் தூரத்தில், விருதுநகர் மாவட்டத்தில் உள்ளது ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆண்டாள் கோவில்.

    முகவரி:


    அருள்மிகு ஆண்டாள் திருக்கோயில்,
    ஸ்ரீவில்லிபுத்தூர் 626 125,
    விருதுநகர் மாவட்டம்.
    தொலைபேசி எண் +91-4563-260-254.
    Next Story
    ×