என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. "அரோகரா" கோஷம் முழங்க திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.
    தமிழ்க்கடவுள் முருகப்பெருமானின் 3-ம்படைவீடான பழனியில், தைப்பூசம், பங்குனி உத்திரம், திருக்கார்த்திகை உள்ளிட்ட திருவிழாக்கள் வெகுவிமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது.

    இதில், தைப்பூச திருவிழாவையொட்டி பாதயாத்திரையாகவும், பங்குனி உத்திர திருவிழாவையொட்டி தீர்த்தக்காவடி எடுத்தும் பக்தர்கள் வருவது சிறப்பு அம்சம் ஆகும்.

    கோடைக்காலமான பங்குனி, சித்திரை, வைகாசி மாதங்களில் பழனி மலைக்கோவிலில் அருள்பாலிக்கும் முருகப்பெருமானை குளிர்விக்கும் பொருட்டு, பக்தர்கள் விரதம் இருந்து கொடுமுடி காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தக்காவடி எடுத்து பழனியாண்டவருக்கு அபிஷேகம் செய்து வழிபடுவார்கள்.

    கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நடைபெறவில்லை. ஆனால் ஆகமவிதிப்படி பூஜைகள் மட்டும் நடைபெற்றது.

    இந்தநிலையில் இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா வருகிற 28-ந்தேதி நடைபெறுகிறது. இதையொட்டி பங்குனி உத்தர திருவிழா பழனி திருஆவினன்குடி கோவிலில் நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. மேலும் நேற்று முன்தினம் இரவு கிராமசாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, அஸ்திரதேவர் உலா ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதேபோல் நேற்று காலை திருஆவினன்குடி கோவிலில் விநாயகர் பூஜை, புண்ணியாக வாஜனம், கொடிப்பட பூஜை நடந்தது.

    முன்னதாக முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு பால், பழம், பன்னீர், சந்தனம், பஞ்சாமிர்தம் என 16 வகையான பொருட்களால் அபிஷேகம் நடைபெற்றது. அதன்பிறகு சிறப்பு அலங்காரத்தில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் சப்பரத்தில் வந்து கொடிமண்டபம் முன்பு எழுந்தருளினார். அதையடுத்து விநாயகர் சிலை முன்பு மயூரயாகம், வாத்திய பூஜைகள் நடந்தது.

    இதைத்தொடர்ந்து காலை 9.45 மணிக்கு மேல் வேதமந்திரங்கள் முழங்க தங்கக்கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. அப்போது அங்கு திரளாக இருந்த பக்தர்கள் வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா... வீர வேல் முருகனுக்கு அரோகரா... என சரண கோஷங்களை எழுப்பினர்.

    பின்னர் ஓதுவார்கள் திருமுறை பாடியதை அடுத்து கொடிமரம், முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானைக்கு தீபாராதனை நடைபெற்றது.

    இதைத்தொடர்ந்து பகல் 12.30 மணிக்கு மேல் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானையுடன் அடிவாரம் பட்டக்காரர் மடத்தில் எழுந்தருளினார். அங்கு பங்குனி உத்திர முதல் நாள் மண்டகப்படி நடைபெற்றது.

    பின்னர் இரவு 8 மணிக்கு மேல் சன்னதி வீதி, கிரிவீதிகளில் முத்துக்குமாரசாமி, வள்ளி-தெய்வானை உலா நடந்தது. பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு பழனி மலைக்கோவிலில் நேற்று பகல் 12 மணிக்கு உச்சிக்கால பூஜையில் மூலவருக்கு 16 வகை அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது.

    பின்னர் மூலவர் சன்னதியில் உள்ள விநாயகர், மூலவருக்கு காப்புகட்டு நடைபெற்று தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து சண்முகர், உற்சவர், துவார பாலகர்கள், மயில்வாகனம் மற்றும் பெரியநாயகி அம்மன் கோவிலில் முருகப்பெருமான், சிவன், பெரியநாயகிஅம்மன், நடராஜர், சிவகாமி அம்மன் ஆகியோருக்கு காப்புகட்டு நடந்தது.

    திருவிழாவின் 6-ம் நாளான 27-ந்தேதி திருக்கல்யாணமும், 28-ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை பழனி கோவில் நிர்வாகம் மற்றும் பூஜை முறைகளை பட்டத்து குருக்கள் அமிர்தலிங்கம், செல்வசுப்பிரமணியம் ஆகியோர் செய்து வருகின்றனர்.
    மார்ச் மாதம் 23-ம் தேதியில் இருந்து மார்ச் மாதம் 29-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    23-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * வளர்பிறை நவமி
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - கேட்டை, மூலம்

    24-ம் தேதி புதன் கிழமை :
     
    * சுபமுகூர்த்தநாள்
    * ஸ்மார்த்த ஏகாதசி
    * சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்
     
    25-ம் தேதி வியாழக்கிழமை :

    * வைஷ்ணவ ஏகாதசி
    * ஏகாதசி
    * சந்திராஷ்டமம்- பூராடம், உத்திராடம்

    26-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * பிரதோஷம்
    * சந்திராஷ்டமம் - உத்திராடம். திருவோணம்

    27-ம் தேதி சனிக்கிழமை :

    * சிறிய நகசு
    * சந்திராஷ்டமம் -திருவோணம், அவிட்டம்

    28-ம் தேதி ஞாயிற்று கிழமை :

    *  பௌர்ணமி
    * பங்குனி உத்திரம்
    * கரிநாள்
    * சந்திராஷ்டமம் - அவிட்டம், சதயம்

    29-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - சதயம், பூரட்டாதி
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு சக்கரத்தாழ்வார் தீர்த்வாரி நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
    திருப்பதி கோதண்டராமசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா கடந்த 13-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி கோலாகலமாக நடந்து வந்தது. தினமும் காலை, மாலை இரு வேளை பல்வேறு வாகனச் சேவை நடந்தது. அதில் உற்சவர் கோதண்டராமர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் நிறைவு நாளான நேற்று காலை 7.30 மணியளவில் உற்சவர்களான சீதா, கோதண்டராமர், லட்சுமணர், ஆஞ்சநேயர் மற்றும் சக்கரத்தாழ்வாருக்கு மஞ்சள், குங்குமம், சந்தனம், பால், தயிர், தேன், பஞ்சாமிர்தம், இளநீர் ஆகிய சுகந்த திரவியங்களால் ஸ்நாபன திருமஞ்சனம் நடந்தது.

    இதையடுத்து சக்கரத்தாழ்வார் தீர்த்வாரி நிகழ்ச்சி நடந்தது. அதற்காக, கோவிலில் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த புனிதநீரில் சக்கரத்தாழ்வாரை மூன்று முறை மூழ்கி எடுத்து ஸ்நானம் செய்வித்தனர். பின்னர் உற்சவர்களுக்கு சிறப்புப்பூஜைகள் செய்யப்பட்டது.

    விழாவில் பெரிய ஜீயர் சுவாமிகள், சின்ன ஜீயர் சுவாமிகள், கோவில் சிறப்பு நிலைய துணை அதிகாரி பார்வதி, உதவி அதிகாரி துர்காராஜு, கோவில் கண்காணிப்பாளர் ரமேஷ், கோவில் ஆய்வாளர்கள் முனிரத்தினம், ஜெயக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    அதைத்தொடர்ந்து இரவு 8.30 மணியில் இருந்து இரவு 9.30 மணிவரை பிரம்மோற்சவ விழா கொடியிறக்க நிகழ்ச்சி நடந்தது. அத்துடன் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நிறைவடைந்தது.
    ஆரல்வாய்மொழி பரகோடிகண்டன் சாஸ்தா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
    ஆரல்வாய்மொழி பரகோடிகண்டன் சாஸ்தா மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் நேற்று அதிகாலை 4.30 மணிக்கு தேவாரம் நிகழ்ச்சி, 5.30 மணிக்கு கணபதி ஹோமம், சிறப்பு அபிஷேகம், காலை 9 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது.

    இதில் தோவாளை யூனியன் தலைவர் சாந்தினி பகவதியப்பன், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார், கோவில் மேல்சாந்தி கிருஷ்ணன் பட்டர், கவுரவ ஆலோசகர்கள் ஈஸ்வர பிள்ளை, சோலை கணபதிப்பிள்ளை, தாணுபிள்ளை, துணைத்தலைவர்கள் இசக்கியப்பன், மேகலிங்கம், செயலாளர் பெருமாள், பொருளாளர் விநாயகம் மற்றும் உறுப்பினர்கள் முத்துராமன், சங்கரலிங்கம், முத்துசுவாமி, வீரபாகு, சக்திகுமார் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து அன்னதானம், மாலை 6 மணிக்கு அப்பர் சுவாமி எழுந்தருளும் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு பரதநாட்டியம், 9 மணிக்கு சாஸ்தாவும், அம்பாளும் மற்றும் விநாயகரும் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் இன்று (திங்கட்கிழமை) சாஸ்தாவும், அம்பாளும் பந்தல் வாகனத்தில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சாஸ்தா மேஷ வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    மேலும் விழா நாட்களில் சிறப்பு அபிஷேகம், அன்னதானம், சிறப்பு ஹோமம், பக்தி சொற்பொழிவு, சுவாமி பவனி வருதல் போன்றவை நடைபெறுகிறது. 25-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு சாஸ்தா இந்திர வாகனத்திலும், அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வருதல், இரவு 9 மணிக்கு சுப்பிரமணியசாமி மயில் வாகனத்திலும், அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் பவனி வரும் நிகழ்ச்சி நடக்கிறது.

    26-ந் தேதி இரவு 10 மணிக்கு சாஸ்தா யானை வாகனத்திலும் அம்பாள் அன்ன வாகனத்திலும் பவனி வருதலும், 27-ந் தேதி காலை 5 மணிக்கு சுவாமியும் அம்பாளும், சாஸ்தாவும் அம்பாளும் பல்லக்கில் பவனி வருதல், இரவு 10 மணிக்கு சுவாமி கைலாச வாகனத்திலும் அம்பாள் கற்பக விருட்ச வாகனத்திலும், சாஸ்தா அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் 28-ந் தேதி 9 மணி முதல் சாஸ்தாவை குதிரை வாகனத்தில் எழுந்தருளச் செய்தல், இரவு 7.30 மணிக்கு நடராஜர் சிதம்பரேஸ்வரர் வாகனத்திலும், ஆறுமுக நயினார் பூப்பந்தல் வாகனத்திலும் பவனி வருதல், நள்ளிரவு 12 மணிக்கு பதி வேட்டைக்கு சாஸ்தா குதிரை வாகனத்திலும், அம்பாள் கிளி மற்றும் அன்ன வாகனத்திலும் பவனி வருதல் நிகழ்ச்சி நடக்கிறது.

    விழாவில் 29-ந் தேதி காலை 11 மணிக்கு மாடன் தம்புரான் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது.

    விழாவின் கடைசி நாளான 30-ந் தேதி காலை 8 மணிக்கு சுவாமியும் அம்பாளும் ரிஷப வாகனத்திலும், அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் ஆராட்டுக்கு எழுந்தருளல் நிகழ்ச்சி, இரவு 7 மணிக்கு நாட்டியாஞ்சலி நிகழ்ச்சி, 8 மணிக்கு சுவாமியும், அம்பாளும் ரிஷப வாகனத்திலும் அம்பாள் பூப்பந்தல் வாகனத்திலும் பவனி வந்து வாகனம் வீதி உலா வருதல் நடக்கிறது.

    விழாவுக்கான ஏற்பாட்டை கோவில் நிர்வாகம், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் பக்தர்கள் சேவா சங்க தலைவர் முத்துக்குமார் மற்றும் நிர்வாகிகள் விழாக்குழுவினர் செய்து உள்ளனர்.
    வடக்கு புற காளியம்மன் கோவில் பங்குனி திருவிழாவை முன்னிட்டு பக்தர்கள் அலகுகுத்தியும், பால் குடம் எடுத்து வந்தனர்.
    கொட்டாம்பட்டியில் உள்ள வடக்குபுற காளியம்மன் கோவில் பங்குனி திருவிழா ஆண்டு தோறும் பங்குனி மாதம் முதல் ஞாயிற்றுக்கிழமை காப்புகட்டுதல் நிகழ்ச்சி நடைபெறும். இந்தாண்டும் வழக்கம்போல் காப்பு கட்டும் நிகழ்ச்சி நடைபெற்று 8 நாட்கள் காப்பு கட்டிய பக்தர்கள் கடுமையான விரதம் மேற்கொண்டு நேற்று காலையில் கிராம தெய்வமான பொய்சொல்லா மெய் அய்யனார் கோவிலுக்கு சென்று சிறப்பு வழிபாடு செய்தனர்.

    பின்னர் பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி, அலகுகுத்தி வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பின்னர் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஊர்வலமாக புறப்பட்டு சிவக்களம். சின்னகொட்டாம்பட்டி, சந்தைபேட்டை, மந்தைதிடல் வழியாக சுமார் 5 கிலோமீட்டர் ஊர்வலமாக வந்து கோவிலை வந்தடைந்தனர்.

    மேலும் திருவிழாவை முன்னிட்டு கலை நிகழ்ச்சிகள் வாணவேடிக்்கை நடைபெற்றது. கொட்டாம்பட்டி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
    நாச்சியார்கோவில் சீனிவாசப்பெருமாள் கோவிலில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. நாளை(செவ்வாய்க்கிழமை) கல்கருட சேவை நடக்கிறது.
    கும்பகோணம் அருகேயுள்ள நாச்சியார்கோவிலில் சீனிவாசப்பெருமாள் கோவில் உள்ளது. இங்கு ஆண்டு தோறும் பங்குனி பிரம்மோற்சவ தேர் திருவிழா 11 நாட்களுக்கு நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா நேற்றுமுன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. அப்போது உற்சவர் பெருமாள் தாயாருடன் கொடிமரம் அருகே எழுந்தருளினார். பின்னர் கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கொடி ஏற்றி வைக்கப்பட்டது. கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனையும் காட்டப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழா நாட்களில் தினமும் பல்வேறு வாகனங்களில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக நாளை(செவ்வாய்க்கிழமை) மாலை கல்கருட சேவை நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற 28-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அதிகாரி ஜீவானந்தம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.
    பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகக் கடவுளைத் தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
    மங்கலங்கள் நிறைந்த மாதம் என்று பங்குனி மாதத்தைப் போற்றுவார்கள். புராணத்தில் குறிப்பிட்டிருக்கும் சகல மங்கல காரியங்களும் பங்குனி மாதத்தில்தான் பெரும்பாலும் அரங்கேறியிருக்கின்றன என்று போற்றுகின்றனர் ஆச்சார்யர்கள்.

    மலைமகள் உமையவளை சிவபெருமான் மணம் புரிந்த மாதம் பங்குனி என்கிறது புராணம். இந்த மாதத்தில் நாம் செய்கிற சின்னச் சின்ன தானங்கள் கூட மிகுந்த பலன்களைத் தரும் என்றும் ஆயிரம் பசுக்களை தானம் செய்த புண்ணியத்தைத் தருகிற மாதம் இது என்றும் சிலாகிக்கிறார்கள்.

    பங்குனி மாதத்தில் முறையே நாம் தெய்வ வழிபாடுகளைச் செய்து வந்தால், தடைகளெல்லாம் நீங்கும். வெற்றி தேடி வரும் என்பது ஐதீகம்! சிவனாருக்கு உகந்த மாதம் பங்குனி. அதேபோல் அரங்கனைப் போற்றுகின்ற மாதமாகவும் திகழ்கிறது பங்குனி மாதம். பங்குனி மாதத்தின் உத்திர நட்சத்திர நாள் ரொம்பவே விசேஷமானது. இந்த நாளில்தான் முருகப்பெருமானை விரதம் இருந்து தரிசிப்பார்கள் பக்தர்கள். அதேபோல், காவடி எடுத்தும் பால் குடம் ஏந்தியும் எண்ணற்ற பக்தர்கள் வழிபடுவார்கள்.

    பங்குனி மாத உத்திர நட்சத்திர நாளில் விரதம் இருந்து முருகக் கடவுளைத் தரிசித்தால், விரைவில் திருமண பாக்கியம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

    அதேபோல், பங்குனி மாதத்தில் தேய்பிறையில் வரும் ஏகாதசியை விஜயா ஏகாதசி என்பார்கள். எத்தனை தடைகள் இருந்தாலும் அவற்றையெல்லாம் நீக்கி, எடுத்த காரியத்தில் வெற்றியை அளிக்கக் கூடியது விஜயா ஏகாதசி. பங்குனி தேய்பிறை விஜயா ஏகாதசியில், பெருமாளை தரிசிப்பதும் துளசி மாலை சார்த்தி பிரார்த்தனை செய்வதும் மகத்தான பலன்களை வழங்கும். நாம் பெருமாளிடம் வைக்கிற கோரிக்கைகளெல்லாம் நிறைவேறும் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    ‘இலங்கை சென்று ராவணனுடன் போரிட்டு, சீதையை எப்படி மீட்பது?’ என்று ஸ்ரீராமர் சிந்தனையில் ஆழ்ந்தார். அப்போது முனிவர் ஒருவர் அவரிடம் இந்த விஜயா ஏகாதசி விரதத்தை அனுஷ்டிக்கச் சொன்னார். அதன்படி விரதம் இருந்து ஸ்ரீராமர், சீதையை மீட்டு வந்தார் என ஏகாதசி விரத மகாத்மியம் தெரிவிக்கிறது.

    விஜயா ஏகாதசி நன்னாளில், வாழை இலையில் ஏழு விதமான தானியங்களை (எள் சேர்க்கக் கூடாது என்பார்கள்) ஒன்றின் மேல் ஒன்றாகப் பரப்ப வேண்டும். அதன் மீது ஒரு கலசத்தை வைத்து, அதில் திருமாலின் திருவடியை வரைந்து வழிபட வேண்டும் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். இதனால் குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். தம்பதி இடையே விட்டுக்கொடுத்தலும் புரிந்து கொள்ளுதலும் அதிகமாகும். பிரிந்த தம்பதி கூட ஒன்று சேருவார்கள் என்பது ஐதீகம்.

    மறு நாள் துவாதசி அன்று, யாருக்கேனும் உணவுப் பொட்டலம் வழங்கினால், மகா புண்ணியம் என்றும் பூஜை செய்த கலசம் மற்றும் தானியங்களை ஆச்சார்யருக்கு வழங்கி நமஸ்கரித்தால், சகல ஐஸ்வரியங்களையும் கிடைக்கப் பெறலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள்.

    அதேபோல், பங்குனி மாதத்தில், குருவாரம் என்று அழைக்கப்படும் வியாழக்கிழமைகளில், சிவ வழிபாடு மேற்கொள்வதும் சிவகுருவாகத் திகழும் ஸ்ரீதட்சிணாமூர்த்தியை மனதார வழிபடுவதும் மகத்தான பலன்களைத் தந்தருளும்! 
    வலங்கைமான் மகா மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா நடைபெற்றது. இதில் கொரோனா காரணமாக பாடைக் காவடி எடுக்க தடை விதிக்கப்பட்டதால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    திருவாரூர் மாவட்டம், வலங்கைமானில் குடமுருட்டி ஆற்றின் தென்கரையில் வரதராஜன்பேட்டை தெரு பகுதியில் மகா மாரியம்மன் கோவில் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த கோவிலில் ஆண்டு தோறும் பங்குனி மாதத்தில் பாடைக் காவடி ்திருவிழா நடைபெறுவது வழக்கம்.

    இத்திருவிழாவின் போது ஆயிரக்கணக்கானோர் பாடைக்காவடி, அலகு காவடி, பன்னீர் காவடி, தொட்டில் காவடிகளை எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்துவார்கள்.லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்ளும் பாடைக்காவடி திருவிழா கடந்த ஆண்டு(2020) கொரோனா தொற்று காரணமாக நடைபெறவில்லை. மேலும் ஆவணி ஞாயிற்றுக்கிழமையில் நடைபெறும் தெப்பத் திருவிழாவும் நடைபெறவில்லை.

    இந்த நிலையில் இந்த ஆண்டு மகா மாரியம்மன் கோவிலில் பாடைக்காவடி திருவிழா கடந்த 5-ந்தேதி பூச்சொரிதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. இதை தொடர்ந்து 7-ந்தேதி முதல் காப்பு கட்டும் நிகழ்ச்சியும், 14-ந் தேதி இரண்டாம் காப்பு கட்டும் நிகழ்ச்சியும் நடத்தப்பட்டது.

    விழா நாட்களில் தினமும் காமதேனு, மயில் வாகனம் ரிஷபம், சிம்மம் மற்றும் வெள்ளி அன்ன வாகனம் உள்ளிட்ட வாகனங்களில் அம்மன் வீதி உலா நடை பெற்றது. முக்கிய திருவிழாவான பாடைக்காவடி திருவிழா நேற்று நடைபெற்றது. விழாவின் முக்கிய அம்சமான பாடைக்காவடிகளை பக்தர்கள் எடுத்து வர தடை விதிக்கப்பட்டது. தமிழகத்தில் மீண்டும் கொரோனா வைரஸ் தாக்கம் அதிகரித்துள்ள காரணத்தால் கூட்டம் கூடுவதை தவிர்க்கும் வகையில் பக்தர்கள் காவடி எடுத்து வர அரசு நிர்வாகம் தடை விதித்தது. இதனால் பக்தர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.

    திருவிழாவின்போது கோவிலில் இருந்து 100 மீட்டர் தொலைவிற்கு அர்ச்சனை உள்ளிட்ட கடைகளுக்கு அனுமதி இல்லை. பக்தர்கள்அர்ச்சனை செய்வதற்கும் தீபமேற்றி வழிபாடு நடத்தவும் அனுமதிக்கப்படவில்லை. 2 ஆண்டுகளாக பாடைக் காவடி எடுக்க முடியாததால் பக்தர்கள் ஏமாற்றத்துடன் சென்றனர். கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திக் தலைமையில் துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ராஜமோகன், இளங்கோவன், தாவித் அகமது மற்றும் இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 284 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இந்த பணியை திருவாரூர் போலீஸ் சூப்பிரண்டு கயல்விழி, பார்வையிட்டு ஆய்வு செய்தார். பேரூராட்சி சார்பில் குடிநீர், கழிவறை வசதி, சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தன.

    தொடர்ந்து நேற்று மாலை 6 மணி அளவில் கோவிலின் மற்றொரு முக்கிய விழாவான செடில் சுற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் குடமுருட்டி ஆற்றில் இருந்து கடம் புறப்பாடு நடைபெற்றது. முன்னதாக செம்மறி ஆடு பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் கோவிலில் முன்புறமாக நடப்பட்டிருந்த செடில் மரத்தில் செம்மறி ஆடு ஏற்றப்பட்டு மூன்று முறை வலம் வந்தது. முன்னதாக காலையில் மகா மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேக, அலங்காரம் செய்யப்பட்டு தங்க கவசம் அணிவிக்கப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது.இன்று(திங்கட்கிழமை) விடையாற்றி விழா நடைபெறுகிறது.

    திருவிழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் ரமேஷ், ஆய்வாளர் ரமணி, மேலாளர் சீனிவாசன், தலைமை அர்ச்சகர் செல்வம் உள்ளிட்ட கிராமத்தினர் செய்திருந்தனர். பாடைக்காவடி விழாவின் போது ஆண்டுதோறும் அரசு போக்குவரத்து கழகத்தால் பல்வேறு வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்படும் ஆனால் கொரோனா தொற்று மீண்டும் பரவி வருவதால் இந்த ஆண்டு சிறப்பு பஸ்கள் இயக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
    தவக்காலத்தையொட்டி வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை பேராலயத்திற்கு வெளியூர்களில் இருந்து பாத யாத்திரையாக ஆலயத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கை கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்திற்கு வெளிநாடு, வெளி மாநிலங்கள், வெளியூர்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். இது சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த ஆலயம் கீழை நாடுகளின் லூர்து நகர் என அழைக்கப்படுகிறது.வேளாங்கண்ணி பேராலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது சிறப்பம்சமாகும்.

    இவ்வாறு பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் பிப்ரவரி மாதம் 17-ந் தேதியில் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்பு பிரார்த்தனை நிகழ்ச்சிகள் நடைபெற்ற வண்ணம் உள்ளன.

    இதன் காரணமாக வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலா பயணிகள் வேளாங்கண்ணியில் குவிந்து வருகிறார்கள். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை தினம் என்பதால் வெளியூர் சுற்றுலா பயணிகளின் கூட்டம் மேலும் அதிகரித்து காணப்பட்டது. பேராலய வளாகம், கடற்கரை உள்ளிட்ட இடங்களில் ஏராளமானோர் கூடி இருந்தனர். வெளியூர்களில் இருந்து பாத யாத்திரையாக ஆலயத்துக்கு வருபவர்களின் எண்ணிக்கையும் கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது.
    திருநீர்மலையில் ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புன்சிரிப்புடன் காட்சி தரும் பெருமாளை தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைக்கூடும் என்பது ஐதீகம்.
    சென்னை பல்லாவரத்துக்கு அருகில் உள்ளது திருநீர்மலை. இங்கே உள்ள ரங்கநாத பெருமாள், மிகுந்த வரப்பிரசாதி. நீர்வண்ணப் பெருமாளும் கனிவும் கருணையும் கொண்டு அருள்பாலிக்கிறார்.

    ஸ்ரீதேவி பூதேவி சமேதராக புன்சிரிப்புடன் காட்சி தரும் பெருமாளை தரிசித்துப் பிரார்த்தனை செய்து வந்தால், விரைவில் திருமண பாக்கியம் கைக்கூடும் என்பது ஐதீகம். அருகில் உள்ள ஆண்டாளும் வரம் கொடுப்பவள்தான். வாழவைப்பவள்தான். மனமொத்த தம்பதியாகத் திகழவும் மனதுக்கு இதமானவர் கணவராக அமையவும் ஸ்ரீஆண்டாள் துணைபுரிகிறாள்.

    புதன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில், இங்கே வந்து, தாயாரை தரிசித்துவிட்டு, பள்ளியறைக்கு முன்னே ஒரு ஐந்துநிமிடம் நின்று மனதார வேண்டிக்கொண்டால், திருமண வரம் கொடுத்து அருளுவார் தாயார். மேலும் பிரிந்த தம்பதி ஒன்று சேருவார்கள் என்பது ஐதிகம்.

    தொடர்ந்து ஒன்பது புதன் கிழமையோ அல்லது சனிக்கிழமையோ இங்கு வந்து, திருநீர்மலை பெருமாளையும் தாயாரையும் துளசி மாலை சார்த்தியும் வெண்மை மலர்கள் சார்த்தியும் வேண்டிக்கொண்டு வந்தால், கடன் தொல்லையில் இருந்து மீளலாம். கவலைகளும் துக்கங்களும் காணாமல் போகும். வாழ்க்கையிலும் தொழிலிலும் உத்தியோகத்திலும் தடைப்பட்டிருந்த நிலையெல்லாம் மாற்றித் தந்தருளுவார் பெருமாள் என்று போற்றுகின்றனர் பக்தர்கள்.

    திருநீர்மலை திருத்தலத்துக்கு தொடர்ந்து வந்து, பெருமாளையும் தாயாரையும் மனதார வழிபடுவோம். மங்காத ஐஸ்வரியங்களையெல்லாம் தந்தருளுவார்கள் என்று போற்றுகின்றனர் ஆச்சார்யப் பெருமக்கள்.
    தொட்டியம் மதுரை காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. வருகிற 30-ந் தேதி திருத்தேர் தலைஅலங்காரம் நடைபெறுகிறது.
    திருச்சி மாவட்டம் தொட்டியம் நகரில் அமைந்துள்ள மதுரைகாளியம்மன் கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனிமாதம் பெருந் தேர் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    கடந்த ஆண்டு கொரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருவிழா ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு பங்குனி பெருந்தேர்திருவிழா கடந்த 17-ந் தேதி பூச்சொரிதல் விழாவுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு அமைப்புகள் சார்பில் மதுரைகாளி அம்மனுக்கு பூத்தட்டுகள் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பூச்சொரிதல் விழா நடைபெற்றது.

    வருகிற 23-ந்தேதி அம்மனுக்கு காப்பு கட்டும் நிகழ்ச்சியும், அதைத்தொடர்ந்து ஆயிரம் பானைகளில் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருத்தேர் தலையலங்காரம் வருகிற 30-ந் தேதி இரவு நடைபெறுகிறது. தொடர்ந்து வாணவேடிக்கை மற்றும் திருத்தேர் குடிபுகும் நிகழ்ச்சியும் மஞ்சள் நீராடல் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. திருவிழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் மற்றும் ஊர் முக்கிய பிரமுகர்கள், கோவில் பூசாரிகள் செய்து வருகின்றனர்.
    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு அதிகார நந்தி வாகனத்தில் சாமி, அம்பாள் திருவீதி உலா நடைபெற்றது.
    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் நடந்து வரும் பங்குனி திருவிழாவை முன்னிட்டு கபாலீசுவரர் சாமி அதிகார நந்தி வாகனத்திலும், கற்பகம்பாள் கந்தருவி வாகனத்திலும், முருகன் கந்தருவன் வாகனத்திலும், மூஷிகம் வாகனத்தில் விநாயகர், சண்டிகேஸ்வரர் ஆகிய பஞ்சமூர்த்தி புறப்பாடு நடந்தது.

    கோவில் தெற்கு மாட வீதியில் உள்ள தெப்பக்குள படித்துறையில் காலை 9 மணி அளவில் திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா நடந்தது. இரவு பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களில் சாமி, அம்பாள் புறப்பாடு நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆண்டு திருவிழாவான பங்குனி திருவிழா நடந்து வருகிறது. நோய் தொற்று பரவாமல் இருக்க அரசு பிறப்பித்துள்ள நெறிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறது. முக கவசம் அணியாத பக்தர்களுக்கு முக கவசம் வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. கோவிலில் ஒரு நாளைக்கு 3 முறையாவது கிருமி நாசினி தெளிக்கப்பட்டு சுத்தம் செய்யப்படுகிறது. கோவிலுக்கு வரும் பக்தர்களின் வெப்பநிலையை சோதித்த பின்னரே உள்ளே அனுமதிக்கப்படுகிறார்கள்.

    பங்குனி திருவிழாவின்போது, மயிலாப்பூரில் உள்ள 4 மாட வீதிகள், கச்சேரி சாலை, ராமகிருஷ்ணா மடம் சாலை உள்ளிட்ட தெருக்களில் உணவு மற்றும் மோர், குளிர்பானங்கள் பக்தர்களுக்கு வினியோகிக்கப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு அதனை வினியோகிக்க வேண்டாம் என்று அறக்கட்டளைகள், அமைப்புகள் மற்றும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. முக்கிய திருவிழாக்களும் ‘யூடியூப்’ சேனலில் ஒளிபரப்பப்படுவதால் பக்தர்கள் நேரில் வருவதை தவிர்க்கலாம்.
    ×