search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில்"

    • இவ்வாண்டு கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
    • கோவில்களில் வருகிற 8-ந் தேதி மகா சிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

    சென்னை:

    இந்து சமய அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    2023-2024-ம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில், "மகா சிவராத்திரி விழா கடந்தாண்டு 5 சிவத் திருத்தலங்கள் சார்பாக பெருவிழாவாக ஆன்மிக கலை நிகழ்ச்சிகளுடன் பிரமாண்டமாக நடத்தப்பட்டதை போல், இவ்வாண்டு கூடுதலாக 2 சிவத்திருத்தலங்கள் சார்பாக மகா சிவராத்திரி பெருவிழா வெகுவிமரிசையாக நடத்தப்படும்" என அறிவிக்கப்பட்டது.

    அதன்படி இந்தாண்டு கூடுதலாக மதுரை, மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் மற்றும் திருவானைக்காவல், ஜம்புகேஸ்வரர் கோவில் ஆகிய 2 கோவில்களையும் சேர்த்து 7 கோவில்களில் வருகிற 8-ந் தேதி மகா சிவராத்திரி பெருவிழா ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இசை நிகழ்ச்சிகளுடன் வெகு விமரிசையாக கொண்டாடப்படவுள்ளது.

    சென்னை, மயிலாப்பூர், கபாலீசுவரர் கோவில் சார்பில் நடத்தப்படும் மகா சிவராத்திரி பெருவிழாவை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு வருகிற 8-ந் தேதி தொடங்கி வைக்கிறார்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர்.
    • பக்தர்கள் ‘ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...' என பக்தி கோஷமிட்டனர்.

    தமிழகத்தில் ஆதிகாலத்தில் இருந்து இன்று வரை எத்தனையோ சிவனடியார்கள் தோன்றி இருந்தாலும்கி.பி.400-ம் ஆண்டு முதல் ஆயிரம் ஆண்டு வரை வாழ்ந்த சிவனடியார்களில் 63 பேர் 'நாயன்மார்கள்' என்று போற்றப்படுகின்றனர். இவர்களில் 'சைவ சமயக்குரவர்கள்' என்று அழைக்கப்படும் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர், மாணிக்கவாசகர் ஆகியோர் முக்கியமானவர்கள். இவர்கள் சிவபெருமானுக்கு சேவை செய்ததால் இவர்களையே சிவபெருமானின் பிரதிபலிப்பாக கருதி பக்தர்கள் பூஜை செய்து வருகின்றனர்.

    அந்தவகையில், சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் ஒரு பகுதியாக 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நடப்பது வழக்கம்.

    மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி திருவிழா வெகு விமரிசையாக நடந்துவருகிறது. இந்த ஆண்டு பங்குனி திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அதைத்தொடர்ந்து 'அறுபத்து மூவர் திருவிழா' என்று அழைக்கப்படும் 63 நாயன்மார்கள் திருவீதி உலா நிகழ்ச்சி நேற்று பிற்பகல் 2.45 மணியளவில் நடந்தது.

    ஒரு பல்லக்கில் 4 நாயன்மார்கள் என்ற கணக்கில் 63 நாயன்மார்கள் சிலைகள் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு பல்லக்கில் ஏற்றப்பட்டு கோவில் இருந்து கோபுர வாசலில் உள்ள 16 கால் மண்டபத்துக்கு கொண்டுவரப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து, திருவீதியுலா மேள தாளம் முழங்க, மங்கல இசை ஒலிக்க, வேத மந்திரங்கள் ஓத ஆரவாரத்தோடு புறப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட வெள்ளி சப்பரத்தில் வந்த கபாலீசுவரர் 63 நாயன்மார்களுக்கு காட்சி அளித்தார். பக்தர்கள் சிலர், திருக்கயிலாய வாத்தியம் இசைத்தும், சிவ நடனமாடியும் சாமியை வரவேற்றனர். அப்போது கூடியிருந்த பக்தர்கள் 'ஓம் நமச்சிவாய, ஓம் நமச்சிவாய...' என பக்தி கோஷமிட்டனர்.

    மாடவீதிகளில் திருவீதி உலா நிகழ்ச்சியில் விநாயகர் மற்றும் மயிலாப்பூரின் கிராம தேவதையான கோலவிழி அம்மன் ஆகியோர் முன்னே சப்பரத்தில் செல்ல, வெள்ளி சப்பரத்தில் கற்பகாம்பாள் உடனுறை கபாலீசுவரர், வள்ளி தெய்வானை சமேத முருகப்பெருமான், சண்டிகேஸ்வரர், முண்டகக்கண்ணியம்மன், அங்காள பரமேஸ்வரி, பெரியநாயகி சமேத வாலீசுவரர், வீரபத்திர சுவாமிகள், திருவள்ளுவர்-வாசுகி ஆகியோர் கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ஆர்.கே.மடம் சாலை, வடக்குமாட வீதி வழியாக மீண்டும் கோவிலை வந்தடைந்தனர்.

    63 நாயன்மார்கள் தனித்தனி சப்பரத்தில் மாட வீதிகளில் வலம் வரும் கண்கொள்ளா காட்சியை காண காலையில் இருந்தே சென்னை மாநகர் மட்டுமின்றி புறநகர் பகுதியையும் சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மயிலாப்பூரில் குவிந்தனர்.

    விழாவை முன்னிட்டு மயிலாப்பூரில் உள்ள சைவ சித்தாந்த மன்ற தலைவர் பேராசிரியர் நல்லூர்சா.சரவணன் தலைமையில் மன்ற உறுப்பினர்கள் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கினர்.

    இதேபோன்று பெண்கள் பலர் கோவிலைச் சுற்றி உள்ள மாடவீதிகளில் மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து சாமிக்கு பூஜை செய்து பக்தர்களுக்கு வழங்கினர். இவ்வாறு செய்வதன் மூலம் தீராத நோய்களும் குணமடையும் என்பது நம்பிக்கையாகும்.

    மயிலாப்பூரில் வசிப்பவர்கள், தன்னார்வலர்கள், தொண்டு நிறுவனத்தினர், தொழிற்சங்கத்தினர், அரசியல் கட்சியினர் போன்றோர் சிறப்பு பந்தல் அமைத்து அன்னதானம், நீர்மோர், இனிப்புகள் மற்றும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எழுதுபொருட்கள் வழங்கினர். முன்னதாக நேற்று காலையில் திருஞானசம்பந்தர் சுவாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும், பிற்பகலில் 'அங்கம் பூம்பாவையாக்கி அருளுதல்' நிகழ்ச்சியும் நடந்தது.

    அறுபத்து மூவர் திருவிழாவையொட்டி மயிலாப்பூர் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது. ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோவிலைச் சுற்றி மாட வீதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் மற்றும் கண்காணிப்பு கோபுரங்கள் அமைக்கப்பட்டு, தீவிர கண்காணிப்பில் போலீசார் ஈடுபட்டனர். பெண்களின் நகைகளை பாதுகாப்பதற்காக ஊக்குகளை போலீசார் இலவசமாக பெண்களுக்கு அளித்தனர். மேலும் ஒலிபெருக்கிகள் மூலம் பொதுமக்களுக்கு அவ்வப்போது அறிவுரை வழங்கினர். ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் தயார்நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. விழா ஏற்பாடுகளை கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் இரா.ஹரிஹரன் உள்ளிட்ட பலர் செய்திருந்தனர்.

    • அறுபத்து மூவர் விழா இன்று மாலையில் நடக்கிறது.
    • பக்தர்கள் வரிசையில் நின்றும் சாமியை தரிசித்தனர்.

    சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று தேரோட்டம் நடந்தது.

    பங்குனி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா இன்று மாலையில் நடக்கிறது. பிற்பகலில் தொடங்கும் இந்த நிகழ்ச்சியை காண பக்தர்கள் காலையிலே குவிய தொடங்கினார்கள். சென்னை, புறநகர் பகுதி மட்டுமின்றி சென்னையை ஒட்டியுள்ள மாவட்டங்களில் இருந்தும் ஏராளமானோர் திரண்டனர்.

    கோவிலின் முன் பகுதியிலும், உள்ளேயும் பக்தர்கள் கூடினார்கள். அறுபத்து மூவர் நாயன்மார்களின் சிலைகள் கோவிலில் அலங்கரிக்கப்பட்டு இருந்தன. அதனை பக்தர்கள் வணங்கினார்கள். பக்தர்கள் வரிசையில் நின்றும் சாமியை தரிசித்தனர்.

    மாலையில் அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி 4 மாட வீதிகள் வழியாக ஊர்வலமாக வடம் பிடித்து செல்லப்படுகிறது. இந்த நிகழ்ச்சியை காண்பதற்கு மாலையில் மேலும் கூட்டம் அதிகரிக்கும் என்பதால் அதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்துள்ளது.

    பங்குனி திருவிழாவையொட்டி கோவிலை சுற்றி அன்னதானம், நீர் மோர் வழங்கப்பட்டது. வெளியூர் பக்தர்கள் நோட்டு புத்தகம், பென்சில், பேனா போன்றவற்றை வாங்கி தானமாக வழங்கினார்கள்.

    • நாளை அறுபத்து மூவர் விழா நடக்கிறது.
    • 6-ந்தேதி தீர்த்தவாரி, திருக்கல்யாணம் நடக்கிறது.

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் பங்குனி பெருவிழாவையொட்டி கடந்த மாதம் 27-ந்தேதி கிராம தேவதை பூஜை, கோலவிழி அம்மன் சிறப்பு வழிபாடு நடந்தது.

    28-ந்தேதி பங்குனி பெரு விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் கற்பகாம்பாள், கபாலீசுவரர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.

    பங்குனி பெருவிழாவையொட்டி இன்று தேரோட்டம் நடந்தது. இதையொட்டி இன்று காலையிலேயே பக்தர்கள் கோவிலில் குவிந்தனர். நேரம் செல்லச் செல்ல பக்தர்களின் வருகை அதிகரித்துக் கொண்டே சென்றது.

    காலை 7.20 மணிக்கு தேரோட்டம் தொடங்கியது. முதலில் விநாயகர் தேர் புறப்பட்டது. அதன் பிறகு கபாலீசுவரர் தேர் புறப்பட்டது. இந்த தேர் 96 அடி உயரமும், 300 டன் எடையும் கொண்டது. இந்த தேர் நான்கு மாட வீதிகளில் வலம் வந்தது. பார்க்க கண்கொள்ளாகாட்சியாக இருந்தது.

    அதன் பிறகு கற்பகாம்பாள் தேர் வந்தது. இதை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்தனர். இதனையடுத்து சுப்பிரமணியர் தேர், சண்டிகேசுவரர் தேர் ஆகியவை வலம் வந்தன.

    விழாவில் லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் 4 மாட வீதிகளை சுற்றி வந்தது. தேர் வலம் வந்த போது பக்தர்கள் கபாலி.. கபாலி என்று பக்தி கோஷம் எழுப்பினார்கள். சிவ வாத்தியம் முழங்க தேர் வலம் வந்தது.

    தேர் வலம் வந்தபோது ஏராளமான பக்தர்கள் அர்ச்சனை செய்தனர். 4 மாட வீதிகளின் பல இடங்களில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    சென்னையின் பல்வேறு பகுதிகளில் இருந்து மயிலாப்பூரில் பக்தர்கள் குவிந்ததால் போலீஸ் பாதுகாப்பும் அதிகரிக்கப்பட்டு இருந்தது. மயிலாப்பூர் ராமகிருஷ்ணா மடம் சாலை, லஸ் கார்னரில் இருந்து மயிலாப்பூர் மாட வீதிகளுக்கு வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை. அவை மாற்றுப் பாதையில் திருப்பி விடப்பட்டன. தேர்த்திருவிழா காரணமாக மயிலாப்பூர் பகுதியே விழாக்கோலம் பூண்டிருந்தது.

    நாளை (4-ந்தேதி) பங்குனி பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான அறுபத்து மூவர் விழா நடக்கிறது. அறுபத்து மூன்று நாயன்மார்களும் பல்லக்குகளில் எழுந்தருளி மாட வீதிகளில் வலம் வருகிறார்கள். வெள்ளி விமானத்தில் இறைவன் அறுபத்துமூன்று நாயன்மார்களோடு வரும் திருக்காட்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் குவிவார்கள்.

    வருகிற 5-ந்தேதி ஐந்திருமேனிகள் விழா நடக்கிறது. 6-ந்தேதி பகலில் தீர்த்தவாரி நடக்கிறது. இரவு 8 மணிக்கு திருக்கல்யாணம் நிகழ்ச்சி நடக்கிறது.

    • அம்மாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    • தேரோட்டம் 3-ந் தேதி நடக்கிறது.

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் பங்குனி திருவிழாவின் 3-ம் நாள் திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி அதிகாலை அதிகார நந்தி காட்சி மற்றும் திருஞானசம்பந்தர் திருமுலைப்பால் விழா கபாலீசுவரர் கோவில் தெப்பக்குளத்தில் நடந்தது. சாமிக்கு தீர்த்தவாரி, அபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜைகள் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    விழாவில் தினமும் காலை பொழுதில் கந்தருவன், கந்தருவி, மூஷிகம், வெள்ளி விடை வாகனங்களிலும், இரவு வெள்ளி பூதன், பூதகி, தாரகாசுர வாகனங்களிலும் சாமி, அம்மாள் வீதி உலா நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    விழாவின் முக்கிய திருவிழாவான தேரோட்டம் 3-ந் தேதியும், 63 நாயன்மார்கள் திருவீதி உலா மற்றும் திருஞானசம்பந்தர் சாமிகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    • பங்குனி பெருவிழா இன்று முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடக்கிறது.
    • மாட வீதிகளில் வாகனங்கள் நிறுத்தக்கூடாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    சென்னை :

    சென்னை மாநகர போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் வருடாந்திர பங்குனி பெருவிழா 28-ந்தேதி (இன்று) முதல் ஏப்ரல் 6-ந்தேதி வரை நடைபெறுவதை முன்னிட்டு பொது மக்களின் போக்குவரத்து வசதியை கருதி தேவைப்படும் நேரங்களில் பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படும். மேற்கண்ட நாட்களில் கபாலீசுவரர் கோவிலைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து கோவிலை நோக்கி வாகனங்கள் அனுமதிக்கப்படமாட்டாது.

    அதாவது தேவடி தெருவில் இருந்து - நடுத்தெரு மற்றும் சித்ரகுளம் வடக்கு நோக்கி, நடுத்தெரு மற்றும் சுந்தரேஸ்வரர் தெருவில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, வடக்கு சித்ரகுளத்தில் இருந்து கிழக்கு மாட தெரு நோக்கி, மேற்கு சித்ரகுளம் தெரு, டி.எஸ்.வி. கோவில் தெரு, ஆடம்ஸ் தெரு மற்றும் ஆர்.கே. மடம் சாலையில் இருந்து தெற்கு மாட தெரு நோக்கி, ஆர்.கே.மடம் சாலையில் இருந்து வடக்கு மாட தெரு நோக்கி, கச்சேரி சாலையில் இருந்து மத்தள நாராயணன் தெரு நோக்கி, லஸ் சந்திப்பு, புனிதமேரி சாலையில் இருந்து ஆர்.கே.மடம் சாலையில் தெற்கு மாடவீதி நோக்கி, டாக்டர் ரங்கா சாலையில் இருந்து வெங்கடேச அக்ரஹாரம் சாலை நோக்கி, முண்டக கன்னியம்மன் கோவில் தெருவில் இருந்து கல்விவாறு தெரு நோக்கியும் வாகனங்கள் அனுமதிக்கப்பட மாட்டாது.

    ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக அடையாறு செல்லும் வாகனங்கள் லஸ், லஸ் சர்ச் ரோடு, டிசில்வா ரோடு, பக்தவத்சலம் ரோடு, ரங்கா ரோடு, சி.பி.ராமசாமி சாலை, ஆர்.ஏ.புரம் 2-வது பிரதான சாலை, வெங்கட கிருஷ்ணா ரோடு, தேவநாதன் தெரு, செயின்ட் மேரீஸ் சாலை, ஆர்.கே.மடம் சாலை வழியாக மந்தைவெளி அடையலாம்.

    அடையாறில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக ராயப்பேட்டை செல்லும் வாகனங்கள் ஆர்.கே.மடம் ரோடு, மந்தைவெளி சந்திப்பு, வெங்கட கிருஷ்ணா ரோடு, சிருங்கேரி மடம் சாலை, வாரன்ரோடு, ரங்கா ரோடு, கிழக்கு அபிராமபுரம் முதல் தெரு, லஸ் அவென்யூ, அமிர்தாஞ்சன் சந்திப்பு, கற்பகாம்பாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம்.

    ஆழ்வார்ப்பேட்டை சந்திப்பில் இருந்து லஸ் சந்திப்பு வழியாக செல்லும் வாகனங்கள் ஆலிவர் சாலை, பி.எஸ்.சிவசாமி சாலை சந்திப்பு, விவேகானந்தர் கல்லூரி, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக இலக்கை அடையலாம். மயிலாப்பூர் கோவில் குளம் அருகில் உள்ள மாநகர பஸ் நிறுத்தம் லஸ் சர்ச் சாலையில் அமிர்தாஞ்சன் கம்பெனி அருகில் மாற்றப்பட்டுள்ளது.

    வருகிற 30-ந்தேதி அதிகாரநந்தி திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும், ஏப்ரல் 3-ந்தேதி தேர் திருவிழா காலை 5 மணி முதல் நிகழ்ச்சி முடிவடையும் வரையிலும் மற்றும் ஏப்ரல் 4-ந்தேதி அறுபத்து மூவர் திருவிழா பகல் 1 மணி முதல் நிகழ்ச்சி நிறைவடையும் வரையிலும், மேற்கண்ட போக்குவரத்து மாற்றங்கள் செயல்படுத்தப்படும்.

    வருகிற 30 மற்றும் ஏப்ரல் 3, 4-ந்தேதிகளில் சன்னதி தெரு, கிழக்கு மாடவீதி, தெற்கு மாடவீதி, ராமகிருஷ்ணா மடம் சாலை மற்றும் வடக்கு மாடவீதி ஆகிய இடங்களில் எந்த வாகனமும் நிறுத்த அனுமதியில்லை. அந்த நாட்களில் கீழ்கண்ட இடங்களில் வாகனங்களை நிறுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது அதன் விவரம் வருமாறு:-

    கிழக்கு மற்றும் வடக்கு புறம் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் பக்தர்களின் வாகனங்கள் லஸ் சர்ச் ரோடு, காமதேனு கல்யாண மண்டபம் எதிரில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. மேற்கு மற்றும் தெற்கு புறம் இருந்து வரும் வாகனங்கள் சாய்பாபா கோவில் அருகில், வெங்கடேச அக்ரஹாரம், திருமயிலை பறக்கும் ரெயில்வே நிலைய மேம்பாலத்தின் கீழ் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    செயின்ட் மேரீஸ் சாலை மற்றும் ஆர்.கே.மடம் சாலையில் இருந்து மயிலாப்பூர் குளம் நோக்கி வரும் வாகனங்கள் பி.எஸ். பள்ளி அருகே கபாலீசுவரர் கோவில் மைதானத்தில் நிறுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. காவல்துறை வாகனங்கள் சுந்தரேஸ்வரர் தெருவில் உள்ள ரசிக ரஞ்சனி சபா வளாகத்தில் நிறுத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. வாகன ஓட்டுனர்களும், பொதுமக்களும் மேற்கண்ட நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • கபாலீசுவரர் கோவிலிருந்து ஸ்ரீசைலம் கோவிலுக்கு வஸ்திர மரியாதை நிகழ்ச்சி நடந்தது.
    • திருத்தணி கோவில்களிலிருந்து திருப்பதி கோவிலுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

    சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலிருந்து ஆந்திரபிரதேசம் ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை கொண்டு சென்று வழங்கும் நிகழ்ச்சி, இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் நடைபெற்றது. தொடர்ந்து, ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலில் வஸ்திர மரியாதை செய்துவிட்டு சாமி தரிசனம் முடித்துவிட்டு அமைச்சர் சேகர்பாபு கூறியதாவது:-

    தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுபாட்டில் உள்ள கோவில்களிலிருந்து பிற மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது. ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் சாமி கோவில், ஸ்ரீவில்லிபுத்தூர் நாச்சியார் கோவில் மற்றும் திருத்தணி சுப்பிரமணிய சாமி கோவில்களிலிருந்து திருப்பதி ஸ்ரீவெங்கடேசுவரசாமி கோவிலுக்கு வஸ்திரங்கள் மரியாதை வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த 2022-2023-ம் ஆண்டு சட்டசபை மானியக் கோரிக்கையில் இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்பட தமிழக கோவில்களிலிருந்து இதர மாநிலத் கோவில்களுக்கு வஸ்திர மரியாதை வழங்குவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இந்த அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் பழனி தண்டாயுதபாணி சாமி கோவிலில் இருந்து கேரளா, சபரிமலை சாஸ்தா கோவிலுக்கும், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலிருந்து ஆந்திரா ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கும், பண்ணாரி மாரியம்மன் கோவிலில் இருந்து கர்நாடகம், மைசூரு சாமுண்டிஸ்வரி அம்மன் கோலிலுக்கும், சமயபுரம் மாரியம்மன் கோவிலில் இருந்து மத்தியபிரதேசம் மாநிலத்தில் உள்ள உஜ்ஜயினி மகா காளேசுவரர் கோவிலுக்கும், ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இருந்து உத்தரபிரதேசம், காசி விஸ்வநாதர் கோவிலுக்கும், மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் இருந்து உத்தரகாண்ட் கேதர்நாத் கோவிலுக்கும், திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோவிலில் இருந்து ஒடிசா பூரி ஜெகன்னாதர் கோவிலுக்கும், திருவண்ணாமலை அருணாச்சலேசுவரர் கோவிலில் இருந்து குஜராத் சோம்நாத் சோமநாத சாமி கோவில். கன்னியாகுமரி மாவட்டம் திருவட்டாறு ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் இருந்து, திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலுக்கும், திருத்தணி சுப்பிரமணியசாமி கோவிலில் இருந்து கர்நாடகம், மங்களூர் சுப்பிரமணிய சாமி கோவிலுக்கும், காஞ்சீபுரம் ஏகாம்பரநாதர் சாமி கோவிலில் இருந்து கர்நாடகம் மாநிலம் செலுவ நாராயணப் பெருமாள் கோவிலுக்கும், சோளிங்கர் லட்சுமி நரசிம்மசாமி கோவிலில் இருந்து அகோபிலம் நரசிம்மர் கோவிலுக்கும் வஸ்திர மரியாதை வழங்குவது தொடர்பாக கோவில் பழக்க வழக்கத்தினை கருத்தில் கொண்டும் மற்றும் கோவிலில் உள்ள அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்களை கலந்தலோசித்தும் சம்பந்தப்பட்ட கோவில் நிர்வாகத்தை தொடர்பு கொண்டு சம்மதம் பெற்று விபரம் தெரிவிக்க அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.

    இதில் முதல்கட்டமாக சென்னை, மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் இருந்து ஆந்திரபிரதேசம் ஸ்ரீசைலம் மல்லிகார்சுனர் கோவிலுக்கு வஸ்திர மரியாதை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதனால் இதர மாநிலங்களில் உள்ள கோவில்களுக்கும் தமிழகத்தில் உள்ள கோவில்களுக்கும் நல்லிணக்க உறவு மேம்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்த நிகழ்ச்சியில் சுற்றுலா, பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலர் டாக்டர் சந்திரமோகன், கூடுதல் கமிஷனர்கள் இரா.கண்ணன் மற்றும் திருமகள், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவில் இணை கமிஷனர் காவேரி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    ×