search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை கொண்டு சென்ற காட்சி.
    X
    சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் அலங்கரிக்கப்பட்ட வாகனங்களில் பூக்களை கொண்டு சென்ற காட்சி.

    பூச்சொரிதல் விழா: சமயபுரம் மாரியம்மனுக்கு திரளான பக்தர்கள் பூக்களை சாற்றி வழிபாடு

    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மனுக்கு 3-வது வார பூச்சொரிதல் விழாவையொட்டி திரளான பக்தர்கள் பூக்களை சாற்றி வழிபட்டனர்.
    சக்தி தலங்களில் மிகவும் பிரசித்தி பெற்ற சமயபுரம் மாரியம்மன் கோவிலில் பூச்சொரிதல் விழா ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு பூச்சொரிதல் விழா கடந்த 7-ந்தேதி தொடங்கியது.

    நேற்று 3-வது வார பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி சமயபுரம் அனைத்து கடை வியாபாரிகள் சங்கம் மற்றும் சமயபுரம் பூர்வீக குடிமக்கள் சார்பாக கடைவீதியில் உள்ள ஆண்டவர்கோவிலில் இருக்கும் கருப்பண்ணசாமி, மதுரைவீரன் சுவாமிகளுக்கு சிறப்புபூஜைகள் செய்யப்பட்டன.

    அதைத்தொடர்ந்து அலங்கரிக்கப்பட்ட யானை மீது பூக்கூடைகளை சுமந்தும், புஷ்ப பல்லக்கில் அம்மன் படத்தை வைத்தும், மேளதாளங்கள் முழங்க திரளான பக்தர்கள் பூத்தட்டுகளை சுமந்து கடைவீதி, தேரடிவீதி வழியாக ஊர்வலமாக கோவிலுக்கு வந்தனர். பின்னர் அம்மனுக்கு பூக்களைசாற்றி அவர்கள் வழிபட்டனர்.

    இதேபோல், ச.கண்ணனூர் பேரூராட்சியின் சார்பாக 14-வது ஆண்டாக பூச்சொரிதல் விழா நடைபெற்றது. இதையொட்டி பேரூராட்சி அலுவலகத்தில் இருந்து செயல்அலுவலர் பாலமுருகன் தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் மற்றும் ஊழியர்கள் குடும்பத்தினருடன் நூற்றுக்கணக்கானோர் பூத்தட்டுகளை சுமந்து கோவிலுக்கு வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.

    இந்த விழாவில் திருச்சி மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குனர் ஜெகதீசன், கள்ளக்குறிச்சி ஆணையர் குமரன், லப்பைக்குடிகாடு பேரூராட்சி செயல்அலுவலர் சதீஷ்கிருஷ்ணன் உள்பட அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து பேரூராட்சியின் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து திருச்சி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பக்தர்கள் பூத்தட்டுக்களை சுமந்து வந்து அம்மனுக்கு பூக்களை சாற்றி வழிபட்டனர்.
    Next Story
    ×