என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. இதனால் பக்தர்கள் சுமார் 48 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.
    திருப்பதியில் கடந்த வாரம் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    கோடை விடுமுறை காரணமாக திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. கடந்த வெள்ளிக்கிழமை தரிசனத்திற்கு திரண்டு வந்த பக்தர்கள் கூட்டம் சனி, ஞாயிற்றுக்கிழமைகளிலும் அதிகரித்தது. இதனால் பக்தர்கள் சுமார் 48 மணிநேரம் வரை காத்திருந்து தரிசனம் செய்தனர்.

    பக்தர்கள் காத்திருப்பு அறையான வைகுண்ட கியூ காம்ப்ளக்ஸ் அறைகள் முழுவதும் நிரம்பியது.

    பக்தர்கள் சுமார் 7 கிலோ மீட்டர் தொலைவு வரை மிக நீண்ட வரிசையில் காத்திருந்து ஏழுமலையானை வழிபட்டனர்.

    திருப்பதியில் எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்பட்டது.

    இதனால் விஐபி பக்தர்கள், சாதாரண பக்தர்கள் ஆகியோர் தங்களது திருமலை பயணத்திட்டத்தை மாற்றி அமைத்துக் கொள்ள வேண்டும் என்று தேவஸ்தானம் கோரிக்கைவிடுத்திருந்தது.

    இந்நிலையில், தற்போது கடந்த 4 நாட்களுக்கு பிறகு பக்தர்கள் கூட்டம் கணிசமாக குறைந்துள்ளது. அதனால் பக்தர்கள் சிரமம் இன்றியும் வேகமாகவும் தற்போது தரிசனம் செய்து வருகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 69,848 பக்தர்கள் தரிசனம் செய்தனர். 28,716 முடி காணிக்கை செலுத்தினர். 4.34 கோடி உண்டியல் வசூலானது. வைகுண்ட கியூ காம்ப்ளக்சில் 2 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். சுமார் 2 மணி நேரத்தில் தரிசனம் செய்கின்றனர்.
    பிரம்மோற்சவ விழா நாட்களில் பூதகி விமானம், இரட்டைத்தலை சிம்ம வாகனம், ரிஷப வாகனம், சிமம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.
    சென்னை பாரிமுனையில் உள்ள காளிகாம்பாள் கோவிலில் பிரம்மோற்சவ விழா 3-ந்தேதி தொடங்கி 12-ந்தேதி வரை 10 நாட்கள் விழா கோலாகலமாக நடக்கிறது. 3-ந்தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் விழா தொடங்குகிறது. இரவு அம்பாள் வீதி உலா நடக்கிறது.

    9-ந்தேதி காலை பூந்தேர் தேரோட்டம் இரவு தொட்டி உற்சவம். 11-ந்தேதி இரவு 7 மணிக்கு ஸ்ரீ சக்ர கிண்ணித்தேர் தேரோட்டம், 12-ந்தேதி காலை தீர்த்தவாரி உற்சவம், மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நடக்கிறது.

    பிரம்மோற்சவ விழா நாட்களில் பூதகி விமானம், இரட்டைத்தலை சிம்ம வாகனம், ரிஷப வாகனம், சிமம வாகனம், யானை வாகனம், குதிரை வாகனம் ஆகிய வாகனங்களில் அம்மன் வீதி உலா வருகிறார்.

    13-ந்தேதி முதல் விடையாற்றி உற்சவம் ஆரம்பமாகிறது. 13-ந்தேதி இரவு பந்தம்பறி உற்சவம், 14-ந்தேதி இரவு புஷ்ப பல்லக்கு, 15-ந்தேதி இரவு அம்மனுக்கு சாந்தி அபிஷேகம், 28-ந்தேதி மாலை 5 மணி முதல் இரவு 7 மணிக்குள் அம்பாள் ஆஸ்தான பிரவேச உற்சவம் நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் சர்வேஸ்வரன், அறங்காவலர்கள் யுவராஜ், மோகன், ரமேஷ், சுப்ரமணி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்து வருகிறார்கள்.
    அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து பம்பை உடுக்கையுடன் சூரிய குளத்தை வலம் வந்து ஊஞ்சலில் வைத்து பக்தி பாடல்கள் பாடப்பட்டது.
    பெரணமல்லூரில் உள்ள அஙகாள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் வைகாசி மாத அமாவாசையையொட்டி ஊஞ்சல் தாலாட்டு விழா நடந்தது. பெரணமல்லூரில் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இங்கு அமாவாசையன்று ஊஞ்சல் தாலாட்டு நடந்தது. இதனையொட்டி காலையில் அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு அபிஷேகம் செய்து அலங்காரம் செய்யப்பட்டது.

    மேலும் பாம்பு புற்றுக்கு மஞ்சள், குங்குமம், விபூதி வைத்து சிறப்பு பூஜை செய்யப்பட்டது. மாலை 6 மணி அளவில் பூ கரகம் ஜோடித்தும், சூரிய குளம்படிக்கட்டு் அருகே 16 கைகளுடன் உள்ள காளி தேவதைக்கும் கற்பூர ஆரத்தி காண்பிக்கப்பட்டது. தொடர்ந்து அங்காள பரமேஸ்வரி அம்மனுக்கு மலர் அலங்காரம் செய்து பம்பை உடுக்கையுடன் சூரிய குளத்தை வலம் வந்து ஊஞ்சலில் வைத்து பக்தி பாடல்கள் பாடப்பட்டது.

    அப்போது பலர் அருள் வந்து ஆடினர். ஏற்கனவே ஊஞ்சல் தாலாட்டு நிகழ்ச்சியில் வேண்டிக்கொண்டு சென்றவர்களுக்கு குழந்தை பாக்கியம் பெற்றவர்கள் எடைக்கு எடை காசுகள் வைத்து துலாபாரம் செய்து நேர்த்திக்கடன் செலுதினர். பின்னர் பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தனர். இதனையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது.

    இரவு 12 மணிக்கு பூரணகும்பம் படையல் செய்து அங்காளம்மனுக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டது. இதில் பெரணமல்லூர், ஆரணி, செய்யாறு, சென்னை, வந்தவாசி திருவண்ணாமலை உள்பட பல்வேறு ஊர்களை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். ஏற்பாடுகளை அமாவாசை விழாக்குழுவினர் செய்தனர்
    இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள சந்தனக்கூடு திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.
    ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி பாதுஷா நாயகம் தர்கா சந்தனக்கூடு திருவிழா, ஆண்டுதோறும் தேசிய ஒருமைப்பாட்டு விழாவாக நடந்து வருகிறது. இந்த விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக உள்ள சந்தனக்கூடு திருவிழாவில் இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வர்.

    சந்தனக்கூடு திருவிழா இன்று ஜூன் 1-ந்தேதி மவுலீது (புகழ் மாலை) ஓதப்பட்டு விழா தொடங்குகிறது. இதையொட்டி இந்து சமுதாய மீனவர்கள் கொடுத்த கடல் நீரால் இன்று காலை தர்கா மண்டபத்தை சுத்தம் செய்தனர்.

    வருகிற 11-ந்தேதி கொடியேற்றம், 23-ந்தேதி மாலை சந்தனக்கூடு திருவிழா ஆரம்பிக்கப்பட்டு 24-ந் தேதி அதிகாலை பாதுஷா நாயகத்தின் மக்பராவில் சந்தனம் பூசும் நிகழ்ச்சி நடைபெறும். கொடியேற்றம் 30-ந்தேதி கொடியிறக்கத்துடன், பக்தர்களுக்கு நேர்ச்சி வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை தலைவர் பாக்கிர்சுல்தான் லெப்பை, செயலாளர் சிராஜுதீன் லெப்பை, துணை தலைவர் சாதிக் பாட்ஷா லெப்பை மற்றும் நிர்வாக்குழு உறுப்பினர்கள், தர்ஹா ஹக்தார்கள் செய்து வருகின்றனர்.
    வந்தவாசி அருகே மாம்பட்டு மகாசக்தி மாரியம்மன் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது
    வந்தவாசி அருகே மாம்பட்டு மகாசக்தி மாரியம்மன் கோவிலில் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலில் மீனாட்சி திருக்கல்யாணம் நடந்தது. வந்தவாசி அருகே உள்ள மாம்பட்டு கிராமத்தில் மகா சக்தி முத்துமாரியம்மன், ஆதி சக்தி காளி அம்மன் கோவில் உள்ளது.

    இந்த கோவிலில் வைகாசி மாத திருவிழாவை முன்னிட்டு முத்துமாரியம்மனுக்கும், 16 கைகள் கொண்ட காளியம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டது. கோவில் நிர்வாகி லட்மணசுவாமிகள் முன்னிலையில் பூஜைகள் நடந்தன. பின்னர் மாலையில் மீனாட்சி அம்மனுக்கும் சுந்தரேஸ்வரருக்கும் திருக்கல்யாணம் நடந்தது.

    இதனையொட்டி பால், தயிர், பன்னீர், சந்தனம், குங்குமம், இளநீர், பன்னீர், தேன், பஞ்சாமிர்தத்தால் அபிஷேகம் நடத்தி பின்னர் மலர் அலங்காரம் செய்யப்பட்டது. அதன்பின் சுந்தரேஸ்வரருக்கு பட்டுவேட்டியும், மீனாட்சி அம்னுக்கு பட்டுப்புடவையையும் தங்கத் தாலி மற்றும் 16 வகையான பழ வகைகளையும் கோவிலை சுற்றி பக்தர்கள் ஊர்வலமாக சுற்றி வந்து வைத்தனர். அதன்பின் பின்னர் லட்சுமண சுவாமிகள் மற்றும் சிவாச்சாரியார்கள் யாகம் வளர்த்து திருக்கல்யாணத்தை நடத்தி வைத்தனர்.

    அதன் பிறகு மீனாட்சி அம்மன்-சுந்தரேஸ்வரருக்கு அலங்காரம் செய்து ஊர்வலமாக கோவிலை வலம் வந்து ஊஞ்சலில் வைத்தனர். பக்தி பாடல்கள் ஒலிக்கப்பட்டன. பம்பை உடுக்கை நாதஸ்வரம் ஆகிய இன்னிசை நடந்தது. பின்னர் நடன நிகழ்ச்சி நடந்தது. இதனைெயாட்டி அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது இரவு 12 மணி அளவில் ஆதிசக்தி காளியம்மனுக்கு படையல் போடப்பட்டது. இதில் வேலூர், திருவண்ணாமலை, கடலூர், விழுப்புரம், செஞ்சி, சேத்துப்பட்டு, ஆரணி, வந்தவாசி, சென்னை, காஞ்சீபுரம், சேலம், ஈரோடு பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் வந்து வணங்கி சென்றனர்.
    சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் அமைந்துள்ளது, வரதராஜப்பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயத்தைப்பற்றி இங்கே பார்க்கலாம்.
    ராமானுஜரின் குருவான திருகச்சி நம்பிகளின் அவதாரத்தலம் இதுவாகும். இந்த ஆலயத்தில் திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் காட்சி தருகிறார். இங்கு மூலவரான வரதராஜப்பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் தலையில் சூரியனுடன் இருக்கிறார். இதனால் இது சூரிய தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் திருப்பதி வேங்கடேசர், திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. அப்போது மூவரும் திருக்கச்சி நம்பிக்கு, கருடசேவை காட்சி தருவர். இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி 'பூந்தமல்லி' என்று அழைக்கப்படுகிறது.

    ராமானுஜரின் அவதார தலம் ஸ்ரீபெரும்புதூர். அங்கு அவருக்கு திருநட்சத்திர விழா நடக்கும்போது, பூந்தமல்லி வரதராஜர் ஆலயத்தில் இருந்து மாலை , பரிவட்டம், பட்டு கொண்டு செல்லப்படும். அதே போல் இங்கு திருக்கச்சி நம்பிக்கு திருநட்சத்திர விழா நடை பெறுகையில், அங்கிருந்து மாலை , பரிவட்டம், பட்டு கொண்டுவரப்படும்.

    புஷ்பவல்லி தாயாருக்கு மல்லிகை மலர் சூட்டி வழிபடுகிறார்கள். இந்த அன்னைக்கு வைகாசி பிரம்மோற்சவத்தின்போது, புஷ்ப யாகம் நடக்கிறது. இது சூரியதலம் என்பதால், ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் இத்தல பெருமாளை வழிபட்டால் நலம் கிடை க்கும். திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள், முதலில் திருவரங்கம் சென்றார்.

    அரங்கநாதரோ, தான் காவிரிக்கரையில் குளிர்ச்சியாகவே இருப்பதாக சொல்லிவிட்டார். பின்னர் திருக்கச்சி நம்பிகள், திருப்பதி சென்றார். அங்கிருக்கும் வேங்கடேசனோ , தான் மலை மீது இருப்பதால் எப்போதும் குளிரில் இருப்பதாக கூறினார். இதனால் காஞ்சிபுரம் வந்த திருக்கச்சி நம்பிகள், அங்கு உக்கிரமாக இருந்த வரதராஜருக்கு தன்னுடைய விசிறி சேவையை செய்து வந்தார்.

    பூந்தமல்லியில் அவதரித்த திருக்கச்சி நம்பிகள், தினமும் காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளுக்கு விசிறி சேவை செய்து வந்தார். அதோடு இங்கு நந்தவம் அமைத்து மலர்களை தொடுத்து மாலையும் அணிவித்து வந்தார். வயதான பின்பும் இதே போன்று அவர் காஞ்சிபுரம் செல்வார். அவரது தள்ளாத வயதை கருத்தில் கொண்ட வரதராஜப்பெருமாள், பூந்தமல்லிக்கே வந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்த இடத்தில்தான் தற்போதைய ஆலயம் இருப்பதாக தல வரலாறு சொல்கிறது.

    தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல வரதராஜப்பெருமாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சென்னையில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் திருக்கோவில்.
    திருச்சியை அடுத்த வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் வைகாசி விசாகப் பெருவிழா வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3-ம்தேதி) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    முருகப்பெருமான் அருணகிரிநாதரின் நாவில் பிரணவ மந்திரத்தை எழுதி திருப்புகழ் பாட அருளியச் செய்த தலமான வயலூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் ஜூன் 3-ம் தேதி தொடங்கும் வைகாசி விசாகப் பெருவிழா 14-ந்தேதி வரை நடக்கிறது.

    விழாவின் தொடக்கமாக வரும் வெள்ளிக்கிழமை (ஜூன் 3) காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்கு கொடியேற்றம், நாள்தோறும் இரவு 8 மணிக்கு வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியசுவாமியின் வீதி உலா, ஒன்பதாம் திருநாளான ஜூன்.11-ந்தேதி காலை 10.30 மணிக்கு மேல் 11 மணிக்கள் வள்ளி தேவசேனா சமேத சுப்பிர மணிய சுவாமியின் ரதாரோகணம் மாலை 4 மணிக்கு மேல் தேரோட்ட விழா, ஜூன் 12-ந்தேதி விசாகப் பெருவிழாவை முன்னிட்டு தீர்த்தவாரி ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் பால்குடம், காவடி எடுத்து, அலகு குத்தி வலம் வருவர். அபிஷேக ஆராதனைகள் நடைபெறும்.

    ஜூன் 13-ந்தேதி மாலை 6 மணிக்கு சங்காபிஷேகம், இரவு 8 மணிக்கு தெப்ப உற்சவம், ஜூன்.14-ந்தேதி இரவு 8 மணிக்கு ஆளும் பல்லக்குடன் விழா நிறைவுறும்.

    ஏற்பாடுகளை அறநிலையத்துறை இணை ஆணையர் செல்வராஜ் அறிவுரையின் பேரில், உதவி ஆணையர் லட்சுமணன், நிர்வாக அதிகாரி அருண்பாண்டியன் மற்றும் கோவில் நிர்வாகத்தினர், விழா குழுவினர் செய்துள்ளனர்.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது.
    கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலில் ஆண்டுதோறும் வைகாசி மாதம்10 நாட்கள் விசாக திருவிழா நடைபெறுவது வழக்கம். ஆண்டுக்கான வைகாசி விசாக பெருந்திருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இந்த திருவிழா 12-ந்தேதி வரை 10 நாட்கள் தொடர்ந்து நடக்கிறது. திருவிழாவையொட்டி தினமும் அதிகாலை 5 மணி மற்றும் காலை 10 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும் 11-30 மணிக்கு அலங்கார தீபாராதனையும் பகல் 12 மணிக்கு சிறப்பு அன்னதானமும் மாலை 6 மணிக்கு சமய உரையும் இரவு 9 மணிக்கு அம்மன் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    வைகாசி விசாக திருவிழாவையொட்டி வருகிற 2-ந்தேதி மாலை 5 மணிக்கு கோட்டார் இளங்கடை பட்டாரியர் சமுதாய ருத்ரபதி விநாயகர் செவ்விட்ட சாஸ்தா டிரஸ்ட் சார்பில் கொடிப்பட்டம் மரபுபடி விவேகானந்தபுரம் சந்திப்பில் இருந்து மேளதாளங்கள் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் சமர்ப்பிக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.

    இரவு 7 மணிக்கு மத ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டான நிகழ்ச்சியாக கன்னியாகுமரியைச் சேர்ந்த கிறிஸ்தவ மீனவர்கள் கொடிமர கயிறை மேளதாளம் முழங்க ஊர்வலமாக எடுத்து வந்து கோவிலில் ஒப்படைக்கிறார்கள்.

    அதைத் தொடர்ந்து 1-ம்திரு விழாவான 3-ந்தேதி காலை 9 மணிக்கு மேல் 10 மணிக்குள் திருக்கொடியேற்றம் நடக்கிறது. இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு அம்மன் பூப்பந்தல் வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வரும் நிகழ்ச்சியும் நடக்கிறது.

    2-ம் திருவிழாவான 4-ந்தேதி காலை 7 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு வயலின் இன்னிசையும் 9 மணிக்கு கிளி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    3-ம் திருவிழாவான 5-ந்தேதி காலை 7 மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 7 மணிக்கு பக்தி பஜனையும் 9மணிக்கு அன்ன வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    4-ம்திருவிழாவான 6-ந் தேதி காலை 6 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் மாலை 5 மணிக்கு திருவாவடுதுறை ஆதீன மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பக்தி பல்சுவை நிகழ்ச்சியும் 9 மணிக்கு வெள்ளி காமதேனு வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    5-ம் திருவிழாவான 7-ந்தேதி காலை 6 மணிக்கு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதி உலா வருதலும் இரவு 7 மணிக்கு புஷ்பாபிஷேகமும் 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் நடக்கிறது.

    6-ம் திருவிழாவான8-ந்தேதி காலை 7 மணிக்கு யானை வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் இரவு 8 மணிக்கு பக்தி இன்னிசை கச்சேரியும் 9 மணிக்கு இந்திர வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    7-ம் திருவிழாவான 9-ந்தேதி அதிகாலை5-30 மணிக்கு பல்லக்கில் அம்மன் வீதி உலா வருதலும் பிற்பகல்3-30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு பரதநாட்டியமும் இரவு 9 மணிக்கு வெள்ளி இமயகிரி வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    8ம் திருவிழாவான 10-ந்தேதி மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7 மணிக்கு தேவார இன்னிசையும் 8-30 மணிக்கு அம்மன் கொலுசு தேடும் நிகழ்ச்சியும் 9 மணிக்கு பூப்பந்தல் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    9-ம் திருவிழாவான 11-ந்தேதி காலை 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் திருத்தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டம் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது.
    இதில் தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சர் மனோதங்கராஜ் தேர் வடம் தொட்டு இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கிறார்.

    இதில் குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், எம்.பி.க்கள் விஜய்வசந்த், விஜயகுமார், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ. தளவாய்சுந்தரம், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், கன்னியா குமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன், துணைத்தலைவர் ஜெனஸ்மைக்கேல் பேரூராட்சி வார்டு கவுன்சிலர் ஆனிரோஸ் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுக்கிறார்கள். தேர் நிலைக்கு நின்றதும் பகல் 12 மணிக்கு அன்னதானம் நடக்கிறது.

    மாலை 6.30 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 7.30 மணிக்கு தேவார இன்னிசையும் 8.45 மணிக்கு பக்தி பஜனையும் 9 மணிக்கு வெள்ளி கலைமான் வாகனத்தில் அம்மன் வீதிஉலா வருதலும் நடக்கிறது.

    10-ம் திருவிழாவான 12-ந்தேதி  காலை 9 மணிக்கு  மேல் 10 மணிக்குள் அம்மனுக்கு முக்கடல் சங்கமத்தில் ஆராட்டுநிகழ்ச்சி நடக்கிறது. மாலை 5 மணிக்கு மண்டகப்படி நிகழ்ச்சியும் இரவு 8 மணிக்கு நர்த்தனபஜனையும் நடக்கிறது.

    9- மணிக்கு தெப்பத்திருவிழா நடக்கிறது. நள்ளிரவு 11 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் அம்ம னுக்கு ஆராட்டு நிகழ்ச்சி நடக்கிறது. திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.
    கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.
    குடும்பத்தில் நலம், கணவன், மனைவி நல்லிணக்கம், குடும்ப முன்னேற்றம், நீண்ட ஆயுள் வேண்டி பெண்கள் விரதம் இருக்கும் நாள் ரம்பா திருதியை. அனைத்து வளங்களும் வேண்டும் என்று ரம்பா பூஜை செய்த நாள் என்பதால், இந்த நாளுக்கு ரம்பா திருதியை நாள் என்று பெயர். தேவலோகத்தில் உமையவளுக்குத் தோழிகளாக இருக்கும் அரம்பையர்கள், தேவர்களும் அசுரர்களும் பாற்கடலைக் கடையும்போது தோன்றியதாகப் புராணம் சொல்கிறது.

    இவர்கள் தாங்கள் என்றும் இளமை மாறாத கன்னியர்களாகத் திகழ வேண்டும்; தங்களுக்கென்று தனி உலகம் வேண்டும் என்று சிவபெருமானை வேண்டினார்கள்.

    சிவபெருமானும் அவர்களுக்காக ஓர் உலகத்தைப் படைத்தார். அது “அப்சரஸ் லோகம்’ எனப்பட்டது. அந்த உலகத்தில் பாற்கடலில் தோன்றிய அறுபதாயிரம் அப்சரஸ் பெண்களும் வசித்து வந்தார்கள். அவர்களுக்கு தலைவியாக இருந்தவள் ரம்பை.

    அரம்பையர்கள் சிவ பூஜையினை மேற்கொள்பவர்களாகத் திகழ்ந்ததுடன் உமையவளுக்கும் தோழியராகவும் இருந்தார்கள். இவர்களில் ரம்பை, அலம்புசை, மனோகரை, ஊர்வசி, கலாநிதி, கனகை, மேனகை, திலோத்தமை, சந்திரலேகை என்பவர்கள் மிகவும் புகழ் பெற்றவர்கள். இவர்களை அப்சகணம் என்று சொல்வர்.

    இந்த அழகான அப்சரஸ்கள் பல வகையான இசைக் கருவிகளை மீட்டியபடி இனிய குரலில் பாடுவார்கள். ஆடல் கலையில் வல்லவர்கள். “பாற்கடலில் தோன்றிய இவர்களை வழிபட்டால் மகிழ்ச்சியும் செல்வமும் இளமைத் தோற்றமும் கிட்டும் என்று புராணம் சொல்கிறது.

    ரம்பாதிருதியை அன்று விரதம் கடைப்பிடித்து, அருகிலுள்ள சிவாலயத்திற்குச் சென்று சிவபெருமானையும் அம்பாளையும் வழிபட்டால், அரம்பயைர்கள் மகிழ்ந்து வாழ்த்துவார்கள். என்றும் அழகு குன்றாமலும், இளமைத் தோற்றத்துடனும், லட்சுமி கடாட்சம் நிறைந்தும் வாழ வழி வகுப்பார்கள்.

    கலைத் தொழிலில் ஈடுபாடுள்ளவர்களும் இசை, நடனம், பாடல் பயில்வோரும் இந்நாளில் விரதம் மேற்கொண்டால் கலைஞானம் கிட்டுவதுடன் பெயரும் புகழும் கிட்டும் என்பர்.

    திருப்பைஞ்ஞீலி என்ற திருத்தலத்தில் பார்வதி சிவபெருமானை வழிபட வந்த போது, அரம்பையர்கள் வாழை மரங்களாக மாறி நிழல் தந்து உதவி, அவர்களது அருளைப் பெற்றனர். வாரணாசியில் மேனகையும், திருக்கழுக்குன்றத்தில் திலோத்தமையும், சிவபெருமானை வழிபாடு செய்து அருள் பெற்றனர்.

    திருநீலக்குடி, பந்தநல்லூர் போன்ற இடங்களிலும் பல அரம்பையர்கள் வழிபாடு செய்து அருள் பெற்றதாக தலபுராணங்கள் குறிப்பிடுகின்றன.
    காஞ்சிபுரம் குமரகோட்டம் முருகன் கோவில் வைகாசி விசாக பெருவிழாவை முன்னிட்டு தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற உள்ளது.
    காஞ்சிபுரத்தில் உள்ள குமரகோட்டம் சுப்பிரமணிய சுவாமி கோவில் பிரசித்தி பெற்றது.

    தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து செல்கிறார்கள். இந்த கோவிலில் வைகாசி விசாக பெருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம்.

    இந்த நிலையில் இந்த ஆண்டுக்கான வைகாசி விசாகப்பெருவிழா வருகிற 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

    இதையொட்டி தினந்தோறும் சிறப்பு பூஜைகள், வீதி உலா நடைபெற உள்ளது. வருகிற 5-ந்தேதி தேவேந்திர மயில் வாகனம், கோபுர சிறப்பு தரிசனம் நடைபெற உள்ளது.

    9-ந்தேதி திருத்தேர், 11-ந்தேதி மாவடி சேவை நடக்கிறது. 12-ந்தேதி திருத்தேர், விசாகம், தீர்த்த வாரி நடைபெற உள்ளது.

    வருகிற 13-ந்தேதி வள்ளி திருக்கல்யாணம், சூரன் மயில் வாகன சேவையும், 14-ந்தேதி கேடயம், மங்கள கிரி நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது.

    விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.
    திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன.
    கிருபானந்த வாரியார் சுவாமிகள் வாரத்தின் ஏழு நாட்களும் சொல்ல ஏழு சின்னச் சின்ன துதிகளை இயற்றியுள்ளார். திருப்பரங்குன்றம் முதல் வயலூர் வரையான ஏழு திருத்தலங்களில் உறையும் முருகனைப் போற்றிப் பாடப்பட்ட அந்தத் துதிகள், பலன் அதிகம் தரும் படைவீட்டு வாரப்பாடல்கள் என்றே போற்றப்படுகின்றன. உயர்வான அவை இதோ இங்கே தரப்பட்டுள்ளன.

    ஞாயிறு தொடங்கி சனிக்கிழமை வரை தினம்தினம் சொல்லுங்கள். கந்தவேள் கருனையால், எல்லா நாட்களும் ஏற்றமானதாகவே இருக்கும்.

    ஞாயிற்றுக்கிழமை:

    தாயினும் இனிமையாகத் தண்ணருள் செய்வாய் போற்றி!
    சேயென ஆள்வாய் ஞானத் திருமுருகேச போற்றி!
    மீயுயள் பரங்குன்றில் மேவிய வேலா போற்றி!
    ஞாயிறு வாரம் வந்து நலமெலாம் அருள்வாய் போற்றி!

    திங்கட்கிழமை:

    துங்கத்தமிழால் உனைத் தொழுவோர்க்கு அருள் வேலவ போற்றி!
    சிங்க முகனை வதைத்த அருட்செல்வத் திருநாயக போற்றி!
    சங்கப்புலவோர் தமக்கென்றும் தலைவா சிவதேசிக போற்றி!
    திங்கட்கிழமை வந்தருள்வாய் செந்தில்பதி நின்பதன் போற்றி!

    செவ்வாய்க்கிழமை:

    செவ்வான் அனைய திருமேனிச் சேயே நாயேன் துயர் தீராய்
    எவ்வானவரும் ஏத்துகின்ற இறைவா இளம் பூரண போற்றி!
    தெய்வாதனை இல்லாத பரயோகியர் சிவதேசிக போற்றி!
    செவ்வாய்க்கிழமை வந்தருள்வாய் செல்வப் பழநிகுக போற்றி!

    புதன்கிழமை:

    மதவாரணமுகத்தோன் பின் வந்த கந்தா சிவயோகப்
    பதவாழ்வு அருள்வாய் பரனே அரனார் பாலகனே
    உதவாக்கரையாம் அடியேற்கு உண்மைப் பொருளை உரைத்திடவே
    புதவாரமதில் வந்தருள்வாய் பொருவில் திருஏரக போற்றி!

    வியாழக்கிழமை:

    மயானம் உறையும் இறையான மகேசன் பெற்ற குகேசன் எனத்
    தியானப் பொருளாம் திருமுருகா தேவே மாவேதிய போற்றி!
    தயாளசீலா தணிகை முதல் தவர்வாழ் குன்றுதொறும் வாழ்வாய்
    வியாழக்கிழமை வந்தருள்வாய் வேலா கோலாகலா போற்றி!

    வெள்ளிக்கிழமை:

    அள்ளி வழங்கும் ஆறுமுகுத்தரசே விரைசேர் கடம்பணிந்த
    வள்ளிக் கணவா வடிவேலா வரதச் சரதப் பெருவாழ்வே!
    வெள்ளிமலைதேர் வியன் ஞானம் மேவு பழமார் சோலையனே
    வெள்ளிக்கிழமை வந்தருள்வாய் வேத நாத பதம் போற்றி!

    சனிக்கிழமை:

    கனிவாய் வள்ளி தெய்வானைக் கணவா உணர்வோர் கதிர்வேலா
    முனிவாய் எனில் நான் எங்கடைவேன் முத்தா அருணை முனிக்கு அரசே
    இனிவாதனையால் அடிநாயேன் என்றும் குன்றா வணம் வாழ்
    சனிவாரமதில் வந்தருள்வாய் தயவார் வயலூர்ப்பதி போற்றி!
    வாழ்க வையகம்,” வாழ்க வளமுடன்”
    பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு தேரில் மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தை வைத்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், முடி சூட்டினார்.
    வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த பேராலயத்திற்கு தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.இது ஆன்மிக சுற்றுலா தலமாக விளங்குகிறது. இந்த பேராலயம் கீழை நாடுகளின்"லூர்து" நகர் என்று அழைக்கப்படுகிறது. இந்தியாவில் கட்டப்பட்டுள்ள ஆலய கட்டிட அமைப்புகளில் "பசிலிக்கா" என்னும் சிறப்பு அந்தஸ்தை பெற்று விளங்கும். இந்த பேராலயம் வங்க கடற்கரையோரம் அமைந்திருப்பது மேலும்சிறப்பு.

    மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். தொடர்ந்து கடந்த மாதம்(மே) 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதா குளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்ய நற்கருணை ஆசிர் நடைபெற்றது.

    இதன் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடிசூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் பூஜை மேடையில் இருந்து கிரீடத்தை பவனியாக எடுத்துவரப்பட்டு தேரில் மாதாவின் சொரூபத்தில் கிரீடத்தை வைத்து தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ், முடி சூட்டினார். அதை தொடர்ந்து தேர்பவனி, திவ்ய நற்கருணை ஆசீர் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இந்த நிகழ்ச்சியில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்குத்தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவி பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோஜேசுராஜ் மற்றும் உதவி பங்குதந்தைகள், அருட் சகோதரர்கள், சகோதரிகள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
    ×