search icon
என் மலர்tooltip icon

    கோவில்கள்

    வரதராஜப்பெருமாள் திருக்கோவில்
    X
    வரதராஜப்பெருமாள் திருக்கோவில்

    வரதராஜப்பெருமாள் திருக்கோவில்- பூவிருந்தவல்லி

    சென்னை அடுத்த பூவிருந்தவல்லியில் அமைந்துள்ளது, வரதராஜப்பெருமாள் திருக்கோவில். இந்த ஆலயத்தைப்பற்றி இங்கே பார்க்கலாம்.
    ராமானுஜரின் குருவான திருகச்சி நம்பிகளின் அவதாரத்தலம் இதுவாகும். இந்த ஆலயத்தில் திருக்கச்சி நம்பிகள் கையில் விசிறியுடன் காட்சி தருகிறார். இங்கு மூலவரான வரதராஜப்பெருமாள், புண்ணியகோடி விமானத்தின் கீழ், பின் தலையில் சூரியனுடன் இருக்கிறார். இதனால் இது சூரிய தலமாகவும் கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் திருப்பதி வேங்கடேசர், திருவரங்கம் அரங்கநாதர், காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் ஆகியோருக்கும் சன்னிதிகள் உள்ளன.

    மூவருக்கும் தனித்தனியாக பிரம்மோற்சவமும் நடைபெறுகிறது. அப்போது மூவரும் திருக்கச்சி நம்பிக்கு, கருடசேவை காட்சி தருவர். இத்தல தாயார், மல்லிகை மலரில் அவதரித்ததால் 'புஷ்பவல்லி' என்று பெயர். இவள் பூவில் இருந்தவள் என்பதால், இந்த ஊர் 'பூவிருந்தவல்லி' என்றானது. அதுவே மருவி 'பூந்தமல்லி' என்று அழைக்கப்படுகிறது.

    ராமானுஜரின் அவதார தலம் ஸ்ரீபெரும்புதூர். அங்கு அவருக்கு திருநட்சத்திர விழா நடக்கும்போது, பூந்தமல்லி வரதராஜர் ஆலயத்தில் இருந்து மாலை , பரிவட்டம், பட்டு கொண்டு செல்லப்படும். அதே போல் இங்கு திருக்கச்சி நம்பிக்கு திருநட்சத்திர விழா நடை பெறுகையில், அங்கிருந்து மாலை , பரிவட்டம், பட்டு கொண்டுவரப்படும்.

    புஷ்பவல்லி தாயாருக்கு மல்லிகை மலர் சூட்டி வழிபடுகிறார்கள். இந்த அன்னைக்கு வைகாசி பிரம்மோற்சவத்தின்போது, புஷ்ப யாகம் நடக்கிறது. இது சூரியதலம் என்பதால், ஜோதிட ரீதியாக சூரிய திசை நடப்பவர்கள், தந்தையுடன் கருத்து வேறுபாடு உள்ளவர்கள், உடல்நலம் பாதிக்கப்பட்டோர் இத்தல பெருமாளை வழிபட்டால் நலம் கிடை க்கும். திருமாலுக்கு விசிறி சேவை செய்ய எண்ணிய திருக்கச்சி நம்பிகள், முதலில் திருவரங்கம் சென்றார்.

    அரங்கநாதரோ, தான் காவிரிக்கரையில் குளிர்ச்சியாகவே இருப்பதாக சொல்லிவிட்டார். பின்னர் திருக்கச்சி நம்பிகள், திருப்பதி சென்றார். அங்கிருக்கும் வேங்கடேசனோ , தான் மலை மீது இருப்பதால் எப்போதும் குளிரில் இருப்பதாக கூறினார். இதனால் காஞ்சிபுரம் வந்த திருக்கச்சி நம்பிகள், அங்கு உக்கிரமாக இருந்த வரதராஜருக்கு தன்னுடைய விசிறி சேவையை செய்து வந்தார்.

    பூந்தமல்லியில் அவதரித்த திருக்கச்சி நம்பிகள், தினமும் காஞ்சிபுரம் சென்று வரதராஜப்பெருமாளுக்கு விசிறி சேவை செய்து வந்தார். அதோடு இங்கு நந்தவம் அமைத்து மலர்களை தொடுத்து மாலையும் அணிவித்து வந்தார். வயதான பின்பும் இதே போன்று அவர் காஞ்சிபுரம் செல்வார். அவரது தள்ளாத வயதை கருத்தில் கொண்ட வரதராஜப்பெருமாள், பூந்தமல்லிக்கே வந்து காட்சி தந்தார். அவர் காட்சி தந்த இடத்தில்தான் தற்போதைய ஆலயம் இருப்பதாக தல வரலாறு சொல்கிறது.

    தங்கள் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள், இத்தல வரதராஜப்பெருமாளுக்கு செவ்வரளி மாலை அணிவித்து, திருமஞ்சனம் செய்து வஸ்திரம் சாத்தி நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர். சென்னையில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது, பூந்தமல்லி வரதராஜப் பெருமாள் திருக்கோவில்.
    Next Story
    ×