search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்திலும் மகாலட்சுமி மனமாரக் குடிகொண்டு அருள்வாள்.
    மகாலட்சுமிதேவியின் அருளைப் பெற அனைவருமே விரும்புவோம். கீழ்க்காணும் ஸ்லோகத்தை தினமும் மாலைவேளையில் விளக்கேற்றி வைத்துச் சொல்லிவாருங்கள். உங்கள் இல்லத்திலும் மகாலட்சுமி மனமாரக் குடிகொண்டு அருள்வாள். தினமும் இந்த வழிபாட்டைச் செய்ய இயலாதவர்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டுமாவது இதைச் செய்வது நல்லது.

    'ஸஹஸ்ரதள பத்மஸ்த கர்ணிகா வாஸினீம் பராம்
    சரத்பார்வண கோடீந்து ப்ரபாமுஷ்டிகராம் பராம்
    ஸ்வதேஜஸா ப்ரஜ்வலந்தீம் ஸுகத்ருச்யாம் மனோஹராம்
    ப்ரதப்த காஞ்சனநிப சோபாம் மூர்திமதீம் ஸதீம்
    ரத்நபூஷண பூஷாட்யாம் சோபிதாம் பீதவாஸஸா
    ஈஷத்தாஸ்ய ப்ரஸன்னாஸ்யாம்
    சஸ்வத்ஸுஸ்திரயௌவனாம்
    ஸர்வஸம்பத்ப்ரதாத்ரீம் ச மஹாலக்ஷ்மீம் பஜே சுபாம்''

    கருத்து:

    ஆயிரம் தளங்களுடன் கூடிய தாமரை மலரின் நடுவில் வசிப்பவளும் சிறந்தவளும்,  சரத் காலத்தில் உள்ள கோடி சந்திரனுக்கு ஒப்பான காந்தி உள்ளவளும்,
    தனது காந்தியால் மிகவும் பிரகாசிக்கின்றவளும், ஆனந்தமயமாகக் காட்சி தருபவளும், பக்தர்களின் மனத்தைக் கவருகின்றவளும், உருக்கி வார்த்த தங்கத்தின் காந்தியே (பிரகாசமே) உருவெடுத்து வந்தது போன்று இருப்பவளும், பதிவிரதையும், ரத்னாபரணங்களால் அலங்கரிக்கப்பட்டவளும், தங்கப் பட்டாடையால் விளங்குகின்றவளும், மந்தஹாஸத்தால் பிரசன்ன முகமுடையவளும், சாஸ்வதமாய் அமைந்துள்ள யௌவனத்தை உடையவளும், பக்தர்களுக்கு சர்வ சம்பத்துக்களையும் தருபவளும், மங்கலத்தை அருள்கின்றவளுமான ஸ்ரீ மகாலட்சுமியைப் பூஜிக்கிறேன்.

    ஸ்ரீதேவி பாகவதம் 9-வது ஸ்கந்தம், 42-வது அத்தியாயத்தில் கூறப்பட்டுள்ள இந்த ஸ்லோகம் நம் இல்லத்தில் சகல சௌந்தர்யங்களையும் கொண்டுவந்து சேர்க்கக்கூடிய சக்தி கொண்டது.

    மறைசாட்சி தேவசகாயத்துக்கு புனிதர் பட்டம் வழங்கப்பட்டதையொட்டி தேசிய அளவிலான நன்றி விழா 5-ந்தேதி குமரி மாவட்டம் ஆரல்வாய்மொழியில் நடக்கிறது.
    குமரி மாவட்டம் நட்டாலத்தைச் சேர்ந்த மறைசாட்சி தேவசகாயத்துக்கு கடந்த 15-ந் தேதி வாடிகனில் போப் ஆண்டவர் பிரான்சிஸ் புனிதர் பட்டம் வழங்கினார். இதைத்தொடர்ந்து கோட்டார், குழித்துறை மறைமாவட்டம் சார்பில் தேசிய அளவிலான நன்றி விழா கொண்டாட்டம் வருகிற 5-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) ஆரல்வாய்மொழி அருகே உள்ள காற்றாடிமலையை அடுத்து அதாவது நாகர்கோவிலில் இருந்து 4 வழிச்சாலையில் காவல்கிணறு செல்லும் பாதையில் காற்றாடிமலையில் இருந்து 1 கி.மீ. தொலைவில் நடைபெறுகிறது.

    விழாவின் தொடக்கமாக பிற்பகல் 2.30 மணி அளவில் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த கலைநிகழ்ச்சிகள் நடைபெறும். இலங்கைத் தமிழர்கள் வரவேற்பு நடனம் ஆடுகிறார்கள். தோவாளை டி.எம்.ஐ. கல்லூரி, நாகர்கோவில் ஹோலிகிராஸ் கல்லூரி, தொலையாவட்டம் அன்னை வேளாங்கண்ணி கல்லூரி, அனந்தநாடார் குடியிருப்பு ஜெரோம் கல்லூரி, மரியகிரி மலங்கரை கத்தோலிக்க கல்லூரி, கருங்கல் புனித அல்போன்சா கல்லூரி ஆகிய கல்லூரிகளைச் சேர்ந்த மாணவ-மாணவிகள் தேவசகாயம் வாழ்க்கை வரலாறு குறித்த நாட்டியமாடுகிறார்கள்.

    பின்னர் மாலை 4 மணி அளவில் விழாவில் பங்கேற்கும் சிறப்பு விருந்தினர்களுக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மாலை 5 மணியளவில் ஆடம்பரத் திருப்பலி நடக்கிறது. போப் ஆண்டவரின் இந்திய தூதர் லெயோபோல்டா ஜிரல்லி தலைமையில் கர்தினால்கள் ஆஸ்வால்டு கிராசியாஸ் (அகில இந்திய ஆயர் பேரவைத் தலைவர்), ஜார்ஜ் ஆலஞ்சேரி (சீரோ மலபார் கத்தோலிக்க திருச்சபையின் முதல்நிலைப் பேராயர்), தமிழக ஆயர் பேரவைத் தலைவர் ஜார்ஜ் அந்தோணிசாமி, கோவா- டாமன் பேராயர் பிலிப் நேரி பெர்றாவோ, கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, மதுரை பேராயரும், குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரக பரிபாலகருமான அந்தோணி பாப்புசாமி, புதுவை பேராயர் பிரான்சிஸ் கலிஸ்ட், போபால் பேராயர் துரைராஜ், நாக்பூர் பேராயர் எலியாஸ் உள்பட 50 ஆயர்கள் மற்றும் பேராயர்கள் கலந்து கொண்டு திருப்பலி நிறைவேற்றுகிறார்கள்.

    இந்த விழாவில் தமிழக அமைச்சர்கள் மனோதங்கராஜ், செஞ்சி மஸ்தான், அனிதா ராதாகிருஷ்ணன், கீதாஜீவன், சபாநாயகர் அப்பாவு, மாநில சிறுபான்மை ஆணைய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், எம்.பி.க்கள் ஞானதிரவியம், விஜய்வசந்த், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் வக்கீல் மகேஷ், குமரி மாவட்ட எம்.எல்.ஏ.க்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், பாலபிரஜாபதி அடிகளார், குமரி மாவட்ட திருவருட்பேரவை நிர்வாகிகள், சி.எஸ்.ஐ. திருச்சபை பேராயர்கள், பல்சமய பிரதிநிதிகள், குமரி மாவட்ட நிர்வாக அதிகாரிகள், போலீஸ் அதிகாரிகள், நெல்லை, தூத்துக்குடி, மதுரை உள்ளிட்ட பல்வேறு மறைமாவட்டங்களைச் சேர்ந்த பக்தர்கள் கலந்து கொள்ள இருப்பதாக விழா ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.

    விழா மேடை மற்றும் பிரமாண்டமான பந்தல் அமைக்கும் பணி இரவு, பகலாக நடந்து வருகிறது. சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. சுமார் 50 ஆயிரம் பேர் அமரும் வகையில் விழா பந்தல் அமைக்கப்படுவதாக கூறப்படுகிறது. மழை பெய்தாலும் விழாவில் பங்கேற்பவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் இரும்பு தூண்கள் தார்ப்பாய்களால் ஆன மேற்கூரைகளுடன்கூடிய பந்தல் அமைக்கப்படுகிறது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக கழிப்பறைகள், குடிநீர் வசதி உள்ளிட்ட ஏற்பாடுகளும் செய்யப்பட உள்ளன.

    பொதுமக்கள் வந்து செல்ல வசதியாக நெல்லை, பணகுடி, தூத்துக்குடி, நாகர்கோவில், தக்கலை, மார்த்தாண்டம், குளச்சல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்குவதற்கான நடவடிக்கைகளையும் விழா ஏற்பாட்டாளர்கள் மேற்கொண்டு வருகிறார்கள். விழாவுக்கான ஏற்பாடுகளை கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை, குழித்துறை மறைமாவட்ட திருத்தூதரகப் பரிபாலகரும், மதுரை பேராயருமான அந்தோணி பாப்புசாமி, விழா ஒருங்கிணைப்பாளர் அருட்பணியாளர் ஜாண்குழந்தை மற்றும் கோட்டார், குழித்துறை மறைமாவட்டங்களின் அருட்பணியாளர்கள், பொதுநிலையினர் மேற்கொண்டு வருகிறார்கள்.
    சாய்பாபாவை தேடி வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களுக்கு சிறந்த, பண்பான வாழ்க்கை துணை வேண்டும் என வேண்டுதல் வைக்கின்றனர்.
    மராட்டிய மாநிலம் சீரடியில் பிரசித்த பெற்ற சாய்பாபா ஆலயம் அமைந்துள்ளது. தினமும் லட்சக்கணக்கான பக்தர்கள் இந்த கோவிலுக்கு வருகிறார்கள். இந்தியா மட்டுமல்லாது உலகில் பல பகுதியில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் இங்கு வந்து சாய்பாபா அருளை பெற்று செல்கிறார்கள்.

    சாய்பாபாவை தேடி வரும் பெரும்பாலான பக்தர்கள் தங்களுக்கு சிறந்த, பண்பான வாழ்க்கை துணை வேண்டும் என வேண்டுதல் வைக்கின்றனர்.

    இந்த நிலையில் வாழ்க்கை துணையை தேர்ந்தெடுக்கும் வகையில் சாய்பாபா பக்தர்களுக்கு என்று தனியாக திருமண சேவையை தொடங்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது. இதை ஏற்று கோவில் நிர்வாகம் தற்போது புதிதாக பக்தர்கள் வரன் தேடும் வகையில் shirdivivah.com என்ற புதிய சேவையை அறிமுகப்படுத்தி உள்ளது.

    இந்த இணையதளத்தில் மணமகள், மணமகன் தேடுபவர்கள் தங்கள் சுயவிவரம், புகைப்படங்கள் மற்றும் குடும்ப விவரங்களை தெரிவிக்க வேண்டும்.

    இதற்காக பதிவு செய்ய இலவச சேவை, பணம் கட்டி வரன்தேடுதல், வி.ஐ.பி. சேவை என 3 முறைகள் உள்ளது. ஆண்டு பேக்கேஜ் முறைக்கு ரூ.5,100 மற்றும் ரூ.11 ஆயிரம் கட்டணம் நிர்ணயிக்கபட்டு உள்ளது.

    இதன்மூலம் சம்பந்தப்பட்ட வர்களை நேரடியாக தொடர்பு கொண்டு வரன்களை தேர்ந்தெடுக்கலாம். இணையதளத்தில் தினமும் பதிவு செய்யப்படும் அனைத்து சுய விவரங்கள் சாய்பாபா பாதத்தில் வைத்து பூஜிக்கப்படுகிறது.

    ஏழ்மையான ஜோடிகளுக்கு திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் நிர்வாகம் செய்யும். அதற்கான செலவும் ஏற்றுக்கொள்ளப்படும் என கோவில் அறக்கட்டளை தலைவர் ரோஷன்குமார் தெரிவித்து உள்ளார்.

    இந்த சேவையை சாய்பாபா பக்தர்கள் வரவேற்று உள்ளனர்.
    குரு பலமே திருமணத்திற்கு முக்கியம் என்பது பலரின் கருத்து. தசா புத்தி ஒத்துழைக்காமல் திருமணம் நடக்காது என்பது தான் அடிப்படை ஜோதிட விதி.

    ஏழாம் அதிபதி லக்னத்தில் இருந்தால் இளம் வயதில் திருமணம் நடக்கும். தம்பதிகள் நெருங்கிய குடும்பத்து உறவாக இருப்பார்கள்.தம்பதிகள் மிக மகிழ்ச்சியுடன் சந்தோசமாக ஓர் உயிர் ஈருடலாக வாழ்வார்கள். வாழ்க்கைத் துணையின் மேல் அன்பும் அதிக அக்கறையும் இருக்கும்.கணவன், மனைவி இருவருக்குமே தீர்க்காயுளுடன் வாழும் பாக்கியம் பெறுகின்றார்கள். திருமணம் முடிந்தவுடன் தனித் குடித்தனம் செல்வார்கள். அசுப கிரக சம்பந்தம் இருந்தால் பெற்றோர்களுடன் கருத்து வேறுபாட்டால் தனிக்குடித்தனம் செல்வார்கள்.
     
    ஏழாம் அதிபதி குடும்பஸ்தானமான இரண்டாம் இடத்தில் இருந்தால் வாழ்க்கைத் துணை வசதியானவராக இருப்பார். அல்லது நல்ல உத்தியோகத்தில் உள்ள வரன் அமையும். குடும்பம் கோவிலாக இருக்கும். ஒருவரின் பேச்சிற்கு மற்றொருவர் கட்டுப்படுவார்கள். பாவகிரகங்கள் சம்பந்தம் இருந்தால் போராட்டமான வாழ்க்கை, அவமானம், பிரிவு அல்லது இழப்பு ஏற்படும்.
     
    ஏழாம் அதிபதி சகாய ஸ்தானமான மூன்றில் நின்றால் வாழ்க்கைத் துணை வீட்டின் அருகில் இருப்பார். தெய்வ பக்தியும், ஆச்சார அனுஷ்டானங்களை கடைபிடிப்பார். வாலிப வயதில் சீக்கிரமே திருமணம் நடக்கின்றது. சிலர் வீட்டை விட்டு வெளியேறி பெற்றவர்களை எதிர்த்து சுய விருப்ப விவாகம் புரிகின்றனர்.
     
    ஏழாம் அதிபதி சுக ஸ்தானமான நான்கில் இருந்தால் தாய் வழி உறவில் திருமண வாய்ப்பு அதிகம். மனைவி சொல்லே மந்திரம் மீதி எல்லாம் தந்திரம் என்று வாழ்க்கைத் துணைக்கு கட்டுப்பட்டு வாழ்வார்கள். கணவனால் மனைவிக்கு மனைவியால் கணவனுக்கு ஆதாயம் உண்டு. குறிப்பாக குடும்ப சொத்து வெளியில் சென்று விடக் கூடாது என்பதற்காக நடக்கும் திருமணமாகும். உபய லக்னமாக இருந்தால் கேந்திராதிபத்திய தோஷ பாதிப்பு உண்டு. எந்த லக்னமாக இருந்தாலும் ஏழுக்குடையவன் ஐந்தாமிடமான பூர்வ புண்ணிய ஸ்தானத்தில் நின்றால் காதல் திருமணம் நடக்கும் அல்லது நெருங்கிய ரத்த பந்த உறவில் திருமணம் நடக்கும்.

    5, 7-ம் அதிபதிக்கு அசுப கிரக சம்பந்தம் இல்லாத வரை எந்த தொந்தரவும் இருக்காது. சனி, செவ்வாய் சம்பந்தம் இருந்தால் எளிதாக பிரிவினை உண்டாகும்.
     
    ஏழாம் அதிபதி ஆறாம் இடமான ருண, ரோக சத்ரு ஸ்தானத்தில் நின்றால் வாழ்க்கைத் துணைக்கு நோய் பாதிப்பு உண்டாகும் அல்லது கடனால் அவஸ்தை உண்டாகும். வாழ்க்கைத்துணை ஊதாரியாக வாழ்வார். திருமண வாழ்க்கை சிறப்பாக இருக்காது. மிகுதியான கருத்து வேறுபாடு உண்டு. விவாகரத்தில் முடியும் வாய்ப்பு அதிகம்.

    ஏழாம் அதிபதி ஏழாம் இடமான களத்திர ஸ்தானத்தில் அமர்ந்தால் மணவாழ்க்கை சிறப்பாக அமையும் என்பதுதான் பலருடைய கணிப்பு. ஆனால் ஏழுக்குடையவன் ஏழில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையின் கை ஒங்கும். பெண்ணாக இருந்தால் சுய சம்பாத்தியத்தில் சொந்தக்காலில் நிற்பவள். அதனால் மிகுதியான ஈகோவால் தம்பதிகள் பிரிந்து வாழ்வார்கள். பல திருமணங்கள் முறிகின்றன.

    ஏழுக்குடையவன் எட்டில் இருக்கும்போது வாழ்க்கைத் துணையால் திருமணத்துக்குப் பின் பொருளாதார நிலை உயரும். பலருக்கு முதல் திருமண பந்தத்தில் விவாகரத்து, கோர்ட், கேஸ் என அழைந்து மன நோயாளியாகுவார்கள். இது வலுவான இரண்டு தார யோக அமைப்பாகும் ஏழாம் அதிபதி ஒன்பதாம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் நின்றால் பூர்வ ஜென்ம பாக்கிய பலத்தால் ஆதர்ஷன தம்பதியாக வாழ்வார்கள். வாழ்க்கை துணை தைரியமானவர். அவரின் சகோதர, சகோதரிகளால் நன்மையுண்டு.

    ஏழாம் அதிபதி பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் நின்றால் வாழ்க்கைத் துணை சுய தொழில் செய்பவராக இருப்பார் அல்லது கவுரவ பதவியில் இருப்பார்கள். திருமணத்திற்குப் பிறகு பொருளாதாரத்தில் வளர்ச்சியும் புகழும் கிடைக்கும். சுய கவுரவம் உள்ளவராக இருப்பார்கள். நல்ல கல்வி அறிவு உண்டு. படித்த படிப்பிற்கு சம்பந்தமான தொழில் உத்தியோகம் உண்டு.

    சொத்து ககம் என சகல ஐஸ்வர்யங்களும் நிறைந்த திருமண வாழ்க்கை உண்டு. ஏழாம் அதிபதி பதினொன்றாம் இடமான லாப ஸ்தானத்தில் இருந்தால் தம்பதிகள் திரண்ட சொத்து, ககம் நிரம்பியவர்கள். பல வழிகளில் ஆதாயம் கிடைக்கும். மூத்த சகோதர, சகோதரிகளால் ஆதாயமும் அனுகூலமும் கிடைக்கும். செல்வம், செல்வாக்கு நிரம்பிய வாழ்க்கை துணை உண்டு.7 ம் அதிபதி பலம் குறைந்து இருந்தால் இருதார தோஷத்தை ஏற்படுத்திவிடும்.

    ஏழாம் அதிபதி பனிரென்டாம் இடமான அயன, சயன, விரய ஸ்தானத்தில் நின்றால் ஜாதகர் வாழ்க்கைத் துணையால் நிறைய விரயங்களை சந்திப்பார். வரவுக்கு மீறி செலவு செய்வார். கடன், வம்பு வழக்கிற்காக அடிக்கடி தலைமறைவாக வாழ்வார்கள்.

    கடுமையான திருமணத் தடையை தருகிறது. பலருக்கு திருமணம் நடப்பதில்லை. திருமணம் நடந்தால் தொழில், உத்தியோகம் அல்லது கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். சிலர் வாழ்நாள் முழுவதும் அடிமைத்தனமாக வாழ்க்கைத் துணையை நம்பியே பிழைக்கிறார்கள்.
    களத்திர தோஷமும் திருமண காலமும்

    குரு பலமே திருமணத்திற்கு முக்கியம் என்பது பலரின் கருத்து. குருபலம் வந்தால் மட்டுமே திருமணம் ஆகாது என்பதை நினைவில் நிறுத்தவேண்டும்.
     
    ஒருவருக்கு இரண்டு வருடத்திற்கு, ஒருமுறை குருபலம் வரும். குரு பலம் இருந்தால் திருமணம் நடந்து விடும் என்றால் தசா புக்திக்கு வேலையே கிடையாது. அத்துடன் குரு பலம் மட்டுமே திருமணத்தை நடத்தி வைத்தால் 40 வயதை கடந்தும் திருமண வாழ்க்கையை சுவைக்காத முதிர்கன்னிகள், காளையர்களுக்கு ஏன் திருமணம் நடைபெறவில்லை. தசா புத்தி ஒத்துழைக்காமல் திருமணம் நடக்காது என்பது தான் அடிப்படை ஜோதிட விதி.
    உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது.
    சிவராத்திரி தினத்தன்று நடராஜர் உருவத்தில் சிவபெருமான் நடனம் ஆடியதாகக் கூறுவார்கள். இந்த நடனத் தோற்றம் இறைவனின் தத்துவத்தை உணர்ந்த பக்தன் உணர்ச்சியால் மெய் மறந்திருப்பதைப் பிரதிபலிக்கிறது.

    விழித்திருப்பது, தூங்குவது, ஆழ்ந்த தூக்கம் ஆகியவற்றை கடந்த நிலை, மற்ற உணர்ச்சிகள் இந்த நிலையைப் பாதிக்காது. இந்த நிலையில் நித்தியான ஆனந்தத்தை உணருவதே உன்னதமானது. அதையே நடராஜரின் தோற்றம் பிரதிபலிக்கிறது.

    உடல் உள்ளம் ஆகியவற்றைச் சார்ந்த உணர்வுகளும், மனத்தின் எண்ணங்களும், புத்தியின் இயக்கமும் கட்டுப்படும் நிலையே பேரானந்தமானது. இதையே நடராஜரின் மெய் மறந்து கூத்தாடும் நிலையை உணர்த்துகிறது.

    நடராஜர் ஒரு காலை இருத்தியும், ஒரு காலை உயர்த்தியும் ஆடுவது, உலகப் பற்றுகளை மிதித்து அடக்கியும், உன்னதமான ஆன்மீக உணர்வுகளை உயர்த்தியும் வாழ்வது பேரானந்தம் தரும் என்பதை உணர்த்துகிறது.

    எனவே மறக்காமல் நடராஜர் சன்னதிலும் வழிபாடுகள் செய்ய வேண்டும்.
    நாட்டரசன்கோட்டை கண்ணுடைய நாயகி அம்மன் கோவிலில் வைகாசி திருவிழா 4-ந்தேதி தொடங்குகிறது. இதில் புகழ்பெற்ற வெள்ளி ரத விழா 11-ந் தேதி நடைபெறுகிறது.
    சிவகங்கையை அடுத்த நாட்டரசன்கோட்டையில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு சொந்தமான கண்ணுடைய நாயகி அம்மன் கோவில் உள்ளது. உலக மாதாவான உமாதேவி தேவர்களின் வேண்டுகோளை ஏற்று பத்ரகாளி உருவம் கொண்டு கண்ணுடையாள் என்ற பெயரில் இங்கு எழுந்தருளியுள்ளார். கண்நோய் உள்ளவர்கள் இந்த அம்மனுக்கு வெள்ளி கண்மலர் வாங்கி காணிக்கையாக செலுத்தினால். கண்நோய் தீரும் என்று கூறுவார்கள்.

    புகழ் பெற்ற இந்த கோவிலில் நடைபெறும் விழாக்களில் வைகாசி மாத திருவிழாவில் நடைபெறும் வெள்ளி ரத விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. பத்து நாட்கள் நடைபெறும் இந்த திருவிழா நாளை மறுதினம் 4-ந் தேதி காலையில் காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்குகிறது. இதையொட்டி அம்மனுக்கு தினசரி அபிஷேகம் மற்றும் ஆராதனை நடைபெறும். அத்துடன் தினசரி ஒரு வாகனத்தில் அம்மன் திருவீதி உலா வருவார். வருகிற 10-ந் தேதி வெள்ளிக்கிழமை தங்கரத புறப்பாடும், அன்று இரவு அன்ன வாகனத்தில் திருவீதி உலா நிகழ்ச்சி நடைபெறும்.

    11-ந் தேதி சனிக்கிழமை இரவு 7 மணிக்கு மேல் வெள்ளி ரத நிகழ்ச்சி நடைபெறும். மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வெள்ளி குதிரை வாகனத்தில் கண்ணுடைய நாயகி அம்மன் திருவீதி உலா வருவார். 12-ந் தேதி ஞாயிற்றுக்கிழமை தேரோட்டம், 13-ந் தேதி திங்கட்கிழமை பால்குடம் எடுத்தல் நடைபெறுகிறது.

    14-ந் தேதி உற்சவ சாந்தி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அன்று மதியம் அன்னதானமும் மாலையில் அம்மன் உள்வீதி பிரகாரத்தில் உலா வரும் நிகழ்ச்சி நடைபெறும். நிகழ்ச்சி ஏற்பாடுகளை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் ராணிக்கு நாச்சியார் உத்தரவின்பேரில் தேவஸ்தான மேலாளர் இளங்கோ, கண்காணிப்பாளர் சரவணன் கணேசன், கவுரவ கண்காணிப்பாளர் இளங்கோ செட்டியார் மற்றும் தேவஸ்தான ஊழியர்கள் செய்து வருகின்றனர். வெள்ளி ரத நிகழ்ச்சியையொட்டி அரசு போக்குவரத்து கழகத்தின் சார்பில் மதுரை, காளையார்கோவில் மற்றும் சிவகங்கை ஆகிய ஊர்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளது.
    2 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற உள்ள ஆனித்தேரோட்டத்தை முன்னிட்டு நெல்லையப்பர் கோவிலில் பந்தல்கால் நடப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.
    தென் தமிழகத்தில் பிரசித்தி பெற்ற நெல்லையப்பர் -காந்திமதி அம்பாள் கோவிலில் ஆண்டுதோறும் ஆனி மாதம் தேர் திருவிழா விமரிசையாக நடைபெறும். கொரோனா ஊரடங்கால் கடந்த 2 ஆண்டுகளாக தேர் திருவிழா நடைபெறவில்லை. ஊரடங்கு தளர்த்தப்பட்ட பிறகு நெல்லையப்பர் கோவில் திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகள், உற்சவங்கள் நடைபெற்று வருகிறது.

    இந்த நிலையில் வருகிற ஆனி மாதம் தேர் திருவிழாவை சிறப்பாக நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. இதற்கு முன்னோட்டமான பந்தல் கால் நாட்டு விழா நேற்று நடைபெற்றது. அதிகாலையில் கோவில் நடை திறக்கப்பட்டு சுவாமி- அம்பாளுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. தொடர்ந்து திருக்காலுக்கு பூஜைகள் செய்யப்பட்டது.

    கோவில் யானை காந்திமதி முன்செல்ல பந்தல் கால் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு சுவாமி சன்னதியில் உள்ள வாசல் மண்டபம் அருகில் பந்தல்கால் நடப்பட்டது. இதை தொடர்ந்து பால், மஞ்சள் உள்ளிட்ட அபிஷேக திரவியங்கள் கொண்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி கோஷங்கள் எழுப்பி வழிபட்டனர்.

    ஆனிப்பெருந்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சியாக டவுன் புட்டாபுராத்தி அம்மன் கோவில் திருவிழா வருகிற 5-ந்தேதியும் (ஞாயிற்றுக்கிழமை), விநாயகர் திருவிழா 15-ந்தேதியும் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதை தொடர்ந்து ஆனிப்பெருந்திருவிழா ஜூலை மாதம் 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. திருவிழாவில் 11-ந்தேதி தேரோட்டம் நடைபெறுகிறது.
    சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வரப் ரீதியாக அமைகிறது.
    சிந்தித்தால் சிறப்பான பலன்களைக் கொடுப்பவர் சிவபெருமான். எளிய முறையில் பலன் தரும் கணபதிபோல அவர் தகப்பனாரும் அப்படியே தருவார். ஒரு சமயம் பிரயைம் முடிந்து சிருஷ்டி தொடங்கும் காலத்தில் தேவர்கள் கயிலையை அடைந்து தாங்கள் எப்போதும் சக்தியோடு விளங்கும் இடத்தைத் தெரிவிக்கும்படி வேண்டினர் அதற்கு ஈசன்.

    தேவர் பெருமக்களே! நான் எப்போதும் உங்களுக்காக லிங்க வடிவில் இருக்கிறேன். அதில் பிரதிஷ்டை, மந்திர உருவேற்றம் பூஜைகள் எதுவும் இல்லாமல் இருப்பினும் பக்தர்களைக் காப்பேன் என்று பதில் அளித்தார்.

    சிவலிங்கத்தையோ, சாளக்ராமம், வில்வப்பழம் ஆகியவற்றை பஞ்சாயதன பூஜை இல்லாமலும், விதிகள் அறியாமலும் மனத்தூய்மையோடு உள்ளன்பு கொண்டு வழிபாடு செய்தாலும் அதுகூட ஈஸ்வரப் ரீதியாக அமைகிறது.

    லிங்க மூர்த்தென சதாகாலம் விநாமந்த்ராதி சத்க்ரியாம் ப்ரஸன்னோ நிவசாம் ஏவ பக்தி பாஜாம் விமுக்தயே, என்று விவரிக்கிறது.

    வராக புராணம், பதுமராஜம், வைரம், மரகதம் முதலிய ரத்தினங்களான லிங்க பூஜை நல்ல பலனைத் தரும் என்றும், பவிஷ்ய புராணம், மணி, விபூதி, பசுஞ்சாணம், மாவு, தாமிரம், வெண்கலம் இவற்றில் செய்த லிங்க ஆராதனை சிறந்தது என்றும், ஸ்படிக லிங்கம், செல்வம் கெடுத்து விருப்பங்களை அருளும் என்றும் பவிஷ்ய புராணம் கூறுவதை அறிதல் வேண்டும். எப்பொருளில் லிங்கம் செய்தாலும் புகஜக்கு உகந்ததாகும் என விஷ்ணு தர்மோத்தரம் சொல்கிறது.

    பிருத்வி எனப்படும் மண்ணால் செய்த சிவலிங்கம் செய்து ஓராண்டு காலம் சிவமூலத்தால் வில்வம் கொண்டு வந்து வழிபடுபவன், நீண்ட ஆயுள், பலம், செல்வம், செல்வாக்கு பெறுவான், நன் மக்கட் பேறுடன் சுகமாக வாழ்வான், கோருகின்ற வரங்களும் பெறுவான் என்கிறது தைத்தரிய கோசம் என்ற நூல்.
    சின்ன பூஜையால் மன திருப்பதி அடைந்து பேரருள் தருபவர் ஈசன் என்பதால் வேதநூல்கள் இவரை ஆகதோஷி என்று போற்றுகின்றன.

    சிவராத்திரி பூஜை விதி... மகா சிவராத்திரி நாளில் காலைக் கடன்களை முடித்துக் கொண்டு பகலில் கனி, கிழங்கு, பால் உண்டு இரவில் கண் விழித்து சுத்த உபவாசம் கடைப்பிடித்து நான்கு காலம் சிவாலய தரிசனம் செய்து சிவபுராணம், பஞ்சபுராணம் படித்து சிவதாம் ஜெபம் செய்து, சிவலிங்க திருமேனியை வில்வதளங்களால் அர்ச்சனை செய்து முறையாக பக்தியுடன் வழிபடல் வேண்டும்.

    சிவபெருமானை பூஜையால் தான் மகிழச் செய்ய முடியும். பெருமானை விரதம் செய்து தான் மகிழ்ச்சிப்படுத்த முடியும் என்று பல தீபிகா நூல் உரைத்துள்ளது.
    பூஜைம் சம்போ- ஸ்ரீபதே சக்விரதானிச என்பது வாக்கு.

    பத்தாயிரம் ஆண்டுகள் ஆசார நியமத்துடன் கங்கையில் குளித்த தூய்மையை வில்வதளத்தால் சிவனை அர்ச்சனை செய்து பெறலாம் என்பது சிவபுராணத்தின் கூற்று. ஆதிசங்கர பகவத் பாதர், சுத்தநீர் அபிஷேகம்-பத்து வகை பாவங்களையும், பால் அபிஷேகம்-நூறு பாவங்களையும், தயிர்-ஆயிரம் பாவங்களையும், நெல்-பத்தாயிரம் பாவங்களையும், இளநீர்-ஒரு லட்சம் கோடி பாவங்களையும், சந்தனம்-சகல பாவங்களையும் அகற்றும் என்றார்.

    தைலம்-பக்தியையும், பழங்கள்-மக்கள் வசீகரத்தையும், பஞ்சாமிர்தம்-ஆயுளையும், பால்-நல்ல குணத்தையும், தயிர்-உடல் நலத்தையும், தேன்-இசைத் திறனையும், இளநீர்-குழந்தைப் பேறையும், விபூதி-நல்லறிவையும், சந்தனம்-சுகவாழ்வையும், பஞ்சகவ்யம்-கல்வித் திறனையும், பன்னீர்-புகழையும் தரும் என தர்ம சாத்திரங்கள் கூறுகின்றன.

    இறைவனுக்கு அபிஷேகம் செய்து வஸ்திரம், மலர், வில்வமாலை, சந்தனம் சாற்றி சிவார்ச்சனை செய்யும் போது ருத்ராட்சம் அணிந்து விபூதி தரித்து ஓம் நமச்சிவாய மந்திரத்துடன் சிவ பதிகங்களை ஓதி நலன்களை பல பெற வேண்டும்.

    மகா சிவராத்திரி அன்று இரவு கண் விழிப்பதாகக் கூறியபடி இளைய தலைமுறையினர் திரைப்படங்களைக் காணச் செல்கின்றனர். அந்த நாளில் முடிந்த அளவு தவிர்த்து மறுதினம் செல்லலாமே! சிவராத்திரி விரத நாளில் ஐம்புலன்களையும் அடக்கிச் சிவ சிந்தனையில் ஈடுபட்டால் உங்கள் ஆயுளும், ஆரோக்கியமும் கூடும். வாழ்நாள் இனிதாகும். ஓம் நமசிவாய.
    இசையும் பொருளுமாய் விளங்கிடும் தெய்வம்
    கண்ணின் மணியாய்க் காத்திடும் தெய்வம்
    கயிலை என்னும் மலையில் வாழும் தெய்வம்
    உரைகள் கடந்த உயர்ந்திடும் தெய்வம்
    அதுநான் லிங்கத்துள் உரையும் நமசிவாயம்.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், கூடுதலாக ரூ.50 விலையில் 2 லட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கடந்த வாரம் வார இறுதி நாட்களான வெள்ளி சனி ஞாயிற்றுக்கிழமைகளில் வரலாறு காணாத அளவில் பக்தர்கள் தரிசனத்திற்காக குவிந்தனர். பல்வேறு மாநிலங்களில் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் பக்தர்களின் கூட்டம் கட்டுக்கடங்காமல் அலைமோதியது.

    இதன் காரணமாக பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து 48 மணி நேரத்திற்கு பிறகு தரிசனம் செய்தனர். கடந்த வாரம் வெள்ளிக்கிழமை 89, 318 பேர் தரிசனம் செய்தனர். 48, 639 பேர் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.3.76 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

    சனிக்கிழமை 90, 885 பேர் தரிசனம் செய்தனர். 35, 707 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.18 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது. ஞாயிற்றுக்கிழமை 74, 823 பேர் தரிசனம் செய்தனர். 31,159 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். 4.51 கோடி உண்டியல் காணிக்கையாக வசூலானது.

    கடந்த வாரம் 3 நாட்களில் மட்டும் 2 லட்சத்து 54 ஆயிரத்து 848 பக்தர்கள் தரிசனம் செய்தனர். தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டு வழங்கப்படுகிறது. தேவஸ்தானம் சார்பில் பக்தர்களுக்கு வழங்குவதற்காக தினமும் 3 லட்சம் லட்டுகள் தயார் செய்யப்பட்டு வருகிறது.

    1 லட்டு ரூ 50 வீதம் பக்தர்களுக்கு எவ்வளவு லட்டு வேண்டுமென்றாலும் கூடுதலாக தேவஸ்தானம் சார்பில் வழங்கப்பட்டு வந்தது. கடந்த 3 நாட்களில் மட்டும் சராசரியாக 7 முதல் 8 லட்சம் வரை தினந்தோறும் லட்டு விற்பனையானது. இதனால் தற்போது லட்டு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

    இதன் காரணமாக தரிசனத்திற்கு வரும் பக்தர்களுக்கு இலவசமாக ஒரு லட்டும், கூடுதலாக ரூ.50 விலையில் 2 லட்டுகள் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. கூடுதலாக லட்டு கேட்கும் பக்தர்களுக்கு லட்டு தட்டுப்பாடு உள்ளதால் 2 லட்டுகள் மட்டுமே வழங்கப்படும் என கூறுகின்றனர்.

    திருப்பதியில் நேற்று 71,914 பேர் தரிசனம் செய்தனர். 37,234 பக்தர்கள் முடி காணிக்கை செலுத்தினர். ரூ.4.39 கோடி உண்டியல் காணிக்கை வசூலானது.
    வேளாங்கண்ணியில் உலகப்புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயத்தில் திவ்ய நற்கருணை ஊர்வலம் நடைபெற்றது. இதில் திராளானோர் பங்கேற்றனர்.
    வேளாங்கண்ணியில் உலகப்புகழ்பெற்ற ஆரோக்கிய மாதா பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் மாதா கையில் ஏசு குழந்தையை ஏந்தியபடி காட்சி தருகிறார். இங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளிநாடு, வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் தங்கள் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டுதலுக்காவும், குறைகள் நிவர்த்தி அடைந்ததற்கு நேர்த்திக்கடன் செலுத்துவதற்கும் வந்து செல்கின்றனர்.

    பல்வேறு சிறப்புகள் பெற்ற இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் மாதாவிற்கு உகந்த மாதமாக கிறிஸ்தவர்களால் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனால் பல மாவட்டங்களில் இருந்து ஏராளமானோர் பாதயாத்திரையாக வந்து தங்களது நேர்த்திக்கடனை செலுத்தி வருகின்றனர். கடந்த 7-ந்தேதி முதல் சனிக்கிழமை தோறும் மாதாகுளத்தில் திருப்பலி, தேர்பவனி மற்றும் திவ்யநற்கருணை ஆசீர் ஆகியவை நடைபெற்று வருகிறது. .

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான மாதாவிற்கு முடி சூட்டும் நிகழ்ச்சி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது. இதில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது. பின்னர் மாதாவிற்கு கிரீடம் அணியப்பட்டு தேர்பவனி நடைபெற்றது. இந்தநிலையில் நேற்று மாதாகுளத்தில் தஞ்சை மறைமாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் திருப்பலி நடைபெற்றது.

    பின்னர் பூஜை மேடையில் இருந்து திவ்ய நற்கருணை பவனியாக எடுத்து வரப்பட்டது. பின்னர் அங்கு உள்ள வாகனத்தின் மூலம் சிலுவை பாதை வழியாக ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு பேராலயத்தின் அருகே உள்ள கலையரங்கத்தில் வைத்து மறையுறை, பக்தர்களுக்கு திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதில் பேராலய அதிபர் இருதயராஜ், பங்கு தந்தை அற்புதராஜ், பொருளாளர் உலகநாதன், உதவிப்பங்கு தந்தையர்கள் டேவிட் தனராஜ், ஆண்டோ ஜேசுராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
    இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    திருப்பூரை அடுத்த திருமுருகன்பூண்டி சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட சிற்ப கலைக்கூடங்கள் உள்ளன. அங்கு கருங்கல்லில் செதுக்கப்படும் சாமி சிலைகள் மிகவும் பிரசித்தி பெற்றவையாக இருப்பதுடன், தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும், இந்தியாவின் அனைத்து மாநிலங்கள் மட்டுமின்றி, வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் திருமுருகன்பூண்டியில் உள்ள திருமுருகன் குமாரவேல் சிற்பக்கலைக் கூடத்தில் 11 அடி உயரத்தில் பக்த ஆஞ்சநேயர் சிலை மிகவும் தத்ரூபமாக செதுக்கப்பட்டுள்ளது. ஒரே கல்லில் 5 டன் எடையில் இந்த சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் ஆஞ்சநேயரின் தலை பகுதியில் கிரீடம், சூரிய பிரம்மையும், காதுகளில் குண்டலமும், வலதுபுறம் கடாயுதம், இடதுபுறம் வாலும் அதில் மணியும் இருப்பது போன்று சிலை உள்ளது.

    சிற்பி குமாரவேல் தலைமையில் சிற்பிகள் சங்கர், பிரதீப் குழுவினர் 6 மாதங்களில் இந்த சிலையை செதுக்கி முடித்துள்ளனர். இந்த ஆஞ்சநேயர் சிலை புதுக்கோட்டை மாவட்டம் கீரனூரில் உள்ள ஆஞ்சநேயர் கோவிலில் வருகிற 13-ந்தேதி பிரதிஷ்டை செய்யப்படுகிறது.
    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் கொப்புடை அம்மன் கோவில் உள்ளது. இத்தலத்தின் மூலவராகவும், உற்சவராகவும் கொப்புடை நாயகி அம்மன் அருள்பாலிக்கிறார்.
    சிவாலயங்கள் பலவற்றுக்கும் இல்லாத ஒரு விசேஷம் சிதம்பரத்துக்கு உண்டு. மூலவரும் உற்சவரும் ஒருவராகவே இருப்பது வேறு எங்கும் காணாத அதிசயம். அதைப்போல் காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் ஆலயத்திலும் மூலவரும் உற்சவரும் ஒன்றே. இன்னொரு சிறப்பம்சம் இங்கே கருப்பண்ணசாமி குதிரையின் மேல் அமர்ந்த நிலையில் அருள்பாலிக்கிறார். பொதுவாக காளி, துர்கை போன்ற உக்கிர தெய்வங்கள் வடக்கு நோக்கித்தான் இருப்பார்கள். ஆனால் இங்கு அம்பாள் கிழக்கு நோக்கியிருந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    குழந்தைப்பேறு வேண்டிவரும் பெண்களுக்கும், திருமணத்தடையைப் போக்கவேண்டி வருவோருக்கும் கண்கண்ட தெய்வமாகத் திகழ்கிறாள் காரைக்குடி கொப்புடை அம்மன். இதைத்தவிர, சிறு வியாபாரிகள் முதல் வர்த்தகப் பிரமுகர்கள் வரை புதிதாகத் தொழில் தொடங்கினாலோ, தொழில் அபிவிருத்தி வேண்டுமென்றாலோ இந்தக் கொப்புடை அம்மனைத்தான் வணங்கி வழிபட்டுச் செல்கின்றனர். கேட்பவருக்கு கேட்ட வரங்களை வாரி வழங்கும் தாயாகத் திகழ்கிறாள்.

    காரைக்குடி நகரின் நடுவில் கோயில் அமைந்துள்ளது ஒரு தனிச் சிறப்பாகும். கோயிலின் நுழைவாயிலில் உள்ள ராஜகோபுரம் மூன்று நிலைகளுடன் ஓங்கி உயர்ந்து நிற்கிறது. அம்மனின் அருள் பெற உள்ளே நுழைந்ததும், ‘சோபன மண்டபம்’ காட்சி தருகிறது. இடப்புறம் விநாயகர் சந்நிதியும், வல்லத்துக் கருப்பர் சந்நிதியும் உள்ளன. வலப்புறம் வண்ண மயில்வாகனன் தண்டாயுதபாணியாக அருள்புரிகிறார்.

    தலவரலாறு:

    ஒரு காலத்தில் இந்தப்பகுதி முழுவதும் வனப்பகுதியாக இருந்தது. இதில் காரை மரங்கள் அதிகம் வளர்ந்திருந்தன. அவற்றைச் சமன்படுத்தி மக்கள் குடியேறியதால், 'காரைக்குடி' என்று அழைக்கப்படலாயிற்று. காரைக்குடியிலிருந்து 4 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது செஞ்சை சங்கராபுரம். இங்கு காட்டம்மன் கோயில் கொண்டிருக்கிறார். இங்குள்ள காட்டம்மனும் கொப்புடை நாயகியும் அக்காள் தங்கை. காட்டம்மனுக்கு ஏழு பிள்ளைகள். கொப்புடை நாயகிக்கோ பிள்ளைகள் இல்லை.

    அக்காளின் குழந்தைகளைப் பார்க்க அரிசி மாவில் செய்யப்பட்ட கொழுக்கட்டைகளைச் செய்து எடுத்துக்கொண்டு தங்கை பாசத்துடன் சென்று பார்த்து வருவது வழக்கம். ஆனால், அக்காளுக்கோ புத்தி கோணாலாக வேலை செய்தது. தன் தங்கை, தனது பிள்ளைகளைப் பார்க்க அடிக்கடி வருவதை விரும்பவில்லை. அதனால், தன் பிள்ளைகளை ஒழித்து வைத்துவிட்டு தங்கையிடம் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார். இதைக் குறிப்பால் உணர்ந்த கொப்புடை நாயகி, 'ஒளித்து வைக்கப்பட்ட பிள்ளைகளை இனி பார்க்க வரமாட்டேன்' எனக் கூறி உக்கிரமாகப் போய் அமர்ந்து விட்டார். அக்கா தன் தவற்றை உணர்ந்து கலங்கினார். கொப்புடை நாயகி தன் அக்காவை மன்னித்து அருளினார் என்பது இந்தக் கோயிலின் தலவரலாறு.

    ஆதிசங்கரர் தனது ஶ்ரீசக்கரத்தை வைத்து வழிபட்ட தலம் என்பதால், இந்த ஆலயத்துக்குள் அருகில் வரும்போதே இதன் ஆகர்ஷண சக்தியை நம்மால் உணர முடியும். காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடைநாயகி அம்மன் !காரைக்குடியின் காவல் தெய்வம், கொப்புடை நாயகி அம்மன், காரைக்குடிக்கு மட்டுமல்ல, தென் மாவட்ட மக்களுக்கே வளம் பல தந்து, நலமுடன் காக்கும் நாயகியாகத் திகழ்கின்றாள்.

    சிவன் தலங்களில் சிதம்பரம் நடராஜர் கோயிலில் தான் மூலவரும் உற்சவரும் ஒன்றாக இருக்கும். அதேபோல் அம்மன் தலங்களில் மூலஸ்தானத்தில் இருக்கும் அம்மனே உற்சவ மூர்த்தியாக இருப்பது காரைக்குடி கொப்புடை நாயகி அம்மன் கோயிலில் தான். காவல் தெய்வம் கருப்பண்ணசாமி வேறெங்கும் இல்லாத கோலத்தில் குதிரையில் அமர்ந்தபடி இங்கு அருள்பாலிக்கிறார்.

    சரும வியாதிகள், குழந்தைப் பேறு இல்லாமை போன்ற குறைபாடுகளினால் அவதிப்படுவோர், மற்றும் மண வாழ்வில் பல பிரச்சினைகளைச் சந்திப்போர் போன்றவர்கள் அனைவரும் வந்து வழிபட்டு அம்மனின் அருளை பெற்று தங்கள் பிரச்சனைகளிலிருந்து விடுபடுகின்றனர். உடல்நலக் குறைவினால் அவதிப்படுவோர், இங்கு வந்து பிரார்த்தனை செய்து செல்கின்றனர்.

    சித்திரை மாதம் கடைசி செவ்வாய் கிழமை செவ்வாய்ப் பெருந்திருவிழா தொடங்கி வைகாசி மாதம் முதல் வாரம் முடிய 10 நாள் மிகச்சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தில் நான்கு செவ்வாய் கிழமை வந்தால் அதில் இரண்டாவது செவ்வாய் கிழமையும், ஐந்து செவ்வாய் கிழமை வந்தால் அதில் மூன்றாவது செவ்வாய் கிழமையும் கொப்புடையம்மனுக்கு பூச்சொரிதல் நடைபெறும்.

    சித்திரை வருடப்பிறப்பு, புரட்டாசி நவராத்திரி திருவிழா, ஆடிச் செவ்வாய், மார்கழி திருப்பள்ளி எழுச்சி, பங்குனி தாராபிஷேகம் ஆகியன இக்கோயிலின் சிறப்பான திருவிழா ஆகும்.

    இக்கோவில் காலை 6 மணி முதல் 11 மணி வரை மற்றும் மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.
    ×