என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    மனிதனுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாக இருப்பது கிரகங்களின் சுழற்சிதான். இந்த கிரகங்களுக்கான தனிக்கோவில்கள் தமிழகத்தில் 8 உள்ளன. இந்த கோவில்களை பற்றி பார்க்கலாம்.
    மனிதனுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாக இருப்பது கிரகங்களின் சுழற்சிதான். இந்த கிரகங்களுக்கான தனிக்கோவில்கள் தமிழகத்தில் 8 உள்ளன. அவற்றில் சூரியன், சந்திரன், சுக்கிரன்,ராகு ஆகிய கிரகங்களுக்கான கோவில்கள் தஞ்சை மாவட்டத்திலும், செவ்வாய், கேது,புதன், கோவில்கள் நாகை மாவட்டத்திலும், குருபகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியிலும், சனி பகவான் ஆலயம் புதுவை மாநிலம் திருநள்ளாறிலும் உள்ளன.

    சூரியனார் கோவில்(ஞாயிறு);- தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம்- ஆடுதுறை சாலையில் ஆடுதுறையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சூரியனார் கோவில். இங்கு மூல மூர்த்தியாக உள்ள சூரிய பகவானுடன் உஷா தேவியும், சாயா தேவியும் உள்ளனர். இந்த கோவிலை முதற் குலோத்துங்க சோழன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இங்கு சூரிய பகவானுடன் 8 கிரகங்களும் தனித்தனி கோவில்களாக அவர்களுக்கு உரிய திசைகளில் சூழ்ந்து அமைந்துள்ளன. ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச்சனி உள்ளவர்கள் வேறு நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் சூரியனார் கோவிலுக்கு வந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் வரை தலவாசம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்குவது உறுதி.

    திங்களூர் சந்திரன் கோவில்(திங்கள்);-தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு அருகே திங்களூரில் சந்திரன் கோவில் உள்ளது. சுற்றி வர வயல்வெளிகள் இருக்க நடுவில் ஒய்யாரமாக அமைந்துள்ளது. இங்குபெரியநாயகி சமேத கைலாசநாதர் மூலவராக அமைந்துள்ளார். திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள் ஆகும். தொழுநோய் மற்றும் சித்த பிரம்மையால் அவதிப்படுபவர்கள் சந்திரனை வணங்கினால் அவை நீங்கும்.

    வைத்தீசுவரன் கோவில் அங்காரகன்(செவ்வாய்);-

    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வைத்தீசுவரன் கோவில். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியான அங்காரகன் என்னும் செவ்வாய் பகவான் இங்கு வீற்றிருக்கிறார். பிறந்தாலும், இறந்தாலும் போக மோட்சங்கள் கொடுக்கும் பெருமை உடையது இத்தலம். இங்கு வைத்தியநாதசாமியும், தையல் நாயகி அம்மனும் வீற்று இருக்கின்றனர். இந்த ஆலயம் வந்து இங்கு தரப்படும் திருச்சாந்து உருண்டையை சாப்பிடுபவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கும்.

    திருவெண்காடு புதன் பகவான்(புதன்);- மிதுனம், மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் பகவான், நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா, பூம்புகார் சாலையில் உள்ள திருவெண்காட்டில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சுவேதாரண்யேஸ்வரரை இறைவனாகவும், பிரம்ம வித்தியாம்பிகையை இறைவியாகவும் கொண்ட இக்கோவில், காசிக்கு சமமானதாக கருதப்படும் 6 தலங்களுள் ஒன்றாகும்.

    ஆலங்குடி குருபரிகார தலம்(வியாழன்);-குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று கூறுவார்கள். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குருபகவான் ஆலங்குடியில் வீற்றிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே குடந்தை-மன்னார்குடி சாலையில் அமைந்துள்ளது குருபரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்.ஏழவார் குழலி அம்மையுடன் இறைவன் வீற்றிருக்கிறார். தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதோடு மஞ்சள் உடை , புஷ்பராகம், அணிந்து மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்து, கொண்டக்கடலை தானம் செய்ய வேண்டும்.இதனால் மன மகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம் முதலியவற்றை பெறலாம்.

    கஞ்சனூர் சுக்கிரன் தலம்(வெள்ளி);- செல்வச் செழிப்புடன் வாழ பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுக்கிர பகவான் ஆலயம் தஞ்சை மாவட்டம், கும்ப கோணத்தில் இருந்து கல்லணை-பூம்புகார் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வெள்ளி நிறம் கொண்ட சுக்கிர பகவான் தனித்தன்மைகளோடு திகழ்கிறார். அதன்படி தன்னை வழிபடும் பக்தர்களுக்கு நல்ல மதிப்பையும், அதிர்ஷ்டத்தையும் கொடுப்பார்.

    திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்(சனி பகவான்);-புதுவை மாநிலம் திருநள்ளாறில் அமைந்துள்ளது சனீஸ்வரர் ஆலயம். காரைக்காலில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தக்கோவிலில் மூலவராக நள்ளாற்றீசுவரர்(தர்ப்பாரண்யேசுவரர்) லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.கோவிலின் பலிபீடம் சற்று விலகி இருப்பது இங்கு மட்டும்தான் என்பது தனிச் சிறப்பு.

    இங்கு அனுக்கிரக மூர்த்தியாக வீற்றிருக்கும் சனீஸ்வரபகவான் பாரபட்சமின்றி அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்.

    திருநாகேசுவரம் ராகு பகவான்;-தஞ்சை மாவட்டம் திருநாகேசுவரத்தில் ராகு பகவான் கோவில் கொண்டுள்ளார். கிரிகுஜாம்பிகை சமேத நாகநாதர் கோவில் வெளிப்பிரகாரத்தில் தனது இரு தேவியருடன் வீற்றிருக்கிறார்.இங்கு ராகுபகவான் மீது பால் அபிஷேகம் செய்யப்படும் போது அவருடைய உடற் பாகம் நீல நிறமாக மாறுகிறது. இந்த கோவிலுக்கு வந்து நாக நாதரை வழிபடுவது பூர்வ புண்ணிய பிராப்தம் இருந்தால் தான் முடியும். என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஞாயிற்றுகிழமைகளில் ராகுகாலத்தில் ராகுபகவானை வழிபடவேண்டும். நாகராஜனுக்கும், துர்க்கைக்கும், அர்ச்சனை செய்வதால் ராகு கிரக தோஷங்களை நீக்கலாம்.

    கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்;- நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் கீழப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ளது கேது பகவான் ஆலயம்.தரும குளம் என்ற இடத்தில் இறங்கி கீழப்பெரும்பள்ளம் நோக்கி செல்ல வேண்டும். கோவிலின் வடக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி கேது பகவான் அருள்பாலிக்கிறார்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் வருகின்ற 25-ந்தேதி விசாக திருவிழா நடைபெறக்கூடிய நிலையில் திருவிழா ரத்து என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருப்பது பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது.
    திருப்பரங்குன்றம்

    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கொண்டாடப்படும் திருவிழாக்களில் வைகாசி விசாகத் திருவிழா சிறப்பு வாய்ந்ததாகும். இந்தத் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் 10 நாட்கள் கொண்டாடப்படும். கடந்த காலங்களில் விசாக திருவிழா நடைபெற்ற நாட்களில் மதுரை நகரில் இருந்து திருப்பரங்குன்றம் கோவில் வரை ஆயிரக்கணக்கான பக்தர்கள் குடும்பத்துடன் பாத யாத்திரையாக வருவார்கள்.

    அதனால் திருவிழா களைகட்டும். ஆனால் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பரவல் காரணமாக கோவிலுக்குள்ளே விசாக விழா நடைபெற்றது. நடப்பு ஆண்டில் வழக்கம்போல விசாக திருவிழா கொண்டாடப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கொரோனா 2-வது அலை வேகமாக பரவி வருவதால் கோவில் மூடப்பட்டுள்ளது.

    வருகின்ற 25-ந்தேதி விசாக திருவிழா நடைபெறக்கூடிய நிலையில் திருவிழா ரத்து என்று கோவில் நிர்வாகம் அறிவித்திருப்பது பக்தர்களுக்கு பெரும் ஏமாற்றத்தை தந்துள்ளது. மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் அழகர் கோவிலில் சித்திரை திருவிழா உள்திருவிழாவாக நடைபெற்றபோதிலும், கடந்த ஆண்டில் விசாக திருவிழா கோவிலுக்குள் உள்திருவிழா நடைபெற்றபோதிலும் நடப்பாண்டில் விசாக திருவிழாவை ரத்து செய்வதா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    மேலும் கடந்த ஆண்டைப் போலவே கோவிலுக்குள் விசாகத் திருவிழாவை நடத்தப்பட வேண்டும் என்று பக்தர்கள் எதிர்பார்த்து உள்ளனர்.
    தன்னை சுற்றியிருந்த ஒவ்வொருவராலும் பாவி என்று இழிவாக கருதப்பட்ட சக்கேயு, தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைவிட, அதற்கு பரிகாரம் செய்வதை முக்கியமாகக் கருதினார்.
    ஆண்டவரைக் காண்பதற்கு வாய்ப்புள்ள போதே அவரைத் தேடுங்கள்; அவர் அண்மையில் இருக்கும்போதே அவரை நோக்கி மன்றாடுங்கள். கொடியவர் தம் வழிமுறையையும், தீயவர் தம் எண்ணங்களையும் விட்டுவிடுவார்களாக; அவர்கள் ஆண்டவரிடம் திரும்பி வரட்டும்; அவர் அவர்களுக்கு இரக்கம் காட்டுவார்; அவர்கள் நம் கடவுளிடம் வரட்டும்; ஏனெனில் மன்னிப்பதில் அவர் தாராள மனத்தினர் (எசாயா: 55:6,7).

    லூக்கா 19-ம் அதிகாரத்தில் சக்கேயு என்ற மனிதரை பற்றி கூறப்பட்டுள்ளது. இயேசு எரிகோவுக்கு வந்திருக்கிறார் என்பதை அறிந்த சக்கேயு, அவரைப் பார்க்கும் ஆவலில் அதற்கு என்ன வழி என்று தேடினார். அதற்கு ஒரு தடை இருந்தது. அவர் மிகவும் குள்ளமாய் இருந்தார். மேலும் அங்கு ஏற்கனவே இயேசுவை காண்பதற்கு மக்கள் திரளாய் கூடி நின்றிருந்தனர். அதனால் அவரால், இயேசுவை நெருங்கிப் பார்க்க முடியவில்லை.

    சக்கேயு பெரிய செல்வந்தர் மட்டுமல்ல, அவர் வரிதண்டுவோருக்குத் தலைவராகவும் இருந்தார். அவருக்கு கீழ் பலர் வேலை செய்தனர். ஆனாலும் அவர் அதை பற்றியெல்லாம் சிந்திக்கவில்லை. அவருடைய உள்ளத்தில் ‘இயேசுவை காண வேண்டும்’ என்ற எண்ணம் மட்டுமே மேலோங்கி இருந்தது. எனவே தன்னுடைய தகுதி மற்றும் அந்தஸ்தை அவர் ஒரு பொருட்டாக எண்ணாமல், அங்கிருந்த ஒரு காட்டு அத்தி மரத்தின் மேல் ஏறினார். ஏனெனில் அந்த வழியாகத்தான் இயேசு வருகிறார் என்பதை அவர் முன்பே அறிந்திருந்தார்.

    தங்களது தேவைக்காக இயேசுவை தேடி வந்த மக்களின் மத்தியில், எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் அவரை காண வேண்டும் என்ற எண்ணத்தோடு மட்டுமே மரத்தின் மீது ஏறி இருந்தார், சக்கேயு. ‘மனிதனோ முகத்தை பார்க்கிறான் தேவனோ உள்ளத்தை காண்கிறார்’ என்ற வசனத்தின்படி, சக்கேயுவின் அன்பை உணர்ந்த இயேசு, தாமாகவே சக்கேயு ஏறி அமர்ந்திருந்த மரத்தின் அருகில் வந்தார்.

    வந்தவர் அவரை பார்த்து, “சக்கேயு.. விரைவாய் இறங்கி வாரும். இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார்.

    சக்கேயு, யாரை தான் காண வேண்டும் என்று ஆர்வமுடன் வந்தாரே, அவரே தன்னுடைய வீட்டிற்கு வருகிறேன் என்கிறாரே என்ற ஆனந்தத்தில், ஆர்வமாய் மரத்திலிருந்து இறங்கி வந்தார். பின்னர் இயேசுவை வணங்கி, அவரை தன்னுடைய வீட்டிற்கு மகிழ்ச்சியுடன் அழைத்துச் சென்றார்.

    சக்கேயுவையும், அவர் செய்யும் தொழிலையும் பற்றி அறிந்த மக்கள், அவரை ‘பாவி’ என்று அழைத்தனர். ‘ஒரு பாவியின் வீட்டிற்கு இயேசு செல்கிறார்’ என்று அவர்கள் கூறிக்கொண்டனர். ஆனால் அனைத்தையும் அறிந்த தேவன், சக்கேயுவை குற்றப்படுத்தவும் இல்லை, குறை கூறவும் இல்லை.

    இயேசுவின் அழைப்பை ஏற்ற சக்கேயு, மரத்தில் இருந்து மட்டும் இறங்கி வரவில்லை, தன்னுடைய பாவ வாழ்க்கையை விட்டும் விலகி வந்தார். தன்னுடைய பாவத்தை பற்றி இயேசு எதுவும் கூறாத போதும், சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால், நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று இயேசுவிடம் கூறினார்.

    தன்னை சுற்றியிருந்த ஒவ்வொருவராலும் பாவி என்று இழிவாக கருதப்பட்ட சக்கேயு, தன்னுடைய பாவத்தை அறிக்கையிடுவதைவிட, அதற்கு பரிகாரம் செய்வதை முக்கியமாகக் கருதினார். அதனால்தான் மன்னிப்பதில் தாராள மனம் படைத்தவராக இருந்த இயேசு கிறிஸ்து, தாமாகவே சக்கேயுவின் செயல்களைப் பார்த்து அவரை நோக்கி இவ்வாறு கூறினார். “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில் இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிட மகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

    இறைவனின் அழைப்பு என்பது ஒவ்வொருவருக்கும் கொடுக்கப்படுகிறது. அதனை நாம் ஏற்கும் விதம்தான் மாறுபடுகிறது. தொடக்க நூலில் ஆதாம் - ஏவாள் பாவம் செய்ததால், இறைவனுக்கு பயந்து தோட்டத்தில் ஒரு மரத்தின் பின் மறைந்து இருந்தார்கள். கடவுள் தாமே அவர்களை அழைத்தபோதும், அவரை எதிர்கொள்ள முடியாமல் தவித்து நின்றனர். கீழ்படியாமையால் பாவம் செய்த அவர்கள் இருவரும், தங்களின் பாவத்தை குறித்து வருந்தவும் இல்லை; அதற்கான பரிகாரத்தை தேடவும் இல்லை. செய்த செயலுக்கு மற்றவர்களை காரணம் காட்டினர்.

    ஆனால் சக்கேயுவோ, இறைவன் தனக்கு விடுத்த அழைப்பை ஏற்று, அதை சரியான முறையில் பயன்படுத்திக்கொண்டு மீட்பை அடைந்தார். எனவே இந்த நாளில் நாமும் நமக்கு வாய்ப்பு கிடைக்கும் இந்த தருணத்திலேயே, பாவ வாழ்க்கையை மாற்றி அமைத்துக் கொள்வோம். அத்துடன் நம்மால் பாதிக்கப்பட்டவர்களிடம் மன்னிப்பு கேட்டு, அவர்களின் பாதிப்புக்கு ஈடாக நம்மால் இயன்ற உதவிகள் செய்யும் வரத்தையும், பலத்தையும் இறைவனிடம் மன்றாடி கேட்போம்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழாவின் 10-ம் நாளில் சப்தாவரணம் நிகழ்ச்சியையொட்டி உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பெரிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால், வழக்கமாக நடைபெறும் பூஜைகள் பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் மூடப்பட்டு உள்ளது. நித்தியப்படி கால பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இக்கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் காலை, மாலை வேளைகளில் தங்க கருட வாகனம், கற்பக விருட்சம், சிம்மம், யாளி, இரட்டை பிரபை, கருடன், சேஷம், அனுமந்த வாகனம், ஹம்ச வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் கருட மண்டபத்தில் எழுந்தருளினார்.

    திருவிழாவின் 9-ம் நாளில் கொரோனா தடை உத்தரவின் காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு நம்பெருமாள் சித்திரை தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக கருட மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சந்திர புஷ்கரணியில் நம்பெருமாளுக்கு பதிலாக சயன பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ரேவதி மண்டபம் சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழாவின் 10-ம் நாளான நேற்று சப்தாவரணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இன்று செவ்வாய்க்கிழமை) நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார். அத்துடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.
    ‘உங்களிடம் ரமலான் வருகை புரிந்துள்ளது. அது மாதங்களின் தலைவன். எனவே, அது நல்வரவாகட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: பைஹகீ)
    புனித ரமலான் மாதத்திற்கு ‘ஸய்யிதுஷ் ஷுஹூர்’ - ‘மாதங்களின் தலைவன்’ எனும் தத்துவப் பெயரும் உண்டு. இத்தகைய தத்துவப் பெயரைக் கொண்ட இம்மாதம் மகத்துவமிக்கது.

    நாட்களின் தலைவன் வெள்ளிக்கிழமை ஆகும். வெள்ளிக்கிழமைக்கென்று ஒரு தனிச்சிறப்பு உண்டு. இந்த தனிச்சிறப்பு மற்ற நாட்களுக்கு இல்லை. இவ்வாறே புனித ரமலானுக்கென்று தனிச்சிறப்பு உண்டு. இத்தகைய தனிச்சிறப்பு மற்ற மாதங்களுக்குக் கிடையாது.

    ‘நாட்களின் தலைவன் வெள்ளிக்கிழமை ஆகும். மேலும் அந்த தினம் இரண்டு பெருநாட்களை விட இறைவனிடம் மகத்துவமிக்கது ஆகும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அபூலுபாபா பின் அப்துல் முன்திர் (ரலி), நூல்: இப்னுமாஜா)

    ‘மாதங்களின் தலைவன் புனித ரமலான்; நாட்களின் தலைவன் புனித வெள்ளிதினம் ஆகும்’ என இப்னுமஸ்ஊத் (ரலி) தெரிவிக்கிறார்கள்.

    ஒரு தடவை நபி (ஸல்) அவர்கள் தமது அன்புத் தோழர்களிடம் உரையாற்றும் போது, ‘அடியார்கள் ரமலானில் இருக்கும் மகத்துவத்தை முழுமையாக தெரிந்து கொண்டால், ஆண்டு முழுவதும் புனித ரமலானாக இருக்க வேண்டுமே என எனது சமுதாயத்தினர் ஆசை கொள்வர்’ என குறிப்பிட்டார்கள். (அறிவிப்பாளர்: இப்னு மஸ்ஊத் (ரலி).

    மற்றொரு தடவை நபி (ஸல்) அவர்கள் குறிப்பிடுகையில், ‘ரமலானுக்காக வருட ஆரம்பத்திலிருந்து வருட நிறைவு வரைக்கும் சுவனம் அலங்கரிக்கப்படுகிறது. ரமலானின் முதல் நாள் துவங்கினால், இறை சிம்மாசனத்திற்கு கீழ் திசையிலிருந்து தென்றல் காற்று வீசுகிறது. அதனால் சுவனத்தின் மரக்கிளைகளும், இலைகளும் மெல்லிய சப்தத்தை ரீங்காரம் இடுகிறது. இதை சுவன பேரழகிகள் காட்சி காணுகிறார்கள். ‘இறைவா! இந்த மாதத்தில் நோன்பு நோற்கும் உனது அடியார்களை எனக்கு கணவனாக தேர்வு செய்வாயாக; எங்களின் மூலம் அவர்கள் கண்குளிர்ச்சி பெறட்டும்; அவர்களின் வழியாக நாங்களும் கண் குளிர்ச்சி அடையட்டும் என்று கூறுவார்கள்’ என்று நபி (ஸல்) தெரிவித்தார்கள்.

    புனித ரமலானில் லைலத்துல் கத்ர் எனும் ஓர் இரவு உண்டு. அது ஆயிரம் மாதங்கள் நன்மை செய்வதை விட சிறப்பானது. இந்த சிறப்பு வேறு எந்த மாதத்திலும் கிடையாது. புனித ரமலானின் ஒவ்வொரு இரவிலும் 6 லட்சம் நரக கைதிகள் விடுதலை செய்யப்படுகிறார்கள். ரமலானின் நிறைவு நாளில் ஒட்டு மொத்த மாதமும் விடுதலை செய்யப்பட்ட எண்ணிக்கை அளவு ஒரே நாளில் மட்டும் நரகத்தில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

    ‘உங்களிடம் ரமலான் வருகை புரிந்துள்ளது. அது மாதங்களின் தலைவன். எனவே, அது நல்வரவாகட்டும்! என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: பைஹகீ)

    ‘உங்களிடம் ரமலான் வந்துள்ளது. அதில் உங்களில் போட்டி போடுவோரை இறைவன் உற்று நோக்குகிறான். மேலும் இறைவன் உங்களைப் பற்றி தமது வானவர்களிடம் பெருமை பாராட்டுகிறான். எனவே நீங்கள் அல்லாஹ்விடம் உங்களை சிறந்தவராக காட்டி விடுங்கள். பாக்கியமற்றவர் யாரென்றால், எவர் இறைவனது அருளை விட்டும் தடுக்கப்படுகிறாரோ அவரே ஆவார் என நபி (ஸல்) கூறினார்கள்’. (நூல்: தப்ரானீ)

    இத்தகைய பாக்கியம் நிறைந்த ரமலான் மாதத்தில் அதன் சிறப்புக்களை அடைய நாம் முயற்சிகள் செய்வோம், இறையருள் பெறுவோம்.

    மவுலவி அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.

    இப்தார்: மாலை 6.40 மணி

    நாளை சஹர் முடிவு: அதிகாலை 4.23 மணி
    கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த தடை உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு வீடுகளிலும், வீட்டு மாடிகளிலும் தொழுகை நடத்தினர்.
    இஸ்லாமியர்கள் ரமலான் மாதம் முழுவதிலும் நோன்பு நோற்பதோடு இரவு சிறப்புத் தொழுகையில் ஈடுபடுவர். ரமலான் மாதத்தின் கடைசி 10 இரவுகளில் ஒரு இரவில் இஸ்லாமியர்கள் புனித வழிகாட்டியான திருக்குர்ஆன் அருளப்பட்ட தினமாக கருதப்பட்டு அன்றைய தினத்தை லைலத்துல் கத்ரு என்ற புனித இரவாக வழிபடுகின்றனர். ரமலான் மாதத்தின் 27-வது இரவான நேற்று இஸ்லாமியர்கள் இரவு முழுவதிலும் வீடுகளில் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    கொரோனா ஊரடங்கு காரணமாக பள்ளிவாசல்களில் தொழுகை நடத்த தடை உள்ள நிலையில் இஸ்லாமியர்கள் தங்களது குடும்ப உறுப்பினர்களோடு வீடுகளிலும், வீட்டு மாடிகளிலும் தொழுகை நடத்தினர். இதில் சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை கலந்துகொண்டனர். மதுரையில் மகபூப்பாளையம், காஜிமார் தெரு, நெல்பேட்டை, மேலூர், திருமங்கலம், உசிலம்பட்டி, எழுமலை, ஆனையூர், சிலைமான் உள்ளிட்ட பகுதிகளில் முஸ்லிம்கள் சிறப்பு தொழுகையில் ஈடுபட்டனர்.

    இதனையடுத்து கைகளை குலுக்காமல், ஒருவொருக்கொருவரும் தங்களது வாழ்த்துகளை பரிமாறி கொண்டனர். கொரோனா தொற்றிலிருந்து உலக மக்கள் மீண்டுவர வேண்டியும், உலக நன்மை வேண்டியும், விவசாயம் செழிக்க வேண்டியும் சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
    மே மாதம் 11-ம் தேதியில் இருந்து மே மாதம் 17-ம் தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    11-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * சர்வ அமாவாசை
     * சந்திராஷ்டமம் - ஹஸ்தம், சித்திரை

    12-ம் தேதி புதன் கிழமை :
     
    * கார்த்திகை விரதம்
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - சுவாதி
     
    13-ம் தேதி வியாழக்கிழமை :

    * சந்திர தரிசனம்
    * சந்திராஷ்டமம்- விசாகம்

    14-ம் தேதி வெள்ளிக்கிழமை  :

    * ரம்ஜான் பண்டிகை
    * சுபமுகூர்த்தம்
    * அட்சய திருதியை
    * சந்திராஷ்டமம் - அனுஷம்

    15-ம் தேதி சனிக்கிழமை :

    * சதுர்த்தி விரதம்
    * வார்தா கௌரி விரதம்
    * சந்திராஷ்டமம் - கேட்டை

    15-ம் தேதி ஞாயிற்று கிழமை :


    * லாவண்ய கௌரி விரதம்
    * சித்தயோகம்
    * சந்திராஷ்டமம் - மூலம்

    17-ம் தேதி திங்கள் கிழமை  :

    * சுபமுகூர்த்தநாள்
    * சஷ்டி விரதம்
    * ஸ்ரீமத் சங்கர ஜெயந்தி
    * சந்திராஷ்டமம் - மூலம், பூராடம்
    கடந்த மாதம் 20-ந்தேதி முதல் அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை இருந்துவரும் நிலையில், அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட எந்த தடையும் விதிக்கப்படவில்லை.
    ராமேசுவரம் :

    கொரோனா பரவலை தடுப்பதற்காக இன்று (திங்கட்கிழமை) முதல் 24-ந்தேதி வரை 2 வாரத்துக்கு முழு ஊரடங்கை அரசு அறிவித்துள்ளது.

    இதையொட்டி ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராடவும், கடற்கரையில் அமர்ந்து திதி, தர்ப்பண பூஜை செய்யவும் இன்று முதல் தடை அமலுக்கு வருகிறது.

    கடந்த மாதம் 20-ந் தேதி முதல் அனைத்து கடற்கரை பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் செல்ல தடை இருந்துவரும் நிலையில், அக்னி தீர்த்த கடலில் பக்தர்கள் புனித நீராட எந்த தடையும் விதிக்கப்படவில்லை.

    தற்போது முழு ஊரடங்கு அமலுக்கு வருவதால் ராமேசுவரம் கடலில் புனித நீராட யாருக்கும் அனுமதி இல்லை என அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுபடியும், பக்தர்களின் உடல் நலம் கருதியும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
    ஸ்ரீகாளஹஸ்தி பகுதியில் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் இன்று (திங்கட்கிழமை) முதல், கொரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக அரசு உத்தரவுபடியும், பக்தர்களின் உடல் நலம் கருதியும் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்யும் நேரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி நாளையில் இருந்து அடுத்த அறிவிப்பு வரும் வரை தினமும் காலை 6 மணியில் இருந்து காலை 8 மணி வரை 2 மணி நேரம் மட்டுமே பக்தர்கள் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் சாமி தரிசனம் செய்யலாம். கோவிலில் ராகு- கேது சர்ப்ப தோஷ நிவாரணப் பூஜை முற்றிலும் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி கோவிலில் நடக்கும் அனைத்து ஆர்ஜித சேவைகளும் கோவில் சார்பில் மட்டுமே நடத்தப்படும், அதில் பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்ய அனுமதியில்லை, என கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.

    குபேரன், ‘அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டான்’ என்றார். சிவபெருமான், ‘தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ அனுமனுக்கு மரணம் ஏற்படாது’ என்றார்.
    அனுமன் குழந்தையாக இருந்த போது, அவருக்கு அதிகமாக பசி எடுத்துக் கொண்டே இருக்கும். ஒரு முறை அவனது தாய் அஞ்சனை உணவு எடுத்து வர கொஞ்சம் தாமதமாகியது. அப்போது சூரியன் வானத்தில் எழுந்து பொன்னிறமாக தகதகத்துக் கொண்டிருந்தான். அதை ‘ஏதோ ஒரு பழம்’ என்று நினைத்த அனுமன், அதைப் பறித்து உண்ணலாம் என்ற நோக்கத்தில், வானை நோக்கி எம்பினான். அவனுக்குள் இருந்த சக்தி அவனை, வானத்தை நோக்கி உந்தித் தள்ளியது. அவன் சூரியனை நோக்கி பறந்து சென்றுகொண்டிருந்தான்.

    ராம அவதாரத்திற்கு பிற்காலத்தில் பெரும் உதவியாக இருக்கப் போகும் பாலகன் என்பதால், அனுமனின் மீது தன்னுடைய வெப்பத்தை சூரியன் காட்டவில்லை. அதுவும் அன்று சூரிய கிரகணம் நிகழவிருந்தது. அந்த கிரகணத்தை ஏற்படுத்துவதற்காக ராகு, சூரியனை நோக்கி சென்று கொண்டிருந்தான். அதைப் பார்த்த அனுமன், ராகுவையும் பிடிக்க நினைத்தார். இதனால் பயந்து போன ராகு, இந்திரனை வேண்டினான். தேவர்களின் தலைவனான இந்திரன், தன்னுடைய ஐராவதம் யானையின் மீது வந்து அனுமனை தடுத்து நிறுத்த முயன்றான். ஆனால் முடியவில்லை. கோபத்தில் தன்னுடைய வஜ்ஜிராயுதம் கொண்டு அனுமனின் தாடையில் தாக்கினான். இதையடுத்து அனுமன் சுயநினைவை இழந்து பூமியில் வந்து விழுந்தான்.

    இந்திரனால் தன்னுடைய மகன் தாக்கப்பட்டதைக் கண்டு கோபம் கொண்ட வாயு பகவான், தன்னுடைய இயக்கத்தை நிறுத்தினார். இதனால் உலகில் உள்ள அனைத்து ஜீவராசிகளும் துன்பப்பட்டன. இதற்கு தேவர்களும் கூட விதிவிலக்கல்ல. எனவே, அனைவரும் பிரம்மாவிடம் சென்று முறையிட... அவர் அனைவரையும் அழைத்துக்கொண்டு வாயு பகவானிடம் வந்தார்.

    அனுமனைக் கண்டு பரிதாபமும், இரக்கமும் கொண்ட பிரம்மா, தனது கரத்தால் அவனைத் தடவிக் கொடுக்கவும், அனுமன் சுயநினைவு வந்து எழுந்தார். பின்னர், பிரம்மதேவன் அனைத்து தேவர்களையும் நோக்கி, “இந்த பாலகனால்தான், ராவணன் முதலிய அரக்கர்களால் உங்களுக்கு ஏற்பட்டுள்ள துன்பத்தைத் தீர்க்க முடியும். அதனால் இவனுக்கு வேண்டிய அளவு நல்ல வரங்களைக் கொடுங்கள். அதன்மூலம் வாயு பகவானும் திருப்தி அடைவார்” என்று சொன்னார்.

    இதையடுத்து சூரியன், தனது ஒளியில் 100-ல் ஒரு பங்கை ஆஞ்சநேயருக்கு அருளினார். மேலும், தானே அனுமனுக்கு வேதங்கள், சாஸ்திரங்கள் அனைத்தையும் போதித்து, கல்வியில் சிறந்தவனாகச் செய்வதாக உறுதி செய்தார். வருணன் - ‘காற்றாலோ, நீராலோ அனுமனுக்கு மரணம் ஏற்படாது’ என்றார். எமதர்மன், ‘எம தண்டத்தாலோ, நோய்களாலோ அனுமன் பாதிக்கப்படமாட்டான்’ என வரமருளினார். குபேரன், ‘அனுமன் யுத்தத்தில் சோர்வே அடைய மாட்டான்’ என்றார். சிவபெருமான், ‘தனது அஸ்திரங்களினாலோ, தனது கரங்களினாலோ அனுமனுக்கு மரணம் ஏற்படாது’ என்றார்.

    விஸ்வகர்மா, ‘தன்னால் இதுவரை செய்யப்பட்ட ஆயுதங்களாலோ, இனிமேல் தான் செய்யும் ஆயுதங்களாலோ அனுமன் பாதிக்கப்பட மாட்டான்’ என்றார். பிரம்மதேவர், ‘ஆஞ்சநேயர் சிரஞ்சீவியாக இருப்பான்’ என்று அருளினார். மேலும், ‘விரும்பிய வடிவம் எடுக்கவும், ஒருவரிடமும் பயமோ, யுத்தத்தில் தோல்வியோ கிடையாது. நினைத்த இடத்துக்கு நினைத்த வேகத்தில் செல்ல முடியும்’ என்பது போன்ற வரங்களையும் கொடுத்தார். இந்த வரங்களினால் திருப்தியுற்ற வாயு பகவான் மீண்டும் தன்னுடைய இயக்கத்தைத் தொடங்கினார்.
    கிருஷ்ணரும், அர்ச்சுனனும் குருசேத்திரப் போரின் போது, போர்க்களம் முழுவதும் சுற்றிவந்த தேர், இப்போது முழுமையாக எரிந்து சாம்பலாகியிருந்தது. அர்ச்சுனனின் மனதிற்குள் புகுந்திருந்த ஆணவமும்தான்.
    பாண்டவர்களுக்கும், கவுரவர்களுக்கும் நடைபெற்ற குருசேத்திரப் போர் முடிந்து விட்டது. துரியோதனன் கொல்லப்பட்டுவிட்டான். அர்ச்சுனன், தேரில் இருந்தபடியே ஒருமுறை சுற்றிப்பார்த்தான். போர்க்களம் முழுவதும் பிணக்குவியல்களே காணப்பட்டன. அவனுக்குள் மாபெரும் வெற்றியை பெற்றுவிட்ட பெருமிதம் புகுந்துகொண்டது. ‘என்னை விட சிறப்பான வீரன் எவன் இருக்கிறான்?’ என்பது போல் கர்வமாக நெஞ்சை நிமிர்த்திக்கொண்டான்.

    அப்போது அவனது பெருமிதக் கனவைக் கலைப்பது போல, கிருஷ்ணரின் குரல் இடைபுகுந்தது. தேரில் அமர்ந்து குதிரைகளின் கடிவாளத்தை இறுகப்பற்றியிருந்த கிருஷ்ணர், “அர்ச்சுனா.. போர் முடிந்துவிட்டது. இன்னும் ஏன் நின்று கொண்டிருக்கிறாய். விரைவாக தேரை விட்டு இறங்கு” என்றார்.

    ‘எத்தனை பெரிய வெற்றியை பெற்றிருக்கிறோம். அதை எண்ணி பெருமைப்படக்கூட முடியவில்லையே.. அதற்குள் கிருஷ்ணன் கடுமையான குரலால் நம்மை வாட்டுகிறானே’ என்று நினைத்த அர்ச்சுனன், ஒரு கேள்வியை கிருஷ்ணர் முன்பாக வைத்தான்.

    “கிருஷ்ணா.. என்னுடைய இந்த வெற்றிக்கு நீ என் பக்கம் நின்றதற்கு மகிழ்ச்சி. ஒரு வெற்றியாளரை, அவனது தேரோட்டி தான் கையைப் பிடித்து இறக்கிவிட வேண்டும் என்ற சம்பிரதாயத்தை நீ மறந்து விட்டாயா?. அப்படிச் செய்வது எனக்கு பெருமையாக இருக்குமல்லவா?” என்றான்.

    ஆனால் அர்ச்சுனன் சொன்னது எதையும் காதில் வாங்காதது போல இருந்த கிருஷ்ணர், “இன்னும் இறங்கவில்லையா? ம்.. சீக்கிரம் தேரை விட்டு இறங்கு” என்றார், கண்டிப்புடன்.

    மிகுந்த வருத்தத்தோடு, தேரை விட்டு தானே இறங்கினான் அர்ச்சுனன். உடனே, “தேரின் பக்கத்தில் நிற்காதே.. சற்று தள்ளி போய் நில்” என்று உத்தரவிட்டார், கிருஷ்ணர். அந்த அதட்டல் தொனியை, அர்ச்சுனனால் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை. சற்று முன்பாக, வெற்றி பெற்றதை எண்ணி மகிழ்ச்சியில் கூத்தாடிய மனம், வாடி வதங்கிப் போய்விட்டது. ஒன்றும் புரியாதவனாக, வாடிய முகத்தோடு சற்று தொலைவில் போய் நின்றான்.

    அவன் முகத்தைக் கண்டு சற்றே புன்னகைத்த கிருஷ்ணர், இப்போது தேரில் இருந்து குதித்து ஓடிச்சென்று, அர்ச்சுனனை இறுகத் தழுவிக் கொண்டார். அடுத்த கணம், அவர்கள் இருந்த தேர் தீப்பற்றி எரிந்தது. அதைப் பார்த்து அதிர்ச்சியில் உறைந்து போனான், அர்ச்சுனன்.

    அவனுக்கு ஒன்றும் புரியவில்லை. கிருஷ்ணரின் முகத்தை ஏறிட்டுப் பார்த்தான். சந்தேகக் கேள்விகளோடு விரிந்த அவனது விழிகளைக் கண்டு, அவனுக்கு பதிலளிக்கத் தொடங்கினார், கிருஷ்ணர்.

    “அர்ச்சுனா.. போர் புரியும்போது கவுரவர்கள் உன் மீது பலம் வாய்ந்த பல அஸ்திரங்களை ஏவினர். அவற்றின் சக்தி அளவிட முடியாதது. தேரில் நானும், தேர்க்கொடியில் அனுமனும் இவ்வளவு நேரம் அதைத் தடுத்துக் கொண்டிருந்தோம். அதனால், அவை வலிமையற்றுக் கிடந்தன. தேரை விட்டு நான் குதித்ததும், தேர்க்கொடியில் இருந்து அனு மனும் புறப்பட்டு விட்டான். எனவேதான் அஸ்திரங்களின் சக்தி வீரியம்பெற்று, தேர் பற்றி எரியத் தொடங்கிவிட்டது. ஆனால் நீயோ, ‘எல்லா வெற்றியும் எனக்கே சொந்தமானது’ என்பது போல் பெருமிதத்தில் மிதக்கிறாய். போரில் வெற்றிபெற்ற உனக்கு, அதற்குரிய கவரவத்தைத் தரவில்லை என்று வருத்தப்படு கிறாய். ‘நான்’ என்ற எண்ணத்தால், உனக்குள் ஆணவம் புகுந்துவிட்டது. அது அழிவுக்கான பாதை என்பதை உணர்ந்துகொள்” என்றார், கிருஷ்ணர்.

    கிருஷ்ணரும், அர்ச்சுனனும் குருசேத்திரப் போரின் போது, போர்க்களம் முழுவதும் சுற்றிவந்த தேர், இப்போது முழுமையாக எரிந்து சாம்பலாகியிருந்தது. அர்ச்சுனனின் மனதிற்குள் புகுந்திருந்த ஆணவமும்தான்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை தேரோட்டம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் எழுந்தருளினார்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பெரிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால், வழக்கமாக நடைபெறும் பூஜைகள் பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் மூடப்பட்டு உள்ளது. நித்தியப்படி கால பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இக்கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் காலை, மாலை வேளைகளில் தங்க கருட வாகனம், கற்பக விருட்சம், சிம்மம், யாளி, இரட்டை பிரபை, கருடன், சேஷம், அனுமந்த வாகனம், ஹம்ச வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் கருட மண்டபத்தில் எழுந்தருளினார்.

    திருவிழாவின் 9-ம் நாளான நேற்று கொரோனா தடை உத்தரவின் காரணமாக ேதரோட்டம் ரத்து செய்யப்பட்டு நம்பெருமாள் சித்திரை தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக காலை 6.30 மணிக்கு கருட மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து காலை 7.30 மணிக்கு புறப்பட்டு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சந்திர புஷ்கரணியில் நம்பெருமாளுக்கு பதிலாக சயன பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு காலை 9.15 மணிக்கு ரேவதி மண்டபம் சென்றடைந்தார். அங்கு நண்பகல் 12 மணி முதல் மதியம் 3 மணிவரை திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு இரவு 7.30 மணிக்கு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை. இன்று(திங்கட்கிழமை) சப்தாவரணம் நடைபெறுகிறது. நாளை(செவ்வாய்க்கிழமை) நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார். அத்துடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.
    ×