search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    தமிழகத்தில் உள்ள நலம்தரும் நவக்கிரக கோவில்கள்
    X
    தமிழகத்தில் உள்ள நலம்தரும் நவக்கிரக கோவில்கள்

    தமிழகத்தில் உள்ள நலம்தரும் நவக்கிரக கோவில்கள்

    மனிதனுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாக இருப்பது கிரகங்களின் சுழற்சிதான். இந்த கிரகங்களுக்கான தனிக்கோவில்கள் தமிழகத்தில் 8 உள்ளன. இந்த கோவில்களை பற்றி பார்க்கலாம்.
    மனிதனுக்கு ஏற்படும் இன்ப துன்பங்களுக்கு காரணமாக இருப்பது கிரகங்களின் சுழற்சிதான். இந்த கிரகங்களுக்கான தனிக்கோவில்கள் தமிழகத்தில் 8 உள்ளன. அவற்றில் சூரியன், சந்திரன், சுக்கிரன்,ராகு ஆகிய கிரகங்களுக்கான கோவில்கள் தஞ்சை மாவட்டத்திலும், செவ்வாய், கேது,புதன், கோவில்கள் நாகை மாவட்டத்திலும், குருபகவான் கோவில் திருவாரூர் மாவட்டம் ஆலங்குடியிலும், சனி பகவான் ஆலயம் புதுவை மாநிலம் திருநள்ளாறிலும் உள்ளன.

    சூரியனார் கோவில்(ஞாயிறு);- தமிழகத்தில் தஞ்சை மாவட்டம் கும்பகோணம்- ஆடுதுறை சாலையில் ஆடுதுறையில் இருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது சூரியனார் கோவில். இங்கு மூல மூர்த்தியாக உள்ள சூரிய பகவானுடன் உஷா தேவியும், சாயா தேவியும் உள்ளனர். இந்த கோவிலை முதற் குலோத்துங்க சோழன் கட்டியதாக வரலாறு கூறுகிறது. இங்கு சூரிய பகவானுடன் 8 கிரகங்களும் தனித்தனி கோவில்களாக அவர்களுக்கு உரிய திசைகளில் சூழ்ந்து அமைந்துள்ளன. ஏழரைச்சனி, அஷ்டமத்துச் சனி, ஜென்மச்சனி உள்ளவர்கள் வேறு நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் சூரியனார் கோவிலுக்கு வந்து 12 ஞாயிற்றுக்கிழமைகள் வரை தலவாசம் செய்து வழிபட்டால் தோஷங்கள் நீங்குவது உறுதி.

    திங்களூர் சந்திரன் கோவில்(திங்கள்);-தஞ்சை மாவட்டம், திருவையாறுக்கு அருகே திங்களூரில் சந்திரன் கோவில் உள்ளது. சுற்றி வர வயல்வெளிகள் இருக்க நடுவில் ஒய்யாரமாக அமைந்துள்ளது. இங்குபெரியநாயகி சமேத கைலாசநாதர் மூலவராக அமைந்துள்ளார். திங்கட்கிழமை சந்திரனுக்கு உகந்த நாள் ஆகும். தொழுநோய் மற்றும் சித்த பிரம்மையால் அவதிப்படுபவர்கள் சந்திரனை வணங்கினால் அவை நீங்கும்.

    வைத்தீசுவரன் கோவில் அங்காரகன்(செவ்வாய்);-

    நாகை மாவட்டம், மயிலாடுதுறையில் இருந்து 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது வைத்தீசுவரன் கோவில். மேஷம் மற்றும் விருச்சிக ராசிகளுக்கு அதிபதியான அங்காரகன் என்னும் செவ்வாய் பகவான் இங்கு வீற்றிருக்கிறார். பிறந்தாலும், இறந்தாலும் போக மோட்சங்கள் கொடுக்கும் பெருமை உடையது இத்தலம். இங்கு வைத்தியநாதசாமியும், தையல் நாயகி அம்மனும் வீற்று இருக்கின்றனர். இந்த ஆலயம் வந்து இங்கு தரப்படும் திருச்சாந்து உருண்டையை சாப்பிடுபவர்களுக்கு அனைத்து நோய்களும் நீங்கும்.

    திருவெண்காடு புதன் பகவான்(புதன்);- மிதுனம், மற்றும் கன்னி ராசிகளின் அதிபதியான புதன் பகவான், நாகை மாவட்டம் சீர்காழி தாலுகா, பூம்புகார் சாலையில் உள்ள திருவெண்காட்டில் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். சுவேதாரண்யேஸ்வரரை இறைவனாகவும், பிரம்ம வித்தியாம்பிகையை இறைவியாகவும் கொண்ட இக்கோவில், காசிக்கு சமமானதாக கருதப்படும் 6 தலங்களுள் ஒன்றாகும்.

    ஆலங்குடி குருபரிகார தலம்(வியாழன்);-குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும் என்று கூறுவார்கள். தனுசு மற்றும் மீன ராசிகளின் அதிபதியான குருபகவான் ஆலங்குடியில் வீற்றிருக்கிறார். திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகே குடந்தை-மன்னார்குடி சாலையில் அமைந்துள்ளது குருபரிகார தலமான ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் கோவில்.ஏழவார் குழலி அம்மையுடன் இறைவன் வீற்றிருக்கிறார். தட்சணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்வதோடு மஞ்சள் உடை , புஷ்பராகம், அணிந்து மஞ்சள் நிற வஸ்திர தானம் செய்து, கொண்டக்கடலை தானம் செய்ய வேண்டும்.இதனால் மன மகிழ்ச்சி, புத்திரப்பேறு, செல்வம் முதலியவற்றை பெறலாம்.

    கஞ்சனூர் சுக்கிரன் தலம்(வெள்ளி);- செல்வச் செழிப்புடன் வாழ பக்தர்களுக்கு அருள் பாலிக்கும் சுக்கிர பகவான் ஆலயம் தஞ்சை மாவட்டம், கும்ப கோணத்தில் இருந்து கல்லணை-பூம்புகார் சாலையில் 18 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. வெள்ளி நிறம் கொண்ட சுக்கிர பகவான் தனித்தன்மைகளோடு திகழ்கிறார். அதன்படி தன்னை வழிபடும் பக்தர்களுக்கு நல்ல மதிப்பையும், அதிர்ஷ்டத்தையும் கொடுப்பார்.

    திருநள்ளாறு சனீஸ்வரர் ஆலயம்(சனி பகவான்);-புதுவை மாநிலம் திருநள்ளாறில் அமைந்துள்ளது சனீஸ்வரர் ஆலயம். காரைக்காலில் இருந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள இந்தக்கோவிலில் மூலவராக நள்ளாற்றீசுவரர்(தர்ப்பாரண்யேசுவரர்) லிங்க வடிவில் வீற்றிருக்கிறார்.கோவிலின் பலிபீடம் சற்று விலகி இருப்பது இங்கு மட்டும்தான் என்பது தனிச் சிறப்பு.

    இங்கு அனுக்கிரக மூர்த்தியாக வீற்றிருக்கும் சனீஸ்வரபகவான் பாரபட்சமின்றி அனைவரையும் ஆட்டிப்படைக்கும் ஆற்றல் வாய்ந்தவர்.

    திருநாகேசுவரம் ராகு பகவான்;-தஞ்சை மாவட்டம் திருநாகேசுவரத்தில் ராகு பகவான் கோவில் கொண்டுள்ளார். கிரிகுஜாம்பிகை சமேத நாகநாதர் கோவில் வெளிப்பிரகாரத்தில் தனது இரு தேவியருடன் வீற்றிருக்கிறார்.இங்கு ராகுபகவான் மீது பால் அபிஷேகம் செய்யப்படும் போது அவருடைய உடற் பாகம் நீல நிறமாக மாறுகிறது. இந்த கோவிலுக்கு வந்து நாக நாதரை வழிபடுவது பூர்வ புண்ணிய பிராப்தம் இருந்தால் தான் முடியும். என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். ஞாயிற்றுகிழமைகளில் ராகுகாலத்தில் ராகுபகவானை வழிபடவேண்டும். நாகராஜனுக்கும், துர்க்கைக்கும், அர்ச்சனை செய்வதால் ராகு கிரக தோஷங்களை நீக்கலாம்.

    கீழப்பெரும்பள்ளம் கேது பகவான்;- நாகை மாவட்டம் சீர்காழியில் இருந்து பூம்புகார் செல்லும் சாலையில் கீழப்பெரும்பள்ளத்தில் அமைந்துள்ளது கேது பகவான் ஆலயம்.தரும குளம் என்ற இடத்தில் இறங்கி கீழப்பெரும்பள்ளம் நோக்கி செல்ல வேண்டும். கோவிலின் வடக்கு பிரகாரத்தில் மேற்கு நோக்கி கேது பகவான் அருள்பாலிக்கிறார்.
    Next Story
    ×