search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சப்தாவரணம் நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்
    X
    சப்தாவரணம் நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

    சப்தாவரணம் நிகழ்ச்சியில் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய நம்பெருமாள்

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழாவின் 10-ம் நாளில் சப்தாவரணம் நிகழ்ச்சியையொட்டி உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.
    கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு அரசின் வழிகாட்டுதல் நெறிமுறைகளின்படி பெரிய கோவில்கள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. ஆனால், வழக்கமாக நடைபெறும் பூஜைகள் பக்தர்கள் இன்றி எளிய முறையில் நடைபெற்று வருகின்றன. அந்தவகையில் பூலோக வைகுண்டம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலும் கடந்த ஏப்ரல் மாதம் 25-ந் தேதி முதல் மூடப்பட்டு உள்ளது. நித்தியப்படி கால பூஜைகள் மட்டும் நடத்தப்பட்டு வருகின்றன.

    இந்தநிலையில் இக்கோவிலில் சித்திரை தேர்த் திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி நம்பெருமாள் தினமும் காலை, மாலை வேளைகளில் தங்க கருட வாகனம், கற்பக விருட்சம், சிம்மம், யாளி, இரட்டை பிரபை, கருடன், சேஷம், அனுமந்த வாகனம், ஹம்ச வாகனம் உள்பட பல்வேறு வாகனங்களில் கருட மண்டபத்தில் எழுந்தருளினார்.

    திருவிழாவின் 9-ம் நாளில் கொரோனா தடை உத்தரவின் காரணமாக தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு நம்பெருமாள் சித்திரை தேரில் எழுந்தருளுவதற்கு பதிலாக கருட மண்டபத்தில் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சந்திர புஷ்கரணியில் தீர்த்தவாரி கண்டருளும் நிகழ்ச்சி நடைபெற்றது. சந்திர புஷ்கரணியில் நம்பெருமாளுக்கு பதிலாக சயன பெருமாள் தீர்த்தவாரி கண்டருளினார்.

    பின்னர் அங்கிருந்து புறப்பட்டு ரேவதி மண்டபம் சென்றடைந்தார். அங்கு திருமஞ்சனம் கண்டருளினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு கண்ணாடி அறையை சென்றடைந்தார். இந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்க பக்தர்கள் அனுமதிக்கப்படவில்லை.

    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் சித்திரை திருவிழாவின் 10-ம் நாளான நேற்று சப்தாவரணம் நிகழ்ச்சி நடந்தது. இதில் உற்சவர் நம்பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினார்.

    இன்று செவ்வாய்க்கிழமை) நம்பெருமாள் ஆளும் பல்லக்கில் எழுந்தருளுகிறார். அத்துடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.
    Next Story
    ×