என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஆறுமுகங்களைப் பெற்ற அழகனை, முருகனை, குமரனை, ஆதிசிவன் மைந்தனை, கார்த்திகேயனை, கடம்பனை, கதிர்வேலனைக் கைதொழுது பூசத்தில் வழிபாட்டால் வையகம் போற்றும் வாழ்வமையும்.
    அருணகிரிநாதர், ஆறுமுகத்திற்கும் அழகான விளக்கம் சொல்கிறார். சிவனுக்கு ஓம்காரம் உரைத்த முகம் ஒன்று, வினைகளைத் தீர்க்கும் முகம் ஒன்று, சூரனை சம்ஹாரம் செய்ய அன்னையிடம் வேல் வாங்கிய முகம் ஒன்று, சூரனை வதைத்த முகம் ஒன்று, வள்ளியை மணம்புரிய வந்த முகம் ஒன்று, தனது வாகனமான மயில் மீது ஏறி நின்று விளையாடும் முகம் ஒன்று.

    இப்படி ஆறுமுகங்களைப் பெற்ற அழகனை, முருகனை, குமரனை, ஆதிசிவன் மைந்தனை, கார்த்திகேயனை, கடம்பனை, கதிர்வேலனைக் கைதொழுது பூசத்தில் வழிபாட்டால் வையகம் போற்றும் வாழ்வமையும்.
    இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை விழாவையொட்டி அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும்.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் முக்கிய விழாக்களில் சித்திரை வசந்த உற்சவமும் ஒன்றாகும். இந்த ஆண்டிற்கான சித்திரை வசந்த உற்சவம் நேற்று மாலை கோவிலில் பந்தக்கால் முகூர்த்தத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் இந்த விழா நடைபெறும்.

    இதனையொட்டி நேற்று மாலை சம்பந்த விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டது. பின்னர் விநாயகர் சன்னதி முன்பு மங்கல வாத்தியங்கள் முழங்க பந்தக்கால் நடப்பட்டது.

    நிகழ்ச்சியில் சிவாச்சாரியார்கள் பந்தக்காலிற்கு அபிஷேகம் செய்து தீபாராதனை காண்பித்தனர். அப்போது பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் குறைந்த அளவிலான பக்தர்களே இதில் கலந்து கொண்டனர். கொட்டும் மழையில் பந்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    தொடர்ந்து இன்று (வியாழக்கிழமை) முதல் வருகிற 14-ந் தேதி வரை விழாவையொட்டி அருணாசலேஸ்வரருக்கும், உண்ணாமலை அம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெறும். மேலும் 3-ம் பிரகாரத்தில் மகிழ மரம் அருகில் பன்னீர் மண்டபத்தில் சாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    விழாவின் நிறைவாக வருகிற 14-ந் தேதி (சனிக்கிழமை) அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற உள்ளது. தொடர்ந்து அன்று இரவு கோபால விநாயகர் கோவிலில் மண்டகப்படி நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    பின்னர் இரவு 10 மணியளவில் கோவிலில் கொடிமரம் அருகே மன்மத தகனம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் கோவில் அலுவலர்கள், உபயதாரர்கள் செய்து உள்ளனர்.
    சித்திரை மாத திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீபெரும்புதூரில் ஸ்ரீராமானுஜர் திருதேர் பவனியை பல்லாயிர கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
    ஸ்ரீபெரும்புதூர்:

    காஞ்சிபுரம் மாவட்டம், ஸ்ரீபெரும்புதூரில் மிகவும்  பழமை வாய்ந்த  பிரசித்தி பெற்ற ஸ்ரீஆதிகேசவ பெருமாள் திருக்கோயில்  மற்றும் பாஷிய காரா சாமி (ராமானுஜர்) கோயில் உள்ளது. வைணவ சமயத்தை தோற்றுவித்த மதங்களில் புரட்சி செய்த மகான் ஸ்ரீமத் ராமானுஜர் அவதரித்ததும் இங்கு தான்.

    இங்கு சித்திரை திருவிழாவில் ஆதிகேசவ பெருமாளுக்கு என்னென்ன உற்சவங்கள் நடைபெறுகிறதோ அதே போல் ராமானுஜருக்கும் நடைபெறுவது வழக்கம். இதனால் ஆதிகேசவ பெருமாளுக்கு 10 நாட்கள் உற்சவமும் ராமானுஜருக்கு அவதார விழா என்று 10 நாட்கள் உற்சவமும் தனித்தனியாக நடைபெறும்.

    இந்நிலையில் கடந்த ஏப்ரல் 16 ஆம் தேதி ஆதிகேசவ பெருமாளுக்கு  கொடியேற்றத்துடன் துவங்கி 10-நாள் சித்திரை திருவிழா நடை பெற்றது. இதையடுத்து ஏப்ரல் 25-ம் தேதி துவங்கி ராமானுஜருக்கு 10 நாள் திருவிழா நடைபெற்று வருகிறது.

    ஸ்ரீபெரும்புதூர் தங்க பல்லக்கு, யாழி வாகனம், சிம்ம வாகனம், அம்ச வாகனம், குதிரைவாகனம், சூரிய பிரபை வாகனம் சேஷ வாகனம் உள்ளிட்ட வாகனகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.

    இந்நிலையில் இன்று திருதேர் பவனி நடைபெற்றது. தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து கோவிந்தா, கோவிந்தா என பக்தி பரவசத்தில் கோசம் எழுப்பினர். இந்த தேர் திருவிழாவுக்கு வெளி மாவட்டம், வெளி மாநிலதில் இருந்து பக்தர்கள் வருகை தந்தனர். காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்து நுற்றுக்கும் மேற்பட்ட போலீசார் வரவளிக்கபட்டு பலத்த  பாதுகாப்பு  பணியில் ஈடுபட்டனர்.
    கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும்.
    கரூரில் அமைந்துள்ளது, பசுபதீஸ்வரர் திருக்கோவில். இக்கோவிலில் கருங்கல்லால் ஆன கொடிமரம் உள்ளது. இதன் ஒரு பக்கத்தில் புகழ்சோழ நாயனார் சிற்பமும், மறு புறம் சிவலிங்கத்தை நாவால் வருடும் பசுவும், அதன் பின் கால்களுக்கிடையில் ஒரு சிவலிங்கம் உள்ள சிற்பமும் காணப்படுகிறது.

    மூலவர்: பசுபதீஸ்வரர் (பசுபதிநாதர், பசுபதி, ஆனிலையப்பர்)

    அம்மன்: அலங்காரவல்லி, சவுந்தரநாயகி, கிருபாநாயகி

    தல விருட்சம்: வஞ்சி மரம்

    தீர்த்தம்: தாடகை தீர்த்தம், ஆம்பிரவதி நதி (அமராவதி)

    பதிகம் பாடியவர்கள்:- திருஞானசம்பந்தர்- தேவாரம், கருவூரார்- திருவிசைப்பா, அருணகிரிநாதர் - திருப்புகழ்.

    கல்யாணபசுபதீசுவரர் கோவில் என்பது, தமிழ்நாட்டில் கரூர் மாநகரில் அமைந்துள்ள சிவாலயமாகும். இச்சிவாலயம், தேவாரப் பாடல் பெற்ற தலங்களில், கொங்கு நாட்டுத் தலங்களில் ஒன்றாகும். இத்தலம், காமதேனு வழிபட்ட தலமாகும். இச்சிவாலயத்தினை, திருஞானசம்பந்தர், சித்தர் கருவூரார், அருணகிரிநாதர் போன்றோர் பாடியுள்ளனர். இச்சிவாலயத்தில் சித்தர் கரூவூராருக்கு, தனி ஆலயம் உள்ளது.

    இத்தலத்தில், புகழ்ச்சோழ நாயனார் அரசாண்டதாகவும், எறிபத்த நாயனார் தொண்டு செய்ததாகவும், தலவரலாறு கூறுகிறது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவன் திருக்கோவில்களில், இது 211-வது ஆலயம் ஆகும். இத்தல சிவலிங்கத்தின் மீது, மாசி மாதத்தில் தொடர்ச்சியாக 5 நாட்கள், சூரியனின் கதிர் ஒளி படும் என்பது குறிப்பிடத்தக்கது.

    தங்களின் கோரிக்கை நிறைவேறும் பக்தர்கள், சிவபெருமானுக்கு அபிஷேகம் செய்வது வாடிக்கை. இன்னும் சிலர் ஆபரணங்களை காணிக்கையாக வழங்கியும் நேர்த்திகடன் செலுத்துகின்றனர். இத்தல இறைவன் பசுபதீஸ்வரர், சுயம்பு மூர்த்தியாக அருள்கிறார். சதுரமான ஆவுடையாரின் மீது, சற்றே சாய்வாக இருக்கிறார்.

    சன்னதிகள்

    மூலவர் பசுபதீசுவரர், சுயம்பு லிங்கமாக உள்ளார். இந்த லிங்கத்தின் ஆவுடையார், சதுரமாக உள்ளது. மாசி மாதத்தின் ஐந்து நாட்கள், மூலவரின் மீது சூரிய ஒளி படுகிறது. மூலவரின் இடதுபக்கத்தில் அலங்காரவல்லி, சௌந்தரநாயகி சன்னதிகள் உள்ளன.

    மூலவரின் நேராக அமைந்துள்ள நந்திக்கு அருகேயுள்ள தூண்களில், புகழ்ச்சோழர் சிவபக்தரின் தலையோடு உள்ள சிலையும், முசுகுந்த சக்கரவர்த்தியின் சிலையும் உள்ளன. வெளிச்சுற்றுபிரகாரத்தில் சித்தர் கருவூரார் சன்னதியும், ராகு, கேது பாம்பு சிலைகள் உள்ள சன்னதியும் உள்ளன.

    புகழ்ச்சோழர் மண்டபம், நூறுகால் மண்டபம் ஆகியவை இச்சிவாலயத்தில் அமைந்துள்ளன.

    கோவில் அமைப்பு

    இக்கோவிலின் கொடிமரம், கருங்கல்லால் ஆனது. கொடி மரத்தின் ஒரு புறத்தில், தலையைத் தட்டில் வைத்து கையில் ஏந்தியவாறமைந்த புகழ்ச்சோழ நாயனாரின் சிற்பமும், மறுபுறம் சிவலிங்கமும், சிவலிங்கத்தை நாவால் நக்குகின்ற பசுவும் அமைந்துள்ளன. இக்கோவிலின் பெருமான் கல்யாண பசுபதீஸ்வரர். பசுபதிநாதர், பசுபதீஸ்வரர், ஆநிலையப்பர், பசுபதி என்றும் அழைக்கப்படுகிறார். இங்கு சிவன், சதுரமான ஆவுடையாரின் மீது அமைந்துள்ள லிங்க வடிவிலுள்ளார். அம்மன் அலங்காரவல்லி.

    தமிழ்நாட்டின் பழம்பெரும் சிவத்தலங்களில் இது ஒன்றாகும். கொங்கு நாட்டின் ஏழு சிவத்தலங்களில் ஒன்றாகும். இக்கோயில் கட்டடக்கலைச் சிறப்பு மிக்கது. இங்குள்ள நூற்றுக்கால் மண்டபத்திற்கு, இங்கு 1960 ஆம் ஆண்டு குட முழுக்கு விழா நடைபெற்றபொழுது, ’புகழ்ச் சோழர் மண்டபம்" என்று பெயரிடப்பட்டுள்ளது.

    கோவிலின் தென்மேற்கு மூலையில், பதினெட்டு சித்தர்களில் ஒருவரான கரூவூராரின் சன்னிதி உள்ளது. இச்சித்தர் ஆநிலையப்பரோடு ஐக்கியமானதால், கருவறையில் சுயம்புலிங்கமாக உள்ள பெருமான் சற்றே சாய்ந்த நிலையில் உள்ளார்.

    தல வரலாறு

    படைப்புத் தொழில் குறித்து பிரம்ம தேவன் அடைந்த கர்வத்தை அடக்குவதற்காக, சிவன் நடத்திய விளையாடலால் உண்டான தலம் இது. சிவனை அடைய விருப்பம் கொண்டிருந்த காமதேனுவிடம் நாரதர் சென்று, பூலோகத்திலுள்ள வஞ்சிவனத்தில் தவம் செய்தால், அவர் எண்ணம் ஈடேறும் என்று கூறுகிறார். அதன்படி வஞ்சி வனமாகிய கரூர் சென்று, அங்கு ஒரு புற்றுள் இருந்த லிங்கத்திற்கு தன் பாலைச் சொரிந்து, திருமஞ்சனம் செய்து வழிபட, மகிழ்ச்சியடைந்த சிவனும் காமதேனுவுக்கு விரும்புவற்றைப் படைக்கக்கூடிய ஆற்றலை அளிக்கிறார். காமதேனுவுக்குக் கிடைத்த படைப்பாற்றலால் அஞ்சிய பிரம்மா, தனது தவறை உணர்ந்து, சிவனிடம் போய், தஞ்சம் அடைந்தார். சிவனும் அவரை மன்னித்து, படைப்புத் தொழிலை அவருக்கே திரும்ப அளித்து, காமதேனுவை இந்திரனிடம் அனுப்பி வைத்தார்.

    காமதேனு வழிபட்டதால் இக்கோவிலில், சிவன், 'பசுபதீஸ்வரர்' என்றும், 'ஆநிலையப்பர்' என்றும் அழைக்கப்படுகிறார்.
    மீனாட்சியம்மன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான ‘வேப்பம்பூ’ மாலையானது பட்டாபிஷேகத்தின் போது சூட்டப்படுகிறது.
    அன்னை மீனாட்சிக்கு தடாதகை பிராட்டி, அபிடேக வல்லி, கற்பூரவல்லி, மரகத வல்லி, சுந்தரவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, குமரித்துறை யவள், கோமகள், பாண்டி பிராட்டி, மாணிக்கவல்லி, மதுராபுரி தலைவி, முதுமலைத் திருவழுதித் திருமகள் முதலிய பல பெயர்கள் வழங்க பெருகின்றன.

    கல்வெட்டில்திருக்காமக் கோட்டத்து ஆளுடைய நாச்சியார் எனும் பெயரில்குறிக்கப்படுகிறார்.
    மீனாட்சி அம்மன் சிலை மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலம் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படுகிறது.
    1. திருநாவுக்கரசரின் 2 பதிகங்களும், திருஞான சம்பந்தரின் 9 பதிகங்களும் இத்தலத்திற்கு பெருமை சேர்க்கிறது.

    2. அஷ்ட சத்தி மண்டபத்தின் மேல் மாடத்தில் வடிவமைக்கப்பட்டுள்ள சிற்பங்கள் மீனாட்சியின் திருவிளையாடல்களை நினைவுபடுத்துவதாக உள்ளது.

    இந்த மண்டப வாயிலின் மையத்தில் நின்று அம்மன் சன்னதியை நோக்கினால் உள்ளே நடக்கும் கற்பூர ஆரத்தியை பார்க்கலாம்.

    3. பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு கோவிலில் உள்ள பொற்றாமரை குளத்தில்கிடைத்த ஸ்படிக லிங்கம் மதுரை ஆதீனத்தில் வழிபாட்டில் உள்ளது.

    4. கோவிலில் உள்ள கொலு மண்டபத்தில் நவராத்தியின்போது கொலு பொம்மைகள் வைக்கப் பட்டு சிறப்பு வழிபாடு கள் நடக்கும்.

    5. கோவிலின் 2-ம் பிரகாரத்தில் நூற்றுக்கால் மண்டபம் உள்ளது. இந்த மண்டபத்தின் உயர்ந்த பீடத்தில் நடராஜர் சிலை உள்ளது.

    6. பக்தர்கள் மனம் குளிரும் வகையில் ஆலயம் எப்போதும் சுத்தமாக பராமரிக்கப்படுகிறது.

    7. ஊஞ்சல் மண்டபம் அருகே மேற்கூரையில் விநாயகர் உள்பட பல்வேறு தெய்வங்களின் உருவங்கள் கண்ணை கவரும் வகையில் வரையப்பட்டுள்ளன.

    8. சுவாமி சன்னதி கருவறையில் சுந்தரேசுவரர் சிவலிங்க திருமேனியாக காட்சி தருகிறார். இது கடம்ப மரத்தடியில் தோன்றிய ஒரு சுயம்பு லிங்கம் ஆகும்.
    இந்த சிவலிங்கம் மேருமலை, வெள்ளிமலை, திருகேதாரம், வாரனாசி போன்ற பகுதிகளில் உள்ள சிவலிங்கங்கள் எல்லாவற்றுக்கும் முன்னதாக தோன்றியதாகும். எனவே இதற்கு மூல லிங்கம் என்ற பெயரும் உண்டு.

    9. மதுரையில் உள்ள புகழ்பெற்ற கோவில்களில் முதன்மையானது மதுரை மீனாட்சியம்மன் ஆலயமாகும். வருடம் முழுவதும் மீனாட்சியம்மனுக்கு திருவிழாக்காலம் தான் என்றாலும், சித்திரைத் திருவிழாவுக்கு மட்டும் தனிச்சிறப்பு உண்டு.

     10. மீனாட்சியம்மனுக்கு ஒருவருடத்தில் கிட்டத்தட்ட 274 நாள்கள் திருவிழா நடைபெறும்.

    11. ரிஷப வாகனத்தில் எழுந்தருளும் சிவபெரு மானை தரிசனம் செய்வது மிகவும் விசேஷமானது. ஆண்டுமுழுவதும் நடைபெறும் வீதிஉலாக் களில் மொத்தம் 16 முறை மட்டுமே சிவபெருமான் ரிஷப வாகனத்தில் எழுந் தருளுகிறார். அந்த வகையில் சித்திரைத் திருவிழாவின் 2 மற்றும் 12-ம் திருநாள்களில் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி அருள்பாலிக்கிறார்.

    12.சித்திரைத் திருவிழா வின் 4-ம் நாளில், சுவாமி, அம்பாளுடன் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருள்வார். பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருளும் பெருமான், பக்தர்களின் பாவங்களைக் காய்ந்துபோகச் செய்து நிவாரணம் அளிப்ப தால் இது பாவக்காய் மண்டபம் எனப் பெயர் பெற்றது.

    13. மதுரையில் ஈசன் நிகழ்த் திய திருவிளை யாடல் களான, வேடர்பறி லீலை, வளையல் விற்றது, நரியைப் பரியாக்கியது, பிட்டுக்கு மண் சுமந்தது உள்ளிட்ட திருவிளையாடல்கள் ஆவணி மூலத் திருவிழாவின்போது கொண்டாடப்படும்.

    14. முன்பு திருச்சியைத் தலைநகராகக் கொண்டு ஆண்டுவந்த, திருமலை நாயக்கருக்கு, மண்டைச்சளி என்னும் நோய் வந்து அவரை மிகவும் வருத்தியது. ஒருநாள் அவரின் கனவில் ஒலித்த அசரீரி ஒன்று ‘மதுரைக்குப் போய் திருப்பணிகள் செய்’ என கூறியது. அதன்படி அவர் மதுரையில் திருப்பணி செய்தார். இதனால் அவரை பிடித்திருந்த நோய் நீங்கியது. அதன்பிறகு அவர், மதுரையைத் தலைநகரமாகக் கொண்டு ஆட்சி செய்தார். திருமலை நாயக்க மன்னரின் ஆட்சியில் தான் கோயில் விரிவாக்கம் பெற்று, பொலிவுபெற்றது என, அங்குள்ள ஓலைசுவடிகள் தெரிவிக்கின்றன.

    15. திருமலை நாயக்கர் காலத்துக்கு முன்புவரை, மீனாட்சி சுந்தரேசுவரருக்குத் தைப்பூசத்தில் திருக்கல்யாண உற்சவமும் மாசிமாதத்தில் தேரோட்டமும், மாசிமகத்தன்று ‘மீனாட்சி பட்டாபிஷேகமும்’ நடைபெறும் வழக்கம் இருந்ததாம்.

    16. மீனாட்சியம்மன், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்களின் குலதெய்வம் என்பதால், பாண்டிய மன்னர்களின் பூவான ‘வேப்பம்பூ’ மாலையானது பட்டாபிஷே கத்தின் போது சூட்டப்படுகிறது.

    17. மீனாட்சி அம்மன் கோவில் வடக்கு ஆடி வீதியில் கல்லில் இசை வெளியிடும் 5 இசை தூண்களும், ஆயிரங் கால் மண்டபத்தில்2 இசை தூண்களும் உள்ளன.

    18. மதுரை மாநகரின் அடையாளமாக ராஜகோபுரங்கள் விளங்கி வருகின்றன. தூரத்தில் நின்று பார்த்தால் கூட கம்பீரமாக காட்சி அளிக்கும் இந்த கோபுரங்களை பக்தர்கள் தொலைவில் நின்று வணங்குவதை வாடிக்கையாக கொண்டுள்ளனர்.

    19. மீனாட்சி அம்மன் சிலை மரகதகல்லால் ஆனது. மீனாட்சி சொக்கநாதரை தரிசித்தால் மோட்சம் கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த தலம் பூலோக கைலாசம் என்று அழைக்கப்படுகிறது.

    20. சுவாமி சன்னதியில் நுழையும்போது வலது புரத்தில் இருக்கும் நடராஜர் மற்ற கோவில்களில் இருப்பதுபோல் இல்லாமல் இடது காலுக்கு பதில் வலது கால் தூக்கி நடனம் ஆடுவதுபோல் உள்ளது.

    21. இந்த கோவிலில் உள்ள சிலைகள் அமைப்பு இயல், இசை, நாடகம் என்ற மூன்றை யும் விவரிக்கும் வகையில் உள்ளது. இங்குள்ள பல்வேறு சிலைகள், ஓவியங்கள் பல இலக்கியங்களை எடுத்துரைக்கும் விதமாக உள்ளது. பல தூண்களும் இசைபாடக்கூடியது. பல நடன சிற்பங்கள், நாடக சிற்பங்கள் அமைந்து முத்தமிழை முழுவதுமாக உணர்த்துகிறது.

    22. இந்த கோவிலின் சித்திரை வீதியில் பக்தர்கள் கோவிலை சுற்றி வருவதற்குபேட்டரி வாகனங்கள் இயக்கப்படுகின்றன.

    23. நவக்கிரகங்களில் புதனுக்குரியவராக கூறப்படுகிறார் சொக்கநாதர். புதனுக்குரிய பரிகாரங்களை இந்த கோவிலில் உள்ள சிவபெருமானுக்கு செய்வது வழக்கம்.

    24. தல மரமான கடம்ப மரத்தின் நினைவாக கடம்பமரம் ஒன்று கம்பி வேலிக்குள் பாதுகாக்கப்படுகிறது.

    25. மதுரை ரெயில் நிலையம், பெரியார் பஸ் நிலையத்தில் இருந்து நடந்து செல்லும் தூரத்தில் இக்கோவில் அமைந்துள்ளது.

    26. மற்ற கோவில்களை போல இங்கு இறைவனுக்கு முடி காணிக்கை செய்வது வழக்கத்தில் இல்லை. காரணம் இந்த கோவிலுக்கு வந்து இறைவனை வழிபட்டாலே நாம் செய்த பாவங்கள் நீங்கி அம்மை, அப்பனின் அருளை பெறுவது திண்ணம்.

    27. தனியாக மீனாட்சி அம்மனுக்கு மட்டும் திருவிழா நடைபெறும் மாதங்கள் நான்கு. (புரட்டாசி, ஐப்பசி, மார்கழி, ஆடி).

    28. இந்த கோவில் ஓவியங்கள் மற்றும் சிற்பங்கள் அனைவரும் கண்டு வியக்கும் வண்ணம் பேரழகு படைத்தவையாகும். கலைநயம் கொண்டவையாக அமைந்துள்ளன. மீனாட்சி அம்மன் கோவில் ஓவியங்கள் அனைத்தும் நாயக்கர் காலத்தை சேர்ந்தவை.

    29. பொற்றாமரை குளத்தின் வடக்கு, கிழக்கு சுவர்களில் நாயக்கர் கால ஓவியங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த ஓவியங்கள் மூலம் புராண கதைகளை அறிவதோடு, அந்த கால மக்களின் ஆடை வகைகள், அணிகலன்கள் போன்றவை பற்றி அறிய முடிகிறது.

    30. மீனாட்சி அம்மன் சன்னதி முன்பாக 8 சக்தி (அஷ்டசக்தி) மண்டபம் அமைந்துள்ளது. வாயிலில் விநாயகர், முருகன் உருவங்களுக்கு இடையே மீனாட்சி திருக்கல்யாணம் சுதை வடிவில் சித்தரிக்கப்பட்டுள்ளன. மண்டபத்தில் அமைந்துள்ள தூண்களில் 8 சக்திவடிவங் கள் அழகுற அமைந்துள்ளன.

    31. முக்குறுணி விநாயகர் ஒரே கல்லிலான அற்புத சிற்பமாகும்.

    32. கம்பத்தடி மண்டபம் சிற்பங் கள் சிறப்பு பெற்றவை. சிவபெருமானது 25 மூர்த்தங்கள் சிற்பங்களாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

    33. கொடி கம்பத்தின் முன் மண்டபத்தில் அமைந்துள்ளநந்தியின் சிலை ஒரே கல்லில் ஆனது.

    34. கருவறை சுவர்களில் உள்ள 32 சிற்பங்கள் கலை நேர்த்தி உடையவை. சுவாமி சன்னதி முன் வெள்ளி யம்பலத்தில் நடராஜர் பெருமானின் உருவம் கல்லிலும், செம்பிலும் அமைந்துள்ளது.

    35. புதுமண்டபம், கம்பத்தடி மண்டபம், ஆயிரங் கால் மண் டபம் ஆகிய 3 மண்டபங்களில் உன்னதமான சிற்பங்கள் உள்ளன. புதுமண்டபத்தில் பிரமாண்டமான கலைநயம் மிக்க வியக்கத்தக்க சிற்பங்கள் அதிகம் உள்ளன.

    36. இந்த கோவில் பாண்டிய மன்னர் காலத்தில் கட்டப்பட்டிருந்தாலும் பெரும்பான்மையான சிற்பங்கள் நாயக்கர் கால பாணியிலேயே அமைந்துள்ளன.
    சிற்ப அமைப்பை கொண்டு நாம் அவற்றின் காலத்தை அறிய முடியும்.

    37. மீனாட்சி அம்மன் கோவில் சங்க காலத்திற்கு முன்பே கட்டப்பட்டது. சுமார் 2300 முதல் 3600 ஆண்டுகளுக்கு முன்னர் இருக்கலாம் என கூறப்படுகிறது.

    38. மீனாட்சி அம்மன் கோவில் வாசலின் இருபுறமும் விநாயகர், சுப்பிரமணியர் காட்சி தருகின்றனர்.

    39. இங்குள்ள ஆறுகால் மண்டபத்தில் தான் பரஞ்ஜோதி முனிவரின் திருவிளையாடல் புராணம் அரங்கேற்றப்பட்டதாக கூறப்படுகிறது.

    40. இந்த கோவிலுக்கு சொந்தமாக ஏராளமான அசையா சொத்துக்கள் உள்ளன.

    41. மீனாட்சி அம்மன் கோவிலை சுற்றி 4 மாடங்கள் அமைந்துள்ளதால் “நான்மாடக்கூடல்” என்ற பெயரும் மதுரைக்கு உண்டு.

    42. இந்த கோவில் அருகே பிரசித்தி பெற்ற கூடலழகர் பெருமாள் கோவில், இம்மையிலும் நன்மை தருவார், மதனகோபாலசுவாமி கோவில்கள் உள்ளன.

    43. அதிக கோவில்கள் நிறைந்த நகரமாக மதுரை உள்ளதால் “கோவில் மாநகரம்” என்று அழைக்கப்படுகிறது.

    44. இத்தலத்தின் வரலாறு தனிபெருமை வாய்ந்ததாகும். தெய்வ மனம் கமழும் தேவார திருப்பதிகங்களில் இடம் பெற்றுள்ள 274 தலங்களில் இதுவும் ஒன்று.

    45. இத்தலத்தின் பெயரை கேட்டதுமே பேரின்ப நிலை கிடைக்கும். இதனால் சிவபெருமானுடைய முக்தி தலங்களுள் ஒன்றாகவும் இத்தலம் கருதப்படுகிறது. இத்தலத்தினை சிவன் முக்திபுரம் என்றும் அழைக்கின்றனர்.

    46. கோவிலுக்குள் செல்ல5 நுழைவு வாயில்கள்உள்ளன. கிழக்கு 2 வாயில்கள் மற்றும் வடக்கு, மேற்கு, தெற்கு கோபுர வாயில்களும் உள்ளன.

    47. மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதான முதியவர்களுக்கான பேட்டரி கார் (தொடர்புக்கு-83009 56820) வீல் சேர்கள் ஆகியவை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

    48. தினமும் 500 பேருக்குபகல் 12.15 மணிக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது.

    49. மற்ற அம்மன் கோவில்களை போல இங்கு பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிடுவது இல்லை.

    50. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் சித்திரை வீதி முழுவதும் கருங்கற்களால் ஆனஅழகிய பாதை அமைக்கப்பட்டுள்ளது.
    திருத்தணி முருகன் கோவில் பிரம்மோற்சவ விழா நாளை (5-ம்தேதி) தொடங்கி வருகிற 15-ந்தேதி வரை நடக்கிறது. 12-ந்தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது.
    திருத்தணி முருகன் கோவிலில், ஆண்டுதோறும் சித்திரை மாத பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறும். கொரோனா தொற்று காரணமாக, கடந்த 2 ஆண்டுகளாக சித்திரை மாத பிரம்மோற்சவ விழா நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டது.

    இந்த நிலையில் நோய்தொற்று பரவல் தற்போது குறைந்ததை தொடர்ந்து இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் சித்திரைமாத பிரம்மோற்சவ விழா நாளை (5ந்தேதி) கொடியேற்றத்துடன் விமரிசையாக தொடங்குகிறது. மாலையில் கேடய உலாவில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    விழாவையொட்டி தினமும் காலை மற்றும் இரவு நேரத்தில் உற்சவர் ஒவ்வொரு வாகனத்தில் எழுந்தருளி, தேர்வீதியில் உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    வருகிற 12-ந் தேதி தெய்வானை திருக்கல்யாணம் நடைபெறுகிறது. 6-ந்தேதி வெள்ளி சூரிய பிரபை பூத வாகனம், 7-ந்தேதி சிம்ம வாகனம், ஆட்டு கிடாய் வாகனம், 8-ந்தேதி பல்லக்குசேவை, வெள்ளி நாக வாகனம், 9-ந்தேதி அன்ன வாகனம்,வெள்ளி மயில் வாகனம், 10-ந்தேதி புலி வாகனம், மாலை 4:30 மணிக்கு யானை வாகனம், 11-ந்தேதி தங்கத்தேர் இரவு 7 மணி, 12-ந்தேதி யாளி வாகனம், தெய்வானை திருக்கல்யாணம் நடக்கிறது.

    13-ந்தேதி கேடய உலா, சண்முகர் உற்சவம், 14-ந்தேதி தீர்த்தவாரி, சண்முகர் உற்சவம், கொடி இறக்கம் நடைபெறுகிறது. 15-ந்தேதி சப்தாபரணம், காதம்பரிவிழா நடைபெற இருக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
    சாபம் என்பது கோபத்தின் உச்சகட்டம். கடுமையான தோஷங்களாக ஜோதிட உலகம் கூறும் தோஷங்களில் ஒன்று பெண் சாபம் அல்லது ஸ்திரி தோஷம்.
    பெண் சாபம் உள்ளவர்களுக்கு தாயின் அன்பும் ஆதரவும் கிடைக்காமல் இளவயதில் தாயை இழக்கும் அல்லது பிரியும் நிலை ஏற்படும். காதல் தோல்வி, மனைவியால் சித்ரவதை அல்லது அடங்காத மனைவியுடன் வாழ வேண்டிய கட்டாயம். கணவன், மனைவி பிரிவினை. விவாகரத்து, ஆரோக்கிய குறைபாடு போன்ற விளைவுகள் உண்டாகும்.

    குழந்தை பாக்கியமின்மை, திருமணத் தடை அல்லது சிலருக்கு திருமணமாகாமல் போவது ஏற்படும். இன்றைக்குத் திருமணத்திற்காகக் காத்திருக்கும் ஆண்களுக்குப் மணப்பெண் கிடைப்பது குதிரைக் கொம்பாகிவிட்டது.

    திருமணத் தடையை சந்திப்பதில் ஆண்களே முதலிடம் வகிக்கிறார்கள். பெண் குழந்தை வேண்டாம் என்று பல பெற்றோர்கள் செய்த பாவம், இன்றைக்கு பெண்களே இல்லையோ என பயப்படும் நிலையை ஏற்படுத்தி விட்டது. இதில் எந்த மிகைப்படுத்தலும் கிடையாது.

    இன்று பல மேட்ரி மோனி சென்டரில் திருமணத்திற்கு பதியும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாகவும் பெண்களின் எண்ணிக்கை குறைவாகவும் இருப்பதே இதற்கு சாட்சி.

    ‘பிரசன்ன ஜோதிடர்’
    ஐ.ஆனந்தி
    செல்: 98652 20406
    கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, பங்களாவாக மாறியது. இப்படி குசேலர் எல்லா செல்வங்களையும் பெற்ற ஆன்மிக கதையை அறிந்து கொள்ளலாம்.
    கிருஷ்ணரும், குசேலரும் சிறுவயதில் நெருக்கமான நண்பர்களாக இருந்தவர்கள். கிருஷ்ணர் கோகுலத்தைப் பிரிந்து துவாரகாபுரி மன்னன் ஆனார். குசேலர் பரம ஏழையாக தன் ஊரிலேயே வாழ்ந்து வந்தார். திருமணமாகி அவருக்கு 27 குழந்தைகள் பிறந்ததால் சாப்பாட்டுக்கே அல்லாடும் அவல நிலைக்கு தள்ளப்பட்டார்.

    ஒருநாள் அவர் கிராமத்தில் எல்லாரும் கிருஷ்ணரின் வள்ளல் தன்மை பற்றி புகழ்ந்து பேசினார்கள். தன்னை நாடி வரும் அனைவருக்கும் பொன்னும், பொருளுமாக வாரி, வாரி கிருஷ்ணர் கொடுப்பதாக கூறினார்கள்.

    உடனே குசேலரிடம், அவரது மனைவி சுசீலா, “நம் குடும்பத்தில் வறுமை தாண்டவமாடுகிறது. நீங்கள் துவார கவுரி சென்று உங்கள் நண்பர் கிருஷ்ணரை பார்த்து வாருங்கள் என்றாள். முதலில் தயங்கிய குசேலர் பிறகு குழந்தைகளுக்காக ஒத்துக் கொண்டார்.

    ஒரு துணியில் சிறிது அவல் கட்டிக்கொண்டு நண்பனை காண துவாரகாபுரி சென்றார். குசேலர் வந்துள்ள தகவல் அறிந்ததும் கிருஷ்ணர் வாசலுக்கே ஓடி வந்து வரவேற்றார். குசேலரை அழைத்துச் சென்று தன் சிம்மாசனத்தில் அமர வைத்தார்.

    பிறகு குசேலர் கால்களை மஞ்சள் நீரால் கழுவி உபசரித்து பல்சுவை உணவு கொடுத்தார். குசேலருக்கு இது கூச்சமாக இருந்தது. செல்வ செழிப்பில் மிதந்த கிருஷ்ணருக்கு அவலை எப்படி கொடுப்பது என்று வெட்கப்பட்டார். இதை கவனித்து விட்ட கிருஷ்ணர் குசேலர் மறைத்த அவல் பொட்டலத்தைப் பிடுங்கி, ஆகா எனக்குப்பிடித்த அவல் கொண்டு வந்து இருக்கிறாயா என்று ஆனந்தத்துடன் சாப்பிட ஆரம்பித்தார்.

    கிருஷ்ணர் தன் வாயில் ஒரு பிடி அவல் போட்டுக் கொண்டதும் “அட்சயம்” என்று உச்சரித்தார். மறுவினாடி கிராமத்தில் குசேலர் வீட்டில் வசதிகள் பெருகின. குசேலரின் குழந்தைகளுக்கு நல்ல உணவு, உடை, ஆபரணங்கள்கிடைத்தன.

    கிருஷ்ணரின் ஆசியால் குசேலரின் குடிசை வீடு, பங்களாவாக மாறியது. இப்படி குசேலர் எல்லா செல்வங்களையும் பெற்ற திருஇன்றுத்தான் “அட்சய திருதியை” திருநாள் என்று அழைக்கிறார்கள்.
    முருகப்பெருமானுக்காக அமைந்த சுவாமிநாத சுவாமி ஆலயத்தில், 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார்.
    ராமநாதபுரம் அருகே உள்ளது, குண்டுக்கரை என்ற ஊர். இங்கு சுவாமிநாத சுவாமி கோவில் இருக்கிறது. முருகப்பெருமானுக்காக அமைந்த இந்த ஆலயத்தில், 11 தலைகளுடனும், 22 கரங்களுடனும் நின்ற கோலத்தில் முருகப்பெருமான் அருள்பாலித்து வருகிறார். சூரபத்மனை வதம் செய்த பிறகு, முருகப்பெருமான் இத்தலத்திற்கு வந்து தங்கியதாக தல புராணம் சொல்கிறது. இங்கு முருகப்பெருமான் விஸ்வரூப தரிசனம் தருவதாக நம்பிக்கை நிலவுகிறது.

    ராமநாதபுரம் பகுதியில் 300 ஆண்டுகளுக்கு முன்பு, பாஸ்கர சேதுபதி என்பவர் வாழ்ந்து வந்தார். இவர் தினமும் குண்டுக்கரை சுவாமிநாத சுவாமி கோவிலுக்குச் சென்று, அங்குள்ள முருகப்பெருமானை வழிபடுவது வாடிக்கை. அவரது கனவில் ஒருநாள் தோன்றிய முருகப்பெருமான், தற்போது குண்டுக்கரையில் இருக்கும் முருகன் சிலையை எடுத்து விட்டு, புதியதாக ஒரு சிலையை பிரதிஷ்டை செய்யும்படியும், இதனால் இந்தப் பகுதி மக்களுக்கு நன்மை விளையும் என்றும் கூறி மறைந்தார். அதன்படியே குண்டுக்கரை சென்ற பாஸ்கர சேதுபதி, ஆலயத்தில் இருந்த பழைய முருகன் சிலையை அகற்றி, தற்போதுள்ள புதிய சிலையை நிறுவியதாக தல வரலாறு சொல்கிறது.

    இந்த ஆலயத்தில் சித்திரை மாதம் முதல் தேதியில் பூச்சொரிதல் விழா கொண்டாடப்படுகிறது. இந்த ஆலயத்தில் முருகப்பெருமானைப் போலவே, துர்க்கைக்கும் பிரமாண்ட சிலை வடிக்கப்பட்டுள்ளது. 18 திருக்கரங்களுடன் அருளும் இந்த துர்க்கை தேவி, 7 அடி உயரத்தில் கம்பீரமாக காட்சியளிக்கிறாள். இந்த அன்னைக்கு நவராத்திரியின் ஒன்பது நாட்களும் சிறப்பு, அபிஷேக, ஆராதனைகள் செய்யப் படுகின்றன. தைப் பொங்கல் தினத்தன்று, ‘சாகம்பரி’ என்னும் அலங்காரம் செய்யப்படுகிறது. அதாவது அந்த தினம் காய்கறி மற்றும் பழங்களால் அலங்காரம் செய்யப்பட்ட நிலையில் அம்பிகை காட்சி தருவாள்.

    வைகாசி விசாகத்தை ஒட்டி இந்த ஆலயத்தில், பிரம்மோற்சவ விழா நடக்கிறது. சூரசம்ஹாரம், திருக்கார்த்திகை, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்களும் விமரிசையாக கொண்டாடப் படுகிறது. திருச்செந்தூருக்கு அடுத்தபடியாக சூரசம்ஹாரம் சிறப்பாக நடைபெறும் ஆலயங்களில் இதுவும் ஒன்று.

    இந்த ஆலயத்தில் வீற்றிருக்கும் முருகப்பெருமானை வழிபாடு செய்பவர்கள், கல்விக் கேள்விகளில் சிறந்து விளங்கலாம். முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும், கோவில் திருப்பணிகளுக்கு பொருளுதவி செய்தும் நேர்த்திக்கடன் செலுத்துகின்றனர்.
    கனகதாரா ஸ்தோத்திரம் என்ற தொகுப்பை ஆதிசங்கரர் பாடி முடித்ததும், அந்த வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள் மழை போல பொழிந்தன.
    கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம்பெரியாற்றின் கரையில் காலடி என்ற ஊர் உள்ளது. அங்கு சிவகுரு- ஆர்யாம்பாள் தம்பதியின் மகனாக 8-ம் நூற்றாண்டில் அவதரித்தவர் ஆதிசங்கரர்.

    சிறு வயதில் அவர் குருகுலத்தில் சேர்க்கப்பட்டார். குருகுல வழக்கப்படி பிச்சை எடுத்து தான் குருவுக்கு பணிவிடை செய்ய வேண்டும். அதன்படி ஆதிசங்கரர் ஒரு குடிசை வீடு முன்பு நின்று “பவதி பிட்சாந்தேஹி” என்று குரல் கொடுத்து பிச்சை கேட்டார். இதை கேட்டதும் அந்த வீட்டில் இருந்தபெண் நடுங்கினாள்.

    தானம் செய்ய எந்த உணவுபொருளும் இல்லாததால் தவித்தாள். வீடு முழுக்க தேடிய அவளுக்கு காய்ந்து போன நெல்லிக்கனி தான் கிடைத்தது. அதை எடுத்து வந்து கண்ணீர் மல்க ஆதி சங்கரரிடம் கொடுத்து, “குழந்தாய், இந்தா, என்னிடம் இது தான் உள்ளது” என்று கொடுத்தார். அந்தபெண்ணின் தான உள்ளத்தையும், ஏழ்மையையும் உணர்ந்த ஆதிசங்கரர் வேதனைப்பட்டார். உடனே மகாலட்சுமியை மனம் உருகப்பாடினார். கனகதாரா ஸ்தோத்திரம் என்ற தொகுப்பை அவர் பாடி முடித்ததும், அந்த வீட்டுக்குள் தங்க நெல்லிக்கனிகள் மழை போல பொழிந்தன.

    ஒரு அட்சய திருதியை தினத்தன்று தான் தங்க நெல்லிக்கனி மழைபொழிந்ததாக சொல்லப்படுகிறது. இந்த சம்பவம் காலடியில் உள்ள கிருஷ்ணன் கோவிலில் அட்ச திருதியை தினத்தன்று திருவிழாவாக கொண்டாடப்படுகிறது. அப்போது 32 நம்பூதிரிகள் 10 ஆயிரத்து எட்டு தடவை கனகதாரா ஸ்தோதிரத்தை சொல்வார்கள்.

    பிறகு பக்தர்களுக்கு தங்க நெல்லிக்கனிகள், வெள்ளி நெல்லிக்கனிகள், மற்றும் கனகதாரா யந்திரம் வழங்கப்படும். இந்த நெல்லிக்கனிகளை பூஜை அறையில் வைத்து கனகதாரா ஸ்தோத்திரம் படித்தால் செல்வம்பெருகும் என்பது நம்பிக்கை.
    தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று தாய்ப்பாசத்துடன் வாழ்ந்த பரசுராமரை வணங்கினால் நிச்சயம் அன்புபெருகும். அதை உணர்த்தும் ஒரு புராண சம்பவம்.
    அட்சய திருதியை தினத்தன்று தான் பரசுராமர் பிறந்தார். பரசுராமர் பெற்றோர் மீது அளவு கடந்த பாசம் கொண்டவர். அதை உணர்த்தும் ஒரு புராண சம்பவம்.
    நான்கு வேதங்களையும் கற்றவர் ஜமத்க்னி முனிவர். அவரது மனைவி ரேணுகா. கற்புக்கரசி. இவள் தினமும் அதிகாலை எழுந்து கங்கையில் நீராடி மண் எடுத்து பானை செய்வாள். அவள் கைபட்டதும் பானை உருவாகி விடும். அதில் தண்ணீர் எடுத்து வந்து சமைப்பாள்.

    ஒரு நாள் அதிகாலை எழுந்த அவள் நேரமாகி விட்டதே என்று வானத்தைப் பார்த்தாள். அப்போது வானில் சென்று கொண்டிருந்த சித்தரதன் என்ற கந்தர்வனை பார்த்து அவன் அழகில் சற்று தடுமாறி போனாள்.

    பதறிய படியே கங்கைக்கு சென்று குளித்து மண் எடுத்தாள். ஆனால் பானை உருவாகவில்லை. அதே நேரம் கண் விழித்த ஜமதக்னி முனிவர் நடந்ததை எல்லாம் தன் ஞான திருஷ்டியால் அறிந்தார். மனம் குமுறிய அவர் தன் 5 மகன்களையும் அழைத்து தாய் தலையை வெட்டி வருமாறு உத்தரவிட்டார்.
    முதல் 4 மகன்களும் மறுத்து விட கடைசி மகன் பரசுராமர் கோடாரியுடன் சென்றார். தாய் தலையை வெட்டி எறிந்தார்.

    இதை பார்த்த ஜமதக்னி முனிவர் மகிழ்ச்சி அடைந்து, “பரசுராமா, உனக்கு என்ன வேண்டும் கேள் தருகிறேன்” என்றார். உடனே பரசு ராமர் “என் தாயை மீண்டும் உயிர்ப்பித்து தாருங்கள், இன்று நடந்த எதுவும் அவர் மனதில் வரக் கூடாது” என்றார். பரசுராமரின் தாய் அன்பு கண்டு மெய்சிலிர்த்த ஜமதக்னி முனிவர் அப்படியே வரம் வழங்கி ரேணுகாவுக்கு உயிர் கொடுத்தார்.

    -இப்படி தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை என்று தாய்ப்பாசத்துடன் வாழ்ந்த பரசுராமர் அட்சய திருதியை அன்று பிறந்தவர் என்பதால் அன்று அவரை வணங்கினால் நிச்சயம் அன்புபெருகும்.
    ×