என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    வேணுகோபால சுவாமி கோவில் தேரை மறு சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் வெள்ளோட்டம் நடைபெறும்.
    அருப்புக்கோட்டை அருகே பாளையம்பட்டியில் ராமநாதபுரம் சமஸ்தானத்திற்கு சொந்தமான மிகப் பழமையான வேணுகோபால சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான தேர் 1952-ம் ஆண்டு கட்டப்பட்டு வெள்ளோட்டம் நடைபெற்றது.

    இதையடுத்து ஆண்டுதோறும்  வைகாசி மாதம் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். 10 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு சமுதாயத்தினர் மண்டகப்படி நடைபெறும். திருவிழாவின் இறுதி நாளில் தேரோட்டம் மிகவும் சிறப்பாக நடைபெறும்.

    இந்நிலையில் 4 ஆண்டுகளுக்கு முன் இந்த தேர் பழுதடைந்தது. இதையடுத்து 4 ஆண்டுகளாக  தேரோட்டம் நடைபெறாமல்  இருந்தது. இதனால் பக்தர்கள் மீண்டும் தேரோட்டம் எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் இருந்தனர்.

    இந்தநிலையில் கிராம மக்களின் கூட்டு முயற்சியாலும், ராமநாதபுரம் சமஸ்தான நிர்வாகத்தின் ஒத்துழைப்பாலும் கடந்த 4 ஆண்டுகளாக ஓடாமல் பழுதடைந்து நின்ற தேரை புதுப்பிக்கும் பணி தொடங்கியது. தற்போது இந்த பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சிவகங்கை மாவட்டம் காரைக்குடியை சேர்ந்த திருத்தேர் ஸ்தபதி சுதாகர் குழுவினர் தேரை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதுகுறித்து திருத்தேர் ஸ்தபதி சுதாகர் கூறுகையில்:-

    70 ஆண்டுகள் பழமையான இந்த தேரில் மிகுந்த வேலைப்பாடுடன் கூடிய பல்வேறு சிற்பங்கள் மற்றும் 4 பிரம்மாண்டமான இரும்பு சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளன.

    பல்வேறு கலை நுணுக்கமான சிற்பங்கள் செதுக்கப்பட்டுள்ளன. தேரை மறு சீரமைக்கும் பணியில் ஊழியர்கள் மிகுந்த கவனத்துடன் இரவு பகலாக ஈடுபட்டு வருகின்றனர். கூடிய விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு விரைவில் வெள்ளோட்டம் நடைபெறும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    தேர் பணிகள் முடிவடைந்து மீண்டும் தேரோட்டத்ைத விரைவில் நடத்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர்.
    சேலத்தின் மத்தியப் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு அழகிரிநாதர் கோவில், “கோட்டைப்பெருமாள் திருக்கோவில்” என்றும் அழைக்கப்படுகிறது. இந்த கோவில் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
    சேலம் மாநகரின் மையப்பகுதியில்அமைந்துள்ள 1500 ஆண்டுகள் பழமைவாய்ந்த அழகிரிநாதர் கோயில், வரலாற்று சிறப்பு மிக்க வைணவத்தலங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. சிறப்பு பெற்ற கோயில்கள் அனைத்தும் ஆகமவிதிகளின் படி, கரைபுரண்டு ஓடும் ஆறுகளின் தென்மேற்கு பகுதியில் அமைந்திருக்கும். அதற்கு ஏற்ப கோட்டை அழகிரிநாதர் கோயில் அமைக்கப்பட்டுள்ளது. பண்டைக் காலத்தில் திருமாலின் அவதாரமான அழகிரிநாதர் கோயிலுக்கு முன்பு, திருமணிமுத்தாறு கரைபுரண்டு ஓடியது.

    பல நூற்றாண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட இக்கோயில், இதன் சிற்பக்கலைக்காக பெரிதும் அறியப்படுகிறது. இக்கோயில், அழகிரி பெருமாள் மற்றும் மாரியம்மனுக்காக கட்டப்பட்ட கோயில்கள் சூழ அமைந்துள்ளது.

    திருமணி முத்தாற்றில் நீராடி திருமாலை தினம் துதித்தால் துயரங்கள் அனைத்தும் தூரவிலகி ஓடும் என்பது ஐதீகம் என்கின்றனர் பட்டாச்சாரியார்கள். அதியர்கள் காலத்தில் சமஸ்கிருத மொழி ெகாங்கு மண்டலத்தில் கோலோச்சியது.சௌந்திரராஜன் என்ற சமஸ்கிருத சொல்லுக்கு அழகுராஜன் என்று தமிழில் பொருள். மலைசூழ் நகரமான சேலத்தில் அருள்பாலித்த இறைவன் சௌந்திரராஜன் தான், பிற்காலத்தில் தமிழாக்கத்தில் அழகிரிநாதர் என்று அழைக்கப்பட்டார்.

    அழகிரிநாதருக்கு பின்புறத்தில் சுந்தரவல்லி தாயார் சன்னதி உள்ளது. கோயிலின் தென்மேற்கு மூலையில் சோழர்களை வீழ்த்திய மதுரைமன்னர் சுந்தரபாண்டியன் வெற்றி குறித்த கல்வெட்டு உள்ளது. அதியர், சேர, சோழ, பாண்டியர் காலங்களில் கோயில் சீரமைக்கப்பட்டதாக வரலாறு கூறுகிறது. இக்கோயிலில் உள்ள ஆஞ்சநேயர் வரலாற்று காலத்தில் இருந்து, உருவத்தில் மூன்றாவது இடம் வகிக்கிறார்.

    உருவத்தில் பெரியவரான நாமக்கல் ஆஞ்சநேயர் முதலாவதாகவும், இரண்டாவதாக கன்னியாகுமரி சுசீந்திரம் தாணுமாலய பெருமாள் கோயிலில் உள்ள ஆஞ்சநேயரும், மூன்றாவதாக சேலம் கோட்டை அழகிரிநாதர் கோயில் ஆஞ்சநேயரும் குறிப்பிடப்படுகின்றனர். இக்கோயிலில் மூலவர் அழகிரி நாதர், பக்கத்தில் தாயார் ஸ்ரீதேவி, பூதேவி உள்ளனர். இதைதவிர மூலவரை சுற்றி சக்கரத்தாழ்வார், ஆண்டாள், ஆஞ்சநேயர், வேணுகோபாலசுவாமி சன்னதிகள் உள்ளன. வைகாசி மாதத்தில் இங்கு நடக்கும் திருத்தேரோட்டம் மிகவும் பிரசித்தி பெற்றது.

    தேரோட்டத்தின்போது சேலம் சுற்று வட்டார பகுதியில் உள்ள ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து செல்வார்கள். ஐப்பசியில் பவித்ர உற்சவமும், மார்கழி மாதத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவும், பங்குனி மாதத்தில் ஸ்ரீராமநவமி உற்சவமும் இங்கு களைகட்டும். இதைதவிர புரட்டாசி மாதத்தில் வரும் சனிக்கிழமைகளிலும் மூலவர் அழகிரி நாதர், ஸ்ரீதேவி, பூதேவி தாயார்கள் சிறப்பு அலங்காரத்தில் காட்சியளிக்கின்றனர். பக்தர்கள் லட்டு உள்பட பல வகையான பிரசாதங்களை வழங்கி வருகின்றனர்.

    இதைதவிர முக்கிய திருவிழா நாட்களில் உற்சவர் சுந்தரராஜர் பெருமாள் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளிக்கிறார். இத்திருத்தலம் கோட்டை அழகிரிநாதர், ஸ்ரீதேவி, பூதேவிக்கு திருமணம் நடைபெற்ற கோயிலாகும். இங்குள்ள அழகிரிநாதர் திருமண கோலத்தில் காட்சியளிப்பதால் திருமணமாகாத ஆண், பெண் கோட்டை அழகிரிநாதரை மனமுருகி வேண்டிக் கொண்டால் திருமண தடை விலகும். குழந்தை பேறு, நோய், நொடி இல்லாமல் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வாழலாம் என்பது ஆண்டாண்டு காலமாய் அழகிரிநாதரை வழிபடும் பக்தகோடிகளின் நம்பிக்கை.

    பல்வேறு திருவிழாக்கள் இக்கோயிலில் கொண்டாடப்படுகின்றன. அவைகளில் முக்கியமானது, வைகுண்ட ஏகாதசி திருவிழாவாகும். இச்சமயத்தில், ஆயிரக்கணக்கான பக்தர்கள் இங்கு வழிபாடு செய்வதற்கு அலை மோதுகின்றனர். பிரமோத்ஸவம், நவராத்திரி, பவித்ரோத்ஸவம, புரட்டாசி மற்றும் ஆண்டாள் திருக்கல்யாணம் ஆகிய விழாக்களும் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன.

    ஆண்டாள் திருக்கல்யாணத்தின் போது திருவில்லிப்புத்தூரிலிருந்து, பிரத்யேகமாக தொடுக்கப்பட்ட பூமாலை தருவிக்கப்பட்டு, ஆண்டாள் அம்மைக்கு சூட்டப்படுகிறது. இவ்விழாக்காலங்களில், சேலம் நகருக்கு அருகில் உள்ள ஊர்களிலிருந்து பக்தகோடிகள், இங்கு வந்து வழிபட்டுச் செல்கின்றனர்.

    சேலத்தில் உள்ள வைணவ கோயில்களுக்கு எல்லாம் தலைமையாக கருதப்படுவது கோட்டை அழகிரிநாதர் கோயில். இக்கோயிலை சுற்றி செவ்வாய்பேட்டையில் பாண்டு ரங்கநாதர் கோயில், பிரசன்னா வெங்கட்ரமணா சுவாமி கோயில், ஆனந்தா இறக்கத்தில் லட்சுமிநாராயண சுவாமி கோயில், பட்டைகோயிலில் வரதராஜ பெருமாள் சுவாமி கோயில், சின்னதிருப்பதியில் வரதராஜபெருமாள் கோயில், கடைவீதியில் வேணுகோபாலசுவாமி கோயில், சிங்கமெத்தையில் சௌந்திரராஜ பெருமாள் கோயில், நாமமலையில் சீனிவாச பெருமாள் கோயில், உடையாப்பட்டியில் சென்றாய பெருமாள் கோயில் என்று திரும்பிய திசையெல்லாம் கோயில்கள் இருப்பது வேறு இங்கும் இல்லாத சிறப்பு.
    அவ்வையார் பாடிய விநாயகர் அகவல், விநாயகரை வழிபடும் துதிப்பாடல்களில் முக்கியமானதாக விளங்குகிறது. இந்தப் பாடலில் விநாயகரின் பெருமையும், அழகும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது.
    சமயக்குரவர்கள் எனப்படும் நால்வரின் முக்கியமானவர், சுந்தரமூர்த்தி சுவாமிகள். இவர் சிவபெருமானின் உற்ற தோழனாகவும் இருந்தவர். இவருக்காக சிவபெருமானே வீதியில் இறங்கி நடந்து தூது சென்ற சம்பவங்கள் எல்லாம் நடந்திருக்கின்றன. சுந்தரமூர்த்தி சுவாமிகள், தான் இந்த பூவுலகிற்கு வந்த நோக்கம் நிறைவேறியதை அடுத்து, கயிலாயம் செல்ல இறைவனால் பணிக்கப்பட்டார். அவரை ஏற்றிச் செல்வதற்காக, கயிலாயத்தில் இருந்து வெள்ளை யானை ஒன்று அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதில் ஏறிய சுந்தரமூர்த்தி சுவாமிகள், கயிலாயம் புறப்பட்டார்.

    அப்போது அங்கு இருந்த நாயன்மார்களில் ஒருவரான சேரமான் பெருமான், தானும் கயிலாயம் செல்ல வேண்டும் என்று மனம் உந்தினார். இதனால் தன்னுடைய குதிரை மீது ஏறி, அதன் காதில் பஞ்சாட்சர (நமசிவாய) மந்திரத்தை உச்சரித்தார். உடனே, அந்தக் குதிரை விண்ணில் பறக்கத் தொடங்கியது. இதையடுத்து தனது நண்பரான சுந்தரமூர்த்தி சுவாமிகளுடன் இணைந்து சேரமான் பெருமானும், திருக்கயிலாயம் நோக்கிச் சென்றார்.

    அதனை அறிந்துகொண்ட அவ்வையார், தானும் சுந்தரமூர்த்தி சுவாமிகளோடு சேர்ந்து கயிலாயம் செல்ல நினைத்தார். இதற்காக அவர் அப்போது செய்து கொண்டிருந்த விநாயர் பூஜையை அவசரம் அவசரமாக செய்தார். அப்போது அங்கு தோன்றிய விநாயகர், “அவ்வையே.. நீ என்னுடைய பூஜையை எந்த அவசரமும் இன்றி செய். சுந்தரருக்கு முன்பாகவே உன்னைக் கொண்டு போய் கயிலாயத்தில் சேர்ப்பது என் பொறுப்பு” என்றார்.

    இதையடுத்து அவ்வையார், ‘சீதக் களபச் செந்தா மரைப்பூம் பாதச் சிலம்பு பலவிசை பாடப்..’ என்று தொடங்கும் விநாயகர் அகவலைப் பாடினார். 72 அடிகள் கொண்ட இந்தப் பாடலை பாடி முடித்து, விநாயகருக்கு உண்டான அனைத்து பூஜைகளையும் அவ்வையார் செய்து முடித்தார்.

    அதன்பின்பு, தான் கொடுத்த வாக்குப்படி, விநாயகர் அவ்வையாரை தன்னுடைய துதிக்கையால் தூக்கி, கயிலாயத்தில் சேர்ப்பித்தார். அவர் சென்றடைந்த பிறகே, சுந்தரரும், சேரமான் பெருமானும் கயிலாயம் வந்து சேர்ந்தனர்.

    அவ்வையார் பாடிய விநாயகர் அகவல், விநாயகரை வழிபடும் துதிப்பாடல்களில் முக்கியமானதாக விளங்குகிறது. இந்தப் பாடலில் விநாயகரின் பெருமையும், அழகும் அற்புதமாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அகவலைப் பாடி, விநாயகரை வழிபாடு செய்பவர்களுக்கு, வாழ்வில் சலக வளங்களும் கிடைக்கப்பெறும்.
    தினசரி காலண்டர்கள் மூலமாக நீங்களே இந்த நாட்களை அறிந்து கொள்ளலாம். அதில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும்.
    மேல்நோக்கு நாள், கீழ்நோக்கு நாள் மற்றும் சமநோக்கு நாள் என்பதும் நடைமுறையில் உள்ளது. இவை மூன்றும் அன்றைய நட்சத்திரத்தின் அடிப்படையில் அமைகின்றன.

    ரோகிணி, திருவாதிரை, பூசம், உத்திரம், உத்திராடம், திருவோணம், அவிட்டம், சதயம், உத்திரட்டாதி ஆகிய ஒன்பது நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் மேல்நோக்கு நாட்கள். இவை மேல்நோக்கி வளர்கின்ற பயிர்களுக்காக விதைக்கவும், மரங்களை நடுவதற்கும், மேல்நோக்கி எழும் கட்டிடங்கள் , உயரமான மதில் போன்றவற்றைக் கட்ட ஆரம்பிக்க உரிய நாட்கள் ஆகும்.

    கீழ்நோக்கு நாட்கள்

    பரணி, கிருத்திகை, ஆயில்யம், மகம், பூரம், விசாகம், மூலம், பூராடம், பூரட்டாதி ஆகிய ஆகிய ஒன்பது நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் கீழ்நோக்கு நாட்கள் ஆகும். இந்த நாட்களில் கிணறு வெட்டுதல், சுரங்கப் பணிகளை மேற்கொள்ளுதல், செடிகளை பயிரிடுதல் முதலான பணிகளைச் செய்யலாம்.

    சமநோக்கு நாட்கள்

    அஸ்வினி, மிருகசீரிஷம், புனர்பூசம், ஹஸ்தம், சித்திரை, சுவாதி, அனுஷம், கேட்டை, ரேவதி ஆகிய ஆகிய ஒன்பது நட்சத்திரங்களைக் கொண்ட நாட்கள் சமநோக்கு நாட்கள் ஆகும். இந்த நாட்களில் வாகனங்கள் வாங்குதல், செல்லப் பிராணிகளை வாங்குதல், சாலை அமைத்தல், வாசக்கால் அமைத்தல் ஆகிய பணிகளை செய்யலாம்.

    தினசரி காலண்டர்கள் மூலமாக நீங்களே இந்த நாட்களை அறிந்து கொள்ளலாம். அதில் மேல்நோக்கு நாள், கிழ்நோக்கு நாள், சமநோக்கு நாள் என்று பதிவு செய்யப்பட்டு இருக்கும். அல்லது குறியீடு இருக்கும்.
    பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்க்கலாம்.
    மனதை மகிழ்விக்கும் பிற செல்வங்கள் நிலையற்றது. கஷ்டகாலம் வந்துவிட்டால் வீடு, வாசல், சொத்து, சொந்த பந்தம் எல்லாம் பறந்துவிடும். ஆனால் எவ்வளவு கெட்ட காலத்திலும் நம்மைவிட்டு நீங்காத செல்வமாய் உடன் வருவது, ஒருவர் கற்ற கல்வி மட்டுமே. ஆகவே கல்வியைத் தவிர மற்ற எதுவும் உண்மையான செல்வம் அல்ல என்பது இதன் பொருளாகும்.

    இன்றைய சமுதாயத்தில் கல்வி பற்றிய விழிப்புணர்வு மக்களிடம் சற்று மிகைப்படுத்தலாகவே உள்ளது. படிக்காத மேதைகள் அதிகம் வாழ்ந்த காலம் முடிந்து விட்டது. கல்வியால் மட்டுமே ஒரு மனிதன் சமுதாயத்தில் தன்னை நிலை நிறுத்த முடியும் என்ற நிலை உருவாகி விட்டது. கல்வியால் தாழ்ந்தவர்கள் எவருமில்லை. கல்வியால் உயர்ந்தவர்கள் மட்டுமே உள்ளனர் என்று கூறும் அளவிற்கு சமுதாயம் மாற்றம் அடைந்துள்ளது. அடிப்படை கல்வி அறிவு போதுமானது என்று வாழ்ந்த நிலையில் கல்லூரிக்கு சென்று ஒரு பட்டமாவது வாங்கி விட வேண்டும் என்ற ஆர்வம் அனைத்து தரப்பினரிடமும் எழுந்துள்ளது என்பதால் பல பட்டதாரிகள் உருவாகியுள்ளார்கள்.

    பொருளாதாரம், குடும்ப சூழ்நிலை போன்ற பல்வேறு காரணங்களால் கல்லூரி, உயர் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிட்டுவதில்லை. ஜோதிட ரீதியாக உயர் கல்வி கற்க தடை ஏற்பட காரணமும், அதற்கு செய்ய வேண்டிய பரிகாரத்தையும் பார்க்கலாம்.

    உயர் கல்வி தடையும் பரிகாரமும்

    சனி, சந்திரன் இணைவு இருப்பவர்கள் சுய தொழிலுக்காக, குடும்ப தொழில் சார்ந்த கல்வி அல்லது குடும்ப தொழிலை கவனிப்பதற்காக படிப்பார்கள். சுய தொழில் பளு காரணமாக உயர் கல்வியை தொடர்வதில் தடை இருக்கும்.

    சனி, சந்திரனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருக்கும் போது பொருளாதார நெருக்கடி, உடல் நலக் குறைவால், தகாத நட்பால் சந்தர்ப்பத்தை தவற விடுவார்கள்.
     
    புதனுக்கு ராகு/கேது சம்பந்தம் இருப்பவர்கள் அதிகமாக அரியர்ஸ் மற்றும் ஞாபக சக்திக் குறைவால் படிப்பை தொடர முடிவதில்லை.
     
    ஜனன கால ஜாதகத்தில் 9,11-ம் அதிபதி 6,8,ல் மறைந்தாலும், 9-ம் இடத்தில் சனி ராகு/ கேது நின்றாலும் உயர் கல்வியில் தடை நிலவும்.
     
    கல்விக்கான காரக கிரகம் புதனின் பயணப்பாதையில் அசுப கிரகங்களான ராகு, கேது, சனி, செவ்வாய் நின்றால் கல்வியில்தடையை கொடுக்கும்.
     
    கல்வியில் தடை, தாமதம், தோல்விகள் ஏற்படுவதற்கு தசா புக்திகள், கோட்ச்சார கிரக நிலைகளே காரணமாக இருக்கின்றன. நீச கிரக தசாபுக்திகளும்,6, 8, 12 மிட கிரக தசை புக்திகளும்,ராகு-கேது தசைகளும் தடைகள், தோல்விகளை ஏற்படுத்தும். புதன்நீசமாகி தசை நடத்தினால்மறதி, படிப்பில் நாட்டக் குறைவு தேவையற்ற குழப்பங்கள், மன சஞ்சலம் போன்றவற்றால்கல்வியில் தடை ஏற்படும்.

    4,8-ம் அதிபதிக்கு சனி,செவ்வாய் சேர்க்கை இருந்தால் உயர்கல்வியில் திடீர் தடைகள் ஏற்படலாம். லக்னம், 5, 7, 8-ம் இடங்களில் சந்திரன், சுக்கிரன் சம்பந்தம் ஏற்படும் தசாபுக்திகளில் தேவையற்ற சஞ்சலங்கள் ஏற்பட்டு கவனம் தடுமாறும். சுக ஸ்தானாதிபதி 6, 8,12-ம் அதிபதியுடன் சேர்க்கை பெற்று தசாபுக்தி நடந்தால் உடல்நலம் பாதிக்கப்பட்டு கல்வி தடை ஏற்படலாம். கோட்சார ராகு,கேதுக்கள் ராசிக்கு 2, 4, 7, 8, 10 போன்ற ஸ்தானங்களில் வருவது, மற்றும் அர்தாஷ்டமச் சனி, கண்டகச்சனி, ஏழரை சனி, அஷ்டமச்சனி காலங்களில்கல்வியில் தடை ஏற்படும்.

    பரிகாரம்

    ஜனன கால ஜாதகத்தில் 9-ம் இடம் வலிமை குறைந்தவர்கள் அமாவாசை மற்றும் சனிக்கிழமைகளில் முன்னோர்களைஆத்மார்த்தமாக சரணாகதி அடைந்து வழிபட்டால் உயர் கல்வி வாய்ப்பு சித்திக்கும்.

    ஜாதகத்தில் புதன் வலிமை குன்றியவர்கள் புதன் கிழமைபச்சைப் பயிரை சாப்பிட வேண்டும். புதன் கிழமை ஹயக்கிரீவருக்கு நெய் தீபம் ஏற்றி துளசி அர்ச்சனை செய்தால் நன்மைகள் தேடிவரும். மேலும் புதன் கிழமை பிரதோசம் வரும் நாட்களில் சிவன் மற்றும் நந்திக்கு வில்வ அர்ச்சனை செய்து வழிபட்டால் உயர் கல்வி வாய்ப்பு கைகூடும்.

    உயர் கல்விக்கு பொருளாதார தடைஇருப்பவர்கள் தமிழ் நாட்டின்கல்வித் தந்தை காமராஜர்அவர்களை மானசீகமாகவழிபட்டால் கல்வி உதவி நிச்சயம்கிடைக்கும்.
     
    கல்வியினைப் பெறுவது அனைவரது உரிமையாகும்.பிறப்பிலும் இறப்பிலும் கூடவே வரும் கல்விச் செல்வத்தை அடைந்து வாழ்வில் வளம் பெறுவோம்.
    சேலம் கோட்டை பெருமாள் கோவில் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதி நடைபெறுகிறது.
    சேலம் மாநகரில் பிரசித்தி பெற்ற கோட்டை பெருமாள் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் வைகாசி மாதத்தில் தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    ஆனால் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக தேர்த்திருவிழா நடைபெறவில்லை. இந்தாண்டு வைகாசி விசாக தேர்த்திருவிழா அடுத்த மாதம் (ஜூன்) 13-ந் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு ராஜகணபதி கோவில் அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பெருமாள் கோவில் தேரில் முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது.

    முன்னதாக காலையில் கோட்டை பெருமாள் , தாயாருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதையடுத்து காலை 6 மணிக்கு மேல் 7 மணிக்குள் பெருமாள் கோவில் தேரில் முகூர்த்தக்கால் நடப்பட்டது. இதனை சுதர்சன பட்டாச்சாரியார் முன்னின்று நடத்தினார். இதில் பக்தர்கள் பலர் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இந்த நிகழ்ச்சியில் கோட்டை பெருமாள் கோவில் செயல் அலுவலர் அமுதசுரபி மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    புவனம் என்றால் அண்டம்,உலகம் என்றும் ஈஸ்வரி என்றால் காப்பவள் என்றும் பொருள். எனவே இவள் புவனேஸ்வரி எனப்படுகிறாள்.
    ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
    ஓம் ஸ்ரீ கணேசாய நம:

    அங்குச பாச மேந்தி அபயமே வரதம் தாங்கும்
    பங்கயக் கரத்தள் பீதாம்பரமணி யிடையள் பொற்பூண்
    பைங்கள நிரம்பப் பூண்டாள் பதினாறு கலையெழுத்துள்
    பொங்கிய ஓரெழுத்தாள் புவனேசி பாதம் போற்றி 1

    கணபதியே சரணம் கணநாதா ரக்ஷிப்பாய்
    கந்தனுக்கு மூத்தோனே கவசத்தைத் தந்திடுவாய்
    மாதாவின் கவசத்தை மங்களம் பெருகிடவே
    மங்கள கணபதியே மகிழ்ந்தெனக் கருள்வீரே 2

    பஞ்சமுக கணபதியே மனமாசறுத்துத் தேசருளி
    வல்லபை கணபதியே வல்வினைகளைப் போக்கி
    மஹத்தான உன்னருளை மாரிபோல் பொழிந்திட்டு
    பூலோகம் உய்வுபெற புவனேசி கவசமீவாய் 3

    புவனேச்வரித் தாயே புவனமெல்லாம் உய்வுபெற
    புண்ணியத்தால் உன்நாமம் போற்றுகின்றேன் கேட்டிடம்மா
    என் ஹ்ருதயத் துள்ளிருந்து என்னறிவாகியே நீ
    சீர்மிக்க மாதாவே சீக்கிரமே வந்திடம்மா 4

    பாக்கியம் பலவேண்டிப் பகர்கின்றேன் கவசத்தை
    பாலாம்பிகைத் தாயே பரிவுடனே வந்திடம்மா
    படைப்புக்கும் முன்புள்ள பராசக்தித்தாயே கேள்
    பாலன் இவனையுமே பார்த்து நீ ரக்ஷிப்பாய் 5

    மூவர்கள் போற்றி ஏத்தும் முதல்வியே புவனேசி
    தேவாதி தேவர்களும் தேவியுன்னை வழிபட்டே
    சாகாவரம் பெற்று சர்வசக்தி எனப் புகழும்
    லலிதாம்பிகைத் தாயே சடுதியில் வந்திடம்மா 6

    மார்க்கண்ட மாமுனிவர் மஹான் துர்வாஸரிஷி
    அகஸ்தியரிஷி போன்றோர் அன்னையுன்னை வழிபட்டே
    இன்றும் இருந்துகொண்டு இவ்வுலகிற் கருளுவதை
    என்னவென்று நானுரைப்பேன் என்தாயே உன் மகிமை 7

    வாராஹி தேவியே வந்திப்பேன் உன் அடியை
    பாதம் நகம் விரலைப் பார்வையால் நீ காத்திடம்மா
    முழங்கால் இரண்டையுமே மலைமகளே காத்திடம்மா
    தொடைகள் இரண்டையுமே துர்க்கை நீ காத்திடம்மா 8

    பின்புறத்தை நாரஸிம்மி பிறழாது காத்திடம்மா
    வயிற்றைப் பைரவியே வலியவந்து காத்திடம்மா
    மார்பை சிவதூதி மாண்புடனே காத்திடம்மா
    வலதிடது தோளை வைஷ்ணவியே காத்திடம்மா 9

    மனோன்மணித்தாயே என் மார்பையுமே ரக்ஷிப்பாய்
    மஹாத்ரிபுர சுந்தரி நீ மனத்தையும் காத்திடம்மா
    என் ஹ்ருதயத்தில் புவனேசி நீ இருந்து ரக்ஷிப்பாய்
    கழுத்தை மாஹேந்திரியும் முகத்தை காத்யாயனியும் 10

    தலையைத் தாக்ஷாயணியும் தலைக்குள் சிவ சக்தித்தாயும்
    கண் காது வாய் மூக்கைக் காமாக்ஷியும் காத்திடம்மா
    பற்கள் அனைத்தையுமே பத்மாக்ஷி காத்திடம்மா
    நாக்கை வாக்தேவி நயமுடன் காத்திடம்மா 11

    புருவங்களிரண்டையுமே பூதேவி காத்திடம்மா
    புருவங்களின் நடுவில் ஸ்ரீதேவியிருந்து காப்பாய்
    கண்ணொளி யாயிருந்து காப்பாய் காமேச்வரித்தாயே
    கண்களின் மணிகளையே காலஹந்த்ரி காப்பாய் நீ 12

    கண்ணிமையைக் காத்திடம்மா காத்யாயனித்தாயே
    அங்கங்களனைத்தையுமே ஆதிசக்தி காத்திடம்மா
    என்னை நீ ரக்ஷிப்பாய் என் தாயே ரக்ஷிப்பாய்
    பூரணி பூமியிலும் மேலே பவானித்தாயும் 13

    திக்குகள் தோறுமே த்ருபுராம்பா காத்தருள்வாய்
    மேல்கீழ் குறுக்கெல்லாம் மூகாம்பா ரக்ஷிப்பாய்
    காத்திடம்மா காயத்ரீ கண்ணிமைபோல் காத்திடம்மா
    வாராஹி கௌமாரி நாரஸிம்மி ரக்ஷிப்பாய் 14

    சண்டிகை சக்தி கௌரி சங்கடங்கள் தீர்த்திடுவாய்
    அஷ்டலக்ஷ்மித் தாயே அமர்ந்திடம்மா என்னுடனே
    பிரியா திருந்திடம்மா ப்ரத்யக்ஷம் ஆகிடம்மா
    புவனேச்வரித்தாயே புவனமெல்லாம் நிறைந்தவளே 15

    புவனேசி என்றாலே புண்ணியம் பெருகிடுமே
    புண்ணிய புருஷர்கள் புவனேசித் திருநாமம்
    போற்றிடுவர் போற்றியுமே புண்ணியத்தைப் பெருக்கிடுவர்
    திருவடியும் பற்றிடுவர் திருநாமம் ஜெபித்திடுவர் 16

    நாமத்தின் மஹிமையினால் நமனையும் வென்றிடுவர்
    ஸகல ஸெளபாக்யமும் ஸாயுஜ்ய முக்தியுமே
    தந்திடுவாள் புவனேசி தரித்திரத்தை ஓட்டிடுவாள்
    சாந்தியின் வடிவுகொண்ட ஸர்வேஷி நமஸ்காரம் 17

    சிரத்தை வடிவான ஸ்ரீமாதா நமஸ்காரம்
    காந்தியின் வடிவான காமாக்ஷி நமஸ்காரம்
    லக்ஷ்மியின் வடிவான லலிதாம்பா நமஸ்காரம்
    வ்ருத்தியின் வடிவான வ்ருத்தாம்பா நமஸ்காரம் 18

    ஸ்மிருதியின் வடிவான ஸ்கந்தமாதா நமஸ்காரம்
    தயையின் வடிவான தர்மாம்பா நமஸ்காரம்
    துஷ்டியின் வடிவான துக்கஹந்த்ரீ நமஸ்காரம்
    மாத்ரு வடிவான மஹாதேவி நமஸ்காரம் 19

    மயக்க மகற்றிடுவாய் மாஹேஷி நமஸ்காரம்
    தேவியே புவனேசி தினமுன்னை நமஸ்கரிப்பேன்
    தீராத வியாதிகளைத் தீர்த்து நீ ரக்ஷிப்பாய்
    அகந்தையை ஒழித்திடுவாய் அம்மா புவனேசி 20

    பிறவிப்பிணி தீர்ப்பாய் பிரம்மசக்தித்தாயே கேள்
    என் துன்பத்தைத் துடைத்திடவே தீப துர்க்கையாய் வந்திடம்மா
    துர்காம்பிகைத் தாயே துரிதத்தை விலக்கிடம்மா
    அஷ்டமா ஸித்திகளை அடியேனுக் கருளிடம்மா 21

    மாகாளியாய் வந்து மனமாயையை ஒழித்திடம்மா
    சாமுண்டீச்வரியே ஸம்சயத்தைப் போக்கிடம்மா
    காளிகா தேவியே காத்திடம்மா என்னையும் நீ
    வாராஹியாய் வந்து வழியில் காத்தருள்வாய் 22

    இந்திராணித்தாயே இம்மையில் நீ ரக்ஷிப்பாய்
    வைஷ்ணவி மாதாவாய் வந்து வரமருள்வாய்
    கௌமாரித் தாயே நீ காத்திடம்மா உள்ளிருந்து
    ப்ரஹதம்பிகைத் தாயே பிரமையையும் போக்கிடுவாய் 23

    துன்பம் துயரத்தைத் துடைத்துக் காப்பாற்றிடவே
    காமக் குரோதத்தைக் கலக்கி விரட்டிடவே
    சத்துருவாம் பகைவனையும் சம்சய அரக்கனையும்
    துஷ்டர்களை விரட்டிடவே வனதுர்கா வந்திடம்மா 24

    பத்துத் திக்கிலுமே பத்ரகாளி காத்திடம்மா
    மாதா பாலாம்பிகையே மாயையைப் போக்கிடம்மா
    சும்ப நிசும்பனைப் போல் அகந்தையை அழித்திடம்மா
    ஸிம்ம வாஹனத்தில் ஜய துர்க்கே வந்திடம்மா 25

    ஜகத் ஜனனி ஜகன்மாதா ஜய புவனேசித்தாயே
    மமதையில் மயங்காமல் மாதங்கி காத்திடுவாய்
    அனைத்தையும் கொடுக்கும் அன்னபூர்ணேச்வரியே
    குறையற்ற கல்வியைக் கொடுத்திடுவாய் கலைவாணி 26

    மஹிஷாசுரனையும் மற்றுமுள்ள தூம்ரனையும்
    சண்டனையும் முண்டனையும் ரத்தபீஜாசுரனையும்
    அகம்பாவ அசுரர்களை அழித்தவம்மே ஸ்கந்தமாதா
    சாமுண்டீஸ்வரியே சந்தோஷமெனக்கருள 27

    சக்தியாய் வந்திடம்மா புவனாம்பிகைத் தாயே
    சத்துசித்தின் வடிவான சித்தேச்வரித் தாயே
    ஜயந்தி மங்களா காளி ஜயஜய போற்றி போற்றி
    பத்ரகாளி கபாலினியே பராபரே போற்றி போற்றி 28

    பூரண புராதனியே புவனேசி போற்றி போற்றி
    அகிலாண்டேச்வரியே அன்னையே போற்றி போற்றி
    ஆதிபராசக்தியான ஆசோபனா போற்றி
    கள்ளம் கபடம் நீக்கும் காமாக்ஷியே போற்றி 29

    கருணைக் கடலான வம்மே காத்யாயனியே போற்றி
    ஆயிரம் நாமமுள்ள ஆதி புவனேசி போற்றி
    சாந்தி சுகம் தருவாய் ஷண்முகன் தாயே போற்றி
    ஹயக்ரீவர் போற்றி ஏத்தும் ஆதிலலிதா போற்றி 30

    சிரத்தா பக்திதரும் சிவகாமி போற்றி போற்றி
    கலிதோஷம் அகற்றுவிப்பாய் கல்யாணி போற்றி போற்றி
    ஏகாக்ஷரம் தருவாய் வேதவேத்யா போற்றி போற்றி
    ஈசனுள் குடியிருக்கும் புவனேசி போற்றி போற்றி 31

    லக்ஷ்மி வாணி போற்றும் லலிதாம்பா போற்றி போற்றி
    ஹ்ரீங்கார ரூபமான புவனமாதா போற்றி போற்றி
    ஹரிப்ரம்மேந்திரர்கள் அகத்துள்ளோய் போற்றி போற்றி
    ஸர்வேசி ஸாக்ஷிரூபே ஸர்வக்ஞே போற்றி போற்றி 32

    ககாரார்த்தா கபாலினி காலஹந்த்ரி போற்றி போற்றி
    ஹம்சமந்த்ர மயமான ஹம்ஸவதி போற்றி போற்றி
    லகாராக்ய லதாபூஜ்யா ராஜேச்வரி போற்றி போற்றி
    ஹ்ரீம் மத்யா ஓங்காரி ஜகன்மாதா போற்றி போற்றி 33

    ஸநகாதி முநித்தேயே ஸச்சிதானந்தே போற்றி போற்றி
    கல்யாணீ காதிவித்யே கமலாக்ஷி போற்றி போற்றி
    லகாரிணீ லப்தரூபே லப்தசக்தே போற்றி போற்றி
    ஹ்ரீங்கார மூர்த்தித் தாயே புவனேசி போற்றி போற்றி 34

    பஞ்சதசாக்ஷரித்தாயே பவநாசினி போற்றி போற்றி
    ஸ்ரீமாதா ஸ்ரீமஹாராஜ்ஞீ சீருடனே வந்திடம்மா
    ஸிம்ஹாஸனேச்வரியே சீக்கிரமே வந்திடம்மா
    சிதக்னிகுண்ட ஸம்பூதா சித்ரூபி வந்திடம்மா 35

    ஸர்வாபரண பூஷிதையே ஸர்வேசி வந்திடம்மா
    சிவாயெனப் பெயர்கொண்ட சிந்தாமணி வந்திடம்மா
    மங்களத்தைச் செய்திடம்மா மாதா புவனேஸ்வரியே
    ப்ரும்ம விஷ்ணு ருத்ரன் ஈசானன் நால்வருடன் 36

    ஸதாசிவனையுமே பீடமாக்கிக் கொண்ட சிவே
    ஐவரான மஞ்சத்தில் அமர்ந்து ஜோதியானவளே
    கதம்பவனவாஸினியே காமகோடி வரமருள்வாய்
    சாக்தப் பிரணவத்தை சடுதியில் தந்திட்டு 37

    கல்மஷங்களைப் போக்கிக் கலிதோஷ மகற்றிடுவாய்
    நகக்கண் வழியாக நாரணனைச் சிருஷ்டித்தோய்
    ஹரிஹர ப்ரம்மாக்கள் அனன்யமாய்த் தொழுதேத்தும்
    தேவர்களும் முக்தர்களும் தினமும் தொழுதேத்தும் 38

    சித்தர்களும் பக்தர்களும் ஜன்மமெல்லாம் தொழுதேத்தும்
    புவனேஸ்வரித்தாயே போதுமம்மா இப்பிறவி
    மறுபிறவி இனிவேண்டாம் மாதா புவனேஸ்வரியே
    பிறவிப்பயன் தந்த புவனேஸித் தாயே கேள் 39

    பற்றினேன் திருவடியைப் பற்றறுப்பாய் புவனேசி
    புவனேசி உன்நாமம் பிணியறுக்கும் திருநாமம்
    என்றுணர்ந்தேன் உன்னருளால் என்தாயே புவனேசி
    மூலமந்த்ராத்மிகையே முக்தியும் தந்திடம்மா 40

    பக்தனுக்கு வசமாகும் பார்வதியே வந்திடம்மா
    பயத்தைப் போக்கிவிடும் பரதெய்வமே வருவாய்
    நிர்மலா நித்யா நிராகுலா வந்திடுவாய்
    மோகநாசினித்தாயே மோகத்தைப் போக்கடிப்பாய் 41

    பாபநாசினி மாயே பாபத்தைப் போக்கிடுவாய்
    கோபத்தைப் போக்கடிக்கும் க்ரோத சமனித்தாயே
    லோபித்தன மகற்றும் லோபநாசினியே கேள்
    சந்தேகம் அகற்றுவிக்கும் ஸம்சயக்னீ கேட்டிடம்மா 42

    பாபநாசினி மாயே பந்தத்தைப் போக்கிடம்மா
    பேதபுத்தியை அகற்றும் பேதநாசினியே கேள்
    மரணபய மகற்றிடுவாய் ம்ருத்யுமதனித் தாயே
    சுகத்தைத் தந்தரும் சுகப்ரதா சுகமருள்வாய் 43

    துராசாரத்தை யோட்டும் துராசாரசமனீ கேள்
    ஸர்வேச்வரீ ஸர்வமயீ ஸர்வ மந்த்ரஸ்வரூபிணியே
    மாஹேச்வரீ மஹாதேவி மஹாலக்ஷ்மீ சுந்தரியே
    மஹாரூபே மஹாபூஜ்யே மஹாபாதக நாசினியே 44

    பானுமண்டல மத்யஸ்தே பைரவி பகமாலினியே
    பத்மாஸனே பகவதி பத்மநாப சகோதரியே
    புருஷார்த்த ப்ரதே பூர்ணே போகினி புவவேஸ்வரியே
    தத்வாஸனே தத்வமயீ தத்துவத்தை உணர்த்திடுவாய் 45

    குமாரகணநாதாம்பா அஹங்காரம் அகற்றிடுவாய்
    ராஜ ராஜேச்வரித் தாயே ராஜ்யலக்ஷ்மீ வரமருள்வாய்
    ஸச்சிதாநந்தரூபிணியே ஸதாநந்தம் தந்திடுவாய்
    ஸ்ரீசக்ர ராஜநிலயே ஸ்ரீமத் த்ரிபுர சுந்தரியே 46

    ஸ்ரீலலிதாம்பிகைத் தாயே சீக்கிரமே வரமருள்வாய்
    வரமருள்வாய் வரமருள்வாய் வந்திப்பேன் புவனேசி
    புவனேசி திருவடியைப் புண்ணியத்தால் பற்றிவிட்டேன்
    சிக்கெனப் பற்றிவிட்டேன் புவனேசி உன்னடியை 47

    பற்றெல்லாம் அறுத்திடுவாய் பராசக்தி புவனேசி
    பிறந்து பிறந்திளைத்தேன் பிறவாவரமருள்வாய்
    துன்பமெல்லாம் விலக்கித் துரியத் திருத்திடுவாய்
    ஞான வைராக்கியமும் நான்மறை ரகசியமும் 48

    ஆகம புராணத்தின் அகத்துள்ள ரகசியமும்
    வேதாந்த ரகசியமும் விளக்கிடுவாய் புவனேசி
    பிறவிப்பிணி அகற்றிப் பிரம்மமய மாக்கிடம்மா
    எல்லாம் சிவமெனவே எனக்கு நீ அருளிடுவாய் 49

    நெஞ்சத்துள் நீ இருந்து நித்ய முக்தனாக்கிடம்மா
    அல்லும் பகலும் அடியேன் இவன் உன்னையன்றி
    மற்றோர் நினைவின்றி மஹராஜி போற்றுகிறேன்
    போற்றுகிறேன் போற்றுகிறேன் புவனேசி பொன்னடியை 50

    தலைமேலாம் தளத்தில் தந்திடம்மா தரிசனமும்
    தரிசனம் தந்திட்டுத் தரித்திரத்தை ஒழித்திடம்மா
    உள்ளத்துள்ளேயிருந்து உண்மையினை யுணர்த்திடம்மா
    திரிபுர சுந்தரித்தாயே தீர்த்திடுவாய் வினைகளையும் 51

    நான் உன்னைவிடமாட்டேன் நவின்றிடுவாய் உபதேசம்
    ஹ்ரீங்காரம் தந்துதாயே என்னில் உனைக்காட்டி
    உன்னில் எனைக்காட்டி உய்விப்பாய் என்னையும்நீ
    ஆத்ம சக்தியாயிருந்து அன்புடன் ரக்ஷிப்பாய் 52

    அறம் பொருள் இன்பத்தை அம்மே கொடுத்திடுவாய்
    வீட்டையும் தந்திட்டு விதியெல்லாம் விரட்டிடுவாய்
    பேரின்ப விடருளிப் பிறவாவரம் தந்து
    ப்ரம்மானந்தத்தோடு பிரியாதிருந்திடச் செய் 53

    திடம்பெறவே உன்னை நானென்றுணர்ந்திடச் செய்
    புவனத்தைப் பொய்யென்று புவனேசி காட்டிடம்மா
    விருப்பு வெறுப்பற்று என்னை இருத்திடுவாய்
    நிராசையாய் வீட்டில் என்னையும் நீ நிறுத்திடம்மா 54

    உள்ளும் புறமும் உன்னையே காட்டிடம்மா
    காணும் காட்சியெல்லாம் காந்திமதி நீ என்றும்
    ஓசை ஒளியெல்லாம் உமாதேவி தானென்றும்
    ஸ்தாவர ஜங்கமமெல்லாம் ஜகத்தாத்ரீ நீயென்றும் 55

    புவனேசி உணர்த்திடுவாய் புனிதனாக மாற்றிடுவாய்
    என்னையுமே காத்திடுவாய் என்னம்மே புவனேசி
    நின்றும் இருந்துமே நின்நாமம் ஏத்திடுவேன்
    நடந்தும் கிடந்துமே நானுன்னைப் போற்றிடுவேன் 56

    இமைப்பொழுதும் உன்நாமம் மறந்திடமாட்டேன் நான்
    என்நினைவெல்லாம் நீயாக நின்றிடுவாய் புவனேசி
    என் உணவெல்லாம் உனக்கேற்ற நைவேத்யமாகுமம்மா
    நான் நடப்பதே பிரதக்ஷிணமாய் நம்பிவிட்டேன் தாயே கேள் 57

    என் உடலாட்டமெல்லாம் உனக்கருளும் முத்திரையாம்
    என் உயிருக்கும் உயிரான ஆத்மசக்தி நீயன்றோ
    அங்கிங்கெனாதபடி எங்கும் சக்தி மயம்
    அழகிலும் அன்பிலும் அறிவிலும் சக்திமயம் 58

    அனைத்தும் பராசக்தி அணுக்களெல்லாம் சக்திமயம்
    சக்தியில்லாத தெய்வம் சவமென் றுணர்ந்திடடா
    தெய்வங்களுக்குள்ளே தேவி யிருப்பதாலே
    சக்தியுள்ள தெய்வமென்று சடுதியில் சொல்லுகிறார் 59

    ஹரிஹர ப்ரம்மாவும் அன்புள்ள தேவர்களும்
    ரிஷிகளும் ஞானிகளும் சித்தர்களும் பக்தர்களும்
    சக்தியைத் தொழுவதாலே சர்வசக்தியும் பெற்றார்
    புவனேசி மாதாவை முழுமனத்தோடு நீயும் 60

    அகத்துள் துதித்தேத்தி அன்புடன் சரணடைந்து
    இடைவிடாது உனதகத்துள் இக்கணமே இருத்தி
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் என்று உறுதியாக ஏத்தியும் நீ
    மலைபோல் இருந்திட்டால் மஹத்துவம் புலப்பட்டு 61

    தன்னில் புவனசக்தி தரிசனம் காணலாமே
    உன்னில் புவனசக்தி ஒன்றையே கண்டிடலாம்
    புவனமெல்லாம் புவனசக்தி புலப்படுமுன்னுள்ளே
    அகமும் புறமும் ஆதிசக்தி காண்பதற்கு 62

    அன்னை புவனேஸ்வரியை அகத்துள் இருந்திடடா
    அன்னை புவனேஸ்வரியை அகத்துள் இருத்துவோர்க்கு
    அழகெலாம் சக்தியாகும் அன்பெலாம் சக்தியாகும்
    அறிவெலாம் சக்தியாகும் அனைத்துமே சக்தியாகும் 63

    சத்தியம் சக்தியாகும் ஞானமும் சக்தியாகும்
    சாந்தம் ஆனந்தம் சக்தியாய்த் தோன்றிவிடும்
    ஆனந்தம் வேண்டிநீயும் ஆதிசக்தி புவனையையும்
    அன்புடன் பற்றிடடா அன்னை அருள் கிட்டிடுமே 64

    பகுத்தறிவுள்ள நீயும் பற்றிடடா புவனையையும்
    அனைவருள்ளிருக்கும் ஆன்மா புவனேசி
    அதுவே நானென்று அகத்துள் உணர்ந்திடலாம்
    அழிவிலாச் சக்தி ஆன்ம சக்தியாய் 65

    அகத்துள்ளே உண்மையாய் ஆன்மாவாய் இருப்பதை
    இம்மையில் உணர்ந்து நான் இன்புற்றிருப்பதற்கு
    அமைதியாய் வாழ்வதற்கு அருள்வாய் வரமெல்லாம்
    அருட்குலத் தாயே ஆன்ம சக்தியே 66

    அற்புதமாய் நான் வாழ அடியனுக்கருள்வதுடன்
    அம்மையே ஆன்மா அதுவே நானும்
    அதுவே நீயும் அனைத்தும் அதுவென்று நீ உணர்த்து
    மனமே! அம்மையின் உருவம் அன்பென்பர் ஞானிகள் 67

    சித்தர்கள் அன்பையே எனதம்மை யென்பர்
    அன்பின்றி உலகில் வளமில்லை மறவாதே
    பார்க்குமிடமெல்லாம் அன்பினைக் கண்டிட
    பராசக்தியாம் அன்பைப் பற்றிடு இக்கணமே 68

    பாவனையுடன் நீயும் அடைக்கலமாகி விடு
    பார்க்கலாம் உனக்குள் அற்புதக் கடவுளை
    அன்பே தானாய் அகத்துள் ஆன்மாவாய்
    அம்மையே உணரச் சரண மடைந்திடப்பா 69

    உனதறிவான உனது ஆன்மாவை
    உனக்குள் நீ உணர உடனடியாக
    இம்மையில் இக்கணமே உண்மையாகச் சரணடைவாய்
    மாதாவின் அருளால் மாசற்ற உனதான்மா 70

    சுயம் ஜோதியாய் சுத்தப் பிரம்மமாய்
    அகத்துள் உணரலாம் நம்பிடுவாய் மனமே
    இச் ஜகத்தையெல்லாம் அருட்குல மாக்கிடவும்
    நல்லறிவாற்றலும் நலந்தரு ஞானமுடன் 71

    பூரண மனிதனாய்ப் புவனை நீ எனை ஆக்கி
    பாக்கியத்தோடு பாரெல்லாம் புகழ்பெறப்
    புனிதனாக்கி என்னைப் பொலிவுறச் செய்குவாய்
    வேதவேதாந்த வாழ்வும் வீரத்தோடறமும் ஈந்து 72

    நல்ல நீதியோடருளும் தந்து
    நன்நெறியில் எனை இருத்தி வைத்து
    புத்தியில் அமைதியோடு அன்பெனும் அழகும் தந்து
    அருட்குலமோங்கும் தொண்டை இடைவிடா தருளித்தாயே 73

    ஈதலில் இன்பம்தந்து இன்பத்தில் இறையருள் காட்டிச்
    சாதலும் பிறப்புமில்லா வரத்தையும் தந்திட்டென்னை
    பூரண ப்ரம்மஞானம் பொருந்திய வாழ்வையருளி
    தான்தானாய் நிலைத்திடவே நீ தந்திடம்மா 74

    மனமே கவசத்தை தினமுமோதி காயத்தைசுத்திசெய்து
    கவசத்தைப் பொருள் உணர்ந்து கருத்தோடு ஓதிவிட்டால்
    கள்ளம் கபடமறுக்கும் காமக் கசடறுக்கும்
    வினைப்பயனையும் விரட்டும் புவனேசி கவசம் நம்பு 75

    பகுத்தறிவுள்ள சீடா பற்றிடடா கவசத்தை
    கவசத்தை ஓதியும் நீ கலிதோஷ மகற்றிடடா
    கவச பாராயணத்தால் கள்ளமில்லா வுள்ளமாகும்
    கள்ளமில்லா வுள்ளத்தில் காணலாமே புவனையையும் 76

    மனக்கோட்டை கட்டாமல் புதுக்கோட்டை வந்திடடா
    புதுக்கோட்டையுள் நீயும் புவனேசி கண்டிடடா
    பற்றிடடா புவனேசி பாதமதைப் பற்றிடடா
    பற்றிவிட்டால் பற்றற்ற பரசுகமும் கிட்டிவிடும் 77

    ஆனந்தமாகவே நீ அகத்துள் மாறிடுவாய்
    அன்னையின் கவசத்தை அன்புடனே நெக்குருக
    ஆசாரநிஷ்டையுடன் அனுதினமும் ஓதுவீரேல்
    அறம் பொருள் இன்பம் வீடு அனுக்ரஹித்தாட் கொண்டிடுவள் 78

    அதிசுலபமாகவேதான் அன்னையுமே முன்னிற்பள்
    மாதாவின் கவசமிதை மனமுருகி ஓதுவீரேல்
    அஷ்ட லக்ஷ்மியும் அகலாதிருந்திடுவள்
    மறவாது ஓதிட்டால் மஹராஜி அருளுண்டாம் 79

    பொருளுண்டாம் மாதாவின் புண்ணிய லோகமுண்டு
    ஆசார ஒழுக்கமுடன் அன்பு நேமநிஷ்டையுடன்
    சிரத்தா பக்தியுடன் ஜகன்மாதா கவசமிதை
    ஒருமனத்தோ டோதுவீரேல் மாபாவம் மறைவதுடன் 80

    அன்புருவாம் அம்மையை அகத்துள் உணர்ந்திடலாம்
    மாதாவும் முன்வந்து மஹத்தான வரமருள
    சொன்னபடி செய்து நீ சுகமடைவாய் மனமே கேள் 81

    ஓம் ஸ்ரீ ஸத்குரு பரமாத்மனே நம:
    ஓம் தத் ஸத்
    திருவையாறு ஐயாறப்பர் கோவில் சப்தஸ்தான திருவிழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
    திருவையாறு தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான அறம்வளர்த்த நாயகி அம்மன் உடனாகிய ஐயாறப்பர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை திருவிழா வெகுவிமர்சையாக நடைபெறும். இந்த ஆண்டு சித்திரை விழா கடந்த 5-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. 5-ந்தேதி கொடியேற்றம் நடந்தது.

    9-ந்தேதி மாலை தன்னைத்தானே பூஜித்தல் நடைபெற்றது. அன்று 6 ஊர்களிலிருந்து சாமிகள் கோவிலுக்கு வந்து சன்னதிக்கு முன் சைவர்களுக்கு மகேஸ்வர பூஜை நடைபெற்றது.

    தொடர்ந்து தேரோட்டம் நடந்தது. அப்போது அறம்வளர்த்த நாயகியுடன் ஐயாறப்பார் தேரில் எழுந்தருளி வீதி உலா நடந்தது. தேரோட்டத்தின் போது பக்தர்களுக்கும், பொதுமக்களுக்கும் நீர்மோர், அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் திருவையாறு தேவஸ்தான டிரஸ்டி கட்டளைசுவாமி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதி வந்து தேர் நிலையடி வந்தவுடன் காவேரி ஆற்றில் வாணவேடிக்கையும், கலை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சப்தஸ்தான திருவிழா நேற்று நடந்தது. விழாவையொட்டி காலை 5.30 மணிக்கு ஐயாறப்பர் அறம்வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும், நந்திகேஸ்வர் சுயசுவாம்பிகையுடன் வெட்டிவேர் பல்லக்கிலும் புறப்பட்டு திருப்பழனம், திருசோற்றுத்துறை, திருவேதிகுடி, திருக்கண்டியூர், திருப்பூந்துருத்தி சென்று நேற்று இரவு காவிரி ஆற்றில் 6 ஊர் பல்லக்குகளும் தில்லைஸ்தானத்தில் சங்கமித்தது. அப்போது தில்லைஸ்தானம் காவிரி ஆற்றில் வாணவேடிக்கை நடைபெற்றது.

    விழாவில் இன்று(செவ்வாய்க்கிழமை) தில்லைஸ்தானம் பல்லக்குடன் 7 ஊர் பல்லக்களும் திருவையாறு வீதிகளில் உலா வந்து தேரடியில் பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பொம்மை பூப்போடும் நிகழ்ச்சி முடிந்தவுடன் 6 ஊர் பல்லக்குகளும் கோவிலுக்கு சென்று தீபாராதனை காண்பிக்கப்பட்டு அந்தந்த ஊர்களுக்கு புறப்பட்டு செல்லும்.

    விழா ஏற்பாடுகளை தருமபுர ஆதீனம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்தபரமாசாரிய சுவாமிகளின் வழிகாட்டுதலின்படி தேவஸ்தான டிரஸ்டி கார்ப்பார் சொக்கநாத தம்பிரான் சுவாமிகள் மற்றும் கோவில் நிர்வாகிகள் செய்து வருகின்றனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜ்மோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் சுப்பிரமணியன், சப்-இன்ஸ்பெக்டர்கள், போலீசார் செய்திருந்தனர்.
    மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்ற பெயரும் ஏற்பட்டது.
    மணக்குள விநாயகர் கோயில் பாண்டிச்சேரியில் உள்ள ஒரு இந்துக் கோயிலாகும். மணக்குள விநாயகர் கோயில் 500 ஆண்டுகள் பழமையானது. அதாவது 1666 ஆம் ஆண்டுக்கும் முன்பேயுள்ள ஒரு கோவில் ஆகும். பாண்டிச்சேரியில் உள்ள மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் பிரபலமான இந்து கோவில்களில் ஒன்றாக கருதப்படுகிறது. 7913 சதுர அடி பரப்பளவில் இக்கோவில் பரந்து விரிந்துள்ளது.

    மணலைக் குறிக்கும் ‘மணல்’ மற்றும் கடலுக்கு அருகில் உள்ள குளத்தைக் குறிக்கும் ‘குளம்’ ஆகிய இரண்டு தமிழ் வார்த்தைகளிலிருந்து மணக்குள என்ற பெயர் வந்தது. மணக்குள விநாயகர் கோயில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலமானது.

    இன்று இக்குளம் இல்லை. ஆனாலும் மூலவருக்கு அருகே இடது புறத்தில் ஒரு சிறிய சதுர அளவில் அன்றைய மணற்குளம் இன்றும் உண்டு. இங்கு கடல் வெகு அருகில் இருந்தபோதும் சுத்தமான நீர் இதில் சுரக்கிறது. இதில் எது போட்டாலும் நிறம் கறுப்பாக மாறிவிடும்.

    தீராத நோய்களையும் இந்த நீர் தீர்க்கும் என்பது நம்பிக்கை. தடங்கல் ஏற்பட்டு திருமணம் தள்ளிக்கொண்டே இருப்பவர்களுக்கு இவரை தரிசனம் செய்தால் திருமணம் வெகுவிரைவில் கூடும். மகாகவி பாரதியார் பாடிய திருத்தலம் என்னும் பெருமையும் இந்தத் தலத்திற்கு உண்டு.

    கோவில் சிறப்புகள்

    1. இந்திய நாட்டிலேயே விநாயகருக்கு தங்கத்தால் ஆன மூலஸ்தான கோபுரம் இத்தலத்தில் மட்டும் தான் உள்ளது .

    2. விநாயகருக்கு இத்தலத்தில் மட்டும் தான் திருக்கல்யாணம் நடக்கிறது. பெரும்பாலும் பிரம்மச்சாரியாக பாவிக்கப்படும் விநாயகர், இத்தலத்தில் சித்தி, புத்தி என்னும் மனைவிகளும் காட்சியளிக்கிறார்.

    3. மணக்குள விநாயகர் தலத்தின் மூலவர் இருக்கும் இடம் ஒரு கிணறு ஆகும். பீடத்தின், இடப்பக்கம் மூலவருக்கு அருகிலேயே ஓர் சிறைய குழி ஒன்று உள்ளது. இது மிகவும் ஆழமான குழியாகும். இதன் ஆழத்தை தற்போது வரை யாராலும் கண்டறிய முடியவில்லை. மேலும், இதில் வற்றாத நீர் எப்போதுமே இருக்கும்.

    4. மணக்குள விநாயகரை பிரெஞ்சுகாரர்களும், ஆங்கிலேயர்களும் வழிபட்டதால் அந்த விநாயகருக்கு வெள்ளைக்கார பிள்ளையார் என்றபெயரும் ஏற்பட்டது.

    5. புதுச்சேரி நகரை கைப்பற்ற வெளிநாட்டுக்காரர்கள் நான்கு தடவை படையெடுத்து வந்து போரிட்டனர். அந்த நான்கு முற்றுகையின் போதும் மணக்குள விநாயகர் ஆலயம் எந்த சேதமும் அடையாமல் தப்பியது.

    6. இத்தலத்து விநாயகர் கற்பக விருட்சம் போல கருதப்படுவதால், இங்கே நடத்தப்படும் எல்லாவித பிரார்த்தனைகளும் நிறைவேறுகின்றன.

    7. மணக்குள விநாயகர் இடம்புரி விநாயகர் ஆவார். இவர் கிழக்கு திசை நோக்கி அருள்பாலித்து வருகிறார்.

    8. இத்தலத்தில் மாதம் தோறும் சங்கடஹர சதுர்த்தி தினத்தன்று 4 கால அபிஷேகங்களுடன் சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்று பூஜையில் பங்கேற்றால் மிகுந்த பலன் கிடைக்கும்.

    9. மணக்குள விநாயகர் ஆலயத்தின் தங்கத்தகடு போர்த்தப்பட்ட கொடிக்கம்பத்தின் உயரம் 18 அடியாகும்.

    10. ஒவ்வொரு மாதமும் வரும் சதுர்த்தி அன்று பிள்ளையாரை வேண்டி, அன்று முழுவதும் உபவாசம் இருந்து மாலையில் கொழுக்கட்டை படையலிட்டு விரதத்தை முடித்தால் எல்லாத் தடைகளும் நிவர்த்தியடைந்து திருமணம் நடைபெறும் என புதுச்சேரி மக்கள் நம்புகிறார்கள்.

    11. மணக்குள விநாயகர் கோவிலுக்கு தனிகுளம் எதுவும் இல்லை. எனவே பிரம்மோற்சவ நாட்களில் அருகில் உள்ள வேதபுரீஸ்வரர் ஆலய குளத்தில் தெப்பல் உற்சவம் நடத்தப்படுவது வழக்கத்தில் உள்ளது.

    12. திருமண வரம், குழந்தை வரம் உள்ளிட்ட அனைத்துவிதமான வழிபாடுகளும் இங்கே நடத்தப்படுகிறது. புதிதாக தொழில் தொடங்குவோர், வாகன வழிபாடு என இத்தலத்திற்கு பக்தர்கள் அதிகளவில் பயணிக்கின்றனர்.

    13. விநாயகர் சதுர்த்தி அன்று பிள்ளையார் வயிற்றில் காசு அல்லது நகை அணிவித்து பின்னர் உபயோகித்தால் நன்மை பிறக்கும்.

    தரிசனம் நேரம்:

    காலை 5.45 முதல் 12.30 மணி வரை.
    மாலை 4.00 முதல் 09,30 மணி வரை.

    அமைவிடம் :

    புதுவை புதிய பேருந்து நிலையத்தில் இருந்து 4 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. புதுவை ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.
    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா ஜூன் 6-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜூன் 11-ம்தேதி நடைபெறுகிறது.
    பழனி தண்டாயுதபாணி சுவாமி கோவிலில் நடைபெறும் முக்கிய திருவிழாக்களில ஒன்று வைகாசி விசாகம். 10 நாட்கள் நடைபெறும் இவ்விழா வரும் ஜூன் மாதம் 6ம் தேதி தொடங்க உள்ளது, அன்றைய தினம் பழனி பெரியநாயகி அம்மன் கோவிலில் காலை 9 மணிக்கு மேல் 10.30 மணிக்குள் கடக லக்னத்தில் கொடியேற்ற நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

    திருவிழா நடைபெறும் 10 நாட்களும் வள்ளி தெய்வானை சமேதரராக முத்துக்குமாரசுவாமி சப்பரம், தந்தப்பல்லாக்கு, தோளுக்கினியாள், தங்கக்குதிரை, வெள்ளி யானை, காமதேனு, ஆட்டுக்கிடா, வெள்ளிமயில், தங்கமயில் உள்ளிட்ட வாகனங்களில் ரதவீதிகளில் உலாவரும் நிகழ்ச்சி நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் ஜூன் 11ம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் இரவு 7 மணிக்கு மேல் 8 மணிக்குள் தனுர் லக்னத்தில் வள்ளி-தெய்வானை சமேத முத்துக்குமாரசுவாமிக்கு திருக்கல்யாணம் நடைபெறும்.

    முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஜூன் 12ம் தேதி மாலை 4.15 மணிக்கு நடைபெறுகிறது. திருவிழா நடைபெறும் 10 நாட்களும் பெரியநாயகியம்மன் கோவிலில் பக்திச் சொற்பொழிவு, பரத நாட்டிய, பக்தி இன்னிசை, வீணை இன்னிசை, நாட்டுப்புறப்பாடல் போன்ற கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன.

    முன்னதாக வரும் மே மாதம் 18ம் தேதி பெரியநாயகி அம்மன் கோவிலில் திருஞானசம்பந்தர் விழா நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை பழனி கோவில் இணை ஆணையர் பிரகாஷ், உதவி ஆணையர் செந்தில்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

    இதையும் படிக்கலாம்....வைகாசி மாதத்தில் அனுஷ்டிக்க வேண்டிய விரதங்கள்..
    சித்திரை வசந்த உற்சவ விழாவின் நிறைவாக அருணாசலேஸ்வரர் கோவிலில் நடந்த மன்மத தகன நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும், பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாகவும் திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் விளங்குகிறது. இக்கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    அதன்படி கடந்த 5-ந் தேதி சித்திரை வசந்த உற்சவ விழா தொடங்கியது. விழா நாட்களில் மகிழ மரத்தை சிறப்பு அலங்காரத்தில் உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர் வலம் வந்து பொம்மை பூ போடும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    சித்திரை வசந்த உற்சவ விழா நிறைவையொட்டி நேற்று முன்தினம் மதியம் அய்யங்குளத்தில் தீர்த்தவாரி நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்றது. அதனை தொடர்ந்து கோபால விநாயகர் கோவிலில் இரவு மண்டக படி நிகழ்ச்சி நடைபெற்றது.
     
    தொடர்ந்து கோவிலுக்குள் வந்த அருணாசலேஸ்வரர், கோவிலின் 3-ம் பிரகாரத்தில் மங்கல வாத்தியங்கள் முழங்க வலம் வந்து தங்க கொடிமரம் அருகே உள்ள சபா மண்டபத்தில் எழுந்தருளினார். இதையடுத்து அருணாசலேஸ்வரர் ஆழ்ந்த தியானத்தில் சென்று விட்டார். தொடர்ந்து தன் மீது அம்பு எய்த மன்மதனை அருணாசலேஸ்வரர் எரிக்கும் நிகழ்வு நடைபெற்றது.

    இதற்காக 20 அடி உயரம் கொண்ட மன்மத பொம்மை, கையில் வில்லோடு அருணாசலேஸ்வரர் முன்பு நிறுத்தப்பட்டது. அப்போது மன்மதனை அருணாசலேஸ்வரர் தன் நெற்றி கண்ணால் சுட்டெரிக்கும் நிகழ்வு நடந்தேறியது. அருணாசலேஸ்வரர் முன்பிருந்து சீறி பாய்ந்து வந்த தீ மன்மதன் மீது பட்டு கொழுந்து விட்டு எரிந்தது.

    இதில் மன்மதன் உருவம் முழுவதும் எரிந்து சாம்பலானது. அங்கிருந்தவர்கள் தங்களுடைய கர்ம வினைகள் போவதற்கும், பில்லி சூனியம் தங்களை அண்டாமல் இருப்பதற்கும், வீட்டில் இருக்கும் குழந்தைகளுக்கு கண் திருஷ்டிக்காக எரிந்த சாம்பலை எடுத்து சென்றார்கள். இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கும் காலமே, வைகாசி மாதம். பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைகாசி மாதத்தின் விழாக்களையும், விசேஷங்களையும் தெரிந்துகொள்வோம்...
    சூரியன் மேஷ ராசியிலிருந்து ரிஷப ராசிக்குள் பிரவேசிக்கும் காலமே, வைகாசி மாதம். அதனால் இதற்கு ரிஷப மாதம் என்ற பெயரும் உண்டு. தமிழ்க் கடவுளான முருகப்பெருமான் அவதரித்த திருநாளான வைகாசி விசாகம், பௌத்தர் அவதரித்த பௌத்த பூர்ணிமா, நரசிம்ம ஜெயந்தி என்று பல்வேறு சிறப்புகளைக் கொண்ட வைகாசி மாதத்தின் விழாக்களையும், விசேஷங்களையும் தெரிந்துகொள்வோம்...

    வைகாசி மாதம் வளர்பிறையில் வரும் ஏகாதசிக்கு, `மோகினி ஏகாதசி' என்று பெயர். இன்று விரதமிருந்து பெருமாள் கோவிலுக்குச் சென்று வழிபட்டால் பாவங்கள் அனைத்தும் விலகி வாழ்வில் வசந்தம் உண்டாகும்.

    தன்னைச் சரணடைந்த பக்தனைக் காக்க, சிம்ம முகமும் மனித உடலும் கொண்ட நரஹரி ரூபமாய் பெருமாள் `நரசிம்ம அவதாரம்' எடுத்த தினம் நரசிம்மர் ஜெயந்தி. அன்றைய தினம் நரசிம்மரை வணங்கினால் இடையூறுகள் அனைத்தும் விலகி வாழ்வில் நன்மைகள் ஏற்படும். பாவங்கள் அனைத்தும் விலகும் என்பது ஐதிகம்.  

    தேவர்கள் துயர் தீர்க்க, முருகப்பெருமான் வைகாசி மாதத்தில் விசாக நட்சத்திரத்துடன் கூடிய பௌர்ணமி தினத்தில் அவதரித்தார். எண்ணிய காரியங்கள் அனைத்தையும் நிறைவேற்றும் முருகப்பெருமானை வழிபட மிகச்சிறந்த நாள் வைகாசி விசாகம்.  

    புத்த பூர்ணிமா, புத்த மதத்தவருக்கு முக்கியமான நாளாகும். புத்தர் பிறந்த தினம், அவர் போதிமரத்தினடியில் தியானமிருந்து ஞானம் பெற்றது, அவர் பரிநிர்வாணம் அடைந்தது என்று முக்கியமான மூன்று நிகழ்வுகள் நடந்தது வைகாசி பௌர்ணமியன்றுதான்.

    `நடமாடும் தெய்வம்' என்று மக்களால் போற்றப்பட்ட காஞ்சி மகா பெரியவா, வைகாசி மாத அனுஷ நட்சத்திரத்தில் அவதரித்தார். தம்முடைய ஜீவித காலத்திலும், முக்திக்குப் பிறகும் தம் பக்தர்களுக்கு அருள்புரிந்து வரும் காஞ்சி மகானை வழிபட்டு, அவருடைய திருவருளால் அனைத்து நன்மைகளும் பெறுவோம்.

    துயரங்கள் அனைத்தையும் போக்கும் விநாயகரை வழிபடுவதற்கு மிகச்சிறந்த நாள் சங்கடஹர சதுர்த்தி தினம். அன்றைய தினம் விரதமிருந்துதான் தேவர்கள் ஞானம் பெற்றார்கள். சங்கடஹர சதுர்த்தி விரதமிருந்து தும்பிக்கையானை வழிபட்டால், சங்கடங்கள் எல்லாம் தீர்ந்து, வாழ்க்கை சந்தோஷமாக அமையும்.

    அக்னி நட்சத்திரம் 29-ம் தேதியுடன் முடிவடைகிறது. அக்னி பகவான் காண்டவ வனத்தை எரித்துப் பசியாறிய நாள்கள் அக்னி  தோஷமுள்ளவை என்பதால், கோவில்களில் இன்று அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தி மகா அபிஷேகம் நடைபெறும். இந்த தோஷ நிவர்த்தி பூஜையின்போது இறைவனை வணங்கினால் வேண்டியது அனைத்தும் நிறைவேறும் என்பது ஐதிகம்.

    வைகாசி மாத தேய்பிறை ஏகாதசிக்கு வருதிந் ஏகாதசி என்று பெயர். சிவபெருமான் பிரம்மனின் தலையைக் கொய்ததால் ஏற்பட்ட தோஷம் நீங்கிய நாள் இன்று. இன்று விரதமிருந்து பெருமாளை வழிபட்டால் பிரம்மஹத்தி தோஷம் விலகும் என்பது ஐதிகம்.

    முன்னோர்களுக்கு நேர்த்திக்கடன் செலுத்த உகந்த தினம் அமாவாசை நாள். முன்னோர்கள் நினைவாக விரதமிருந்து நீர் நிலைகளில் புனித நீராடி வழிபாடு செய்தால் முன்னோர்களின் ஆசி பெற்று வாழ்க்கை செழிப்படையும் என்பது நம்பிக்கை. குல தெய்வ வழிபாட்டுக்கும் உகந்த தினம்.

    முருகப் பெருமான் அவதரித்த வைகாசி மாதத்தில் வரும் சஷ்டி சிறப்பு மிக்கது. இன்று விரதமிருந்து முருகனை வழிபட்டால் முருகனின் அருள் பெற்று, குழந்தைப் பேறு வரமாகக் கிடைக்கும் என்பது நம்பிக்கை.
    ×