என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    பழமையும் பெருமையும் வாய்ந்த மீனாட்சி அம்மன் ஆலயத்தில் உள்ள கோபுரங்களும், மண்டபங்களும் கட்டப்பட்ட ஆண்டையும், இன்னும் சில விஷயங்களையும் இங்கே பார்க்கலாம்.
    பழமையும் பெருமையும் வாய்ந்தது, மதுரையில் உள்ள மீனாட்சி அம்மன் கோவில். கோபுரங்களாலும், மண்டபங்களாலும் நிறைந்தது இந்த ஆலயம். இந்த ஆலயத்தில் உள்ள கோபுரங்களும், மண்டபங்களும் கட்டப்பட்ட ஆண்டையும், இன்னும் சில விஷயங்களையும் இங்கே பார்க்கலாம்.

    வருடமும்.. கட்டுமானமும்..

    1168-75 = சுவாமி கோபுரம்
    1216-38 = ராஜ கோபுரம்
    1627-28 = அம்மன் சன்னிதி கோபுரம்
    1315-47 = மேற்கு ராஜ கோபுரம்
    1372 = சுவாமி சன்னிதி கோபுரம்
    1374 = சுவாமி சன்னிதி மேற்கு கோபுரம்
    1452 = ஆறு கால் மண்டபம்
    1526 = 100 கால் மண்டபம்
    1559 = தெற்கு ராஜ கோபுரம்
    1560 = சுவாமி சன்னிதி வடக்கு கோபுரம்
    1562 = தேரடி மண்டபம்
    1563 = பழைய ஊஞ்சல் மண்டபம்
    1564 - 72 = வடக்கு ராஜ கோபுரம்
    1564-72 = வெள்ளி அம்பல மண்டபம்
    1569 = சித்ர கோபுரம், ஆயிரங்கால்
    மண்டபம், 63 நாயன்மார்கள்
    1570 = அம்மன் சன்னிதி மேற்கு கோபுரம்
    1611 = வீர வசந்தராயர் மண்டபம்
    1613 = இருட்டு மண்டபம்
    1623 = கிளிக்கூட்டு மண்டபம், புது ஊஞ்சல் மண்டபம்
    1623-59 = ராயர் கோபுரம், அஷ்டசக்தி
    1626-45 = புது மண்டபம்
    1635 = நகர மண்டபம்
    1659 = பேச்சியக்காள் மண்டபம்
    1708 = மீனாட்சி நாயக்கர் மண்டபம்
    1975 = சேர்வைக்காரர் மண்டபம்

    எட்டுதிசை எல்லைகள்

    சீறா நாகம், கறவா பசு, பிளிறா யானை, முட்டா காளை, ஓடா மான், வாடா மலை, காயா பாறை, பாடா குயில்
    இவை அனைத்தும் மதுரை நகரின் அந்தக்காலத்து எட்டு திசைகளைக் குறிக்கும் எல்லைப் பகுதிகளாகும்.
    சீறா நாகம் - நாகமலை
    கறவா பசு - பசுமலை
    பிளிறா யானை - யானைமலை
    முட்டா காளை - திருப்பாலை
    ஓடா மான் - சிலைமான்
    வாடா மலை - அழகர்மலை
    காயா பாறை - வாடிப்பட்டி
    பாடா குயில் - குயில்குடி

    புண்ணியம்

    திருவாரூரில் பிறந்தால் புண்ணியம்
    காஞ்சியில் வாழ்ந்தால் புண்ணியம்
    காசியில் இறந்தால் புண்ணியம்
    சிதம்பரத்தில் வழிபட்டால் புண்ணியம்
    திருவண்ணாமலையை நினைத்தாலே
    மதுரையில் பிறந்தாலும்
    மதுரையில் வாழ்ந்தாலும்
    மதுரையில் இறந்தாலும்
    மதுரையில் வழிபட்டாலும்
    மதுரையை நினைத்தாலும் புண்ணியம்.

    மதுரை பஞ்சபூதத் தலங்கள்
    கும்பாபிஷேகம் பற்றிய புரிதல் பலருக்கும் எப்படி இருக்கும் என்பதே சந்தேகம்தான். அது பற்றிய சில விஷயங்களை இங்கே சிறு குறிப்பாக பார்க்கலாம்.
    கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்யப்பட வேண்டும் என்பது நியதி. சில இடங்களில் பல்வேறு காரண காரியங்களுக்காக அவை தள்ளியும் போகலாம். இந்த கும்பாபிஷேகம் பற்றிய புரிதல் பலருக்கும் எப்படி இருக்கும் என்பதே சந்தேகம்தான். அது பற்றிய சில விஷயங்களை இங்கே சிறு குறிப்பாக பார்க்கலாம்.

    நான்கு வகை கும்பாபிஷேகம்:

    1. ஆவர்த்தம்- ஓரிடத்தில் புதிதாக ஆலயம் அமைத்து, பிரதிஷ்டை செய்யப்படும் விக்கிரகங் களுக்கு கும்பாபிஷேகம் செய்வது.

    2. அனாவர்த்தம் - வழிபாடு இன்றியும், இயற்கை சீற்றங்களாலும் சிதைந்து போன ஆலயங்களை புதிதாக நிர்மாணம் செய்து கும்பாபிஷேகம் செய்வது.

    3. புனராவர்த்தம் - கருவறை, பிரகாரம், கோபுரம் ஆகியவற்றில் ஏதாவது சிதைந்து போயிருந்தால், அதற்கு பாலாலயம் செய்து புதுப்பித்து, அஷ்ட பந் தனம் சார்த்தி பிரதிஷ்டை செய்து கும்பாபிஷேகம் நடத்துவது.

    4. அந்தரிதம் - கோவிலுக்குள், ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நிகழ்ந்தால் அதன் பொருட்டு செய்யப்படும் வழிபாடு.

    கும்பாபிஷேகத்தில் நடைபெறும் பூஜைகள்:

    அனுஞை - காரியங்களைச் செய்யும் ஆற்றல் மிக்க ஓர் ஆசாரியனைத் தேர்ந்து எடுத்து, இறைவன் அனுமதி பெற்று நியமனம் செய்தல்.

    சங்கல்பம் - இறைவனிடத்தில் நமது தேவைகளை கோரிக்கையாக வைத்தல்.

    பாத்திர பூஜை - இறைவனுக்காக செய்யப்படும் பூஜைக்கான பாத்திரங்களை சுத்தம் செய்யும் பொருட்டு, அந்தந்த பாத்திரங்களுக்குரிய தேவதைகளை பூஜித்தல்.

    கணபதி பூஜை - காரியம் வெற்றியாக நிறைவேற கணபதியை வழிபடுதல்.

    வருண பூஜை - கோவிலை சுத்தம் செய்வதற்காக, வருண பகவானையும் சப்த நதி தேவதைகளையும் வணங்குதல்.

    பஞ்ச கவ்யம் - ஆத்ம சுத்தி செய்யும் பொருட்டு பசு மூலமாக கிடைக்கும் பால், தயிர், நெய், பசுநீர், பசுசாணம் முதலியவைகளை வைத்து செய்யப்படும் கிரியை.

    வாஸ்து சாந்தி - தேவர்களை வழிபட்டு, கும்பாபிஷேகம் எவ்வித இடையூறுமின்றி காக்கும் பொருட்டு வழிபடுதல்.

    பிரவேச பலி - எட்டு திக்கிலும் உள்ள திக் பாலகர்களுக்கு உரிய பரிகாரம் செய்து, அவர்களை அந்தந்த இடத்தில் இருக்க செய்தல்.

    மிருத்சங்கிரஹணம் - அஷ்ட திக் பாலகர்களிடம் அனுமதி பெற்று சுத்தமான இடத்தில் இருந்து மண் எடுத்து அப்பள்ளத்தில் அபிஷேகம் செய்தல்.

    அங்குரார்ப்பணம் - எடுத்த மண்ணை பாலிகைகளில் விதைகளை இட்டு முளை வளரச்செய்தல். இதில் 12 சூர்யர்களையும், சந்திரனையும் வணங்குதல்.

    ரக்ட்சாபந்தனம் - கும்பாபிஷேகம் செய்யும் ஆசாரியனுக்கு எவ்வித இடையூறும் வரக்கூடாது என்பதற்காக கையில் கட்டப்படும் மந்திரித்த காப்புக் கயிறு கட்டுதல்.

    கும்பலங்காரம் - கும்பங்களை, இறைவன் உடம்பாக பாவித்து அலங்காரம் செய்தல்.

    கலா கர்ஷ்ணம் - விக்ரகத்தில் இருக்கும் சக்தியை கும்பத்திற்கு மந்திரப் பூர்வமாக அழைத்தல்.

    யாகசாலை பிரவேசம் - கலசங்களை யாகசாலைக்கு அழைத்து வருதல்.

    சூர்ய, சந்திர பூஜை - யாகசாலையில் சூர்யனையும், சந்திரனையும் வணங்குதல்.

    மண்டப பூஜை - அமைக்கப்பட்டிருக்கும் யாக சாலையை பூஜை செய்தல்.

    பிம்ப சுத்தி - விக்கிரகங்களை மந்திரப் பூர்வமாக சுத்தம் செய்தல்.

    நாடி சந்தானம் - யாகசாலை இடத்திற்கும், மூலவா் திருமேனிக்கும் தர்ப்பைக் கயிறு, தங்க கம்பி, வெள்ளிக் கம்பி அல்லது பட்டுக் கயிறு இவற்றால் இணைப்பு ஏற்படுத்துதல்.

    விசேஷ சந்தி - 36 தத்துவ தேவதைகளுக்கும் அர்க்யம் தருவது, உலகத்தில் உள்ள அனைத்து ஆத்மாக்களுக்கு அர்க்யம் தருவது.

    பூத சுத்தி - பூத உடம்பை தெய்வ உடம்பாக மந்திரப் பூர்வமாக மாற்றி அமைத்தல்.

    ஸ்பர்ஷாஹுதி - 36 தத்துவங்களை யாகத்திலிருந்து மூல விக்ரகங்களுக்கு கொண்டு சேர்த்தல்.

    அஷ்ட பந்தனம் - எட்டு பொருள்களால் ஆன மருந்தினால் மூர்த்தியையும், பீடத்தையும் ஒன்று சேர்த்தல். இதை மருந்து சாத்துதல் என்பர்.

    பூர்ணாஹுதி - யாகத்தை பூர்த்தி செய்தல்.

    கும்பாபிஷேகம் - யாக சாலையில் மூர்த்திகளுக்குரியதாக வைத்துப் பூஜிக்கப்பட்ட குடத்து நீரை, அந்தந்த மூர்த்திகளுக்கு அபிஷேகம் செய்தல். இதனால் அந்த மூர்த்தி அந்த விக்ரகத்தில் எழுந்தருள்கிறார்.

    மகாபிஷேகம் - கும்பாபிஷேகம் முடிந்த பிறகு மூல விக்ரஹத்திற்கு முறைப்படி அபிஷேகம், அலங்காரம் செய்தல்.

    மண்டலாபிஷேகம் - பிறந்த குழந்தையாக விக்ரகத்தில் வீற்றிருக்கும் இறைவனுக்கு 48 நாட்கள் விஷேச, அபிஷேக பூஜைகள் செய்து முழு சக்தி யுடன் இருக்கச் செய்தல்.
    ஜாதகத்தில் சுக்கிர (கிரகம்) பகவான் ஆட்சியோ, உச்சமோ நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை உச்சரிக்க வேண்டிய “ஸ்ரீ சுக்கிர பகவான் மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் மூல மந்திரங்கள் வருமாறு:
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம் க்லௌம் கம்
    கணபதயே வரவரத ஸர்வ ஜனம் மே
    வசமானய ஸ்வாஹா

    ஒருவர் தனது வாழ்வியலில் அனைத்து வகையான செல்வங்களையும் பெற்று உடல் நலத்துடன் வாழ்ந்து வந்தால் அவருக்கு “சுக்கிரத் திசை” என சிலர் கூற நாம் கேள்விப்பட்டிருப்போம். ஒரு மனிதனின் வாழ்வில் அனைத்து வகையான இன்பங்களை அனுபவிக்க அவரது ஜாதகத்தில் சுக்கிர (கிரகம்) பகவான் ஆட்சியோ, உச்சமோ பெற்றிருக்க வேண்டும் என்பது ஐதீகம்.

    ஜாதகத்தில் அப்படிப்பட்ட நிலை இல்லாதவர்களும் செல்வ வளம் பெற்று நலம் காண தினமும் காலை, மாலை உச்சரிக்க வேண்டிய “ஸ்ரீ சுக்கிர பகவான் மற்றும் ஸ்ரீமகாலட்சுமியின் மூல மந்திரங்கள் வருமாறு:

    “ஹிமிகுந்த ம்ருணாலாபம் தைத்யானாம் பரமம் குரும்.
    ஸர்வ சாஸ்த்ர ப்ரவக்தாரம் பார்க்கவம் ப்ரணமாம்யஹம்”
    சுக்கிர மூர்த்தி சுபம் மிக ஈவாய்
    வக்கிரமின்றி வரம்மிகத் தருவாய்!
    வெள்ளிச் சுக்கிர வித்தக வேந்தே
    அள்ளிக் கொடுப்பாய் அடியார்க்கருளே!!

    சுக்ர காயத்ரீ மந்திரம்

    ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
    தநுர் ஹஸ்தாய தீமஹி
    தந்நோ சுக்ர: ப்ரசோதயாத்

    மகாலட்சுமி மந்திரம்

    ஓம் ஹ்ரீம் ஸ்ரீம் க்லீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்மி ஆகச்ச ஆகச்ச,
    மம மந்திரே திஷ்ட திஷ்ட ஸ்வாஹா

    மஹாலக்ஷ்மி மூல மந்திரம்

    ஓம் ஸ்ரீம் க்லீம் மஹாலக்ஷ்மி
    மஹாலக்ஷ்மி ஏஹ்யேஹி
    ஏஹ்யேஹி ஸர்வ
    ஸௌபாக்யம் மே தேஹி ஸ்வாஹா
    ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம். கமலே
    கமலாலயே ப்ரஸீத ப்ரஸீத.
    ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம்
    ஓம் மஹாலக்ஷ்ம்யை நம.

    பீஜ மந்திரத்துடன் கூடியவை இந்த மஹா மந்திரங்கள். இதில் ஏதேனும் ஒரு மந்திரத்தை மனம் உருகி சொன்னால் சிறப்பான பலன் தரும் என்பது ஐதீகம். இதனை சொல்லும் முன், மகாலட்சுமியின் படத்துக்கு பொட்டு வைத்து, பூ சூட்டி, நெய் தீபம் ஏற்றி குலதெய்வத்தை முதலில் வணங்கி அதன் பிறகே, மந்திரம் சொல்லி வழிபட்டை ஆரம்பிக்க வேண்டும். நிவேதனமாக, சர்க்கரை சேர்ந்த பால் வைத்து வெள்ளிக்கிழமைகளில் சொல்ல ஆரம்பிக்க வேண்டும். தினமும் 16 முறைக்குக் குறையாமல் சொல்ல வேண்டும். 108 முறை சொல்வது உத்தமம்.

    இப்பூஜையின் நிறைவில் குழந்தைகளுக்கு இனிப்பு வகைகளில் ஏதேனும் ஒன்றை தந்து வருவது சிறப்பாகும். வீட்டில் மகாலட்சுமி வாசம் செய்யும் துளசியுடன் கூடிய மாடம் இருந்தால் இதேபோல் அதற்கு வெள்ளிக்கிழமையில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்வது இன்னும் சற்று கூடுதல் பலன் தரும் என்பது குறிப்பிடத்தக்கது.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் நடந்த திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சியில் தங்கக்குதிரை வாகனத்தில் நம்பெருமாள் வையாளி கண்டருளினார்.
    ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவிலில் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த மாதம் 3-ந்தேதி திருநெடுந்தாண்டகம் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. 4-ந்தேதி பகல்பத்து உற்சவத்தின் முதல் நாள் திருமொழி திருநாள் தொடங்கியது.

    பகல்பத்து உற்சவத்தின் 10-வது நாளான 13-ந்தேதி நம்பெருமாள் நாச்சியார் திருக்கோலம் எனப்படும் மோகினி அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு சேவை சாதித்தார். 14-ந்தேதி ராப்பத்து உற்சவத்தின் முதல் நாள் வைகுண்ட ஏகாதசி திருநாள் ஆகும். அன்று சொர்க்கவாசல் திறக்கப்பட்டது. ராப்பத்து உற்சவத்தின் 7-ம் நாளான நேற்று முன்தினம் நம்பெருமாள் திருக்கைத்தல சேவை நடைபெற்றது.

    ராப்பத்து உற்சவத்தின் 8-ம் நாளான நேற்று திருமங்கை மன்னன் வேடுபறி நிகழ்ச்சி கோவில் நாலாம் பிரகாரத்தின் கிழக்கில் உள்ள மணல்வெளியில் நடைபெற்றது. அப்போது நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் மணல்வெளியில் ஓடியாடி, வையாளி கண்டருளினார். இந்த காட்சியை திரளான பக்தர்கள் பரவசத்தோடு கண்டு நம்பெருமாளை வணங்கினர்.

    இதையொட்டி மாலை 5 மணிக்கு சந்தனு மண்டபத்தில் இருந்து நம்பெருமாள் தங்கக்குதிரை வாகனத்தில் புறப்பட்டு மணல்வெளி வந்தடைந்தார். அங்கு மாலை 5.30 மணிமுதல் மாலை 6 மணிவரை வையாளி கண்டருளினார். பின்னர் இரவு 7.30 மணிக்கு திருமாமணி மண்டபம் சென்றடைந்தார். அங்கு இரவு 8.15 மணி முதல் இரவு 9.30 மணிவரை உபயகாரர் மரியாதையுடன் பொதுஜனசேவையும் நடைபெற்றது. இரவு 11 மணிக்கு திருமாமணி மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வீணை வாத்தியத்துடன் நம்பெருமாள் இரவு 12.15 மணிக்கு மூலஸ்தானம் சென்றடைந்தார்.

    திருமாலுக்கு தொண்டு செய்தே தனது செல்வத்தை இழந்த திருமங்கை மன்னன், தனது பெருமாள் கைங்கர்யம் தொடர வழிப்பறியில் ஈடுபட்டு வந்தார். இவரை தடுத்தாட்கொள்ள விரும்பிய பெருமாள் அவரிடம் சிறிதுநேரம் விளையாட்டு காட்டி பின் அவரது காதில் ஓம்நமோ நாராயணாய எனும் மந்திரத்தை தானே உபதேசித்து ஆட்கொண்ட விதம் வேடுபறியாகும். வேடுபறி நிகழ்ச்சியின் ஒருபகுதி பக்தர்கள் முன்னிலையில் நேற்று நடத்திகாட்டப்பட்டது.

    இதையடுத்து திருமங்கை மன்னன் மரபில் வந்தவர்கள் என்று கூறப்படும் ஸ்ரீரங்கம் தெப்பக்குளத்தெரு காவல்காரர் குடும்பத்தினர் மற்றும் அவர்தம் உறவினர்களுக்கு பெருமாள் சார்பில் மரியாதை வழங்கப்பட்டது. விழாவின் 10-ம் நாளான நாளை (வியாழக்கிழமை) தீர்த்தவாரியும், 24- ந்தேதி நம்மாழ்வார் மோட்சமும், இயற்பா சாற்றுமறை நிகழ்ச்சியுடன் வைகுண்ட ஏகாதசி விழா நிறைவடைகிறது.

    விழாவிற்கான ஏற்பாடுகளை ஸ்ரீரங்கம் கோவில் இணை ஆணையர் மாரிமுத்து, உதவி ஆணையர் கந்தசாமி மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகிறார்கள்.
    சிவனும், பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்தபோது நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிபட்டதால் எல்லா நவக்கிரகங்களும் கீழ் நோக்கி பார்ப்பதாக கூறப்படுகிறது.
    சிவன் கோவில்களில் வழக்கமாக நவக்கிரகங்களின் சிலைகள் இருக்கும். அதனை பக்தர்கள் சுற்றி வந்து வழிபடுவார்கள். ஆனால் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவிலில் உள்ள நவக்கிரக மண்டபத்தில் மேல் தளத்தில் நவக்கிரக சிலைகள் உள்ளன. ஒரே கல்லில் அவை வடிவமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர அந்த கல்லில் 12 ராசிகளும் இடம் பிடித்துள்ளன.

    புதிதாக செல்பவர்கள் நவக்கிரக மண்டபத்துக்கு சென்றால் அங்கு வெறும் மேடை மட்டுமே தென்படும். தலையை உயர்த்தி மேலே பார்த்தால் தான் நவக்கிரகங்களையும், ராசிகளையும் காண முடியும். சிவனும், பார்வதி தேவியும் இக்கோவிலில் அமர்ந்து யாகம் செய்தபோது நவக்கிரகங்கள் மேலிருந்து கீழ் நோக்கி வழிபட்டதால் எல்லா நவக்கிரகங்களும் கீழ் நோக்கி பார்ப்பதாக கூறப்படுகிறது.

    அதேபோல் வழிபடும் பக்தர்களை மேலிருந்து நவக்கிரங்கள் பார்க்கின்றன. பங்குனி மாதம் உத்திரம் நட்சத்திரம் தொடங்கி சித்திரை மாதம் பரணி நட்சத்திரம் வரை சிவன், பார்வதி, குமரி தேவி விக்ரகங்கள் இந்த மண்டபத்தில் பூஜையில் இருப்பார்கள். இது அக்னி நட்சத்திர காலமாகும், தெய்வங்களை குளிர்விக்க நடத்தப்படும் பூஜை. இதற்காக பூஜை நடைபெறும் வசந்தமண்டபத்தில் உள்ள குழியை சுற்றி தண்ணீர் தேக்கி வைக்கப்படும். இந்த பூஜை முடிந்த மறுநாள் சித்திரை தெப்பத்திருவிழா கொடியேற்றம் தொடங்குவது வழக்கமாக உள்ளது.
    இந்த கோவிலில் விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக தங்களின் ஜாதகத்தை, இவரது சன்னிதியில் வைத்து பூஜித்து வாங்கிச்செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.
    பிரம்மாவின் ஆணவத்தால், அவரது ஒரு தலையை கொய்ததுடன், அவர் செய்து வந்த படைப்பு தொழிலையும் பறித்தார், ஈசன். இதையடுத்து பிரம்மதேவன், சிவ பூஜை செய்து மீண்டும் படைப்புத் தொழிலை பெற்ற இடமாக, திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் திருக்கோவில் திகழ்கிறது.

    இத்தலத்தில் முருகப்பெருமான், ஒரு சிவலிங்கத்தை பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளார். பின்னர் இங்கிருந்து படை திரட்டிச் சென்று அசுரர்களை அழித்துள்ளார். படை திரட்டப்பட்டதால், இத்தலம் ‘திருப்படையூர்’ என்று வழங்கப்பட்டு, அதுவே மருவி ‘திருப்பட்டூர்’ ஆனதாக சொல்கிறார்கள். கந்தன் வழிபட்ட இறைவனே ‘கந்தபுரீஸ்வரர்’ என்ற பெயரில் இங்கு அருள்கிறார்.

    இத்தல காலபைரவர் விசேஷமானவர். அர்த்தஜாம பூஜைக்குப்பின் மூலவர் உள்ளிட்ட பிற சன்னிதிகள் மூடப்பட்டதும், அந்த சாவியை இவரிடம் வைத்து பூஜை செய்வர்.

    அப்போது பிரசாதமாக வழங்கப்படும் விபூதியை, குழந்தைகளுக்குக் கொடுத்தால், இரவு வேளையில் தூங்காமல் தொடர்ந்து அழும் குழந்தைகள் நிம்மதியாக தூங்கும் என்பது நம்பிக்கை.

    பிரம்மா மங்கலமான வாழ்வை அருள்பவர். எனவே அவருக்கு மஞ்சள் காப்பிட்டு, மஞ்சள் நிற புளியோதரை நைவேத்தியமாக படைத்து, மஞ்சளை பிரசாதமாக கொடுக்கிறார்கள். மற்ற சன்னிதிகளில் உள்ள பெரும்பாலான மூர்த்தங்களுக்கும் மஞ்சள் நிற வஸ்திரத்தையே பயன்படுத்துகின்றனர்.

    தலையெழுத்தை மாற்றி அமைக்கும் ஆலயமாகவும், இத்தல பிரம்மாவும் திகழ்கிறார்கள். விரைவில் திருமணம் நடைபெற வேண்டும் என்பதற்காக தங்களின் ஜாதகத்தை, இவரது சன்னிதியில் வைத்து பூஜித்து வாங்கிச்செல்பவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

    நவக்கிரகத்தில் உள்ள குருவின் அதிதேவதை, பிரம்மன். எனவே இங்கு பிரம்மாவுக்கு வியாழக்கிழமைகளில் குரு தோஷ நிவர்த்தி பூஜை செய்யப்படுகிறது.

    மூலவர் பிரம்மபுரீஸ்வரரையும், பிரம்மநாயகி அம்மனையும் வணங்கி, அவர்களுக்கு அபிஷேகம் செய்தும், வஸ்திரம் அணிவித்தும் நேர்த்திக்கடன் செலுத்தலாம்.

    இங்கு தல தீர்த்தமாக ‘பிரம்ம தீர்த்தம்’ உள்ளது. இந்த தீர்த்த நீரை எவர் ஒருவர் கையில் எடுத்தாலும், அவர் கங்கையில் நீராடிய பலனைப் பெறுவார்.

    திருச்சியை அடுத்துள்ள சமயபுரத்தில் இருந்து 15 கிலோமீட்டர் தூரத்திலும், சிறுகனூரில் இருந்து 5 கிலோமீட்டர் தொலைவிலும் திருப்பட்டூர் திருத்தலம் உள்ளது.

    பிரம்மன் வழிபட்ட தலம் என்பதால், இத்தல மூலவர் ‘பிரம்மபுரீஸ்வரர்’ என்று அழைக்கப்படுகிறார்.

    இங்கு சிவபெருமானே பிரதான மூர்த்தி என்றாலும், பிரம்மன் வழிபாடு செய்த இந்த ஆலயத்தில் பிரம்மாவுக்கும் பிரமாண்ட சிலை உள்ளது. தனிச் சன்னிதியில் கையில் அட்சமாலை, கமண்டலத்துடன் இவர் காட்சி தருகிறார். இவருக்கு 27 நட்சத்திரங்களையும், 9 கிரகங்களையும் குறிக்கும் வகையில் 36 தீபங்களும், 108 புளியோதரை உருண்டைகளும் வைத்து வழிபடுவது சிறப்பு.

    பிரம்மன் வழிபாடு செய்த ஷோடசலிங்கம் (பதினாறு பட்டை கொண்டது) தனி மண்டபத்தில் காணப்படுகிறது.

    பிரம்மா இத்தலத்தில் சிவபெருமானை, 12 சிவலிங்க வடிவில் வழிபட்டு பூஜித்துள்ளார். பழமலைநாதர், கந்தபுரீஸ்வரர், பாதாள ஈஸ்வரர், மண்டூகநாதர், ஐம்புகேஸ்வரர், சப்தரிஷீஸ்வரர், கயிலாயநாதர், தாயுமானவர், ஏகாம்பரேஸ்வரர், காளத்தீஸ்வரர், அருணாசலேஸ்வரர், தூயமாமணீஸ்வரர் ஆகிய 12 லிங்கங்களையும் இத்தலத்தில் தரிசிக்கலாம்.

    பிரம்மன் வழிபட்ட 12 லிங்கங்கள் உள்ள தலம் என்பதால், இந்த ஆலயத்திற்கு வந்து வணங்கினாலே, இந்தியா முழுவதும் உள்ள 12 ஜோதிர்லிங்க தலங்களை வழிபட்ட பலன் கிடைக்கும் என்கிறார்கள்.
    வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ராப்பத்து உத்சவத்தின் ஏழாம் திருநாள் திருகைத்தல சேவையாக நடைபெறுகிறது. இந்த உத்சவத்துக்கும் தனிச் சிறப்பு உள்ளது.
    ராப்பத்து உத்சவத்தின் முதல் நாளன்று பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதில் எட்டாம் நாளைத் தவிர, மற்ற நாட்களில் கருவறையிலிருந்து புறப்பாடாகி பரமபத வாசல் வழியாக செல்லும் போது நம்பெருமாள் போர்வை போர்த்திக்கொள்வதும், பரம பதவாசலில் திரை போட்டு மாலை சாத்திக் கொள்வதும் நடைபெறும். ஆனால் திருவிழாவின் ஏழாம் நாளான திருக்கைத்தல சேவையன்று இந்த நிகழ்வு நடைபெறாது.

    இந்நாளில் நம்பெருமாள் அதிகளவிலான திருவாபரணங்களை சாத்திக்கொள்ளாமல் 5, 6 பீதாம்பரங்களை அடுக்காக சாத்திக் கொண்டு புறப்பட்டு மண்டபம் எழுந்தருளுவார். ஸ்ரீரங்க ராஜஸ்தவத்துக்குப் பதிலாக ஸ்ரீஸ்தவமும், ஸ்ரீரங்கநாச்சியர் விஷயமாய் பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ன கோசமும் சேவிக்கப்படும்.

    பெருமாள் அர்ச்சகர்களின் திருக்கரங்களில் எழுந்தருளியிருந்து திருமாமணி மண்டபத்தின் மேல் குறட்டுக்கு வந்து, ஆழ்வாருக்கு சேவை சாதிப்பார்.
    திரை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, தோளுக்கிணியானில் கீழே இறங்கியதும், திருமா மணி மண்டபத்தின் சிம்மாசனத்தில் அர்ச்சகர்கள் நம் பொருமாளையும் செங்கோலினையும் எழுந்தருள செய்வார்கள்.

    கொட்டகையில் உண்ணிலாவிய திருவாய்மொழி ஏழாம் கத்தி பாசுரங்களில் முதல் பாசுரத்தைத் தொடக்கம் செய்த அரையர்கள், திருமாமணி மண்டபத்தில் மற்ற பாசுரங்களைச் சேவித்து சாற்றுமுறை செய்வார்கள்.

    திருக்கைத்தல சேவையின் போது கங்குலும் பகலும் என்ற பாசுரத்தை சேவிப்பர். பெருமாள் ஆழ்வாருக்குத் திரை வாங்கி, திருக்கைத்தலத்தில் சேவை சாதிக்கும் போது அந்தத் திருவாய்மொழியின் எஞ்சிய பாசுரங்களைப் பூர்த்திச் செய்த பிறகு திரை போட்டு பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    தொடர்ந்து அலங்காரம் அமுது செய்த பிறகு இரண்ய வதத்துக்கு அருளப்பாடாகும். இதற்காக அரையர் தீர்த்தம், சடகோபம் சாதிப்பார். முதல் நாள் உயர்வற உயர்நலம் வியாக்யானம் ஆன உடனும், 7-ம் நாள் கங்குலும் பகலும் வியாக்யானமும் ஆன உடனும், நம்மாழ்வார் சன்னதிக்காரர் அரையர்களுக்கு சாற்று படி, வேளையும் சம்பாவானை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி இந்த திருவிழாவின்போது சமர்ப்பிக்கப்படும்.
    நித்திரவிளை அருகே இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் உள்ள புனித கேதரின் ஆலய அர்ச்சிப்பு விழா இன்று(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது.
    நித்திரவிளை அருகே உள்ள இரவிபுத்தன்துறை மீனவ கிராமத்தில் புனித கேதரின் ஆலயம் உள்ளது. இந்த ஆலய அர்ச்சிப்பு விழா இன்று(புதன்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. விழாவில் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட பேராயர் சூசை பாக்கியம், மார்த்தாண்டம் மறைமாவட்ட ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ், கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் ஆகியோர் தலைமை தாங்கி ஆலயத்தை அர்ச்சித்து வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார்கள். பின்னர் அன்பு விருந்து நடக்கிறது.

    தொடர்ந்து 23-ந் தேதி முதல் 31-ந் தேதி வரை புனித கேதரின் ஆலய திருவிழா நடக்கிறது.

    23-ந் தேதி மாலை 6 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் திருவிழா கொடியேற்றி வைத்து திருப்பலி நிறைவேற்றுகிறார். 24-ந் தேதி காலை 10 மணிக்கு அருட்பணியாளர் ஜெரோம் அமிர்தைய்யன், ஜோஸ் வர்க்கீஸ் ஆகியோர் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது. இரவு 11.30 மணிக்கு கிறிஸ்து பிறப்பு திருப்பலி நடைபெறும்.

    25-ந் தேதி காலை 7 மணிக்கு திருப்பலியும், தொடர்ந்து கிறிஸ்துமஸ் கொண்டாட்டமும் நடக்கிறது. 26-ந் தேதி மாலை 6 மணிக்கு ஜெபமாலை, ஆடம்பர கூட்டு திருப்பலி நடக்கிறது.

    27-ந் தேதி மாலை 6 மணிக்கு முன்னாள் பங்கு தந்தையர்கள் தலைமையில் ஆடம்பர கூட்டுதிருப்பலியும், 28-ந் தேதி காலை 7 மணிக்கு இறந்தவர்களுக்கான நினைவு திருப்பலியும், மாலை 5 மணிக்கு திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட விகார் ஜெனரல் ஜோசப் தலைமையில் ஜெபமாலை, திருப்புகழ் மாலையும் நடக்கிறது. தொடர்ந்து தேர்ப்பவனி நடக்கிறது.

    29 மற்றும் 30-ந் தேதிகளில் தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் மற்றும் திருவனந்தபுரம் உயர் மறைமாவட்ட துணை ஆயர் கிறிஸ்துதாஸ் ஆகியோர் தலைமையில் கூட்டுதிருப்பலி, உறுதி பூசுதல் திருப்பலி போன்றவை நடக்கிறது. 31-ந் தேதி இரவு 11 மணிக்கு புத்தாண்டு நற்கருணை ஆராதனையும், தொடர்ந்து நள்ளிரவு 12 மணிக்கு புத்தாண்டு திருப்பலியும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை ஆலய பங்கு தந்தையர்கள், பங்கு பேரவை, ஆலய கட்டுமான குழு மற்றும் பங்கு மக்கள் செய்து வருகிறார்கள்.
    கிறிஸ்துமஸ் மற்றும் ஆங்கில புத்தாண்டை முன்னிட்டு புதுச்சேரியில் தேவாலயங்கள் மின்விளக்கு அலங்காரத்தில் ஜொலிக்கின்றன.
    புதுச்சேரியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு பண்டிகையை கொண்டாட அரசு முழு தளர்வு அறிவித்துள்ளது. இதையொட்டி புதுச்சேரிக்கு சுற்றுலா பயணிகள் படையெடுத்து வருகின்றனர். இதனால் கிறிஸ்துமஸ், ஆங்கில புத்தாண்டு கொண்டாட்டம் களை கட்டத்தொடங்கி உள்ளது.

    கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது தேவாலயங்கள், வீடுகள் தோறும் அழகிய கிறிஸ்துமஸ் குடில் அமைத்துள்ளனர். கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்கு இன்னும் சில நாட்களே இருப்பதால் கடை வீதிகளில் புத்தாடைகள், கிறிஸ்துமஸ் அலங்கார பொருட்கள், கிறிஸ்துமஸ் நட்சத்திரங்கள், பனிபடர்ந்த சூழலில் அழகிய வெண்பனி பூச்சுடன் உயர்ந்த கிறிஸ்துமஸ் மரங்கள் மற்றும் குடில்களை கிறிஸ்தவர்கள் ஆர்வமுடன் வாங்கிச் செல்கின்றனர்.

    புதுச்சேரியில் தூய இருதய ஆண்டவர் பசிலிக்கா தேவாலயம், மிஷன் வீதியில் உள்ள ஜென்மராக்கினி தேவாலயம் (சம்பா கோவில்), துய்மா வீதியில் உள்ள புனித மேரி தேவாலயம் (கப்ஸ் கோவில்), அரியாங்குப்பம் புனித ஆரோக்கிய அன்னை தேவாலயம், வில்லியனூர் லூர்து அன்னை ஆலயங்களில் கிறிஸ்துமஸ், புத்தாண்டையொட்டி சிறப்பு பிரார்த்தனைகள் நடைபெறுகின்றன.

    இதையொட்டி தேவாலயங்கள் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு மின்னொளியில் ஜொலிக்கிறது. புதுவைக்கு வரும் சுற்றுலா பயணிகள் இந்த தேவாலயங்கள் முன்பு நின்று செல்பி எடுத்து மகிழ்கின்றனர்.
    திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நடராஜர் மற்றும் அம்மன் முக்கிய வீதிவழியாக திருவீதிஉலா காட்சியும், தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது.
    திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை கோவிலில் நேற்று திருவாதிரையை முன்னிட்டு முல்லைவனநாதர், கர்ப்பரட்சாம்பிகைக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது. மதியம் சுவாமி நடராஜர் மற்றும் அம்மன் முக்கிய வீதிவழியாக திருவீதிஉலா காட்சியும், தொடர்ந்து தீர்த்தவாரியும் நடைபெற்றது.

    விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் ரா.ஹரிகரன், செயல் அலுவலர் கோ.முரளிதரன் ஆகியோரின் மேற்பார்வையில் கோவில் பணியாளர்கள், மற்றும் கிராம மக்கள் செய்து இருந்தனர்.
    மார்கழியில் நோற்றதால் மார்கழி நோன்பு என்றும், கன்னிப்பெண்களால் நோற்கப்படுவதால் பாவை நோன்பு என்றும் கூறப்படுகின்றது. இந்த நாளில் திருப்பாவை, திருவெம்பாவை பாடி இறைவனை வணங்குகின்றனர்.
    மார்கழி மாதத்தில், முக்கியமாக பெண்கள் ஏற்கும் விரதம், மார்கழி நோன்பு ஆகும். ஆயர்ப்பாடியிலுள்ள கன்னியர்கள், நாட்டு முன்னேற்றத்திற்காகவும், பால் வளம் பெருகவும், நல்ல கணவர்களை அடையவும், நோன்பு நோற்றனர்.

    கன்னியர்கள் விடியற்காலை எழுந்து, மற்றப் பெண்களையும் எழுப்பி, ஆற்றங்கரை சென்று, அங்குள்ள மணலினால் பாவை போன்ற உருவம் செய்து, மலர்கள் சூட்டி, பார்வதிதேவியை பாடித்துதித்து வழிபட்டனர். பன்னிரண்டு ஆழ்வார்களில் ஒரே பெண்மணியானவரான ஆண்டாள் இயற்றிய பாவைப்பாட்டாகிய (இறைவன் மீது பாடப்பட்ட பாடல்கள்) திருப்பாவையும், மாணிக்கவாசகர் சிவபெருமான் மீது இயற்றிய திருவெம்பாவையும் பாவைப்பாட்டுக்களில் சிறந்தவை.

    மார்கழி மாதம் தேவர்களின் இரவுக் காலம் முடியும் காலம் ஆகும். இதை உஷத் காலம் என்றும் வைகறைப் பொழுது என்றும் கூறுவது உண்டு. இந்த மாதத்தில் யார் விடியற்காலத்தில் எழுந்து பக்தியுடன் பகவானைத் தொழுகிறார்களோ அவர்கள் சகல சவுபாக்கியங்களையும் பெறுவதுடன் ஆண்டவனின் அருளுக்கும் பாத்திரமாவார்கள்.

    மார்கழி மாதத்தில் அதிகாலை நான்கு மணிக்கு எழுந்து வீதிகளில் பஜனை செய்தல் வேண்டும். திருப்பாவை, திருவெம்பாவை ஆகியவை பாட வேண்டும். மார்கழி மாதம் முழுவதும் நெய் உண்ணோம், பால் உண்ணோம் என்பார் ஆண்டாள். இவ்வாறு விரதம் இருந்து காலையில் பஜனை செய்து ஆண்டவனை வழிபட அருள் கிடைக்கும்.

    மார்கழி மாத நோன்பால் உள்ளத்தையும் உடலையும் நாம் தூய்மையாக்கி கொள்ள முடியும். அது மட்டுமின்றி மார்கழி மாத நோன்பு நமது பிறவிப்பயனே ஆண்டவனை அடைவது தான் என்பதை உணர்த்துகிறது. தெய்வமே எங்களுக்கு நல்ல கணவனைக் கொடு என்பது தான் கன்னிப்பெண்களின் பிரார்த்தனையாக இருக்கும். மாத பாவை நோன்பு இருக்கும் பெண்களுக்கு அந்த பாக்கியம் கிடைக்கும். பொங்கல் நைவேத்தியம் வைப்பது நல்லது.
    பண்டைய காலத்தில் இருந்து, மனித உணர்வுகளை பிரதிபலிக்கும் வகையில் சுசீந்திரம் கோவிலில் நடைபெறும் நிகழ்ச்சிகளில் முக்கியமானது, ‘சப்தாவர்ண காட்சி’ ஆகும்.
    சுசீந்திரம் தாணுமாலய சாமி கோவில் அகில இந்திய அளவில் புகழ் பெற்றது. கன்னியாகுமரிக்கு வரும் வெளிநாட்டு பயணிகள் கூட இந்த கோவிலை காண வருகிறார்கள். சிவன்- வி‌‌ஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெரும் தெய்வங்களும் ஒன்று கூடி இந்த கோவிலில் கொன்றையடியில் அருள்பாலிப்பது இந்தியாவில் வேறு எங்கும் காண முடியாத அதிசயம் ஆகும்.

    மார்கழி திருவிழாவின் 3-ம் நாள் கோட்டார் விநாயகர், வேளிமலை முருகன் மற்றும் மருங்கூர் சுப்பிரமணியசுவாமி சிலைகள் (சிவனின் மைந்தர்கள்) பெற்றோரின் தலமான சுசீந்திரத்துக்கு எடுத்து வரப்படும். மைந்தர்கள் இருவரும் ஒருவாரம் தந்தையுடன் தங்கி இருந்து விழாவை சிறப்பிப்பார்கள். அவர்கள் இங்கு தங்கும் காலத்தில் தாணுமாலய சுவாமி நகர்வலம் வரும்போது அவர்களும் உடன் செல்வார்கள்.

    திருவிழாவின் 9-ம் நாள் விழாவில் அவர்கள் தங்கள் தந்தையை விட்டு பிரிந்து அவரவர் இருப்பிடங்களுக்கு செல்லும் காட்சியே சப்தாவர்ணம் என்று அழைக்கப்படுகிறது.

    சப்தாவர்ணம் என்பது 7-வது பிரகாரத்தில் மட்டும் அதாவது சுசீந்திரம் நகரத்தின் பெரிய வீதியில் மட்டும் சுவாமிகள் எழுந்தருளுவது ஆகும். பெரிய வீதி என்பது 4 ரதவீதிகளையும் குறிக்கும். சப்தம் என்றால் 7 என்று பொருள். இதன் காரணமாக சப்தாவர்ணம் என்ற பெயர் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருக்க கூடும் என்று கூறப்படுகிறது.

    விடுதியில் தங்கிப்படிக்கும் மாணவர்கள் விடுமுறைக்கு வீட்டுக்கு வந்து பெற்றோருடன் தங்கியிருந்து விட்டு மீண்டும் விடுதிக்கு திரும்பும் போது அவர்களின் மனநிலை எப்படி இருக்குமோ அதே மனநிலையில் தெய்வங்கள் இருக்கும் என்று பக்தர்கள் உணருகிறார்கள்.

    நள்ளிரவில் ஒரு வாகனத்தில் விநாயகரும், 2 வாகனங்களில் முருகனும் எழுந்தருளுவார்கள். இன்னொரு வாகனத்தில் சிவன் எழுந்தருளுவார். பிரம்மனின் அன்ன வாகனத்தில் அம்பாள் எழுந்தருளுவார். இவர்கள் அனைவரும் ஒருவரை விட்டு ஒருவர் பிரிந்து செல்லும் காட்சி காண வந்த பக்தர்களை கண் கலங்க வைக்கும்.

    சப்தாவர்ண நிகழ்ச்சி முடிந்த உடன் பெரும்பாலான பக்தர்கள் இரவு சுசீந்திரத்தில் தங்குவார்கள். மறுநாள் அதிகாலை 4 மணிக்கு தெப்பக் குளத்தில் நீராடி, கோவிலின் சித்திர மண்டபத்தில் நடை பெறும் ஆருத்ரா தரிசனம் நிகழ்ச்சியை காண செல்வார்கள். குறிப்பாக புதுமண தம்பதிகள் ஏராளமாக கூடுவார்கள்.

    காரணம்

    புதுமண தம்பதிகள் இந்த தரிசனத்தை காண்பதற்கு ஒரு காரணம் சொல்வது உண்டு.

    முன்னொரு காலத்தில் திரேதாயுகா என்ற சிறுமி வாழ்ந்து வந்தாள். அவள் எந்த நேரமும் அன்னை பார்வதியை நினைத்து கொண்டே இருப்பாள். அவள் பூப்பெய்திய பிறகும் கூட பார்வதியை மறக்காமல் தினமும் பூஜை செய்து வழிபட்டாள். இதனால் பார்வதிக்கு பக்தை திரேதாயுகா மீது கருணை ஏற்பட்டது.

    இந்த நிலையில் திரேதாயுகாவுக்கு திருமணம் நடந்தது. அந்த காலத்தில் திருமணம் நடந்த 4-வது நாளில் தான் சாந்திமுகூர்த்தம் வைக்கப்படும். ஆனால் திருமணம் முடிந்த 4 நாட்களுக்குள் அவளுடைய கணவர் இறந்து விட்டதால் திரேதாயுகா கதறி அழுதார். இத்தனை நாள் பார்வதியை வணங்கியும் இப்படி சோதித்து விட்டாளே என்று அழுது புலம்பினாள். இவளின் கூக்குரல் பார்வதியை எட்டியது. பார்வதி ஆத்திரம் அடைந்தார். தன் பக்தையை இப்படி சோதிக்கலாமா? என்று சிவபெருமானிடம் கேட்டு, திரேதாயுகாவின் கணவனை உயிர்ப்பிக்கும்படி விண்ணப்பித்தார்.

    அப்படி செய்யும் வரை உங்களை (சிவ பெருமானை) தொட மாட்டேன் என்று சபதம் செய்தார். பார்வதியின் இந்த சபதத்தை கண்டு சிவன் கலங்கி போனார். திரேதாயுகாவின் கணவரின் உயிரை பறித்துசென்ற எமனை கூரிய பார்வை பார்த்தார். மன்மதனை சிவன் எரித்த காட்சி எமனின் கண் முன் அப்போது நிழலாடியது. பயந்து போன எமன் திரேதாயுகாவின் கணவனுக்கு மீண்டும் உயிர் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அந்த புதுமணத் தம்பதிகளுக்கு சிவபெருமான் தம்பதி சகிதமாக காட்சி அளித்தனர்.

    இந்த அரிய காட்சி மார்கழி மாதம் திருவாதிரை தினத்தன்று நடந்தது. எனவே தான் புதுமண தம்பதிகள் காலமெல்லாம் ஒற்றுமையாய் ஒருவருக்கொருவர் அன்பு கொண்டு வாழ இந்த நிகழ்ச்சியை காண வருகிறார்கள். இதனால் தங்கள் தாலி பாக்கியம் நீண்ட நாள் நிலைக்கும் என்றும் பெண்கள் நம்புகிறார்கள்.

    ஆருத்ரா என்றால் திருவாதிரை என்று பொருள் ஆகும். திருவாதிரை தரிசனமே ஆருத்ரா தரிசனம் என்று கூறப்படுகிறது.
    ×