search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    நம்பெருமாள்
    X
    நம்பெருமாள்

    திருக்கைத்தல சேவையில் நம்பெருமாள்

    வைகுண்ட ஏகாதசி திருவிழாவில் ராப்பத்து உத்சவத்தின் ஏழாம் திருநாள் திருகைத்தல சேவையாக நடைபெறுகிறது. இந்த உத்சவத்துக்கும் தனிச் சிறப்பு உள்ளது.
    ராப்பத்து உத்சவத்தின் முதல் நாளன்று பரமபதவாசல் திறப்பு நடைபெறுகிறது. இதில் எட்டாம் நாளைத் தவிர, மற்ற நாட்களில் கருவறையிலிருந்து புறப்பாடாகி பரமபத வாசல் வழியாக செல்லும் போது நம்பெருமாள் போர்வை போர்த்திக்கொள்வதும், பரம பதவாசலில் திரை போட்டு மாலை சாத்திக் கொள்வதும் நடைபெறும். ஆனால் திருவிழாவின் ஏழாம் நாளான திருக்கைத்தல சேவையன்று இந்த நிகழ்வு நடைபெறாது.

    இந்நாளில் நம்பெருமாள் அதிகளவிலான திருவாபரணங்களை சாத்திக்கொள்ளாமல் 5, 6 பீதாம்பரங்களை அடுக்காக சாத்திக் கொண்டு புறப்பட்டு மண்டபம் எழுந்தருளுவார். ஸ்ரீரங்க ராஜஸ்தவத்துக்குப் பதிலாக ஸ்ரீஸ்தவமும், ஸ்ரீரங்கநாச்சியர் விஷயமாய் பட்டர் அருளிச் செய்த ஸ்ரீ குணரத்ன கோசமும் சேவிக்கப்படும்.

    பெருமாள் அர்ச்சகர்களின் திருக்கரங்களில் எழுந்தருளியிருந்து திருமாமணி மண்டபத்தின் மேல் குறட்டுக்கு வந்து, ஆழ்வாருக்கு சேவை சாதிப்பார்.
    திரை சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, தோளுக்கிணியானில் கீழே இறங்கியதும், திருமா மணி மண்டபத்தின் சிம்மாசனத்தில் அர்ச்சகர்கள் நம் பொருமாளையும் செங்கோலினையும் எழுந்தருள செய்வார்கள்.

    கொட்டகையில் உண்ணிலாவிய திருவாய்மொழி ஏழாம் கத்தி பாசுரங்களில் முதல் பாசுரத்தைத் தொடக்கம் செய்த அரையர்கள், திருமாமணி மண்டபத்தில் மற்ற பாசுரங்களைச் சேவித்து சாற்றுமுறை செய்வார்கள்.

    திருக்கைத்தல சேவையின் போது கங்குலும் பகலும் என்ற பாசுரத்தை சேவிப்பர். பெருமாள் ஆழ்வாருக்குத் திரை வாங்கி, திருக்கைத்தலத்தில் சேவை சாதிக்கும் போது அந்தத் திருவாய்மொழியின் எஞ்சிய பாசுரங்களைப் பூர்த்திச் செய்த பிறகு திரை போட்டு பெருமாள் மண்டபத்தில் எழுந்தருளுவார்.

    தொடர்ந்து அலங்காரம் அமுது செய்த பிறகு இரண்ய வதத்துக்கு அருளப்பாடாகும். இதற்காக அரையர் தீர்த்தம், சடகோபம் சாதிப்பார். முதல் நாள் உயர்வற உயர்நலம் வியாக்யானம் ஆன உடனும், 7-ம் நாள் கங்குலும் பகலும் வியாக்யானமும் ஆன உடனும், நம்மாழ்வார் சன்னதிக்காரர் அரையர்களுக்கு சாற்று படி, வேளையும் சம்பாவானை சமர்ப்பிக்க வேண்டும் என்பது ஐதீகம். அதன்படி இந்த திருவிழாவின்போது சமர்ப்பிக்கப்படும்.
    Next Story
    ×