என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி பக்தகண்ணப்பர் கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா 24-ந்தேதி தொடங்கி அடுத்த மாதம் (மார்ச்) 8-ந்தேதி வரை 13 நாட்கள் நடக்கிறது.

    24-ந்தேதி மாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோவில் அருேக மலையில் உள்ள பக்தகண்ணப்பர் கோவில் வளாகத்தில் பக்தகண்ணப்பர் கொடியேற்றம் நடக்கிறது. அன்று உற்சவர் பக்தகண்ணப்பர் கோவிலின் மாட வீதிகளில் ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

    25-ந்தேதி மதியம் 1 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவிலில் உள்ள தங்கக் கொடிமரத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம் நடக்கிறது.

    அன்று காலை 9 மணியளவில் வெள்ளி அம்பாரிகளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் வெள்ளி அம்பாரிகளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

    26-ந்தேதி காலை 9 மணியளவில் சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

    27-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் ராவணாசூர வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

    28-ந்தேதி காலை 9 மணியளவில் ஹம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் ேசஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

    அடுத்த மாதம் (மார்ச்) 1-ந்தேதி சிகர நிகழ்ச்சியான மகாசிவராத்திரி விழா, காலை 10 மணியளவில் இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 10 மணியளவில் நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

    2-ந்தேதி அதிகாலை 2 மணியளவில் லிங்கோத்பவ தரிசனம், காலை 10 மணியளவில் தேரோட்டம், இரவு 9 மணியளவில் கோவில் அருகில் உள்ள நாரத புஷ்கரணியில் தெப்போற்சவம்.

    3-ந்தேதி காலை 9 மணியளவில் அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் கோவிலில் இருந்து மணமக்கள் அலங்காரத்தில் புறப்பட்டு நகரி தெருவில் உள்ள கோவிலின் திருக்கல்யாண மண்டபம் வரை ஊர்வலமாக வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர்.

    4-ந்தேதி அதிகாலை 3 மணியளவில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர்-ஞானப்பிரசுனாம்பிகை தாயார் திருக் கல்யாண உற்சவம், காலை 9 மணியளவில் ருத்ராக்‌ஷ அம்பாரிகளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் நகரி வீதியில் இருந்து கோவில் வரை உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். இரவு 9 மணியளவில் சபாபதி திருக்கல்யாண உற்சவம்.

    5-ந்தேதி காலை 9 மணியளவில் கைலாசகிரி மலைக்கு ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் அம்பாரிகளில் கிரிவலம் சென்று திரும்புதல், இரவு 9 மணியளவில் குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

    6-ந்தேதி காலை 10 மணியளவில் கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா, இரவு 9 மணியளவில் பிரம்மோற்சவ விழா கொடியிறக்கம், இரவு 9 மணியளவில் சிம்மாசனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மாட வீதிகளில் உலா.

    8-ந்தேதி இரவு 9 மணியளவில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மூலவர் சன்னதி எதிரே உள்ள சைன மந்திரத்தில் ஏகாந்த சேவை (வழக்கமாக கோவிலில் தினமும் இரவு 9 மணியளவில் ஏகாந்த சேவை நடக்கும். ஆனால், மகாசிவராத்திரி பிரம்மோற்சவத்தால் 12 நாட்களுக்கு பிறகு கோவிலில் ஏகாந்த சேவை நடப்பது குறிப்பிடத்தக்கது) நடக்கிறது. இதோடு வருடாந்திர மகா சிவராத்திரி பிரம்மோற்சவ விழா நிறைவடைகிறது.

    9-ந்தேதி கோவில் வளாகத்தில் உள்ள அலங்கார மண்டபத்தில் மூலவர்ளுக்கு சாந்தி அபிஷேகம் நடக்கிறது.

    மேற்கண்ட தகவலை கோவில் நிர்வாக அதிகாரி பெத்தி.ராஜு தெரிவித்துள்ளார்.
    அனுமன் சீதாதேவியை கண்டுபிடிக்க அசோகவனத்திற்கு செல்வதற்கு முன் சொன்ன ஸ்லோகத்தைக் கூறி, எந்தச் செயலைத் தொடங்கினாலும் அதில் வெற்றி உண்டாகும்.
    “”நமோஸ்து ராமாய ஸலக்ஷ்மணாய
    தேவ்யை ச தஸ்யை ஜன காத்மஜாயை!
    நமோஸ்து ருத்ரேந்திர யமாலி னேப்யோ
    நமோஸ்து சந்த்ரார்க்க மருத்கணேப்யப்!!

    இன்றளவும் ஆலயக் கருவறையில் முருகப்பெருமானுக்குப் பதிலாக வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலாகும்.
    ‘குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருக்கும் இடம்’ என்பார்கள். முற்காலத்தில் முருகன் ஆலயம் என்பது வேல் கோட்டமாகவே அமைந்திருந்தது. அதாவது வேல் அமைத்து வழிபடும் முறையே இருந்தது. காலப்போக்கில்தான் முருகப்பெருமானின் சிலைகளை வடித்து வைத்து வழிபடும் முறை வழக்கத்திற்கு வந்தது. ஆறுபடை வீடுகளில் ஒன்றான பழமுதிர்சோலையில் மூலவராக இருப்பது வேல்தான். சமீப காலத்தில்தான் வள்ளி - தெய்வானை சமேத முருகப்பெருமான் பிரதிஷ்டை ஆகியுள்ளார்.

    திருப்பரங்குன்றத்தில் மூலவரான முருகப்பெருமான் குடவரையில் இருப்பதால், அவருக்குரிய அபிஷேகங்கள் அனைத்தும் அங்கிருக்கும் வேலுக்கே நடைபெறுகின்றன. அதேபோல தமிழகத்தின் தென்கோடியான கன்னியாகுமரியில் ‘முருகன் குன்றம்’ என்ற திருத்தலத்திலும், வடகோடியான சென்னை குரோம்பேட்டையில் ‘குமரன் குன்றம்’ என்ற திருத்தலத்திலும் மற்றும் மதுரை அருகிலுள்ள கோவில்பட்டி எனும் தலத்தில் உள்ள ‘சொர்ணமலை' எனும் திருத்தலத்திலும் மலைக்குன்றின் மீது வேல் வைத்து வழிபடும் வழக்கமே இருந்துள்ளது. காலப்போக்கில் இங்கெல்லாம் முருகனைப் பிரதிஷ்டை செய்து வழிபட்டுள்ளனர்.

    அதே நேரத்தில் இன்றளவும் ஆலயக் கருவறையில் முருகப்பெருமானுக்குப் பதிலாக வேலே மூலவராக வழிபடப்படும் திருக்கோவில்தான் கோவில்பட்டி சொர்ணமலை கதிரேசன் திருக்கோவிலாகும். இங்கு கருவறையில் மூலவராக முருகப்பெருமானின் கதிர்வேல் எனும் திருக்கைவேல் அமைந்துள்ளது.

    கோவில்பட்டியில் இருந்து இலங்கைக்கு வணிகம் செய்யச் சென்ற முருகன் அடியவர் ஒருவர், இலங்கையில் உள்ள கதிர்காமம் முருகப்பெருமான் மீது மிகுந்த பக்தி உள்ளவர். கதிர்காமத்தில் வேல் வழிபாடே சிறப்பாக உள்ளது. ஆகவே கதிர்காமம் முருகனை நினைத்து, தானும் ஒரு வேல் வாங்கி வைத்து வழிபாடு செய்து வந்தார். ஒரு கட்டத்தில் இலங்கையில் இருந்து மீண்டும் தன்னுடைய சொந்த ஊருக்குத் திரும்ப நினைத்த அடியவருக்கு, கதிர்காமம் முருகப்பெருமானை பிரிவதை நினைத்து கவலையில் ஆழ்ந்தார்.

    அவரது மனக்கவலையை போக்க எண்ணிய முருகப்பெருமான், அவர் வைத்திருந்த வேலுக்குள் தன்னை செலுத்தினார். பின்னர் அசரீரியாக, “அன்பனே! உன் பொருட்டு யாம் இந்த வேல் மூலம் உன் ஊருக்கு வருகிறேன். கதிர்காமத்தில் இருந்து பிடி மண் கொண்டு சென்று, அங்குள்ள மலைக்குன்றில் மூலவராக எமது இந்த திருக்கை வேல் வைத்து வழிபடு. உன் கவலை மட்டுமின்றி, என்னை வழிபடும் பிற அடியவர்களின் கவலையையும் நான் அகற்றுவேன்” என்று கூறி அருளினார்.

    கோவில்பட்டிக்கு அந்த கதிர்காம கந்தனின் திருக்கை வேலுடன் திரும்பிய அந்த முருக பக்தர், பின்னாளில் இலங்கை கதிர்காமம் முருகப்பெருமான் கூறியபடி மலைக்குன்றில் ஆலயம் எழுப்பினார். அந்த கதிர்காம முருகன் திருக்கை வேல் தான் இங்கு மூலவராக உள்ளது சிறப்பு.

    இத்தலத்தில் மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் சன்னிதிகளும் உள்ளன. கந்தசஷ்டி அன்று இந்த ஆலயத்திற்கு வந்து, ‘சத்ரு சம்கார வேல்’ என்ற பதிகத்தை ஆறு முறை பாராயணம் செய்து, மூலவரான கதிர்வேலை வழிபாடு செய்தால், பகை, பில்லி, சூனியம், வறுமை, தரித்திரம், உடல் மற்றும் மன நோய்கள் அகலும் என்கிறார்கள்.

    சஷ்டி, கிருத்திகை, விசாகம், பூசம் நட்சத்திர நாட்களில் இத்தலம் வந்து கதிர்வேலுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம் செய்து, சிவப்பு மலர்கள் கொண்டு இத்தல மூலவர் கதிர்வேல், மாணிக்க விநாயகர், பழனி ஆண்டவர், பைரவர் ஆகியோருக்கு அர்ச்சனை செய்து நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து 8 மாதம் வழிபாடு செய்து வந்தால், நம் எண்ணங்கள் யாவும் பூர்த்தியாகும். தொழில் விருத்தி உண்டாகும். குடும்ப பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்கும். தீவினை, தீயவை, கர்மவினைகள் விலகும். இத்தலத்தில் வழிபட்டால் இலங்கை கதிர்காமம் முருகன் ஆலயத்தில் வழிபடுவதற்கு நிகரான பலன் கிடைக்கும்.

    கிருத்திகை நட்சத்திர நாள் அன்று இந்த வேலுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது. இந்த அன்னப் பிரசாதத்தை மகப்பேறுக்காக ஏங்கும் பெண்கள் உட்கொண்டால், அடுத்த வருடமே குழந்தைப் பேறு கிடைக்கும் என்பதற்கு பலர் சாட்சியாக நிற்கின்றனர். மறு வருடமே குழந்தைப் பேறு கிடைக்கப் பெற்றவர்கள், தங்கள் குழந்தையோடு இத்தலம் வந்து முருகனுக்கு நன்றிக் கடன் செலுத்திச் செல்கிறார்கள்.

    இங்குள்ள மலையே ‘கதிரேசன் மலை’ என்றுதான் அழைக்கப்படுகிறது. தொழில் முனைவோர்கள், செவ்வாய்க்கிழமைகளில் இங்கு வந்து வேலுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி, செவ்வரளி மாலை அணிவித்து, நெய்தீபம் ஏற்றி வழிபட்டால், வெகு விரைவில் தொழில் அபிவிருத்தி காணலாம் என்பது நம்பிக்கை. இதனால் இந்த மலையை ‘சொர்ண மலை’ என்றும் அழைக்கிறார்கள். மாதம் தோறும் இங்கு சொர்ணமலையை சுற்றி கிரிவலம் நடக்கிறது. கிரிவலம் வரும் வழியில் ‘ஒளி குகை’ என்ற குகையின் வாசல் உள்ளது. அங்கு சித்தர்கள் பலர் தவம் இருந்து வருவதாக கூறுகிறார்கள். அவர்களின் தவத்தை கலைக்கக்கூடாது என்பதற்காக, யாரும் அங்கு செல்வதில்லை.

    திருக்கார்த்திகை தீப திருநாள் இங்கு சிறப்பு. அன்றைய தினம் சொர்ணமலை குன்றில் ‘திருக்கார்த்திகை தீபம்' ஏற்றுகிறார்கள்.

    அமைவிடம்

    தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் இருந்து 3 கிலோமீட்டர் தூரத்தில் சொர்ணமலை கதிர்வேல் முருகன் திருக்கோவில் அமைந்துள்ளது. கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் சமேத பூவனநாத சுவாமி ஆலயத்துடன் இணைந்த கோவில் இதுவாகும்.

    சிவ.அ.விஜய் பெரியசுவாமி

    ராமேசுவரம் கோவிலில் மாசி மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக 1-ந் தேதி சிவராத்திரி அன்று தேரோட்டம் நடைபெறுகிறது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் ஆண்டுதோறும் ஆடி திருக்கல்யாண திருவிழா மற்றும் மாசி மகா சிவராத்திரி திருவிழா சிறப்பாக நடைபெறும்.

    இந்த ஆண்டின் சிவராத்திரி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முதல் நாளான நேற்று காலை 10 மணி அளவில் சாமி சன்னதி எதிரே நந்தி மண்டபம் பகுதியில் உள்ள கொடி மரத்தில் கொடி ஏற்றப்பட்டது.

    தொடர்ந்து புனித நீரால் கொடிமரத்திற்கு அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு தீபாராதனை, பூஜைகள் நடைபெற்றன. அப்போது கொடிமரம் எதிரே சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய சுவாமி-அம்பாள் உள்ளிட்ட பஞ்சமூர்த்திகளுக்கும் மகா தீபாராதனை நடைபெற்றது. கொடியேற்ற நிகழ்வு மற்றும் பூஜைகளை ஸ்ரீராம் குருக்கள் செய்தார்.

    விழாவின் 3-வது நாளான நாளை (புதன்கிழமை) காலை 6 மணிக்குமேல் சாமி- அம்பாள் பஞ்ச மூர்த்திகளுடன் கெந்தமாதன பர்வதம் மண்டகப்படிக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுவதால் காலை 6 மணி முதல் இரவு வரையிலும் கோவில் தீர்த்தங்களில் நீராடவும், பக்தர்கள் தரிசனம் செய்யவும் அனுமதிக்கப்பட மாட்டார்கள் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முக்கிய நிகழ்ச்சியாக 9-ம் நாள் விழாவான வருகிற 1-ந் தேதி சிவராத்திரி அன்று காலை 8 மணியில் இருந்து 9 மணிக்குள் சுவாமி-அம்பாள் தேரோட்டம் நடைபெறுகிறது.

    10-வது நாள் நிகழ்ச்சியாக மாசி அமாவாசையையொட்டி வருகிற 2-ந் தேதி பகல் 1.30 மணிக்கு மேல் சுவாமி-அம்பாள் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.

    நேற்றைய கொடியேற்ற நிகழ்ச்சியில் ராஜா குமரன் சேதுபதி, இணை ஆணையர் பழனிகுமார், மேலாளர் சீனிவாசன், பேஷ்கார்கள் கமலநாதன் ராமநாதன், முனியசாமி, அண்ணாதுரை மற்றும் காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினர் பாரிராஜன், யாத்திரை பணியாளர்கள் சங்க தலைவர் பாஸ்கரன், விசைப்படகு மீனவர் சங்கத் தலைவர் தேவதாஸ், பா.ஜ.க. மாவட்டத் தலைவர் முரளிதரன், இந்து தேசிய கட்சியின் மாநில செயலாளர் ஹரிதாஸ், முன்னாள் கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், இந்து மக்கள் கட்சி சரவணன் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.
    * ஆற்காடு என்னும் ஊருக்கு அருகில் காரை என்ற இடத்தில் ஒரு சமயம் கவுதம மகிரிஷி தன் மனசாந்திக்காக ஒரு லிங்கத்தைப் பிரதிஷ்டை செய்தார். இந்த லிங்கத்திற்கு அபிஷேகம் செய்வதற்காகக் கங்கையை அங்கு வரும்படிச் செய்தார். இந்த நதியே நாளடைவில் கவுதமி என அழைக்கப்பட்டது. மகரிஷி கவுதமர் பூஜித்த சிவலிங்கத்திற்கு கவுதமேஸ்வரர் என்று வழங்கப்பட்டது. இங்கு எழுந்தருளி உள்ள அம்பாள் கிருபாம்பிகை என்ற திருநாமத்தோடு அழைக்கப்படுகிறாள்.
    இங்குள்ள கோவிலில் ஒரே சமயத்தில் இறைவனையும் இறைவியையும் தரிசிக்கும் விதமாக உள்ளது. ஒரு சமயம் கவுதம மகரிஷி அமர்ந்த நிலையில் தவத்தில் ஆழ்ந்திருந்தார். இவருடைய தவத்தைக் கண்டு மகிழ்ந்த சிவன் ஒரு பவுர்ணமி நாளில் கவுதம முனிவருக்குக் காட்சி கொடுத்தார். இதனால் ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் மாலையில் மகேஸ்வரனுக்கு ஏழு வகையான அபிஷேகமும் செய்கிறார்கள். இங்குப் பவுர்ணமி நாளில் கவுதமேஸ்வரரைத் தரிசனம் செய்தால் உடல் பிணியும், மனப்பிணியும் நீங்கும்.

    * சென்னைக்கும் செங்கல்பட்டிற்கும் இடையே உள்ள சிங்கபெருமாள் கோவில் தலத்தில் எழுந்தருளி வலது காலை மடித்து இடது காலைத் தொங்கவிட்டபடி சங்கு சக்கரத்துடன் வலது கரம் அபயக்கரத்துடன் இடது கையைத் தொடை மீது வைத்தப்படி காட்சி தரும் பாடலாத்ரி நரசிம்மர். ஜாபாலி மகரிஷி தனக்கு மகாவிஷ்ணு நரசிம்மர் வடிவில் காட்சி தர வேண்டும் என்று தவமிருந்தார். இவரது தவத்தில் மகிழ்ந்த நரசிம்மர் பிரதோஷ வேளையில் ஜாபாலி மகரிஷிக்குக் காட்சி கொடுத்ததால் பிரதோஷ நேரத்தில் சிவாலயங்களைப் போன்று நரசிம்மருக்குத் திருமஞ்சனம் நடக்கிறது. பாடலம் என்ற சொல்லுக்கு சிவப்பு என்றும் அத்ரி என்பதற்கு மலை என்றும் பொருளாகும். மூலவர் எழுந்தருளியுள்ள சிறிய குன்றைப் பவுர்ணமி நாளில் கிரிவலம் வந்தால் கடன் வாங்க வேண்டிய நிலையே ஏற்படாது. செவ்வாய் தோஷம் விலகும், திருமணத் தடை விலகி திருமணம் கைகூடும். சுவாதி மற்றும் திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்தவர்களும் ஜாதகத்தில் ராகு திசையல் உள்ளவர்களும் சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டவர்களும் பவுர்ணமி நாளில் பாடலாத்ரி மலையைக் கிரிவலம் வந்தால் நன்மை ஏற்படும் என்று பிரமாண்ட புராணம் கூறுகிறது.

    * குடந்தையிலிருந்து திருவையாறு சாலையில் காவிரியாற்றிலிருந்து தண்ணீர் மதகின் வழியாகப் பாய்ந்தோடும் உள்ளிக்கடை என்ற ஊருக்கருகில் உள்ள வட குரங்காடு துறை. இவ்வூரின் திருக்கோவிலில் எழுந்தருளியுள்ள இறைவன் ஸ்ரீதயாநிதீஸ்வரர். அம்மன் ஸ்ரீ ஜடாமகுட நாயகி, ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் இங்குள்ள அம்மனுக்கு ஒன்பது மஞ்சளை மலையாகி தொடுத்துச் சார்த்தினால் எல்லாப் பாவங்களும், பிரச்சினைகளும், தோஷங்களும் விலகும். பின் இந்த மலையிலிருக்கும் மஞ்சளை எடுத்துத் தினமும் தேயத்துக் குளித்து வந்தால் குழந்தை இல்லாதவர் களுக்கும் குழந்தை பிறக்கும்.

    * தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் உள்ள குன்றின் மீது ஞானமருளும் சொர்ணமலை கதிர்வேல் முருகன் என்ற திருப்பெயரால் அழைக்கப் படுகிறது. இவ்வாலயத்தின் கருவறையில் செம்பினால் ஆன வேல் மூலவராகக் காட்சியளிக்கிறது. இத்தலம் கண்டி கதிர்காமம் கோவிலிலிருந்து கொண்டு வரப்பட்ட பிடி மண்ணை வைத்து நிர்மாணிக்கப்பட்டது. பவுர்ணமி அன்று இம்மலையை ஏராளமான பக்தர்கள் கிரிவலம் வருகிறார்கள். சொர்ணமலை கோவிலின் அருகே உள்ள குருமலையில் பல அரிய வகை மூலிகைச் செடிகள் உள்ளன. கிரிவலம் வரும்போது இம்மலையிலிருந்து மூலிகைக் காற்று பக்தர்களின் உடலையும் உள்ளத்தையும் ஆரோக்கியமாக்குகிறது.
    கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 2-ந்தேதி நடக்கிறது. இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு கொடியேற்றம், அக்னிச் சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது.
    கோவையின் காவல் தெய்வமாக திகழும் கோனியம்மன் கோவில் தேர்த்திருவிழா மார்ச் 2-ந் தேதி நடக்கிறது. இதையொட்டி கடந்த 14-ந் தேதி முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியுடன் விழா தொடங்கியது. அதன்பிறகு பூச்சாட்டுதல், நேற்று கிராம சாந்தி நடந்தது.

    இன்று (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு கொடியேற்றம், அக்னிச் சாட்டு நிகழ்ச்சி நடக்கிறது. இதன்படி வெண்மை நிற துணியில் சிம்ம வாகனம், சக்தியின் சின்னமான சூலாயுதம், மஞ்சள் சிகப்பு வண்ணங்களில் சிவாச்சாரியர்களால் வடிவமைக்கப்பட்டு, கோனியம்மன் பாதங்களில் வைத்து சிறப்பு பூஜை செய்யப்படும். பின்னர் கொடி மரத்தில் சிவாச்சாரியர்களால் கொடியேற்றப்படுகிறது.

    இதையடுத்து கோவில் முகப்பில் அக்னிக்கம்பம் நடப்படுகிறது. பின்னர் கோனியம்மன் சப்பரத்தில் எழுந்தருளி முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் கோவிலை வந்தடைகிறார்.
    இந்த ஆண்டு ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேராட்டம் நடத்தப்படுகிறது. ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் தமிழகத்தின் சைவ கோவில்களில் மிகவும் பழமையான தேர் என்ற பெயரை பெற்றது.

    திருவாரூர் தியாகராஜர் கோவில் ஆழித்தேர் ஆசியாவிலேயே மிகப்பெரிய தேர் என்ற பெருமை பெற்றது. ஆழி என்றால் கடல் என்பது பொருள். கடல் போன்ற பெரிய தேர் என்பதை குறிக்கும் வகையில் இந்த தேருக்கு ஆழித்தேர் என்ற பெயர் வந்தது. இதனால் திருவாரூர் தேரழகு என்ற பெயரும் பெற்றது. அலங்கரிக்கப்படாத தேரின் உயரம் 30 அடி, அகலம் 30 அடியாகும். இதன் எடை 220 டன்.

    திருச்சி பெல் நிறுவனம் சார்பில் ஆழித்தேருக்கு இரும்பு அச்சுகள், 4 இரும்பு சக்கரங்களுடன் எளிதில் நிறுத்தும் வகையில் ஹைட்ராலிக் பிரேக் வசதிகள் செய்யப்பட்டுள்ளது. மரத்தேரின் எடை 220 டன் என்றாலும் இதன் மீது பனஞ்சப்பைகள், மூங்கில், சவுக்கு , கயிறு, துணிகள், தேரின் முன்புறம் கட்டப்படும் 4 குதிரைகள், யாழி, பிரம்மா உள்ளிட்ட பொம்மைகள் கட்டப்பட்டு மொத்த எடை 350 டன்னாகும்.

    தேரை இழுக்க 425 அடி நீளம் கொண்ட 4 வடங்கள் பொருத்தப்பட்டுள்ளன. ஆழித்தேர் திருவிழாவை மாசி மாதம் அஸ்த நட்சத்திரத்தில் கொடியேற்றி, பங்குனி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் தேரோட்டம் நடத்த வேண்டும் என்பது ஆகம விதி.

    அதன்படி இந்த ஆண்டு ஆயில்ய நட்சத்திரத்தில் ஆழித்தேராட்டம் நடத்தப்படுகிறது. ஆழித்தேரோட்டம் பல நூற்றாண்டுகளாக நடைபெற்று வருவது குறித்து சமய இலக்கியங்களில் இடம் பெற்றுள்ளது.

    ஆழித்தேர் வடம் பிடித்தால் கைலாயத்திலும், வைகுண்டத்திலும் இடம் பிடிக்கலாம் என்பது ஐதீகம்.
    காரைக்கால் கைலாசநாதர் கோவில் திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது. பிரம்மோற்சவ விழாவில் மார்ச் 9-ந் தேதி கொடியேற்றமும், 17-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது.
    காரைக்கால் அம்மையார் கோவில் எதிரே சுந்தரம்பாள் சமேத கைலாசநாதர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான திருவிழா அடுத்த மாதம் (மார்ச்) 8-ந் தேதி விக்னேஸ்வர பூஜையுடன் தொடங்குகிறது. இந்த விழாவுக்கான பந்தக்கால் முகூர்த்தம் கோவில் வளாகத்தில் நேற்று நடந்தது. முன்னதாக கோவில் சிவாச்சாரியர்கள் பூர்வாங்க பூஜைகள் செய்தனர். பின்னர் பந்தக்காலுக்கு பால், தயிர், சந்தனம் உள்ளிட்டவற்றை கொண்டு அபிஷேகம் செய்யப்பட்டது.

    தொடர்ந்து பந்தக்கால் கோவில் நுழைவு வாசலில் நடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் கோவில் நிர்வாக அதிகாரி அருணகிரிநாதன், அறங்காவலர் வாரியத்தலைவர் கேசவன், துணைத்தலைவர் ஆறுமுகம், செயலாளர் பக்கிரிசாமி, பொருளாளர் ரஞ்சன் கார்த்திகேயன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவில் மார்ச் 9-ந் தேதி கொடியேற்றமும், 17-ந் தேதி தேரோட்டமும் நடக்கிறது. 20-ந் தேதி தொப்போற்சவமும், 21-ந் தேதி காரைக்கால் அம்மையார் ஐக்கிய விழாவும் நடைபெற உள்ளது. விழா ஏற்பாடுகளை, கோவில் அறங்காவலர் வாரியத்தினர் செய்து வருகிறார்கள்.
    ஒருவர், ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் அவரிடம் நல்லதைத்தான் பேசவேண்டும். அவருக்கு மன தைரியத்தையும், நம்பிக்கையையும் விதைக்க வேண்டும்.
    நோயாளிகளை நலம் விசாரிப்பது குறித்து இஸ்லாம் அதிகம் ஆர்வமூட்டுகிறது, அதிகம் தூண்டுகிறது. நோயாளிகளை கருணையுடன் அணுகவேண்டும். அவர்களின் நோய் நீங்கிட இறைவனிடம் இரு கரம் ஏந்தி பிரார்த்திக்க வேண்டும்.

    நோயாளிகளை தீண்டத்தகாதவர்களாக நடத்தக் கூடாது. மனித நேயத்துடன் பார்க்க வேண்டும். நோயாளிகளை அணுகுவது மனம் சார்ந்து இருக்க வேண்டும். பணம், பதவி, இனம், மொழி, நிறம், சாதி, மதம் சார்ந்து இருந்துவிடக் கூடாது.

    இது குறித்த நபி மொழிகள் வருமாறு:

    ‘நபி (ஸல்) அவர்கள் ஏழு செயல்களை செய்யும்படி எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அவை: 1) நோயாளிகளை நலம் விசாரிப்பது, 2) இறந்தவரின் இறுதியாத்திரையில் பின் தொடர்ந்து செல்வது, 3) தும்மியவருக்கு ‘உமக்கு இறைவன் கருணைபுரிவானாக’ என்று பிரார்த்திப்பது, 4) ஸலாம் எனும் வாழ்த்துக்கு பதில் கூறுவது, 5) அக்கிரமத்திற்கு உள்ளானவருக்கு உதவுவது, 6) விருந்தின் அழைப்பை ஏற்றுக் கொள்வது, 7) சத்தியம் செய்தவரின் சத்தியத்தை நிறைவேற்ற உதவுவது’. (அறிவிப்பாளர்: பராஉ பின் ஆஸிப் (ரலி), நூல்: புகாரி)

    நபி (ஸல்) அவர்கள் யாரேனும் ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றாலோ (அல்லது) யாரேனும் ஒரு நோயாளி, நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டாலோ, நபியவர்கள் அவருக்காக பிரார்த்திப்பார்கள். நபியின் பிரார்த்தனையின் பயனால் நோயாளியும் நோயிலிருந்து நிவாரணம் அடைந்து விடுவார். நோயாளியின் விஷயத்தில் நபிகளாரின் பார்வையும், அவர்களின் நடத்தையும் இப்படித்தான் அமைந்திருந்தது.

    ஆயிஷா (ரலி) கூறியதாவது: “நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், ‘மனிதர்களைப் படைத்து பராமரிப்பவனே, நோயைப் போக்கி அறவே நோயில்லாதவாறு குணமளிப்பாயாக. நீயே குணமளிப்பவன். உன் நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் இல்லை’ என இவ்வாறு பிரார்த்திப்பார்கள்”. (நூல்: முஸ்லிம்)

    ‘நீங்கள் நோயாளியையோ, இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் ‘ஆமீன்’ அவ்வாறு ஆகட்டும்! என கூறுகின்றனர் என நபி (ஸல்) தெரிவித்தார்கள்’. (அறிவிப்பாளர்: உம்மு சல்மா (ரலி), நூல்: முஸ்லிம்)

    ‘ஒரு முஸ்லிம் தம் முஸ்லிம் சகோதரனைக் காலையில் நலம் விசாரிக்கச் செல்லும்போது மாலை வரை எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டிருப்பார்கள். அவர் மாலையில் நலம் விசாரிக்கச் சென்றால் (மறுநாள்) காலை வரை எழுபதாயிரம் வானவர்கள் அவருக்காக பிரார்த்தனை செய்து கொண்டு இருப்பார்கள். மேலும் அவருக்கு சொர்க்கத்தில் ஒரு தோட்டம் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்’. (அறிவிப்பாளர்: அலி (ரலி), நூல்: திர்மிதி)

    ஒருவர், ஒரு நோயாளியை உடல்நலம் விசாரிக்கச் சென்றால், அவர் அவரிடம் நல்லதைத்தான் பேசவேண்டும். அல்லதை பேசக்கூடாது. அவருக்கு மன தைரியத்தையும், நம்பிக்கையையும் விதைக்க வேண்டும். அவர் நோயாளியை பயமுறுத்தவோ, அவநம்பிக்கையை ஏற்படுத்தவோ முயலக்கூடாது.

    அ. செய்யது அலி மஸ்லஹி, பாட்டப்பத்து, திருநெல்வேலி டவுண்.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் நடைபெற உள்ள வருடாந்திர பிரம்மோற்சவ விழாவை முன்னிட்டு அங்குரார்ப்பணம் நடந்தது.
    திருப்பதி கபிலேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதையொடடி நேற்று மாலை 4.30 மணியில் இருந்து மாலை 6.30 மணி வரை மூஷிக வாகனத்தில் விநாயகர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். அதைத்தொடர்ந்து ஆஸ்தானம், மாலை 6.30 மணியளவில் பிரம்மோற்சவ விழா அங்குரார்ப்பணம் நடந்தது.

    அதைத்தொடர்ந்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை 8.10 மணியளவில் மீன லக்னத்தில் பிரம்மோற்சவ விழா கொடியேற்றம் நடக்கிறது. அதன் பிறகு காலை 9 மணியில் இருந்து பகல் 11 மணி வரை பல்லக்கு உற்சவம், இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை ஹம்ச வாகனச் சேவை நடக்கிறது.

    சீனிவாசமங்காபுரம் கோவில் பிரம்மோற்சவ விழா 2-வது நாளான நேற்று சிறிய சேஷ வாகனச் சேவை, இரவு ஹம்ச வாகனச் சேவை நடந்தது.
    சீனிவாசமங்காபுரத்தில் உள்ள கல்யாண வெங்கடேஸ்வரசாமி கோவிலில் வருடாந்திர பிரம்மோற்சவ விழா நடந்து வருகிறது. விழாவின் 2-வது நாளான நேற்று காலை 8 மணியில் இருந்து காலை 9 மணிவரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி ‘முரளிகிருஷ்ணடு’ அலங்காரத்தில் சிறிய சேஷ வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    அதைத்தொடர்ந்து காலை 10.30 மணியில் இருந்து பகல் 11.30 மணி வரை உற்சவர்களான கல்யாணவெங்கடேஸ்வரசாமி, ஸ்ரீதேவி பூதேவி தாயார்களுக்கு மஞ்சள், சந்தனம், குங்குமம், பால், தயிர், தேன், இளநீர் உள்ளிட்ட சுகந்த திரவியங்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. இரவு 7 மணியில் இருந்து இரவு 8 மணி வரை உற்சவர் கல்யாண வெங்கடேஸ்வரசாமி சரஸ்வதி அலங்காரத்தில் ஹம்ச வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

    மேற்கண்ட நிகழ்ச்சிகளில் திருமலை-திருப்பதி தேவஸ்தான இணை அதிகாரி வீரபிரம்மன், கோவில் துணை அதிகாரி சாந்தி மற்றும் அதிகாரிகள், அர்ச்சகர்கள் கலந்து கொண்டனர்.

    பிரம்மோற்சவ விழாவின் 3-வது நாளான இன்று (செவ்வாய்க்கிழமை) காலை சிம்ம வாகனச் சேவையும், இரவு முத்துப்பந்தல் வாகனச் சேவையும் நடக்கிறது.
    விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.
    விரத காலத்தில், வெறும் தண்ணீர் மட்டுமே அருந்தி உபவாசம் இருப்பதே உயர்வானது. அப்படி இருக்க இயலாதவர்கள் பாலும் பழமும் அருந்தலாம்.
    சமஸ்கிருதத்தில் “ஃபல்’ என்றால் பழம் என்று பொருள்படும்.

    “ஆஹார்’ என்பது ஆகாரம் அல்லது உணவு என்பதாகும். “ஃபல் + ஆஹார்’ = பலஹார் என்று ஆகிறது. பழத்தை உணவாகக் கொள்வதே பலகாரம் என்பதாயிற்று.
    இதற்குப் பதிலாக சாதம் தவிர்த்த பலவித ஆகாரங்களைச் சாப்பிடுவது தான் “பலகாரம்’ என்ற சொல்லின் பொருளாக இக்காலத்தில் கருதப்படுகிறது. இது தவறு. இது உண்மையான விரதம் ஆகாது.

    ஜீரண உறுப்புகளுக்கு ஓய்வு கொடுத்து, உடலைப் புதுப்பிப்பதே விரதத்தின் நோக்கமாகும். எனவே சிற்றுண்டிகளைச் சாப்பிட்டு விரதம் இருப்பதை விட, பழங்களையும் பாலையும் மட்டும் அருந்தி விரதம் இருப்பதே சிறந்ததாகும்.
    ×