என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘கோல்டு’.
    • இப்படத்தை ஏழு ஆண்டு இடைவெளிக்கு பிறகு அல்போன்ஸ் புத்திரன் இயக்கினார்.

    'நேரம்' படத்தின் மூலம் தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் இயக்குனராக அறிமுகமானவர் அல்போன்ஸ் புத்திரன். அதை தொடர்ந்து பிரேமம்' படத்தை இயக்கி இருந்தார். கடந்த 2015-ம் ஆண்டு மலையாளத்தில் மட்டுமே வெளியான பிரேமம்', தமிழ் ரசிகர்களிடையேயும் மாபெரும் வரவேற்பை பெற்றது.


    'பிரேமம்' படம் அல்போன்ஸ் புத்திரனுக்கு மலையாள திரையுலகிலும், தமிழ் திரையுலகிலும் பெரிய பெயரை பெற்றுக்கொடுத்தது. இப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கிட்டத்தட்ட 7 ஆண்டுகளுக்கு பிறகு இவர் இயக்கத்தில் பிரித்விராஜ் நடிப்பில் சமீபத்தில் வெளியான கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது. தொடர்ந்து இவர் 'நெஞ்சுக்கு நீதி', 'வீட்ல விஷேசம்' உள்ளிட்ட பல படங்களை தயாரித்த ரோமியோ பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இந்த படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.


    அல்போன்ஸ் புத்திரன் பதிவு

    இந்நிலையில், இப்படத்தின் டைட்டில் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி, இந்த படத்திற்கு 'கிஃப்ட்' என படக்குழு தலைப்பு வைத்துள்ளது. இதனை தனது சமூக வலைதளத்தில் அறிவித்துள்ள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார். இப்படத்தில் சாண்டி, கோவை சரளா, சஹானா சர்வேஷ் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.




    • நெல்சன் இயக்கத்தில் ரஜினி தற்போது ‘ஜெயிலர்’ படத்தில் நடித்துள்ளார்.
    • இப்படத்தின் முதல் பாடல் நாளை வெளியாகவுள்ளது.

    அண்ணாத்த படத்தை தொடர்ந்து ரஜினி தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.



    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் நிறைவடைந்தது. 'ஜெயிலர்' படத்தின் முதல் பாடலான 'காவாலா' பாடல் நாளை (6-ஆம் தேதி) வெளியாகவுள்ளதாக படக்குழு புரோமோ வெளியிட்டிருந்தது.



    இந்நிலையில் 'காவாலா' பாடல் புரோமோ யூடியூப் டிரெண்டிங்கில் உள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. 



    • ஜெயம் ரவியின் 30வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
    • இப்படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார்.

    அகிலன், பொன்னியின் செல்வன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி, இறைவன், ஜெஆர்30 மற்றும் சைரன் படத்தில் நடித்து வருகிறார். இப்படங்களை தொடர்ந்து ஜெயம் ரவியின் 32 படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஜீனி என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் புவனேஷ் அர்ஜுனன் இயக்கவுள்ளார்.



    கீர்த்தி ஷெட்டி, கல்யாணி பிரியதர்ஷன், வாமிகா கெபி ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வேல்ஸ் இண்டர்நேஷ்னல் தயாரிப்பில் உருவாகவுள்ள இப்படத்திற்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைக்கிறார். 



    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. மேலும் இப்படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகவுள்ளது. படத்தின் பூஜை தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

    • சிவகார்த்திகேயன், அதிதி ஷங்கர், சரிதா, மிஷ்கின், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'மாவீரன்'.
    • இப்படத்தில் ரஜினியின் லுக்கை சிவகார்த்திகேயன் பின்பற்றியுள்ளார்.

    சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.




    'மாவீரன்' திரைப்படம் வருகிற ஜூலை 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மாவீரன் படத்தில் இடம்பெற்றுள்ள நீருக்கடியில் படமாக்கப்பட்ட காட்சி குறித்து இயக்குனர் மடோன் அஸ்வின் ஒரு நேர்காணலில் பேசியுள்ளார். அதில், இந்த பகுதியின் படப்பிடிப்புக்காக சிவகார்த்திகேயன் ஒரு நாள் முழுவதும் பயிற்சி எடுத்துக் கொண்டார். இதுவரை நீச்சல் குளத்தில் 5 அடிக்கு கீழ் சென்றதில்லை என்று சிவகார்த்திகேயன் என்னிடம் கூறினார். ஆனால் நாங்கள் 18 அடியில் படமாக்கினோம். இதற்காக அவருடைய முழு உழைப்பையும் அவர் கொடுத்தார். சிவகார்த்திகேயன் படத்தின் அவுட்புட் பார்த்துவிட்டு மிகவும் சந்தோஷப்பட்டார்.



    மேலும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் சாருக்கு வித்தியாசமான லுக் வேண்டும் என்று நினைத்தோம். ரஜினி சாரின் தளபதி பட லுக்கைப் போல, ஃபங்க் ஹேர் ஸ்டைலில் இருந்தால் சிறப்பாக இருக்கும் என்று யோசித்தோம். இந்த லுக் சிவகார்த்திகேயன் சாருக்கும் ரொம்ப பிடித்துவிட்டது. அதனால், இந்த லுக்கையே தேர்வு செய்து வைத்துவிட்டோம் என்று மனோன் அஷ்வின் தெரிவித்தார்.

    • 'லியோ' படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடல் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்தில் தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.



    'லியோ' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் இடம்பெற்ற "நா ரெடி" பாடலை விஜய்யின் பிறந்தநாளையொட்டி வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில் லியோ படத்தில் நடிகர் தனுஷை சிறப்பு தோற்றத்தில் நடிக்க வைக்க படக்குழு பேசி வருவதாக கூறப்படுகிறது.



    இதற்குமுன்பு கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான வை ராஜா வை படத்தில் கொக்கி குமாராக தனுஷ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்த நிலையில் லியோ படத்திலும் கொக்கி குமார் ரீ-எண்ட்ரி கொடுப்பாரா? என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

    • உதயநிதி நடிப்பில் வெளியான மாமன்னன் படத்தை நடிகர் ரஜினி பாராட்டியிருந்தார்.
    • இதற்கு உதயநிதி நன்றி தெரிவித்து பதிலளித்துள்ளார்.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. இப்படம் பலரின் பாராட்டுக்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.



    இப்படத்தை பார்த்த திரைப்பிரலங்கள், அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். நடிகர் ரஜினி இப்படத்தை பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள். மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள் என்று குறிப்பிட்டிருந்தார்.



    இந்நிலையில் ரஜினியின் பாராட்டுக்களுக்கு உதயநிதி ஸ்டாலின் பதில் பதிவிட்டுள்ளார். அதில், சமத்துவம் போற்றும் மாமன்னன் திரைப்படத்தைப் பார்த்து அன்போடு வாழ்த்திய சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சார் அவர்களுக்கு மாமன்னன் திரைப்படக்குழு சார்பில் அன்பும், நன்றியும் என்று பதிவிட்டுள்ளார்.



    • விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஹரா' படத்தில் மோகன் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    'தாதா 87' மற்றும் 'பவுடர்' படங்களை இயக்கிய விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் 'ஹரா'. இப்படத்தின் மூலம் நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகர் மோகன் மீண்டும் நடிக்கிறார். மேலும் இப்படத்தில் குஷ்பு, யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், சிங்கம்புலி, தீபா, மைம் கோபி, சாம்ஸ், கௌஷிக், அனித்ரா நாயர், சந்தோஷ் பிரபாகர் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.



    'ஹரா' படத்தில் எதிர்மறை கதாபாத்திரத்தில் சுரேஷ் மேனன் நடிக்கிறார். மேலும், அரசியல்வாதியாக வனிதா விஜயகுமார் நடிக்கிறார். கோயம்புத்தூர் எஸ் பி மோகன் ராஜ் மற்றும் ஜி மீடியா ஜெய ஸ்ரீ விஜய் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றனர்.



    இப்படத்தின் பணிகள் முழுவீச்சில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக், டைட்டில் டீசர் மற்றும் 'கயா முயா...' என்ற பாடல் வெளியாகி கவனம் ஈர்த்தது. 'ஹரா' படத்தின் அடுத்தடுத்த அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘தங்கலான்’.
    • இப்படத்தின் படப்பிடிப்பை படக்குழு நிறைவு செய்துள்ளது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.



    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் இப்படத்தின் ஒத்திகையின் போது நடிகர் விக்ரமுக்கு காயம் ஏற்பட்டு அவரின் விலா எலும்பு முறிந்தது. இதனால் விக்ரம் சிறிது காலம் படப்பிடிப்பில் பங்கேற்க மாட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. பின்னர் விக்ரம் படப்பிடிப்பை மீண்டும் தொடங்கினார்.



    இந்நிலையில், தங்கலான் படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததாக விக்ரம் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் அறிவித்திருக்கிறார். மேலும் இது தொடர்பான புகைப்படத்தை வெளியிட்டு அவர் பதிவிட்டிருப்பது, படப்பிடிப்பு நிறைவடைந்தது! என்ன ஒரு பயணம்!! மிகவும் அற்புதமான சிலருடன் பணிபுரிந்ததில் ஒரு நடிகராக மிகவும் உற்சாகமான சில அனுபவங்களைப் பெற்றேன். முதல் படத்திற்கும் கடைசி படத்திற்கும் இடையே 118 நாட்கள் படப்பிடிப்பு நடந்தது. இந்த கனவை வாழ வைத்ததற்கு நன்றி ரஞ்சித். ஒவ்வொரு நாளும். என்று குறிப்பிட்டுள்ளார்.



    • இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி அவருடைய டுவிட்டர் பக்கத்தில் பதிவு.
    • இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, ஃபகத் பாசில், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்ட பலர் நடிப்பில் கடந்த 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'மாமன்னன்'. ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்திருந்த இப்படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

    இப்படம் விமர்சன ரீதியாகவும் வருமான ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

    இந்நிலையில், மாமன்னன் திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் அப்படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜை பாராட்டி தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் கூறப்பட்டுள்ளாதவது:-

    'மாமன்னன்' திரைப்படம் சமத்துவத்தை வலியுறுத்தும் மாரி செல்வராஜின் ஒரு அருமையான படைப்பு. அவருக்கு எனது மனமார்ந்த பாராட்டுகள்.

    மிகச் சிறப்பாக நடித்திருக்கும் வடிவேலு, உதயநிதி, பகத் பாசில் ஆகியோருக்கு எனது வாழ்த்துகள்.

    இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

    • ஜானி மாஸ்டர் தற்போது 'ரன்னர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார்.
    • இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கன்னடம், தமிழ், இந்தி உள்ளிட்ட பல மொழி படங்களில் நடன இயக்குனராக பணியாற்றி பிரபலமடைந்தவர் ஜானி மாஸ்டர். இவர் தற்போது 'ரன்னர்' என்ற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். ஆக்ஷன் டிராமாவாகமாக உருவாகி வரும் இப்படத்தை அறிமுக இயக்குனர் விஜய் சௌத்ரி இயக்கியுள்ளார். இப்படத்தை விஜய் டமருகா ஆர்ட்ஸ் சார்பில் விஜய் பாஸ்கர், ஜி.பனிந்திரா மற்றும் எம்.ஸ்ரீஹரி ஆகியோர் தயாரிக்கின்றனர்.

    இந்நிலையில் 'ரன்னர்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை ஜானி மாஸ்டரின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டுள்ளது. , வெளியாகியுள்ளது. இந்த போஸ்டர் தற்போது வைரலாகி வருகிறது. இப்படம் குறித்து இயக்குனர் விஜய் சௌத்ரி கூறியதாவது, "திறமையான நடன இயக்குனரான ஜானி மாஸ்டருடன் இணைந்து பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். அவருடைய நடிப்புத் திறமை, அவரது குணாதிசயங்கள் மற்றும் அப்பா-மகன் இருவருக்கிடையிலான சென்டிமென்ட் காட்சிகள் நிச்சயமாக பார்வையாளர்களை ஈர்க்கும்.



    இது ஒரு வித்தியாசமான த்ரில்லர் திரைப்படம். மணி சர்மா அற்புதமான இசையையும் பாடல்களையும் கொடுத்துள்ளார். ஜானி மாஸ்டரின் நடன அசைவுகள் படத்தின் ஹைலைட்டாக இருக்கும். படம் குறித்தான மற்ற விவரங்களை விரைவில் வெளியிடுவோம்" என்றார். சில ஆண்டுகளுக்கு முன்பு ஹைதராபாத்தில் நடந்த சில உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்ட கதையாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை 20 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கவுள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. 

    • கமல், தற்போது இந்தியன்-2 படத்தில் தீவிரம் காட்டி வருகிறார்.
    • கமலின் 233வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகரான கமல், தற்போது ஷங்கர் இயக்கத்தில் இந்தியன்-2 படத்தில் நடித்து வருகிறார். இதில் கமலுடன் இணைந்து சமுத்திரக்கனி, பாபி சிம்கா, காஜல் அகர்வால், சித்தார்த், ராகுல் பிரீத் சிங், பிரியா பவானி சங்கர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.



    இப்படத்தை தொடர்ந்து கமல், புராஜெக்ட் கே படத்தில் நடிக்கிறார். இயக்குனர் நாக் அஸ்வின் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் பிரபாஸ், தீபிகா படுகோனே, அமிதாப் பச்சன், திஷா பதானி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சில தினங்களுக்கு முன்பு வெளியானது.



    இந்நிலையில் கமலின் 233வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளனர். அதன்படி கமல்ஹாசனின் "கேஎச்233" படத்தை 'நேர்கொண்ட பார்வை', 'வலிமை', 'துணிவு' போன்ற படங்களை இயக்கிய எச். வினோத், இயக்கவுள்ளதாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    கமலின் 234வது படத்தை இயக்குனர் மணிரத்னம் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    • நடிகர் விஷால் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் 'மார்க் ஆண்டனி'.
    • இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்திருக்கும் படம் 'மார்க் ஆண்டனி'. இப்படத்தின் நாயகியாக ரித்து வர்மா நடித்துள்ளார். மேலும் எஸ்.ஜே.சூர்யா மற்றும் செல்வராகவன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.



    சமீபத்தில் 'மார்க் ஆண்டனி' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியாகி கவனம் பெற்றது. இப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி, 'மார்க் ஆண்டனி' திரைப்படம் வருகிற விநாயக சதூர்த்தி வெளியாகவுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.

    பி.வாசு இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள சந்திரமுகி-2 படம் விநாயக சதூர்த்தி அன்று வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.



    ×