என் மலர்
சினிமா செய்திகள்
- மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
- திரையரங்குகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர்.
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தினர் ஆலோசனை கூட்டம் சென்னையில் நடந்தது. இதில் டிக்கெட் கட்ட ணத்தை உயர்த்துவது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டது. மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சி பகுதிகளில் டிக்கெட் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.
திரையரங்குகளை நடத்துவதில் உள்ள சிக்கல்கள் குறித்து ஆலோசனை நடத்தினர். திரையரங்குகளை தொடர்ந்து நடத்த ஏதுவாக விதிகளை தளர்த்த கோரி தீர்மானம் நிறைவேற்றி அரசுக்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது.
கூட்டத்தில் முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு 2 படங்களில் நடிக்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வலியுறுத்தினார்கள். மேலும் திரையரங்குகளில் படங்கள் வெளியான 8 வாரத்துக்கு பின்னரே ஓ.டி.டி.யில் வெளியிட வேண்டும் என்றும் டிக்கெட் கட்டணத்தில் ஒரே மாதிரியான ஜி.எஸ்.டி. கட்டணமாக இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினர்.
- நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துகிறார்.
- இந்த ஆலோசனை கூட்டத்தில் பல முடிவுகள் எடுக்கப்படும் என்று கூறப்படுகிறது.
விஜய் மக்கள் இயக்க தொகுதி பொறுப்பாளர்களுடன் நடிகர் விஜய் இன்று ஆலோசனை நடத்துகிறார்.
சமீபத்தில், நடிகர் விஜய் தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் தொகுதி வாரியாக 10-ம் மற்றும் 12-ம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் 3 இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கி கவுரவித்தார். மாணவர்கள் மத்தியில் பேசிய நடிகர் விஜய், ஓட்டுக்கு பணம் வாங்க கூடாது என கூறினார். மேலும், விஜய் மக்கள் இயக்கம் பல்வேறு நலத்திட்ட உதவிகளை அவ்வப்போது வழங்கி வருகிறார். இதனால், நடிகர் விஜய் விரைவில் அரசியல் களத்தில் இறங்குகிறார் என்ற வெளிப்படையாக அறிவிக்கப்படாத தகவல் வலம் வருகிறது.
இந்நிலையில், நடிகர் விஜய் பனையூர் இல்லத்தில் மாவட்ட பொறுப்பாளர்களுடன் ஆலோசனை நடத்துவதற்காக வந்தடைந்தார். இன்று முதல் 3 நாட்களுக்கு இந்த ஆலோசனை நடைபெறும் என்று கூறப்படுகிறது. போட்டோவுடன் கூடிய அடையாள அட்டையுடன் வரும் மாவட்ட பொறுப்பாளர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. இந்த கூட்டத்தில் 300 பேர் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது.
இதில், 234 தொகுதி நிர்வாகிகளுடனும் சுமார் 2 மணி நேரம் ஆலோசனை நடத்தப்பட்டது. மேலும், விஜய் மக்கள் இயக்கத்தின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து மாவட்ட வாரியாக விஜய் கேட்டறிந்தார். இதன் பின்னர், விஜய்யின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்று மக்கள் எதிர்பார்த்திருக்கின்றனர்.
- இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கமல் நடிப்பில் வெளியான படம் வேட்டையாடு விளையாடு.
- இப்படம் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் கடந்த 2006-ம் வெளியான படம் வேட்டையாடு விளையாடு. இதில் டிஜிபி ராகவன் என்ற கதாப்பாத்திரத்தில் கமல்ஹாசன் நடித்திருந்தார். இதில் ஜோதிகா, கமலினி முக்கர்ஜி, பிரகாஷ் ராஜ், டேனியல் பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

ரவி வர்மன் ஒளிப்பதிவில் ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வெளியான இப்படம் அன்றைய சினிமா சூழலில் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தது. வேட்டையாடு விளையாடு படம் ஜூன் 23ம் தேதி திரையரங்குகளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆனது. சென்னையில் வெளியான இத்திரைப்படம் ரசிகர்களின் கொண்டாட்டத்துடன் திரையரங்குகள் நிறைந்து வந்தது.

இந்நிலையில், வேட்டையாடு விளையாடு படத்தின் மறு வெளியீட்டு வெற்றியை படக்குழு கேக் வெட்டி கொண்டாடியுள்ளனர். அந்த நிகழ்வில் இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன், இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ், தயாரிப்பாளர் மாணிக்கம் நாராயணன் கலந்து கொண்டனர். இது தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
- லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘லியோ’.
- இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியானது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் படம் 'லியோ'. இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் சார்பில் லலித் குமார் தயாரிக்கிறார். அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இப்படத்தின் முதல் பாடல் சமீபத்தில் வெளியாகி 50 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது. மேலும், 'லியோ' படத்தில் விஜய்குரிய காட்சிகள் நிறைவு பெற்றதாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் நேற்று சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்து அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 'லியோ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இயக்குனர் மிஷ்கினை சந்தித்த ரசிகர்கள் இப்படம் குறித்து அப்டேட் கேட்டனர். அதற்கு மிஷ்கின், "எல்லாரும் விஜய் மாதிரி நடந்துக் கொள்ளுங்கள். அவர் மிகவும் இனிமையானவர். 'லியோ' படத்தில் நான் ஒரு சிறிய வில்லன்" என்று கூறினார்.
- மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘மாவீரன்’.
- இப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது 'மண்டேலா' படத்தின் இயக்குனர் மடோன் அஸ்வின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'மாவீரன்' படத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி உள்ளது. இப்படத்திற்கு தெலுங்கில் 'மாவீருடு' என்று பெயர் வைத்துள்ளனர். இதில் அதிதி ஷங்கர், சரிதா, இயக்குனர் மிஷ்கின் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

'மாவீரன்' திரைப்படம் வருகிற 14-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர், பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்து வருகிறது. இந்நிலையில், 'மாவீரன்' படத்தின் ஸ்பெஷல் சர்ப்ரைஸ் இன்று மாலை 6.00 வெளியாகும் என போஸ்டர் வெளியிட்டு படக்குழு அறிவித்துள்ளது. மேலும் தெலுங்கின் 'மாவீருடு' 7.00 வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
- வேலூர் காட்பாடியில் கடையிலிருந்து வரிசையாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர்.
- இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது.
வேலூர் காட்பாடியில் ஆஸ்கார் தியேட்டர் எதிரில் தம்பி பிரியாணி கடை திறக்கப்பட்டது. அதன் துவக்க விழா சலுகையாக ஒரு மட்டன் பிரியாணி வாங்கினால் ஒரு சிக்கன் பிரியாணி இலவசம், ஒரு சிக்கன் பிரியாணி வாங்கினால் மேலும் ஒரு சிக்கன் பிரியாணி இலவச என அறிவித்தனர். இதனால் ஏராளமான பொதுமக்கள் கடை முன்பு திரண்டனர்.
கடையிலிருந்து வரிசையாக ஒரு கிலோ மீட்டர் தூரம் வரை பொதுமக்கள் காத்திருந்து பிரியாணி வாங்கிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பரபரப்பாக காணப்பட்டது. அப்போது, அந்த வழியாகவந்த மாவட்ட ஆட்சியர் குமாரவேல் பாண்டியன் அறிவுறுத்தலின் படி போலீசாரால் கூட்டம் கலைக்கப்பட்டு பிரியாணி கடை மூடப்பட்டது.

பிரியாணிக்காக வரிசையில் நின்ற பொதுமக்கள்
இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து நடிகரும், சமத்துவ மக்கள் கட்சி தலைவருமான சரத்குமார் சமூக வலைதளத்தில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், " வேலூர், காட்பாடியில் 'தம்பி பிரியாணி' என்ற பிரியாணி கடை புதிதாக திறக்கப்பட்டு மட்டன் பிரியாணி வாங்கினால் சிக்கன் பிரியாணி இலவசம் என்று அறிவிப்பு வெளியிட்டிருந்ததால், அங்கு பொதுமக்கள் கூட்டம் அலைமோதி, நீண்ட வரிசையில் வெயிலில் வெகுநேரமாக காத்திருந்த சம்பவம் அதிர்ச்சியளிக்கிறது.
புதிய கடைகள் திறப்பின் போது சலுகைகள் வழங்குவது வழக்கம் . ஆனால், பிரியாணி இலவசம் என்பதற்காக காட்பாடி முதல் வேலூர் செல்லும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்தும் அளவிற்கு மகள் கூட்டம் அலைமோதியது என்றால் மக்களின் இலவச மோகத்தை சற்று ஆழ்ந்து சிந்திக்க வேண்டியிருக்கிறது.
கூட்டத்தை கண்ட வேலூர் ஆட்சியர் குமாரவேல் பாண்டியன், மாநகராட்சியில் தொழில் உரிமம் பெறாமல் துவங்கப்பட்டதாக தெரிவித்து கடையை மூடச் செய்திருப்பது வரவேற்கத்தக்கது. அதே சமயம் பொதுமக்களை வலுக்கட்டாயமாக கலைந்து செல்லச் செய்யும் சூழல் காவல்துறைக்கு ஏற்பட்டிருக்கிறது என்று சொன்னால் மக்களின் மனநிலை, இலவசத்தின் மீதான ஆர்வம், கலெக்டர் வருகை புரிந்து கூட்டத்தை கலைந்து செல்ல கடையை மூட முடிவெடுக்க வேண்டிய கட்டாயம் அனைத்தும் தலைகுனிவான செயல்.

சரத்குமார் அறிக்கை
கடை உரிமம் பெற்று திறக்கப்பட்டதா? பிரியாணி சுவையானதாக இருக்குமா? சுகாதாரமான முறையில் தயாரிக்கப்படுகிறதா? என்றெல்லாம் பாராமல் நீண்ட வரிசையில் தயங்காமல் காத்திருந்து பெறலாம் என்றால் அந்த இலவசத்தில் இருக்கும் மோகம் என்ன?
பொதுமக்கள் என்னிடம் கேட்கலாம், உங்களுக்கென்ன வசதியுடன் வாழ்கிறீர்கள். இலவசம் உங்களுக்கு தேவையல்ல, எங்களின் தேவை என்று கூறலாம். ஆனால் அப்படியல்ல. தன்மானத்தை இழந்து கிடைக்கும் இலவசம் பெறுவது சரியல்ல. நாம் உழைத்து கடின உழைப்பால், முயற்சியால் ஈட்டுகின்ற பொருளைக்கொண்டு உண்ணுகின்ற உணவுதான் சிறப்பு என்று சிந்திப்பவன் என்பதால் நான் இதனை தெரிவிக்கிறேன்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் மக்களுக்கு அரசு நலத்திட்டப்பணிகள் வாயிலாக தேவைகள் பூர்த்தி அடையும். ஆனால், அனைவரும் இலவசத்திற்காக இப்படி நின்றதை பார்த்து பெரும் தலைகுனிவாக எண்ணி வருந்துகிறேன். தன்மானத்தை இழந்து, சுயமரியாதை விடுத்து கிடைக்கும் அத்தியாவசியமற்ற இலவசத்தை இனியாவது தவிர்த்திடுங்கள்" என்று அறிக்கையில் குறிப்பிட்டிருக்கிறார்.
- ஷாருக்கான் நடிப்பில் உருவாகியுள்ள ‘ஜவான்’ திரைப்படம் செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
- இப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது.
தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக வலம் வரும் அட்லீ தற்போது இயக்கியுள்ள திரைப்படம் 'ஜவான்'. இதில் ஷாருக்கான் கதாநாயகனாக நடித்துள்ளார். நயன்தாரா கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

மேலும் யோகிபாபு, தீபிகா படுகோனே, பிரியாமணி உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இப்படத்தின் மூலம் பாலிவுட் பட உலகில் அனிருத் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். பான் இந்தியா படமாக உருவாகியுள்ள 'ஜவான்' திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

'ஜவான்' திரைப்படத்தின் முன்னோட்ட வீடியோவை நேற்று படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இப்படத்தின் முன்னோட்ட வீடியோ அனைத்து ப்ளாட்ஃபார்களையும் சேர்த்து 115 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளதாக இயக்குனர் அட்லீ போஸ்டர் வெளியிட்டு சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
- யோகி பாபுவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும்.
- அவரை அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூட என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் டோனி. இவர் சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்து ஐபிஎல் போட்டி மட்டுமே விளையாடி வருகிறார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக 5-வது முறை கோப்பையை கைப்பற்றியுள்ளார்.
இந்நிலையில் தற்போது டோனி என்டர்டெயின்மென்ட் என்கிற தனது தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் முதல் படத்தை தமிழில் எடுத்தும் முடித்துள்ளார்.
அந்த வகையில் தமிழ்மணி இயக்கத்தில் ஹரிஷ் கல்யாண், நதியா, இவானா, யோகி பாபு உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்து "எல் ஜி எம்" என்கிற படம் தற்போது படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்காக காத்திருக்கிறது. இந்த படத்தின் ஆடியோ மற்றும் டிரைலர் வெளியீட்டு விழாவானது நேற்று சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் டோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி ஆகியோர் நேரில் கலந்து கொண்டனர்.

இந்த இசை வெளியீட்டு விழாவின் போது சென்னை அணியில் ஓய்வு பெற்ற அம்பத்தி ராயுடுவுக்கு பதிலாக யோகி பாபுவிற்கு சி.எஸ்.கே அணியில் விளையாட வாய்ப்பு உள்ளதா? என்று ஆங்கர் பாவனா கேள்வி எழுப்பினார்.
அதற்கு டோனி கூறியதாவது:-
யோகி பாபுவுக்கு கிரிக்கெட்டில் ஆர்வம் உள்ளது என்று எனக்கு நன்றாக தெரியும். அவரை அணியில் சேர்க்க சிஎஸ்கே நிர்வாகத்திடம் கூட என்னால் பேச்சுவார்த்தை நடத்த முடியும். ஆனால் ஒரே ஒரு கண்டிஷன் தான். யோகி பாபு சரியான முறையில் கால்சீட் கொடுக்க வேண்டும்.
எல்லா போட்டிகளிலும் அவர் விளையாடும் அளவிற்கு நேரம் ஒதுக்க வேண்டும். அதோடு பயிற்சியிலும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும். இவை அனைத்திற்கும் சம்மதம் தெரிவித்தால் நிர்வாகத்திடம் நான் பேசத் தயார்.
பந்துவீச்சாளர்கள் ஸ்டம்பை நோக்கி பந்து வீசமாட்டார்கள். பேட்ஸ்மேனை நோக்கியே பந்து வீசுவார்கள் அதையும் அவர் கையாள முடியுமா? அதற்கான திறன் இருக்கிறதா என்று யோகி பாபுவே முடிவு செய்யட்டும்.
என டோனி பதிலளித்து இருந்தார்.
- சென்னை எழும்பூரில் உள்ள டியு (DU) பவுலில் நடைபெற்ற 3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்போட்டி நடைபெற்றது.
- இதில் வெற்றி பெற்றவர்களுக்கு ’அதே கண்கள்’, ‘பெட்ரோமாக்ஸ்’, ‘தீராக் காதல்’ போன்ற படங்களை இயக்கிய ரோகின் வெங்கடேசன் பரிசுகளை வழங்கினார்.
சென்னை எழும்பூரில் உள்ள டியு (DU) பவுலில் நடைபெற்ற 3வது தமிழ்நாடு மாநில தரவரிசை டென்பின் பவுலிங் போட்டியின் இறுதிப்போட்டியில் முன்னாள் மாநில சாம்பியன் யூசுப் ஷபீர், கணேஷ்.என்.டி-யை (384-355) வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார். இரண்டு சுற்றுகளில் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய இறுதிப் போட்டியில், கணேஷ், யூசுப்பை (177-170) விட 7 பின்கள் முன்னிலையுடன் முதல் சுற்றை முடித்தார். 2 வது சுற்றில் யூசுப் 178 புள்ளிகளுடன் மீண்டும் ஆதிக்கம் செலுத்தினார். இதன் மூலம் 29 பின்களின் ஒட்டுமொத்த பின்ஃபால் வித்தியாசத்தில் கணேஷை யூசுப் ஷபீர் வீழ்த்தினார்.

முந்தைய நாள், இரண்டு சுற்றுகளின் ஒட்டுமொத்த பின்ஃபால் அடிப்படையில் விளையாடிய முதல் அரையிறுதியில், முதல் நிலை வீரரான யூசுப் ஷபீர் நான்காம் நிலை வீரரான அக்ரமுல்லா பைக்-ஐ இரண்டு கேம் நாக் அவுட்டில் 78 பின்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தார். யூசுப் ஷபீர் போட்டியின் 2வது மற்றும் 3வது சுற்றில் 18 சுற்றுகளின் தகுதி புள்ளிகளை சராசரியாக 187.06 (பின்ஃபால் 3367) இல் முடித்தார்.
இரண்டாவது அரையிறுதியில் இரண்டாம் நிலை வீரரான ஆனந்த் பாபு, மூன்றாம் நிலை வீரரான கணேஷ் என்.டி-யை எதிர்த்து விளையாடினார். கணேஷ் 32 பின்கள் வித்தியாசத்தில் ஆனந்தை (389-357) தோற்கடித்து இறுதிப் போட்டியில் தனது இடத்தை உறுதி செய்தார். இப்போட்டியின் நிறைவு விழாவில் 'அதே கண்கள்', 'பெட்ரோமாக்ஸ்', 'தீராக் காதல்' போன்ற படங்களை இயக்கியிருக்கும் ரோகின் வெங்கடேசன் சிறப்பு விருந்தினராக கலந்துக்கொண்டு வெற்றியாளர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
- ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, மகாநதி, சர்க்கார், அண்ணாத்தே, தசரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தவர் கீர்த்தி சுரேஷ்.
- கீர்த்தி சுரேஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
இது என்ன மாயம் படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு கதாநாயகியாக அறிமுகமானவர் கீர்த்தி சுரேஷ். அதன்பின்னர் ரஜினிமுருகன், தொடரி, ரெமோ, பைரவா, மகாநதி, சர்க்கார், அண்ணாத்தே, தசரா உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்துள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் கீர்த்தி சுரேஷின் ரசிகர் ஒருவர், இன்று தனது பிறந்தநாள் உங்களின் வாழ்த்துக்கள் எனக்கு வேண்டும். லவ் யூ தலைவி என்று பதிவிட்டு வாழ்த்து வேண்டி கேட்டிருந்தார். இதற்கு பதிலளித்த கீர்த்தி சுரேஷ், அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து, "லவ் யூ டூ" என்று பதிவிட்டுள்ளார்.
- தனுஷின் 50வது படத்தை அவரே இயக்கி நடிக்கிறார்.
- இப்படத்தின் படப்பிடிப்பு சில தினங்களுக்கு முன்பு தொடங்கியுள்ளதாக படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்தது.
தனுஷ் தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் 'கேப்டன் மில்லர்' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் தனுஷின் 50-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளதாக போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. மேலும், இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, அபர்ணா பாலமுரளி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் பரவி வந்தது.

தனுஷ் இயக்கி நடிக்கும் அவரின் 50-வது படத்தின் படப்பிடிப்பு தொடங்கியதாக படக்குழு சில தினங்களுக்கு முன்பு போஸ்டர் வெளியிட்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் இப்படத்தில் இயக்குனரும் நடிகருமான செல்வராகவன் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தனுஷை தமிழ் திரையுலகிற்கு நடிகராக அறிமுகப்படுத்திய செல்வராகவனை, தனுஷ் இயக்கவுள்ளதாக வெளியான தகவலால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.

செல்வராகவன் இயக்கத்தில் தனுஷ், துள்ளுவதோ இளமை, காதல் கொண்டேன், புதுப்பேட்டை, மயக்கம் என்ன, நானே வருவேன் படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானவர் ராய் லட்சுமி.
- அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளின் மூலம் தனது கவர்ச்சி புகைப்படங்களை ராய் லட்சுமி வெளியிட்டு வருகிறார்.
தமிழில் 'கற்க கசடற' படத்தின் மூலம் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமான ராய்லட்சுமி, ஜெயம் ரவியின் 'தாம் தூம்' படத்தின் மூலம் மிகவும் பிரபலமானார். அதன்பிறகு 'குண்டக்க மண்டக்க', 'தர்மபுரி', 'வெள்ளித்திரை', 'மங்காத்த', 'காஞ்சனா' 'சிண்ட்ரெல்லா' உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்தார்.

அதன்பின்னர் படவாய்ப்பு குறைந்ததை அடுத்து இந்தி சினிமாவுக்கு தாவிய ராய் லட்சுமி, முதன்முதலில் நடித்த 'ஜூலி-2' திரைப்படம் தோல்வியை சந்தித்திருந்தது. இவர் நடிப்பில் தமிழில் வெளியான 'சிண்ட்ரெல்லா' திரைப்படம் கலவையான வரவேற்பை பெற்றது. சமீபத்தில் வெளியான தி லெஜண்ட் படத்தில் வாடி வாசல் என்ற பாடலுக்கு நடனமாடியிருந்தார்.

அவ்வப்போது பல போட்டோஷூட்டுகளின் மூலம் தனது கவர்ச்சி புகைப்படங்களை ராய் லட்சுமி வெளியிட்டு வருகிறார். இவர் தற்போது கருப்பு நிற உடையில் கவர்ச்சி காட்டும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ ரசிகர்களை கவர்ந்து வைரலாகி வருகிறது.






