என் மலர்
சினிமா செய்திகள்
ரஜினியின் தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை கமல்ஹாசன், மகேஷ் பாபு, மோகன்லால், சல்மான் கான் போன்ற உச்ச நடிகர்கள் வெளியிட்டனர்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் திரைப்படம் ‘தர்பார்’. பேட்ட படத்தின் வெற்றிக்கு பிறகு ரஜினி நடிப்பதாலும், நீண்ட இடைவெளிக்கு பிறகு போலீஸ் அதிகாரியாக அதிரடியான கதாபாத்திரத்தில் நடிப்பதாலும் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. தர்பார் படத்தில் நயன்தாரா நாயகியாக நடித்துள்ளார். தர்பார் படத்தின் படப்பிடிப்பு நிறைவு அடைந்துவிட்டது. பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகி இருக்கும் தர்பார் மோஷன் போஸ்டரை, அந்தந்த மொழி பட பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர். அதன்படி தமிழில் கமல்ஹாசனும், மலையாளத்தில் மோகன்லாலும், இந்தியில் சல்மான் கானும் தெலுங்கில் மகேஷ் பாபுவும் வெளியிட்டனர். வருகிற ஜனவரி மாதம் பொங்கல் விருந்தாக "தர்பார்" திரைக்கு வருகிறது.
நண்பர் @rajinikanth அவர்களின் #DarbarMotionPosterhttps://t.co/bn4ks6E6wY#DARBAR@anirudhofficial@LycaProductions
— Kamal Haasan (@ikamalhaasan) November 7, 2019
தென்னிந்திய நடிகர் சங்கத்தை நிர்வகிக்க பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதாவை தமிழக அரசு நியமனம் செய்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான தேர்தல் முடிவடைந்து விட்டாலும், வாக்குகள் இன்னும் எண்ணப்படாமல் இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு விசாரணை சென்னை உயர்நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் பதிவுத்துறை, “சங்கம் செயல்படவில்லை என்று அறிகிறோம். நாங்கள் ஏன் தனி அதிகாரி மூலமாக நிர்வகிக்கக் கூடாது” என்று நடிகர் சங்கத் தலைவர் நாசர், செயலாளர் விஷால் ஆகியோருக்கு கடந்த மாதம் நோட்டீஸ் அனுப்பியது. இது நடிகர் சங்க உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விவகாரம் தொடர்பாக நடிகர் சங்க உறுப்பினர்கள் ஒன்றிணைந்து வணிக வரித்துறை முதன்மை செயலாளருக்கும், சங்கங்களின் பதிவாளருக்கும் விளக்க கடிதம் ஒன்றை அனுப்பி இருந்தார்கள். அந்த கடிதத்தில் சங்க நிர்வாகம் சிறப்பாகவே செயல்படுகிறது என்று குறிப்பிட்டு இருந்தனர்.

இந்த நிலையில், இன்று தமிழக அரசின் முதன்மை செயலாளர் கே.பாலச்சந்திரன் வெளியிட்டுள்ள உத்தரவில் சங்கங்களுக்கான பதிவுத்துறை உதவி ஐ.ஜி கீதா தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கான சிறப்பு அதிகாரியாக நியமிக்கப்படுவதாக அறிவித்துள்ளது. தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்துக்கு ஏற்கனவே தமிழக அரசு சார்பில் சேகர் என்ற தனி அதிகாரி நியமிக்கப்பட்டு செயல்பட்டு வரும் நிலையில் நடிகர் சங்கமும் தமிழக அரசின் நேரடி கட்டுப்பாட்டின் கீழ் வந்துள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வரும் நயன்தாரா, பிரபல காமெடி நடிகரின் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
தமிழ் திரையுலகின் முன்னணி கதாநாயகியாக வலம் வருபவர் நயன்தாரா. சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து ரஜினியின் தர்பார் படத்திலும் நடித்து முடித்துள்ள நயன்தாரா, தற்போது அவள் பட இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்கும் “நெற்றிக்கண்” படத்தில் நடித்து வருகிறார். இதில் அவர் கண் பார்வை தெரியாத பெண் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நயன்தாரா நடிக்கும் அடுத்த படம் குறித்த தகவல் கசிந்துள்ளது. அதன்படி, ஆர்.ஜே.பாலாஜி நடிப்பில் உருவாகும் ‘மூக்குத்தி அம்மன்’ திரைப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. முழுக்க முழுக்க காமெடி படமாக உருவாகும் இதனை வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேசன் தயாரிக்க உள்ளார்.

இப்படத்திற்கான ஆரம்ப கட்ட வேலைகள் தொடங்கி நடைபெற்று வருவதாகவும், இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. நயன்தாராவும், ஆர்.ஜே.பாலாஜியும் ஏற்கனவே நானும் ரவுடி தான், வேலைகாரன் போன்ற படங்களில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில் பிரியா பவானி சங்கர் முதன்முறையாக ஆக்ஷன் காட்சிகளில் நடித்துள்ளார்.
`மேயாத மான்' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானவர் பிரியா பவானி சங்கர். கார்த்தியின் `கடைக்குட்டி சிங்கம்' படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். இதையடுத்து இவர் நடிப்பில் வெளிவந்த மான்ஸ்டர் படமும் செம ஹிட் அடித்தது. இவர் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகும் மாஃபியா படத்தில் அருண்விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார்.
இந்த படத்தில் சத்யா எனும் கதாபாத்திரத்தில் பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். அதிரடி ஆக்ஷன் படமாக உருவாகும் மாஃபியா படத்தில் பிரியா பவானி சங்கர் முதன்முறையாக ஸ்டண்ட் காட்சிகளில் நடித்துள்ளாராம். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தொடர்ந்து ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் இந்தியன் 2, எஸ்.ஜெ.சூர்யாவின் பொம்மை என பிரியா பவானி சங்கர் அடுத்தடுத்து பிசியாக நடித்து வருகிறார்.
நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வரும் நிலையில், அவரைப் பற்றி வெளியில் தெரியாத 10 தகவல்கள்....
1. கமல்ஹாசன் நடிக்க வந்தபோது அவருக்கு வயது 5. முதல் படமான களத்தூர் கண்ணம்மா படத்தில் (1959) அவர் ஆதரவற்ற சிறுவனாக நடித்து இருந்தார். மிகச்சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக அவருக்கு நாடு முழுவதும் இருந்து பாராட்டுக்கள் குவிந்தன. சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்கான ஜனாதிபதி தங்க பதக்கம் அவருக்கு வழங்கப்பட்டது. இந்தியாவில், அறிமுகமான முதல் படத்திலேயே குழந்தை நட்சத்திரமாக தங்க பதக்கம் வென்றது கமல் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.
2. கமல்ஹாசன் சிறந்த நடிகர் மட்டுமல்ல. திரையுலகின் அனைத்து பிரிவுகளிலும் முத்திரை பதித்தவர். திரைத்துறையின் அனைத்து விஷயங்களையும் அவர் தனது கைவிரல் நுனியில் வைத்திருக்கும் வகையில் நுணுக்கமாக அறிந்து வைத்துள்ளார். மிகச்சிறந்த நடன கலைஞர், பின்னணி பாடகர், இயக்குனர், தயாரிப்பாளர், பாடல் ஆசிரியர், தொழில்நுட்ப கலைஞர், ஒப்பனை கலைஞர் என்று பல அவதாரங்களை அவர் எடுத்துள்ளார்.
வேடங்களில் தனித்துவத்தை காட்டுவதற்காக அமெரிக்கா சென்று மேக்கப் துறையில் படித்து வந்தார். இதனால் மேக்கப்பின் அனைத்து அம்சங்களும் அவருக்கு அத்துபடியாக தெரியும்.
3. தமிழ் திரையுலகில் மட்டுமின்றி இந்தியாவிலேயே முதல் முறையாக ஒரு படத்தில் நடிப்பதற்கு ரூ.1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கிய முதல் நடிகர் என்ற பெருமையை அவர் படைத்தார். 1994-ம் ஆண்டு அவரால் இந்த சாதனை உருவாக்கப்பட்டது.
4. கமல்ஹாசன் நடிப்பில் உருவான ஆளவந்தான் படம் 2001-ம் ஆண்டு இந்தியில் அபய் என்ற பெயரில் தயாரிக்கப்பட்டது. அந்த இந்தி படத்தை பார்த்த பிரபல ஆலிவுட் டைரக்டர் கியூன்டின் டரன்டினோ பிரமித்து போனார். ஆளவந்தான் படத்தில் வரும் காட்சிகள் போல இதுவரை எந்த படத்திலும் பார்த்தது இல்லை என்று மனம் திறந்து பாராட்டினார். 2003-ம் ஆண்டு அவர் இயக்கிய கில்பில் (வால்யூம்-1) என்ற படத்தில் ஆளவந்தான் போன்று அவர் காட்சிகளை அமைத்தார். தமிழ் படத்தின் காட்சிகளை பார்த்து ஆலிவுட் இயக்குனர் ஒருவர் அதே போன்று வைத்தது இதுவே முதல் தடவையாகும்.

5. கமல்ஹாசன் நடிப்பில் 1987-ம் ஆண்டு வெளியான “நாயகன்” படம் உலக தமிழர்கள் அனைவரிடமும் மிகுந்த வரவேற்பை பெற்றது. அந்த படம் மக்கள் மனதில் பதிந்த படம் என்று டைம்மேக்கசின் புகழாரம் சூட்டியது. 1997-ம் ஆண்டு உலகின் சிறந்த நூறு திரைப்படங்களை டைம் இதழ் பட்டியலிட்டது. அதில் கமல்ஹாசனின் “நாயகன்” படம் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
6. பொதுவாக நடிகர்-நடிகைகளுக்கு இரண்டு அல்லது மூன்று மொழிகள் தெரிந்து இருக்கும். ஆனால் கமல்ஹாசனுக்கு தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு, ஆங்கிலம் ஆகிய 6 மொழிகளில் சரளமாக பேச தெரியும். இதில் தமிழ், இந்தி, மலையாளம், கன்னடம், தெலுங்கு ஆகிய 5 மொழிகளில் அவர் நடித்த படங்கள் வெளியாகி வெள்ளி விழாக்கள் கொண்டாடி உள்ளன. இந்திய நடிகர்களில் யார் படமும் இப்படி 5 மொழிகளில் வெளியாகி வெற்றி பெற்றது இல்லை. அந்த வகையில் கமல்ஹாசனின் சாதனை இதுவரை எந்த நடிகராலும் முறியடிக்க முடியாத தேசிய சாதனையாக உள்ளது.
7. கமல்ஹாசன் நடிப்பில் 2008-ம் ஆண்டு வெளியான தசாவதாரம் படத்தில் அவர் 10 வேடங்களில் நடித்து இருந்தார். 10 மாறுபட்ட வேடங்களில் கமல் நடித்தது உலக அளவில் பேசப்பட்டது. இன்று வரை அந்த சாதனையை எந்த நடிகராலும் உடைக்க முடியவில்லை.
8. நடிகர்கள் பொதுவாக உடல் உறுப்பு தானம் செய்வது இல்லை. ஆனால் கமல்ஹாசன் உடல் உறுப்பு தானத்தை தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். தனது மறைவுக்கு பிறகு தனது உடல் உறுப்புகளை சென்னை மருத்துவமனைக்கு தானமாக வழங்குவதாக உறுதி அளித்துள்ளார்.
9. நல்ல பணிகளை செய்ய வேண்டும் என்பதில் கமல்ஹாசனுக்கு எப்போதுமே ஆர்வம் உண்டு. தான் மட்டும் அந்த பணிகளை செய்யாமல் தனது ரசிகர்களையும் நற்பணிகளை செய்ய வைத்த தனி சிறப்பு அவருக்கு உண்டு. தனது ரசிகர்கள் தங்களால் முடிந்ததை ஏழை-எளியவர்களுக்கு தொடர்ந்து செய்ய வேண்டும் என்று கமல்ஹாசன் வலியுறுத்தி உள்ளார். தமிழ் நடிகர்களில் ரசிகர்களை நற்பணியில் இறக்கிய முதல் நடிகர் கமல்ஹாசன்தான்.
10. நடிப்புக்காக கமல்ஹாசனுக்கு இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள் கிடைத்துள்ளன. சிறந்த நடிகருக்கான விருதை அவர் ஏராளமான முறை பெற்றுள்ளார். பிலிம்பேர் பத்திரிகை மட்டும் 19 தடவை கமல்ஹாசனுக்கு சிறந்த நடிகருக்கான விருதை வழங்கி உள்ளது. 19-வது தடவை அவர் விருது பெற்ற பிறகு, “இனி வேறு இளம் நடிகர்களுக்கு சிறந்த நடிகருக்கான விருதை தாருங்கள். எதிர்காலத்தில் எனக்கு மீண்டும் மீண்டும் அந்த விருதை தர வேண்டாம்” என்று அன்போடு கேட்டுக் கொண்டார்.
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை பிரபல தெலுங்கு நடிகர் வெளியிட உள்ளார்.
ரஜினிகாந்தின் 167-வது படமாக வெளிவரும் படம் தர்பார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் இந்த படத்தில் ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார். மூன்றுமுகம், பாண்டியன் படங்களை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு ரஜினி போலீஸ் அதிகாரியாக நடிப்பதால் படத்துக்கு எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. நயன்தாரா நாயகியாக நடிக்கிறார். பிரதிக் பாபர், தலீப் தாஹில், ஜதின் சர்னா, யோகி பாபு, நிவேதா தாமஸ் என பலர் நடித்துள்ளனர். தளபதி படத்திற்கு பின் ரஜினிகாந்த் படத்திற்கு சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
நேற்று மாலை தர்பார் இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ், தனது டுவிட்டர் பதிவில் “தர்பார் படத்தின் மோஷன் போஸ்டரை நவம்பர் 7 அன்று இந்திய சினிமாவின் முக்கிய புள்ளிகள் வெளியிடுகிறார்கள். தமிழில் கமல்ஹாசன், இந்தியில் சல்மான்கான், மலையாளத்தில் மோகன்லால் என முப்பெரும் பிரமுகர்கள் வெளியிட இருக்கிறார்கள். தலைவரை மோஷன் போஸ்டரில் பார்க்கவும், அனிருத்தின் தீம் மியூசிக்கை கேட்கவும் தயாராகுங்கள்” என்று பதிவிட்டிருந்தார்.

இன்று தர்பார் பட தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ள பதிவில் தெலுங்கு வீடியோ போஸ்டரை மகேஷ் பாபு வெளியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தர்பார் வீடியோ போஸ்டர் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியாகிறது.
தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் அஜித்துக்கு, பிரபல நடிகை ஒருவர் முத்தம் கொடுக்க விருப்பம் இருப்பதாக நிகழ்ச்சி ஒன்றில் கூறியுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் பாலியல் புகார் கூறி பிரபலமானவர் நடிகை ஸ்ரீரெட்டி. இவர் சென்னையில் தங்கியிருந்து தமிழ் படங்களில் நடிக்க ஆரம்பித்துள்ளார். சமீபத்தில் ஒரு பேஷன் ஷோவில் பங்குபெற்றார். அப்போது அவரிடம் நீங்கள் திரையுலகில் மனதார ஒருவருக்கு முத்தம் கொடுக்க விரும்பினால் யாருக்கு முத்தம் கொடுப்பீர்கள் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் அஜித்துக்கு என்று பதில் அளித்துள்ளார். எந்த காமமும் இல்லாமல் அவருக்கு மனதார முத்தம் கொடுக்க விரும்புகிறேன். காரணம் அவர் நடித்த நேர்கொண்ட பார்வை படம் தான். அதில் வரும் 3 பெண்களுக்காக அவர் போராடியுள்ளார், அதுபோல் நான் பல கஷ்டம் அடைந்துள்ளேன் என்று பேசியுள்ளார்.

அஜித் தன் படத்தின் படப்பிடிப்பு தவிர வேறு எந்த பொது நிகழ்ச்சிக்கோ, தன் பட இசை வெளியீட்டுக்கோ கூட வராதவர். அதனால் அஜித்தை வெளியே எங்காவது ரசிகர்கள் கண்டுவிட்டால் அவரை சுற்றி ஒரு பெரிய கூட்டம் உருவாகி விடும். அதோடு, அவர் சம்பந்தப்பட்ட எந்த போட்டோக்கள் என்றாலும் சமூக வலைதளங்களில் டிரெண்ட்டாகும்.
சைரா நரசிம்மா ரெட்டி படத்தை தொடர்ந்து சிரஞ்சீவி - திரிஷா இணைந்து நடிக்க இருக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகி இருக்கிறது.
சிரஞ்சீவி நடித்து சமீபத்தில் ரிலீசான படம் ‘சைரா நரசிம்மா ரெட்டி’. இந்த படத்தை சுரேந்தர் ரெட்டி இயக்கியிருந்தார். இதனை சிரஞ்சீவியின் மகன் நடிகர் ராம் சரண் மெகா பட்ஜெட்டில் தயாரித்திருந்தார்.
இதில் அமிதாப் பச்சன், சுதீப், விஜய் சேதுபதி, நயன்தாரா, ரவி கிஷன், ஜெகபதி பாபு, தமன்னா, என மிகப் பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இதனைத் தொடர்ந்து கொரட்டாலா சிவா இயக்கும் புதிய படத்தில் சிரஞ்சீவி நடிக்கவிருக்கிறார்.

சிரஞ்சீவிக்கு ஜோடியாக திரிஷா நடிக்கவுள்ளார். சமீபத்தில், இதற்கான பூஜை போடப்பட்டது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்துக்கான முன்னணி பணிகள் நடைபெற்று வருகிறது. தற்போது, படத்தின் ஷூட்டிங்கை வருகிற டிசம்பர் மாதம் முதல் வாரத்தில் துவங்கத் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தளபதி 64 படப்பிடிப்புக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளதாக வந்த செய்திக்கு படக்குழு விளக்கம் அளித்துள்ளது.
பிகில் படத்தைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் விஜய். சேவியர் பிரிட்டோ தயாரித்து வரும் இந்தப் படத்துக்கு அனிருத் இசையமைக்க, சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்து வருகிறார். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கியது. தற்போது டெல்லியில் படத்தின் முக்கியமான பாடல் ஒன்றை படமாக்கி வருகிறார்கள்.
தற்போது டெல்லியில் காற்று மாசு என்பது பெரும் பிரச்சினையாக இருக்கிறது. நேற்று காற்று மாசு குறைந்து, பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன. இந்த காற்று மாசால் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடைபெறவில்லை என்று தகவல்கள் வெளியாகின.

ஆனால், இதை படக்குழு மறுத்துள்ளது. சரியாகத் திட்டமிட்டவாறு காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை படப்பிடிப்பு நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. எவ்விதத் தடங்கலுமே இல்லாமல் ஷூட்டிங் போய்க் கொண்டிருக்கிறது. மாளவிகா மோகனனும் இதில் கலந்து கொண்டுள்ளார் என்று கூறியிருக்கிறார்கள்.
டெல்லி படப்பிடிப்பை முடித்துவிட்டு, மீண்டும் சென்னையில் படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இதில் விஜய் - விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்படும் என தெரிகிறது.
சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் படத்தில் நடித்திருக்கும் ஸ்ரீபிரியங்காவை தமிழக அமைச்சர் நேரில் அழைத்து பாராட்டி இருக்கிறார்.
சுரேஷ் காமாட்சி இயக்கி தயாரித்துள்ள மிக மிக அவசரம் என்ற படத்தில், பெண் கான்ஸ்டபிள் வேடத்தில் நடித்துள்ளார் ஸ்ரீபிரியங்கா. சினிமாவுக்கு வந்து 5 வருடங்களுக்கு மேலாகி விட்டது என்றாலும், நினைத்த இடத்துக்கு இன்னும் வர முடியவில்லை என்று கூறியுள்ளார்.
இப்படம் நவம்பர் 8ம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில், தமிழக செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ இப்படத்தை பார்த்திருக்கிறார். பெண் காவலரை நடிப்பில் கொண்டு வந்திருப்பதாக கூறி ஸ்ரீ பிரியங்காவை நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்திருக்கிறார். அப்போது, ஸ்ரீபிரியங்காவின் பெற்றோரும் உடனிருந்தனர்.
சூரரைப்போற்று படத்திற்குப் பிறகு பிரபல இயக்குனர் இயக்கும் படத்தில் மூன்றாவது முறையாக சூர்யா இணைந்து நடிக்க இருக்கிறார்.
காப்பான் படத்திற்குப் பிறகு சூர்யா நடிப்பில் தற்போது ‘சூரரைப்போற்று’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தை சுதா கொங்காரா இயக்கி உள்ளார். ஜிவி.பிரகாஷ் இசையமைக்கிறார்.
இப்படத்தை அடுத்து ஹரி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது. இந்நிலையில், கவுதம் மேனன் இயக்கத்தில் சூர்யா நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சூர்யா - கவுதம் மேனன் இணையும் புதிய படத்தை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க இருக்கிறது.

சூர்யா - கவுதம் மேனன் கூட்டணியில் இதற்கு முன் ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ ஆகிய படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கத்தில் ஜோதிகா - கார்த்தி நடிக்கும் படத்தின் தலைப்பு பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
பாபநாசம் படத்தை இயக்கிய ஜித்து ஜோசப் இயக்கும் புதிய படத்தில் கார்த்தி நாயகனாக நடித்து வருகிறார். கார்த்தியின் அக்காவாக ஜோதிகா நடிக்கிறார். இவர்களுடன் சத்யராஜ், அன்சன் பால், நிகிலா விமல், சவுகார் ஜானகி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.
திரில்லர் கதையாக உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்தது. தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வரும் நிலையில், இப்படத்திற்கு ‘தம்பி’ என்று பெயர் வைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. விரைவில் இப்படத்தின் தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட இருக்கிறது.

இப்படத்திற்கு கோவிந்த் வசந்தா இசை அமைக்கிறார். தமிழ் மற்றும் தெலுங்கில் வரும் டிசம்பர் 20ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.






