என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ஸ்ரீ பிரியங்கா, சீமான், கோரிப்பாளையம் ஹரிஷ் நடிப்பில் சுரேஷ் காமாட்சி இயக்கத்தில் வெளியாகியுள்ள மிக மிக அவசரம் படத்தின் விமர்சனம்.
    பவானி ஆற்றங்கரையில் நடைபெறும் முக்கூட்டு திருவிழா. அந்த விழாவுக்கு வெளிநாட்டை சேர்ந்த ஒரு மந்திரி வருவதால் பாதுகாப்புக்கு பெண் போலீசான ஸ்ரீபிரியங்கா நிறுத்தப்படுகிறார். அவரை அடைய துடிக்கும் இன்ஸ்பெக்டரான முத்துராமன் அவரை பழிவாங்குவதற்காக ஒரு பாலத்தின் நடுவில் நிறுத்தி விடுகிறார். 

    நேரம் ஆக ஆக ஸ்ரீபிரியங்காவுக்கு சிறுநீர் கழிக்க வேண்டிய நிர்ப்பந்தம் உண்டாகிறது. ஆனால் முத்துராமனின் பழிவாங்கலால் அவரால் சிறு ஓய்வு கூட எடுக்க முடியாத சூழல். சக போலீஸ்காரர்களான ஈ.ராம்தாஸ், வீகே.சுந்தர், சரவண சக்தி ஆகியோராலும் எதுவும் செய்ய முடியாத சூழல். கடும் உடல் உபாதைக்கு ஆளாகும் ஸ்ரீ பிரியங்கா என்ன ஆகிறார் என்பதே கதை.

    மிக மிக அவசரம்

    வேறு எந்த நாயகியும் ஏற்றுக்கொள்ள தயங்கும் ஒரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் ஸ்ரீ பிரியங்கா. முதல் பாதியில் சாதாரணமாக தொடங்குபவர் நேரம் செல்ல செல்ல தனது அவஸ்தைகளை ரசிகர்களிடம் தன் நடிப்பால் கடத்துகிறார். விருதுக்கு உரிய நடிப்பு. கிளைமாக்ஸ் நெருங்க நெருங்க ஸ்ரீ பிரியங்காவின் துன்பத்தை எண்ணி நம் கண்கள் கலங்குகின்றன. தமிழ் பெண்ணான ஸ்ரீ பிரியங்கா ஒட்டுமொத்த பெண் போலீசுக்கே பெருமை சேர்த்து இருக்கிறார்.

    ஸ்ரீ பிரியங்காவுக்கு செக்ஸ் டார்ச்சர் கொடுக்கும் இன்ஸ்பெக்டராக வழக்கு எண் முத்துராமன். பார்வையாலேயே வில்லத்தனத்தில் கலக்கி இருக்கிறார். அவரது சதி செயல்கள் பதைபதைப்பை ஏற்படுத்துகின்றன. சீரியசான படத்தை கலகலப்பாக நகர்த்துவது ஈ.ராம்தாஸ் தான். சக போலீஸ்காரராக தனது ஒருவரி பன்ச் வசனங்களால் கைதட்ட வைக்கிறார். இயல்பான நடிப்பு அனுபவத்தை காட்டுகிறது. 

    மிக மிக அவசரம்

    டிரைவராக வரும் வீகே.சுந்தர் தனது நடிப்பால் எதிர்பார்ப்பை ஏற்படுத்துகிறார். சரவண சக்தியும் சிரிக்க வைக்கிறார். சக போலீசுக்கே உதவ முடியாத நிலையை மூவருமே இயல்பாக பிரதிபலிக்கிறார்கள். ஸ்ரீ பிரியங்காவின் காதலராக ஹரிஷ் குமாரும் தன் பங்கை சிறப்பாக செய்துள்ளார். காதலிக்காக ஆம்புலன்சை எடுக்க முயற்சிக்கும்போது வேலை தடுக்கவே கடமைக்கு முக்கியத்துவம் தரும் இடத்தில் நெகிழ வைக்கிறார். 

    சீமான் கம்பீரமான நடிப்பால் கவர்கிறார். அரவிந்தன் அகதிகளின் நிலையை விளக்கும்போது வலிக்கிறது. லிங்கா, வெற்றிகுமரன், குணசீலன், பேபி சனா ஜெகன் ஆகியோரும் தங்களது கதாபாத்திரங்களை சிறப்பாக நடித்துள்ளார்கள். 

    தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட முயற்சிகள் ஒரு பக்கம் இருந்தாலும் சமூகத்தில் இயல்பாக நடக்கும் சம்பவங்களை அதன் பின்னணியுடன் சொல்லும் படங்களும் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெறும். அப்படி இதுவரை தமிழ் சினிமாவில் காமெடியாக மட்டுமே பார்க்கப்பட்ட பெண் காவலர்கள் தங்கள் பணியில் படும் அவதிகளையும் சந்திக்கும் பிரச்சினைகளையும் தனது முதல் படத்திலேயே அழுத்தமாக பதிவு செய்து இருக்கிறார் இயக்குனர் சுரேஷ் காமாட்சி. இப்படி ஒரு கதையை தேர்ந்தெடுத்ததற்காக அவருக்கு பாராட்டுகள். 

    மிக மிக அவசரம்

    இஷானின் இசையும் பாலபரணியின் ஒளிப்பதிவும் படத்துக்கு பலம் சேர்க்கின்றன. எளிதில் கடந்து செல்லும் பெண் போலீசாரின் வாழ்க்கைக்குள் நுழைந்துவந்த உணர்வை கதை வசனம் எழுதிய ஜெகனும் திரைக்கதை எழுதி இயக்கிய சுரேஷ் காமாட்சியும் ஏற்படுத்தி இருக்கின்றனர். 

    முக்கிய பாலங்களில் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டு இருக்கும் போலீஸ்காரர்களை பார்த்தால் நாம் இயல்பாக கடந்து செல்வோம். இனி அப்படி கடக்க முடியாது. இது ஒன்றே இந்த மிக மிக அவசரம் நெற்றிப்பொட்டில் அடித்து சொல்லும் உண்மை.

    மொத்தத்தில் மிக மிக அவசரம் - மிக மிக அவசியமான ஒரு படைப்பு.
    காதலில் விரக்தியடைந்திருக்கும் இலியானா, இனிமேல் யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை என்று பேட்டியளித்துள்ளார்.
    தமிழில் நண்பன் படத்தில் நடித்து பிரபலமான இலியானா இந்தியில் முன்னணி நடிகையாக இருக்கிறார். இலியானாவுக்கும் ஆண்ட்ரூ என்பவருக்கும் நீண்ட நாட்களாக இருந்த காதல் இப்போது முறிந்துள்ளது.

    இலியானா அளித்த பேட்டி வருமாறு:-

    இனிமேல் யாரையும் காதலிக்க நான் தயாராக இல்லை. இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். என் வாழ்க்கை முறையை மாற்றி புதிய வழியில் வாழப்போகிறேன். உங்கள் மீது அக்கறையோடு இருங்கள். வாழ்க்கை எப்போதும் ஒரே மாதிரி இருக்காது. சில நேரம் மற்றவர்களை நம்ப வேண்டி வரும். அந்த நேரத்தில் அவர்கள் மீது சார்ந்து இருக்க நினைப்போம். ஆனால் வாழ்நாள் முழுவதும் அவர்கள் நம்மோடு இருப்பார்களா? என்பது தெரியாது. நாம் மட்டும் மனப்பூர்வமாகவும், கண்மூடித்தனமாகவும் நம்பி அவர்களை அனுசரிப்போம். அப்படி இருக்க கூடாது. நம்மை பற்றி அதிகம் யோசிக்க வேண்டும்.

    இலியானா

    வாழ்க்கையில் எது நடந்தாலும் முதலில் நமக்காக இருப்பது நாம் மட்டும்தான். அதனால் என்மீது நான் அதிக அக்கறை எடுக்கிறேன். உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் என்னை நன்றாக வைத்துக்கொள்கிறேன். இது நமது வாழ்க்கை. நாம்தான் பாதுகாக்க வேண்டும் என்று முடிவு செய்து விட்டேன்”.

    இவ்வாறு இலியானா கூறினார்.
    கே.பாலசந்தர் சிலையை திறந்து வைத்து பேசிய ரஜினி, கமல் நடித்த அந்த படத்தை 30, 40 தடவை பார்த்திருப்பேன் என்று கூறியிருக்கிறார்.
    சென்னை ஆழ்வார்பேட்டையில் செயல்பட்டு வரும் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலையை ரஜினி, கமல் இருவரும் சேர்ந்து திறந்து வைத்தனர்.

    இவ்விழாவில் ரஜினி பேசும்போது, ‘கமலின் கலையுலக தகப்பனார், என்னுடைய குரு கே.பாலசந்தர் சிலையை ராஜ்கமல் அலுவலகத்தில் திறந்து வைத்திருக்கிறார் கமல். அழகான, பிரம்மாண்டமான அலுவலகம். கமல் அரசியல் வந்தால் கூட தாய் வீடான சினிமாவை விடமாட்டார். கமலுக்கு கலை உயிர், எங்கு சென்றால் அதை மறக்கமாட்டார். 

    ராஜ்கமல் தயாரிப்பில் எனக்கு மிகவும் பிடித்தது அபூர்வ சகோதரர்கள். இந்த படத்தை இரவு 2 மணிக்கு பார்த்து முடித்து கமல் வீட்டிற்கு சென்று எழுப்பி கைகொடுத்து வாழ்த்தினேன். அவர்கள் தயாரித்த அடுத்த படமான தேவர் மகன் ஒரு காவியம். கமல் எவ்வளவு சிந்தனை செய்து அந்த படத்தை எடுத்திருப்பார். 

    ரஜினி - கமல்

    எனக்கு போர் அடித்தால் அடிக்கடி காட்பாதர், திருவிளையாடல், ஹேராம் படங்களை பார்ப்பேன். இதுவரை ஹேராம் படத்தை 30, 40 முறை பார்த்திருப்பேன். 

    கே.பாலசந்தர் சிலையை திறந்தவுடன் வார்த்தைகள் சொல்ல முடியவில்லை. பெரிய மகான் நம்முடன் இல்லை. சிலையை பார்க்கும் போது அவருடன் நான் இருந்த ஞாபகங்கள் கண்முன் வந்து நிற்கிறது. 

    தமிழ் மட்டும் கற்றுக் கொள். நான் உன்னை எங்கு கொண்டுபோய் உட்கார வைக்கிறேன் பார் என்று கே.பாலசந்தர் என்னிடம் சொன்னார். அவருக்கு மிகவும் பிடித்த குழந்தை கமல். அவர் மீது அபார பிரியம், தூரத்தில் இருந்து கமலை ரசித்துக் கொண்டே இருப்பார்’ என்றார்.
    சென்னை ஆழ்வார் பேட்டையில் இருக்கும் ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் கே.பாலசந்தர் சிலையை ரஜினிகாந்த், கமல்ஹாசன் இருவரும் திறந்து வைத்தனர்.
    சென்னை ஆழ்வார்பேட்டையில் ராஜ்கமல் நிறுவனத்தின் புதிய அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில் இயக்குநர் கே.பாலச்சந்தரின் சிலை திறப்பு விழா இன்று நடைபெற்றது.

    இந்த விழாவில், நடிகர் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் இணைந்து இயக்குநர் கே.பாலச்சந்தரின் மார்பளவு சிலையை திறந்து வைத்தனர். 

    கே.பாலசந்தர் விழா

    கமலுக்கு சொந்தமான ராஜ்கமல் நிறுவனம், ராஜபார்வை, விக்ரம், சத்யா, அபூர்வ சகோதரர்கள், தேவர் மகன், குருதிப்புனல், ஹேராம், விஸ்வரூபம், தூங்காவனம், சமீபத்தில் வெளியான கடாரம் கொண்டான் உள்ளிட்ட படங்களை தயாரித்திருக்கிறார்கள்.
    தமிழில் பல படங்களில் நடித்து மிகவும் பிரபலமான நடிகை ஆண்ட்ரியா எழுதிய புக்கை வெளியிடாமல் தடுக்க மிரட்டல் விடுத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தமிழில் ஆயிரத்தில் ஒருவன், மங்காத்தா, விஸ்வரூபம், அரண்மனை, உத்தம வில்லன், துப்பறிவாளன், வடசென்னை உள்பட பல படங்களில் நடித்து முன்னணி நடிகையாக இருக்கும் ஆண்ட்ரியா சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சியொன்றில் பேசும்போது, “திருமணமான ஒருவருடன் தகாத உறவு ஏற்பட்டு மன ரீதியாகவும் உடல் ரீதியாகவும் துன்புறுத்தலுக்கு ஆளானேன் என்றும் இப்போது ஆயுர்வேத சிகிச்சை பெற்று மீண்டு வந்து இருக்கிறேன் என்றும் கூறினார்.

    தன்னை மோசம் செய்தது யார்? என்ற தகவலை, தான் எழுதும் புத்தகத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் தெரிவித்தார். அந்த புத்தகம் சில வாரங்களுக்கு முன்பே வெளியாகும் என்று எதிர்பார்த்து இதுவரை வெளிவரவில்லை. புத்தகத்தை வெளியிடக் கூடாது என்று திருமணமான முன்னாள் காதலர் ஆண்ட்ரியாவை மிரட்டுவதாகவும் தகவல் வெளியானது.

    ஆண்ட்ரியா

    அந்த நபர் அரசியலில் தொடர்பு உள்ளவர் என்றும் தற்போது சினிமாவில் இருப்பதாகவும் கூறப்படுகிறது. எதிர்ப்பை மீறி புத்தகத்தை வெளியிடும் முயற்சியில் ஆண்ட்ரியா ஈடுபட்டார். ஆனாலும் புத்தகம் வெளியாகவில்லை. அவருக்கு மீண்டும் மிரட்டல்கள் வந்து இருப்பதாக சமூக வலைத்தளத்தில் தகவல் பரவி வருகிறது.

    நிகழ்ச்சி ஒன்றில் கலந்துக் கொண்ட இசையமைப்பாளர் தேவா, நான் இசையமைத்த முதல் 13 படங்கள் வெளிவரவில்லை என்று கூறியிருக்கிறார்.
    சுருதி சீசன் 2 ஆன்லைன் பாட்டு போட்டி தொடக்க நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. இதில் இசையமைப்பாளர் தேவா கலந்து கொண்டு மலரும் நினைவுகளை பகிர்ந்தார். அவர் பேசியதாவது:-

    “முன்பெல்லாம் பாடகர்கள் கேசட்டில் ஏதேனும் ஒரு பாடலை பாடி பதிவு செய்து இசையமைப்பாளர்களிடம் கொடுத்து வாய்ப்பு கேட்பார்கள். இப்போது யார் வேண்டுமானாலும் பாடலாம். திறமை இருப்பவர்கள் முன்னுக்கு வருகிறார்கள். முந்தையை காலத்தில் வாய்ப்புகள் கிடைப்பது கஷ்டம். நான் ஆரம்பத்தில் தூர்தர்ஷன் அலுவலகத்தில் அங்கு வருபவர்களுக்கு நாற்காலி எடுத்து போடும் வேலை பார்த்தேன்.

    40-வது வயதில்தான் சினிமாவுக்கு வந்தேன். என் முதல் படத்துக்கு ஒப்பந்தம் செய்த தயாரிப்பாளர் ஒரு பாடகர் புல்லட்டில் வருவார். அவர் எப்படி பாடினாலும் நன்றாக இருக்கிறது என்று சொல்ல வேண்டும். அவர் பணம் கொடுத்துத்தான் ரிக்கார்டிங்கே நடக்கிறது என்றார். புல்லட்டில் வந்தவர் பெரிய மளிகை கடை வைத்து இருந்தார். அவர் நான் ஒரு முட்டாளுங்க என்ற பாடலை பாடினார். நானும் தயாரிப்பாளர் சொன்னதுபோல் மனசாட்சியை விற்று ரொம்ப நன்றாக இருக்கிறது என்று அவரை பாராட்டினேன்.

    இசையமைப்பாளர் தேவா

    அந்த தயாரிப்பாளர் எனக்கு நிறைய பணம் தருவார் என்று எதிர்பார்த்தேன். ஆனால் வெறும் எட்டணா கொடுத்தார். தேங்காய் சீனிவாசன் அந்த படத்துக்கு கதாநாயகன். ஆனால் படம் வெளிவரவில்லை. இப்போது முன்னுக்கு வர துடிப்பவர்களுக்கு நாங்கள் எவ்வளவு கஷ்டப்பட்டு வந்தோம் என்பது தெரிவதற்காக இதை சொல்கிறேன்.

    ஆரம்ப காலத்தில் நான் இசையமைத்த 13 படங்கள் திரைக்கு வரவில்லை. 14-வது படம்தான் ரிலீசானது’ என்றார்.
    பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா, ஐஸ்கிரீம் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு மீண்டும் சர்ச்சையில் சிக்கி இருக்கிறார்.
    நடிகை பிரியங்கா சோப்ரா சமீபத்தில் டெல்லி காற்று மாசுவால் கவலைப்பட்டு முகத்தில் முகமூடி அணிந்த புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். அதில் “காற்று மாசு ஏற்பட்டுள்ளதால் எப்படி வாழமுடியும். காற்று சுத்திகரிப்பும் முகமூடியும் நமக்கு தேவையாக இருக்கிறது. வீடு இல்லாதவர்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்” என்று குறிப்பிட்டு இருந்தார். 

    இந்த புகைப்படம் சர்ச்சையை ஏற்படுத்தியது. “புகைப்பிடிக்கும் உங்கள் வாய்க்கு முகமூடி போட்டது சரியான செயல்தான். காற்று மாசு குறித்து இரட்டை வேடம் போட வேண்டாம். காற்று மாசு பற்றி பேசுவதற்கு முன்னால் புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்” என்றெல்லாம் அவரை விமர்சித்தனர்.

    பிரியங்கா சோப்ரா

    இந்த நிலையில் பிரியங்கா சோப்ரா டுவிட்டர் பக்கத்தில் புதிதாக வெளியிட்டுள்ள ஐஸ்கிரீம் படமும் சர்ச்சையை கிளப்பி உள்ளது. வரிசையாக அடுக்கி வைத்த 500 ரூபாய் நோட்டுகளுக்கு மத்தியில் ஐஸ்கிரீமை வைத்து பிரியங்கா சோப்ரா சாப்பிடுவதுபோல் அந்த புகைப்படம் உள்ளது.

    சாப்பாட்டுக்கு வழி இல்லாத ஏழைகள் வாழும் நாட்டில் 500 ரூபாய்களுக்குள் ஐஸ்கிரீமை வைத்து சாப்பிடுவதா? காந்திஜி புகைப்படம் பதித்த ரூபாய் நோட்டை ஐஸ்கிரீமுக்குள் வைத்து அவமதித்த செயல் கண்டிக்கத்தக்கது என்று கருத்துக்கள் பதிவிடுகிறார்கள். இன்னும் சிலர் அது போலியான 500 ரூபாய் நோட்டு என்று பிரியங்காவுக்கு ஆதரவாக பேசுகின்றனர்.
    திரை உலகில் 50 ஆண்டுகள் நிறைவு செய்த நிலையில், நடிகர் அமிதாப்பச்சன் தனது உடல்நிலை குறித்து ரசிகர்களுடன் உருக்கமான தகவல்களை பகிர்ந்து கொண்டு உள்ளார்.
    இந்தி சினிமா சூப்பர் ஸ்டார் நடிகர் அமிதாப்பச்சன் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தநிலையில் திரையுலகத்திற்கு அவர் வந்து நேற்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைந்து உள்ளது. அவர், நடித்த முதல் படம் ‘‘சாத் இந்துஸ்தானி’’. இந்த படம் கடந்த 1969-ம் ஆண்டு நவம்பர் 7-ந்தேதி வெளியானது. 50 ஆண்டுகள் கடந்த பிறகும் இந்தி சினிமாவில் அமிதாப் பச்சனின் ஆதிக்கம் இன்னும் தொடருகிறது.

    அவரது 50 ஆண்டுகால திரையுலக சாதனையை கொண்டாடும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகள் அவரது ரசிகர்களால் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் அவர் நேற்று தனது உடல்நலம் குறித்த உருக்கமான தகவல்களை ரசிகர்களுடன் பகிர்ந்துகொண்டார். அதில், டாக்டர்கள் தன்னை ஓய்வு எடுக்குமாறு அறிவுறுத்தி இருப்பதாக அமிதாப்பச்சன் கூறியுள்ளார்.

    அமிதாப் பச்சன்

    இது குறித்து அவர் தனது இணையதள பக்கத்தில் கூறியிருப்பதாவது:- எனது உடலில் பல துளைகள் போடப்பட்ட நிலையில் தற்போது சோனோகிராபியும் எடுக்கப்படுகிறது. சில ஊசிகளும் பக்கவாட்டில் குத்தப்பட்டுள்ளன. நரம்புகளில் ஊசிகள் குத்தப்பட்டு மருந்துகளும் ஏற்றப்படுகின்றன. வேலை பளுவை குறைத்து கொள்ளுமாறு சொர்க்கத்தில் இருந்து வந்த ஸ்டெதஸ்கோப் அணிந்த தூதர்கள் கடும் எச்சரிக்கை விடுத்து உள்ளனர்.

    இவ்வாறு அதில் அவர் உருக்கமாக கூறியுள்ளார்.

    நடிகர் அமிதாப்பச்சனுக்கு இந்தியாவில் சினிமா கலைஞர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய தாதாசாகிப் பால்கே விருது அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
    பாலிவுட் நடிகையான சன்னி லியோன், அடுத்ததாக கோர் எனும் படத்தில் சூப்பர் வுமன் கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார்.
    ஆபாச படங்களில் நடித்து கொண்டிருந்த சன்னி லியோன் ஒரு கட்டத்தில் சினிமாவில் நடிக்க வந்து கவர்ச்சி வேடங்களில் நடித்து வருகிறார். இந்தியில் தொடங்கி  தமிழ், தெலுங்கு, மலையாள படங்கள் வரை நடித்துவிட்டார். தான் நடிக்கும் படத்தின் கதைக்காக தனது கணவர் டேனியல் வெப்பருடன் கைகோர்த்தார். இருவரும் மணிக்கணக்கில் ஒன்றாக அமர்ந்து கலந்துபேசி கதையை முடிவு செய்தனர். 

    சன்னி லியோன்

    படத்துக்கு கோர் என பெயரிடப்பட்ட நிலையில் அதற்கான வீடியோ ஒன்றை சன்னி வெளியிட்டிருக்கிறார். அதில், ‘கோர் இந்த கிரகத்தை சேர்ந்தவள் இல்லை. ஆனாலும் தீய சக்திகளிடமிருந்து உலகை காக்க தயாராக இருக்கிறாள்’ என தெரிவித்துள்ளார். கோர் கதாபாத்திரம் பற்றி சன்னி லியோன் கூறும்போது, ‘சூப்பர்வுமன் கதையை நானும் எனது கணவர் டேனியல் வெப்பரும் இணைந்து உருவாக்கி னோம். அந்த வகையில் கோர் கதாபாத்திரம் தீய சக்திகளை அழிக்க வருகிறது’ என்றார்.
    தமிழ், தெலுங்கு, இந்தி என அனைத்து மொழி படங்களிலும் நடித்து வரும் ரகுல் பிரீத் சிங், ராணாவுடனான காதல் கிசுகிசு குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ரகுல் பிரீத் சிங். அவர் பாகுபலி நடிகர் ராணாவை காதலிக்கிறார் என்று கிசுகிசுக்கப்பட்டது. சமீபத்தில் தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ரகுல் பிரீத் சிங் இதற்கு விளக்கமளித்துள்ளார் 

    அவர் கூறியுள்ளதாவது: “எங்கள் இருவரது வீடும் மிக அருகில் தான் உள்ளது. நான் சினிமாவுக்கு வந்ததில் இருந்தே ராணாவை தெரியும். நாங்கள் நண்பர்களாக மட்டுமே பழகி வருகிறோம். நான் சிங்கிள் தான். இதுவரை யாரையும் காதலித்ததில்லை. அதற்கு நேரமும் இல்லை” என கூறியுள்ளார்.

    ரகுல் பிரீத் சிங்

    ரகுல் பிரீத் சிங் தமிழில் யுவன், தடையறத்தாக்க, புத்தகம், என்னமோ ஏதோ, ஸ்பைடர், தீரன், தேவ், என்ஜிகே ஆகிய படங்களில் நடித்துள்ளார். சிவகார்த்திகேயனின் எஸ்.கே. 14, இந்தியன் 2 ஆகிய திரைப்படங்களில் தற்போது நடித்து வருகிறார்.
    'ஆதித்ய வர்மா' படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்ட போது தான் நடிகன் என்பதையே மறந்துவிட்டதாக நடிகர் விக்ரம் கூறியுள்ளார்.
    'ஆதித்ய வர்மா' படத்தின் மலையாள பதிப்புக்கான விளம்பரப்படுத்தும் நிகழ்ச்சி நேற்று கேரளாவில் நடைபெற்றது. இதில் விக்ரம், துருவ் விக்ரம் மற்றும் பிரியா ஆனந்த் மூவரும் கலந்து கொண்டனர். அப்போது பத்திரிகையாளர்கள் முன்னிலையில் விக்ரம் பேசும்போது, '' 'ஆதித்ய வர்மா' எனக்கு படம் தயாரிக்கும், இயக்கும் அனுபவத்தை தந்தது. 

    சில நாட்கள் இதன் படப்பிடிப்பில் நான் நடிகன் என்பதையே மறந்துவிடுவேன். துருவ்வின் டப்ஸ்மாஷ் வீடியோவை பார்த்துவிட்டு முகேஷ்தான் எங்களை அணுகினார். துருவ் வயதில் சிறியவர் என்பதால் என் மனைவிதான் சற்று யோசித்தார். ஆனால் படத்தை பார்த்த பின் அவர் நடிகனாக ஆரம்பிக்க இதுவே சரியான படம் என்று நினைத்தேன். 

    பிரியா ஆனந்த், விக்ரம், துருவ்

    படத்தின் கதை, துருவ்வின் நடிப்பு குறித்து நான் நம்பிக்கையாக இருக்கிறேன். ஆனால் தன் மகன் பள்ளிக்கூடப் போட்டியில் மேடையேறும்போது ஒரு தந்தைக்கு எப்படிப் படபடப்பாக இருக்குமோ அப்படி எனக்கு இருக்கிறது'' என்று விக்ரம் பேசினார். 'ஆதித்ய வர்மா' படத்திற்கு தணிக்கை குழு ‘A' சான்றிதழ் வழங்கியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 21-ந் தேதி திரைக்கு வருகிறது.
    நடிகர் விஜய் சேதுபதி அடுத்ததாக நடிக்கும் படத்திற்கு மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நடிகர் விஜய் சேதுபதி அடுத்தடுத்து படங்களில் பிசியாக நடித்து வருகிறார். இவர் கைவசம் லாபம், க/பெ ரணசிங்கம், மாமனிதன், தளபதி 64, கடைசி விவசாயி, முரளிதரனின் வாழ்க்கை வரலாற்று படம் என அரை டஜன் படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் விஜய் சேதுபதியின் 33வது படமான ’யாதும் ஊரே யாவரும் கேளிர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இப்படத்தை லாபம் பட இயக்குனர் ஜனநாதனின் உதவி இயக்குநர் வெங்கட கிருஷ்ணா இயக்குகிறார்.

    விஜய் சேதுபதி

    சந்திரா ஆர்ட்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் ஹீரோயினாக முதலில் அமலா பால் நடிப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் மேகா ஆகாஷ் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி இசை கலைஞராக நடிக்கும் இப்படத்திற்கு, மூன்று இசையமைப்பாளர்கள் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விஜய் சேதுபதி நடித்துள்ள சங்கத்தமிழன் படம் வருகிற நவம்பர் 15-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
    ×