என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • திருச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெற்று வருகிறது.
    • இதை பொதுமக்கள், மாணவர்கள் என பலர் பார்வையிட்டு வருகின்றனர்.

    திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மைதானத்தில் "எங்கள் முதல்வர் எங்கள் பெருமை" என்கிற தலைப்பில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சி நடைபெறுகிறது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளை கொண்டாடும் வகையில் இந்த கண்காட்சியை தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என். நேரு ஏற்பாடு செய்யதிருந்தார்.

    இந்த புகைப்பட கண்காட்சியை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில், பள்ளி கல்வித்துறை அமைச்சரும், திருச்சி தெற்கு மாவட்ட செயலாளருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி முன்னிலையில் திரைப்பட நடிகர் பிரபு திறந்து வைத்து பார்வையிட்டார். தொடர்ந்து பொதுமக்கள், பள்ளி மாணவர்கள் என பலர் இந்த கண்காட்சியை பார்வையிட்டு வருகின்றனர்.

    இந்நிலையில், நடிகர் சிவகார்த்திகேயன் இன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்று புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டுள்ளார். அதன்பின்னர் பத்திரிகையாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த கண்காட்சியை பார்க்க வந்ததில் எனக்கு மகிழ்ச்சி. இதை பார்க்கும் பொழுது தெரிந்தது ஒரு விஷயம் தான் எவ்வளவு பெரிய உயரத்தை நாம் அடைய வேண்டுமோ அதற்கு நிறைய வலிகளையும் தியாகங்களையும் தாண்டி தான் வரவேண்டும் என்பது இதை பார்க்கும் பொழுது தெரிந்தது என்று கூறினார்.

    • நடிகர் விஜய் தற்போது ’லியோ’ திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    தமிழ் திரையுலகின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வரும் விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 'லியோ' திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் லலித் குமார் தயாரிக்க, அனிருத் இசையமைக்கிறார். இதில் அர்ஜுன், சஞ்சய் தத், திரிஷா, பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன், சாண்டி, மேத்யூ தாமஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஷோபா சந்திரசேகர் -விஜய்

    இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில், நடிகர் விஜய் தனது தாயார் ஷோபா சந்திரசேகரை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. 

    • நடிகர் அசோக் செல்வன் வளர்ந்து வரும் நடிகராக வலம் வருகிறார்.
    • இவர் தற்போது 'சபாநாயகன்' திரைப்படத்தில் நடித்துள்ளார்.

    தமிழில் சூதுகவ்வும் படத்தில் அறிமுகமாகி வித்தியாசமான கதைகளில் நடித்து வரும் அசோக் செல்வனுக்கு 'ஓ மை கடவுளே' திருப்புமுனை படமாக அமைந்து. சமீபத்தில் இவர் நடித்த 'நித்தம் ஒரு வானம்' திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.

    சபாநாயகன் போஸ்டர்

    இதைத்தொடர்ந்து இயக்குனர் சி.எஸ்.கார்த்திகேயன் இயக்கத்தில் அசோக் செல்வன் நடித்துள்ள திரைப்படம் 'சபாநாயகன்'. மேகா ஆகாஷ் கதாநாயகியாக நடித்துள்ள இப்படத்தில் கார்த்திகா, சாந்தினி மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். லியோன் ஜேம்ஸ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

    சபாநாயகன்

    இந்நிலையில், 'சபாநாயகன்' திரைப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் மற்றும் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இதனை நடிகர் சிவகார்த்திகேயன் தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார். காதல், காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்த டீசர் சமூக வலைதளத்தில் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருகிறது.



    • இயக்குனர் அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ‘செவ்வாய் கிழமை’.
    • இப்படத்தின் படப்பிடிப்பை அடுத்த மாதம் முடிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.

    'ஆர்.எக்ஸ்.100' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குனர் அஜய் பூபதி தற்போது 'செவ்வாய் கிழமை' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நடிகை பாயல் ராஜ்புத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். சுவாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மாவுடன் இணைந்து தயாரிப்பாளராக அறிமுகமாகியுள்ள அஜய் பூபதியின் இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

    பி அஜனீஷ் லோக்நாத் இசையமைக்கும் இப்படத்திற்கு தாசரதி சிவேந்திரா ஒளிப்பதி செய்கிறார். இந்நிலையில், இப்படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி, பாயல் ராஜ்புத் கதாபாத்திரமான 'ஷைலஜா' பாத்திரத்தின் முதல் தோற்ற போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இதில், கதாநாயகியின் தோரணையும் அவளது கண்களில் இருக்கும் கசப்பான உணர்ச்சியும், விரலில் இருக்கும் பட்டாம்பூச்சியும் போஸ்டரை மிகவும் சுவாரஸ்யமாக்குகிறது.


    ஷைலஜா கதாபாத்திர போஸ்டர்

    இந்த போஸ்டர் குறித்து இயக்குனர்- தயாரிப்பாளர் அஜய் பூபதி பேசியதாவது, "செவ்வாய்கிழமை திரைப்படம் 90-களில் கிராமத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்ட ஆக்ஷன் திரில்லர். பாரம்பரியமான நம் மண்ணின் தன்மையுடன் கூடிய காட்சிகள் மற்றும் உணர்வுகள் இந்தப் படத்தில் இருக்கும். திரையரங்குகளில் இந்தப் படத்தைப் பார்த்த பிறகு பாயலின் கதாபாத்திரம் நீண்ட நாட்களுக்கு நினைவில் இருக்கும். இந்திய சினிமாவில் இதுவரை இடம்பெறாத புதிய வகை ஜானரில் இந்தப் படம் இருக்கும். கதையில் 30 கதாபாத்திரங்கள் உள்ளன மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரமும் படத்தில் ஒரு குறிப்பிட்ட இடத்தைப் பெற்றுள்ளது. ஒவ்வொரு கதாபாத்திரமும் முக்கியமானது" என்றார்.

    தயாரிப்பாளர்கள் ஸ்வாதி குணுபதி மற்றும் சுரேஷ் வர்மா எம் ஆகியோர் பேசியதாவது, "ஆர்.எக்ஸ்.100 படத்தின் சிந்து போல, அஜய் பூபதியின் 'செவ்வாய்கிழமை' ஷைலஜாவும் நீண்ட நாட்கள் ரசிகர்கள் நினைவில் இருக்கும். நாங்கள் 75 நாட்கள் படப்பிடிப்பை முடித்துள்ளோம். படத்தை உயர் தொழில்நுட்ப தரத்தில் உருவாக்குகிறோம். படத்தின் கடைசி ஷெட்யூலை அடுத்த மாதம் முடிக்க திட்டமிட்டுள்ளோம். படத்தின் கதை அற்புதமாக உள்ளது. இது ரசிகர்களுக்கு நிச்சயம் பிடிக்கும்" என்று கூறினார்.

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
    • இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் நடைபெற்று வருகிறது.


    கேப்டன் மில்லர் 

    இந்நிலையில், 'கேப்டன்' மில்லர் படப்பிடிப்பை நிறுத்த தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். அதாவது, மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் கடந்த மூன்று மாதங்களாக 'கேப்டன் மில்லர்' படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இதில் இப்படத்தின் குண்டு வெடிக்கும் காட்சி இன்று படமாக்கப்பட்டுள்ளது. அப்போது குண்டு சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர்.

    பின்னர் அங்கு சென்று பார்க்கும் போது தான் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது என்பது தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த படப்பிடிப்பு தொடர்பாக படக்குழு மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்த தகவல் தெரிந்ததும் தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். அதன்படி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது. மேலும், 15 நாட்கள் தற்காலிகமாக படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

    • பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
    • பின்னர் கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார்.

    கேரளாவில் பல்வேறு நலத்திட்ட நிகழ்ச்சிகளை தொடங்கி வைக்க பிரதமர் மோடி நேற்று கேரளா வந்தார். கொச்சியில் ரோடு ஷோவில் பங்கேற்ற பிரதமர் மோடி இளைஞர் அமைப்பினர் நடத்திய மாநாட்டிலும் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கேரள மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள். எனவே விரைவில் கேரளாவில் பாரதிய ஜனதா ஆட்சி அமையும் என்றார்.

    இதைத்தொடர்ந்து, திருவனந்தபுரம் சென்ட்ரல் ரெயில் நிலையம் சென்றடைந்த பிரதமர் மோடி திருவனந்தபுரம் முதல் காசர்கோடு வரையிலான வந்தே பாரத் ரெயில் சேவையை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதன் பிறகு அவர் சென்டிரல் ரெயில் நிலையத்தில் இருந்து திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியம் சென்றார். அங்கு கொச்சி மெட்ரோ படகு சேவையை தொடங்கி வைத்தார்.


    நரேந்திர மோடி -உன்னி முகுந்தன்

    இந்நிலையில், நடிகர் உன்னி முகுந்தன் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துள்ளார். இது தொடர்பான புகைப்படத்தை தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ள உன்னி முகுந்தன், "நன்றி சார், 14 வயதில் உங்களைத் தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு இப்போது உங்களைச் சந்தித்ததில் இருந்து மீளவில்லை. உங்களுடன் பேசிய அந்த 45 நிமிடங்கள் என் வாழ்வின் சிறந்த நிமிடங்கள். நீங்கள் சொன்ன வார்த்தையை என்னால் மறக்கவே முடியாது. ஒவ்வொரு அறிவுரையும் நடைமுறைப்படுத்தப்பட்டு செயல்படுத்தப்படும்" என்று நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.


    • தரணி ராசேந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியான படம் 'யாத்திசை'.
    • இப்படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

    தரணி ராசேந்திரன் இயக்கத்தில் சக்தி மித்ரன், செயோன், ராஜலட்சுமி, குரு சோமசுந்தரம், சந்திரகுமார் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'யாத்திசை'. ஏழாம் நூற்றாண்டில் பாண்டிய மன்னனுக்கெதிராக போராடிய ஒரு சிறு தொல்குடியை பற்றிய கதையாக 'யாத்திசை' உருவாகி கடந்த ஏப்ரல் 21ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படம் கலவையான விமரசனங்களை பெற்று வருகிறது. இப்படம் குறித்து பலரும் தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.


    யாத்திசை

    யாத்திசை

    இந்நிலையில் யாத்திசை படம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், தமிழர்கள் எழவேண்டிய திசை! அன்புத்தம்பி தரணி ராசேந்திரன் அவர்களின் இயக்கத்தில் வெளிவந்து ஓடிக்கொண்டிருக்கும் யாத்திசை (தென்திசை) படத்தினைப் பார்த்தேன். படத்தின் காட்சிகள் மற்றும் கதையின் கரு இவைகளில் சொல்லப்பட்ட செய்திகள் என அனைத்தும் புதிய முயற்சிகள் என்பதைத் தாண்டி தமிழ்த்தேசிய இனமக்களுக்குத் தற்போது அவசியத்தேவையான ஒன்று என்பதில் பெரு மகிழ்வும், தம்பியின் இந்த சிந்தனையை நினைத்து பெருமையும் அடைகிறேன்.

    படத்தில் வரலாற்றுக் கருத்துக்கள் மற்றும் புதிய பொருள்பொதிந்த இலக்கிய சொற்கள் இவைகள் அனைத்திற்கும் உறுதுணையாக இருந்தது வரலாற்று பேராய்வாளர் ம.சோ.விக்டர் அவர்களது நூல்கள் என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. இந்தப் படத்தின் ஒவ்வொரு காட்சிகளும் சொல்லுகின்ற செய்தி தமிழர் இனத்தில் மறைக்கப்பட்ட வரலாற்றுத் தகவல்களைக் காட்சியின் மூலமாகப் பதிவு செய்தமை வியப்பின் உச்சம்.


    சீமான்

    சீமான்

    படத்தில் வரும் காட்சிகளில் ஒன்றாகிய வேலன் வெறியாட்டு நிகழ்வின் மூலம் நிகழ்த்துகின்ற கொற்றவை வழிபாடு நிகழ்வில் வருகின்ற இரண்டு நிமிட காட்சி அமைப்பிற்குள் ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் வரலாற்றையும் சொல்லி இருப்பது தமிழர்களின் வரலாற்று மீட்புக் காட்சியாக நான் பார்க்கிறேன்.

    இந்தப் படத்தில் வரும் போர்க்களக் காட்சியொன்றில் இறந்துபோன வீரர்களைத் திருப்பி மார்பினைப் பார்த்து, விழுப்புண் இல்லாதவர்களை நெஞ்சினில் வாளால் கீறி புதைக்கும் காட்சிகளைப் பார்த்து நெகிழ்ந்தேன். தற்காலத்தில் இளைய தலைமுறையினர் தமிழரின் வீரம் பொதிந்த வரலாறு காட்சி படுத்தப்பட்டுள்ளது என்ற நிறைவு எனக்கு வந்தது. இதுபோன்று படத்தின் ஓவ்வொரு காட்சிகளிலும் பொதிந்து கிடக்கும் தமிழர்களின் மறைக்கப்பட்ட வரலாற்றைப் பற்றிச் சொல்லிக்கொண்டே போகலாம்.

    இந்தப் படத்தினைத் தமிழர்கள் கொண்டாடவேண்டிய அவசியத்தின் காரணமாக நான் நினைப்பது பழந்தமிழ் இலக்கியத்தில் இருந்து சொற்களை எடுத்து தமிழர் வாழ்வில் மறைக்கப்பட்ட செந்தமிழ் சொற்களை மீட்டுருவாக்கம் செய்திருப்பது பாராட்டிற்குரியது. இலக்கியச் சொற்களை உரையாடல் மொழியாக வைத்திருப்பது தமிழர்கள் பெருமைப்பட வேண்டிய பதிவு.


    சீமான் அறிக்கை

    சீமான் அறிக்கை

    பல நூறு கோடிகளைச் செலவிட்டுக் காட்டுகின்ற பிரமாண்டங்களை, முறையான பயிற்சி மற்றும் திட்டமிடல் மூலமாகப் படத்தயாரிப்புக் குழு மிகக்குறைந்த செலவினத்திலேயே செய்திருப்பது பாராட்டிற்குரியது. கதையின் நாயகர்கள், கதையையும், இயக்குனரையும் நம்பி ஒரு ரூபாய் கூட இதுவரை ஊதியம் பெறாமல் நடித்து, படம் சிறப்பாக ஓடினால் நாங்கள் ஊதியத்தைப் பெற்றுக்கொள்கிறோம் என்று சொல்லி தமிழர் வரலாற்று மீட்சிக்குச் சேவையாற்றியிருக்கிறார்கள்.

    படம், கதை. கருக்களம், பயன்படுத்தப்பட்ட உரையாடல் மொழி, நடித்த நடிகர்களின் கைதேர்ந்த நடிப்பு என அனைத்தும் படத்தினைப் பார்க்கும் பார்வையாளர்களுக்கு 7ஆம் நூற்றாண்டில் வாழும் உணர்வை, காட்சியின் போது நிகழ்த்தியிருப்பது சிறப்பிலும் சிறப்பு. யாத்திசை என்ற வரலாற்று பேராவணத்தைப் படைத்த படத்தின் இயக்குனர் தம்பி தரணி ராசேந்திரன் அவர்களுக்கு மிகப்பெரிய பாராட்டுக்கள்.

    படத்தில் நடித்த நடிகர்கள் சக்தி மித்ரன், சேயோன், ராஜலட்சுமி, வைதேகி, சமர் மற்றும் படத்தொகுப்பாளர் மகேந்திரன், இசையமைத்த தம்பி சக்கரவர்த்தி, ஒலிவடிவம் செய்த தம்பி சரவணன் தர்மா, ஆடை வடிவமைப்பு செய்த தம்பி சுரேஷ் குமார், சண்டை காட்சிகள் அமைத்த ஓம் சிவ பிரகாஷ், கலை இயக்குனர் ரஞ்சித், ஒளியோவியம் படைத்த அகிலேஷ் காத்தமுத்து என அனைவரும் தங்கள் முழுமையான உழைப்பை இப்படத்தில் செலுத்தியுள்ளார்கள் என்பதைப் படம் பார்க்கும்பொது உணர முடிகிறது. அனைவருக்கும் எனது அன்பும், வாழ்த்துகளும்.


    சீமான்

    சீமான்

    தமிழ் நிலத்தின் வரலாறு மீட்கப்படவேண்டும், தமிழர் நிலத்தில் தமிழர் அதிகாரம் பெறவேண்டும் என்று உழைக்கின்ற ஓவ்வொரு தமிழ்த்தேசியப் பிள்ளைகளும் மறக்காமல் தமது குடும்பத்தோடு சென்று பார்க்க வேண்டிய அவசியமான படம் யாத்திசை. இந்தப் படத்தை மாபெரும் வெற்றி பெற வைப்பதன் மூலம், இனிவரும் காலங்களில் இது போன்ற படங்கள் நிறைய வெளிவர உதவும் என்று நம்புகிறேன்.

    யாத்திசை : தமிழன் தொழ வேண்டிய திசை மட்டும் அல்ல, வரலாற்று மீட்சியுற்று தமிழன் எழவேண்டிய திசை…! புரட்சி வாழ்த்துக்களுடன் சீமான் என்று குறிப்பிட்டுள்ளார்.

    • கன்னட திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சுதீப்.
    • இவர் பா.ஜ.கவுக்கு ஆதரவு தெரிவித்து பிரசாரம் செய்து வருகிறார்.

    பிரபல கன்னட நடிகர் சுதீப் தமிழில் வெளியான 'நான் ஈ' படத்தில் சமந்தாவுடன் நடித்து பிரபலமானார். இவர் தமிழில் வெளியாகி ஹிட்டான சேது மற்றும் ஆட்டோகிராப் போன்ற படங்களின் ரீமேக்கிலும் நடித்துள்ளார். மேலும், விஜய்யின் 'புலி' படத்திலும் நடித்து இருந்தார். சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான 'கப்ஜா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்றது. இதைத்தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகவுள்ளதாக கூறப்படுகிறது.


    கிச்சா சுதீப்

    இந்நிலையில், நடிகர் சுதீப் இயக்குனர் சேரன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, சுதீப் அடுத்து மூன்று படங்களில் நடிக்கவுள்ளதாகவும் அதில் 2 படங்களை இயக்குனர்கள் சேரன் மற்றும் கே.எஸ்.ரவிகுமார் இயக்க உள்ளதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதுபற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு கர்நாடக தேர்தலுக்குப் பிறகு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

    கன்னட சட்டசபை தேர்தல் மே 10-ந் தேதி நடக்கவுள்ள நிலையில், பா.ஜ.கவுக்கு ஆதரவாக நடிகர் சுதீப் தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    • ரஜினிகாந்த் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார்.
    • இப்படத்தின் படப்பிடிப்பை சில தினங்களுக்கு முன்பு ரஜினி நிறைவு செய்ததாக தகவல் வெளியானது.

    இந்திய திரையுலகின் முன்னணி நடிகரான ரஜினிகாந்த் தற்போது கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தில் நடித்து வருகிறார். இதில் மலையாள நடிகர் மோகன்லால், கன்னட நடிகர் சிவராஜ்குமார் மற்றும் பிரியங்கா மோகன், ரம்யா கிருஷ்ணன், யோகிபாபு, வசந்த் ரவி, விநாயகன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.


    ஜெயிலர் - ரஜினி

    ஜெயிலர் - ரஜினி

    இப்படத்தில் ரஜினி, முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் ஜெயிலராக நடிக்கிறார். அதிரடி சண்டை படமாக தயாராகி வரும் இதன் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக வட மாநிலங்களில் விறுவிறுப்பாக நடந்து வந்தது. சென்னையிலும் ஜெயில் அரங்கு அமைத்து முக்கிய காட்சிகளை படமாக்கினர். சில தினங்களுக்கு முன்பு ஜெயிலர் படத்தின் படப்பிடிப்பை ரஜினிகாந்த் நிறைவு செய்ததாக தகவல் வெளியானது.


    ஜெயிலர் படக்குழு

    ஜெயிலர் படக்குழு

    இந்நிலையில் ஜெயிலர் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வருகிற ஆகஸ்ட் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக கூறப்படுகிறது. ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டைனோசர்ஸ்’.
    • இப்படத்தில் புது முகங்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    புதுமுக இயக்குனர் எம்.ஆர்.மாதவன் இயக்கியுள்ள திரைப்படம் 'டைனோசர்ஸ்'. இப்படத்தில் உதய் கார்த்தி, ரிஷி ரித்விக், சாய் பிரியா, யாமினி சந்தர் மற்றும் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். கேலக்ஸி பிக்சர்ஸ் தயாரித்துள்ள இப்படத்திற்கு போபோ சசி இசையமைத்துள்ளார். இப்படத்தின் தமிழ்நாடு வெளியீட்டு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது.


    தஸ்தா ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ஆர். கலைவாணன் படத்தொகுப்பு மேற்கொண்டுள்ளார். புதுமுகங்கள் நடிப்பில் கேங்ஸ்டர் கதையை மையமாக வைத்து உருவாகியுள்ள இப்படத்தின் டிரைலர் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இந்த டிரைலரை இயக்குனர் பா.இரஞ்சித் தனது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.



    • இயக்குனர் மிஷ்கின் தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
    • சென்னயில் நடைபெற்ற டைனோசர்ஸ் பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் மிஷ்கின் கலந்து கொண்டார்.

    2006ம் ஆண்டு வெளியான சித்திரம் பேசுதடி படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு இயக்குனராக அறிமுகமானவர் மிஷ்கின். அதன்பின்னர் நந்தலாலா, யுத்தம் செய், முகமூடி, ஓநாயும் ஆட்டுக்குட்டியும், பிசாசு, துப்பறிவாளன், சைக்கோ உள்ளிட்ட படங்களை இயக்கி தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டார். படம் இயக்குவது மட்டுமல்லாது நடிகராகவும் சில படங்களில் நடித்து வருகிறார். தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் மிஷ்கின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகிறார்.


    மிஷ்கின்

    மிஷ்கின்

    இந்நிலையில் சென்னயில் நடைபெற்ற டைனோசர்ஸ் பட டிரைலர் வெளியீட்டு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட இயக்குனர் மிஷ்கின், தம் அடிக்கும் இயக்குனர்கள் நிச்சயம் வெற்றி இயக்குனர்களாக வலம் வருவார்கள் என்று கூறினார். மேலும் அவர் கூறியதாவது, நான் அடுத்த படம் எழுதிக் கொண்டு இருக்கிறேன். 2 நாட்களுக்கு முன்பு ஒரு குழுவினர் வந்தார்கள். அருகில் அமர்ந்த ஒரு பையன் தான் இயக்குனர் என்றனர்.


    மிஷ்கின்

    மிஷ்கின்

    புகைப்பிடிக்கும் அடையாளம் அவர் முகத்தில் தெரிந்தது. அப்போதே படம் நிச்சயம் வெற்றி என தெரியும். தம் அடிக்கும் இயக்குனர்கள் வெற்றி பெறுவார்கள். முதல் படத்தில் ஒரு நாளுக்கு 100 சிகரெட் புகைத்தேன், அதன்பிறகு அஞ்சாதே படத்திற்கு சிகரெட் எண்ணிக்கை120 ஆனது. இவ்வாறு அவர் கூறினார். 

    • மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது.
    • இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.

    மாமல்லபுரம் கிழக்கு கடற்கரை சாலையில் தமிழ்நாடு அரசு கலை, பண்பாட்டுத் துறையின் கீழ் அரசினர் கட்டிடக்கலை மற்றும் சிற்பக்கலை கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியின் 65-வது ஆண்டு விழாவை கல்லூரியில் படித்த முன்னாள் மாணவர் சங்க கூட்டமைப்பினர் நடத்தினர்.இதில் நடிகர் சிவக்குமார் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-

    நான் சென்னைக்கு வந்து நடிகர் ஆவதற்கு முன்பாக ஒரு ஓவியனாக இருந்தேன். சென்னையில் இருந்து 60 கி.மீ தூரம் சைக்கிளில் மாமல்லபுரம் வந்து தெரு ஓரம் தங்கியிருந்து இங்குள்ள கடற்கரை கோவில், ஐந்துரதம், அர்ச்சுனன்தபசு உள்ளிட்ட புராதன சின்னங்களை வரைந்துள்ளேன். இதற்கு எனது ஆர்வமும் விடாமுயற்சியுமே காரணம் ஆகும். எனவே மாணவர்கள் முயற்சியை எப்போதும் கைவிடக்கூடாது. இது ஒரு தெய்வீக கலைச்சார்பு பயிற்சியாகும். சாதாரண நபர்களுக்கு இது தோன்றாது. உங்களுக்கு கடவுள் வாய்ப்பளித்துள்ளார், வளருங்கள்.

    நான் ஒரு நடிகன், நடிகர்கள் சூர்யா, கார்த்தியின் தந்தை என்கிற மகிழ்ச்சி எனக்கு நிறைவை தரவில்லை. நான் ஓவியனாக வாழ்ந்து அலைந்து திரிந்த அந்த நாட்களே எனக்கு பெருமையையும் மகிழ்ச்சியையும் தந்தது. இவ்வாறு அவர் பேசினார். முன்னதாக அனைத்து பிரிவு மாணவ, மாணவிகள் இடையே நடத்தப்பட்ட மரச்சிற்பம் செதுக்குதல், கழிமண்,கற்சிலைகள் வடித்தல், உலோக உருவம் செய்வது, பெயிண்டிங் உள்ளிட்ட பல்வேறு கலைப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு நடிகர் சிவக்குமார் பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கினார்.

    ×