என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருபவர் ஏ.ஆர்.ரகுமான்.
    • இவர் இசையில் 28-ஆம் தேதி பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வெளியாகவுள்ளது.

    தமிழ் திரையுலகில் முன்னணி இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான். இவர் இசையில் சமீபத்தில் வெளியான 'பொன்னியின் செல்வன் -1' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று உலகம் முழுவதும் ரூ.400 கோடிக்குமேல் வசூல் சாதனை செய்தது. இதைத்தொடர்ந்து பெரும் எதிர்பார்ப்பில் உருவாகியுள்ள இப்படத்தின் இரண்டாம் பாகம் வருகிற 28-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. அதுமட்டுமல்லாமல், ஏ.ஆர்.ரகுமான் தமிழில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள 'அயலான்', உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் உருவாகி வரும் 'மாமன்னன்' உள்ளிட்ட சில படங்களை கைவசம் வைத்துள்ளார்.


    ஏ.ஆர்.ரகுமான்

    இந்நிலையில், சமீபத்தில் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தனது மனைவி சாய்ரா பானுவுடன் விருது வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் ஏ.ஆர்.ரகுமனுக்கு சிறந்த இசையமைப்பாளர் விருது வழங்கப்பட்டது. விருது வழங்கும் மேடையில் நிகழ்ச்சி தொகுப்பாளரிடம் ஏ.ஆர். ரகுமான் பேசி கொண்டிருந்தபோது, தனது மனைவியையும் மேடைக்கு பேச வரும்படி அழைத்துள்ளார். அப்போது ஏ.ஆர். ரகுமான் என் பேட்டிகளை நான் திரும்பி பார்க்க விரும்ப மாட்டேன். ஆனால் என் மனைவி திருப்பி, திருப்பி விரும்பி பார்ப்பதில் ஆர்வம் கொண்டவர் என கூறினார்.


    சாய்ரா பானு -ஏ.ஆர்.ரகுமான்

    இதனைத் தொடர்ந்து அவரது மனைவி கூட்டத்தினரின் முன் பேச தயாரானார். அப்போது மனைவியிடம், இந்தியில் பேசாதீங்க தமிழில் பேசுங்கள் ப்ளீஸ் என்று ஏ.ஆர்.ரகுமான் அன்பு கட்டளை விடுத்தார். இதன்பின் பேசிய அவரது மனைவி, மன்னிக்கவும், தமிழில் சரளமாக பேச எனக்கு வராது. அதனால், தயவு செய்து மன்னித்து விடுங்கள். நான் ரொம்ப மகிழ்ச்சியாக இருக்கிறேன். அவருடைய குரல் எனக்கு மிகவும் பிடிக்கும். அவரது குரலில் சொக்கி போய் விடுவேன் என்று கூறினார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • பிரதமர் மோடி 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் உரை நிகழ்த்தி வருகிறார்.
    • இந்நிகழ்ச்சியில் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.

    பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் முதல் வானொலி வாயிலாக ஒவ்வொரு மாதத்தின் கடைசி ஞாயிற்றுக்கிழமையும் 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம் உரை நிகழ்த்தி வருகிறார். இதன் தமிழாக்கமும் ஒலிபரப்பப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சியில் வெவ்வேறு தலைப்புகளில் பிரதமர் உரையாற்றுவது வழக்கம்.


    நரேந்திர மோடி

    இந்நிகழ்ச்சியில் 100-வது பகுதி வரும் ஏப்ரல் 30-ஆம் தேதி ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது. இதையொட்டி டெல்லியில் மத்திய தகவல் மற்றும் ஒளிப்பரப்புத்துறை சார்பில் நடைபெற்ற தேசிய மாநாட்டை துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர் துவக்கி வைத்தார்.

    இந்த மாநாட்டில் திரைத்துறை, விளையாட்டுத் துறை என இந்தியாவின் பல்வேறு துறைகளைச் சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். இதில் நடிகர் அமீர்கான் பத்திரிகையாளர்களிடம் கூறியதாவது, தேசத்தின் தலைவர் மக்களுடன் உரையாடுவது, பிரச்சினைகளை பற்றி விவாதிப்பது. ஆலோசனைகளை வழங்குவது என்பது மிக முக்கியமானது. அப்படிப்பட்ட ஒரு நிகழ்ச்சி 100-வது அத்தியாயத்தை நிறைவு செய்துள்ளதில் மகிழ்ச்சி என்று கூறினார்.

    • மலையாள திரையுலகின் மூத்த நடிகராக வலம் வந்தவர் மாமுக்கோயா.
    • இவர் சமீபத்தில் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.

    மலையாள சினிமாவின் மூத்த நடிகரான மாமுக்கோயா நாடக கலைஞராக தனது வாழ்க்கையை தொடங்கியவர். பின்னர் திரைத்துறையில் காமெடி நடிகராக பிரபலமடைந்தார். 450 படங்களுக்கு மேல் நடித்துள்ள மாமுக்கோயா இரண்டு முறை மாநில அரசின் விருதுகளைப் பெற்றுள்ளார்.

    சமீபத்தில் கால்பந்து போட்டியின் தொடக்கவிழாவில் கலந்து கொண்ட 76 வயதான மாமுக்கோயாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டு வான்டூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக கோழிக்கோட்டில் உள்ள மற்றொரு தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை பெற்று வந்தார். மேலும், இவரது உடல்நிலை சீராக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்திருந்தனர்.

    இந்நிலையில், நடிகர் மாமுக்கோயா இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இவரது மறைவிற்கு மூளையில் ஏற்பட்ட ரத்தக்கசிவு தான் காரணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ஸ்ரேயா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள திரைப்படம் ‘மியூசிக் ஸ்கூல்’.
    • இப்படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது.

    இயக்குனர் பப்பா ராவ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'மியூசிக் ஸ்கூல்'. இந்த படத்தில் ஸ்ரேயா சரண், ஷர்மன் ஜோஷி, ஷாம் மற்றும் பிரகாஷ் ராஜ், ஓசு பருவா மற்றும் கிரேசி கோஸ்வாமி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்தி மற்றும் தெலுங்கில் படமாக்கப்பட்டு, தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டுள்ள இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார்.


    மியூசிக் ஸ்கூல் - ஸ்ரேயா

    மியூசிக் ஸ்கூல் - ஸ்ரேயா

    இளம் மாணவர்கள் எதிர்கொள்ளும் தற்போதைய கல்வி அழுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த திரைப்படம் வருகிற மே 12-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில் மியூசிக் ஸ்கூல் படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த டிரைலர தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.



    • இயக்குனர் செல்வராகவன் இயக்குவதோடு மட்டுமல்லாமல் பல படங்களில் நடித்தும் வருகிறார்.
    • இவர் தற்போது விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

    2002-ம் ஆண்டு வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமான செல்வராகவன் அதன்பின்னர் காதல் கொண்டேன், 7ஜி ரெயின்போ காலனி, புதுப்பேட்டை, ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, இரண்டாம் உலகம், என்ஜிகே, நெஞ்சம் மறப்பதில்லை, நானே வருவேன் உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார். தற்போது 7ஜி ரெயின்போ காலனி படத்தின் இரண்டாம் பாகத்தில் செல்வராகவன் மும்முரம் காட்டி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.


    இதனிடையே நடிப்பிலும் கவனம் செலுத்தி வரும் செல்வராகவன் விஜய்யின் பீஸ்ட் படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் சாணிக் காயிதம் படத்திலும் மோகன் ஜி இயக்கத்தில் சில தினங்களுக்கு முன்பு வெளியான பகாசூரன் திரைப்படத்திலும் கதாநாயகனாக நடித்திருந்தார். தொடர்ந்து ஆதிக் ரவிசந்திரன் இயக்கத்தில் விஷால் நடிப்பில் உருவாகி வரும் மார்க் ஆண்டனி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.


    அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் மனதில் தோன்றும் விஷயங்களை பதிவிட்டு வரும் செல்வராகவன், தற்போது சிறிது நாட்களுக்கு பின்னர் புதிய பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதில், இங்கே உங்கள் கதை முடிந்தது என்றால் உலகத்திற்கு அவ்வளவு சந்தோசம். கூத்தாடும். உங்களை புதைத்து விட்டுதான் அடுத்த வேலை பார்க்கும். அங்கிருந்து மீண்டு வருவதுதான் உங்கள் சாதனை" என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவை ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.

    • மலையாள திரையுலகின் இளம் நடிகர்களாக வலம் வருபவர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி.
    • இவர்கள் இருவரும் மலையாளத்தில் பல படங்களில் நடித்துள்ளனர்.

    மலையாள திரையுலகின் இளம் நடிகர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி. இவர்களில் ஷேன்நிகம், தாந்தோணி என்ற படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி பின்னர் கிஸ்மத், பூதகாலம், உல்லாசம் உள்பட பல படங்களில் ஹீரோவாக நடித்தார்.

    இதுபோல ஸ்ரீநாத்பாசி, ஹனிபீ, கும்பளங்கி நைட்ஸ், அஞ்சாம்பாதிரா உள்பட பல படங்களில் நடித்துள்ளார். இவர்கள் இருவரும் மலையாளத்தில் வளர்ந்து வரும் நடிகர்களாக இருந்தனர். சமீபத்தில் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி இருவரும் படபிடிப்புகளுக்கு ஓழுங்காக வருவதில்லை என்று படத்தயாரிப்பாளர்கள் புகார் கூறினர்.

    மேலும் படபிடிப்பு தளத்தில் போதையில் இருப்பதாகவும் குற்றச்சாட்டு கிளம்பியது. இதையடுத்து மலையாள பட தயாரிப்பாளர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் நடிகர் சங்க நிர்வாகிகள் நேற்று கொச்சியில் அவசரமாக கூடி ஆலோசனை நடத்தினர். கூட்டத்தில் இளம்நடிகர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி இருவருக்கும் படங்களில் நடிக்க தடை விதிக்க முடிவு செய்யப்பட்டது.

    இது தொடர்பாக தயாரிப்பாளர் சங்க தலைவர் ரஞ்சித் கூறும்போது, நடிகர்கள் ஷேன்நிகம், ஸ்ரீநாத் பாசி இருவரும் தொடர்ந்து படக்குழுவினருக்கு தொல்லை கொடுத்து வருகிறார்கள். போதைக்கு அடிமையாகி படபிடிப்புக்கும் ஒழுங்காக வருவதில்லை. எனவே அவர்களுக்கு தடை விதிக்க முடிவு செய்துள்ளோம், என்றார்.

    மலையாள திரையுலகில் சில நடிகர்கள் இதுபோன்ற போதை பழக்கத்திற்கு ஆளாகி இருப்பது தெரியவந்துள்ளது. அவர்களின் பெயர் பட்டியலை தயாரித்து அதனை போலீசாரிடம் அளிக்க உள்ளோம். திரையுலகின் நன்மைக்காகவே இதனை செய்கிறோம், என்றார்.

    • மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
    • இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் படக்குழு திவீரம் காட்டி வருகிறது.

    மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி ,ஜஸ்வர்யா ராய், திரிஷா, ஜஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல முன்னணி பிரபலங்கள் நடித்துள்ள திரைப்படம் பொன்னியின் செல்வன். கடந்த ஆண்டும் வெளியான பொன்னியின் செல்வன் முதல் பாகத்தின் வரவேற்பால் இரண்டாம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் வருகிற 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.


    பொன்னியின் செல்வன் படக்குழு

    பொன்னியின் செல்வன் படக்குழு

    இப்படத்தின் புரொமோஷனுக்காக படக்குழு தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மும்பை, பெங்களூர் போன்ற இடங்களில் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு வருகின்றனர். இந்நிலையில் பொன்னியின் செல்வன் படக்குழு திருச்சியில் களம் இறங்கியுள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் தற்போது வைரலாகி வருகிறது.

    பொன்னியின் செல்வன் -2 திரைப்படம் தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், கன்னடம் மொழிகளில் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    • மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து பிரபலமடைந்தவர் திரிஷா.
    • இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்துள்ளார்.

    மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஜி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. இவர் தற்போது மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள பொன்னியின் செல்வன் -2 படத்தில் நடித்து முடித்துள்ளார்.


    திரிஷா

    திரிஷா

    இப்படத்தின் புரொமோஷன் பணிகளில் திரிஷா உள்ளிட்ட படக்குழு தீவிரம் காட்டி வருகிறது. மேலும் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் திரிஷா நடித்து வருகிறார். இந்நிலையில் திரிஷா சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கும் புகைப்படங்களுக்கு ரசிகர்கள் லைக்குகளை குவித்து வருகின்றனர். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • இயக்குனர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி, சூரி நடிப்பில் உருவாகி வரும் படம் 'ஏழு கடல் ஏழு மலை'.
    • இப்படத்தின் டப்பிங் பணிகளை படக்குழு நிறைவு செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

    இயக்குனர் ராம் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் 'ஏழு கடல் ஏழு மலை' இந்த படத்தில் கதாநாயகனாக மலையாள நடிகர் நிவின் பாலி நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக அஞ்சலி நடித்து வருகிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் சூரி நடித்துள்ளார். வி ஹவ்ஸ் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார்.


    டப்பிங் பணிகளை நிறைவு செய்த நிவின் பாலி 

    டப்பிங் பணிகளை நிறைவு செய்த நிவின் பாலி 

    இப்படத்தின் முதல் தோற்ற போஸ்டர் சமீபத்தில் வெளியானது. இதில் நிவின் பாலியின் தோற்றம் ரசிகர்களை கவர்ந்து பெரிய அளவில் பேசப்பட்டது. இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் 'ஏழு கடல் ஏழு மலை' படத்தின் டப்பிங் பணிகள் நிறைவடைந்ததாக படக்குழு வீடியோ வெளியிட்டு அறிவித்துள்ளது. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • மணிரத்னம் இயக்கியுள்ள பொன்னியின் செல்வன் படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
    • ’பொன்னியின் செல்வன் -2’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 28ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் ஆதித்த கரிகாலனாக, கார்த்தி வந்தியத்தேவனாக, ஜெயம் ரவி அருண்மொழி வர்மனாக, ஐஸ்வர்யா ராய் நந்தினியாக, திரிஷா குந்தவையாக, பிரகாஷ்ராஜ் சுந்தரசோழனாக, சரத்குமார் பெரிய பழுவேட்டரையராக, பார்த்திபன் சின்ன பழுவேட்டைரையராக நடித்துள்ள படம் பொன்னியின் செல்வன் -2. மணிரத்னம் இயக்கியுள்ள இப்படம் வருகிற 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்கள் தொடர்சியாக வெளியாகி படத்தின் மீதான மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.


    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    பொன்னியின் செல்வன் - சரத்குமார்

    இந்நிலையில் பொன்னியின் செல்வன் -2 படம் குறித்து நடிகர் சரத்குமார் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டிருப்பது கவனம் ஈர்த்துள்ளது. அதில், #PS1 வெற்றியைத் தொடர்ந்து, மக்களின் பேராதரவுடன் நாளை மறுதினம் (28.04.2023) மீண்டும் திரையரங்கம் நோக்கி பொன்னியின் செல்வன் – பாகம் 2 #PS2 – ல் சோழர்கள் வருகிறார்கள். திருப்புமுனையுடன் அமைந்த வரலாற்று நாவலின் இறுதி நகர்வினை குடும்பத்துடன் திரையரங்கம் வந்து கண்டு மகிழுங்கள். அன்புடன் அழைக்கும் சோழ சாம்ராஜ்யத்தின் தன அதிகாரி – பெரிய பழுவேட்டரையர் என்று பதிவிட்டுள்ளார்.

    • பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'.
    • சில தினங்களுக்கு முன்பு இப்படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்தது.

    இயக்குனர் பா.இரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் 'தங்கலான்'. இந்தப் படத்தை ஞானவேல் ராஜா தயாரிக்க ஜி.வி.பிரகாஷ்குமார் இசையமைக்கிறார். இப்படம் கர்நாடக மாநிலத்தில் உள்ள கே.ஜி.எஃப். குறித்த கதை என்று இயக்குனர் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். இதனால் இந்த படம் ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.


    தங்கலான்

    தங்கலான்


    இப்படத்தில் பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி, ஹரி, பிரிட்டிஷ் நடிகர் டேனியல் கால்டகிரோன் நடிக்கின்றனர். 'தங்கலான்' படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதையடுத்து படப்பிடிப்பு 80 சதவீதம் முடிவடைந்ததாகவும் 25 நாட்களுக்கான படப்பிடிப்பு மட்டுமே நிலுவையில் உள்ளதாகவும் சமீபத்தில் பா.இரஞ்சித் தெரிவித்திருந்தார். சில தினங்களுக்கு முன்பு விக்ரம் பிறந்தநாளை முன்னிட்டு தங்கலான் படத்தின் மேக்கிங் வீடியோவை படக்குழு வெளியிட்டிருந்தது.


    தங்கலான் - விக்ரம்

    தங்கலான் - விக்ரம்


    இந்நிலையில் இப்படத்தின் படப்பிடிப்பு குறித்த புதிய தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி இப்படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் உள்ள ஈவிபி ஃபிலிம் சிட்டியில் மே 2ம் தேதி முதல் தொடங்கவுள்ளதாகவும் இந்த படப்பிடிப்பு 15 நாட்கள் நடைபெறவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து மதுரையில் 10 நாட்கள் படப்பிடிப்புக்கு பிறகு ஒட்டுமொத்த படப்பிடிப்பு நிறைவடையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    • அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் நடித்து வரும் திரைப்படம் 'கேப்டன் மில்லர்'.
    • விறுவிறுப்பாக நடைபெற்று வந்த இப்படத்தின் படப்பிடிப்பை நேற்று மாவட்ட ஆட்சியர் நிறுத்த உத்தரவிட்டார்.

    இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் தனுஷ் தற்போது 'கேப்டன் மில்லர்' படத்தில் நடித்து வருகிறார். வரலாற்று பாணியில் உருவாகி வரும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சத்திய ஜோதி பிலிம்ஸ் தயாரிக்கும் இப்படத்தில் தனுஷிற்கு ஜோடியாக பிரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். மேலும் நிவேதிதா சதிஷ், ஜான் கொக்கன் மற்றும் சுமேஷ் மூர், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.


    கேப்டன் மில்லர்

    கேப்டன் மில்லர்

    இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசி மாவட்டம் பகுதியில் 3 மாதங்களாக நடைபெற்று வந்தது. நேற்று மேற்கு தொடர்ச்சி மலை அடிவார பகுதியில் குண்டு வெடிக்கும் காட்சி படமாக்கப்பட்டது. அப்போது குண்டு சத்தம் கேட்டதால் சுற்று வட்டார பகுதி மக்கள் அச்சமடைந்தனர். பின்னர் அங்கு சென்ற மாவட்ட ஆட்சியர் இதுகுறித்து விசாரணை நடத்தி உரிய அனுமதி பெற்றார்களா என்று விசாரித்தார்.


    கேப்டன் மில்லர்

    கேப்டன் மில்லர்


    ஆனால் படக்குழு வனத்துறையிடம் எந்தவித அனுமதியும் பெறவில்லை என்று கூறப்படுகிறது. இதை தொடர்ந்து தென்காசி மாவட்ட ஆட்சியர் துரை ரவிசந்திரன் உடனடியாக படப்பிடிப்பை நிறுத்த உத்தரவிட்டார். அதன்படி கேப்டன் மில்லர் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது.


    கேப்டன் மில்லர்

    கேப்டன் மில்லர்

    இந்நிலையில் கேப்டன் மில்லர் படப்பிடிப்பு, அதே இடத்தில் இன்று மீண்டும் தொடங்கவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்புக்காக அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்டு, ஒப்புதல் பெறப்பட்டுள்ளதாக தயாரிப்பாளர் தரப்பிலிருந்து தகவல் வெளியாகியுள்ளது.

    ×