என் மலர்tooltip icon
    cinema banner
    cinema banner
    ரஜினிகாந்தின் புதிய படத்தை ராஜமவுலி இயக்குவார் என்ற பரபரப்பான தகவல் பட உலகில் பரவி இருக்கிறது. இது குறித்த விரிவான செய்தியை பார்க்கலாம்.
    ராஜமவுலி இயக்கத்தில் பிரபாஸ், சத்யராஜ், நாசர், ராணா, அனுஷ்கா, தமன்னா ஆகியோர் நடித்த ‘பாகுபலி-2’ படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் 9 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது. ரூ.450 கோடி செலவில் தயாரிக்கப்பட்ட இந்த படம் 4 நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை நிகழ்த்தி உள்ளது.

    இந்தியாவில் ரூ.490 கோடியும், வெளிநாடுகளில் ரூ.135 கோடியும் வசூலித்து உள்ளது. தமிழகத்தில் மட்டும் 4 நாட்களில் ரூ.50 கோடி வசூலித்து இருக்கிறது. இந்தியில் அதிக வசூல் படங்களின் சாதனை பட்டியலில் இருந்த ‘தங்கல்,’ ‘சுல்தான்’ ஆகிய இரண்டு படங்களின் வசூல் சாதனைகளையும் ‘பாகுபலி-2’ முறியடித்து உள்ளதாக இந்தி டைரக்டர் கரண் ஜோகர் தெரிவித்து உள்ளார்.



    பாகுபலி-2 படத்துக்கு இயக்குனர் ராஜமவுலி ரூ.100 கோடி சம்பளம் வாங்கியதாக தகவல் வெளியாகி உள்ளது. தென்னிந்திய மொழி டைரக்டர்கள் யாரும் இவ்வளவு பெரிய தொகையை சம்பளமாக வாங்கியது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் ரஜினிகாந்தை வைத்து ராஜமவுலி அடுத்த படத்தை இயக்குவது பற்றி ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இவர் ஏற்கனவே ‘பாகுபலி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசும்போது, “ரஜினிகாந்தை வைத்து படம் இயக்க ஆர்வமாக இருக்கிறேன். நான் தமிழில் நேரடியாக படம் இயக்கினால் அது ரஜினிகாந்த் படமாகத்தான் இருக்கும். அவருடன் பணிபுரிய வேண்டும் என்பது எனது நீண்டநாள் ஆசை” என்று குறிப்பிட்டார். இருவரும் இணைந்தால் அந்த படம் உலகம் முழுவதும் வசூலில் சரித்திர சாதனை நிகழ்த்தும் படமாக இருக்கும் என்று பட உலகினர் கூறுகிறார்கள்.



    ரஜினிகாந்தும் ‘பாகுபலி-2’ இந்தியாவுக்கு பெருமை சேர்த்துள்ள படம் என்று டுவிட்டரில் பாராட்டி உள்ளார். எனவே இருவரும் இணைந்து புதிய படத்தில் பணியாற்ற வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    பிரபல மலையாள இயக்குனர் அல்போன்ஸ் புத்திரன் இதுகுறித்து கூறும்போது, “ரஜினிகாந்தும் ராஜமவுலியும் ஒரு படத்தில் இணைந்தால், அந்த படத்தின் வசூல், உலக அளவில் முதல் இடத்தில் இருக்கின்ற ஜேம்ஸ் கேமரூனின் ‘அவதார்’ படத்தின் சாதனையை பின்னுக்கு தள்ளிவிடும்” என்று தெரிவித்து உள்ளார்.
    சற்குணம் இயக்கத்தில் விமல் - இனியா நடிப்பில் உருவாகியிருந்த `வாகை சூட வா' படத்திற்கு மற்றுமொரு கவுரவம் கிடைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    `களவாணி' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் இயக்குநர் சற்குணம். தனது முதல் படத்திலேயே வித்தியாசமான கதையை இயக்கிய அவரது முயற்சி வெற்றியடைந்ததை அடுத்து, தனது அடுத்த படமாக `வாகை சூட வா' படத்தை இயக்கியிருந்தார். இப்படத்தில் நடிகர் விமல் - இனியா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர்.

    பாக்கியராஜ், பொன்வண்ணன், தம்பி ராமைய்யா முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். ஜிப்ரான் இசையில், வைரமுத்து வரிகளில் வெளியான பாடல்களும் மெகா ஹிட்டானது. கல்வியறிவில்லாத அனைத்து தரப்பினருக்கும் கல்வி முக்கியம். அனைவருக்கும் கல்வியை கற்றுத் தர துடிக்கும் ஒரு ஆசிரியரின் கதையை மையமாக வைத்து வெளியான இப்படம் ரசிகர்களிடையேயும் நல்ல வரவேற்பை பெற்றது.



    மேலும் சிறந்த படத்திற்கான தேசிய விருதையும் வென்றிருந்தது. மேலும் சிறந்த இசையமைப்பாளர் நடிகை, பாடகர், பாடலாசிரியர் என 4 பிலிம்ஃபேர் விருதுகளையும் இப்படம் பெற்றிருந்தது. இந்நிலையில், 6 வருடங்களுக்குப் பிறகு The Toulouse Indian Film Festival (FRANCE) 2017 விழாவில் சிறந்த படமாக `வாகை சூட வா' படம் தேர்வு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    சினிமாவில் நடிக்க வந்து 10 வருடம் ஆகிவிட்டதால் கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வித்தியாசமான கதையம்சம் உள்ள படங்களை தேர்வு செய்து நடிப்பதில் அக்கறை காட்டுகிறேன் என்று தமன்னா கூறியுள்ளார்.
    நடிகை தமன்னா அளித்த பேட்டி வருமாறு:-

    “நான் நடிகையாவேன் என்று கனவிலும் நினைத்தது இல்லை. எதிர்பாராமல் அது நடந்து விட்டது. சினிமாவில் நடிக்க வந்து 10 வருடங்கள் ஆகி விட்டது. இதனால் எனக்கு நிறைய பக்குவம் ஏற்பட்டு இருக்கிறது. கதைகள் தேர்வில் அக்கறை எடுக்கிறேன். வழக்கமான காதல் படங்களை தவிர்த்து கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கும் வித்தியாசமான கதைகளில் நடிக்க ஆர்வம் காட்டுகிறேன்.

    ‘பாகுபலி’ படம் அப்படித்தான் அமைந்தது. தமிழில் நயன்தாரா நடிக்கும் கொலையுதிர் காலம் இந்தியில் மொழிமாற்றம் செய்யப்படுகிறது. அந்த படத்தில் நயன்தாரா கதாபாத்திரத்தில் நான் நடிக்கிறேன். கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள மேலும் 2 தெலுங்கு படங்கள் மற்றும் 2 இந்தி படங்களுக்கும் ஒப்பந்தமாகி உள்ளேன்.



    சினிமாவில் ஒவ்வொரு நிமிடமும் எனக்கு முக்கியமாக இருக்கிறது. இந்த தொழிலை ஒரு கலை நயத்தோடு செய்கிறேன். நுணுக்கமாகவும் யோசிக்கிறேன். சினிமாவுக்கு வராமல் இருந்திருந்தால் இவ்வளவு பெயரும் புகழும் கிடைத்து இருக்காது. பணம் ஒரு வேளை சம்பாதித்து இருக்கலாம். ஆனால் ரசிகர்களையும் அவர்களின் அன்பையும் சம்பாதித்து இருக்க முடியாது.

    24 மணிநேரமும் ஓய்வு இல்லாமல் நடித்தாலும் கூட எனக்கு அலுப்பு ஏற்படவில்லை. அந்த அளவுக்கு சினிமா பிடித்து இருக்கிறது. சினிமா ஒரு கனவு உலகம். அதனால்தான் இங்கு வேலை செய்யும் ஒவ்வொரு நிமிடமும் மகிழ்ச்சியாக இருக்கிறது. படப்பிடிப்பு அரங்குகள் ஒவ்வொன்றும் எனக்கு பள்ளிகூடம் போலவே தோன்றுகிறது.

    தினமும் அந்த அரங்குக்குள் புதுப்புது விஷயங்களை கற்றுக்கொள்கிறேன். எதிர்காலத்தில் இங்கு கற்ற பாடங்கள் எனக்கு நிச்சயம் பலன் அளிப்பதாக இருக்கும்.”

    இவ்வாறு தமன்னா கூறினார்.
    ஹரி இயக்கத்தில் விக்ரம் நடிக்க உள்ள `சாமி-2' படத்தில் விக்ரமுடன் கீர்த்தி சுரேஷ் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    விக்ரம் தற்போது கவுதம் மேனன் இயக்கத்தில் ‘துருவ நட்சத்திரம்’ படத்திலும், விஜய் சந்தர் இயக்கத்தில் `ஸ்கெட்ச்' படத்திலும் பிசியாக நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து ஹரி இயக்கத்தில் ‘சாமி-2’ படத்தில் நடிக்கவிருக்கிறார். இப்படத்திற்கான கதாநாயகி மற்றும் பிற நடிகர், நடிகையர் தேர்வு சமீபத்தில் நடைபெற்றது.

    இதில் `சாமி' படத்தில் நடித்த த்ரிஷாவையே `சாமி-2' விலும் நடிக்க வைக்க படக்குழு ஒப்பந்தம் செய்துள்ளதாக முன்னதாக பார்த்திருந்தோம். மேலும் ‘சாமி’ முதல் பாகத்தில் நடித்த நடிகர்கள் பலரும் அதன் இரண்டாவது பாகத்திலும் நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

    இந்நிலையில் புதுவரவாக, `சாமி-2' படக்குழுவுடன் கீர்த்தி சுரேஷ்-ம் இணைய உள்ளாராம். ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் அவரை நடிக்க வைக்க படக்குழு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. ஹரி முன்னதாக `சிங்கம்-2', `சிங்கம்-3' படங்களில் இரு நடிகைகளை ஒப்பந்தம் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது. அதே போல் `சாமி-2' படத்திலும் இரு ஹீரோயின்களை நடிக்க வைக்க முடிவு செய்திருக்கிறாராம்.



    கீர்த்தி சுரேஷ் தற்போது, சூர்யாவுடன் இணைந்து `தானா சேர்ந்த கூட்டம்' படத்தில் நடித்து வருகிறார். அதைத் தொடர்ந்து தெலுங்கில் பவன் கல்யாண் உடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும், தமிழ், தெலுங்க என இரு மொழிகளில் உருவாக உள்ள சாவித்ரியின் வாழ்க்கை வரலாறு படத்திலும் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார்.

    இன்னும் மூன்று மாதங்களில் `சாமி-2' படத்திற்கான படப்பிடிப்பு துவங்க இருக்கிறது. அதற்கான ஆரம்பகட்ட பணிகளில் ஹரி பிசியாக இருக்கிறார்.
    பண்பாட்டை மையப்படுத்தும் திரில்லர் படமாக உருவாகியுள்ள ‘சிலந்தி-2’ படத்தின் முன்னோட்டத்தை கீழே பார்ப்போம்.
    தென்னிந்திய திரையுலகின் முழுமையான முதல் டிஜிட்டல் திரைப்படமான ‘சிலந்தி’ படத்தை எழுதி இயக்கியவர் ஆதிராஜன். இவர் தனது டிஜிட்டல் தியேட்டர்ஸ் பட நிறுவனம் மூலம் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி, தயாரித்திருக்கும் படம் ‘சிலந்தி-2’.

    இதில் விஜய ராகவேந்திரா நாயகனாக நடித்திருக்கிறார். இவர் பிரபல கன்னட ஹீரோ.

    ஹரிப்பிரியா கதாநாயகியாக நடித்துள்ளார். ஒரு குத்துப்பாடலுக்கு மேக்னா நாயுடு ஆடி இருக்கிறார். இவர்களுடன் சத்யஜித், ரங்கா உள்பட பலர் நடித்துள்ளனர்.

    இசை-பெ.கார்த்திக், ஒளிப்பதிவு-ராஜேஷ் யாதவ், எடிட்டிங் - ஸ்ரீகாந்த், வி.ஜே.சாபு, பாடல்கள்-சினேகன், நெல்லைபாரதி, ஆதிராஜன், நடனம் - ராதிகா, கலைக் குமார், ஸ்டண்ட் - மாஸ் மாதா.



    படம் பற்றி இயக்குனர் ஆதிராஜன் சொல்கிறார்...

    கை நிறைய சம்பாதிக்கும் வேகத்தில் நாகரீக மோகத்தில் நம் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் காற்றில் பறக்கவிட்டு.. சுதந்திரம் என்ற பெயரில் எல்லை மீறி சொல்லும் பெண்களால் ஏற்படும் விபரீத விளைவுகளும் அதனால் உருவாகும் ஆபத்துக்களையும் சொல்லும் கதை.

    ரசனையான காதல்.. நாகரீகமான நகைச்சுவை.. அதிரடி சண்டைக் காட்சிகளுடன்.. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க முடியாத திரைக்கதையுடன் உருவாகியிருக்கும் திரில்லர் படம் இது.

    தமிழ்,கன்னட மொழிகளில் உருவான ‘ரணதந்திரா’ தமிழில்’ அதர்வனம்’ என பெயரிடப்பட்டிருந்தது. தற்போது ‘சிலந்தி-2’ என்ற பெயரில் வருகிறது” என்றார்.

    `பாகுபலி-2' படத்தை இயக்கி இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவலை கீழே பார்ப்போம்.
    இந்தியாவில் சினிமாவில் எந்தவொரு படமும் நிகழ்த்தாத சாதனையை, எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் நிகழ்த்தி வருகிறது. இந்திய சினிமாவையே திரும்பி பார்க்க வைத்துள்ள ராஜமௌலி, `பாகுபலி-2' படத்தின் மூலம் இந்திய சினிமா வரலாறுகளையும் திருத்தி எழுதுகிறார். கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘பாகுபலி-2’ தற்போது வரை நான்கு நாட்களில் ரூ.600 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் இன்னமும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.

    இதில், ரிலீசாவதற்கு முன்பே கர்நாடகத்தில் சத்யராஜ்-க்கு எதிராக கன்னட அமைப்பினர் போராட்டம், விநியோகஸ்தர்கள் கருத்து வேறுபாடு என பல்வேறு பிரச்சனைகளை படக்குழு சந்தித்தது. இந்நிலையில் படம் வெளியான பின்னரும் மேலும் ஒரு சிக்கல் படக்குழுவுக்கு வந்துள்ளது.



    படத்தின் ஒரு காட்சியில் வரும் வசனத்தில், குறிப்பிட்ட ஒரு சாதி அமைப்பினரை புண்படுத்தியிருப்பதாக படத்தின் இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமௌலிக்கு எதிராக காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தின் "அரேகட்டிக்க பொரட்ட சமிதி" அமைப்பின் தலைவர்களுள் ஒருவர், நாங்கள் கொடூரமானவர்கள் அல்ல, `பாகுபலி-2' படத்தில் எங்களை மனிதாபிமானமற்ற மற்றும் சமூக விரோத மக்களாக காட்டியிறுப்பதாக கூறி, குறிப்பிட்ட அந்த காட்சியில் வரும் "கட்டிக்கா" என்ற வசனத்தை நீக்கும்படி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

    1962 தேர்தல் நடந்தபோது, இளையராஜாவும், அவர் சகோதரர்களும் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்கள். அப்போது போலீசார் திடீரென்று வந்து, இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாட தடை விதித்தனர்.

    1962 தேர்தல் நடந்தபோது, இளையராஜாவும், அவர் சகோதரர்களும் கம்யூனிஸ்டு கட்சிக்கு ஆதரவாக பாட்டுப்பாடி பிரசாரம் செய்தார்கள். அப்போது போலீசார் திடீரென்று வந்து, இளையராஜாவின் அண்ணன் பாவலர் வரதராஜன் பாட்டுப்பாட தடை விதித்தனர்.

    அதுபற்றி இளையராஜா கூறியதாவது:-

    "1962-ல் நடைபெற்ற நகரசபைத் தேர்தலில், மதுரையில் கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர்களை ஆதரித்து நிறைய கூட்டங்களும், கச்சேரிகளும் நடந்தன. இதில் பாவலரின் பாடலைக் கேட்க மக்கள் அதிகம் கூடினார்கள். இதனால் எல்லா வார்டுகளிலும் பாவலரின் கச்சேரியை வைக்க ஆசைப்பட்டார்கள்.

    தேர்தல் பிரசாரம் சூடுபிடித்தது. காங்கிரஸ், தி.மு.க, கம்யூனிஸ்டு என்று மும்முனைப்போட்டி. அது காமராஜரின் ஆட்சிக்காலம். ஒரே நாளில் மூன்று கச்சேரிகள் செய்யும் அளவுக்கு அண்ணனுக்கு நெருக்கடி. ஆனால் அதுபற்றியெல்லாம் கொஞ்சமும் யோசிக்காமல் மூன்று கச்சேரிகளையுமே செய்தோம்.

    இதில் முதல் கச்சேரி மதுரையில் உள்ள தலைவிரிச்சான் சந்தில் இருக்கும். பாடி முடித்தவுடன் பேச்சாளர்கள் பேசத்தொடங்குவார்கள். அடுத்த கச்சேரி அரசரடியில் இருக்கும். நாங்கள் போகிற நேரத்தில் பேச்சாளர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள். நாங்கள் சென்றதும் பேச்சு நிற்கும். கச்சேரி தொடங்கும்.

    இதில் வேடிக்கை என்னவென்றால், எங்கள் இசைக்குழுவில் இருந்தது மொத்தம் நாலு பேர் மட்டுமே. இந்தக் குழுவிற்கு சில நேரம் டாக்சி. சில நேரம் ஜட்கா (குதிரை வண்டி). முன்பக்கம் வண்டி ஓட்டுபவரின் அருகே பாஸ்கர் உட்கார, ஆர்மோனியம், தபேலா, கிடாரை வைத்துக்கொண்டு அமர் (கங்கை அமரன்) உட்கார, பின்னே நானும் அண்ணனும் கால்களை தொங்கப்போட்டபடி உட்கார்ந்து கொள்வோம்.

    முதல் கச்சேரி முடிந்ததும், ஜட்காவை கூப்பிட்டு வாத்தியங்களை எடுத்து வைத்து உட்கார்ந்து வண்டி ஓடத்தொடங்கும்போது, ஒரு கூட்டம் அப்படியே ஜட்காவை பின்தொடர்ந்தபடி ஓடிவரும்; அடுத்த கச்சேரியை கேட்பதற்காக. அடுத்த கச்சேரியிலும் இதே நிலைதான் தொடரும். காங்கிரஸ் தொண்டர்களுக்கோ, அடுத்த கட்சிக்கு இவ்வளவு பெரிய கூட்டம் கூடுவது பொறுக்கவில்லை.

    ஒருநாள் செல்லூரில் கைத்தறி நெசவாளர் வசிக்கும் பகுதியில் கச்சேரி. மூன்று தெருக்கள் சந்திக்கும் ஒரு இடத்தில் மேடை போட்டிருந்தார்கள். அங்கு வாழ்ந்த அத்தனை நெசவாளர்களும் கம்யூனிஸ்டு கட்சியைச் சேர்ந்தவர்கள்தான். மூன்று தெருக்களிலுமே ஏகப்பட்ட கூட்டம். ஒழுங்காக அமர்ந்து கச்சேரி கேட்கத் தயாரானார்கள். பேச்சாளர்கள் பேசி, அடுத்து பாவலரின் இசை நிகழ்ச்சி என்று அறிவித்ததும், மக்கள் உற்சாகமாக கைதட்டினார்கள்.

    நாங்கள் அமர்ந்து `டைட்டில் மியூசிக்' வாசித்து இரண்டு மூன்று பாடல்களை அண்ணன் பாடியிருப்பார். அனைவருக்கும் வணக்கும் சொல்லும் பாடலில், "கடந்த தேர்தலில் காளை மாட்டுக்கு ஓட்டுப்போடாம விட்டவர்க்கும் வணக்கம்'' என்றார். கைதட்டல் சத்தம் வானை எட்டியது. கைதட்டு அடங்கும் முன் "அந்தக் காளை மாட்டுக்கு ஓட்டுப்போட்டதை எண்ணி இப்போ கவலைப் படுவோர்க்கும் வணக்கம்'' என்றார். இதற்கும் பலத்த கரகோஷம். இப்படி அண்ணன் இரண்டொரு பாடல்களை பாடி முடித்திருந்த வேளையில் திடீரென ஒரு போலீஸ் "வேன்'' எங்கள் கச்சேரி நடக்கும் இடம் அருகே வந்து நின்றது.

    போலீஸ் வேனில் இருந்து ஆயுதம் தாங்கிய போலீசார் பத்துப்பேருக்கு மேல் வரிசையாக அணிவகுத்து, மேடையை நோக்கி சரசரவென வந்தார்கள். அவர்களுக்கு முன்பாக இன்ஸ்பெக்டர் நடராஜன் என்பவர் வந்தார். எல்லாரும் வந்து மேடையை சுற்றி வளைத்து நின்றார்கள்.

    போலீஸ் இன்ஸ்பெக்டர், அண்ணன் பாவலரைப் பார்த்து, "பாவலர்! நீங்கள் பாடக்கூடாது'' என்றார்.

    "எதுக்கு?'' - பாவலர் கேட்டார்.

    "நீங்க மைக் செட் வைத்துக்கொள்ள போலீஸ் பெர்மிஷன் வாங்கவில்லை'' என்றார்,

    இன்ஸ்பெக்டர். "அப்படியா?'' என்று சாதாரணமாக கூறிய அண்ணன், ஒலிபெருக்கி வைப்பவரை பார்த்து,

     "மைக்கை ஆப் பண்ணுப்பா'' என்றார்.மைக்செட்காரரும் அப்படியே செய்தார்.

    இப்போது அண்ணன் எங்களைப் பார்த்தார், "டேய், வாசிங்கடா!'' என்றார்.

    நாங்கள் ரெடியானோம். அண்ணன் `மைக்' இல்லாமல் பாடத்தொடங்கி விட்டார். கூட்டம் அமைதியாக கேட்டது. நாங்களோ `இன்று கம்யூனிஸ்டு கட்சிக்காக உயிர் கொடுத்தவர்களின் பட்டியலில் நம் பெயரும் இடம் பெறப்போகிறது' என்று வீராவேசத்துடன் வாத்தியங்களை அழுத்தினோம்.

    இன்ஸ்பெக்டரால் ஒன்றும் செய்ய இயலவில்லை. பாவலர் அண்ணன் பேசத்தொடங்கினார். "பார்த்தீங்களா? கமயூனிஸ்டு கட்சிக்கு மக்கள் கூடுவதைக்காண காங்கிரசுக்கு மனம் பொறுக்கவில்லை. கல்யாணத்தில், மணவறைப் பலகையை ஒளித்து வைத்துவிட்டால் கல்யாணம் நின்று விடும் என்ற சினிமாக் காமெடி போல, இங்கே மைக்செட்டை பிடுங்கி விட்டால் பாட்டு எப்படி நடக்கும் என்று காமெடி செய்கிறார்கள்'' என்றார்.

    இதற்கு மக்கள் சத்தம் போட்டு சிரிக்க, "இப்படிப்பட்ட கட்சிக்கா உங்கள் ஓட்டு?'' என்றும் சமயம் பார்த்து ஆணியடித்தார். "இல்லை, இல்லை!'' என்று கூட்டம் கைதட்டியது. மைக் இல்லாமலே அடுத்த கச்சேரிக்கு கிளம்பியபோது, கூட்டம் முழுவதும் ஜட்கா பின்னால்  ஓடிவந்தது. எந்த ஒரு இசைக்கலைஞன் சரித்திரத்திலும் காணக்கிடைக்காதது இப்படியொரு நிகழ்ச்சி. இதில் நானும் பங்கு பெற்றிருக்கிறேன் என்பதே எனக்கு மகிழ்ச்சி.
    கமல் நடிப்பில் உருவாகியுள்ள ‘விஸ்வரூபம்-2’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று வெளியிடப்பட்டுள்ளது. மூன்று மொழிகளில் இந்த போஸ்டர்கள் வெளியாகி உள்ளன.


    கமல் நடிப்பு, இயக்கம், தயாரிப்பு என உருவான ‘விஸ்வரூபம்’ படம் கடந்த 2013-ஆம் ஆண்டு பல்வேறு பிரச்சினைகளுக்கிடையில் வெளியானது. இப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இரண்டு பாகமாக உருவான இப்படத்தின் முதல் பாகம் வெளிவந்த சில மாதங்களிலேயே இரண்டாம் பாகமும் வெளியாகும் என அறிவித்தனர்.

    ஆனால், ஒருசில காரணங்களால் படம் இன்னும் வெளியாகாமல் தள்ளிக்கொண்டே போகிறது. இந்த வருடத்தில் ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர். அதற்கு முன்னோட்டமாக இன்று ‘விஸ்வரூபம்’ இரண்டாம் பாகத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டனர்.+


    பர்ஸ்ட் லுக் போஸ்டர்கள் இன்று மாலை 7 மணிக்கு வெளியாகும் என கமல்ஹாசன் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். அதன்படி விஸ்வரூபம் 2 படத்தின் 3 மொழிகளில் பர்ஸ்ட் லுக் போஸ்டர்களை கமல்ஹாசன் தனது சமூக வலைத்தளங்களில் வெளியிட்டுள்ளார். மேலும் நாட்டையும், நாட்டு மக்களையும் நேசிப்பதாக தெரிவித்துள்ளார் கமல்.

    விஸ்வரூபம் படத்தில் பூஜா குமார், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இரண்டாம் பாகத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் இப்படத்தை பிரம்மாண்டமாக தயாரித்திருக்கிறது.
    படத்தில் நடிகர் முத்தக்காட்சி கேட்டதால், ஒரு நடிகை கதறி அழுத சம்பவம் அரங்கேறியுள்ளது. அது என்னவென்பதை கீழே பார்ப்போம்.
    அந்த பவரான நடிகர் ஆரம்பத்தில் கதாநாயகனாகத்தான் சினிமாவில் அறிமுகமானார். ஆனால், அவரை காமெடியனாகத்தான் சினிமா உலகம் பார்க்க ஆரம்பித்தது. அதனால், சுதாரித்துக்கொண்ட அந்த நடிகர் அடுத்தடுத்து காமெடி வேடத்தில் நடித்து பிசியானார். முன்னணி நடிகர்களின் படங்களில்கூட அவரை காமெடியனாக நடிக்க வைக்க போட்டி போட்டனர்.

    அந்தளவுக்கு பெரிய காமெடி நடிகராக வலம் வந்த அந்த பவரான நடிகர், சில படங்களில் தனக்கும் ஹீரோயின் வேண்டும் என்று அடம்பிடித்த கதையெல்லாம் அரங்கேறியிருப்பதாக கோலிவுட் வட்டாரங்களில் அவ்வப்போது செய்திகள் வெளிவந்திருக்கின்றன. தற்போது, அந்த நடிகர் ஒரு படத்தில் தனக்கு ஹீரோயினியிடம் முத்தக்காட்சி வைக்கவேண்டும் என்று இயக்குனரிடம் கேட்டாராம்.



    இயக்குனரும் பெரிய தயக்கத்துடனேயே அந்த படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்தவரிடம் போய், அந்த நடிகருடன் முத்தக்காட்சியில் நடிக்குமாறு கேட்டாராம். ஆனால், அந்த நடிகையோ முத்தக்காட்சியில் எல்லாம் நடிக்க முடியாது, அதுவும் அந்த நடிகருடன் முத்தக்காட்சியில் நடிக்க முடியாது என்று கூறிவிட்டு, தனது அறையில் சென்று கதறி அழுதாராம். இதனால் பதறிப்போன அந்த இயக்குனர் அந்த காட்சியை எடுக்கமுடியாது என்று நடிகரிடம் தடாலடியாக கூறிவிட்டாராம். நடிகருக்கு இதனால் பெரிய ஏமாற்றம் ஆகிவிட்டதாம்.
    நடிகர் சிவகுமார் தான் வாழ்ந்துவந்த வீட்டை அகரம் பவுண்டேஷனுக்கு தானமாக கொடுத்துள்ளார். இதுகுறித்த செய்தியை கீழே விரிவாக பார்ப்போம்.
    அனைவருக்கும் கல்வி கிடைக்கவேண்டும் என்ற முனைப்போடு நடிகர் சூர்யாவால் கடந்த 2006-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது அகரம் பவுண்டேஷன். இந்த பவுண்டேஷன் மூலம் பல்வேறு மாணவ, மாணவிகளின் கல்விக்கு உதவிகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், நடிகரும், சூர்யாவின் அப்பாவுமான சிவகுமார் அகரம் பவுண்டேஷனின் அலுவலக பணிகளுக்காக தான் வாழ்ந்து வந்த வீட்டை தானமாக வழங்கியுள்ளார்.

    சிவகுமார் ஆரம்ப காலத்திலிருந்து தி.நகர் பகுதியில் தான் வாங்கிய சொந்த வீட்டில் வசித்து வந்தார். இங்குதான் சூர்யா, கார்த்தி, பிருந்தா ஆகியோர் பிறந்து வளர்ந்தனர். தற்போது, இவர்கள் மூவருக்கும் திருமணமாகி, குழந்தைகள் பிறந்தும் இதே வீட்டில்தான் ஒன்றாக வசித்து வருகிறார்கள்.



    சிவகுமாரின் மனதுக்கு மிகவும் நெருக்கமான இந்த வீட்டை தற்போது ‘அகரம் பவுண்டேஷன்’ நிறுவனத்தின் அலுவலக பணிகளுக்காக தானமாக வழங்கியுள்ளார் சிவகுமார். இந்த வீட்டில் இருந்து சிவகுமார் மற்றும் அவரது குடும்பத்தினர் அனைவரும் சூர்யா ‘லட்சுமி இல்லம்’ என்ற பெயரில் கட்டியுள்ள பிரம்மாண்ட வீட்டிற்கு சென்றுள்ளனர்.

    தற்போது அந்த வீட்டை ‘அகரம் பவுண்டேஷன்’ செயல்பாட்டிற்கு பயன்படுத்தி வருகிறார்கள். தான் கோவிலாக நினைத்து வாழ்த்து வந்த வீட்டை மாணவர்களின் கல்விக்காக தொண்டாற்றும் நிறுவனத்தின் செயல்பாட்டிற்கு சிவகுமார் தந்துள்ளது பாராட்டுக்குரிய ஒன்றாகும்.
    பாகுபலி-2 படத்தில் பிரபாஸ், அனுஷ்கா படம் போட்ட சேலைகள் விற்பனைக்கு வந்துள்ளன. அதை வாங்குவதற்கு பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

    சமீபத்தில் வெளியான 'பாகுபலி-2' திரைப்படம் இந்திய அளவில் மட்டுமின்றி புதிய உலக சாதனையையும் படைத்துள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய 4 மொழிகளில் நேரடியாக இந்த படம் வெளியாகியுள்ளது. கன்னடத்திலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. வெளிநாடுகளிலும் இதே மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.

    உலகளவில் தினமும் 9000 காட்சிகளும், இந்தியாவில் மட்டும் தினமும் 6500 காட்சிகளும் திரையிடப்பட்டன. கோடைகால விடுமுறையில் வெளிவந்துள்ள பாகுபலி-2 திரைப்படம் உலக மக்கள் அனைவரும் பேசும் வகையில் மிகப்பிரமாண்டமாக உள்ளது. பிரபாஸ் - ராணா, அனுஷ்கா - ரம்யா கிருஷ்ணன், சத்யராஜ்- நாசர் ஆகிய 6 பேரும் ஒருவருக்கொருவர் போட்டி போட்டு நடித்துள்ளனர்.

    போர்க்கள காட்சிகள் பிரமாண்டமாக படமாக்கப்பட்டுள்ளது. உணர்வுப்பூர்வ கதையம்சம் கொண்டுள்ள இந்த படம் இந்திய ரசிகர்களை மட்டுமின்றி உலக சினிமா ரசிகர்களையும் கவர்ந்துள்ளது. இதனால் இப்போதைக்கு எங்கு பார்த்தாலும் பாகுபலி பற்றிய பேச்சாகவே உள்ளது.


    பாகுபலி-2 படம் வெளியான 3 நாட்களில் ரூ.540 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. இந்தியாவில் 3 நாட்களில் ரூ.415 கோடியும், வெளிநாடுகளில் 3 நாட்களில் ரூ.125 கோடியும் வசூலாகியுள்ளது. 1 வாரத்தில் ரூ.1000 கோடியை தாண்டி வசூலாகும் என்று எதிர்பார்கக்ப்படுகிறது.

    பாகுபலியை கட்டப்பா எதற்காக கொன்றார் என்ற கேள்விக்கு விடை கிடைத்துவிட்டதாக இணையதளங்களில் ரசிகர்கள் ஒருவருக்கொருவர் பகிர்ந்து கொண்டனர்.

    பாகுபலி படத்தில் பிரபாஸ் - அனுஷ்கா இருவரும் சேர்ந்து வில்-அம்புடன் கூடிய சண்டைக் காட்சியில் கலக்கி இருக்கிறார்கள். வில்லில் இருந்து அம்புவை எய்வதற்கு பிரபாஸ்-அனுஷ்கா இருவரும் தயாராவது போன்ற ஸ்டில் பிரபலம்.

    இந்த உருவப்படம் பொறித்த பாகுபலி சேலைகள் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்த சேலைகளை வாங்க பெண்கள் மத்தியில் ஆர்வம் ஏற்பட்டுள்ளது.

    பல பெண்கள் பாகுபலி சேலை அணிந்து புகைப்படம் எடுத்து அதை பேஸ்புக், வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் உலவ விட்டுள்ளனர். இதனால் பாகுபலி சேலைகளுக்கு மவுசு அதிகரித்துள்ளது.

    எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளிவந்துள்ள ‘பாகுபலி-2’ படம் இதுவரை இந்திய சினிமா வரலாற்றில் நிகழ்த்தாத புதிய சாதனையை படைக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.
    இந்தியாவில் சினிமாவுக்கு வயது 100 ஆகிவிட்டது. இருந்தாலும், இதுவரை எந்தவொரு இந்தியா சினிமாவும் நிகழ்த்தாத ஒரு சாதனையை எஸ்.எஸ்.ராஜமௌலி இயக்கத்தில் வெளியாகியுள்ள ‘பாகுபலி-2’ படம் நிகழ்த்தப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

    கடந்த வெள்ளிக்கிழமை வெளிவந்த ‘பாகுபலி-2’ தற்போது நான்கு நாட்களை கடந்துள்ள நிலையில் ரூ.600 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கோடை விடுமுறை என்பதால் இன்னமும் திரையரங்குகளில் கூட்டம் அலைமோதுகிறது.



    எனவே, இன்னும் சில தினங்களில் இப்படம் ரூ.1000 கோடி வசூலை எட்டிவிடும் என்ற ஒரு கணிப்பு சினிமா வட்டாரங்களில் உலாவுகிறது. இப்படம் ரூ.1000 கோடியை வசூல் செய்தால், இந்திய சினிமா வரலாற்றில் இதுவரை எந்த படமும் செய்யாத ஒரு சாதனை என்றே கூறலாம்.

    இப்படம் ரூ.1000 கோடி வசூலித்தால் விநியோகஸ்தர்கள், தியேட்டர்காரர்களுக்கு பங்குதொகையாக ரூ.400 கோடி போக மீதி ரூ.600 கோடி வரை தயாரிப்பாளருக்கு கிடைக்கும் என்கிறார்கள். இப்படத்திற்காக ரூ.320 கோடி செலவிட்டதுபோக, மீதியுள்ள ரூ.280 கோடி தயாரிப்பாளருக்கு நிகர லாபமாக கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

    இதுவரை, ‘அவதார்’, ‘டைட்டானிக்’, ‘லார்ட் ஆஃப் ரிங்ஸ்’, ‘ஹாரி பார்ட்டர்’ போன்ற ஹாலிவுட் படங்களே ரூ.1000 கோடி வரை வசூலித்து சாதனைகளை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 
    ×