என் மலர்
ஆட்டோ டிப்ஸ்
கொரோனா அச்சம் காரணமாக ரெனால்ட் - நிசான் நிறுவன ஊழியர்கள் பணிக்கு வர மறுத்துள்ளனர்.
ரெனால்ட் - நிசான் ஆலைகளில் பணியாற்றி வரும் ஊழியர்கள் கொரோனா அச்சம் காரணமாக பணிக்கு வரமாட்டோம் என தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து நிறுவனத்திற்கு ஊழியர்கள் நலசங்க தலைவர் கடிதம் அனுப்பி உள்ளதாக கூறப்படுகிறது.

கொரோனா அச்சம் காரணமாக மே 31 ஆம் தேதி பணிக்கு வருவது ஊழியர்கள் பாதுகாப்பாக இருக்காது என கடிதத்தில் குறிப்பிடப்பட்டு இருப்பதாக தெரிகிறது. முன்னதாக போர்டு மற்றும் ஹூண்டாய் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்படும் ஆலை பணிகளை ஒரு வாரத்திற்கு நிறுத்துவதாக கடந்தவாரம் அறிவித்தன.
ஊழியர்கள் தரப்பு வாதம் குறித்து நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. சென்னையை சுற்றி பணியாற்றி வரும் சுமார் நூற்றுக்கும் அதிகமான ஊழியர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக சங்கம் சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
ஐக்கிய ராஜ்ஜியத்தின் பொது சாலைகளில் தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன.
ஐக்கிய ராஜ்ஜியத்தில் பயணிகள் வாகனம் மட்டுமின்றி பொது போக்குவரத்து முறைகளிலும் தானியங்கி வாகனங்கள் பயன்படுத்தப்பட இருக்கின்றன. சமீபத்தில் தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்துகள் பொது சாலையில் சோதனை செய்யும் திட்டம் இங்கு துவங்கப்பட்டு இருக்கிறது.
ஆரிகோ ஆட்டோ ஷட்டில் என அழைக்கப்படும் இந்த விசேஷ பேருந்துகள் கேம்ப்ரிட்ஜ் நகரில் சிறப்பு சோதனை செய்யப்படுகிறது. இந்த தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்து 3.2 கிலோமீட்டர் வழிதடத்தில் சென்றுவரும். சோதனையின் போது தேர்வு செய்யப்பட்ட பயணிகள் மட்டுமே பேருந்தினுள் அனுமதிக்கப்படுவர்.

இதற்காக பயணிகள் ஆரிகோ செயலியை பயன்படுத்தி எங்கு ஏற வேண்டும், எங்கு இறங்க வேண்டும் என்ற விவரங்களை பதிவிட வேண்டும். ஆரிகோ தானியங்கி எலெக்ட்ரிக் பேருந்துகள் மணிக்கு அதிகபட்சம் 32 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். ஒவ்வொரு பேருந்திலும் ஒரே சமயத்தில் பத்து பயணிகள் பயணம் செய்ய முடியும்.
ஹூண்டாய் நிறுவனம் தமிழகத்தில் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க உதவியது.
ஹூண்டாய் நிறுவனம் தமிழக அரசுக்கு 50 ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்கியுள்ளது. தமிழகத்தை கொரோனா தொற்றில் இருந்து மீட்க ஹூண்டாய் தொடர்ந்து உதவிகளை செய்து ஆதரவளித்து வருகிறது. மருத்துவ உபகரணம் ஸ்ரீபெரும்புதூர் ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமாரிடம் வழங்கப்பட்டது.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள மருத்துவமனைகளுக்கு ஆக்சிஜன் செறிவூட்டிகளை வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுப்பதாக ஆட்சியர் மகேஷ்வரி ரவிகுமார் தெரிவித்தார். இந்த முயற்சி ஹூண்டாய் கேர்ஸ் 3.0 திட்டத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது. இதனை ஹூண்டாய் மோட்டார் இந்தியா பவுன்டேஷன் துவங்கியது.
ஹூண்டாய் கேர்ஸ் 3.0 முயற்சியின் கீழ் பேக் டு லைப் எனும் திட்டம் உருவாக்கப்பட்டு இருக்கிறது. இதில் ஆக்சிஜன் உற்பத்தி தொடர்பான மருத்துவ உபகரணங்களை வழங்க திட்டமிடப்பட்டு உள்ளது. இது இந்தியா முழுக்க பாதிப்பு நிறைந்த மாநிலங்களை மீட்க உதவியாக இருக்கும்.
ஸ்கோடா நிறுவனத்தின் 2021 ஆக்டேவியா மாடல் விரைவில் இந்திய சந்தையில் அறிமுகமாக இருக்கிறது.
2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடல் அடுத்த மாதம் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. முன்னதாக இந்த மாடல் ஏப்ரல் மாத வாக்கில் அறிமுகம் செய்ய திட்டமிடப்பட்டது. எனினும், தற்போதைய கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக இதன் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டு இருக்கிறது.
புது ஸ்கோடா ஆக்டேவியா வெளியீட்டு தேதி இதுவரை அறிவிக்கப்படவில்லை. எனினும், 2021 ஆக்டேவியா மாடல் ஜூன் 10 ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட இருப்பதாக ஸ்கோடா விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர் என தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் 2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடல் விலை ரூ. 27.5 லட்சத்தில் துவங்கி ரூ. 32 லட்சம், எக்ஸ்-ஷோரூம் வரை நிர்ணயம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இத்துடன் புதிய ஆக்டேவியா மாடலுக்கான முன்பதிவு துவங்கப்பட்டு இருப்பதாக தெரிகிறது.
2021 ஸ்கோடா ஆக்டேவியா மாடல் வெளியீட்டை தொடர்ந்து இதன் விநியோகம் துவங்கும் என ஸ்கோடா இந்தியா இயக்குனர் ஜாக் ஹாலின்ஸ் ஏற்கனவே தெரிவித்து இருக்கிறார். மேலும் இதன் விற்பனை அடுத்த மாதம் துவங்கும் என்றும் அவர் தெரிவித்து இருந்தார்.
நாடு முழுக்க அனைத்து சுங்க சாவடிகளிலும் வாகனங்கள் மஞ்சள் கோடில் இருந்தால் பணம் செலுத்த வேண்டாம்.
தேசிய நெடுஞ்சாலை ஆணையம் நாடு முழுக்க செயல்பட்டு வரும் சுங்க சாவடிகளுக்கு புது விதிமுறைகளை பிறப்பித்து இருக்கிறது. புது விதிமுறைகள் சுங்க சாவடிகளில் மக்கள் காதிருக்கும் நேரத்தை வெகுவாக குறைக்கும் நோக்கில் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புது விதிமுறைகளின் படி, சுங்க சாவடிகளில் வாகன வரிசை 100 மீட்டர்களுக்கும் அதிகமாக நிற்காது. மேலும் சுங்க சாவடிகளில் ஒரு வாகனத்திற்கு அதிகபட்சம் பத்து நொடிகளுக்குள் பணத்தை வசூலிக்க தேசிய நெடுஞ்சாலை துறை திட்டமிட்டுள்ளது.

ஒருவேளை சுங்க சாவடியில் வாகன வரிசை 100 மீட்டர்களை கடந்து இருந்தால், வாகனங்கள் கட்டணமின்றி சுங்க சாவடியை கடக்க முடியும். இதற்காக தேசிய நெடுஞ்சாலை துறை சார்பில் சரியாக 100 மீட்டர் பகுதியில் மஞ்சள் நிற கோடி வரையப்பட இருக்கிறது.
சுங்க சாவடிகளில் பாஸ் டேக் முறை பின்பற்றப்படுவதால், இங்கு வாகனங்கள் காத்திருக்கும் நேரம் வெகுவாக குறைந்து இருக்கிறது. இதன் மூலம் போக்குவரத்து நெரிசல் குறைவதுடன், வாகன உரிமையாளர்கள் எரிபொருள் சேமிக்க முடியும். தற்போது சதவீத சுங்க சாவடிகளில் பாஸ்டேக் முறை பின்பற்றப்படுகிறது.
ஜெர்மனி நாட்டில் தானியங்கி வாகனங்களை பொது சாலையில் அனுமதிக்கும் சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட இருக்கிறது.
பொது சாலைகளில் தானியங்கி வாகனங்களை அனுமதிக்கும் சட்டத்திற்கு ஜெர்மனி நாட்டின் பாராளுமன்றத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்ட இருக்கிறது. அதன்படி 2022 முதல் ஜெர்மனி சாலைகளில் தானியங்கி வாகனங்கள் இயக்கப்பட இருக்கின்றன.

தானியங்கி வாகனங்களை வர்த்தக ரீதியில் பயன்படுத்த அனுமதிக்கும் புது திட்டம், தானியங்கி வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு நல்ல செய்தியாக இருக்கும். திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டால், தானியங்கி வாகனங்களில் பாதுகாப்பிற்கு ஓட்டுனர் அமர வேண்டிய அவசியம் இருக்காது.
தானியங்கி வாகனத்தினுள் பாதுகாப்பிற்காக ஓட்டுனர் அமர்ந்து இருக்கும் நிலையில் ஜெர்மனியில் நீண்ட காலமாக வாகன சோதனை நடைபெற்று வந்தது. தற்போது பாராளுமன்றத்தின் கீழ் சபையில் இந்த திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டு இருந்தாலும், மேல் சபையில் ஒப்புதல் கிடைத்தால் மட்டுமே சட்டமாக்கப்படும்.
பிரபல ஹாலிவுட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட டொயோட்டா சுப்ரா மாடல் விற்பனைக்கு வருகிறது.
பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பிரைட் ஆரஞ்சு நிற 1994 டொயோட்டா சுப்ரா விற்பனைக்கு வருகிறது. இந்த மாடல் பாரெட் ஜேக்சன் சந்தையில் ஏலம் விடப்பட இருக்கிறது. இந்த சுப்ரா மாடல் 2001 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் வெளியான பாஸ்ட் அண்ட் பியூரியஸ் திரைப்படங்களில் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது.

இந்த காரின் வெளிப்புறம் கேண்டி ஆரஞ்சு நிற பெயின்டிங், நியூக்ளியர் கிளாடியேட்டர் கிராபிக்ஸ் கொண்டு பினிஷ் செய்யப்பட்டு இருக்கிறது. இத்துடன் பூமெக்ஸ் பாடி கிட், TRD ஸ்டைல் ஹூட், APR அலுமினியம் ரியர் விங், 19 இன்ச் டேச் மோட்டார்ஸ்போர்ட் ரேசிங் ஹார்ட் எம்5 வீல்கள் உள்ளன.
டொயோட்டா சுப்ரா மாடலில் 2JZ-GTE டர்போசார்ஜ் செய்யப்பட்ட 3.0 லிட்டர் இன்லைன் 6 சிலிண்டர் என்ஜின் வழங்கப்பட்டு இருக்கிறது. இத்துடன் 4 ஸ்பீடு ஆட்டோமேடிக் டிரான்ஸ்மிஷன் வழங்கப்படுகிறது. இந்த மாடலுக்கான ஏலம் ஜூன் 17 துவங்கி 19 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தமிழகத்தில் இயங்கி வந்த ரெனால்ட் மற்றும் நிசான் நிறுவனங்களின் உற்பத்தி ஆலை பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
பிரெஞ்சு நாட்டை சேர்ந்த ஆட்டோ உற்பத்தியாளரான ரெனால்ட் மற்றும் ஜப்பான் நாட்டை சேர்ந்த நிசான் மோட்டார் நிறுவனங்கள் தமிழகத்தில் செயல்பட்டு வந்த உற்பத்தி ஆலையை மூடுவதாக அறிவித்து இருக்கின்றன.
முன்னதாக கொரோனா தொற்று மற்றும் கடும் ஊரடங்கு காரணமாக பணி செய்ய இயலாது என ஆலையில் பணியாற்றும் ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. ரெனால்ட்-நிசான் உற்பத்தி ஆலை சென்னை அருகில் அமைந்துள்ளது.

இந்த ஆலை பணிகள் மே 30 ஆம் தேதி வரை நிறுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஆலை தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும். மாநிலத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை குறைய துவங்கி இருப்பதால், அடுத்த வாரத்தில் ஊரடங்கு தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது மூடப்பட்டு இருக்கும் ஆலையில் இந்நிறுவனங்களின் பிளாக்ஷிப் மாடல்களான நிசான் மேக்னைட் மற்றும் ரெனால்ட் கைகர் எஸ்யுவி உள்ளிட்டவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
டெஸ்லா நிறுவனத்தின் ரோட்ஸ்டர் மாடல் அந்த பெருமையை நிச்சயம் பெரும் என எலான் மஸ்க் நம்பிக்கை தெரிவித்தார்.
டெஸ்லா நிறுவனம் தனது இரண்டாவது தலைமுறை ரோட்ஸ்டர் மாடலை மூன்று ஆண்டுகளுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்த ஆண்டு இறுதியிலோ அல்லது 2022 துவக்கத்திலோ இந்த மாடல் விற்பனைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில், புதிய ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை 1.1 நொடிகளில் எட்டிவிடும் என கூறப்படுகிறது. ரோட்ஸ்டர் மாடலில் ஸ்பேக்ஸ் எக்ஸ் பேக்கேஜ் பொருத்தப்பட்டால் இது சாத்தியமாகும் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

ரோட்ஸ்டர் மாடலில் குளிர்ந்த ஏர் திரஸ்டர்கள், காரின் லைசன்ஸ் பிளேட் பின்புறம் கம்ப்ரெஸ் செய்யப்பட்ட ஏர் டேன்க் மற்றும் திரஸ்டர்கள் இருக்கும். இவை காரை மிக அதிக வேகத்தில் இயக்கும் திறனை வழங்கும். ஸ்பேஸ் எக்ஸ் பேக்கேஜ் இன்றி ரோட்ஸ்டர் மாடல் மணிக்கு 100 கிலோமீட்டர் வேகத்தை 1.9 நொடிகளில் எட்டிவிடும் என டெஸ்லா குறிப்பிட்டுள்ளது.
ட்விட்டரில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த எலான் மஸ்க், `ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் திரஸ்டர் பேக்கஜ் பாதுகாப்பானது, ஆனால் மிகவும் உறுதியானது,' என தெரிவித்தார்.
சென்னையில் இயங்கி வரும் உற்பத்தி ஆலை பணிகளை நிறுத்தும் நிலைக்கு ஹூண்டாய் தள்ளப்பட்டு இருக்கிறது.
ஹூண்டாய் மோட்டார் நிறுவனம் தனது சென்னை ஆலை பணிகளை ஐந்து நாட்களுக்கு நிறுத்தி இருக்கிறது. கொரோனாவைரஸ் தொற்று அதிகரித்து வருவதால் ஹூண்டாய் நிறுவனம் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை மற்றும் தமிழகத்தில் அமலாகி இருக்கும் கடுமையான ஊரடங்கு விதிமுறைகள் காரணமாக ஆலை பணிகள் நிறுத்தப்படுவதாக ஹூண்டாய் தெரிவித்து இருக்கிறது. கடந்த வாரம் தமிழகத்தில் ஊரடங்கை ஒரு வாரத்திற்கு நீட்டிப்பதாக அரசு உத்தரவிட்டது.

ஊரடங்கு காலக்கட்டத்திலும் தொடர்ந்து செயல்பட ஆட்டோமொபைல் உள்பட சில துறை சார்ந்த நிறுவனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டு இருக்கிறது. தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்திற்கும் அதிகமாக இருக்கிறது.
தமிழகத்தில் தற்போது நிலவி வரும் சூழலை புரிந்து கொண்டு ஹூண்டாய் நிர்வாகம், ஆலை பணிகளை மே 25 ஆம் தேதி துவங்கி மே 29 ஆம் தேதி வரை நிறுத்த முடிவு செய்துள்ளது என அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கும் அறிக்கையில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவ ஆட்டோ ஓட்டுனர் தனது ஆட்டோவை மினி ஆம்புலன்ஸ் ஆக மாற்றி இருக்கிறார்.
கொரோனாவைரஸ் தொற்றின் இரண்டாவது அலை தீவிரம் அடைந்து வருகிறது. மறுபக்கம் மனித நேயமும் ஓங்கி ஒலிக்கிறது. தொற்றை எதிர்கொள்ள பல நிறுவனங்கள், பிரபலங்கள் உள்பட பலதரப்பட்டோர் அரசுக்கு நிதி உதவி அளித்து வருகின்றனர்.
இந்த நிலையில், கேரளாவை சேர்ந்த 51 வயதான பிரேமசந்திரன் தனது ஆட்டோவை மினி ஆம்புலன்ஸ் ஆக மாற்றி கொரோனா தொற்று அறிகுறி இருப்பவர்களுக்கு உதவி வருகிறார். ஆட்டோ ஓட்டுனரான இவர் இதுவரை தொற்று அறிகுறிகள் இருந்த சுமார் 500-க்கும் அதிகமானோரை தனது மினி ஆம்புலன்சில் அழைத்து சென்று இருக்கிறார்.

ஒவ்வொரு முறை மருத்துமனைக்கு செல்லும் போது, ஆட்டோவை முழுமையாக சுத்தப்படுத்திய பின்னரே அடுத்த பயணத்திற்கு பிரேமசந்திரன் தயாராகிறார். இவரது ஆட்டோ மூன்று புறங்களிலும் பிளெக்சி-கிளாஸ் தடுப்புகளை கொண்டுள்ளது. இதனால் மற்றவர்களுக்கு தொற்று ஏற்படும் அபாயம் மிகவும் குறைவு. இவருக்கும் தொற்று ஏற்படாமல் இருக்கும்.
`வெளிநாட்டில் இருந்து வந்தவருக்கு தொற்று அறிகுறிகள் இருந்தது. அவரை மருத்துவமனை கொண்டு சென்றதும், எனக்கு பலர் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும் என அழைப்புகளை மேற்கொள்ள துவங்கினர். இந்த பயணங்கள் மூலம் மக்களுக்கு உதவ முடிகிறது,' என அவர் தெரிவித்தார்.
ரஷ்ய நாட்டை சேர்ந்த ராப் பாடகர் தனது மகனுக்கு அளித்திருக்கும் பிறந்த நாள் பரிசு பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ரஷ்ய நாட்டை சேர்ந்த ராப் பாடகர் தனது 2 வயது மகனுக்கு லம்போர்கினி காரை பரிசளித்து இருக்கிறார். தற்போது தனது மகனால் சூப்பர் காரை ஓட்ட முடியாது என்பதால், சூப்பர் காருடன் லம்போர்கினி காரின் பொம்மையை பரிசாக வழங்கி இருக்கிறார்.
என் மகனுக்கு ஓட்டுனர் உரிமம் வழங்கப்பட்ட பின், லம்போர்கினி அவென்டெடார் எஸ்விஜெ மாடலை பயன்படுத்தலாம் என டிமேட்டி என அழைக்கப்படும் 37 வயதான திமுர் டரோவிச் யுனுசோவ் தெரிவித்து இருக்கிறார். பரிசு வழங்கும் எடுக்கப்பட்ட வீடியோவை டிமேட்டி தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இருக்கிறார்.

டிமேடிக்கு ஏழு வயதான மகளும் இருக்கிறார். இவர் பல்வேறு விலை உயர்ந்த கார் மாடல்களை வைத்திருக்கிறார். தனது இரு குழந்தைகளும் இந்த வாகனங்களை பயன்படுத்தலாம் என அவர் தெரிவித்தார். குழந்தைகள் ஓட்டுனர் உரிமம் பெறும் வரை இந்த கார்களை டிமேட்டி பயன்படுத்துகிறார்.






