search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Telangana"

    • பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்.
    • 2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது.

    ஹைதராபாத்தில் 2026-க்கு பிறகு நடைபெறவுள்ள மெட்ரோ திட்ட பணிகளில் இருந்து எல்&டி நிறுவனம் விலகுவதாக அதன் இயக்குநர் ஷங்கர் ராமன் அறிவித்துள்ளார்.

    தெலுங்கானாவில் உள்ள மெட்ரோ திட்டத்தில் 90 சதவீத பங்குகள் எல்&டி நிறுவனத்திடம் தான் உள்ளது. மீதமுள்ள 10 சதவீதம் தான் தெலுங்கானா அரசிடம் உள்ளது. மெட்ரோ ரயில்களை இன்னும் 65 ஆண்டுகள் இயக்குவதற்கான உரிமை எல்&டி நிறுவனத்திடம் உள்ளது.

    பிசினஸ் டுடே பத்திரிகைக்கு பேட்டியளித்த எல்&டி நிறுவன இயக்குநர் ஷங்கர் ராமன், "தெலுங்கானாவில் பேருந்துகளின் எண்ணிக்கை உயரவில்லை என்ற போதும், பேருந்துகளில் பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து சேவை வழங்குவதால், மெட்ரோ பயணங்களின் மீதான சுவாரஸ்யம் குறைந்துவிட்டது. பாலின பாகுபாடு ஏற்படுகிறது. பெண்கள் பேருந்துகளில் இலவசமாகவும், ஆண்கள் மெட்ரோக்களில் ₹35 கொடுத்தும் பயணிக்கின்றனர்" என்று தெரிவித்துள்ளார்.

    2023 நவம்பரில் ஒரு நாளைக்கு 5.5 லட்சமாக இருந்த மெட்ரோ பயணிகளின் எண்ணிக்கை தற்போது ஒரு நாளைக்கு 4.6 லட்சம் பேராக குறைந்துள்ளது. மெட்ரோ திட்டம் லாபகரமானதாக இயங்க ஒரு நாளைக்கு 5 லட்சம் மெட்ரோ பயணிகள் பயணிக்க வேண்டும்.

    பெண்களுக்கான இலவச பேருந்து பயணத் திட்டத்தை 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 9 அன்று தெலுங்கானா அரசு அறிமுகப்படுத்தியது.

    தெலுங்கானாவில் அறிமுகப்படுத்தப்பட்ட மகாலக்ஷ்மி திட்டத்தின் மாநிலத்தில் அரசால் இயக்கப்படும் ஏசி அல்லாத பேருந்துகளில் பெண்களும் திருநங்கைகளும் இலவசமாக பயணிக்கமுடியும்.

    • வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.
    • இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்கப் போவதில்லை, மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது

    தெலுங்கானா மாநிலத்தில் இன்று 4வது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது.

    ஹைதராபாத் தொகுதியில் வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களின் ஆதார் கார்டை கேட்டு பா.ஜ.க. வேட்பாளர் மாதவி லதா சரிபார்த்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    மேலும், வாக்களிக்க வந்த இஸ்லாமிய பெண்களை பர்தாவை தூக்கச் சொல்லி.. முகத்தை காட்டு என மிரட்டியதாக கூறப்படுகிறது.

    அவர்களை மிரட்டி முகத்தைப் பார்த்த பின்னரே வாக்களிக்க மாதவி லதா அனுமதித்தார். இதை போலீசாரும், தேர்தல் அதிகாரிகளும் வேடிக்கை பார்த்துள்ளனர்.

    இந்நிலையில், தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது வாக்களிக்க வந்த இஸ்லாமியப் பெண்களின் ஆதார் கார்டை சரிபார்த்த பாஜக வேட்பாளர் மாதவி லதாவின் நடவடிக்கை தொடர்பாக பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினார்.

    அதற்கு பதில் அளித்த அவர், "நான் அந்த வீடியோவை பார்க்கவில்லை, ஆனால் பாஜக திட்டமிட்டு முஸ்லிம் வாக்குகளைச் சிதைக்க முயற்சிக்கிறது, ஆனால் இந்த செயல்கள் அனைத்தும் பாஜகவுக்குப் பயனளிக்கப் போவதில்லை, மாற்றாக அசாதுதீன் ஒவைசிக்கு உதவப் போகிறது" என்று தெரிவித்தார்.

    இதனையடுத்து, பாஜக வேட்பாளர் மாதவி லதா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹைதராபாத் மாவட்ட தேர்தல் அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.

    மாதவி லதா தேர்தல் பிரசாரத்தின்போது மசூதியைப் பார்த்து அம்பு எய்வதுபோல் சைகை காட்டி சர்ச்சைக்கு ஆளானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • மேடக் நிஜாமாபாத் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மட்டுமே ஒரு சில பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
    • அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முக்கிய பதவிகளை வழங்காததால் பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் உள்ள 17 பாராளுமன்ற தொகுதிகளுக்கு வருகிற 13-ந் தேதி வாக்கு பதிவு நடக்கிறது.

    இங்கு மொத்தம் 525 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் 49 பேர் மட்டுமே பெண்கள்.

    மொத்த போட்டியாளர்களில் 10 சதவீதத்திற்கும் குறைவாகவே பெண்கள் உள்ளனர். கம்மம் தொகுதியில் ஒரு பெண் வேட்பாளர் கூட களத்தில் இல்லை. செவெல்லா, மேடக் நிஜாமாபாத் உள்ளிட்ட 8 தொகுதிகளில் மட்டுமே ஒரு சில பெண்கள் தேர்தலில் போட்டியிடுகின்றனர்.

    அதிகபட்சமாக செகந்திராபாத் மற்றும் வாரங்கல் தொகுதியில் தலா 8 பேர் போட்டியிடுகின்றனர்.

    குறைந்த அளவில் பெண்கள் போட்டியிடுவது அந்த மாநிலத்தில் உள்ள பெண் சமூக ஆர்வலர்களை கவலை அடைய செய்துள்ளது.

    தெலுங்கானா மாநிலத்தில் ஒரு பெண்ணை தலைவராக ஏற்க மக்கள் தயங்குகிறார்கள். அரசியல் கட்சிகளும் பெண்களுக்கு முக்கிய பதவிகளை வழங்காததால் பெண்கள் அரசியலுக்கு வருவதில்லை.

    பெண்கள் போட்டியிட தயங்கினால் அவர்களுக்காக போராட யாரும் இருக்க மாட்டார்கள். இதனை மாநிலத்தில் உள்ள பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    • முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.
    • பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.

    மத்திய மந்திரி அமித்ஷா பிரபல ஆங்கில நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது:-

    3 கட்டத் தேர்தல் முடிந்து உள்ளது. 3 கட்டங்களிலும் 283 தொகுதிகளுக்கு ஓட்டுப்பதிவு நிறைவுப் பெற்றுள்ளது. இதில் யார் யாருக்கு? எவ்வளவு வெற்றி கிடைக்கும்? என்பதை உறுதியாக கணிக்க இயலாது.

    இப்போது நான் அடுத்த கட்டத் தேர்தல் பிரசாரங்களில் தீவிரமாக இருக்கிறேன் என்றாலும், முதல் 3 கட்ட ஓட்டுப்பதிவை ஆய்வு செய்துள்ளேன்.

    283 தொகுதிகளில் நடந்து முடிந்த தேர்தலில் குறைந்தபட்சம் 175 முதல் 200 இடங்கள் வரை பா.ஜ.க கைப்பற்றும் என்று நான் நம்புகிறேன். இதன் மூலம் பா.ஜ.க.வின் 400 என்ற இலக்கை எளிதாக அடைவோம்.

    பஞ்சாப், மேற்கு வங்காளம், ஒடிசா, தெலுங்கானா, ஆந்திரா மாநிலங்களில் நிச்சயம் பா.ஜ.க.வுக்கு கணிசமான வாக்குகள் கிடைக்கும். உத்தரபிரதே சத்தில் முழுமையான வெற்றி கிடைக்கும்.

    தமிழ்நாடு, கேரளாவில் எங்களது வாக்கு சதவீதம் அதிகரிக்கும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. இந்த 2 மாநிலங்களிலும் நாங்கள் எதிர்பார்க்கும் தொகுதிகளில் வெற்றி கிடைக்கும்.

    மீண்டும் ஆட்சியமைத்த தும் புதிய திட்டங்கள் செயல்படுத்தப்படும். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்காக முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். கடந்த 10 ஆண்டுகளில் பொருளாதார வளர்ச்சிக்கு பா.ஜ.க. அரசு ரூ.10 லட்சம் கோடி செலவு செய்துள்ளது.

    ஜி.எஸ்.டி. வருவாய் 2 லட்சம் கோடியை தாண்டி இருக்கிறது. ஜி.எஸ்.டி வரி விதிப்பு மூலம் நேரடி வரி விதிப்பில் நியாயமான முறை அமலுக்கு வந்து உள்ளது. இதை ராகுல், எதிர்ப்பது ஏன்? என்று தெரியவில்லை. அவருக்கு யார் யோசனை சொல்கிறார்கள்? என்பதும் தெரியவில்லை.

    இவ்வாறு அமித்ஷா கூறியுள்ளார்.

    • மோடி தென்னிந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்கள் என எண்ணுகிறார்.
    • டெஸ்லா நிறுவனம் தெலுங்கானாவில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநில காங்கிரஸ் முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி அளித்த பேட்டியில் கூறியதாவது:-

    பிரதமர் மோடியும் அமித்ஷாவும் குஜராத் மட்டுமே இந்தியா என்று நினைக்கிறார்கள். அது தவறு இந்தியாவில் மற்ற மாநிலங்களும் உள்ளன. அவர்களுக்கும் உரிமைகள் உள்ளது. தென்னிந்திய மாநிலங்களை புறக்கணித்து வருகின்றனர்.

    மத்திய மந்திரி சபையில் தெலுங்கானாவை சேர்ந்த எம்.பி.க்களின் பிரதிநிதித்துவம் குறைக்கப்பட்டுள்ளது. 42 தெலுங்கு பேசும் எம்.பி.க்கள் உள்ளனர். ஆனால் அவர்களில் ஒரே ஒரு மத்திய மந்திரி மட்டுமே உள்ளார்.

    குஜராத்தில் உள்ள 26 எம்.பி.க்களில் 7 பேர் மத்திய மந்திரிகளாகவும், உத்தரபிரதேசத்தில் 12 பேர் மத்திய மந்திரிகளாகவும் உள்ளனர்.

    அமித்ஷா மற்றும் நரேந்திர மோடியின் பார்வையில் தென்னிந்திய மக்கள் இரண்டாம் தர குடிமக்கள் என எண்ணுகிறார்கள். இதை நான் தெளிவாக கூறுகிறேன்.

    அமெரிக்காவை சேர்ந்த டெஸ்லா நிறுவனம் தெலுங்கானாவில் தொழிற்சாலை அமைக்க விரும்புகிறது.

    ஆனால் அந்த நிறுவனத்தை குஜராத்திற்கு வர வேண்டும் என அழுத்தம் கொடுத்து வருகின்றனர். நான் முதல் மந்திரி நாற்காலியில் அமர்ந்திருக்கிறேன். இந்த விவகாரத்தில் எப்படி செயல்படுவது என்பது எங்களுக்கு தெரியும். இவ்வாறு அவர் கூறினார்.

    • தெலுங்கானாவில் 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.
    • ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார்.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது.

    தேர்தலுக்கு இன்னும் ஒரு வார காலமே இருப்பதால் அரசியல் கட்சித் தலைவர்கள் தெலுங்கானாவில் நிலவும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் அனல் பறக்கும் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் தெலுங்கானாவில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் இன்று முதல் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட உள்ளனர்.

    இன்று நாகர்கர்னூல் தொகுதிக்கு உட்பட்ட கட்வாலியில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பேசுகின்றனர். அதை தொடர்ந்து அடிலாபாத் தொகுதியின் நிர்மலில் ரோடு ஷோவில் ராகுல் காந்தி கலந்து கொண்டு பேசுகிறார். பின்னர் டெல்லி புறப்பட்டு செல்கிறார்.

    வருகிற 9-ந் தேதி மீண்டும் தெலுங்கானாவிற்கு வரும் ராகுல் காந்தி கரீம் நகர் மற்றும் மல்காஜ்கிரி ஆகிய தொகுதிகளில் நடைபெறும் பொதுக் கூட்டங்களில் காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து வாக்கு சேகரிக்கிறார்.

    அதே நாளில் பிரியங்கா காந்தி ஜாஹிராபாத் நாடாளுமன்ற தொகுதியின் காமி ரெடியில் நடைபெறும் பொதுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். அதன் பின்னர் செவல்லா நாடாளுமன்ற தொகுதியின் தந்தூரில் நடைபெறும் பொதுக் கூட்டத்திலும் பேச உள்ளார்.

    இந்த தொகுதியில் கடந்த 2019-ம் ஆண்டு நடந்த தேர்தலில் சந்திரசேகர ராவின் பாரத ராஷ்டிரிய கட்சி வேட்பாளர் ரஞ்சித் ரெட்டி வெற்றி பெற்றார். ரஞ்சித் ரெட்டி பாரத ராஷ்ட்ரிய கட்சியிலிருந்து விலகி காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து தற்போது காங்கிரஸ் கட்சி வேட்பாளராக போட்டியிடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

    10-ந் தேதி மாலை 6 மணிக்கு மேல் பிரியங்கா காந்தி மகபூப் நகர் நாடாளுமன்ற தொகுதியின் ஷாத் நகரில் ரோடு ஷோ மற்றும் பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.

    • ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் வெமுலா கடந்த 2016 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார்
    • பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரின் தற்கொலைக்கு, சாதி வேறுபாடு தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது

    ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழகத்தில் பி.எச்.டி. படிப்பு படித்து வந்த ஆந்திராவைச் சேர்ந்த ரோஹித் வெமுலா கடந்த 2016 ஆம் ஆண்டு தற்கொலை செய்து கொண்டார். பட்டியல் இனத்தைச் சேர்ந்த அவரின் தற்கொலைக்கு, பாஜகவின் மாணவர் அமைப்பான ஏ.பி.வி.பி., உடனான மோதலும், சாதி வேறுபாடும் தான் காரணம் என குற்றச்சாட்டு எழுந்தது.

    இந்நிலையில், இந்த வழக்கு தொடர்பாக ஹைதராபாத் போலீசார், தெலுங்கானா உயர் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்தனர்.

    அதில் "ரோகித் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவரே அல்ல. அவரின் தந்தை ஓ.பி.சி. இனத்தைச் சேர்ந்தவர். பட்டியல் இனத்தைச் சேர்ந்த ரோகித்தின் தாய் ராதிகா, உண்மையை மறைத்து போலி சான்றிதழ் பெற்றுள்ளார். உண்மையான சாதி அடையாளம் வெளியே தெரிந்ததால் பிரச்சனை ஏற்படும் என்ற அச்சத்தில் தான் ரோகித் தற்கொலை செய்துள்ளார். இதற்கு யாரும் காரணம் அல்ல" என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து, ரோகித் வழக்கு முடித்து வைக்கப்படுவதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    அதே சமயம், இந்த அறிக்கையில் சில சந்தேகங்கள் உள்ளன. ரோகித் வெமுலாவின் தாயும், அவரைச் சார்ந்தோரும் சில சந்தேகங்களை எழுப்பினர்

    ஆதலால், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க முடிவு செய்துள்ளோம் என்று தெலங்கானா டிஜிபி ரவி குப்தா தெரிவித்துள்ளார்.

    • ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல்.
    • வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    திருப்பதி:

    ஆந்திரா, தெலுங்கானா மாநிலத்தில் வருகிற 13-ந் தேதி தேர்தல் நடக்கிறது. இதற்காக வேட்பாளர்கள் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த மாநிலங்களில் தற்போது 105 டிகிரிக்கு மேல் வெயில் சுட்டெரிக்கிறது. பகல் நேரத்தில் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வேட்பாளர்கள் பிரசாரம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தொகுதி முழுவதும் பிரசாரத்தை முடிக்க முடியாமல் அரசியல் கட்சிகள் திண்டாடி வருகின்றன.

    இது ஒரு பக்கம் இருக்க வெயிலை காரணம் காட்டி அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு வரும் தொண்டர்கள் மற்றும் பணம் கொடுத்து அழைத்து வரப்படும் பொதுமக்கள் கூலியை அதிகரித்துவிட்டனர்.

    தெலுங்கானா மாநிலத்தில் இது பெரும் பிரச்சினையாக உருவெடுத்துள்ளது. கடந்த வாரம் வரை பிரசாரத்திற்கு வருபவர்களுக்கு ரூ.200 மற்றும் சாப்பாடு, தண்ணீர் பாட்டில் மட்டும் வழங்கப்பட்டது.

    தற்போது வெயில் கொளுத்துவதால் வெயிலில் வெளியே வர தயங்குகின்றனர். அதையும் மீறி வருவதற்கு கூடுதலாக பணம் கேட்கின்றனர்.

     பெண்கள் குறைந்தது ரூ.300, தண்ணீர் பாட்டில், மோர் பாக்கெட் மற்றும் ஸ்நாக்ஸ் கேட்கின்றனர். அதுவே ஆண்களாக இருந்தால் ரூ.500, தலைக்கு தொப்பி, தண்ணீர் பாட்டில், பீர், மோர், குளிர்பானம் சாப்பாடு ஆகியவற்றை கேட்கின்றனர்.

     இதுவும் வேட்பாளர்களின் சார்பில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. இதனால் கூட்டம் கூட்டுவதற்கான செலவு பல மடங்கு தற்போது உயர்ந்து விட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் செலவை சமாளிக்க முடியாமல் திணறி வருகின்றனர்.

    • ஜீவன் ரெட்டி ஆத்திரமடைந்து பெண்ணை கன்னத்தில் அறைந்தார்.
    • வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் நிஜாமாபாத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஜீவன் ரெட்டி போட்டியிடுகிறார். இவர் ஆர்மூர் பகுதியில் பிரசாரம் செய்தார். அங்கு ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பெண்கள் சிலர் வேலை செய்து கொண்டிருந்தனர். அங்கு சென்று ஜீவன் ரெட்டி வாக்கு கேட்டார்.

    அப்போது ஒரு பெண்ணிடம் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களியுங்கள் என்றார். அதற்கு பதில் அளித்த அந்த பெண் கடந்த சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தேன் எனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை. அதனால் இந்த தேர்தலில் தாமரை சின்னத்திற்கு வாக்களிப்பேன் என்றார்.

    இதனை கேட்டதும் ஜீவன் ரெட்டி ஆத்திரமடைந்து அந்த பெண்ணை கன்னத்தில் அறைந்தார். இதனால் அங்கிருந்த பெண்களுக்கும் அவர்களுக்கும் திடீரென வாக்குவாதம் ஏற்பட்டது.

    இதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். காங்கிரஸ் வேட்பாளர் பெண்ணை கன்னத்தில் அறைந்த வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் தற்போது பரவி வருகிறது.

    இந்த சர்ச்சையில் சிக்கிய காங்கிரஸ் வேட்பாளருக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர்.

    • ரூ 20 லட்சம் பணம் மற்றும் 275 கிராம் தங்க நகைகள் கடத்தல்.
    • பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது.

    திருப்பதி:

    தெலுங்கானாவில் வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் கொண்டு செல்வதை தடுக்க போலீசார் மற்றும் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மெடிகட்டா போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அந்த வழியாக பைக்கில் வந்த வாலிபரை கண்ட போலீசார் அவரது வயிறு வீங்கியபடி இருந்ததை கண்டு சந்தேகம் அடைந்தனர்.

    வாலிபரை போலீசார் தடுத்து நிறுத்தினர். போலீசாரை கண்ட வாலிபர் திருத்திருவென விழித்தார். வாலிபரை அறைக்கு அழைத்துச் சென்று அவரது ஆடைகளை களைந்தனர்.

    வாலிபரின் ஆடைகளில் ஆங்காங்கே பித்யோகமாக பைகள் அமைத்து அதில் கட்டுக்கட்டாக பணம், நகைகளை வாலிபர் பதுக்கி வைத்திருந்தார்.

    இதனை கண்டு போலீசார் திகைத்து போயினர். ரூ 20 லட்சம் பணம் மற்றும் 275 கிராம் தங்க நகைகள் இருந்தது. பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்திய போது அவர் முன்னுக்குப்பின் முரணாக பேசினார்.

    கைப்பற்றப்பட்ட பணம் மற்றும் நகைகளை வருமான வரித்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். வாலிபரை கைது செய்த போலீசார் நகை பணத்தை எங்கிருந்து யாருக்காக கடத்தி வந்தார் என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அமித்ஷா எஸ்.சி., எஸ்.டி., ஓபிசி இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது
    • அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்து பாஜக இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர்

    புதுடெல்லி:

    பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடைபெறும் நிலையில் 2 கட்ட வாக்குப்பதிவு முடிவடைந்துள்ளது. வரும் 7-ந் தேதி 3-ம் கட்ட ஓட்டுப்பதிவு நடைபெற உள்ளது. இந்நிலையில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பட்டியல் சாதியினர் (எஸ்.சி.), பழங்குடியினர் (எஸ்.டி.) மற்றும் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும் என்று பேசியதாக சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ வைரலானது.

    மேலும் அந்த வீடியோவை பலரும் சமூக ஊடகங்களில் பகிர்ந்ததோடு பா.ஜனதா 400 இடங்கள் வெற்றி பெற்றால் இடஓதுக்கீடை ரத்து செய்து விடுவார்கள் என குறிப்பிட்டனர். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. ஆனால் அமித்ஷாவின் பேச்சை திரித்து தவறான வீடியோக்களை வெளியிட்டிருப்பது தெரியவந்தது.

    இதுதொடர்பாக பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் அமித் மாலவிகா கூறுகையில், தெலுங்கானாவில் முஸ்லீம்களுக்கான இடஓதுக்கீடு விவகாரத்தில் அமித்ஷாவின் கருத்துக்களை தவறாக சித்தரிக்கும் வகையில் வீடியோ மாற்றப்பட்டுள்ளது. காங்கிரசார் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பரப்பி வருகிறார்கள் என குற்றம் சாட்டியுள்ளார்.

    இதனையடுத்து, அமித்ஷாவின் வீடியோவை திருத்தி வெளியிட்டது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் டெல்லி காவல்துறையின் சிறப்பு பிரிவில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் வீடியோவை எடிட் செய்து வெளியிட்டவர்கள் மீது டெல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்நிலையில், அமித்ஷாவின் எடிட் செய்யப்பட்ட வீடியோவை பகிர்ந்ததாக கூறி தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி விசாரணைக்கு ஆஜராக வேண்டுமென்று டெல்லி போலீஸ் சம்மன் அனுப்பியுள்ளது.

    மே 1-ம் தேதி ரேவந்த் ரெட்டி பயன்படுத்திய அனைத்து மின்னணு உபகரணங்களையும் விசாரணைக்கு கொண்டு வர வேண்டும் என்று டெல்லி போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது.
    • சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.

    திருப்பதி:

    தெலுங்கானா மாநிலம் வெமுலாவில் பழமை வாய்ந்த, பிரசித்தி பெற்ற ராஜராஜேஸ்வர சுவாமி கோவில் உள்ளது. இந்த கோவிலில் ராம நவமி விழா விமரிசையாக நடந்தது.

    ராம நவமி விழாவில் மும்பை, ஐதராபாத் மற்றும் தெலுங்கானா உள்ளிட்ட தொலைதூரப் பகுதிகளில் இருந்து ஏராளமான திருநங்கைகள் குவிந்தனர்.

    பல நூற்றாண்டுகள் பழமையான சடங்கின் ஒரு பகுதியாக சாமிக்கு கோவில் நிர்வாகம் சார்பில் பட்டு வஸ்துரங்கள் வழங்கப்பட்டது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்து திருக்கல்யாணம் நடந்தது.

    அப்போது திருநங்கைகள் தங்களை மணப்பெண்களை போல உடை அணிந்து அங்கு திரண்டிருந்தனர். அவர்கள் சிவபெருமானை மணப்பதாக கூறி தாலிகட்டிக் கொண்டனர்.

    கோவில் வளாகத்தில் குவிந்திருந்த திருநங்கைகள் ஒருவருக்கு ஒருவர் தாலி கட்டிக் கொண்ட நிகழ்ச்சியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பூஜையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித அரிசிகளை அர்ச்சகர்கள் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கினர்.

    ×