என் மலர்tooltip icon

    அறிந்து கொள்ளுங்கள்

    ரிலையன்ஸ் ஜியோ இன்ஃபோகாம் நிறுவனம் இந்தியாவில் முதல்முறையாக ஜியோ இன்டெராக்ட் எனும் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு சேவையை துவங்கியுள்ளது.
    மும்பை:

    ரிலையன்ஸ் ஜியோ  இன்ஃபோகாம் நேற்று (மே 3) ஜியோ இன்டெராக்ட் (JioInteract) எனும் பிரத்யேக செயற்கை நுண்ணறிவு தளத்தை துவங்கியுள்ளது.

    செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் இந்த தளத்தில் முதற்கட்டமாக நேரலையில் வீடியோ கால்களை மேற்கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஜியோ செயலிகளில் ஏற்கனவே ஹெச்டி வீடியோ கால்கள் மேற்கொள்ளும் வசதி வழங்கப்படும் நிலையில், புதிய தளத்தில் இந்திய பிரபலங்களுக்கு வீடியோ கால் செய்ய முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    அந்த வகையில் ஜியோ இன்டெராக்ட் தளத்தில் இந்தியா முழுக்க பிரபலமாக இருக்கும் அமிதாப் பச்சனுடன் நேரலையில் வீடியோ கால் செய்ய முடியும். இவர் 102 நாட் அவுட் திரைப்படத்தை முற்றிலும் வித்தியாசமாக விளம்ரப்படுத்துவார் என ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஜியோ வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 18.6 கோடி வாடிக்கையாளர்களையும், சுமார் 15 கோடி ஸ்மார்ட்போன் பயனர்களை கொண்டிருப்பதாக ஜியோ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜியோ இன்டெராக்ட் சேவை திரைப்படங்களை விளம்பரப்படுத்தவும், பிரான்டு ஊக்குவிக்கவும் முன்னணி தளமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 



    வரும் வாரங்களில் ஜியோ இன்டெராக்ட் தளத்தில் வீடியோ கால் சென்டர்கள், வீடியோ கேடேலாக், விர்ச்சுவல் ஷோரூம்கள் உள்ளிட்டவற்றை சேர்க்க திட்டமிடப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் பயன்படுத்தும் ஜியோவின் புதிய தளம் உலகில் முதல் முறையாக துவங்கப்பட்டிருப்பதாக ஜியோ தெரிவித்துள்ளது.

    மே 4, 2018 முதல் ஜியோ இன்டெராக்ட் சேவையை கொண்டு ஜியோ மற்றும் இதர ஸ்மார்ட்போன் வாடிக்கையாளர்கள் அமிதாப் பச்சனுக்கு வீடியோ கால் மேற்கொள்ள முடியும். வீடியோ கால் மேற்கொள்ளும் வாடிக்கையாளர்கள் 102 நாட் அவுட் திரைப்படம் குறித்த தகவல்களை கேட்டறிந்து கொண்டு, திரைப்படத்திற்கான டிக்கெட்களை புக்மைஷோ மூலம் முன்பதிவும் செய்ய முடியும். 

    சக்திவாய்ந்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தும் ஜியோவின் புதிய சேவை வாடிக்கையாளர்கள் கேள்விகளை மிக உன்னிப்பாக கவனித்து அவர்களுக்கு சரியாக பதில் அளிக்கும். இத்துடன் அதிக கேள்விகளை கேட்கும் போது கேள்விகளில் இருந்து பாடம் கற்கும் முறையை ஜியோ இன்டெராக்ட் கொண்டிருக்கிறது என்றும், காலப்போக்கில் இது பதில்களை மிகவும் நேர்த்தியாக வழங்கும் என ஜியோ வெளியிட்டிருக்கும் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    ஜியோ இன்டெராக்ட் சேவையை பயன்படுத்துவது எப்படி?

    முதலில் மைஜியோ செயலியை டவுன்லோடு செய்யவும்

    இனி மைஜியோ செயலியில் காணப்படும் ஜியோ இன்டெராக்ட் சேவையை கிளிக் செய்யவும்

    அடுத்து வீடியோ கால் துவங்கி அமிதாப் பச்சனுடன் உரையாடலாம்

    கூடுதலாக வாடிக்கையாளர்கள் தங்களது வீடியோ கால் அனுபவத்தை நண்பர்கள் மற்றும் குடும்பத்தாருடன் ஷேர் ஆப்ஷன் மூலம் பகிர்ந்து கொள்ளவும் முடியும்.
    விவோ நிறுவனத்தின் X21 ஸ்மார்ட்போன் சீனாவை தொடர்ந்து சர்வதேச சந்தைகளில் வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஸ்மார்ட்போனின் முழு விவரங்களை தொடர்ந்து பார்ப்போம்.
    சிங்கப்பூர்:

    விவோ நிறுவனத்தின் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சாரா கொண்ட X21 ஸ்மார்ட்போன் மார்ச் மாத வாக்கில் சீனாவில் வெளியிடப்பட்டது. தற்சமயம் இந்த ஸ்மார்ட்போன் சர்வதேச சந்தையில் வெளியிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் நடைபெற்ற விழாவில் விவோ X21 ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

    புதிய விவோ ஸ்மார்ட்போனில் 6.28 இன்ச் FHD பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே, 90.3% ஸ்கிரீன் அளவு, 1.66 மில்லிமீட்டர் மெல்லிய பெசல்கள் வழங்கப்பட்டுள்ளது. ஸ்னாப்டிராகன் 660 சிப்செட், 6 ஜிபி ரேம், ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ சார்ந்த ஃபன்டச் ஓ.எஸ். 4.0 மற்றும் குவால்காம் மூலம் இயங்கும் செயற்கை நுண்ணறிவு வசதி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. 

    ஸ்டான்டர்டு மற்றும் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் என இருவித மாடல்களில் விவோ X21 வெளியிடப்பட்டுள்ளது. டூயல் பிரைமரி கேமரா, சாம்சங் 2L9 சென்சார், டூயல் பிக்சல் தொழில்நுட்பம், 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா மற்றும் 12 எம்பி செல்ஃபி கேமரா, செயற்கை நுண்ணறிவு சார்ந்து இயங்கும் பியூட்டி அம்சம் வழங்கப்பட்டுள்ளது. இது அதிகபட்சம் 24 எம்.பி. தரமுள்ள புகைப்படங்களை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



    விவோ X21 சிறப்பம்சங்கள்:

    - 6.28 இன்ச் 2280x1080 பிக்சல் ஃபுல் ஹெச்.டி பிளஸ் 19:9 சூப்பர் AMOLED டிஸ்ப்ளே
    - ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 660 சிப்செட்
    - அட்ரினோ 512 GPU
    - 6 ஜிபி ரேம்
    - 64 ஜிபி / 128 ஜிபி இன்டெர்னல் மெமரி
    - மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி
    - ஹைப்ரிட் டூயல் சிம் ஸ்லாட்
    - ஃபன்டச் ஓ.எஸ். 4.0 சார்ந்த ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ
    - 12 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.8
    - 5 எம்பி இரண்டாவது பிரைமரி கேமரா, f/2.4
    - 12 எம்பி செல்ஃபி கேமரா, f/2.0
    - கைரேகை சென்சார் / இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
    - 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத்
    - 3200 எம்.ஏ.ஹெச். பேட்டரி
    - ஃபாஸ்ட் சார்ஜிங்

    விவோ X21 ஸ்மார்ட்போன் இன்-டிஸ்ப்ளே கைரேகை சென்சார் மற்றும் 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி கொண்ட மாடலின் விலை 799 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.39,900) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் விவோ X21 ஸ்மார்ட்போனின் விற்பனை மே 5-ம் தேதி துவங்குகிறது. மற்ற நாடுகளில் விவோ X21 ஸ்மார்ட்போன் வரும் மாதங்களில் வெளியிடப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஃபேஸ்புக் நிறுவனத்தின் F8 2018 டெவலப்பர்கள் மாநாட்டின் முதல் நாளில் வெளியான முக்கிய அறிவிப்புகளை தொடர்ந்து பார்ப்போம்.
    கலிஃபோர்னியா:

    ஃபேஸ்புக் F8 2018 டெவலப்பர்கள் மாநாடு கலிஃபோர்னியாவின் சான் ஜோஸ் நகரில் நேற்று (மே 1) துவங்கியது. இவ்விழாவில் ஃபேஸ்புக் சேவைகளில் சேர்க்கப்படும் புதிய அம்சங்கள் மற்றும் இதர முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தன.

    இதுமட்டுமின்றி ஃபேஸ்புக் சொந்தமாக வைத்திருக்கும் சமூக வலைத்தளங்களில் மக்களை புதிய வழிகளில் மக்களை ஒன்றிணைப்பது குறித்த அறிவிப்புகளும் இடம்பெற்றன. இதைத் தொடர்ந்து ஃபேஸ்புக்கின் அனைத்து தளங்களில் வழங்கப்பட இருக்கும் புதிய வசதிகள் குறித்தும் அறிவிக்கப்பட்டன. 

    அந்த வகையில் F8 2018 நிகழ்வின் முதல் நாள் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்ப்போம்.

    ஷேரிங் டூ ஸ்டோரீஸ்

    இன்ஸ்டாகிராம் மற்றும் ஃபேஸ்புக் ஸ்டோரீக்களை ஷேர் செய்ய புதிய வசதியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்துள்ளது. ஸ்பாட்டிஃபை போன்ற செயலிகளில் நீங்கள் விரும்பும் தகவல்களை ஷேர் பட்டன் மூலம் நேரடியாக பகிர்ந்து கொள்ளும் வசதி வழங்கப்படுகிறது. இதனால் ஃபேஸ்புக் அல்லது இன்ஸ்டாகிராம் கணக்கில் லாக்-இன் (Login) செய்ய வேண்டிய அவசியம் கிடையாது.

    க்ரூப்ஸ் (Group)

    புதிய க்ரூப்ஸ் டேப் உங்களது க்ரூப்களுக்கு நேவிகேட் செய்யும் பணியை எளிமையாக்குகிறது. இந்த ஆண்டின் பிற்பாதியில் புதிய க்ரூப்களை கண்டறிந்து, இணைந்து கொள்ள ஏதுவாக புதிய அம்சம் வழங்கப்பட இருப்பதாக ஃபேஸ்புக் அறிவித்துள்ளது.

    க்ளியர் ஹிஸ்ட்ரி

    இந்த அம்சம் பயன்படுத்தி பிரவுசிங் ஹி்ஸ்ட்ரியை நீக்க முடியும். உங்களின் ஃபேஸ்புக் தகவல்களை பயன்படுத்தும் வலைத்தளங்கள் மற்றும் செயலிகளை உங்களால் பார்க்க முடியும். இனி இந்த அம்சத்தை உங்களால் அழிக்க முடியும். இந்த அம்சம் குக்கீக்களை அழிப்பதை போன்றே வேலை செய்கிறது.



    டேட்டிங்

    ஃபேஸ்புக் செயலியை கொண்டு டேட்டிங் மற்றும் உறவுமுறைகளை வளர்த்து கொள்ள புதிய வசதியை ஃபேஸ்புக் உருவாக்கி வருகிறது. இதை கொண்டு ஃபேஸ்புக் ப்ரோஃபைல் கொண்டு டேட்டிங் செய்ய தனி ப்ரோஃபைலை உருவாக்க முடியும். இவை டேட்டிங் பரிந்துரைகளுக்கு ஏற்ப வேலை செய்யும்.

    க்ரைசிஸ் ரெஸ்பான்ஸ்

    இந்த அம்சம் ஆபத்துக்களில் சிக்கியிருப்போருக்கு தேவையான அனைத்து வித முதற்கட்ட தகவல்களையும் ஃபேஸ்புக் வழங்கும். அனைத்து தகவல்களும் உடனடியாக வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    ரத்த தானம்

    இந்தியா, வங்காளதேசம் மற்றும் பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகளில் வசிக்கும் மக்கள் தங்களுக்கு அருகாமையில் உள்ள ரத்த தான முகாம்களை அறிந்து கொள்ள முடியும். 

    இன்ஸ்டாகிராம்



    ஏஆர் கேமரா எஃபெக்ட்

    ஏஆர் கேமரா தளம் ஃபேஸ்புக்கில் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இந்த ஆண்டு இந்த அம்சம் இன்ஸ்டாகிராமில் சேர்க்கப்படுகிறது. ஏஆர் ஸ்டூடியோ அம்சம் கொண்டு வாடிக்கையாளர்கள் பிரத்யேக இன்டராக்டிவ் கேமரா அனுபவங்களை பெற முடியும். வித்தியாசமான ஃபேஸ் ஃபில்ட்டர்கள், எஃபெக்ட்கள் என பல்வேறு வசதிகளை பெற முடியும்.

    வீடியோ சாட்

    இன்ஸ்டாகிராம் டைரக்ட்-இல் மிக விரைவில் வீடியோ சாட் வசதி வழங்கப்படுகிறது. அந்த வகையில் வீடியோ சாட் வசதியை வழங்கும் மூன்று செயலிகளை ஃபேஸ்புக் வைத்திருக்கும். ஃபேஸ்புக் மெசன்ஜர், வாட்ஸ்அப் மற்றும் மிக விரைவில் இன்ஸ்டாகிராம். இந்த அம்சம் க்ரூப் சாட்களையும் சப்போர்ட் செய்யும்.

    எக்ஸ்ப்ளோர் பகுதி

    முற்றிலும் மேம்படுத்தப்பட்ட எக்ஸ்ப்ளோர் அம்சம் கொண்டு ஒவ்வொருத்தர் விரும்பும் தகவல்களை தனித்தனியே ஒருங்கிணைக்கப்பட்டிருக்கும். இதனால் இன்ஸ்டாகிராமில் பிரவுசிங் செய்வது மேலும் எளிமையாக்கப்படுகிறது.

    வாட்ஸ்அப்

    வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் மற்றும் புதிய ஸ்டிக்கர்கள் சேர்க்கப்படுகின்றன. விரைவில் வாட்ஸ்அப் செயலியில் க்ரூப் காலிங் செய்யக் கோரும் புதிய வசதி மற்றும் இதுவரை இல்லாத ஸ்டிக்கர்கள் வழங்கப்படுகின்றன.

    ஃபேஸ்புக் மெசன்ஜர்



    ஏஆர் ஃபார் மெசன்ஜர் (AR for Messenger)

    பிரான்டுகளுக்கு ஃபேஸ்புக் மெசன்ஜரில் உள்ள ஏஆர் கேமரா எஃபெக்ட்களை ஃபேஸ்புக் வழங்குகிறது.

    எம் டிரான்ஸ்லேஷன்ஸ்

    இந்த வசதியை கொண்டு ஃபேஸ்புக் மார்கெட் பிளேஸ் வெவ்வேறு மொழிகளில் தகவல் பரிமாற்றம் செய்து புதிய எம் சஜெஷன்களை (M Suggestion) வழங்குகிறது.

    ஆகுலஸ் கோ

    ஆகுலஸ் இன் முதல் ஸ்டான்ட் அலோன் விஆர் ஹெட்செட் ஆகுலஸ் கோ என அழைக்கப்பட்டு, தற்சமயம் உலகம் முழுக்க விற்பனைக்கு வருகிறது. இதன் விலை 199 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.13,272) முதல் துவங்குகிறது.

    புதிய செயலிகள்

    ஆகுலஸ் தளத்தை நண்பர்களுடன் இணைந்து பயன்படுத்தும் புதிய வசதிகளை ஃபேஸ்புக் சோதனை செய்து வருகிறது. அந்த வகையில் ஆகுலஸ் வென்யூஸ் எனும் புதிய செயலியை ஃபேஸ்புக் அறிமுகம் செய்கிறது. இவை உங்களை பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு விஆர் முறையில் நேரலையில் அழைத்து செல்லும்.

    ஆகுலஸ் ரூம்களில் போர்டு கேம்களை விளையாடுவது, திரைப்படங்கள் மற்றும் பல்வேறு விடயங்களை நண்பர்களுடன் இணைந்து அனுபவிக்க வழி செய்யும். ஆகுலஸ் டிவி வழங்கும் விர்ச்சுவல் ஸ்கிரீன்களை கொண்டு திரைப்படங்களை நண்பர்களுடன் பார்த்து ரசிக்க முடியும்.

    ஷேர் செய்ய புதிய வழிகள்

    ஃபேஸ்புக்கில் புதிய 3D போஸ்ட்ஸ் அம்சம் சேர்க்கப்பட்டிருக்கிறது> இதை கொண்டு நியூஸ் ஃபீடில் உள்ள ஃபேஸ்புக் கேமரா ஏஆர் அம்சங்களை ஒரே க்ளிக் மூலம் பயன்படுத்த முடியும். இத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கும் 3D போட்டோஸ் அம்சம் மூலம் ஸ்மார்ட்போன் கொண்டு நிகழ்வுகளை 3D முறையில் படமாக்க முடியும்.
    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையின் பிரீமியம் பிரிவில் ஆப்பிள் மற்றும் ஒன்பிளஸ் நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சாம்சங் முதலிடம் பிடித்துள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் லோ-என்ட் மற்றும் மிட்-ரேஞ்ச் ஸ்மார்ட்போன்கள் பிரிவில் சாம்சங் ஆதிக்கம் அடிப்பட்டிருக்கும் நிலையில் சீன நிறுவனமான சியோமி ஸ்மார்ட்போன்கள் ஸ்டாக் தீரும் வரை விற்று தீர்ந்து விடுகின்றன. 

    எனினும், பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் உலகின் முன்னணி ஸ்மார்ட்போன் நிறுவனத்தின் ஆதிக்கம் மீண்டும் ஆரம்பித்திருக்கிறது. கேலக்ஸி எஸ்8, கேலக்ஸி நோட் 8 மற்றும் சமீபத்தில் சாம்சங் அறிமுகம் செய்த கேலக்ஸி எஸ்9 சீரிஸ் ஸ்மார்ட்போன்களின் விற்பனை இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் சந்தையில் சாம்சங் நிறுவனத்தை முதலிடத்திற்கு அழைத்து சென்றிருக்கிறது.

    2018-ம் ஆண்டின் முதல் காலாண்டில் சாம்சங் மட்டும் சுமார் 50% பங்குகளை பெற்றிருக்கிறது. கவுன்ட்டர்பாயின்ட் ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் சாம்சங் நிறுவனம் 16% வருடாந்திர வளர்ச்சியுடன் சந்தையின் பாதி பங்குகளை பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


    கோப்பு படம்

    அந்த வகையில் ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி சாம்சங் நிறுவனம் முதலிடம் பிடித்துள்ளது. சாம்சங் சமீபத்திய ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போன் மாடல்களான கேலக்ஸி எஸ்9, கேலக்ஸி எஸ்9 பிளஸ் மற்றும் கேலக்ஸி நோட் 8, கேலக்ஸி ஏ8 பிளஸ் உள்ளிட்டவை வாடிக்கையாளர்களை அதிகம் கவர்ந்திருக்கின்றன.

    சாம்சங்-ஐ தொடர்ந்து ஒன்பிளஸ் நிறுவனம் 25% பங்குகளுடன் இரண்டாவது இடத்திலும் ஆப்பிள் நிறுவனம் 20% பங்குகளுடன் மூன்றாவது இடத்திலும் உள்ளன. சாம்சங், ஒன்பிளஸ் மற்றும் ஆப்பிள் என மூன்று நிறுவனங்கள் மட்டும் இந்திய பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் 95% பங்குகளை பெற்றிருக்கின்றன.

    2017-ம் ஆண்டின் நான்காவது காலாண்டில் சாம்சங் நிறுவனம் 17.6% பங்குகளுடன் மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது. ஆப்பிள் 46.9% பங்குகளுடன் முதலிடத்திலும், ஒன்பிளஸ் 24.9% பங்குகளுடன் இரண்டாவது இடத்தில் இருந்தன. அந்த வகையில் முந்தைய காலாண்டை விட சாம்சங் 32.4% வளர்ச்சியை பதிவு செய்து முதலிடம் பிடித்திருக்கிறது.


    கோப்பு படம்

    சாம்சங் அசுர வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக மார்ச் 16-ம் தேதி இந்தியாவில் வெளியான கேலக்ஸி எஸ்9 சீரிஸ் பார்க்கப்படுகிறது. ஆன்லைன் விற்பனையாளர்கள் மற்றும் ரிலையன்ஸ் ஜியோ, ஏர்டெல் போன்ற டெலிகாம் நிறுவனங்கள் சார்பில் கேலக்ஸி எஸ்9 சீரிஸ் வாங்குவோருக்கு அறிமுக சலுகைகள் வழங்கப்படுகின்றன.

    விலை அதிகமாக நிர்ணயம் செய்யப்பட்ட ஐபோன் X மற்றும் ஐபோன்களுக்கான தட்டுப்பாடு இந்தியாவில் குறைந்ததை தொடர்ந்து ஆப்பிள் விற்பனை குறைந்தது. கூடுதலாக மேக் இன் இந்தியா மூலம் கூடுதல் வரி விதிக்கப்பட்டதும் ஆப்பிள் ஐபோன் விற்பனை குறைய காரணமாக இருக்கிறது.

    சாம்சங் அதிரடி வளர்ச்சியையும் ஆப்பிள் சரிவை கண்டிருக்கும் நிலையில், ஒன்பிளஸ் வேகமாக வளரும் பிரான்டாக உருவெடுத்துள்ளது. பிரீமியம் பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனம் 192% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 2017-ம் ஆண்டின் மூன்றாவது காலாண்டு முதல் பிரீமியம் ஸ்மார்ட்போன் பிரிவில் ஒன்பிளஸ் நிறுவனம் இரண்டாவது இடத்தில் உள்ளது.
    ஆப்பிள் 6.1 இன்ச் ஐபோன் சார்ந்த புதிய தகவல்களை ஐபோன் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டுள்ளார்.
    புதுடெல்லி:

    ஆப்பிள் நிறுவனத்தின் என்ட்ரி லெவல் 6.1 இன்ச் ஐபோனின் அம்சங்கள் சார்ந்த விவரங்களை பிரபல ஐபோன் வல்லுநரான மிங் சி கியோ வெளியிட்டிருக்கிறார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டிருக்கும் ஆய்வு அறிக்கையில் புதிய 6.1 இன்ச் ஐபோனில் உறுதியான இம்பேக்ட்-ரெசிஸ்டண்ட் கிளாஸ் வழங்கப்பட இருப்பதாக குறி்ப்பிட்டிருக்கிறார். மேலும் இந்த மொபைலில் கவர் கிளாஸ் சென்சார் (CGS) தொழில்நுட்பம் வழங்கப்பட இருக்கிறது.

    இந்த தொழில்நுட்பம் ஐபோனின் டச் மாட்யூலினை டிஸ்ப்ளே பேனலில் இருந்து சர்ஃபேஸ் கிளாசுக்கு மாற்றும். இதனால் டிஸ்ப்ளே அதிக உறுதியுடனும், மெல்லியதாகவும் இருக்கும். இதனுடன் மற்றொரு மெல்லி ஃபிலிம் சென்சார் சேர்க்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது என்ன செய்யும் என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை.

    புதிய தொழில்நுட்பம் வழங்கப்படுவதால் டச் பேனலின் விலை 15% வரை அதிகமாக இருக்கும், அந்த வகையில் 23 டாலர்களில் இருந்து 26 டாலர்கள் வரை செலவிட வேண்டும். இதனால் புதிய ஐபோனில் இருந்து 3D டச் அம்சத்தை ஆப்பிள் நீக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    2018-ம் ஆண்டில் வெளியாக இருக்கும் மற்ற இரண்டு ஐபோன்களில் 5.8 இன்ச் மற்றும் 6.5 இன்ச் OLED டிஸ்ப்ளே வழங்கப்படுகிறது. இரண்டு மாடல்களிலும் 3D டச் அம்சம் வழங்கப்படும். மூன்று புதிய ஐபோன்களிலும் CGS தொழில்நுட்பம் வழங்கப்படும் பட்சத்தில் இது 3D டச் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக அமையும் என கூறப்படுகிறது.

    புதிய மெல்லிய ஃபிலிம் சென்சார் 3D டச் தொழில்நுட்பத்திற்கு மாற்றாக இருக்குமா என்பது குறித்து எவ்வித தகவலும் இல்லை. எனினும் வரும் ஆண்டுகளில் ஆப்பிள் வெளியிட இருக்கும் ஐபோன்களில் டச்லெஸ் ஜெஸ்ட்யூர் கன்ட்ரோல்களை வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. அந்த வகையில் இதுபோன்ற தொழில்நுட்பம் கொண்ட முதல் ஐபோனாக இது இருக்கும் என கூறப்படுகிறது.
    கூகுளின் ஜிமெயில் சேவையில் பல்வேறு புதிய வசதிகள் சமீபத்தில் சோதனை செய்யப்பட்ட நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு படிப்படியாக வழங்கப்படுகின்றன.
    புதுடெல்லி:

    கூகுளின் ஜிமெயில் சேவையில் ஸ்மார்ட் ரிப்ளைஸ் போன்ற வசதிகள் சோதனை செய்யப்படுவது சமீபத்தில் தெரியவந்த நிலையில், இவை வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படும் புதிய அம்சங்களில் புகைப்படங்களை இணைப்பது புதிய பட்டன் மூலம் எளிமையாக்கப்பட்டுள்ளது.

    புதிய அப்டேட் மூலம் இனி முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களுக்கு குவிக் ரிமைன்டர்ஸ் மூலம் உடனடியாக பதில் அனுப்ப முடியும். ஆன்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் போன்றே ஜிமெயில் வெப் சேவையிலும் ஸ்மார்ட் ரிப்ளைஸ் (Smart Replies) வசதி வழங்கப்படுகிறது. இதை கொண்டு குறுந்தகவல்களை வேகமாக பதில் அனுப்ப முடியும்.

    இதேபோன்று அவசியமற்ற நியூஸ்லெட்டர்களுக்கு எப்போது அன்-சப்ஸ்கிரைப் (UnSubscribe) செய்ய வேண்டும் என்பதை ஜிமெயில் பரிந்துரை செய்யும். இத்துடன் ஆபத்து நிறைந்த மின்னஞ்சல்கள் வரும் போது எச்சரிக்கை செய்யும். மேலும் ஜிமெயிலில் வழங்கப்பட்டு இருக்கும் கான்ஃபிடென்ஷியல் மோட் (Confidential Mode) மின்னஞ்சல்களை ஃபார்வேர்டு, காப்பி, டவுன்லோடு அல்லது பிரின்ட் செய்யவிடாமல் தடுக்கும்.



    அதிக முக்கியத்துவம் வாய்ந்த மின்னஞ்சல்களை அனுப்பும் போது இந்த அம்சம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். குறிப்பிட்ட மின்னஞ்சலில் நேரம் குறித்தவுடன் தானாக மறைந்து போகும் வசதியும் ஜிமெயில் வெப் சேவையில் வழங்கப்படுகிறது. ஜிமெயில் வெப் சேவையில் புதிய அம்சங்கள் வழங்கப்பட்டு வருகிறது.

    எனினும் சில வாடிக்கையாளர்களுக்கு சில புதிய அம்சங்கள் வரும் வாரங்களில் வழங்கப்படும். புதிய வசதிகளை பெற வாடிக்கையாளர்கள் ஜிமெயில் செட்டிங்ஸ் (Settings) -- டிரை தி நியூ ஜிமெயில் (Try the new Gmail) அம்சங்களை தேர்வு செய்து பயன்படுத்த முடியும். 

    புதிய அம்சங்கள் வேண்டாம் என்போர் மீண்டும் செட்டிங்ஸ் -- கோ பேக் டு கிளாசிக் ஜிமெயில் (Go Back to Classic Gmail) ஆப்ஷன் சென்று பழைய ஜிமெயிலையே பயன்படுத்தலாம்.
    மார்வல் ஸ்டூடியோஸ் உடனான கூட்டணியை அறிவித்த ஒன்பிளஸ், அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட்களை இலவசமாக வழங்குகிறது.
    புதுடெல்லி:

    மார்வல் ஸ்டூடியோஸ் உடனான கூட்டணியை ஒன்பிளஸ் நிறுவனம் கடந்த வாரம் அறிவித்தது. ஏப்ரல் 27-ம் தேதி வெளியாக இருக்கும் அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ் திரைப்படத்திற்கான டிக்கெட்களை இலவசமாக வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

    கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஸ்டார் வார்ஸ் தி லாஸ்ட் ஜெடி திரைப்படத்திற்கான டிக்கெட்கள் இலவசமாக வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. புதிய கூட்டணியில் ஒன்பிளஸ் மற்றும் பேடிஎம் இணைந்து சுமார் 6000-க்கும் அதிக டிக்கெட்களை வழங்க இருக்கிறது.

    சென்னை, மும்பை, பூனே, ஐதராபாத், சண்டிகர், கொல்கத்தா, டெல்லி, பெங்களூரு, கொச்சி, ஆமதாபாத் நகரங்களை சேர்ந்த ஒன்பிளஸ் வாடிக்கையாளர்கள் அவென்ஜர்ஸ் இன்ஃபினிட்டி வார்ஸ் திரைப்படத்திற்கான இலவச டிக்கெட்களை பெற முடியும். 



    இலவச டிக்கெட்களை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை தொடர்ந்து பார்ப்போம்.

    முதலில் ஒன்பிளஸ் அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் (oneplus.in) சென்று உங்களது ஒன்பிளஸ் மொபைலின் ஐஎம்இஐ (IMEI) நம்பரை பதிவு செய்ய வேண்டும். (ஒரு வேளை ஏற்கனவே ஐஎம்இஐ நம்பரை பதிவு செய்திருந்தால் இந்த வழிமுறையை செய்ய வேண்டாம்). அடுத்து நீங்கள் வசிக்கும் நகரத்தை குறிப்பிட்டு Get It பட்டனை கிளிக் செய்ய வேண்டும். இவ்வாறு செய்ததும் உங்களுக்கான டிக்கெட் கோடு அனுப்பப்படும். (டிக்கெட் இருப்புக்கு ஏற்றவாரு இலவச டிக்கெட் கோடு அனுப்பப்படும்)

    டிக்கெட் கூப்பன் கோடு பெற்றதும், பேடிஎம் வலைத்தளத்திற்கான லின்க்-ஐ கிளிக் செய்து ஏப்ரல் 27, 28 மற்றும் 29 உள்ளிட்ட தேதிகளில் உள்ள காட்சிகளை தேர்வு செய்தால் வேலை முடிந்தது. பேடிஎம் வலைத்தளத்தில் செக் அவுட் செய்யும் போது ரூ.1 செலுத்த வேண்டும். இந்த தொகை செயல்பாட்டு கட்டணம், பாப்கார்ன் மற்றும் கூல் ட்ரின்க்ஸ் ஒவ்வொரு டிக்கெட்-க்கும் வழங்கப்படுகிறது.
    இந்தியாவின் பிரபல ஆன்லைன் வர்த்தக தளமான பிளிப்கார்ட்-இல் சுமார் 51% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    புதுடெல்லி:

    இந்திய ஆன்லைன் வர்த்தக வலைத்தளமான பிளிப்கார்ட்-இன் சுமார் 51% பங்குகளை வால்மார்ட் வாங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் அமேசானை எதிர்கொள்ள பிளிப்கார்ட் தளத்தில் அதிகப்படியான பங்குகளை வாங்க வால்மார்ட் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது.

    இந்திய ஆன்லைன் சந்தை மதிப்பு அடுத்த பத்து ஆண்டுகளில் சுமார் 20,000 கோடி அமெரிக்க டாலர்கள் அளவு வளர்ச்சி பெறும் என கணிக்கப்பட்டுள்ளது. பிளிப்கார்ட் தளத்தின் முக்கிய முதலீட்டாளரான சாஃப்ட்பேங்க் க்ரூப் தனது பங்குகளை விற்பனை செய்வதில் அதிக ஆர்வம் செலுத்துவதாக தெரியவில்லை என இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முன்னதாக 1200 கோடி அமெரிக்க டாலர்களுக்கு தனது பங்குகளை விற்பனை செய்வதில் சாஃப்ட்பேங்க் விரும்பவில்லை என கூறப்பட்டது. எனினும் சாஃப்ட்பேங்க் மற்றும் வால்மார்ட் இடையேயான பிரச்சனை தீர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. தற்சமயம் பிளிப்கார்ட் தளத்தின் பங்குகளை விற்பனை செய்ய சாஃப்ட்பேங்க் ஒப்புகொண்டது குறித்து எவ்வித தகவலும் இல்லை. 


    கோப்பு படம்

    பிளிப்கார்ட்-ஐ வால்மார்ட் வாங்கும் பட்சத்தில் பிளிப்கார்ட் மதிப்பு 1800 கோடி அமெரிக்க டாலர்கள் ஆக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே வெளியான தகவல்களில் பிளிப்கார்ட் தளத்தின் 51% அல்லது அதற்கும் அதிக பங்குகளை வாங்க வால்மார்ட் சுமார் 1000 முதல் 1200 கோடி அமெரிக்க டாலர்களை வழங்குவதாக தெரிவித்ததாக கூறப்பட்டது. 

    இதனிடையே பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் இடையேயான ஒப்பந்தம் உறுதி செய்யப்பட்டாலும், ஒப்பந்தம் மே மாத முதல் வாரம் வரை உறுதி செய்யப்படாது என கூறப்படுகிறது. பிளிப்கார்ட் பங்குகளை வால்மார்ட் வாங்கும் பட்சத்தில் யுஎஸ் ஹெட்ஜ் ஃபன்ட் டைகர் குளோபல் மேனேஜ்மென்ட், தென்னாப்பிரிக்காவின் நாஸ்பர்ஸ் மற்றும் அக்செல் போன்ற தற்போதைய முதலீட்டாளர்கள் பிளிப்கார்ட் உடனான கூட்டணியை முறித்து கொள்ளலாம் என்றும் கூறப்படுகிறது.

    பிளிப்கார்ட் நிறுவனர்களான சச்சின் மற்றும் பின்னி ப்னசால் ஆகியோர் தங்களது பங்குகளை விற்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுறது. எனினும் பிளிப்கார்ட் மற்றும் வால்மார்ட் சார்பில் இதுகுறித்து இதுவரை எவ்வித தகவலும் வழங்கப்படவும் இல்லை, இந்த தகவல்களை மறுக்கவும் இல்லை.
    ஃபேஸ்புக் ஆன்ட்ராய்டு செயலியில் மொபைல் நம்பர் ரீசார்ஜ் செய்யும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
    வாஷிங்டன்:

    ஃபேஸ்புக் மெசன்ஜரில் பிரீபெயிட் ரீசார்ஜ் அம்சம் சோதனை செய்யப்பட்டு வந்த நிலையில், ஃபேஸ்புக் செயலியில் இருந்தபடியே மொபைல் நம்பர்களை ரீசார்ஜ் செய்யும் வசதியை ஃபேஸ்புக் வழங்கியுள்ளது.

    முதற்கட்டமாக ரீசார்ஜ் செய்யும் வசதி ஆன்ட்ராய்டு ஃபேஸ்புக் செயலியில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது. அந்த வகையில் ஐபோன் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்த சிலகாலம் காத்திருக்க வேண்டும். புதிய அம்சம் செட்டிங்ஸ் ஆப்ஷனில் மொபைல் டாப் அப் ஆப்ஷன் காணப்படுகிறது. 



    ஃபேஸ்புக்கில் மொபைல் ரீசார்ஜ் செய்வது எப்படி?

    - ஃபேஸ்புக்கில் மொபைல் டாப் அப் அம்சத்தை கிளிக் செய்ய வேண்டும்

    - இனி மொபைல் நம்பர் மற்றும் ரீசார்ஜ் தொகையை தேர்வு செய்ய வேண்டும். இங்கு குறிப்பிட்ட நெட்வொர்க் வழங்கும் சிறப்பு சலுகைகளை பார்த்து அவற்றை தேர்வு செய்யும் வசதியும் வழங்கப்படுகிறது.

    - ரீசார்ஜ் தொகையை கட்டணம் செலுத்துவதற்கான பக்கத்தில் சென்று பண பரிமாற்ற முறையை தேர்வு செய்து பணம் செலுத்தலாம். இங்கு கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்துவதற்கான வசதி வழங்கப்படுகிறது.

    ஃபேஸ்புக் மொபைல் ரீசார்ஜ் அம்சத்தில் தற்சமயம் வரை கிரெடிட் அல்லது டெபிட் கார்டு மூலம் பணம் செலுத்தும் வசதி வழங்கப்படும் நிலையில், யுபிஐ அல்லது மற்ற மொபைல் வாலெட் கொண்டு பணம் செலுத்தும் வசதி வழங்கப்படவில்லை. 
    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் புதிய ஸ்மார்ட்போனினை பட்ஜெட் விலையில் வெளியிட திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    பீஜிங்:

    சீன ஸ்மார்ட்போன் நிறுவனமான சியோமி இந்தியாவில் ரெட்மி நோட் 5 மற்றும் ரெட்மி நோட் 5 ப்ரோ ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்தது. கடந்த மாதம் ரெட்மி 5 ஸ்மார்ட்போனினை அறிமுகம் செய்திருந்த நிலையில் மற்றொரு புதிய ஸ்மார்ட்போனினை சியோமி அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

    சியோமி ரெட்மி எஸ்2 என அழைக்கப்பட இருக்கும் புதிய ஸ்மார்ட்போன் சீனா மற்றும் இந்தியாவில் விற்பனை செய்யப்பட இருக்கிறது. இதுகுறித்து XDA டெவலப்பர்கள் வெளியிட்டிருக்கும் தகவல்களில் ஸ்மார்ட்போனின் சிறப்பம்சங்கள் இணையத்தில் கசிந்திருக்கிறது.

    ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போனில் ஹெச்டி பிளஸ் டிஸ்ப்ளே, 18:9 ஆஸ்பெக்ட் ரேஷியோ, 720x1440 பிக்சல் ரெசல்யூஷன் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது. இத்துடன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 625 பிராசஸர், 2 ஜிபி ரேம், 16 ஜிபி இன்டெர்னல் மெமரியும், மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



    கோப்பு படம்: ரெட்மி நோட் 5 ப்ரோ

    புகைப்படங்களை எடுக்க 12 எம்பி சோனி IMX486 சென்சார், 5 எம்பி இரண்டாவது கேமரா சாம்சங் S5K5E8 செனசார், 5 எம்பி செல்ஃபி கேமரா, எல்இடி ஃபிளாஷ், போர்டிரெயிட் மோட், ஃபேஸ் அன்லாக் உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. ஆன்ட்ராய்டு ஓரியோ இயங்குதளம் கொண்டு இயங்கும் ரெட்மி எஸ்2 ஸ்மார்ட்போன் 3080 எம்ஏஹெச் பேட்டரி மூலம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    சமீபத்தில் சியோமி நிறுவனம் தனது முதல் கேமிங் ஸ்மார்ட்போனினை சீனாவில் அறிமுகம் செய்தது. பிளாக் ஷார்க் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட்போன் லிக்விட் கூலிங் சிஸ்டம், பிர்தேயக பட்டன், கழற்றக்கூடிய கேம்பேட், கூடுதல் பேட்டரி உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது.

    புதிய சியோமி ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 845 சிப்செட், அட்ரினோ 630 GPU கொண்டிருக்கிறது.
    முக அங்கீகார தொழில்நுட்ப பயன்பாடு விவகாரம் தொடர்பாக ஃபேஸ்புக் மீது புதிய வழக்கு தொடரப்பட்டுள்ளது.
    சான் ஃபிரான்சிஸ்கோ:

    ஃபேஸ்புக்கில் முக அங்கீகார தொழில்நுட்ப பயன்படுத்திய விவகாரத்தில் கலிபோர்னியா மாகாண நீதிபதி உத்தரவின் பேரில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. 

    பயனர்களுக்கு தெரியாமல் அவர்களின் பயோமெட்ரிக் தகவல்களை சேகரித்ததாக ஃபேஸ்புக் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் பயன்படுத்தும் போது நாம் எதிர்கொண்டு வரும் டேக் சஜஷன்ஸ் (tag suggestions) தொழில்நுட்பம் இல்லினியோஸ் சட்ட விதிகளை மீறும் வகையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    ஃபேஸ்புக்கில் உள்ள டேக் சஜெஷனஸ் தொழில்நுட்பம், தளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் புகைப்படங்களில் உள்ள நண்பர்களை கண்டறிந்து அவர்களை டேக் செய்ய பரிந்துரை செய்யும். புதிய குற்றச்சாட்டு தொடர்பாக வழக்கை சட்ட ரீதியாக எதிர்கொள்ள தயார் என ஃபேஸ்புக் தெரிவித்துள்ளது.

    ஃபேஸ்புக் மீது தொடரப்பட்டிருக்கும் வழக்கில் ஒரு சில ஃபேஸ்புக் பயனர்களும் பாதிக்கப்பட்டவர்கள் பிரிவில் இடம்பெற்றிருக்கலாம் என்பதால் அவர்களும் இந்த வழக்கில் தொடர்புடையவர்களாக கருதப்படுவர் என நீதிபதி ஜேம்ஸ் டொனாட்டோ தெரிவித்திருக்கிறார். 


    கோப்பு படம்

    அந்த வகையில் ஜூன் 7, 2011 முதல் புகைப்படங்களில் இருந்து ஃபேஸ் டெம்ப்ளேட் உருவாக்கி சேமித்து வைத்திருக்கும் அனைத்து ஃபேஸ்புக் பயனர்களும் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் எனலாம். ஃபேஸ்புக் பயனருக்கு சாதகமாக வழக்கு வெற்றிபெறும் பட்சத்தில் வழக்கில் தொடர்புடையோர் தகுந்த நஷ்ட ஈடு பெற முடியும். 

    இவ்வாறு நடக்கும் பட்சத்தில் பல பில்லியன் டாலர்களை ஃபேஸ்புக் நஷ்ட ஈடாக வழங்க வேண்டிய சூழல் ஏற்படும் என நீதிபதி டொனாட்டோ தெரிவித்திருக்கிறார். முன்னதாக அமெரிக்க பாராளுமன்ற குழுவின் முன் ஆஜரான ஃபேஸ்புக் நிறுவனர் அவர்களின் நுனுக்கமான கேள்விகளுக்கு பதில் அளித்திருந்தார். 

    ஃபேஸ்புக்கில் டேக் சஜெஷன்ஸ் அம்சம் ஜூன் 2011-இல் அறிமுகம் செய்யப்பட்டது. இந்த அம்சம் அப்லோடு செய்யப்படும் புகைப்படங்களில் இடம்பெற்றிருப்போரை ஃபேஸ்புக் சேகரித்து வைத்திருக்கும் டேட்டாபேஸ்-இல் ஒப்பிட்டு டேக் செய்ய சரியாக பரிந்துரை வழங்கும். 


    கோப்பு படம்

    நீதிபதி டொனாட்டோ தனது பரிந்துரையின் கீழ் இந்த தொழில்நுட்பம் நான்கு கட்ட வழிமுறைகளை கொண்டுள்ளது என தெரிவித்திருக்கிறார். 

    அதன் படி முதற்கட்டமாக இந்த மென்பொருள் புகைப்படங்களில் உள்ள முகங்களை கண்டறியும், அடுத்து அவற்றை ஒழுங்குப்படுத்தி, சரியான திசையில் மாற்றியமைக்கும், மூன்றாவதாக ஒவ்வொரு முகத்திற்கும் கணித முறையிலான வடிவத்தை வழங்கும், இறுதியில் ஃபேஸ்புக் சேகரித்து பதிவு செய்திருக்கும் டேட்டாபேஸ்-இல் இருந்து சரியான நபரை ஃபேஸ் டெம்ப்ளேட் மூலம் கண்டறியும் என தெரிவித்துள்ளார். 

    ஃபேஸ்புக் உதவி பக்கத்தில் ஃபேஸ் டெம்ப்ளேட்கள் தளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு டேக் செய்யப்படும் புகைப்படங்களின் ஒற்றுமையை வைத்து உருவாக்கப்படும். ஒருவர் ஃபேஸ்புக்கில் டேக் செய்யப்படாமல் இருந்தாலோ அல்லது ஃபேஸ்புக்கில் அனைத்து புகைப்படங்களையும் அன்-டேக் செய்திருந்தாலோ ஃபேஸ்புக் உங்களின் தகவல்களை சேகரிக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டிருக்கிறது. ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டும் இந்த அப்டேட் வழங்கப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கான வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சத்தில் புதிய வசதி சேர்க்கப்பட்டுள்ளது. வாட்ஸ்அப்பில் பணம் அனுப்புவதோடு மட்டுமின்றி இனி பண தேவையை கூறி பணம் வேண்டும் என கேட்க முடியும். 

    முன்னதாக வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் கொண்டு பணம் அனுப்பக்கூடிய வசதி மட்டும் வழங்கப்பட்டிருந்த நிலையில், தற்சமயம் பணம் வேண்டுமென காண்டாக்ட்களிடம் கோரிக்கை விடுக்க முடியும். புதிய அம்சம் யுபிஐ ஐடி (UPI ID) அல்லது கியூஆர் கோடு (QR Code) மூலம் மட்டுமே வேலை செய்கிறது.

    இதனால் காண்டாக்ட்-ஐ நேரடியாக தேர்வு செய்தால் இந்த அம்சம் வேலை செய்யாது. புதிய அம்சம் வாட்ஸ்அப் ஆன்ட்ராய்டு பீட்டா 2.18.113 வெர்ஷனில் காணப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக இந்த அம்சம் குறைந்தளவு பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. வாட்ஸ்அப் பேமெண்ட்ஸ் அம்சம் இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. இந்த அம்சம் யுபிஐ (UPI) மூலம் இயங்குகிறது.



    புதிய அம்சத்தை இயக்க செட்டிங்ஸ் -- பேமெண்ட்ஸ் -- நியூ பேமெண்ட்ஸ் --  யுபிஐ ஐடி அல்லது ஸ்கேன் கியூஆர் கோட் ஆப்ஷன்களில் ஒன்றை தேர்வு செய்ய வேண்டும். இவற்றில் ஒரு ஆப்ஷனை கிளிக் செய்த பின் பணம் அனுப்பவோ அல்லது கேட்கவோ திரையில் தெரியும் ஆப்ஷன்களை தேர்வு செய்ய வேண்டும்.

    முன்னதாக பணம் அனுப்பும் ஒற்றை ஆப்ஷன் மட்டுமே வழங்கப்பட்டிருந்தது. தற்சமயம் பணம் அனுப்புவது மற்றும் பணம் அனுப்ப சொல்வது என இரண்டு ஆப்ஷன்கள் இடம்பெற்றிருக்கிறது. இந்த கோரிக்கைகள் 24 மணி நேரத்திற்கு வேலை செய்யும். புதிய பணம் அனுப்ப சொல்லும் அம்சம் குறைந்த அளவிலான ஆன்ட்ராய்டு பீட்டா பயனர்களுக்கு மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
    ×