என் மலர்
அறிந்து கொள்ளுங்கள்
ஜியோ நிறுவனத்தில் கூகுள் நிறுவனம் ரூ 33. ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி தெரிவித்திருக்கிறார்.
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 43 வது வருடாந்திர பொதுக்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இவ்விழாவில் பேசிய ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் குழும தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் முகேஷ் அம்பானி ஜியோ பிளாட்ஃபார்ம்களில், கூகுள் நிறுவனம் ரூ. 33,737 கோடி முதலீடு செய்ய இருப்பதாக அறிவித்தார்.
இதன் மூலம் கூகுள் நிறுவனத்திற்கு ஜியோ பிளாட்ஃபார்ம்களில் 7.7 சதவீத பங்குகள் கிடைக்கும். கூகுள் முதலீட்டை சேர்த்து, ஜியோ பிளாட்ஃபார்ம் இதுவரை ரூ. 1,52,056 கோடி தொகைய ஃபேஸ்புக், விஸ்டா ஈக்விட்டி, கொல்கத்தா நைட் ரைடரஸ் என பல்வேறு நிறுவனங்களில் இருந்து முதலீடாக பெற்று இருக்கிறது.
மேலே குறிப்பிடப்பட்டுள்ள பரிமாற்றங்கள் அனைத்திற்கும் முறையான ஒழுங்குமுறை மற்றும் இதர அனுமதிகள் பெற வேண்டி இருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்துடன் ஜியோ மற்றும் கூகுள் நிறுவனங்கள் இணைந்து என்ட்ரி லெவல் 4ஜி/5ஜி ஸ்மார்ட்போன் மாடல்களை வெளியிட இருக்கின்றன. இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு இயங்குதளம் மற்றும் பிளே ஸ்டோருக்கு கஸ்டமைசேஷனுடன் அறிமுகமாக இருக்கிறது.
இவைதவிர இந்தியாவின் முதல் கிளவுட் சார்ந்த வீடியோ கான்பரன்சிங் செயலியான ஜியோ மீட் வெளியான சில நாட்களில் சுமார் 50 லட்சத்திற்கும் அதிக டவுன்லோட்களை கடந்துள்ளதாக முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
முன்னதாக ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் நிறுவனம் ஜியோமீட் எனும் வீடியோ கான்பரன்சிங் செயலியை அறிமுகம் செய்தது. இந்த செயலி வரம்பற்ற அழைப்புகளை முற்றிலும் இலவசமாக வழங்குவதாக அறிவித்து உள்ளது. ஜியோமீட் செயலி ஆண்ட்ராய்டு, ஐஒஎஸ், விண்டோஸ், மேக் ஒஎஸ் மற்றும் வெப் போன்ற தளங்களில் கிடைக்கிறது.
கூகுள் வீடியோ தேடல்களில் யூடியூப் வீடியோக்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது.
கூகுளில் ஏதேனும் வீடியோக்களை தேடும் போது இணையத்தில் மற்ற தளங்களை விட யூடியூப் வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படுவது கண்டறியப்பட்டுள்ளது. இணைய தேடல் பற்றி தனியார் நிறுவனம் மேற்கொண்ட ஆய்வில் இது தெரியவந்துள்ளது.
இணையத்தில் கூடைபந்து விளையாட்டு பற்றி வெளியான வீடியோக்களை தேடிய போது, ஃபேஸ்புக்கில் டிரெண்ட் ஆகி சுமார் பத்து லட்சம் பேர் பார்த்த வீடியோவுக்கு மாற்றாக யூடியூபில் சில லட்சம் பேர் பார்த்த வீடியோ கூகுள் தேடலில் முதன்மையாக பட்டியலிடப்பட்டது.

மற்ற வீடியோக்களை விட யூடியூப் வீடியோக்களுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் வகையில் தேடல் சார்ந்த குறியீடுகளில் கூகுள் பொறியாளர்கள் குறிப்பிடத்தக்க மாற்றங்களை மேற்கொண்டு இருக்கின்றனர் என தகவல் வெளியாகி உள்ளது.
சமீப ஆண்டுகளில் கூகுள் அதிகாரிகள், தேடல்களுக்கான பதில்களில் யூடியூப் வீடியோக்கள் முதலில் தோன்ற செய்ய முடிவு எடுத்திருப்பதாக தெரிகிறது. இதன் மூலம் போட்டியாளர்களை விட யூடியூப் அதிக பார்வையாளர்களை பெற வைக்க முடியும் என கூறப்படுகிறது.
அனைவரும் சமம் ஆனால் யூடியூப் முதலில் இருக்கும் என இந்த விவகாரத்தில் தொடர்புடைய நபர் ஒருவர் கருத்து தெரிவித்து இருக்கிறார்.
எனினும், 'யூடியூப் மற்றும் வேறு எந்த வீடியோ தளங்களுக்கும் கூகுள் தேடலில் முன்னுரிமை வழங்கப்படுவதில்லை. கூகுள் சிஸ்டம்கள் இணையத்தில் மக்கள் தேடல்களுக்கு அதிக தொடர்புடைய பதில்களும், அவர்களுக்கு உதவும் வகையிலான பதில்களும் தான் பட்டியலிடப்படுகின்றன' என்று கூகுள் செய்தி தொடர்பாளர் தெரிவித்தார்.
ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு டிராய் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்து இருக்கிறது.
இந்தியாவில் அதிக தொகை கொடுக்கும் சிலருக்கு மட்டும் அதிவேக இணைய வசதி வழங்கும் பிரத்யேக சலுகைகள் வழங்குவதை நிறுத்த பாரதி ஏர்டெல் மற்றும் வோடபோன் ஐடியா நிறுவனங்களுக்கு டிராய் உத்தரவிட்டுள்ளது.
மேலும் அதிக விலை கொடுக்கும் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக டேட்டா வழங்கும்பட்சத்தில், மற்ற சலுகைகளை தேர்வு செய்து பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் விருப்பத்திற்கு எந்த விதத்தில் பாதுகாப்பு வழங்கப்படுகிறது என டிராய் கேள்வி எழுப்பி உள்ளது.
இதுகுறித்து தனியார் செய்தி நிறுவனத்திற்கு பதில் அளித்த ஏர்டெல் செய்தி தொடர்பாளர், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த நெட்வொர்க் மற்றும் சேவை அனுபவத்தை வழங்க அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

முன்னதாக ஏர்டெல் நிறுவனம் தனது பிளாட்டினம் மொபைல் வாடிக்கையாளர்கள், ரூ. 499 மற்றும் அதற்கும் அதிக தொகை செலுத்தும் போஸ்ட்பெயிட் இணைப்புகளுக்கு அதிக முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தது.
அதன்படி பிளாட்டினம் வாடிக்கையாளர்களுக்கு மற்ற வாடிக்கையாளர்களை விட அதிக முன்னுரிமை வழங்கப்படும். இந்த விவகாரத்தில் ஏர்டெல் நிறுவனம் பதில் அளிக்க டிராய் ஏழு நாட்கள் காலஅவகாசம் வழங்கி இருக்கிறது.
வோடபோன் ஐடியா நிறுவனம் தனது ரெட்எக்ஸ் போஸ்ட்பெயிட் சலுகையில் மற்ற சலுகையை விட 50 சதவீதம் வேகமான டேட்டா வழங்கப்படுகிறது.
கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் சிஇஒ சுந்தர் பிச்சை இந்தியாவில் கூகுள் நிறுவனம் ரூ. 75 ஆயிரம் கோடி முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
கூகுள் ஃபார் இந்தியா 2020 நிகழ்வு ஆன்லைன் முறையில் நடைபெற்றது. யூடியூப் தளத்தில் நேரலை செய்யப்பட்ட இவ்விழாவில் மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், கூகுள் மற்றும் ஆல்பபெட் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரி சுந்தர் பிச்சை, கூகுள் இந்தியா அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்வில் பேசிய சுந்தர் பிச்சை, கூகுள் நிறுவனம் அடுத்த ஐந்து முதல் ஏழு ஆண்டுகளில் இந்தியாவில் சுமார் 75 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்ய இருப்பதாக தெரிவித்தார்.
முதலீட்டின் படி இந்த தொகை முதலீடுகள், பல்வேறு பணிகளில் கூட்டணி அமைப்பது என பல்வேறு விவகாரங்களில் செலவிடப்படும் என அவர் மேலும் தெரிவித்தார். இந்தியாவின் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு உதவும் வகையில் இந்த முதலீடுகள் இருக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் விவகாரத்தில் பல்டி அடித்துள்ளது.
அமேசான் நிறுவனம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி தனது ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்து இருக்கிறது.
முந்தைய தகவல்களில் மொபைலில் டிக்டாக் பயன்படுத்த வேண்டாம், அவசியம் எனில் லேப்டாப் அல்லது டெஸ்க்டாப் பிரவுசர்களில் டிக்டாக் பயன்படுத்தலாம். மேலும் ஸ்மார்ட்போன்களில் டிக்டாக் பயன்படுத்தும் பட்சத்தில் அலுவல் ரீதியிலான மின்னஞ்சல்கள் தொடர்ந்து அனுப்பப்படாது என அமேசான் தெரிவித்தது.

தற்சமயம் அமேசான் செய்தி தொடர்பாளர் வெளியிட்ட தகவல்களில் ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு விட்டது என தெரிவித்து இருக்கிறார். மேலும் டிக்டாக் விவகாரத்தில் எங்களது முடிவில் இதுவரை எந்த மாற்றமும் இல்லை என அவர் தெரிவித்தார்.
டிக்டாக் நிறுவனத்திற்கு பயனர் பாதுகாப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும். பயனர்களின் தனியுரிமையை பாதுகாப்பதில் அதிக கவனம் கொண்டுள்ளோம் என டிக்டாக் நிறுவன செய்தி தொடர்பாளர் தனியார் நிறுவன கேள்விக்கு பதில் அளித்து இருக்கிறார்.
ஜெபிஎல் நிறுவனம் இந்திய சந்தையில் ஒன் சீரிஸ் டெஸ்க்டாப் ரெபரன்ஸ் மாணிட்டர் மாடல்களை அறிமுகம் செய்து இருக்கிறது.
ஜெபிஎல் நிறுவனம் இந்தியாவில் ஒன் சீரிஸ் 104 பிடி டெஸ்க்டாப் ரெபரன்ஸ் மாணிட்டர்களை அறிமுகம் செய்துள்ளது. மிகமெல்லிய மற்றும் காம்பேக்ட் டிசைன் கொண்டிருக்கும் ரெபரன்ஸ் மாணிட்டர்கள் தெளிவான ஆடியோவை வழங்கும். மேலும் இதனை ப்ளூடூத், ஸ்மார்ட் அம்சங்கள் மற்றும் பல்வேறு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.
புதிய ப்ளூடூத் ரெபரன்ஸ் மாணிட்டர்களில் கோ-ஆக்சிக்கல் டிரைவர்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இவற்றுடன் லோ - ஃபிரீக்வன்சி வூஃபர் மற்றும் மென்மையான டோம் ட்வீட்டர் வழங்கப்பட்டுள்ளன. இவை சரியான ஃபிரீக்வன்சியை வெளிப்படுத்தும் திறன் கொண்டவை ஆகும்.
இதனுள் சக்திவாய்ந்த 60 வாட் கிளாஸ் டி பவர் ஆம்ப்ளிஃபையர் வழங்கப்பட்டுள்ளன. இவை ஒவ்வொரு ஸ்பீக்கருக்கும் 30 வாட் அளவில் தெளிவான இரைச்சலற்ற ஆடியோ அனுபவத்தை வழங்குகிறது. இரு மாடல்களிலும் ப்ளூடூத் 5 கனெக்டிவிட்டி, முன்புறம் பேனல் இன்புட் கண்ட்ரோல் வழங்கப்பட்டுள்ளது.

இதனால் பயனர்கள் ப்ளூடூத், ஆக்ஸ், ஆர்சிஏ மற்றும் டிஆர்எஸ் உள்ளிட்டவற்றில் ஒன்றை தேர்வு செய்து கொள்ள முடியும். முன்புறம் பேனல் வால்யூம் கண்ட்ரோல்கள், ஹெட்போன் ஜாக் மற்றும் 1/4 இன்ச் பேலன்ஸ்டு, டூயல் ஆர்சிஏ, சிங்கிள் 1/8 இன்ச் இன்புட் மற்றும் ப்ளூடூத் வழங்கப்பட்டு இருக்கிறது.
ஜெபிஎல் ஒன் சீரிஸ் 104 பிடி மற்றும் 104 பிடிடபிள்யூ ரெபரன்ஸ் மாணிட்டர்களின் விலை ரூ. 11499 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை ப்ளிப்கார்ட் தளத்தில் விற்பனை செய்யப்படுகின்றன.
ரியல்மி நிறுவனம் விரைவில் 100 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
ரியல்மி நிறுவனம் விரைவில் 100 வாட் அல்ட்ரா டார்ட் ஃபாஸ்ட் சாப்ஜிங் தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. புதிய தொழில்நுட்பம் எப்போது வெளியாகும் என்று சரியான வெளியீட்டு தேதி அறியப்படவில்லை.
தற்சமயம் ரியல்மி பிராண்டு 65 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பத்தை ரியல்மி எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போனுடன் வழங்கி வருகிறது. ரியல்மி விரைவில் அறிமுகம் செய்ய இருக்கும் ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனுடன் 100 வாட் அல்ட்ரா டார்ட் ஃபாஸ்ட் சார்ஜிங் வசதி வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஃபாஸ்ட் சார்ஜிங் தொழில்நுட்பம் அல்ட்ரா டார்ட் என அழைக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த தொழில்நுட்பம் அதிகபட்சம் 120 வாட் சார்ஜிங் வழங்கும் என தெரிகிறது. புதிய தொழில்நுட்பம் ஜூலை மாதத்திற்குள் அறிமுகமாகும் பட்சத்தில் இது அடுத்த ஃபிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் வழங்கப்படலாம்.
முன்னதாக சியோமி நிறுவனம் 100 வாட் சூப்பர்சார்ஜ் டர்போ தொழில்நுட்பத்தை அறிமுகம் செய்து இருக்கிறது. இந்த தொழில்நுட்பம் 4000 எம்ஏஹெச் திறன் கொண்ட பேட்டரியை 17 நிமிடங்களில் சார்ஜ் செய்துவிடும் என சியோமி தெரிவித்து உள்ளது.
இந்திய சந்தையில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பதாக சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் கூறப்பட்டுள்ளது.
இந்தியாவில் டிக்டாக் உள்பட 59 சீன செயலிகளுக்கு சமீபத்தில் தடை விதிக்கப்பட்டது. சீன செயலிகள் தடை செய்யப்பதைத் தொடர்ந்து பல்வேறு இந்திய செயலிகள் மீதான வரவேற்பு அதிகரித்து வருகிறது. எனினும், சமூக வலைதளங்களில் வைரலாகும் தகவல்களில் இந்தியாவில் டிக்டாக் செயலி புதிய பெயரில் அறிமுகமாகி இருப்பதாக கூறப்பட்டுள்ளது.
உண்மையான டிக்டாக் செயலி தான் தற்சமயம் டிக்டாக் ப்ரோ எனும் பெயரில் வெளியாகி இருப்பதாக வைரல் தகவல்களில் கூறப்பட்டு வருகிறது. வைரல் பதிவுகளில் கூறப்பட்டுள்ள தகவல்களை பார்க்கும் போதே அதில் உண்மையில்லை என உறுதியாகிவிட்டது.
ஹேக்கர்கள் டிக்டாக் ப்ரோ எனும் செயலியை பயனர்களுக்கு வாட்ஸ்அப் செயலி மற்றும் எஸ்எம்எஸ் மூலம் அனுப்பி, இதனை டவுன்லோட் செய்ய கோரி வருகின்றனர். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதால், ஹேக்கர்கள் போலி செயலிகளின் டவுன்லோட்களை அதிகரித்துக் கொள்ள இதுபோன்ற முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
வாட்ஸ்அப் மற்றும் எஸ்எம்எஸ் தளங்களில் பயனர்களுக்கு வரும் இதுபோன்ற குறுந்தகவல்கள் போலியானவை ஆகும். பயனர்களை டவுன்லோட் செய்யக் கோரும் டிக்டாக் ப்ரோ செயலி ஏபிகே தளத்தில் இருப்பதாக வைரல் தகவல்களில் கூறப்பட்டுள்ளது. ஏபிகே தள செயலிகள் பெரும்பாலும் மால்வேர் நிறைந்தவை ஆகும்.

பயனர்களுக்கு அனுப்பப்படும் குறுந்தகவல்களில், “Enjoy Tiktok Videos and also make Create Videos again. Now TikTok is only Available in (TikTok pro) So Download from below,” போன்ற வாசகம் எழுதப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து டிக்டாக் ப்ரோ ஏபிகே (APK) ஃபைல் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு பரப்பப்படும் இணைய முகவரிகள் தீங்கு விளைவிக்கும் தகவல் நிறைந்தவை ஆகும். இவற்றை டவுன்லோட் செய்தவர்கள் வழங்கிய விவரங்களின் படி இந்த செயலியில் உண்மையான டிக்டாக் லோகோ போன்ற ஐகான் காணப்படுகிறது. செயலி இன்ஸ்டால் ஆகும் போது, போனின் கேமரா, மைக் போன்ற விவரங்களை இயக்க அனுமதி கோருகிறது.
கேட்கப்படும் அனுமதி வழங்கப்பட்டதும், செயலி போனில் அப்படியே இருக்கிறது. பெரும்பாலும் செயலியின் பின்புறம் மால்வேர் இருக்கும் என கூறப்படுகிறது. போலி செயலி கூகுள் பிளே ஸ்டோரில் கிடைக்கவில்லை. இதை கொண்டே இந்த செயலி போலியானது என அறிந்து கொள்ள முடியும்.
போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனத்தின் நோக்கியா 1 ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்கப்படுகிறது.
ஹெச்எம்டி குளோபல் நிறுவனம் நோக்கியா 1 ஆண்ட்ராய்டு கோ எடிஷன் ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு 10 அப்டேட் வழங்க துவங்கி இருக்கிறது. இந்தியாவில் நோக்கியா 1 ஸ்மார்ட்போன் மார்ச் 2018 இல் அறிமுகம் செய்யப்பட்டது. முதலில் இந்த ஸ்மார்ட்போன் ஆண்ட்ராய்டு 8.1 ஒரியோ கோ எடிஷன் இயங்குதளம் கொண்டிருந்தது.
பின் 2019 ஜூன் மாதத்தில் இந்த ஸ்மார்ட்போனிற்கு ஆண்ட்ராய்டு பை அப்டேட் வழங்கப்பட்டது. புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட் ஸ்மார்ட்போனிற்கு கூடுதல் பாதுகாப்பு, தனியுரிமை அம்சங்களை வழங்குகிறது. இத்துடன் டார்க் தீம், பிரத்யேக பிரைவசி அம்சம் உள்ளிட்டவற்றை வழங்கப்பட்டு உள்ளது.

புதிய அப்டேட் 859 எம்பி அளவில் இருக்கிறது. புதிய ஆண்ட்ராய்டு 10 அப்டேட்டுடன் ஆண்ட்ராய்டு 10 அம்சங்கள் மற்றும் ஜூன் 2020 செக்யூரிட்டி பேட்ச் வழங்கப்படுகிறது. இந்த அப்டேட் இந்தியா மட்டுமின்றி பல்வேறு இதர நாடுகளிலும் வழங்கப்படுகிறது. வரும் நாட்களில் இந்த அப்டேட் அனைவருக்கும் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
நோக்கியா 1 மாடலை தொடர்ந்து நோக்கியா 2.1 ஸ்மார்ட்போனிற்கும் ஆண்ட்ராய்டு 10 கோ எடிஷன் அப்டேட் விரைவில் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனின் விலை மாற்றப்பட்டு இருக்கிறது.
மோட்டோராலா நிறுவனம் தனது ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் மாடலை கடந்த மாதம் இந்தியாவில் அறிமுகம் செய்தது. வெளியான சில வாரங்களில் இதன் விலை இந்தியாவில் உயர்த்தப்பட்டு இருக்கிறது. அந்த வகையில் விலை உயர்வின்படி மோட்டோரோலா ஒன் பியுஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் ரூ. 17499 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.
மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி என ஒற்றை வேரியண்ட்டில் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டு ரூ.16999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில், இதன் விலையில் ரூ. 500 உயர்த்தப்பட்டு இருக்கிறது.
இந்த விலை உயர்வு தற்காலிகமானதா அல்லது நிரந்தரமானதா என இதுவரை அறிவிக்கப்படவில்லை. உயர்த்தப்பட்ட புதிய விலை ப்ளிப்கார்ட் தளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டு இருக்கிறது. புதிய விலையில் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் விற்பனை ஜூலை 13 ஆம் தேதி நடைபெறுகிறது.

சிறப்பம்சங்களை பொருத்தவரை மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போனில் ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஃபுல் ஹெச்டி+ 19.5:9 டோட்டல் விஷன் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 730ஜி பிராசஸர், 6 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
இத்துடன் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதியும் வழங்கப்பட்டு இருக்கிறது. பிளாஸ்டிக் மூலம் உருவாக்கப்பட்டு இருக்கும் மோட்டோரோலா ஒன் பியூஷன் பிளஸ் ஸ்மார்ட்போன் கிளாஸி ஃபினிஷ், வளைந்த எட்ஜ்கள், பின்புறம் கைரேகை சென்சார் கொண்டிருக்கிறது.
இந்தியாவில் உள்ள டெவலப்பர்களுக்கு வாய்ப்பு அளிக்கும் வகையில் மத்திய அரசு நிறுவனங்கள் இணைந்து போட்டி ஒன்றை அறிவித்து இருக்கின்றன.
மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம், அட்டல் இன்னோவேஷன் மிஷன் மற்றும் நிதி ஆயோக் உடன் இணைந்து டிஜிட்டல் இந்தியா ஆத்மநிர்பார் பாரத் இன்னோவேஷன் சேலஞ்ச் எனும் போட்டியை ஸ்டார்ட் அப் மற்றும் தொழில்முனைவோருக்காக அறிவித்து இருக்கிறது.
இந்த போட்டியின் மூலம் தலைசிறந்த இந்திய செயலிகள்- அதாவது மக்கள் ஏற்கனவே பயன்படுத்தும், உலக சந்தையில் சவால் விடும் அம்சங்கள் நிறைந்தவைகளை கண்டறிய திட்டமிடப்பட்டுள்ளது.

இந்தியர்கள் மட்டுமின்றி ஒட்டுமொத்த உலகிற்கும் பயன்தரும் வகையிலான தொழில்நுட்ப சேவைகளை கண்டறிந்து உருவாக்கும் தொழில்முனைவோர் மற்றும் டெவலப்பர்களுக்கு ரொக்க பரிசு மற்றும் நிதியுதவி உள்ளிட்டவை வழங்கப்படுகிறது. அதன்படி டெவலப்பர்கள் எட்டு பிரிவுகளின் கீழ் செயலிகளை உருவாக்க வேண்டும்.
மத்திய அரசு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள போட்டியில் தங்களது கண்டுபிடிப்புகளை சமர்பிக்க ஜூலை 18 கடைசி தேதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் கலந்து கொண்டு எட்டு பிரிவுகளில் வெற்றி பெறுவோருக்கு ரூ. 45 லட்சம் வரை பரிசு வழங்கப்படுகிறது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை தொடர்ந்து பாரதி ஏர்டெல் நிறுவனமும் சொந்தமாக வீடியோ கான்பரன்சிங் செயலி ஒன்றை வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பாரதி ஏர்டெல் நிறுவனம் தனக்கென சொந்தமாக வீடியோ கான்பரன்சிங் செயலி ஒன்றை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் விரைவில் இதனை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
தற்சமயம் ஊரடங்கு காரணமாக ஜூம், கூகுள் ஹேங்அவுட்ஸ், மைக்ரோசாஃப்ட் டீம்ஸ் போன்ற வீடியோ கான்பரன்சிங் செயலிகள் அதிக பிரபலமாகி வருகிறது. அந்த வரிசையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனமும் தனக்கான வீடியோ கான்பரன்சிங் செயலியை ஜியோமீட் எனும் பெயரில் அறிமுகம் செய்தது.

இந்நிலையில், ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத்தை போன்றே பாரதி ஏர்டெல் நிறுவனமும் வீடியோ கான்பரன்சிங் செயலி கொண்ட டெலிகாம் நிறுவனங்களில் ஒன்றாக களமிறங்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. முதற்கட்டமாக இந்த செயலி கட்டண அடிப்படையிலும், பின் வரவேற்புக்கு ஏற்ப வழக்கமான செயலியாக வெளியிட இருப்பதாக கூறப்படுகிறது.
வீடியோ கான்பரன்சிங் செயலி தவிர ஏர்டெல் நிறுவனம் பல்வேறு வர்த்தகம் சார்ந்த சேவைகளை துவங்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவில் ஏர்டெல் நிறுவனம் 2500 பெரும் நிறுவனங்கள் மற்றும் ஐந்து லட்சத்திற்கும் அதிக சிறு மற்றும் குறுந்தொழில் சார்ந்த நிறுவனங்களுக்கு சேவை வழங்கி வருகிறது.
புதிய வீடியோ கான்பரன்சிங் செயலி பயனர் விவரங்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் அதிக கவனம் செலுத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. ஏர்டெல் புதிய சேவை அதிநவீன AES 256 ரக என்க்ரிப்ஷன் கொண்டிருக்கும் என்றும் இது மொபைல் மற்றும் டெஸ்க்டாப் சாதனங்களில் இயங்கும் என கூறப்படுகிறது.






