என் மலர்
கணினி
ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு கம்ப்யூட்டரான ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. இதன் விலை மற்றும் முழு தகவல்களை தொடர்ந்து பார்ப்போம்.
புதுடெல்லி:
ஆப்பிள் நிறுவனத்தின் புதுவரவு மற்றும் சக்திவாய்ந்த கம்ப்யூட்டரான ஐமேக் ப்ரோ இந்தியாவில் வெளியிடப்பட்டுள்ளது. டிசம்பர் 2017-இல் ஐமேக் ப்ரோ விலை இந்தியாவில் ரூ.4,15,000 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இன்டெல் சியோன் W பிராசஸர் சார்ந்து - 8 கோர், 10 கோர், மற்றும் 18 கோர் என மூன்று வித மாடல்களில் கிடைக்கிறது. எனினும் இந்தியாவில் 8-கோர் பிராசஸர் கொண்ட மாடல் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. புதிய ஐமேக் ப்ரோ இந்தியாவில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ விற்பனை மையங்களில் மட்டும் பிரத்யேகமாக விற்பனை செய்யப்படுகிறது.
சிறப்பம்சங்களை பொருத்த வரை புதிய ஐமேக் ப்ரோ மாடலில் 27 இன்ச் ரெட்டினா டிஸ்ப்ளே, 5K (5120x2280) ரெசல்யூஷன் கொண்டுள்ளது. இத்துடன் 3.2 ஜிகாஹெர்ட்ஸ் கொண்ட இன்டெல் சியோன் W 8-கோர் பிராசஸர் கொண்டுள்ளது. இத்துடன் 8 ஜிபி ரேடியான் ப்ரோ வீகா 56ல கிராஃபிக் பிராசசிங் யுனிட் (GPU) கொண்டிருக்கிறது. புதிய ஐமேக் ப்ரோவில் 2666 மெகாஹெர்ட்ஸ் 32 ஜிபி ரேம், 1000 ஜிபி மெமரி கொண்டிருக்கிறது.
ரேம் மற்றும் மெமரியை கூடுதலாக நீட்டிக்கும் வசதி வழங்கப்பட்டுள்ளது. கனெக்டிவிட்டியை பொருத்த வரை புதிய ஐமேக் ப்ரோவில் 1080 பிக்சல் ஃபேஸ்டைம் ஹெச்.டி. கேமரா, நான்கு யுஎஸ்பி-3 போர்ட், நான்கு தண்டர்போல்ட் 3 போர்ட், எஸ்.டி.X கார்டு ஸ்லாட், ஈத்தர்நெட் போர்ட், 3.5 எம்.எம். ஹெட்போன் ஜாக், ப்ளூடூத் 4.1 உள்ளிட்டவை வழங்கப்ட்டுள்ளது.

டெவலப்பர் வொர்க்ஃப்ளோ, உயர்-ரக புகைப்படங்களை எடிட் செய்யும் வசதி, ரியல்-டைம் 4K மற்றும் 8K வீடியோக்களை எடிட் செய்யும் வசதியை வழங்குகிறது. புதிய தலைமுறை கம்ப்யூட்டிங் கோர், 16 ஜிபி பேண்ட்வித் மெமரி, வீகா சி.பி.யு. கொண்டிருக்கிறது. இந்த சி.பி.யு. 3டி ரென்டரிங் மற்றும் விர்ச்சுவல் ரியாலிட்டி ஃபிரேம்-ரேட் 11 டெராஃபிளாப் கம்ப்யூட்டிங் திறன் வழங்குகிறது.
அதிநவீன ஹார்டுவேர் அம்சங்களுடன் புதிய ஐமேக் ப்ரோ தோற்றமும் அனைவரும் விரும்பும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. ஸ்பேஸ் கிரே ஃபினிஸ் மற்றும் மேஜிக் கீபோர்டு, மேஜிக் மவுஸ் ஆப்ஷனல் மேஜிக் டிராக்பேட் உள்ளட்டவை வழங்கப்பட்டுள்ளது. இந்த கம்ப்யூட்டரில் 27.0 இன்ச் ரெட்டினா 5K டிஸ்ப்ளே, 500 நிட்ஸ் பிரைட்னஸ், P3 வைடு கலர் கமுட் மற்றும் 100 கோடி நிறங்களை சப்போர்ட் செய்கிறது.
நான்கு மைக்ரோபோன் மற்றும் பீம்ஃபோமிங் தொழில்நுட்பம் கொண்டுள்ள புதிய ஐமேக் ப்ரோ, 1080 பிக்சல் ஃபேஸ் டைம் ஹெச்.டி. கேமரா, மேம்படுத்தப்பட்ட லோ-லைட் செயல்திறன் மற்றும் ஸ்பீக்கர்கள் 50 சதவிகிதம் வரை அதிக ஒலியை வழங்குகிறது. இத்துடன் புதிய தெர்மல் ஆர்கிடெக்ச்சர், 80 சதவிகிதம் வரை அதிக குளிர்ச்சியை வழங்குகிறது.
இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வரும் புதிய அம்சம் இன்ஸ்டா ஸ்டோரிக்களை ஸ்கிரீன்ஷாட் எடுத்தால் ஸ்டோரி பதிவிட்டவரிடம் போட்டுக்கொடுக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
இன்ஸ்டாகிராம் வெளியிட்டு வரும் புதிய அப்டேட், இன்ஸ்டா ஸ்டோரீக்களை ஸ்கிரீன்ஷாட் எடுப்பவர்களை ஸ்டோரி பதிவிட்டவருக்கு தெரியப்படுத்துகிறது. இதே அம்சம் ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்யும் போதும் கச்சிதமாக வேலை செய்கிறது.
பாதுகாப்பு காரணங்களுக்காக வழங்கப்பட்டிருக்கும் புதிய அம்சம், இன்ஸ்டா ஸ்டோரிக்கள் ஸ்கிரீன்ஷாட் எடுக்கப்படும் போது ஸ்டோரி பதிவிட்டவருக்கு நட்சத்திர குறியீடு மூலம் ஸ்கிரீன்ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்யப்பட்டதை உணர்த்தும். இந்த குறியீடு ஸ்டோரி வியூஸ் பகுதியில் இடம்பெறும். மேலும் மற்றவர்களின் ஸ்டோரிக்களை முதல் முறை ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் போது இன்ஸ்டாகிராம் எச்சரிக்கை செய்யும்.
அடுத்த முறை ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் போது ஸ்டோரி பதிவிட்டவருக்கு, நீங்கள் ஸ்கிரீன்ஷாட் அல்லது ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்தது நட்சத்திர குறியீடு மூலம் உணர்த்தப்படும். இதனால் மற்றவர்கள் ஸ்டோரிக்களை ஒருமுறை ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் போது மட்டும் மற்றவர்களிடம் தெரியப்படுத்தாது.

எனினும் புதிய பாதுகாப்பு அப்டேட் ஃபிளைட் மோடில் வேலை செய்யாது என்ற தகவல் இன்ஸ்டா வாசிகளுக்கு சற்றே ஆறுதலாக அமைந்துள்ளது. கடந்த மாதம் வெளியான தகவல்களின் படி இன்ஸ்டாகிராமில் பல்வேறு புதிய அம்சங்கள் வழங்கப்படுவதற்கான சோதனை நடைபெற்று வருவதாக கூறப்பட்டது. கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் இன்ஸ்டாகிராம் வெளியிட்ட அப்டேட்டில் டைரக்ட் மெசேஜ்களை ஸ்கிரீன்ஷாட் எடுக்கும் போது இதேபோன்ற அம்சம் அறிமுகம் செய்தது.
இதுதவிர ரீகிராம் (Regram) எனும் புதிய அம்சத்தை இன்ஸ்டாகிராம் சோதனை செய்து வருகிறது. இந்த அம்சம் கொண்டு பொது ஃபீட் (Public Feed ) போஸ்ட்களை வாடிக்கையாளர்கள் தங்களது ஸ்டோரிக்களில் பகிர்ந்து கொள்ள முடியும். இந்த அம்சம் வழங்கப்பட இருப்பதை இன்ஸ்டாகிராம் தனது அதிகாரப்பூர்வ வலைத்தளத்தில் உறுதி செய்தது.
இன்ஸ்டாகிராம் நண்பர்களுடன் செலவழிக்கப்படும் அனைத்து சம்பவங்களையும் வாடிக்கையாளர்கள் மிக எளிமையாக பகிர்ந்து கொள்ள ஏதுவாக புதிய அம்சங்களை வழங்க தொடர்ந்து பணியாற்றி வருகிறோம் என இன்ஸ்டாகிராம் வலைத்தளத்தில் அந்நிறுவனம் தெரிவித்தது. இன்ஸ்டாகிராமின் புதிய அம்சம் சில வாடிக்கையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருக்கும் நிலையில், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் செயலியில் யு.பி.ஐ. சார்ந்த பண பரிமாற்ற வசதி விரைவில் வழங்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது.
புதுடெல்லி:
வாட்ஸ்அப் செயலியில் அதிகம் எதிர்பார்க்கப்படும் பண பமாற்றம் செய்யு்ம வசதி, இந்தியாவில் சோதனை செய்யப்படுகிறது. தேர்வு செய்யப்பட்ட வாட்ஸ்அப் பீட்டா பயனர்களுக்கு புதிய அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐ.ஓ.எஸ். இயங்குதளங்களில் சோதனை செய்யப்படும் பண பரிமாற்றம் செய்யும் வசதி மத்திய அரசின் யு.பி.ஐ. (UPI) வழிமுறை சார்ந்து இயங்குகிறது.
வாட்ஸ்அப் ஐ.ஓ.எஸ். பீட்டா 2.18.21 மற்றும் ஆண்ட்ராய்டு பீட்டா 2.18.41 பதிப்புகளில் பண பரிமாற்றம் செய்யும் வசதி சோதனை செய்யப்படுகிறது. இந்தியாவில் வாட்ஸ்அப் பயன்படுத்துவோர் எண்ணிக்கை அதிகம் என்பதால், டிஜிட்டல் பண பரிமாற்ற எண்ணிக்கை கணிசமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் பண பரிமாற்றம் செய்யும் வசதி கிஸ்மோடைம்ஸ் மூலம் வெளியாகி உள்ள நிலையில், இந்த அம்சம் தேர்வு செய்யப்பட்ட பீட்டா டெஸ்டர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வருகிறது. இந்த அம்சத்தை குறுந்தகவல் டைப் செய்யும் பகுதியில் உள்ள அட்டாச்மெண்ட் பகுதியில் இருந்து இயக்க முடியும். அட்டாச்மெண்ட் பகுதியில் கேலரி, வீடியோ, டாக்குமெண்ட் உள்ளிட்டவற்றுடன் காணப்படுகிறது.

பேமெண்ட்ஸ் ஆப்ஷனை கிளிக் செய்ததும், வாடிக்கையாளர் பயன்படுத்தும் வங்கியை தேர்வு செய்து, கணக்கை யு.பி.ஐ.-இல் இணைக்க வேண்டும். யு.பி.ஐ. பேமெண்ட் வழிமுறையை இதுவரை பயன்படுத்தாதோர், ஆத்தென்டிகேஷன் பின் உருவாக்க வேண்டும். கூடுதலாக யு.பி.ஐ. கணக்கையும் உருவாக்க (முன்னதாக யு.பி.ஐ. கணக்கை துவங்காதோர்) வேண்டும். இதனை யு.பி.ஐ. செயலி அல்லது குறிப்பிட்ட வங்கி வலைத்தளம் அல்லது செயலி மூலம் மேற்கொள்ள முடியும்.
இதுகுறித்து ஃபோன்அரினா வெளியிட்டுள்ள தகவல்களின் படி வாட்ஸ்அப் பேமெண்ட் அம்சம் பணத்தை அனுப்புவோர் மற்றும் பெறுவோர் செயல்படுத்தி இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பீட்டாவில் சோதனை செய்யப்படுகிறது என்றாலும் வங்கி கணக்குகளை இணைப்பதில் கோளாறு ஏற்படுவதாக வாடிக்கையாளர்கள் குற்றஞ்சாட்டி வருவதாக கூறப்படுகிறது.
கடந்த ஆண்டு ஜூலை மாதம் முதல் யு.பி.ஐ. சார்ந்த பண பரிமாற்ற சேவையை செயல்படுத்த வாட்ஸ்அப் முயற்சித்து வருகிறது. முன்னதாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாத வாக்கில் இதே அம்சம் ஆண்ட்ராய்டு பீட்டா பதிப்பில் காணப்பட்டது. மத்திய அரசு யு.பி.ஐ. வழிமுறையை செயல்படுத்தியது முதல் சாம்சங், சொமாட்டோ, கூகுள் போன்ற நிறுவனங்களும் தற்சமயம் வாட்ஸ்அப் உள்பட தங்களது வன்பொருள் மற்றும் மென்பொருள் சாதனங்களில் யு.பி.ஐ. இணைக்கும் பணிகளில் ஈடுப்பட்டு வருகின்றன.
வாட்ஸ்அப் செயலியில் தற்சமயம் சோதனை செய்யப்பட்டு வரும் புதிய அம்சம் விரைவில் வெளியிடப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்அப் செயலியில் அடிக்கடி புது அம்சங்கள் சத்தமில்லாமல் சேர்க்கப்பட்டு வருகிறது. சமீபத்திய தகவல்களின் படி வாட்ஸ்அப் க்ரூப்களில் புதிய அம்சம் சோதனை செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
இந்த அம்சம் க்ரூப் வீடியோ கால் என்றும் இந்த அம்சம் சோதனை செய்யப்படுவதாகவும், விரைவில் இந்த அம்சம் அனைவருக்கும் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வாட்ஸ்அப் பீட்டா மூலம் புதிய அம்சங்களை சோதனை செய்து முன்கூட்டியே தகவல்களை வழங்கி வரும் WABetaInfo புதிய அம்சம் சார்ந்த விவரங்களை வெளியிட்டிருக்கிறது.
அதன்படி வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் செய்யும் வசதி விரைவில் வழங்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது. இந்த அம்சம் மூலம் ஒரே சமயத்தில் பலருக்கும் வீடியோ கால் மேற்கொள்ள முடியும். ஃபேஸ்புக் மெசன்ஜரில் வழங்கப்பட்டு இருக்கும் வீடியோ கால் அம்சம் போன்றே வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சமும் வேலை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஃபேஸ்புக் மெசன்ஜரில் வீடியோ கால் அம்சமும் சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மெசன்ஜரில் வீடியோ கால் மேற்கொள்ளும் போது ஒரே சமயத்தில் பலருடன் பேச முடியும். எனினும் வாட்ஸ்அப் வீடியோ கால் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. முன்னதாக வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம் சோதனை செய்யப்படுவதாக தகவல்கள் வெளியானது.
கடந்த ஆண்டு அக்போர் மாத வாக்கில் வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் சோதனை செய்யப்படும் புகைப்படங்கள் வெளியானது. இந்த அம்சம் வாட்ஸ்அப் 2.17.70 பீட்டா பதிப்பில் சோதனை செய்யப்பட்டது. அந்த வகையில் இந்த அம்சம் விரைவில் வெளியிடப்படலாம் என எதிபார்க்கப்படுகிறது.
வாட்ஸ்அப் க்ரூப் வீடியோ கால் அம்சம் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்திற்கு மட்டும் வழங்கப்பட்டு அதன் பின் ஐ.ஓ.எஸ். இயங்குதள வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படலாம் என WABetaInfo வெளியிட்டிருக்கும் தகவல்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரும்பாலான வாட்ஸ்அப் அம்சமங்கள் முதற்கட்டமாக ஆண்ட்ராய்டு இயங்குதளத்திலும், அதன்பின் ஐ.ஓ.எஸ். இயங்குதளத்திலும் வழங்கப்பட்டு வருகிறது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் குறைந்த விலையில் சர்ஃபேஸ் லேப்டாப் மற்றும் சர்ஃபேஸ் புக் 2 சாதனங்களை அறிமுகம் செய்துள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
மைக்ரோசாஃப்ட் கடந்த ஆண்டு அறிமுகம் செய்த சர்ஃபேஸ் லேப்டாப் மற்றும் சர்ஃபேஸ் புக் 2 சாதனங்களின் குறைந்த விலை மாடல்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடல்களை விட விலை குறைவு என்பதால் சிறப்பம்சங்களும் குறைக்கப்பட்டுள்ளது.
விலை குறைந்த மைக்ரோசாஃப்ட் சாதனங்கள் அமெரிக்காவில் விற்பனை செய்யப்படுகிறது. கடந்த ஆண்டு மே மாதம் அறிமுகமான மைக்ரோசாஃப்ட் சர்ஃபேஸ் லேப்டாப் 999 டாலர்களுக்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், புதிய விலை குறைந்த லேப்டாப் விலை 799 டாலர்கள் என நி்ர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
புதிய விலை குறைந்த மாடலில் இன்டெல் கோர் M3 பிராசஸர், இன்டெல் ஹெச்.டி. கிராஃபிக்ஸ் 615, 4 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டுள்ளது. முந்தைய 999 டாலர் மாடலில் இன்டெல் கோர் i5 பிராசஸர், 4 ஜிபி / 8 ஜிபி ரேம், 128 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டது. 1599 டாலர் மாடலில் இன்டெல் கோர் i7 பிராசஸர் 8 ஜிபி / 16 ஜிபி ரேம் மற்றும் 256 ஜிபி இன்டெர்னல் மெமரி வழங்கப்பட்டது.

கடந்த ஆண்டு அக்டோபரில் வெளியான சர்ஃபேஸ் புக் 2 விலை 1499 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்ட நிலையில், புதிய மாடலின் விலை 1199 டாலர்கள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. முந்தைய மாடலில் வழங்கப்பட்ட அதே சிறப்பம்சங்கள் வழங்கப்பட்டிருக்கு்ம நிலையில், புதிய மாடலின் மெமரி மட்டும் 128ஜிபி-யாக குறைக்கப்பட்டிருக்கிறது.
மற்ற சிறப்பம்சங்களை பொருத்த வரை இன்டெல் கோர் i5 பிராசஸர், 8 ஜிபி ரேம், இன்டெல் கிராஃபிக்ஸ் 620 வழங்கப்பட்டுள்ளது. சர்ஃபேஸ் புக் 2 லேப்டாப் இந்திய வெளியீட்டை மைக்ரோசாஃப்ட் நிறுவன தலைமை செயல் அதிகாரி சமீபத்தில் உறுதி செய்திருந்தார். அந்த வகையில் புதிய மைக்ரோசாஃப்ட் சாதனம் இந்த ஆண்டு அறிமுகம் செய்யப்படலாம் எதிர்பார்க்கப்படுகிறது.
சர்ஃபேஸ் புக் 2 சாதனத்தை - லேப்டாப் மோட், டேப்லெட் மோட், ஸ்டூடியோ மோட் மற்றும் வியூ மோட் என நான்கு விதங்களில் பயன்படுத்த முடியும். இவை அனைத்திலும் மைக்ரோசாஃப்டின் பிக்சல்சென்ஸ் (PixelSense) டிஸ்ப்ளேக்களுடன் வருகிறது. 13.5 இன்ச் ஸ்கிரீன்களில் 3000x2000 ரெசல்யூஷன், 15 இன்ச் மாடலில் 3240x2160 ரெசல்யூஷன் கொண்டிருக்கிறது.
இவற்றில் இரண்டு யு.எஸ்.பி. 3.1 ஜென் 1 போர்ட், யுஎஸ்பி டைப்-சி போர்ட், 3.5 எம்எம் ஆடியோஜாக், 2 சர்ஃபேஸ் கனெக்ட் போர்ட் மற்றும் எஸ்.டி. கார்டு ரென்டர் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் விண்டோஸ் ஹெல்லோ ஃபேஸ் ஆத்தென்டிகேஷன், 5 எம்பி செல்ஃபி கேமரா, 8 எம்பி பிரைமரி கேமரா மற்றும் முன்பக்க டால்பி ஆடியோ ஸ்பீக்கர்கள் வழங்கப்பட்டுள்ளது.
ஹூவாய் பதிவு செய்திருக்கும் புதிய காப்புரிமையில், அந்நிறுவனத்தின் ஸ்மார்ட்வாட்ச்-இல் புதுவித ஜெஸ்ட்யூர் கண்ட்ரோல் வசதி வழங்கப்பட இருப்பது தெரியவந்திருக்கிறது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
ஹூவாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்வாட்ச்களில் பயன்படுத்த புதிய காப்புரிமையை ஹூவாய் பதிவு செய்திருக்கிறது. சர்வதேச அறிவுசார் சொத்து நிறுவனத்தில் (World Intellectual Property Organization-WIPO) ஹூவாய் பதிவு செய்து இருக்கும் காப்புரிமையில் ஸ்மார்ட்வாட்ச்சில் வழங்கப்பட இருக்கும் புதிய தொழில்நுட்பம் சார்ந்த விவரங்கள் இடம்பெற்றிருக்கிறது.
ஹூவாய் சார்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் புதிய தொழில்நுட்பம் அல்ட்ராசோனிக் அல்லது இன்ஃப்ராரெட் கதிர்களை ஒளிர வைக்கிறது. இந்த அல்ட்ராசோனிக் அல்லது இன்ஃப்ராரெட் கதிர்கள் விரல் அசைவுகளை புரிந்து கொள்ளும் திறன் கொண்டிருக்கிறது.
ஸ்மார்ட்வாட்ச் கையில் மாட்டி இருக்கும் போது ஸ்மார்ட்வாட்ச்-ஐ சுற்றி அல்ட்ராசோனிக் அல்லது இன்ஃப்ராரெட் கதிர்கள் ஒளிரும். எனினும் ஸ்மார்ட்வாட்ச்-இல் இருக்கும் சென்சார் சரிவர இயங்க கையில் சரியான அளவில் அதனை மாட்டியிருப்பது அவசியமாகும் என காப்புரிமையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கைகளின் பின்புறம் எதையேனும் எழுதினால், அதுவும் ஸ்மார்ட்வாட்ச்-இல் தெரியும். இந்த தொழில்நுட்பம் சிறிய சாதனங்களை இயக்கும் போது ஏற்படும் சிரமத்தை களைய வழி செய்யும். இதில் வழங்கப்படும் சென்சார் நான்கு திசைகளிலும் கதிர்களை ஒளிர விடும் என்பதோடு ஜெஸ்ட்யூர்களை வரையவும் முடியும்.
ஸ்மார்ட்போனில் பயன்படுத்தப்படும் பெரும்பாலான ஜெஸ்ட்யூர்களை ஸ்மார்ட்வாட்ச்களிலும் பயன்படுத்த முடியும். இருமுறை கிளிக் செய்வது, நீண்ட அழுத்தம், அல்லது பலவிரல் ஜெஸ்ட்யூர் உள்ளிட்டவற்றை பயன்படுத்தி ஸ்மார்ட்வாட்ச்-ஐ இயக்க முடியும். புதிய ஸ்மார்ட்வாட்ச் மூலம் புதிய வகையில் எழுதும் வசதியை ஹூவாய் அறிமுகம் செய்யலாம் என கூறப்படுகிறது.
ஹூவாய் நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த தொழில்நுட்பம் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இதுகுறித்து அந்நிறுவனம் சார்பில் எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. 2017-ம் ஆண்டு ஹூவாய் அறிமுகம் செய்த ஸ்மார்ட்வாட்ச் வாட்ச் 2 என அழைக்கப்பட்ட நிலையில், அடுத்த ஸ்மார்ட்வாட்ச் வாட்ச் 3 என அழைக்கப்படலாம் என கூறப்படுகிறது.
மும்பையை சேர்ந்த வாலிபர் பிளிப்கார்ட் தளத்தில் ஐபோன் 8 முன்பதிவு செய்து, சோப் டெலிவரி செய்யப்பட்டதாக காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
மும்பை:
ஸ்மார்ட்போன் வாங்குவதே பெரும் கஷ்டமான விஷயம். இதில் ஐபோன் வாங்குவது எவ்வளவு கஷ்டமான காரியம் என அதை வாங்க இருப்பவர்களுக்கும், அதற்கான தியாகங்களை செய்து பணத்தை சேமிப்பவர்களுக்கு அதிகம் புரியும்.
மும்பையை சேர்ந்த தப்ரெஜ் மெகபூப் நகரேலி எவ்வளவு நாள் கனவுடன் ஐபோன் முன்பதிவு செய்தாரோ, அவருக்கு மோசமான அனுபவத்தை பிளிப்கார்ட் ஏற்படுத்தி உள்ளது. தனகுக்கு அதிகம் பிடித்த ஐபோன் 8 மாடலை வாங்க ரூ.55,000 ஒரு தவணையில் செலுத்தி பிளிப்கார்ட் தளத்தில் முன்பதிவு செய்திருந்தார்.
பிளிப்கார்ட் சார்பில் அவருக்கு விநியோகம் செய்யப்பட்ட பார்சலில் ஐபோன் 8 பெட்டிக்கு மாற்றாக துணி துவைக்கும் சோப்பு கட்டி வைக்கப்பட்டிருந்தது. ரூ.55,000-ஐ ஒரே தவணையில் செலுத்தியவருக்கு பெட்டியில் சோப்பு கட்டியை பார்த்தும் அதிர்ச்சி ஏற்பட்டது. உடனே மும்பையின் பைகுலா காவல் நிலையத்தில் பிளிப்கார்ட் மீது ஏமாற்றப்பட்டதாக தப்ரெஜ் புகார் அளித்திருக்கிறார்.

ஜனவரி 22-ம் தேதி தப்ரெஜ்க்கு பார்சல் விநியோகம் செய்யப்பட்டது. நகரேலி நேற்று மும்பையின் பைகுலா காவல் நிலையத்தில் தான் ஏமாற்றப்பட்டதற்கு முறையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தும் வகையில் புகார் அளித்திருக்கிறார்.
இதுகுறித்து பிளிப்கார்ட் செய்தி தொடர்பாளர் சார்பில் பதில் அளித்துள்ளார். அதில் இவ்விகாரம் குறித்த விசாரணை நடைபெற்று வருவதாகவும், விரைவில் பிரச்சனைக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் வரலாற்றில் இதுபோன்ற சம்பவங்கள் முன்னதாக பலமுறை அரங்கேறியுள்ளது. எனினும் இதுபோன்ற விவகாரங்களின் உண்மை நிலை கண்டறியப்பட்டு உரிய நடவடிக்கையும் எடுக்கப்பட்டிருக்கிறது.
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஏழு லட்சம் செயலிகளை கடந்த ஆண்டு மட்டும் நீக்கி இருப்பதாக கூகுள் தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:
கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து 2017-ம் ஆண்டில் மட்டும் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்டு இருந்ததாக ஏழு லட்சம் செயலிகளை நிக்கியதாக கூகுள் அறிவித்துள்ளது. மெஷின் லெர்னிங் (machnine learning) தொழில்நுட்பத்துடன் கூகுள் ஏற்கனவே வரையறுத்து இருக்கும் விதிமுறைகளின் கீழ் தீங்கு விளைவிக்கும் தன்மை கொண்ட செயலிகளை கண்டறிந்ததாக கூகுள் தெரிவித்துள்ளது.
மெஷின் லெர்னிங் என்பது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப உதவியுடன் புரோகிராம் செய்யப்படாமல் தானாக செயல்களை புரிந்து கொண்டு, மேம்படுத்திக் கொள்ளும் வசதி பெற்று கொள்வது எனலாம். கூகுள் சேவைகளில் மெஷின் லெர்னிங் பயன்பாடு சமீபத்தில் அதிகரித்து வரும் நிலையில், கூகுள் பிளே நடவடிக்கை புதிய உதாரணமாக பார்க்கப்படுகிறது.
2017-ம் ஆண்டில் மட்டும் 1,00,000 டெவலப்பர்களிடம் இருந்து 7,00,000 லட்சம் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து நீக்கியதாக கூகுள் தெரிவித்துள்ளது. இது 2016-ம் ஆண்டை விட 70% அதிகம் ஆகும். இதுமட்டுமின்றி 99% செயலிகள் பயனர்கள் இன்ஸ்டால் செய்யும் முன் அவற்றில் தவறான தரவுகள் இருப்பது கண்டறியப்பட்டு நீக்கப்பட்டிருப்பதாக ஆண்ட்ராய்டு டெவலப்ர்கள் வலைத்தள பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இம்பர்சோனேஷன் (Impersonation):
கடந்த ஆண்டு பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில் 2,50,000 செயலிகள் ஏற்கனவே பிரபலமாக இருக்கும் செயலிகளை தழுவி (அப்பட்டமாக காப்பியடிக்கப்பட்ட) உருவாக்கப்பட்டிருந்ததால் நீக்கப்பட்டதாக ஆண்ட்ராய்டு டெவலப்பர்கள் வலைத்தளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. பிளே ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்ட செயலிகளில் இவ்வகை செயலிகள் முதலிடம் பிடித்து இருப்பதாக தெரிவி்க்கப்பட்டுள்ளது.

பொருத்தமற்ற தகவல்கள் (Inappropriate Content):
கூகுள் பிளே ஸ்டோரில் பொருத்தமற்ற தகவல்கள் நிறைந்த செயலிகளுக்கு இடம் கிடையாது. கூகுள் அகராதியில் பொருத்தமற்றவை - ஆபாசம், அதீத வன்முறை, சட்ட விரோத நடவடிக்கை மற்றும் வெறுப்புணர்வை ஏற்படுத்தும் தரவுகள் அடங்கும். அந்த வகையில் பொருத்தமற்ற தரவுகளை கண்டறிய மேம்படுத்தப்பட்ட மெஷின் லெர்னிங் வழிமுறை செயல்பட்டு தரவுகளை நீக்க உதவும் என கூகுள் தெரிவித்துள்ளது.

மால்வேர் (Malware):
இறுதியில் செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களின் சாதனங்களை பாதிக்கும் தன்மை கொண்ட செயலிகளை கூகுள் தனது பிளே ஸ்டோரில் அனுமதிப்பதில்லை. இவ்வாறான செயலிகளை கூகுள் (Potentially Harmful Applications - PHAs) என வகைப்படுத்துகிறது. ஃபிஷிங் எனப்படும் கடவுச்சொல் போன்ற முக்கிய தகவல்களை திருடுவது, ஊழல் அல்லது ட்ரோஜன்கள் கூகுள் மால்வேர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
கடந்த ஆண்டு கூகுள் பிளே புரோடெக்ட் அம்சம் சேர்க்கப்பட்டது முதல் பிளே ஸ்டோரில் இருந்து மால்வேர் நிறைந்த செயலிகளின் டவுன்லோடு அளவு 50% குறைந்திருக்கிறது. கூகுள் பிளே புரோடெக்ட் அம்சம் மால்வேர் ஸ்கேன் செய்யும் வசதி கொண்தாகும். இதனை 2017 ஆண்டின் டெவலப்பர்கள் மாநாட்டில் கூகுள் அறிமுகம் செய்திருந்தது.
ஐபோன் X ஸ்மார்ட்போனில் பிரபலமான ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் கொண்ட ஐபேட் சாதனங்கள் விரைவில் வெளியாகலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை ஐபோன் மட்டுமின்றி இதர சாதனங்களிலும் வழங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் தற்சமயம் ஐபோன் X ஸ்மார்ட்போனில் மட்டும் வழங்கப்பட்டிருக்கும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் விரைவில் ஐபேட் சாதனங்களிலும் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
2018-ம் ஆண்டு வெளியாக இருக்கும் ஐபேட்களில் ஆப்பிள் நிறுவனம் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பத்தை வழங்க அதிக வாய்ப்புகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இத்தகவலை உறுதி செய்யும் பல்வேறு ஆவணங்கள் இணையத்தில் தொடர்ந்து கசிந்து வருகிறது.
ட்விட்டரில் இதுகுறித்து வெளியாகியுள்ள தகவல்களில் ஐ.ஓ.எஸ். 11.3 பீட்டா பதிப்புல் இது சார்ந்த குறியீடுகளை டெவலப்பர்கள் கண்டறிந்து இருப்பதாக தெரிவித்து வருகின்றனர். இந்த குறியீடுகளில் அதிநவீன ஐபேட் (Modern ipad) என்ற வார்த்தை இடம்பெற்றிருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஆப்பிள் அறிமுகம் செய்த அதிநவீன ஐபோனில் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்பட்ட நிலையில், இந்த ஆண்டின் அதிநவீன ஐபேட் சாதனத்திலும் ஃபேஸ் ஐடி தொழில்நுட்பம் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய தகவல்கள் 2018 ஐபேடில் ஃபேஸ் ஐடி வழங்குவதை உறுதி செய்யவில்லை என்றாலும், இந்த அம்சம் வழங்கப்பட அதிக வாய்ப்புகள் இருப்பதற்கான எதிர்பார்ப்பை அதிகரித்திருக்கிறது.
ஆப்பிள் வழக்கப்படி ஐபோன்களில் வழங்கப்படும் அதிநவீன அம்சங்கள், ஐபேட்களுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. அந்த வகையில் ஃபேஸ் ஐடி அல்லது இதர ஐபோன் அம்சங்கள் புதிய ஐபேட் அல்லது மேக்களுக்கு எதிர்காலத்தில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக வெளியான தகவல்களில் மேம்படுத்துப்பட்ட ஐபேட் ப்ரோ விரைவில் வெளியிடப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிங் சி கியோ வழங்கியிருக்கும் தகவல்களில் புதிய ஐபேட் ப்ரோவில் பல்வேறு பிரீமியம் அம்சங்கள் வழங்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மைக்ரோசாஃப்ட் நிறுவனம் விண்டோஸ் 10 இயங்குதளத்தின் லைட் வெர்ஷனை உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
சான்ஃபிரான்சிஸ்கோ:
பொலாரிஸ் என்ற பெயரில் விண்டோஸ் 10 லைட் வெர்ஷன் இயங்குதளத்தை மைக்ரோசாஃப்ட் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. பொலாரிஸ் என அழைக்கப்படும் புதிய மாட்யூலர் சிஸ்டம் விண்டோஸ் கோர் இயங்குதளம் மற்றும் சிஷெல் மூலம் புதிய இயங்குதளம் சக்தியூட்டப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2019-ம் ஆண்டு முதல் நுகர்வோர் சார்ந்த கணினிகள் மற்றும் லேப்டாப்களை 2-இன் 1 சாதனங்களாக வெளியிட கம்ப்யூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளதாகவும் இவற்றில் விண்டோஸ் 10 லைட் வெர்ஷன் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. விண்டோஸ் 10 லைட் வெர்ஷனை தற்போதைய வாடிக்கையாளர்களால் அப்கிரேடு செய்ய முடியாது என்றும் கூறப்படுகிறது.
இதுகுறித்து விண்டோஸ் சென்ட்ரல் வெளியிட்டிருக்கும் தகவல்களில் டிரேட்மார்க் பாகங்களுக்கு மாற்றாக பொலாரிஸ் இயங்குதளம் UWP பயன்படுத்தும். அந்த வகையில் இயங்குதளத்தின் அளவை குறைத்து, மேம்படுத்தப்பட்ட செயல்திறன், நீட்டிக்கப்பட்ட பேட்டரி மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் கிடைக்கும்.

விண்டோஸ் 10 எஸ் இயங்குதளத்தில் டெஸ்க்டாப் செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்பட அதிக வாய்ப்பு கிடையாது என கூறப்படுகிறது. மைக்ரோசாஃப்ட் ஸ்டோரில் டெஸ்க்டாப் செயலிகளை இயக்கும் வசதி வழங்கப்படுகிறது. பொலாரிஸ் இயங்குதளத்தை பொருத்த வரை விண்டோஸ் 32 பிட் செயலிகளை ரிமோட் விர்ச்சுவலைசேஷன் மூலம் இயங்க வைக்கலாம் என கூறப்படுகிறது.
இதேபோன்ற வழிமுறையை மைக்ரோசாஃப்ட் நிறுவனம் ஹெச்.பி. எலைட் X3 சாதனத்தில் வழங்கியிருந்தது. அதிக சக்திவாய்ந்த கணினிகளை விரும்பாதோருக்கு ஏற்றதாக பொலாரிஸ் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆஃபீஸ், வெப் பிரவுசர்கள் மற்றும் மியூசிக் செயலிகளை ஒரே சமயத்தில் இயக்க விரும்புவோருக்கு குறைந்த மெமரி கொண்ட இயங்குதளம் பயன்பதருவதோடு, நீண்ட பேட்டரி பேக்கப் மற்றும் செயல்திறனையும் வழங்கும்.

விண்டோஸ் 10 பொலாரிஸ் இயங்குதளத்தின் முதல் பதிப்பு 2019-ம் ஆண்டு வாக்கில் அறிமுகம் செய்யப்படலாம். வாங்கிய சில காலத்திற்குள் பாகங்கள் பழையதாகும் நிலையில், குறைந்த மெமரி கொண்ட இயங்குதளம் கொண்டு மற்ற நிறுவனங்களுக்கு போட்டியளிக்க முடியும் என நம்பப்படுகிறது.
கூகுள் மற்றும் ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் கணினி சந்தையில் பலத்த போட்டியை ஏற்படுத்த திட்டமிட்டு வருகிறது. மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் பொலாரிஸ் இயங்குதளம் மைக்ரோசாஃப்டின் ARM சார்ந்த கணினிகளில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் ஐ.ஓ.எஸ். 11.3 இயங்குதளம் புதிய அனிமோஜிக்கள் மற்றும் பல்வேறு அம்சங்களுடன் வெளியிடப்பட்டுள்ளது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனம் ஐ.ஓ.எஸ். 11.3 இயங்குதளத்தை புதிய அம்சங்களுடன் வெளியிட்டுள்ளது. புதிய அப்டேட்-இல் நான்கு புதிய அனிமோஜி - சிங்கம், கரடி, டிராகன் மற்றும் மண்டை ஓடு உள்ளிட்டவை ஐபோன் X-க்கு வழங்கப்பட்டுள்ளது. இத்துடன் டெவலப்பர்களுக்கு ஏ.ஆர்.கிட் 1.5 (ARKit 1.5) வழங்கப்பட்டிருக்கிறது.
இவை அதிக துல்லியமான செயற்கை நுண்ணறிவு அனுபவத்தை வழங்கும் அம்சங்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றன. இதில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான இம்சங்கள் அடுத்த தலைமுறை செயற்கை நுண்ணறிவு செயலிகளுக்கு ஏற்றதாக வடிவமைக்கப்பட்டிருக்கிறது.
வாடிக்கையாளர்கள் நேரடியாக பிஸ்னஸ் சாட் செய்யும் வகையில் மெசேஜ்களில் வியாபார ரீதியிலான தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்ளும் வசதி வழங்கப்பட்டிருக்கிறது. முதற்கட்டமாக பீட்டா முறையில் வெளியிட்டு அதன்பின் பொது மக்களுக்கு ஐ.ஓ.எஸ். 11.3 பதிப்பில் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே ஆப்பிள் அறிவித்தபடியே பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பேட்டரி விவகாரம் வாடிக்கையாளர்கள் கட்டுப்படுத்தும் படி வழங்கப்பட்டுள்ளது. இந்த அம்சத்தை வாடிக்கையாளர்கள் ஐபோனின் செட்டிங்ஸ் -- பேட்டரி சென்று ஆப்பிள் பவர் மேனேஜ்மெண்ட் (power management) ஆப்ஷனை செயலிழக்க செய்ய முடியும்.
புதிய ஹெல்த் ரெக்கார்டஸ் அம்சம் மருத்துவமனைகள், ஆஸ்பித்திரி மற்றும் ஏற்கனவே இருக்கும் ஹெல்த் செயலி உள்ளிட்டவை ஒரே செயலியாக மாற்றப்பட்டு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு வேண்டிய தகவல்களை அறிந்து கொள்ள வழி செய்யப்பட்டிருக்கிறது. இதில் மருத்துவம் சார்ந்த வெவ்வேறு வசதிகள் வாடிக்கையாளர்களுக்கு ஏதுவாக வழங்கப்பட்டுள்ளது..

ஐ.ஓ.எஸ். 11.3 கூடுதல் அம்சங்கள்:
- ஆப்பிள் மியூசிக் செயலியின் ஹோம் திரை மியூசிக் வீடியோக்களுக்கும் பொதுவானதாக விரைவில் மாற்றப்படும். வாடிக்கையாளர்கள் விளம்பர இடையூறின்றி மியூசிக் வீடியோக்களை ஸ்டிரீம் செய்ய முடியும். மேலும் புத்தம் புதிய வீடியோக்களை வெவ்வேறு பிரிவுகளில் இருந்தும் தொடர்ந்து பார்க்க முடியும்.
- ஆப்பிள் நியூஸ் அம்சம் மூலம் தினசரி செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள முடியும். இதில் புதிய வீடியோ க்ரூப் மற்றும் மேம்படுத்தப்பட்ட முக்கிய செய்திகள் பிரிவும் வழங்கப்பட்டுள்ளது.
- ஹோம்கிட் மென்பொருள் ஆத்தென்டிகேஷன் டெவலப்பர்களுக்கு ஏற்கனவே இருக்கும் அகசஸரிகளுக்கு ஹோம்கிட் சப்போர்ட்-ஐ பாதுகாப்பாக வழங்க முடியும்.
- மேம்படுத்தப்பட்ட மொபைல் லொகேஷன் (Advanced Mobile Location) அம்சம் வாடிக்கையாளர் இருக்கும் நாடுகளில் AML வசதி இருப்பின் வாடிக்கையாளர் இருக்கும் முகவரியை தானாக அனுப்பி விடும்.
ஐ.ஓ.எஸ். 11.3 டெவலப்பர் பிரீவியூ இன்று முதல் கிடைகக்கிறது. இதை் தொடர்ந்து பொது மக்களுக்கு பீட்டா பிரீவியூ ஐ.ஓ.எஸ். 11.3 அப்டேட் மூலம் வழங்கப்படும்.
ஆப்பிள் ஐ.ஓ.எஸ். 11.3 அப்டேட் ஐபோன் 5எஸ் மற்றும் அதன் பின் வெளியான ஆப்பிள் ஐபோன்கள், ஐபேட் ஏர், ஐபேட் ப்ரோ மாடல்கள், ஐபேட் 5-ம் தலைமுறை, ஐபேட் மினி 2 மற்றும் ஐபாட் 6-ம் தலைமுறை சாதனங்களுக்கு சில வாரங்களில் வழங்கப்பட இருக்கிறது.
ஆப்பிள் நிறுவனத்தின் சிரி மூலம் இயங்கும் முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கர் கடந்த ஆண்டு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், விற்பனை குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
சான்பிரான்சிஸ்கோ:
ஆப்பிள் நிறுவனத்தின் சிரி (வாய்ஸ் அசிஸ்டண்ட்) மூலம் இயங்கும் தனது முதல் ஸ்மார்ட் ஸ்பீக்கரை கடந்த ஆண்டு ஜூன் மாதம் நடைபெற்ற ஆப்பிள் டெவலப்பர்கள் மாநாட்டில் அறிமுகம் செய்திருந்தது. ஆப்பிள் ஹோம்பாட் என அழைக்கப்படும் புதிய ஸ்மார்ட் ஸ்பீக்கர் கடந்த ஆண்டு டிசம்பரில் விற்பனைக்கு வரும் என ஆப்பிள் அறிவித்தது.
எனினும் விற்பனை இந்த ஆண்டின் துவக்கத்திற்கு தள்ளிவைக்கப்பட்டது. முதற்கட்டமாக ஆஸ்திரேலியா, லண்டன் மற்றும் அமெரிக்காவில் ஆப்பிள் ஹோம்பாட் விற்பனையை துவங்க ஆப்பிள் திட்டமிட்டுள்ளது. அதன்படி புதிய ஹோம்பாட் விற்பனை பிப்ரவரி 9-ம் தேதி துவங்குகிறது. ஹோம்பாட் வாங்க விரும்புவோர் இதனை ஜனவரி 26-ம் தேதி முதல் முன்பதிவு செய்ய முடியும்.
7.0 இன்ச் உயர ஹோம்பாட் சாதனத்தை முழுக்க முழுக்க குரல் மூலமாக இயக்க முடியும். ஆப்பிள் நிறுவனத்தின் வாய்ஸ் அசிஸ்டண்ட் சேவையான சிரி மூலம் கட்டுப்படுத்தக்கூடிய வகையில் ஹோம்பாட் வடிவமைக்கப்பட்டுள்ளது. இசையை ஒலிக்க செய்வது, செய்திகளை வாசிக்க செய்வது மற்றும் வீட்டில் உள்ள மற்ற சாதனங்களை (இண்டர்நெட் மூலம் இணைக்கப்பட்டவை) ஹோம்பாட் மூலம் வாய்ஸ் கொடுத்தே கட்டுப்படுத்த முடியும்.

மேலும் இதில் வழங்கப்பட்டுள்ள ஸ்பேஷியல் அவேர்னெஸ் (spatial awareness) அம்சம் ஸ்பீக்கர் வைக்கப்பட்டுள்ள இடத்தை அறிந்து கொண்டு ஒலியை தானாக அட்ஜஸ்ட் செய்யும். ஆறு மைக்ரோபோன்கள் வழங்கப்பட்டிருப்பதால் மிக எளிமையாக இதனுடன் உரையாட முடியும். இத்துடன் அதிகளவு உரையாடும் போது பயனர் அடிக்கடி பயன்படுத்திய வார்த்தைகள் மற்றும் உத்தரவுகளை நினைவில் வைத்துக் கொண்டு அதற்கேற்ப ஹோம்பாட் சரியாக பதில் அளிக்கும்.
ஆப்பிள் நிறுவனத்தின் A8 சிப்செட் மூலம் இயங்கும் ஹோம்பாட் சாதனத்துடன் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் உரையாடல்கள் அனைத்தும் சாதனத்தில் புரிந்து கொள்ளப்பட்டு அவை முழுமையாக என்க்ரிப்ட் செய்யப்படுகிறது. ஆப்பிள் வடிவமைத்த பெரிய ஊஃபர் வழங்கப்பட்டிருப்பதால் அதிக துல்லியமான ஆடியோ அனுபவம் வழங்குகிறது.

வெள்ளை மற்றும் ஸ்பேஸ் கிரே என இரண்டு நிறங்களில் கிடைக்கும் ஆப்பிள் ஹோம்பாட் அமெரிக்கா, லண்டன் மற்றும் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளில் ஆப்பிள் அதிகாரப்பூர்வ வலைத்தளம் மற்றும் ஆப்பிள் ஸ்டோர் செயலி மூலம் முன்பதிவு செய்ய முடியும். சர்வதேச சந்தையில் ஆப்பிள் ஹோம்பாட் விலை 349 டாலர்கள் (இந்திய மதிப்பில் ரூ.22,260) என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
இத்துடன் தேர்வு செய்யப்பட்ட ஆஃப்லைன் விற்பனை மையங்களிலும் ஆப்பிள் ஹோம்பாட் விற்பனை நடைபெறுகிறது. முதற்கட்டமாக மூன்று நாடுகளில் விற்பனை செய்யப்பட இருக்கும் ஹோம்பாட் மற்ற நாடுகளின் விற்பனை தேதி சார்ந்த தகவலை ஆப்பிள் ரகசியமாக வைத்திருக்கிறது.






