search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "வங்கி கொள்ளை"

    • ஜெய்ப்பூரின் ஷியாம்நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது.
    • கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் காண முயன்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஜெய்ப்பூர்:

    ராஜஸ்தான் மாநில தலைநகர் ஜெய்ப்பூரின் ஷியாம்நகர் பகுதியில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி கிளை உள்ளது. இங்கு நேற்று வந்த 2 முகமூடி கொள்ளையர்கள், துப்பாக்கி முனையில் மிரட்டி ரூ.10 லட்சத்தை பறித்தனர். வங்கிக்கு நடந்து வந்த அவர்கள், கொள்ளையடித்தபின் வங்கி ஊழியர் ஒருவரின் இருசக்கர வாகனத்தில் தப்பிச்சென்றனர்.

    கொள்ளையர்களை கண்காணிப்பு கேமரா பதிவு மூலம் அடையாளம் காண முயன்றுவருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    • முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.
    • வங்கியில் உள்ள அலாரம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்துள்ளது.

    அமிர்தசரஸ்:

    பஞ்சாப் மாநிலம் அமிர்தசரசில் உள்ள ரானி கா பாக் பகுதியில் பஞ்சாப் நேஷனல் வங்கியின் மண்டல கிளை அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

    நகரின் முக்கிய பகுதியில் உள்ள இந்த வங்கியின் அருகே தான் மாநகர போலீஸ் துணை கமிஷனர் (சட்டம்-ஒழுங்கு), மற்றும் கூடுதல் காவல் துணை ஆணையர் (போக்குவரத்து) ஆகியோரின் அலுவலகங்களும், கன்டோன்மென்ட் போலீஸ் நிலையமும் அமைந்துள்ளது.

    இந்நிலையில் நேற்று பட்டப்பகலில் முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 2 பேர் கையில் துப்பாக்கி மற்றும் ஆயுதங்களுடன் வங்கிக்குள் நுழைந்தனர்.

    வங்கியின் வளாகத்தில் பாதுகாவலர் யாரும் இல்லை. இதை வசதியாக பயன்படுத்தி கொண்ட மர்ம நபர்கள் வங்கிக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை ஆயுதங்களால் மிரட்டி உள்ளனர்.

    பின்னர் நேராக காசாளர் அறைக்கு சென்ற ஒரு முகமூடி கொள்ளையன் தன்னிடம் இருந்த கைத்துப்பாக்கியை காட்டி காசாளரை மிரட்டுகிறார். பின்னர் துப்பாக்கி முனையில் காசாளரை மிரட்டியவாறு அங்கிருந்த ரூ.22 லட்சத்து 48 ஆயிரத்தை கொள்ளையடித்துவிட்டு, வெளியே தயாராக நின்ற ஸ்கூட்டரில் ஏறி தப்பி சென்றுவிட்டார்.

    ஒரு சில நிமிடங்களில் நடந்து முடிந்த இந்த துணிகர கொள்ளை சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    சம்பவ இடத்துக்கு போலீஸ் உயர் அதிகாரிகள் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். வங்கியில் இருந்த சி.சி.டி.வி. கேமிரா காட்சிகளை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.

    அப்போது கொள்ளையர்களில் 2 பேரில் ஒருவர் வங்கியின் வெளியே தயாராக நிற்பதும், மற்றொரு முகமூடி கொள்ளையன் துப்பாக்கியை கையில் மறைத்து வைத்தவாறு வங்கிக்குள் நுழைந்து கொள்ளையடிக்கும் காட்சிகளும் தெரிந்தது.அவற்றை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    இதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகள் கூறுகையில், வங்கியின் மேலாளர் அலுவலகம் மற்றும் காசாளர் அறையில் அலாரம் பொத்தான்கள் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் அது செயல் படவில்லை. கொள்ளையன் வங்கி வளாகத்திற்குள் நுழைந்த போது எச்சரிக்கை ஒலி எழுப்பும் கருவியையும் யாரும் அழுத்தவில்லை என்றனர்.

    மேலும் வங்கியின் பிரதான காசாளர் விடுமுறையில் இருப்பது விசாரணையில் தெரிய வந்தது. அதே நேரம் நேற்று காசாளர் பணியில் தற்காலிக பணியாளர் ஒருவரை நியமித்துள்ளனர்.

    கொள்ளையன் துப்பாக்கியை காட்டி மிரட்டியதும் பணியில் இருந்த காசாளர் பணத்தை அவரிடம் கொடுத்திருப்பது தெரிய வந்துள்ளது.

    வங்கியில் உள்ள அலாரம் கடந்த சில மாதங்களாக செயல்படாமல் இருந்துள்ளது. அதனை சரி செய்ய கோரி வங்கி அதிகாரியிடம் போலீசார் பலமுறை அறிவுறுத்தி உள்ளனர். ஆனால் அதிகாரிகள் அதை கண்டு கொள்ளாத நிலையில் தான் இந்த துணிகர சம்பவம் நடைபெற்றுள்ளது.

    • கொள்ளையனை சரமாரியாாக தாக்கி பொதுமக்கள் போலீசிடம் ஒப்படைத்தனர்.
    • வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால், துணிவு திரைப்படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக கொள்ளையன் வாக்குமூலம்.

    திண்டுக்கல் தாடிக்கொம்பு ரோட்டில் வாணிவிலாஸ் சிக்னல் அருகே இந்தியன் ஓவர்சீஸ் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் இன்று காலை ஒரு பெண் உள்பட 4 ஊழியர்கள் பணிக்கு வந்தனர். மற்ற ஊழியர்கள் வந்து கொண்டிருந்த நிலையில் திடீரென உள்ளே புகுந்த ஒரு வாலிபர் வங்கி ஊழியர்கள் மீது மயக்க ஸ்பிரே மற்றும் மிளகாய்பொடியை தூவினார்.

    இதனால் அவர்கள் அதிர்ச்சி அடைந்து மயங்கி விழுந்தனர். உடனே அந்த வாலிபர் மற்ற 2 ஊழியர்களை கையை கட்டிபோட முயன்றார். உடனே அவர்கள் கூச்சலிட்டனர். அப்போது வங்கிக்குள் வந்த மேலாளர் மற்றும் ஒரு சில ஊழியர்கள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்தனர்.

    அவரை ஒரு அறையில் வைத்து தர்மஅடி கொடுத்தனர். அவர் ஹிந்தியில் பேசியதால் வங்கிக்குள் கொள்ளையடிக்க முயன்ற வடமாநில வாலிபராக இருக்கலாம் என்று சந்தேகமடைந்தனர்.

    இதனையடுத்து நகர்மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அதிவிரைவுபடையினரும் அங்கு விரைந்து வந்தனர்.

    அவர்கள் பிடிபட்டவாலிபரை விசாரித்தபோது திண்டுக்கல் பூச்சிநாயக்கன்பட்டியை சேர்ந்த கலில்ரகுமான்(25) என தெரியவந்தது. மேலும் அவரிடம் விசாரணை நடத்தியதில் "தான் பல்வேறு இடங்களில் வேலை பார்த்தும் எனக்கு போதிய வருமானம் கிடைக்கவில்லை. இதனால் குறுகிய காலத்தில் மிகப்பெரிய தொகையை கொள்ளையடித்து வாழ்க்கையில் செட்டிலாக முடிவு செய்தேன். சமீபத்தில் வெளிவந்த துணிவு படத்தை பார்த்து அதேபோல வங்கியில் கொள்ளையடிக்க முயற்சி செய்தேன்" என்றார்.

    இதனைதொடர்ந்து போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அவரது பெற்றோர் மற்றும் நண்பர்கள் குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. வங்கிக்குள் இவர் மட்டும்தான் உள்ளே வந்தாரா? வேறு யாரேனும் கூட்டாளிகளாக உள்ளனரா என்றும் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் வங்கிக்குள் புகுந்து வாலிபர் கொள்ளையடிக்க முயன்ற சம்பவம் பெரும்பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • வங்கியில் வாடிக்கையாளர்கள் 29 பேர் அடகு வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.
    • வங்கியில் வேலை செய்யும் யாரோ ஒருவரின் உதவியால் கொள்ளை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

    கான்பூர்:

    உத்தர பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள ஸ்டேட் வங்கியில் புகுந்த கொள்ளையர்கள் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஸ்டேட் வங்கியின் அருகில் காலியாக கிடந்த இடத்தில் இருந்து சுமார் 10 அடி நீளத்திற்கு சுரங்கம் தோண்டிய கொள்ளையர்கள், அந்த சுரங்கம் வழியாக வங்கியில் நகை, பணம் வைத்திருக்கும் பாதுகாப்பு அறைக்கு சென்றுள்ளனர். அங்கிருந்த 1.8 கிலோ தங்க நகைகளை கொள்ளையடித்துள்ளனர். அவற்றின் மதிப்பு சுமார் ஒரு கோடி ரூபாய் ஆகும். நகை பெட்டகத்தின் அருகில் உள்ள பணப்பெட்டியை உடைக்க முடியாததால் அதில் இருந்த 32 லட்சம் ரூபாய் ரொக்கப்பணம் தப்பியது. வங்கியில் வாடிக்கையாளர்கள் 29 பேர் அடகு வைத்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக வங்கி மேலாளர் தெரிவித்தார்.

    இந்த கொள்ளை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். குற்றவாளிகளை பிடிக்க தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. தடயவியல் நிபுணர்கள் வந்து அங்கு பதிவாகியிருந்த கைரேகைகளை பதிவு செய்தனர்.

    வங்கியில் வேலை செய்யும் யாரோ ஒருவரின் உதவியால் இந்த கொள்ளை நடந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. மேலும், அந்த பகுதியை நன்றாக நோட்டமிட்டு, வங்கியின் கட்டுமானம் குறிப்பாக பாதுகாப்பு பெட்டக அறை இருக்கும் பகுதி குறித்து நன்கு தெரிந்தே கொள்ளையடித்திருக்கலாம் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • வங்கியில் இருந்து ரூ.27 லட்சம் ரொக்கமும், ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும் கொள்ளை.
    • கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரம்.

    மகாராஷ்டிரா மாநிலம் லதூரில் உள்ள பஞ்சாயத்து கட்டிடத்தில் மகாராஷ்டிரா கிராமின் வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் சுமார் 14 கிராமங்களை சேர்ந்த மக்கள் கணக்கு வைத்து சேமித்து வருகின்றனர்.

    இந்நிலையில், நேற்று காலை 10 மணியளவில் வங்கிக்கு வந்த பணியாளர்கள், முகப்பு வாயில் கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

    பின்னர தகவல் கொடுத்ததை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் வங்கி முழுவதும் சோதனையிட்டனர். அப்போது, வங்கியில் பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதுகுறித்து போலீஸ் ஆய்வாளர் ராமேஷ்வர் தத் கூறியதாவது:-

    வங்கியின் முகப்பு வாயில் கதவு 5 வகையான லாக்கர் கொண்டது. இந்த லாக்கரை தொழில் ரீதியாகவும், நுணுக்கமாகவும் உடைத்துள்ளனர். மேலும், வங்கி இருக்கும் கட்டிடமும் கட்டப்பட்டு வருகின்றன. கட்டிட ஜன்னலில் இரும்பு கம்பி இல்லாததால் கொள்ளையார்கள் எளிதாக நுழைந்து கொள்ளையடித்து சென்றுள்ளனர்.

    மேலும் வங்கியில் இருந்து ரூ.27 லட்சம் ரொக்கமும், ரூ.22 லட்சம் மதிப்புள்ள தங்க ஆபரணங்களும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பது முதற்கட்ட சோதனையில் தெரியவந்துள்ளது.

    கொள்ளை சம்பவம் தொடர்பாக, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. மேலும், கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×