search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் நடந்த வங்கி கொள்ளை வழக்கில் 4 பேர் கைது
    X

    மன்னார்குடியில் துப்பாக்கி முனையில் நடந்த வங்கி கொள்ளை வழக்கில் 4 பேர் கைது

    மன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரம், துப்பாக்கி மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர்.
    திருவாரூர்:

    மன்னார்குடி அருகே வங்கியில் துப்பாக்கி முனையில் பணம்-நகைகள் கொள்ளையடித்த வழக்கில் 4 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 58 ஆயிரம், துப்பாக்கி மற்றும் 2 கார்களை பறிமுதல் செய்தனர். மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய 2 பேரை தேடி வருகின்றனர்.

    கொள்ளை நடந்த தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியை படத்தில் காணலாம்.


    திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியை அடுத்த அசேஷம் பகுதியில் உள்ள தமிழ்நாடு மெர்க்கன்டைல் வங்கியில் 7-ந் தேதி மதியம் காரில் வந்த மர்ம நபர்கள் 5 பேர், துப்பாக்கி முனையில் ஊழியர்களை மிரட்டி ரூ.5 லட்சத்து 58 ஆயிரம் பணம் மற்றும் 10½ பவுன் நகைகளை கொள்ளையடித்து கொண்டு தலைமறைவாகி விட்டனர்.

    மன்னார்குடி பகுதியில் துப்பாக்கி முனையில் நடந்த இந்த கொள்ளை சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கியின் மேலாளர் கோவிந்தராஜ், மன்னார்குடி போலீசுக்கு தகவல் கொடுத்தார். தகவல் கிடைத்ததும் கொள்ளை நடந்த வங்கிக்கு மன்னார்்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன், இன்ஸ்பெக்டர் மணிவேல் மற்றும் போலீசார் விரைந்து வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

    இவர்களை தொடர்ந்து மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜூலு, தஞ்சை சரக டி.ஐ.ஜி. லோகநாதன், திருவாரூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மயில்வாகனன் ஆகியோரும் வங்கிக்கு வந்து பார்வையிட்டு கொள்ளை தொடர்பாக விசாரணை மேற்கொண்டனர். இந்த கொள்ளை சம்பவம் தொடர்பாக 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை நடத்தி தொடர்புடைய கொள்ளையர்களை விரைந்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.



    இந்த கொள்ளை தொடர்பாக தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தி 4 பேரை கைது செய்தனர். முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜேஷ் தலைமையில் ஒரு படையானது தூத்துக்குடிக்கு சென்று கார் டிரைவர் பரசிவம் மகன் முத்துக்குமார்(வயது 27), சுல்தான் மகன் மீரான் மைதீன்(29), மாடசாமி மகன் சுடலைமணி(26) ஆகிய 3 பேரை கைது செய்தனர். இதேபோல் மன்னார்குடி துணை போலீஸ் சூப்பிரண்டு அசோகன் தலைமையில் இன்ஸ்பெக்டர் மணிவேல் ஆகியோர் மணப்பாறை சென்று மரியசெல்வம்(35) என்பவரை கைது செய்தனர். மரியசெல்வம் மணப்பாறை மெர்க்கன்டைல் வங்கி கடைநிலை ஊழியர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்தான் இந்த கொள்ளைக்கு மூளையாக செயல்பட்டு உள்ளார். கைதானவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம், 2 துப்பாக்கி, 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

    இந்த தகவலை திருவாரூரில் மத்திய மண்டல ஐ.ஜி. வரதராஜுலு நேற்று நிருபர்களிடம் தெரிவித்தார். 
    Next Story
    ×