search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "ரவீந்திர ஜடேஜா"

    • அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது.
    • 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    சென்னை:

    இங்கிலாந்து அணிக்கு எதிரான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 4 - 1 என்ற கணக்கில் இந்தியா வென்றது. அதில் தர்மசாலாவில் நடந்த கடைசி போட்டியில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய 14-வது வீரர் என்ற சாதனையை ரவிச்சந்திரன் அஸ்வின் படைத்தார். அப்போட்டியில் 128 ரன்கள் கொடுத்து 9 விக்கெட்டுகள் எடுத்து இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றினார்.

    அதன் வாயிலாக உலகிலேயே தனது 100-வது டெஸ்ட் போட்டியில் சிறந்த பவுலிங்கை பதிவு செய்த வீரர் என்ற முத்தையா முரளிதரனின் சாதனையை உடைத்து அஸ்வின் புதிய சாதனை படைத்தார். அத்துடன் உலகிலேயே தன்னுடைய அறிமுகப் போட்டியிலும் 100-வது போட்டியிலும் ஒரு இன்னிங்சில் 5 விக்கெட்டுகள் எடுத்த முதல் வீரர் என்ற சாதனையும் அவர் படைத்தார்.

    இந்நிலையில் இந்தியாவுக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழக வீரராக சாதனை படைத்த அஸ்வினுக்கு தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் சார்பில் சென்னையில் பாராட்டு விழா நடைபெற்றது. அந்த விழாவில் 500 சாதனை விக்கெட்டுகளை பிரதிபலிக்கும் வகையில் 500 தங்க நாணயங்கள் கொண்ட சிறப்பு பரிசு, செங்கோல் மற்றும் 1 கோடி ரூபாய் காசோலை ஆகியவை அஸ்வினுக்கு வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டது.

    மேலும் அந்த நிகழ்ச்சியில் அனில் கும்ப்ளே, ராகுல் டிராவிட் போன்ற ஜாம்பவான்கள் கலந்து கொண்டு அஸ்வினை பாராட்டி பேசினார்கள். அதே நிகழ்ச்சியில் அஸ்வினுடைய பவுலிங் பார்ட்னரான ரவீந்திர ஜடேஜா காணொளியில் வந்து வாழ்த்தி பேசினார். அந்த காணொளியில் ரவீந்திர ஜடேஜா பேசியது பின்வருமாறு:-

    "ஹாய் ஆஷ் அண்ணா. 100 போட்டிகளில் விளையாடி 500 டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த உங்களுக்கு வாழ்த்துகள். உங்களுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இந்திய கிரிக்கெட்டுக்காக உங்களுடைய பங்கு அபாரமானதாகும். நீங்கள் தொடர்ந்து நிறைய விக்கெட்டுகள் எடுத்து உங்களுடைய மாஸ்டர் மூளையை என்னுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் நானும் சில விக்கெட்டுகளை எடுத்து உங்களைப்போல் ஒரு ஜாம்பவானாக வர முடியும். நாங்கள் ஒரு பெயரையும் பகிர்ந்து கொண்டுள்ளோம். நான் ரவி இந்திரன். நீங்கள் ரவி சந்திரன். மீசை வைத்தவன் இந்திரன் மீசை வைக்காதவன் சந்திரன்" என்று கலகலப்பாக பேசினார்.

    அதாவது தில்லு முல்லு திரைப்படத்தில் மீசை வைத்த கேரக்டரில் வரும் ரஜினிகாந்த் இந்திரனாகவும் மீசை வைக்காத கேரக்டரில் வரும் ரஜினி சந்திரனாகவும் இருப்பார்கள். அதே ஸ்டைலில் மீசை வைக்காத அஸ்வின் சந்திரனாகவும் மீசை வைத்த ஜடேஜா இந்திரனாகவும் இந்திய அணியில் செயல்பட்டு வெற்றிகளில் பங்காற்றி வருவதாக ரவீந்திர ஜடேஜா வித்தியாசமாக பாராட்டினார். குறிப்பாக அதை ஜடேஜா தமிழில் பேசி அஸ்வினை பாராட்டியது ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியது.

    • சென்னை மற்றும் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் மோதுகின்றன.
    • புகைப்படம், வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.

    இந்தியன் பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) 2024 டி20 கிரிக்கெட் தொடர் அடுத்த வாரம் துவங்க இருக்கிறது. மார்ச் 22-ம் தேதி நடைபெறும் ஐ.பி.எல். துவக்க விழாவை தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் இந்த சீசனின் முதல் போட்டியில் விளையாட இருக்கின்றன.

    விரைவில் ஐ.பி.எல். தொடர் துவங்க இருக்கும் நிலையில், ஒவ்வொரு அணியும் அதற்கான பயிற்சியை துவங்கியுள்ளன. இது தொடர்பாக அந்தந்த அணிகள் சார்பில் புகைப்படம், வீடியோக்கள் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டு வருகின்றன.


     

    அந்த வரிசையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா ஐ.பி.எல். தொடருக்கு ஆயத்தமாகும் வகையில், சென்னை வந்தடைந்தார். இது தொடர்பாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ எக்ஸ் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.

    பதிவில் புகைப்படத்துடன் ரவீந்திர ஜடேஜாவை குறிக்கும் வகையில் 'ராஜா இங்கு கைப்பற்ற இருக்கிறார்,' என தலைப்பிடப்பட்டுள்ளது. இத்துடன் ரவீந்திர ஜடேஜாவின் புகைப்படமும் இணைக்கப்பட்டு உள்ளது. இந்த பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    • இந்தியா, இங்கிலாந்து இடையிலான 3வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடந்துவருகிறது.
    • இங்கிலாந்தின் பென் ஸ்டோக்ஸ், ஹர்ட்லி ஆகியோரை ரவீந்திர ஜடேஜா வீழ்த்தினார்.

    ராஜ்கோட்:

    இந்தியா, இங்கிலாந்து அணிகள் இடையிலான 3-வது டெஸ்ட் போட்டி ராஜ்கோட்டில் நடைபெற்று வருகிறது. முதலில் பேட் செய்த இந்தியா ரோகித், ஜடேஜா ஆகியோரின் சதத்தின் மூலம் முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தது.

    தொடர்ந்து ஆடிய இங்கிலாந்து முதல் இன்னிங்சில் 319 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

    இந்தியா சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், குல்தீப், ஜடேஜா ஆகியோர் தலா 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதையடுத்து இந்தியா 126 ரன்கள் முன்னிலை பெற்றதுடன், 2வது இன்னிங்சை ஆடி வருகிறது.

    இங்கிலாந்து அணியின் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸை ஜடேஜா அவுட் ஆக்கினார். இது டெஸ்ட் கிரிக்கெட்டில் அவரது 281வது விக்கெட்டாக அமைந்தது.

    இந்நிலையில், ஜடேஜா சாதனை பட்டியலில் இடம்பிடித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணில் 200 விக்கெட்டுகளை எடுத்த 5-வது இந்திய பவுலர் என்ற சாதனையை ஜடேஜா நிகழ்த்தியுள்ளார்.

    அனில் கும்ப்ளே 350 விக்கெட்டும், அஸ்வின் 347 விக்கெட்டும், ஹர்பஜன் சிங் 265 விக்கெட்டும், கபில்தேவ் 219 விக்கெட்டும் வீழ்த்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

    • போட்டி முடிந்த பின்னர் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
    • ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

    16-வது ஐபிஎல் தொடரின் இறுதிப்போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, குஜராத் டைட்டன்ஸ் அணியை வென்று கோப்பையை கைப்பற்றியது. முதலில் பேட்டிங் செய்த குஜராத் 20 ஓவர் முடிவில் 4 விக்கெட்டுக்கு 214 ரன்கள் குவித்தது. அடுத்து விளையாடிய சென்னை அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ரன் தேவைப்பட்டது. உச்சக்கட்ட டென்ஷனுக்கு மத்தியில் இறுதி ஓவரை வேகப்பந்து வீச்சாளர் மொகித் ஷர்மா வீசினார்.

    கடைசி 2 பந்தில் 10 ரன் தேவை என்ற நிலையில், 5-வது பந்தை எதிர்கொண்ட ஜடேஜா சிக்சர் தூக்கியதுடன் கடைசி பந்தில் பவுண்டரி விரட்டி சென்னை அணிக்கு திரில் வெற்றியை தேடித்தந்தார். போட்டி முடிந்த பின்னர் வெற்றி கொண்டாட்டத்தில் ஜடேஜாவை தூக்கி வைத்து டோனி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். ஜடேஜாவின் வின்னிங் ஷாட்டை ரசிகர்கள் கொண்டாடிவருகின்றனர்.

    இந்நிலையில், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தனது டுவிட்டர் பக்கத்தில் ஜடேஜாவை பாராட்டி பதிவிட்டுள்ளார்.

    அதில், கிரிக்கெட் வீரர் ஜடேஜா ஒரு பாஜக காரியகர்த்தா. அவர் மனைவி திருமதி. ரிவபா ஜாம்நகர் வடக்கு தொகுதி பாஜக சட்டமன்ற உறுப்பினர். மேலும் அவர் குஜராத்காரர்! பாஜக காரியகர்த்தா ஜடேஜா தான் CSKவிற்கு வெற்றியை தேடி தந்துள்ளார்

    இவ்வாறு அண்ணாமலை குறிப்பிட்டுள்ளார்.

    • சென்னை அணியின் கேப்டனாக டோனி 200-வது ஆட்டத்தில் பங்கேற்கிறார்.
    • ஐ.பி.எல். போட்டியில் எந்தவித ஸ்கோரும் போதுமானதாக இல்லை.

    இன்றைய ஆட்டத்திலும் வெற்றிபெற்று டோனிக்கு பரிசளிப்போம் என்று சி.எஸ்.கே. அணியின் ஆல்ரவுண்டர் ஜடேஜா தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    சென்னை அணியின் கேப்டனாக டோனி 200-வது ஆட்டத்தில் பங்கேற்கிறார். கடந்த 2 ஆட்டத்தில் வெற்றி பெற்றது போல ராஜஸ்தான் அணிக்கு எதிராகவும் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெறும் பட்சத்தில் அது டோனிக்கு சிறந்த பரிசாக இருக்கும்.

    ஐ.பி.எல். போட்டியில் எந்தவித ஸ்கோரும் போதுமானதாக இல்லை. சேப்பாக்கம் ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும். இரு அணிகளிலும் திறமை வாய்ந்த சுழற்பந்து வீரர்கள் உள்ளனர். இதனால் ஆட்டம இரு அணிகளின் சுழற்பந்து வீச்சாளர்களுக்கான மோதலாக இருக்கும்.

    இவ்வாறு ஜடேஜா கூறியுள்ளார்.

    • லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார்.
    • இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை.

    இந்திய ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடரின் 16-வது சீசன் நாளை முதல் துவங்குகிறது. இந்த தொடரில் லக்னோ சூப்பர் ஜெய்ன்ட்ஸ் அணியின் பீல்டிங் பயிற்சியாளராக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த முன்னாள் ஜாம்பவான் வீரர் ஜான்டி ரோட்ஸ் செயல்பட உள்ளார்.

    இந்நிலையில் ஐபிஎல் தொடரில் பயிற்சியாளராக இருக்கும் அவரிடம் தற்சமயத்தில் உலக அரங்கில் அசத்தும் டாப் 3 ஃபீல்டர்களை பெயரிடுமாறு செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு இந்தியாவைச் சேர்ந்த ரவீந்திர ஜடேஜா மட்டும் தான் தற்போதைய நிலையில் ஒரே சிறந்த ஃபீல்டராக இருப்பதாக ஜான்டி ரோட்ஸ் தெரிவித்தார்.

    இது குறித்து அவர் பேசியது பின்வருமாறு:-

    தற்போதைய நிலைமையில் ரவீந்திர ஜடேஜா மட்டும்தான் இருக்கிறார். பொதுவாக ஐபிஎல் துவங்கும் போது தான் அனைவரும் பீல்டிங் துறையில் மிகவும் கவனம் செலுத்துகிறார்கள். இப்போதும் அனைத்து அணிகளிலும் பீல்டிங் பயிற்சியாளர்கள் இருப்பதில்லை.


    மேலும் 50 ஓவர் கிரிக்கெட்டில் உங்களுக்கு போதுமான நேரம் இருக்கும். அதில் 6 -7 வீரர்கள் சுமாராக இருந்தாலும் பீல்டிங் துறையில் அசத்தும் 3 -4 வீரர்களை வைத்து வெற்றி காணலாம். ஆனால் ஐபிஎல் துவங்கிய 2008 முதல் பீல்டிங் துறையில் நல்ல முன்னேற்றம் காணப்படுகிறது. கடந்த 12 - 13 வருடங்களில் அதன் வளர்ச்சி சிறப்பாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் ஒரு அணியில் இருக்கும் 2 - 3 ஃபீல்டர்களை பற்றி மட்டுமே பேசுவோம்.

    ஆனால் இப்போது அணியில் அனைவரும் மிகச் சிறந்த ஃபீல்டர்களாக இருக்க வேண்டும் என்ற வளர்ச்சியை நோக்கி வந்துள்ளோம். மேலும் பீல்டிங் துறையில் கவனம் செலுத்துவது அவ்வளவு கடினமானதல்ல. ஏனெனில் அது கட்டுப்பாட்டுடன் செயல்பட வேண்டிய துறையாகும். தற்போது பேட்டிங், பவுலிங் போலவே பீல்டிங் பயிற்சியாளர்களும் தினம்தோறும் அணி வீரர்களுடன் இணைந்து பணியாற்றி தங்களது வேலையை முடிக்கிறார்கள். இப்போது பீல்டிங் என்பது கிரிக்கெட்டில் மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது என்று கூறினார்.

    • பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக் பெயர் இடம்பெற்றுள்ளது.
    • வெஸ்ட் இண்டீஸ் அணியின் குடாகேஷ் மோதியும் இதில் இடம் பெற்றுள்ளார்.

    துபாய்:

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) ஒவ்வொரு மாதமும் சிறந்த கிரிக்கெட் வீரரை தேர்வு செய்து கவுரவித்து வருகிறது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் மற்றும் வீராங்கனைகளை தேர்வு செய்ய தலா 3 வீரர் மற்றும் வீராங்கனைகளை ஐசிசி அறிவித்துள்ளது.

    அதன்படி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருதுக்கு இங்கிலாந்தின் அதிரடி ஆட்டக்காரர் ஹாரி புரூக், காயம் காரணமாக ஓய்வில் இருந்து பின்னர் மீண்டும் அணிக்கு திரும்பி அபார ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இந்திய அணியின் அதிரடி ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் குடாகேஷ் மோதி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    இந்த மூவரில் அதிக வாக்குகள் பெறுபவருக்கு ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீரர் விருது வழங்கப்படும். அதே போல் ஐசிசி பிப்ரவரி மாதத்திற்கான சிறந்த வீராங்கனை விருதுக்கு லாரா வோல்வார்ட் (தென் ஆப்பிரிக்கா), நாட் ஸ்கிவர்-பிரண்ட் (இங்கிலாந்து), ஆஷ் கார்ட்னர் (ஆஸ்திரேலியா) ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    • டோனிக்கு மிகப்பெரிய தூணாக இருக்க முடியும் என ஜடேஜா நிரூபித்து காட்டியுள்ளார்.
    • ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

    மும்பை:

    சென்னையில் எம்.எஸ்.தோனிக்கு கிடைத்த அதே வரவேற்பும், புகழும் மற்றொரு வீரருக்கும் கிடைக்கப்போகிறது. அதனை இந்த சீசனிலேயே அவர் நிரூபித்துக்காட்டுவார் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    2023ம் ஆண்டுக்கான ஐபிஎல் கிரிக்கெட் தொடர் வரும் மார்ச் 31ம் தேதி முதல் தொடங்கவுள்ளது. இறுதிப்போட்டி மே 28-ம் தேதியன்று நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது. அதன்படி போட்டி அட்டவணைகள் சமீபத்தில் வெளியாகின.

    இந்த முறை சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ரசிகர்களுக்கு ஸ்பெஷல் உற்சாகம் காத்துள்ளது என்றே கூறலாம். இதற்கு காரணம் அனைத்து அணிகளும் ஹோம் மைதானத்தில் விளையாடலாம் என கூறப்பட்டுள்ளது.

    சிஎஸ்கே அணி கேப்டன் எம்.எஸ்.டோனி இந்த ஆண்டுடன் ஓய்வு பெறுவார் எனத்தெரிகிறது. அந்தவகையில் சென்னை மைதானத்தில் தனது கடைசி போட்டியை விளையாடிவிட்டு விடை பெறுவார் எனத்தெரிகிறது. மற்றொருபுறம் கடந்தாண்டு பாதி போட்டிகளில் ஜடேஜாவின் கேப்டன்சியும், பாதி போட்டிகளில் டோனியின் கேப்டன்சியும் இருந்ததால் சொதப்பலானது. ஆனால் இந்த முறை தவறுகளை சரிசெய்ய முணைப்புடன் உள்ளனர்.

    இந்நிலையில் இந்தாண்டு டோனிக்கு கிடைக்கும் அதே பெருமை ஜடேஜாவுக்கும் கிடைக்கும் என சுரேஷ் ரெய்னா கூறியுள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறியதாவது:-

    ரவீந்திர ஜடேஜா பேட்டிங் மற்றும் பவுலிங்கில் தனது ஃபார்ம் என்னவென்பதை நிரூபித்து காட்டியுள்ளார். டோனிக்கு மிகப்பெரிய தூணாக இருக்க முடியும் என ஜடேஜா நிரூபித்து காட்டியுள்ளார். தற்போது மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் நன்கு ஃபிட்டாக இருக்கிறார். சேப்பாக்கம் மைதானத்திற்கு சென்றால் நிச்சயம் டோனிக்கு கிடைத்த மரியாதை ஜடேஜாவுக்கும் கிடைக்கும்.

    தொடர்ந்து பேசிய அவர், ருதுராஜ் கெயிக்வாட் சென்னையில் நடக்கும் முதல் போட்டியில் விளையாடுவார். அவர் இந்த முறை நல்ல ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்ற நம்பிக்கை உள்ளது. இந்த சீசனின் சென்னையில் வெற்றியுடன் தொடங்கும். ரசிகர்களின் ஆசைகளை நிறைவேற்ற டோனியும் தயாராக உள்ளார்.

    என ரெய்னா கூறியுள்ளார்.

    ஐபிஎல் தொடரின் முதல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இந்த போட்டி அகமதாபாத்தில் நடைபெறவுள்ளது.

    • முகமது சிராஜிடம் இருந்து கிரீம் போன்ற பொருளை ஜடேஜா வாங்கி தனது விரலில் தேய்ப்பது வீடியோவில் தெரிந்தது.
    • ஜடேஜா பந்தை சேதப்படுத்தவில்லை என்று இந்திய அணி நிர்வாகம் விளக்கம் அளித்தது

    நாக்பூர்:

    இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான பார்டர் - கவாஸ்கர் கோப்பை தொடருக்கான முதல் டெஸ்ட் போட்டி நாக்பூரில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் மற்றும் 132 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்நிலையில், போட்டியின் முதல் நாளில் ஜடேஜாவும், ரோகித் சர்மாவும் பேசிக்கொண்டிருந்தபோது, பந்தை வைத்திருந்த ஜடேஜா, தனது விரலில் ஏதோ ஒன்றை தேய்த்தார். முகமது சிராஜிடம் இருந்து அதனை ஜடேஜா வாங்கி தனது விரலில் தேய்ப்பது வீடியோவின் மூலம் தெரிந்தது.

    ஜடேஜா ஒருவகை கிரீமை கொண்டு பந்தை சேதப்படுத்தியதாக இதனை ஆஸ்திரேலிய மீடியாக்கள் தெரிவித்தன. ஆஸ்திரேலிய மீடியாக்களின் கருத்தை இந்திய கிரிக்கெட் நிர்வாகம் மறுத்துள்ளது. இதுகுறித்து அணி நிர்வாகம் கூறுகையில், ஜடேஜா, தனது விரலில் வலி நிவாரணிக்காக பயன்படுத்தப்படும் மருந்தையே பயன்படுத்தினார் என்றும், அவர் பந்தை சேதப்படுத்தவில்லை என்றும் விளக்கம் அளித்தது.

    இந்த நிலையில் டெஸ்ட் போட்டியில் ஐசிசி விதிகளை விதிகளை மீறியதாக ரவீந்திர ஜடேஜாவிற்கு போட்டியின் சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. போட்டி நடுவர்களிடம் தெரிவிக்காமல் கை விரலில் வலி நிவாரணி மருந்தை பயன்படுத்தியதால் அபாராதம் விதிக்கப்படுவதாக ஐசிசி தெரிவித்துள்ளது.

    • காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார்.
    • போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப்டிடம் இந்திய அணி விளக்கம் அளித்தது.

    நாக்பூர்:

    நாக்பூரில் நேற்று தொடங்கிய ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் நாளில் இந்திய சுழற்பந்து வீச்சாளர் ரவீந்திர ஜடேஜா 5 விக்கெட் வீழ்த்தி அசத்தினார்.

    காயத்தில் இருந்து மீண்டு வந்த ஜடேஜா சிறப்பாக பந்து வீசினார். இதற்கிடையே போட்டியின் போது ஜடேஜா தனது கைவிரலில் மர்ம பொருளை தடவினார் என்று ஆஸ்திரேலிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டன.

    முகமது சிராஜ் தனது உள்ளங்கைக்கு மேலே வைத்து ஒரு க்ரீம் போன்ற திரவத்தை ஜடேஜாவிடம் கொடுக்கிறார். அதை ஜடேஜா தனது விரலால் லேசாக தொட்டு, பந்தை பிடித்து வீசும் இடது கையின் அனைத்து விரல்களிலும் தடவினார்.

    ஜடேஜா தனது கைவிரலில் தடவிய மர்ம பொருள் என்ன என்று சர்ச்சை கிளம்பின. ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் டிம்பெய்ன் டுவிட்டரில் கூறும் போது, இது மிகவும் சுவாரசியமாக உள்ளது என்றார்.

    இங்கிலாந்து முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறும்போது, ஜடேஜா தனது விரல்களில் என்ன பூசுகிறார்? இது போன்றதை நான் பார்த்ததில்லை என்று கேள்வி எழுப்பினார்.

    இந்த நிலையில் இவ்விவகாரம் தொடர்பாக போட்டி நடுவர் ஆன்டி பைக்ராப்டிடம் இந்திய அணி விளக்கம் அளித்தது.

    நடுவரை இந்திய கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஜடேஜா ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது, ஜடேஜா தனது விரல்களில் வலி நிவாரணி கிரீமை தடவியதாக இந்திய அணி நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டது. 

    • இந்திய அணியில் குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது சேர்க்கப்பட்டுள்ளனர்.
    • ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் விலகியுள்ளனர்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணி தற்போது நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 மற்றும் ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. டி20 தொடரை இந்திய அணி 1-0 என்ற கணக்கில் கைப்பற்றிய நிலையில், ஒருநாள் தொடர் நாளை தொடங்குகிறது.

    நியூசிலாந்து தொடர் முடிந்த பிறகு இந்திய அணி வங்காளதேசத்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களில் விளையாட உள்ளது. 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் டிசம்பர் 4-ம் தேதி தொடங்குகிறது. 2-வது ஒருநாள் போட்டி 7-ம் தேதியும், கடைசி ஒருநாள் போட்டி டிசம்பர் 10-ம் தேதியும் நடைபெறுகிறது. இதையடுத்து, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் டிசம்பர் 14-ம் தேதி தொடங்குகிறது.

    இதற்கிடையே, வங்காளதேச அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ கடந்த மாதம் அறிவித்தது.

    ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணியில் கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரவீந்திர ஜடேஜா, யாஷ் தயாள் உள்ளிட்டோர் அறிவிக்கப்பட்டு இருந்தனர்.

    இந்நிலையில், ஒருநாள் தொடரில் இருந்து காயம் காரணமாக ஜடேஜா மற்றும் யாஷ் தயாள் விலகியுள்ளனர். அவர்களுக்கு பதிலாக குல்தீப் சென் மற்றும் ஆல்-ரவுண்டர் ஷபாஸ் அகமது ஒருநாள் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

    வங்காளதேச தொடருக்கான இந்திய ஒருநாள் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷிகர் தவான், விராட் கோலி, ரஜத் படிதார், ஷ்ரேயாஸ் அய்யர், ராகுல் திரிபாதி, ரிஷப் பண்ட் (விக்கெட் கீப்பர்), இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஷபாஸ் அகமது, அக்சர் படேல் , வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது சிராஜ், தீபக் சாஹர், குல்தீப் சென்.

    வங்காளதேச தொடருக்கான இந்திய டெஸ்ட் அணி:

    ரோகித் சர்மா (கேப்டன்), கே.எல்.ராகுல் (துணை கேப்டன்), ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், கே.எஸ்.பாரத், ரவிச்சந்திரன் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், ஷர்துல் தாக்கூர், முகமது ஷமி, முகமது. சிராஜ், உமேஷ் யாதவ்.

    • உலகக்கோப்பை போட்டியில் அக்‌ஷர் படேலால் தாக்கத்தை ஏற்படுத்த இயலும்.
    • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அக்‌ஷர் படேல் 8 விக்கெட் கைப்பற்றி (3 ஆட்டம்) தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    புதுடெல்லி:

    இந்திய அணியின் முன்னாள் கேப்டனான அஜய் ஜடேஜா கூறியதாவது:-

    ஆல் ரவுண்டரான ரவீந்திர ஜடேஜா காயம் காரணமாக ஆஸ்திரேலியா தொடரில் ஆடவில்லை. அவரது இடத்தில் அக்‌ஷர் படேலுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவரும் அதை மிகவும் சரியாக பயன்படுத்தி கொண்டார்.

    ஜடேஜாவின் ஆல் ரவுண்டர் வரிசைக்கு மாற்றாக அக்‌ஷர் படேல் இருக்கிறார். அவரை போன்று அக்‌ஷர் படேல் பேட்டிங் செய்கிறார். பந்து வீசுகிறார். பீல்டிங் மட்டும் இன்னும் பொருத்தமாக அமையவில்லை. உலகக்கோப்பை போட்டியில் அக்‌ஷர் படேலால் தாக்கத்தை ஏற்படுத்த இயலும். அணிக்கு மீண்டும் திரும்பும் போது ரவீந்திர ஜடேஜா நல்ல நிலையில் இருப்பார்.

    அஜய் ஜடேஜா

    அஜய் ஜடேஜா

    இவ்வாறு அஜய் ஜடேஜா கூறியுள்ளார். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 20 ஓவர் போட்டியில் அக்‌ஷர் படேல் 8 விக்கெட் கைப்பற்றி (3 ஆட்டம்) தொடர் நாயகன் விருதை கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

    ×