என் மலர்
கிரிக்கெட் (Cricket)

அகமதாபாத் டெஸ்ட்: எம்.எஸ்.தோனியின் சாதனையை முறியடித்த ரவீந்திர ஜடேஜா
- வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அகமதாபாத்:
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஆடி வருகிறது.
அதன்படி இந்தியா, வெஸ்ட் இண்டீஸ் இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடந்து வருகிறது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதல் இன்னிங்சை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி 44.1 ஓவரில் 162 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
இந்திய அணி சார்பில் சிராஜ் 4 விக்கெட்டும், பும்ரா 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.
அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்தியா முதல் நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 121 ரன்கள் எடுத்திருந்தது.
தொடர்ந்து இரண்டாம் நாள் ஆட்டம் நேற்று நடைபெற்றது. கே.எல்.ராகுல், ரவீந்திர ஜடேஜா மற்றும் துருவ் ஜுரெல் ஆகியோர் பொறுப்புடன் ஆடி சதமடித்து அசத்தினர்.
இரண்டாம் நாள் முடிவில் இந்திய அணி 128 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 448 ரன்கள் குவித்துள்ளது. இந்தியா இதுவரை 286 ரன் முன்னிலை பெற்றுள்ளது.
இந்நிலையில், இந்தப் போட்டியில் ரவீந்திர ஜடேஜா அடித்த 5 சிக்சர்களின் மூலம் முன்னாள் கேப்டனான மகேந்திர சிங் தோனியின் மாபெரும் சாதனை ஒன்றை முறியடித்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த வீரர்களின் பட்டியலில் மகேந்திர சிங் தோனி 78 சிக்சர்களுடன் 4-வது இடத்தில் இருந்தார். நேற்றைய போட்டியில் ஜடேஜா அடித்த 5 சிக்சர்களோடு 80 சிக்சர்களுடன் டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த 4-வது இந்திய வீரர் என்ற சாதனையை நிகழ்த்தியுள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் அதிக சிக்சர்களை அடித்த இந்திய வீரர்கள் பட்டியலில் ரிஷப் பண்ட் (90), சேவாக் (90), ரோகித் சர்மா (88) முதல் 3 இடங்களில் உள்ளனர்.






