search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "relationships"

    • நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு ‘ஆன்லைன்’ நண்பர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
    • 55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.

    சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகள் மக்களுக்கிடையேயான 'மனித' தொடர்பை குறைத்து வருவதாக பிரிட்டனில் 3000 பேரிடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான "லைஃப்சர்ச்" நடத்திய ஆய்வில் தெரிகிறது.

    அந்நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 10 பேரில் ஒருவர், தங்களுக்கு எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பதாக இது கூறுகிறது.

    18 முதல் 70 வயதுக்குட்பட்ட வயதுள்ளவர்களில் 8% பிரிட்டன் மக்கள் இணைய வழியிலேயே அனைத்து சமூக தொடர்புகளையும் அடைகிறார்கள் என்றும் நண்பர்களைக் கொண்ட மீதமுள்ள 92% பேர் சராசரியாக தலா 8 நண்பர்களைக் கொண்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது.

    இந்த புள்ளி விவரத்தை சுமார் 5.5 கோடி (55 மில்லியன்) மக்கள் தொகைக்கு விரிவுபடுத்தி ஆராயும்போது சுமார் 40 லட்சம் (4.4 மில்லியன்) மக்கள் தங்களுக்கு நம்பக்கூடிய 'உண்மையான' நண்பர்கள் இல்லாமல் வாழ்வதை காட்டுகிறது.

    நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு 'ஆன்லைன்' நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.

    ஆண்களுக்கு சராசரியாக 9 நண்பர்கள் இருப்பதாகவும், பெண்களுக்கு சராசரியாக 7 பேர் இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது. 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சராசரியாக 10 நண்பர்கள் உள்ளனர்.

    இவர்களோடு ஒப்பிடுகையில், 35-54 வயதுடையவர்களுக்கு குறைந்தளவே உள்ளனர். அதாவது 7 பேர் மட்டுமே நட்பில் உள்ளனர்.

    55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.

    3,000 பேரில் 55 சதவீதம் பேர் தங்களுக்கு ஒரு 'சிறந்த நண்பர்' இருப்பதாகவும், அவர்களின் மனைவி அல்லது கணவர் இதில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

    மொத்தத்தில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 3ல் ஒரு பகுதியினர் (39 சதவீதம்) தங்கள் சிறந்த நண்பர் தங்கள் கணவர், மனைவி அல்லது தங்கள் 'இணை' (Partner) என்று கூறியுள்ளனர்.

    ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வாட்ஃபோர்டைச் சேர்ந்த 44 வயதான பேரி டெய்லர், அவரது மனைவி கிளாரியை தனது 'சிறந்த நண்பர்' என்று கூறியுள்ளார்.

    டோர்செட் பகுதியின் ஸ்வானேஜ் எனும் இடத்தை சேர்ந்த 23 வயதான க்ளோ வைட் எனும் பெண், தனது 2 சிறந்த நண்பர்களும் லண்டனுக்குச் சென்றதிலிருந்து தனக்கு 'உண்மையான நண்பர்கள்' இல்லை என்று கூறியிருக்கிறார்.

    "3,000 பிரிட்டன் மக்களிடம் நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உண்மையான நண்பர்கள் இல்லை என தெரிகிறது" என லைஃப்சர்ச் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.

    அண்மைக்காலங்களில், இந்தியாவிலும் மக்கள் தங்களின் பெருமளவு நேரத்தை ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலுமே கழித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு மனநல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள் என உளவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.

    இந்த பின்னணியில், பிரிட்டன் நாட்டின் இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.

    தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள். மனித இனம் நிம்மதியற்ற பாதையை தேர்ந்தெடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது.
    எதற்காக இந்த ஓட்டம் எல்லோரும் அதிவேகமாக ஓடுகிறார்கள். நவீனம் நடத்தும் பொருளாதார பந்தயத்தில் ஓடுவதற்கு தடங்கலாக இருந்த சொந்த ஊர்களை உதறி தள்ளிவிட்டு வேகமாக ஓடினார்கள். பந்தயம் கடினமாக இருந்த போது வேகத்தை மேலும் கூட்ட தாய்மொழி தடையாக இருக்கவே அதையும் ஒதுக்கி வைத்து ஓடினார்கள். பின்னர் தர்ம சிந்தனைகள், கடமை, கண்ணியம், கூட சுமைகளாகிப்போயின.

    எனவே அவை அனைத்தையும், உதறி தள்ளிவிட்டு ஓட்டத்தை தொடர்ந்தனர். உறவுகள் சுமையாக தொந்தரவாக அவர்களுக்கு தோன்றின. எனவே அவற்றையும் விட்டு தள்ளினார்கள் அல்லது வில(க்)கி ஓடினார்கள். இந்த நவீன மனிதர்களுக்கு பொருளாதார வசதி, புகழ், வெற்றிகரமான வாழ்க்கை என்ற அடங்காத வெறி மட்டும் எஞ்சி உள்ளதால் பந்தயத்தில் வேக வேகமாக ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இனி அவர்கள் வீசி எறிய எதுவுமில்லை குடும்பங்கள் சிதறிக்கிடக்கின்றன.

    மடிக்கணினி திரை வழியாக பேரப்பிள்ளைகளை கொஞ்சும் பெரியவர்களை பெற்றெடுத்திருக்கிறார்கள், பந்தயத்தில் ஓடும் பிள்ளைகள். பிறந்த குழந்தையின் பசிக்கு பாலூட்டவும் குளிப்பாட்டவும் நேரம் இல்லாத இளம் அம்மாக்களும் உருவாகி விட்டார்கள். மனைவி வலியால் துடித்தாலும் அரவணைத்து மருந்து கொடுத்து அக்கறையும் பாசமும் காட்ட நேரம் இல்லாத கணவர்களும் மலிந்து போனார்கள்.

    பல பெரியவர்களுக்கு பிள்ளைகளை பார்க்காத ஏக்கத்தில் மாரடைப்பு வருகிறது. சிலருக்கு அவர்கள் படும் பாட்டை நினைத்தவாரே உயிர் பிரிகின்றது. மருத்துவ செலவுக்கு அனுப்பும் பணம் கூட அவரவர் கணக்குகளில் வங்கிகளில் நிரம்பி வழிகின்றன. மருத்துவமனைகளுக்கு அழைத்து செல்லவும் முடிவதில்லை. எல்லோருடைய நேரத்தையும் கேளிக்கைகளும், செல்போன்களும் விழுங்கிவிட்டன.

    தொடு திரையில் வாழ்த்துக்கள். நகரங்கள் விரிவடைய மனித மாண்பு வெகுவாக சுருங்கி விட்டது. மூன்று வயது நிரம்பாத குழந்தைகள் மழலை காப்பகங்களுக்கும், ப்ளே ஸ்கூல்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றனர். இவர்களின் ஓட்டத்திற்கு இந்த குழந்தைகளின் இயல்பான வளர்ச்சி கூட தடையாக தென்படுகின்றது. தொடக்கத்தில் கூட்டுக்குடும்பங்கள் தனிக்குடும்பங்களாகின.

    இப்போது தனிக்குடும்பங்களின் உறுப்பினர்கள் தனித்தனியாக பிரிந்து இயங்குகிறார்கள். இனி சொல்வதற்கு ஒன்றுமில்லை மனித இனம் நிம்மதியற்ற பாதையை தேர்ந்தெடுத்து ஓய்வின்றி ஓடிக்கொண்டிருக்கிறது. இனி அதுவே நினைத்தாலும் நிறுத்த முடியுமா, என்ன? 
    தற்போது உரையாடுவதற்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான் மனஅழுத்தம் ஏற்படுவதாகக் சுட்டிக்காட்டுகின்றனர்.
    `உரையாடல்தான் உறவுகளை வலுப்படுத்தும்' என்கின்றனர் உலகளாவிய மனநல மருத்துவர்கள். பலருக்கும் தங்கள் மனம்விட்டு உரையாடாத காரணத்தால்தான் மனஅழுத்தம் ஏற்படுவதாகக் சுட்டிக்காட்டுகின்றனர்.

    கடிதம் மட்டுமே உரையாடுவதற்கான கருவியாக முன்னர் இருந்தது. அதன் பிறகு தொலைபேசியின் வருகை ப்ரியமானவர்களின் குரலை எவ்வளவு தொலைவில் இருந்தாலும் கேட்டு ஆசுவாசம் கொள்ளச்செய்தது. ஆனால், தற்போது உரையாடுவதற்கும் உறவுகளை வலுப்படுத்துவதற்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. இருந்தும் உறவுகளின் ஆயுள்காலம் குறுகியகால அளவிலேயே முடிவடைகிறது. முன்பைவிட ஆண்-பெண் நட்பு குறித்த புரிதல்கள் அதிகரித்திருந்தும் இந்தச் சிக்கல் உலவுகிறது.  

    வேலைபார்க்கும் இடங்களில், பேருந்துகளில், ரயில்களில் என எல்லா இடங்களிலும் இணையம் நம்முடனேயே பயணிக்கிறது. சக மனிதர்களுடன் பேசுவதைத் தவிர்த்து இணையத்திலேயே மூழ்கிக்கிடக்கிறோம் என்பதே இந்தத் தலைமுறை மீதான குற்றச்சாட்டு. உண்மையில் இணையமும் அலைபேசியும் மனிதர்களை இணைப்பதைத்தான் முழுநேரப் பணியாகச் செய்துகொண்டிருக்கின்றன. தினம் தினம் புதுப்புது அப்ளிகேஷன்களை ஆண்ட்ராய்டு நமக்குத் தருவித்துக்கொண்டே இருக்கிறது. அவற்றில் பல ஆப்-கள் புதிய மனிதர்களைத் தேடிக் கண்டடைவதற்கும் உரையாடுவதற்கும் பயன்படுகின்றன. இருப்பினும் நம் உறவுநிலைகளில் விரிசல் ஏற்படுவதும், அதைச் சரிசெய்ய இயலாமல் தவிப்பதும் தொடர்கின்றன.

    பெரும்பாலும் இன்றைய தலைமுறையினர் இந்த உறவுச்சிக்கல்களை இரண்டுவிதமாகக் கையாள்கிறார்கள்.



    1) முரண்பாடான கருத்துகள் ஏற்படும்போதும் சுமுகமாகப் பேசிப் பிரிவது.

    2) பேசினால் சச்சரவு அதிகமாகும் என எண்ணி, பேசாமலேயே கடந்து போதல்.

    முதல் பாயின்ட்டில் உரையாடல் ஏற்படுவதால், அதில் சிக்கல் தீர வாய்ப்புள்ளது. உதாரணமாக, சின்ன விஷயத்துக்காக ஏற்படும் சண்டை, உடனே பேசித் தீர்த்துக்கொள்ளப்படும். அந்த உரையாடல் உடனே நிகழ்வதன் மூலம் உறவின் ஆழம் இருதரப்பினருக்கும் உணர வாய்ப்பு ஏற்படும். இதன்மூலம் இயல்பாகவே உறவுகளில் ஏற்படும் வெற்றிடத்தைத் தவிர்க்க இயலும். மேலும், ஒருவருக்கு மட்டும் அந்த உறவில் மனக்கசப்பும், மற்றவருக்கு உறவைத் தொடர வேண்டும் என்ற எண்ணமும் இருக்கும்பட்சத்தில் சரியான புரிதலைக் கொடுக்கும்.

    இரண்டாவதாக, பேசாமலேயே கடந்து போவதில் ஏற்படும் சிக்கல் மோசமானது. `இனிமேல் பேசி என்ன இருக்கு!' என நினைத்துப் பேசாமலேயே உறவைத் துண்டித்தல். இது மனதில் நாம் அறியாமலேயே ஒருவித வெறுமையை மெள்ள ஏற்படுத்தும். அந்த வெறுமையைப் போக்குவதற்காகவே புதிய செயல்களில் ஈடுபடத் தொடங்குவோம்.

    புதிதாக வேறு ஏதாவது ஒரு நபருடன் பேசத் தொடங்குவோம். அதன் பிறகான எல்லா உறவுகளிலும் நாம் பேசாமல் போனவர்களின் சாயலை நாம் அறியாமலேயே தேட ஆரம்பிப்போம். தங்கள் நண்பர்களுடன் சண்டைபோட்டுவிட்டு `ஒரு வருஷமா பேசலை' எனச் சொல்லிக்கொள்ளும் நிறையபேரைச் சந்தித்திருப்போம். அவர்கள் உண்மையில் ஒரு நாளைக்கு ஒருமுறையாவது ஒரு வருடமாகப் பேசாத அந்த உறவை நினைத்தபடியே இருப்பர்.

    எல்லா உறவுகளுக்கும் தினசரி உரையாடல் அவசியம். அன்றைய பொழுதின் அத்தனை சுக, துக்கங்களையும் பகிர்ந்துகொள்ள இந்த உரையாடல் இன்றியமையாத ஒன்று. மழைநாளின் தேநீரைப்போல பிடித்தமானவர்களின் உரையாடலும் ஏகாந்தமானது.

    அன்பும், பிரியமுமான உறவுகள் அருகில் இருந்தாலே போதுமே. நாம் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட முதலில் நாம் நல்ல உறவுகளாக இருக்கலாம்.
    ஒரு குடம் தண்ணீர் ஊற்றி ஒரு பூ பூத்தது. யானை, யானை அம்பாரி யானை, அரசனாக அமரச் சொல்லும் யானை.

    உனக்குக் கொஞ்சம், எனக்குக் கொஞ்சம், உவகையுடன் தின்னலாம். கை கோர்த்தே நாம் காலம் முழுதும் சஞ்சரிக்கலாம். உறவென்னும் பாறையில் உயிருள்ளவரை உலவலாம் இந்தப் பாடல்கள் நினைவிருக்கிறதா? சிறு வயதில் பள்ளி விடுமுறையில் தாத்தா, பாட்டி வீட்டுக்குச் சென்றவர்களுக்கு கிராமத்தில் இந்த விளையாட்டை விளையாடியது நினைவில் இன்னும் இருக்கலாம். ஐம்பது வயதை கடந்த அனைவரிடமும் மாறாத வாசனையாய் இந்த உணர்வுகள் இருக்கும். அமைதி, பொறுமை, நிதானம் என்று வாழ்வில் ஒவ்வொன்றையும் திட்டமிட்டு வாழ்பவர்கள் நிச்சயம் தங்கள் பால்ய காலத்தை உறவுகளுடன் கழித்தவர்களாய்த்தான் இருப்பார்கள்.

    ஏட்டுக் கல்வியை பல்கலைக்கழகங்கள் கொடுக்கலாம். ஆனால் வாழ்க்கைக் கல்வியை இந்த மாதிரி உறவுகள்தான் கற்றுக் கொடுக்கும். எல்லா உறவுகளும் அன்பின் நெருக்கமாய் இருப்பதில்லை. அதிலும் போட்டி, பொறாமை, கோபம் என்று எல்லாம் இருக்கும். ஆனாலும் விட்டுக்கொடுத்து அன்பும் பாசமுமாய் வாழ்ந்தால் எவ்வளவு ஆனந்தமாய் இருக்கும் என்று உணர்த்த முடியும்.

    பள்ளி விடுமுறை விட்டதுமே ஊருக்குப் போகும் குஷி ஆரம்பித்து விடும். கிராமம் என்றால் உற்சாகத்துக்கு கேட்கவே வேண்டாம். பொழுது போவது தெரியாது. நீரை வாரி இறைக்கும் பம்புசெட், நீச்சல் கற்றுக்கொடுக்கும் கிணறு, தணலில் சுட்டுச் சாப்பிடும் கம்பு, கேழ்வரகு, சோளம், இளநீர், நுங்கு என்று இயற்கையான தின்பண்டங்கள், தாத்தா தென்னை ஓலையில் செய்து கொடுக்கும் கிளி, குருவி, சைக்கிள் ஓட்ட கற்றுத்தரும் மாமா, வெள்ளி, சனியில் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டி விடும் அத்தை, சித்திகள் என்று அனைவரும் அன்பை கற்றுக்கொடுத்தார்கள். அன்பைவிட அக்கறையே அதிகம் இருக்கும் அவர்கள் செயலில்.

    பங்கிட்டு வாழ கற்றுக்கொடுக்கும் பல்லாங்குழி, விட்டுக்கொடுத்து வாழ் எனச் சொல்லும் கிட்டி, கிளித்தட்டு, அத்துடன் கும்மி. இன்று பல ஆங்கில டாக்டர்கள் இரு கையையும் தட்டுங்கள் அது இதயத்திற்கு இதமானது என்கிறார்கள். வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும் என்கிறார்கள். இன்று பல இடங்களில் கை தட்ட பயிற்சி, சிரிக்க ஒரு கிளப் என்று நடக்கிறது.

    வீட்டில் நாலு உறவுகள் அவர்களின் குழந்தைகள் சேர்ந்து இருக்கும்போது அங்கு தெறிக்கும் சிரிப்பலைகள் மூலம் தீர்க்காத நோய்களும் உண்டா? இரவில் மீந்துப்போன குழம்பு வகைகளைச் சுட வைத்து பாட்டி சாதம் பிசைந்து போடுவாள். அதில் உள்ள ருசி எந்த ஐந்து நட்சத்திர ஓட்டல்களில் கிடைக்கிறது.? இருப்பதை பங்கிட்டுச் சாப்பிடும் வழக்கத்தையும் அல்லவா அது கற்றுத் தருகிறது. அனைவரும் ஒரே இடத்தில் பேதமின்றி படுத்திருக்க, பாட்டியும், தாத்தாவும் சொன்ன இதிகாசங்கள், நல்ல பண்புகளையும், பழக்க வழக்கங்களையும் கற்றுத் தந்தது. தாத்தாவின் கை பிடித்து நடக்கும்போது எதிர்ப்படுபவரிடம் அவர் பேசுவதும், நடந்து கொள்வதும் நமக்குப் பாடமானது. வீட்டுக்கு வந்தவர்களை பாட்டி வரவேற்கும் முறையைப் பார்த்து மரியாதை என்பதைக் கற்றுக்கொண்டோம். நேசிப்பையும், உணவில் ஆரோக்கியத்தையும், அன்பையும், பணிவையும், நல்ல பண்புகளையும் அவர்கள் வாழ்ந்து காட்டுவதன் மூலம் கற்றுத் தந்தார்கள்.



    ஆனால் இன்று? இன்று இளைய சமுதாயத்தின் உலகம் அலைபேசியின் தொடுதிரையிலும், கணினியிலும் அடக்கிவிட்டது. வீட்டுக்கு யாராவது வந்தால் கூட வாங்க என்று கூப்பிடத்தோணாமல் வாட்ஸ் ஆப்பிலும், முகநூலிலும் மூழ்கிக்கிடக்கிறார்கள். காசு மட்டும் அல்லவே வாழ்க்கை. அடிப்படை பண்புகளை எந்த கல்வி நிறுவனம் கற்றுத் தருகிறது?

    இன்று பெருகி நிற்கும் வன்முறை, பாலியல் கொடுமைகள், பயங்கரவாதம் இந்த அளவுக்கு அன்று இல்லையே? காசு சம்பாதிக்கும் எந்திரமாக்கி விட்டோம் குழந்தைகளை. விடுமுறை என்பது அவர்களுக்கு சென்டிரல் ஜெயிலில் இருந்து சப்-ஜெயிலுக்கு மாறும் நாள். ஒரு கூட்டுக் குடும்பத்தில் எல்லா உறவுகளிடமும் அனுசரித்துப் போகப் பழகியவனால் சமுதாயத்தில் எந்த இடத்திலும் கலந்து பழகி வெற்றிபெற முடியும்.

    ஒரு கூட்டுக் குடும்பத்தில் ஐந்தாறு பெண் குழந்தைகளிடம் கலந்து பழகியவனால் மற்றொரு பெண்ணை தவறான எண்ணத்துடன் பார்க்கவோ, நடக்கவோ முடியாது. படித்து நல்ல வேலை கிடைத்து பையன் வெளிநாடு சென்றாலும் அவனின் வயதான பெற்றோர்களைக் கவனித்துக்கொள்ள கூட்டுக் குடும்பத்தில் உறவுகளின் அனுசரணை இருக்கும். அன்பும், பிரியமுமான குடும்பத்தில் வளர்ந்தவன் வெளிநாட்டுக்குத் தன்னை அடிமை சாசனம் எழுதித் தரமாட்டான். முதியோர் இல்லங்கள் தேவை இல்லாமல் போயிருக்கும். உறவுகளுடன் வாழ்ந்து அவர்களை மதிக்கவும், நேசிக்கவும் கற்றவன் ஆசிர்வதிக்கப்பட்டவன்.

    தன் மகன்-மகள் டாக்டர், என்ஜினீயர் ஆக வேண்டும் என்று லட்சக்கணக்கில் செலவு செய்யும் பெற்றோர்கள் அவர்கள் ஒரு நல்ல மனிதனாக வாழ என்ன செலவு செய்கிறார்கள்? வாழ்க்கை, பல்கலைக்கழகங்களிலோ, கோடைக்கால பயிற்சி வகுப்பிலோ இல்லை. பாட்டி, தாத்தா வீட்டில், உறவுகளின் குழுவில் இருக்கிறது, நமது கலாசாரம், பாரம்பரியத்தைக் கடத்திக்கொண்டு வருகிறவர்கள் அவர்களே.

    விடுமுறை தினங்களில் உறவுகளின் வீட்டுக்கு அழைத்துச் செல்லுங்கள். கிராமத்தில் நடக்கும் திருவிழாவிற்கு, பாட்டி, தாத்தா வீட்டுக்கு அனுப்புங்கள். நல்ல பழக்க வழக்கங்களை கற்றுத்தர வேண்டாம். அவர்களே கற்றுக்கொள்வார்கள்.

    சுற்றத்தின் அழகு சூழ இருத்தல் என்கிறார் அவ்வையார். அன்பும், பிரியமுமான உறவுகள் அருகில் இருந்தாலே போதுமே. நாம் மற்றவர்கள் அப்படி இருக்க வேண்டும் என்று நினைப்பதை விட முதலில் நாம் நல்ல உறவுகளாக இருக்கலாம். நம் வீட்டில் அவர்கள் வருவதை அனுமதிக்கலாம். அன்பாய் விருந்தோம்பலாம். நாம் என்ன செய்கிறோமோ அதுதான் நமக்கு திரும்பக் கிடைக்கும். டாலர்களில் இல்லை வாழ்க்கை. பெற்றோர்கள் இருக்க வேண்டியது முதியோர் இல்லங்களில் இல்லை. குழந்தைகளுக்கு நாம் சேர்த்து வைக்க வேண்டியது செல்வத்தை அல்ல. அதைவிட உயர்வான நல்ல கல்வி. அன்பான சுற்றம், உறவுகள்.

    எழுத்தாளர் ஜி.ஏ.பிரபா

    ×