என் மலர்
பெண்கள் உலகம்

விட்டுக்கொடுப்பது காதல் அல்ல! பெண்ணின் மனநிலையிலிருந்து...
- திருமண உறவில் பெண்களே தங்கள் சுய விருப்பு, வெறுப்புகளை துறந்து வாழ்கின்றனர்?
- விட்டுக்கொடுப்பதுதான் காதல். ஆனால் அது ஆதிக்கத்தால் நிகழக்கூடாது.
கணவன், மனைவியோ அல்லது காதலர்களோ தங்களுக்குள் பிரிவு வந்தால் இருவருக்கும் இருக்கும் வேற்றுமைகள்தான் காரணம் என நினைப்பர். ஆனால் ஒரு உறவின் பிரிதலுக்கு அங்கு புரிதல்தன்மை இல்லாததே காரணம் என அறிந்திருக்கமாட்டார்கள். அறிந்தால் அந்த உறவின், பிரிவின் வலியிலிருந்து வெளியேவந்துவிடுவார்கள். இருவரின் விருப்பங்களில் வேற்றுமை இருந்தால் அதை அப்படியே ஏற்றுக்கொள்ளவேண்டும். யாரும், யாருக்காகவும் மாறக்கூடாது. அப்படி மாற்றம் நிகழ்ந்தால் அன்பால், காதலால் மட்டுமே நிகழவேண்டும். கட்டாயத்தால் அல்ல. இருவரில் ஒருவரின் செயலோ, விருப்பங்களோ, நடைமுறையோ ஒருவருக்கு பிடிக்கவில்லை என்பதை அறிந்து மாற்றொருவர் தானாக மாறுவதே காதல். ஆனால் நீங்கள் மாறாமலேயே அப்படியே ஏற்றுக்கொள்பவர்தான் உண்மையான காதலர். ஒருவரின் கட்டாயத்தின் பேரில் மாற்றிக்கொள்வது அல்ல. பலதரப்பு மக்களின் வாழ்க்கைமுறையை ஆராய்ந்தால் இந்த மாற்றிக்கொள்ளும் பழக்கம் பெரும்பாலும் பெண்களிடத்தில்தான் நிகழ்கிறது. இதனால் ஆண்களை குறைசொல்லவில்லை. ஆனால் பெண்கள் ஏன் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும்? ஒரு பெண்ணின் மனநிலையிலிருந்து...
எதற்காக மாற்றிக்கொள்ள வேண்டும்?
ஒரு பெண்ணின் செயல் அவளுடைய காதலனுக்கோ, கணவனுக்கோ பிடிக்கவில்லை என்றால் உடனே மாற்றிக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. மாற்றிக்கொள்ள வேண்டிய விஷயங்களை மாற்றிக்கொள்ளலாம் (கோபம், முரண்பாடு, தான் சொல்வதைத்தான் கேட்கவேண்டும் போன்ற எண்ணங்கள்). ஆனால் தங்களுக்கு உரித்தான உரிமைகளை விட்டுக்கொடுக்கவோ அல்லது உங்களுக்கு பிடித்த விஷயங்களை மாற்றிக்கொள்ளவோக்கூடாது. எல்லோரிடத்திலும் பொதுவாக நிலவும் ஒரு கருத்து பெற்றோர்களால் பார்த்து செய்யப்பட்ட திருமணத்தில்தான் பெண்கள், கணவர்களுக்காக தங்களை மாற்றிக்கொள்கிறார்கள் என்று. ஆனால் காதல் திருமணத்திலும் பல பெண்கள் தங்கள் சுய விருப்பு, வெறுப்புகளை துறந்தே வாழ்கின்றனர். அதை என்ன சொல்வது?. இவற்றில் முக்கியமானவை வேலை, ஆடை, பேச்சு சுதந்திரம்.
வேலை
திருமணத்திற்கு பின்னரும் வேலைக்கு செல்லலாம் எனக்கூறி பெண்களை திருமணத்திற்கு ஒற்றுக்கொள்ள வைக்கும் பலரும், அதன்பிறகு அவர்களை வேலைக்கு அனுப்புவதில்லை. சில பெண்களும் இரண்டு, மூன்றுமுறை கேட்டுவிட்டு குழந்தை, குடும்பத்தை பார்க்கவேண்டும் என்று இதனை அப்படியே விட்டுவிடுவார்கள். கணவர் அன்பானவராக இருந்தால் எந்த பிரச்சனையும் இல்லை. இல்லையென்றால்? நிதி சுதந்திரம் என்பது எப்போதுமே பெண்களுக்கு ஒரு பாதுகாப்பை தரவல்லது. அதனால் எப்போதும் உங்கள் வேலை விஷயத்தில் விட்டுக்கொடுக்காதீர். இந்த வேலைக்குதான் செல்லவேண்டும், இதற்கு செல்லக்கூடாது என்றால் ஒத்துக்கொள்ளாதீர்கள். அதுபோல காதல் திருமணத்தில் பெரும்பாலும் கணவன், மனைவி பெற்றோரை பிரிந்து தனியாகத்தான் இருப்பார்கள்.
உண்மையில் உங்களை விரும்பும் ஆண் நீங்கள் அதிகம் பேசுவதையே விரும்புவார்
இதனால் குழந்தை பிறந்தபின், குழந்தையை யாரிடம் விட்டுவிட்டு வேலைக்கு செல்வது என்ற குழப்பம் நிலவும். இதனால் பெரும்பாலான வீடுகளில் வேலையை விடுபவர்கள் பெண்களாகத்தான் இருப்பார்கள். இருவரும் பேசி முடிவெடுத்து, உண்மையில் உங்களுக்கு விருப்பம் என்றால், உங்கள் குழந்தைக்காக நீங்கள் வேலையைவிடலாம். ஆனால் கணவரால், கணவரின் குடும்பத்தால் கட்டாயப்படுத்தப்பட்டு அல்லது நீங்கள் பெண் என்பதால் அப்படி ஒரு முடிவு எடுக்கப்பட்டால் அதற்கு எப்போதும் சம்மதிக்கக்கூடாது.
ஆடை
ஆடை சுதந்திரம் என்பது திருமணத்திற்கு பிறகு முற்றிலும் இல்லை என பல பெண்கள் கூறுவதை நாம் கேட்டிருப்போம். உங்கள் ஆடையை மற்றவர் ஏன் தேர்வு செய்ய வேண்டும்? உங்கள் கணவர் உங்களை உண்மையில் காதலித்தால், உங்களுக்கு எந்த கட்டுப்பாடும் விதிக்கமாட்டார் என்பதை நினைவில் கொள்ளவேண்டும். அதனால் உங்கள் விருப்பத்தை புரிந்துகொள்ளாத ஒருவருக்காக உங்கள் விருப்ப சுதந்திரத்தை எங்கும் விட்டுத்தராதீர்கள்.
பேச்சு
அதிகமாக பெண்கள் பேசினாலே ஆண்களுக்கு பிடிக்காது. அது அந்தப் பெண்களை விரும்பாத ஆண்களுக்கு. உண்மையில் உங்களை விரும்பும் ஆண் நீங்கள் அதிகம் பேசுவதையே விரும்புவார். இதனை எப்போதும் பெண்கள் நினைவில் வைத்துக்கொள்ளவேண்டும். ஏன் சில பெண்களுக்கே பெண்கள் அதிகம் பேசுவது பிடிக்காது. அதனால் உங்களை உங்கள் கணவர் கட்டுப்படுத்தினால் நீங்கள் அவர் சொல்வதை கேட்கவேண்டும் என்ற அவசியம் இல்லை என்பதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள். அதற்காக கணவரின், காதலரின் எல்லாக் கருத்துகளுக்கும் பெண்கள் முரண்பட வேண்டும் என்பது பொருளல்ல. நியாயமான உங்களது விருப்பங்களுக்கு முரண்படுதல் என்பது தேவையான ஒன்று. விட்டுக்கொடுப்பதுதான் காதல். ஆனால் அது ஆதிக்கத்தால் நிகழக்கூடாது.






