என் மலர்
நீங்கள் தேடியது "உறவுகள்"
- சிறந்த தகவல் தொடர்பு திறன்தான் உறவுக்குள் நெருக்கத்தை பேணுவதற்கு அடிப்படையானது.
- தம்பதியரை பொறுத்தவரை ஒரே கனவுகள், இலக்குகள் கொண்டு செயல்படுதல் உறவை வளர்க்கும்.
குடும்ப உறுப்பினர்கள், நெருங்கிய உறவினர்கள், இளம் தம்பதியர்கள், நட்பாக பழகி குடும்ப இன்ப, துன்பங்களில் பங்கெடுக்கும் அளவுக்கு உரிமை கொண்டிருப்பவர்கள் என உறவு வட்டத்துக்குள் இருப்பவர்களுக்குள் ஏதாவதொரு சந்தர்ப்பத்தில் மனஸ்தாபம் ஏற்படலாம். அது உறவுக்குள் விரிசலை உண்டாக்குவதற்கு வித்திடலாம். அதற்கு இடம் கொடுக்காமல் ஆரம்ப நிலையிலேயே முற்றுப்புள்ளிவைத்து, உறவுக்குள் நெருக்கத்தை அதிகரிக்க செய்வதற்கு செய்ய வேண்டிய விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
உடல் ரீதியான அன்பு
தம்பதியரை பொறுத்தவரை நெருக்கம் என்பது உடல் தொடுதலால் மட்டுமே நிர்ணயிக்கப்படாது. அன்பான தொடுதல், அரவணைப்பு, கைகளை பற்றி ஆதரவு அளித்தல், அருகில் அமருதல், ஆறுதலாக பேசுதல் போன்றவை உறவை நெருக்கமாக வைத்திருக்க உதவிடும். மற்ற உறவுகளை பொறுத்தவரை அடிக்கடி உரையாடுவது, அன்பை வெளிப்படுத்துவது உறவை வலுப்படுத்தும்.
திறந்த மனம்
தம்பதியரில் ஒருவருக்கொருவர் உணர்வுகளை பகிர்வதற்கு சிரமப்பட்டாலோ, குடும்ப உறுப்பினர்கள், உறவினர்களிடம் ஏதேனும் முக்கியமான விஷயத்தை கூட பகிர்வதற்கு தயக்கம் கொண்டாலோ உறவுக்குள் நெருக்கம் குறையும்.
தம்பதியரை பொறுத்தவரை தங்களின் ஆசைகள், கடந்த கால அனுபவங்களை பகிர்ந்து கொள்ள பாதுகாப்பான சூழல் இருந்தால்தான் உண்மையான நெருக்கம் உண்டாகும் என்பதை நினைவில் கொள்ளுங்கள். அந்த சூழலை உருவாக்குவதற்கு திறந்த மனதுடன் பேச வேண்டும். தம்பதியர் மட்டுமல்ல மற்ற உறவுகளும் திறந்த மனதுடன் செயல்பட்டால்தான் உறவுக்குள் நெருக்கம் அதிகரிக்கும்.
தகவல் தொடர்பு
சிறந்த தகவல் தொடர்பு திறன்தான் உறவுக்குள் நெருக்கத்தை பேணுவதற்கு அடிப்படையானது. அதற்காக எப்போதும் பேசிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதல்ல. நீண்ட நாட்கள் பேசாமல், தொடர்பு கொள்ளாமல் இருப்பதுதான் தவறானது. குடும்பத்தினரை தவிர உறவினர்களுடன் நிலையான தகவல் தொடர்பை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
வெளியூரில் வசிப்பவர்களாக இருந்தால் வாரம் ஒருமுறையோ முடியாதபட்சத்தில் மாதம் ஒருமுறையாவது அவர்களுடன் தொடர்பு கொண்டு பேசி நலம் விசாரிக்கும் பண்பை வளர்த்துக்கொள்ள வேண்டும். யார் முதலில் பேசுவது என்ற ஈகோவுக்கு இடம் கொடுக்கக்கூடாது. முதல் அடியை எடுத்து வைப்பது நீங்களாக இருக்க வேண்டும். அப்போதுதான் உறவுக்குள் நெருக்கம் மேம்படும்.
பரஸ்பர மரியாதை
நம்மை மதிக்கிறார்கள், நம் பேச்சுக்கு உரிய மரியாதை கொடுக்கிறார்கள் என்ற உணர்வே உறவை வலுப்படுத்தும். உறவுக்குள் யாரேனும் உங்களுக்கு சின்ன உதவி செய்தாலும் கூட தவறாமல் 'நன்றி' கூற மறக்காதீர்கள். என்றென்றும் நன்றிக்கடன் கொண்டவர்களாக இருக்க வேண்டும்.
எந்த விஷயமாக இருந்தாலும், அவர்களின் செயல்பாடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் 'நீங்கள் சிறப்பாக செயல்படுகிறீர்கள்', 'உங்கள் யோசனை எனக்கு பிடிக்கும்' என்பன போன்ற சிறிய பாராட்டுகள் கூட உறவுக்குள் நெருக்கத்தை அதிகரிக்கும்.
ஒரே இலக்கு
தம்பதியரை பொறுத்தவரை ஒரே கனவுகள், இலக்குகள் கொண்டு செயல்படுதல் உறவை வளர்க்கும். அதனை நோக்கி ஒருசேர திட்டமிட்டு செயல்பட வழிவகை செய்யும். உறவுக்குள் நெருக்கத்தை பலப்படுத்தும்.
- குடும்பம் உருவாக்கி கொடுக்கும் நினைவுகளே உண்மையான செல்வமாகும்.
- குடும்பத்தின் அன்பே வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமையும்.
குடும்பம் என்ற கட்டமைப்புதான் வாழ்வியலின் அடிப்படை அம்சங்களை கற்றுக்கொடுக்கிறது. வாழ்க்கையை எப்படி வாழ வேண்டும் என்பதையும் தீர்மானிக்க செய்கிறது. குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் ஏதாவதொரு வகையில் வழிகாட்டியாக இருந்து வாழ்க்கையை செம்மையாக வாழ வழி வகை செய்வார்கள். எல்லா காலகட்டத்திலும் பக்கபலமாக இருக்கும் குடும்பத்தின் முக்கியத்துவத்தை சிலர் காலம் கடந்துதான் உணர்வார்கள். வாழ்க்கையின் அஸ்திவாரமாக அமையும் குடும்பத்தை பற்றிய உன்னத விஷயங்கள் பற்றி பார்ப்போம்.
குடும்பம்தான் எல்லாமே
குழந்தை பருவத்தில் குடும்பம்தான் உலகமாக அமைந்திருக்கும். வெளி உலக தொடர்பை ஏற்படுத்துவதற்கு முன்பு குடும்ப உறுப்பினர்களே எல்லாவற்றையும் கற்றுக்கொடுக்கும் ஆசானாக இருப்பார்கள். ஆனால் இளமை பருவத்தில் குடும்பம் பற்றிய பார்வை மாறத்தொடங்கும். சிலர் குடும்பத்தை வாழ்க்கையின் ஒரு பகுதியாகவே கருதுவார்கள். சாப்பிடுவதற்கும், தூங்குவதற்கும் பயன்படுத்தும் இடமாகவே கருதுபவர்களும் உண்டு. ஆனால் படித்து முடித்து திருமணமாகி குடும்ப பந்தத்துக்குள் முழுமையாக இணையும்போதுதான் குடும்பம் பற்றிய புரிதல் முழுமையடையும். வாழ்க்கை என்ற வட்டம் குடும்பத்தை சூழ்ந்துதான் கட்டமைக்கப்பட்டிருப்பதை உணர்வார்கள். இன்பமோ, துன்பமோ எல்லா காலகட்டத்திலும் நமக்கு முதலில் ஆதரவாக இருப்பது குடும்பம்தான் என்பதை அறிவார்கள். தொழில், பணம், சாதனை எதுவும் குடும்பத்தின் ஆதரவு இல்லாமல் வசப்படாது.
எதிர்காலத்தை கட்டமைக்கும்
தாத்தா, பாட்டி சொல்லும் கதைகள், அவர்களின் கடந்த கால வாழ்க்கை நாம் வாழ்ந்திராத வாழ்க்கையை அறிந்து கொள்ள உதவிடும். அவர்களின் வாழ்க்கையை, அனுபவங்களை பின்பற்றி வாழ்வதற்கு வழிகாட்டும். குடும்பம்தான் ஆணி வேர். அடுத்த தலைமுறைக்கு கற்றுக்கொடுக்க வேண்டிய இல்லற பாடங்களை நினைவூட்டும். குடும்ப பொறுப்புகள், கடமைகளை உணர வைக்கும். அவர்களின் எதிர்காலத்தை வலுவாக கட்டமைத்து கொடுக்க வேண்டியதன் அவசியத்தை உணர வைக்கும்.
நினைவுகளே உண்மையான செல்வம்
குடும்பம் உருவாக்கி கொடுக்கும் நினைவுகளே உண்மையான செல்வமாகும். குடும்பத்தினருடன் ஒன்றாக அமர்ந்து பேசிய தருணங்கள், சிரித்து மகிழ்ந்த சம்பவங்கள் என்றென்றும் நினைவை விட்டு மறையாது. காலங்கள் கடந்தும் நினைவூட்டி மகிழ வைக்கும். இன்பமோ, துயரமோ எல்லா அனுபவங்களும் வாழ்நாள் முழுவதும் நம்மோடு இருக்கும். நினைவுகள்தான் குடும்பத்தினர் ஒவ்வொருவருடனும் நம்மை இணைக்கும் பாலமாக அமையும். செல்வம் அல்ல என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆதரவளிக்கும் இடம்
குடும்பத்தினரில் சிலர் அதிகம் பேச மாட்டார்கள். ஆனால் மற்ற உறுப்பினர்கள் தங்களுடன் அதிக நேரத்தை செலவிட வேண்டும், தங்களுக்கு ஆதரவாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள். குடும்பத்தினருடன் இருப்பதுதான் அவர்களை நிம்மதி அடைய செய்யும். அன்பை வார்த்தைகளால் வெளிப்படுத்த தயங்குவார்கள். அவர்களுக்கு ஆதரவளிக்கும் இடமாக குடும்பமே என்றென்றும் விளங்கும்.
ஆரம்பமும்.. முடிவும்..
பள்ளி, கல்லூரி படிப்புகளின்போது நண்பர்கள் மாறலாம். வேலைக்கு செல்லும் இடத்தில் புதிய நண்பர்கள் கிடைக்கலாம். தொழில் நிமித்தமாக அடிக்கடி நகரத்தில் இருப்பிடத்தை மாற்றிக்கொள்ள நேரிடலாம். நட்பும், வசதி வாய்ப்பும் வாழ்க்கை சூழலை மாற்றலாம். ஆனால் குடும்பம் என்றென்றும் நிலையானது. வாழ்க்கையை ஆரம்பிக்கும் இடமும், இறுதி காலத்தை நிலையாக ஓரிடத்தில் கழிக்க சரணடையும் இடமும் குடும்பமாகத்தான் இருக்கும். வாழ்க்கையில் எவ்வளவு தூரம் சென்றாலும், எல்லை கடந்து பயணித்தாலும் இறுதியில் மனம் குடும்பத்தையே நாடி வரும்.
வழிகாட்டும் திசைகாட்டி
ஏதேனும் மன குழப்பத்தில் இருக்கும்போதோ, தடுமாற்றம் அடையும்போதோ பெற்றோர் கற்றுக்கொடுத்த விஷயங்கள் நம்மை வழிநடத்தும். தோல்வியை சந்தித்தால் குடும்பம் ஆதரவுக்கரம் நீட்டி அதிலிருந்து மீள வழிகாட்டும். எங்கு சென்றாலும் திசைகாட்டியாய் பின்தொடர்ந்து வாழ்க்கையை சிறப்பாக வாழ வழிகாட்டும். குடும்பத்தினரின் அன்பும், நம்பிக்கையும் நம்மை முன்னேற்றும்.
ஆதாரம்
குடும்பம் என்பது வாழ்க்கையின் இயற்கையான ஆதாரம். சண்டை சச்சரவுகள், கருத்து வேறுபாடுகள் தோன்றினாலும் குடும்ப பந்தம் ஒருபோதும் விட்டுக்கொடுக்காது. அன்னிய எண்ணத்துடன் அணுகாது. அரவணைத்து செல்லும்.
வீட்டின் இதயம்
சில வீடுகள் பார்ப்பதற்கு அழகாக இருக்கும். ஆனால் உள்ளே நுழைந்தால் வெறுமையாக தோன்றும். அங்கு வசிப்பவர்கள் தனிமை சூழலை அனுபவிப்பவர்களாக இருப்பார்கள். அதற்கு மாறாக சிறிய வீடாக இருக்கும். அங்கு வசிப்பவர்கள் ஒருவருக்கொருவர் ஆதரவாக இருப்பார்கள். அந்த வீடு அன்பு நிறைந்ததாக உணரப்படும். வீட்டின் இதயம் குடும்பம்தான். ஒரு வீட்டை குடும்பமாக உணர வைப்பது அங்கு வசிக்கும் மனிதர்களும், அவர்கள் காட்டும் அன்பும்தான் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
ஆசீர்வாதம்
குடும்பத்தின் அன்பே வாழ்க்கையின் மிகப்பெரிய ஆசீர்வாதமாக அமையும். குடும்ப அன்பு தான் மற்றவர்களையும் அன்புடன் நேசிக்க கற்றுத்தரும். எத்தகைய நெருக்கடியான சூழலையும் சமாளிக்க மன தைரியத்தை கற்றுக்கொடுக்கும்.
இணைப்பு
குடும்பம் என்பது மரக்கிளைகள் போன்றது. சகோதர, சகோதரிகள் திருமணத்திற்கு பிறகு குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம். ஆனால் ஒருவரையொருவர் சந்திக்கும்போது இணக்கத்தையும், அன்பையும் உணர வைக்கும். அந்த நெருக்கம்தான் குடும்ப பந்தத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. வெகு தூரத்தில் வசித்தாலும் குடும்பம் நம்மை எப்போதும் ஒன்றிணைக்கும் பாலமாக அமையும்.
- நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு ‘ஆன்லைன்’ நண்பர்கள் இருப்பதாக கூறுகின்றனர்.
- 55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.
சமூக வலைத்தளங்கள் மற்றும் இணையதள விளையாட்டுகள் மக்களுக்கிடையேயான 'மனித' தொடர்பை குறைத்து வருவதாக பிரிட்டனில் 3000 பேரிடம் ஆயுள் காப்பீட்டு நிறுவனமான "லைஃப்சர்ச்" நடத்திய ஆய்வில் தெரிகிறது.
அந்நாட்டு மக்களில் கிட்டத்தட்ட 10 பேரில் ஒருவர், தங்களுக்கு எந்த நண்பர்களும் கிடைக்கவில்லை என்று தெரிவித்திருப்பதாக இது கூறுகிறது.
18 முதல் 70 வயதுக்குட்பட்ட வயதுள்ளவர்களில் 8% பிரிட்டன் மக்கள் இணைய வழியிலேயே அனைத்து சமூக தொடர்புகளையும் அடைகிறார்கள் என்றும் நண்பர்களைக் கொண்ட மீதமுள்ள 92% பேர் சராசரியாக தலா 8 நண்பர்களைக் கொண்டிருந்தனர் என்றும் அது தெரிவிக்கிறது.
இந்த புள்ளி விவரத்தை சுமார் 5.5 கோடி (55 மில்லியன்) மக்கள் தொகைக்கு விரிவுபடுத்தி ஆராயும்போது சுமார் 40 லட்சம் (4.4 மில்லியன்) மக்கள் தங்களுக்கு நம்பக்கூடிய 'உண்மையான' நண்பர்கள் இல்லாமல் வாழ்வதை காட்டுகிறது.
நிஜ வாழ்க்கை துணைகள் இல்லாத பிரிட்டன்வாசிகள், தங்களுக்கு 'ஆன்லைன்' நண்பர்கள் இருப்பதாகவும், அவர்களுடன் சமூக ஊடகங்கள், ஆன்லைன் கேம்கள் அல்லது மின்னஞ்சல் மூலமாக தொடர்பில் இருப்பதாகவும் கூறியிருக்கின்றனர்.
ஆண்களுக்கு சராசரியாக 9 நண்பர்கள் இருப்பதாகவும், பெண்களுக்கு சராசரியாக 7 பேர் இருப்பதாகவும் அந்த கருத்துக்கணிப்பு காட்டுகிறது. 35 வயதிற்கு உட்பட்டவர்களுக்கு சராசரியாக 10 நண்பர்கள் உள்ளனர்.
இவர்களோடு ஒப்பிடுகையில், 35-54 வயதுடையவர்களுக்கு குறைந்தளவே உள்ளனர். அதாவது 7 பேர் மட்டுமே நட்பில் உள்ளனர்.
55 வயதுக்கு மேற்பட்ட மக்களுக்கு சராசரியாக 8 நண்பர்கள் இருந்தனர்.
3,000 பேரில் 55 சதவீதம் பேர் தங்களுக்கு ஒரு 'சிறந்த நண்பர்' இருப்பதாகவும், அவர்களின் மனைவி அல்லது கணவர் இதில் முதலிடத்தில் இருப்பதாகவும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.
மொத்தத்தில், கணக்கெடுக்கப்பட்டவர்களில் 3ல் ஒரு பகுதியினர் (39 சதவீதம்) தங்கள் சிறந்த நண்பர் தங்கள் கணவர், மனைவி அல்லது தங்கள் 'இணை' (Partner) என்று கூறியுள்ளனர்.
ஹெர்ட்ஃபோர்ட்ஷையரில் உள்ள வாட்ஃபோர்டைச் சேர்ந்த 44 வயதான பேரி டெய்லர், அவரது மனைவி கிளாரியை தனது 'சிறந்த நண்பர்' என்று கூறியுள்ளார்.
டோர்செட் பகுதியின் ஸ்வானேஜ் எனும் இடத்தை சேர்ந்த 23 வயதான க்ளோ வைட் எனும் பெண், தனது 2 சிறந்த நண்பர்களும் லண்டனுக்குச் சென்றதிலிருந்து தனக்கு 'உண்மையான நண்பர்கள்' இல்லை என்று கூறியிருக்கிறார்.
"3,000 பிரிட்டன் மக்களிடம் நாங்கள் நடத்திய ஆய்விலிருந்து 40 லட்சத்திற்கும் அதிகமான மக்களுக்கு உண்மையான நண்பர்கள் இல்லை என தெரிகிறது" என லைஃப்சர்ச் அமைப்பின் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார்.
அண்மைக்காலங்களில், இந்தியாவிலும் மக்கள் தங்களின் பெருமளவு நேரத்தை ஒருவரையொருவர் நேரில் சந்தித்துக் கொள்வதை தவிர்த்து சமூக வலைதளங்களிலும், ஆன்லைன் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்குகளிலுமே கழித்து வருவதால், தனிமைப்படுத்தப்பட்டு பல்வேறு மனநல பிரச்னைகளுக்கு ஆளாவார்கள் என உளவியல் ஆய்வாளர்கள் எச்சரித்து வருகின்றனர்.
இந்த பின்னணியில், பிரிட்டன் நாட்டின் இந்த ஆய்வின் புள்ளி விவரங்கள் முக்கியத்துவம் பெறுகிறது.
- என்றைக்கு விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதோ, அன்றைக்கே கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனித்தனியாக பிரியத் தொடங்கின.
- சொந்த ஊரில் திருவிழா, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர்.
வரலாறு...
இந்த உலகில் மறைந்த ஒவ்வொரு உயிருக்கும், மண்ணில் புதைந்த ஒவ்வொரு பொருளுக்கும் உண்டு. அது வெளியே தெரியும்போதுதான் பண்டைய கால நாகரிகமும், அன்றைய ஆட்சியாளர்களின் நிலை குறித்தும் அறிந்துகொள்ள முடியும். அப்படி, கண்டறியப்பட்ட வரலாறுகள் தான் பள்ளியில் பாடமாக்கப்பட்டுள்ளன. இன்னும் மண்ணுக்குள் பொக்கிஷமாக எத்தனையோ வரலாறுகள் புதையலாய் உறங்கிக் கொண்டிருக்கின்றன.
இன்றைய இளம் தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றை அறிந்துகொள்வதைவிட எதிர்கால தேடல்களே மேலோங்கி இருக்கிறது. பலருக்கு இன்னும் தனது குடும்ப பரம்பரை பற்றியே தெரியாமல் இருப்பதுதான் வேதனை. அன்றைய காலத்தில், 7 தலைமுறைகளை அறிந்து வைத்திருந்தார்கள். தந்தை - தாய், பாட்டன் - பாட்டி, பூட்டன் - பூட்டி, ஓட்டன் - ஓட்டி, சேயோன் - சேயோள், பரன்-பரை என்று அதை வரிசைப்படுத்தினார்கள்.
ஆனால், இன்றைக்கு 3-வது தலைமுறைக்கு முந்தைய தலைமுறை பற்றி கூட யாருக்கும் தெரியவில்லை. கடந்த காலங்களில் சொந்த ஊரிலேயே கூட்டுக்குடும்பமாக வாழ்ந்தவர்கள் ஏராளம். பெரிய வீட்டில் மரங்கள் சூழ்ந்திருக்க, தாத்தா - பாட்டி, பெரியப்பா - பெரியம்மா, சித்தப்பா - சித்தி, அத்தை - மாமா, அவர்களின் பிள்ளைகள என ஆரவாரத்துக்கும், ஆசுவாசத்துக்கும் பஞ்சம் இருக்காது.
என்றைக்கு விவசாயம் லாபகரமான தொழிலாக இல்லாமல் போனதோ, அன்றைக்கே ஒரு கூட்டு கிளிகளாக இருந்த கூட்டுக் குடும்பங்கள் எல்லாம் தனித்தனியாக பிரியத் தொடங்கின. "நாம் தான் சொந்த ஊரில் கஷ்டப்படுகிறோம். நம் பிள்ளையாவது நன்கு படித்து நல்ல வேலைக்கு சென்று கைநிறைய சம்பாதிக்கட்டுமே" என்று, முதலில் பெற்றோர் விருப்பத்துடன் படிப்புக்காக வெளியூருக்கு செல்லும் குழந்தைகள், பிறகு படித்து முடித்து அங்கேயே வேலையைத் தேடிக்கொண்டு செட்டில் ஆகிவிடுகிறார்கள். திருமணமான பிறகும், வெளியூரிலேயே குடும்பத்துடன் தங்கிவிடுகிறார்கள். இப்படித்தான் கூட்டு குடும்பங்கள் எல்லாம் எங்கெங்கோ தனிக்குடும்பங்களாக பிரிந்து சிதறி கிடக்கின்றன.

சொந்த ஊரில் திருவிழா, உறவினர் வீட்டு சுப நிகழ்ச்சிகளுக்கு மட்டுமே வந்து செல்வதை பலர் வழக்கமாக கொண்டிருக்கின்றனர். கடினமான பணியில் இருக்கும் சிலருக்கு அந்த வாய்ப்பு கூட கிடைக்காமல் போய்விடுகிறது. பெற்ற பிள்ளைகள் - பேரப்பிள்ளைகள் வெளியூரில் இருக்க, சொந்த ஊரில் தனி மரமாய் ஏக்கத்துடன் காத்திருந்து முதுமையை கழிக்கும் பெற்றோர் ஏராளம்.
தாய்-தந்தையுடன் வெளியூரில் வசிக்கும் குழந்தைகளுக்கு, தனது பூர்வீகத்தை பற்றியும், சொந்த பந்தங்களை பற்றியும் தெரியாமலேயே போய்விடுகிறது. தாயும், தந்தையும் வேலை.. வேலை.. என்று பரபரப்பாக ஓடிக் கொண்டே இருப்பதால், பிறந்த மண்ணின் மகத்துவத்தை பிள்ளைகளிடம் எடுத்துச்சொல்வதற்கு கூட நேரமில்லாமல் போய்விடுகிறது.
இப்போது கோடை காலம். பள்ளிகளுக்கு எல்லாம் விடுமுறை காலம். இந்த நேரத்திலாவது, நகரத்தில் நரக வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கும் குழந்தைகளை சொந்த கிராமத்தில் தாத்தா - பாட்டி வீடுகளுக்கு அனுப்பி வைக்கலாம். நமக்குத்தான் விடுமுறை கிடைக்கவில்லை. விடுமுறையில் இருக்கும் குழந்தைகளாவது சொந்த ஊரில் சுத்தமான காற்றை சுவாசிக்க வழிவகை செய்யலாம். அங்கு பெற்ற பிள்ளைகளுக்காக ஏங்கித் தவிக்கும் முதியவயதுடைய பெற்றோர், பேரப்பிள்ளைகளை பார்த்தாவது சற்று நெஞ்சம் குளிர்வார்கள். குழந்தைகளுக்கும் உண்மையான அன்பு, பாசம் கிடைக்கும்.
காகிதத்தால் செய்யப்பட்ட பட்டம் எவ்வளவு உயரத்தில் பறந்து கொண்டிருந்தாலும், அதன்பிடி நூலின் அடிப்பகுதியில்தான் இருக்கிறது. அதுபோலத்தான், நாம் இன்றைக்கு உலகின் எந்த மூலையில் வாழ்ந்து வந்தாலும், நமக்கான பிணைப்பு நாம் பிறந்த சொந்த ஊருடன்தான் இருக்கிறது. எனவே, சொந்த மண்ணையும், மண்ணில் வசிக்கும் உறவுகளையும் பேணிக் காப்போம்.






